அந்த வீட்டின் கதவைத் திறக்காதீர்கள்
கதையாசிரியர்: நஞ்சப்பன் ஈரோடு
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
அறிவியல் புனைவு
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 146

கார்த்திக் ஆக்ஸிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். ஆனால் மாருதி காரின் என்ஜின் இரண்டு முறை படபடத்து, மூச்சு வாங்கி, இரும்பு உலையடிக்கும் சத்தத்துடன் அணைந்தது. அவன் காரை சாலையோரத்தில் நிறுத்தினான். ஒரு நிமிடம் எதற்காகவோ காத்திருந்து விட்டு மறுபடி காரை ஸ்டார்ட் செய்தான். ம்ஹும், காரில் எந்த உயிரும் இல்லை.
சுற்றிலும் வெறும் கருவேல முட்புதர்களும் வெயிலில் கொதிக்கும் காற்றும் மட்டுமே. செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணி – வழக்கத்திற்கு மாறாக அலுவலகத்திலிருந்து சீக்கிரமே கிளம்பியிருந்தான். இப்போது சாலை என்று சொல்ல முடியாத ஒரு கரடு முரடான பாதையில் சிக்கிக் கொண்டான்.
“என்ன ரோதனைடா இது,” என்று முணுமுணுத்தவாறு செல் போனை எடுத்தான். சிக்னல் இல்லை.
வெளியே இறங்கி சட்டையின் மேல் பட்டனை அவிழ்த்து நடக்க ஆரம்பித்தான். அடுத்த ஊர் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. பத்து நிமிடமாக வேறு எந்த வாகனமும் கடந்து போகவில்லை.
வேம்பு மரங்களின் பின்னால் இருந்து ஒரு உறுமல் கேட்டது.
கார்த்திக் நின்றான். ஒரு ராஜபாளையம் நாய் வெளியே வந்தது – பாதி திறந்த தசைப்பிடிப்பான வாயில், கூர்மையான மஞ்சள் பற்கள். கழுத்துப் பட்டை இல்லை. அவனையே முறைத்துப் பார்த்த கண்களில் தூய வேட்டை ஆவேசமும், விரோதமும்.
“ஈஸி ,ஈஸி,” என்றான் கார்த்திக் மெல்ல. ஒரு அடி பின்னெடுத்து வைத்தான்.
நாய் வெறியுடன் அவனை நோக்கிப் பாய்ந்தது.
கார்த்திக் தன் காரை நோக்கி ஓட விரும்பினான், ஆனால் நாய் ஏற்கனவே அவனுக்கும் மாருதிக்கும் இடையே வந்திருந்தது. வேறு வழியில்லாமல் எதிர்த் திசையில் ஓடினான் – தோல் செருப்புகள் கூழாங்கல்களில் வழுக்க, முட்புதர்களை கிழித்துக்கொண்டு பாறைகள் நிறைந்த ஒரு வறண்ட மேட்டை நோக்கி பாய்ந்தான். பின்னால் நாயின் உறுமல் நெருங்கியது – தாடைகளின் கடி சத்தத்துடன்.
வெயிலில் காய்ந்த பாறைகளையும் சோற்றுக்கற்றாழை முட்களையும் தாண்டி ஓடினான். நாய் அவன் வாசனையை பிடித்து அந்த கடினமான வழியிலும் விடாமல் துரத்தியது.
அப்போது அவன் கண்ணில் பட்டது – இருநூறு அடி தூரத்தில், ஒரு கைவிடப்பட்ட பாழடைந்த வீடு. சிமெண்ட் பெயர்ந்த சுவர்கள், உடைந்த ஓடுகள், ஒரு சிதைந்த சன்னல். எப்படியாவது அதற்குள் புகுந்து கொண்டால் இந்த வெறி நாயிடமிருந்து தப்பிக்கலாம்.
கார்த்திக் இருந்த கடைசி சக்தியையும் திரட்டி ஓடினான். நுரையீரல் எரிந்தது. பின் முதுகில் வியர்வை கசிந்தது. கால்கள் இரண்டும் கனத்தன. முப்பது அடி பின்னால் இருந்த நாய் இப்போது இருபது அடி, பத்து அடி என்று நெருங்கியது. அதன் மூச்சுக்காற்று கணுக்கால்களில் படுவதை உணர்ந்தான்.
இதோ, பாழடைந்த வீடு நெருங்கி விட்டது.
வீட்டின் கதவை பலமாக மோதி, துருப்பிடித்த கைப்பிடியைப் பிடித்து தள்ளினான்.
உலகமே இருட்டானது.
படிப்படியாக அல்ல. உடனடியாக. கை இன்னும் கைப்பிடியில் இருக்க, கார்த்திக் உறைந்து போய் நின்றான். பின்னால் நாயும் தாவும் நிலையில் உறைந்து போய் நின்றது – தாடை திறந்து, விரோதமான கோபத்தில் தொங்கியது. திடீரென்று நிறுத்தப்பட்ட ஒரு விடீயோவின் உறைந்த பிரேம் போல நின்றார்கள் இருவரும்.
சென்னையில் ஒரு வீட்டுப் பெண்மணி கத்திரிக்காயை பாதி வெட்டிய நிலையில் உறைந்து நின்றாள். மும்பையில் தராசை தூக்கிய ஒரு சந்தை வியாபாரியின் கை அப்படியே நின்றது. டோக்கியோவில் ஒரு சிறு குழந்தையின் முகத்தில் விரிந்த சிரிப்பு உறைந்தது.
விண்வெளியில் கிரகங்கள் தம் சுற்றுப் பாதையில் திடீரென்று நின்றன. நட்சத்திரங்கள் தம் எரிவை நிறுத்தின. விண்மீன் மண்டலங்கள் சுழலுவதை நிறுத்தின. பிரபஞ்சமே ஸ்தம்பித்து செயலிழந்து நின்றது.
ஒரு அறையில் – அறை என்ற கருத்துக்கும் அப்பால் – ஒரு கம்ப்யூட்டர் சர்வரின் ஆழ் மனதில் ஒரு பிழை பதிவு தோன்றியது:
FATAL: abandoned _house_door_47.open() triggered core memory violation. Simulation terminated.
இருட்டில் கம்ப்யூட்டரின் கர்சர் மின்னியது – யாராவது அதை ரீஸ்டார்ட் செய்வதற்காக காத்திருந்தது.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |
