அத்துமீறல்




என் பெயர் வினோத். நாற்பத்திஐந்து வயது. சென்னையின் நங்கநல்லூரில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியிருக்கிறேன்.
ஒரு பிரபல கம்பெனியில் ஜெனரல் மானேஜராக இருக்கிறேன். மனைவி, குழந்தைகளிடம் பாசத்துடன் இருப்பேன். அவர்களுக்கு வேண்டியதைச் செய்து ஒரு பொறுப்புள்ள அப்பாவாக இருக்கிறேன் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னிடம் ஒரு பயங்கர கெட்டபழக்கம், பிற பெண்களின் சகவாசம். என்னுடைய பதினான்கு, பதினைந்து வயதிலிருந்தே பெண்களிடம் ஒரு தணியாத ஆசை, ஈடுபாடு, ஏக்கம், எதிர்பார்ப்பு என்பது ஆரம்பித்துவிட்டது. அதன் பிறகு வயதாக வயதாக அதுவே என்னுள் ஒரு நிரந்தரக் குணமாக வேரூன்றிவிட்டது.
எந்தப் பெண்ணிடம் பழகினாலும் ‘இவ எனக்கு கிடைப்பாளா!’ என்கிற கணக்கு என் மனதிற்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். எப்ப சரியான சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போது அவர்களிடம் உடல் ரீதியாகவும் ஒட்டிக்கொண்டு உறவாடுவேன்.
அதற்காக அடாவடியோ, ரெளடித்தனமோ என்பதெல்லாம் என்னிடம் கிடையவே கிடையாது. ரொம்ப சாத்வீகமாக, மரியாதையுடன் அவர்களை அணுகுவேன். நான் பார்ப்பதற்கு ரொம்ப சாதுவாக, அமைதியானவனாக இருப்பதால் என்னைப் பல பெண்கள் நம்பிவிடுவார்கள். இந்தத் தேடல் அலுவலகத்திலும் என்னிடம் அதிகம் உண்டு. ஆனால் சூடம் அடித்து சத்தியம் செய்தாலும், யாரும் நம்ப மாட்டார்கள். “வினோத் சார் ரொம்ப சோபிஸ்டிகேட்டட், வெரி சாப்ட் பெர்ஸன்” என்பார்கள்.
எந்தப் பொது இடங்களுக்குச் சென்றாலும் அங்கு என் தேடல் ஆரம்பித்துவிடும். இதற்கு கோவில்கள்கூட விதி விலக்கல்ல.
இப்படி இருக்கும்போதுதான் ஒரு சனிக்கிழமை காலையில் நங்கநல்லூர் ஹனுமார் கோவிலில் முதன்முதலாக அவளைப் பார்த்தேன். பிறகு அவளைப் பார்ப்பதற்கென்றே ஹனுமார் கோவிலுக்கு போகலானேன். தங்கத்தை உருக்கி செய்தமாதிரி ஒரு வளப்பமான உடம்பு. வட்டமுகத்தில் எப்போதும் ஒரு அமைதியான புன்னகை. அதுவும் அவள் குளித்ததினால், ஈரத்தலைமயிரை ஓரத்தில் முடிச்சுபோட்டுக்கொண்டு, நெற்றியில் தீற்றலாக விபூதியும், அதன்மேல் குங்குமமும் இட்டுக்கொண்டு வரும் அழகு இருக்கிறதே….அதைக் காண கண்கோடி வேண்டும். நான் உடனே மனரீதியாக அவளிடம் சரண்டராகிவிட்டேன்.
அதன்பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஹனுமார் கோவிலில் அவளை சந்திப்பதை ஒரு நியதியாக்கிக் கொண்டேன். புன்னகையில் ஆரம்பித்து, அவளிடம் பதவிசாக பேச்சுக் கொடுத்ததில் அவள் பெயர் ஜானகி என்று தெரிந்து கொண்டேன். பிரசாதம் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியேவந்தவுடன் என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்தாள். குழந்தைகள் கிடையாதாம். அவள் கணவர் ராகவன் ஸி.ஏ படித்துவிட்டு சார்டர்ட் அக்கவுண்டட்டாக இருக்கிறாராம். மூன்றாவது சந்திப்பிலேயே, என்னை நம்பி தன் கணவரைப் பற்றி நிறைய குறைகள் சொல்ல ஆரம்பித்தாள்.
ராகவன் அவளை கொடுமைப் படுத்துவாராம். அன்புடன் நடத்துவதில்லையாம். வீட்டில் அவர் அதிகாரம்தான் கொடி கட்டிப் பறக்குமாம். ஒருவேளை சமைத்த உணவை மீதம் இருந்தால், அதை அடுத்தவேளை சாப்பிட மாட்டாரம். எல்லாம் புதிதாக செய்துதான் பரிமாற வேண்டுமாம்….மனுஷனுக்கு நாக்கு நீளம் என்பதில் ஆரம்பித்து என்னிடம் நிறையவே சொன்னாள். அதில் ரசனை இல்லாதவர் என்பதை மட்டும் என் மனதிற்குள் அடிக்கோடு போட்டு வைத்துக்கொண்டேன்.
ஒருநாள் என் மனைவிக்கு அவளை அறிமுகம் செய்துவைக்க, என் மனைவி அவளிடம் ரொம்பவே ஒட்டிக்கொண்டாள். அதைத் தொடர்ந்து நவராத்திரியின்போது என் குழந்தைகளுடன் அவள் வீட்டின் கொலு பொம்மைகளைப் போய்ப் பார்த்து வந்தோம். ராகவன் என்னிடம் அன்புடன் வளவளவென பேசினார். ஆடிட்டிங், அக்கவுண்டிங், பாலன்ஸ்ஷீட், ஜிஎஸ்டி என்று விலாவாரியாகப் பேசினார்.
நாங்கள் காரில் திரும்பிவரும்போது என் பையன் வெள்ளந்தியாக “அந்தவீட்டு ஆன்டி ரொம்ப அழகா இருக்காங்கப்பா” என்றான். ‘அடப்பாவி எனக்கு பதினைந்தில் ஆரம்பித்த வியாதி, இவனுக்கு பத்திலேயே ஆரம்பித்துவிட்டதே’ என்று எண்ணி வியந்தேன்.
அவளுக்கு சங்கீதத்தில் அதீத ஆர்வம். கோவிலில் சிலசமயம் பாடுவாள். நல்ல சாரீரம். நாளடைவில் அவளிடம் நன்றாக நெருங்கிவிட்டேன். ஒருநாள் அவளிடம், “ஏலகிரி பாத்திருக்கிறீர்களா?” என்றேன். “இல்லை” என்றாள்.
“இந்த சனிக்கிழமை போகலாமா?”
அவள் பயத்துடன் என்னைப் பார்த்தாள்.
“ஒண்ணும் பயப்படாதீங்க காலைல போயிட்டு சாயங்காலம் வந்துரலாம்.”
“அங்க என்ன இருக்கு?”
“ஒரு அழகான பெருமாள்கோவில் இருக்கு. அவர் பேரு ஏலசரோவர்… அப்புறம் ரம்மியமான தோட்டம், ஏரி இருக்கு.”
“சரி இந்த சனிக்கிழமை போகலாம்.”
என் காரில் அவளை அழைத்துக்கொண்டு ஏலகிரிக்கு போனேன்.
மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஏலசரோவர் பெருமாளைப் பார்த்து சொக்கிப்போய்விட்டாள். அந்தக் கோவிலின் அழகை வெகுவாக சிலாகித்தாள். அன்று மாலையே ரொம்ப சமர்த்தாக அவளை வீட்டில் இறக்கிவிட்டேன்.
காரில் பயணிக்கும்போது சுதா ரகுநாதனையும், விஜய்சிவாவையும் அவர்களின் இனியகுரலை இழையவிட்டு அறிமுகம் செய்துவைத்தாள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக சங்கீதம் என்றால் என்னவென்று புரிந்துகொண்டேன்.
அவளின் நம்பிக்கையை முழுவதுமாக பெற்றவுடன் அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டோம். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியில் சுற்ற ஆரம்பித்தோம். ஒருநாள் நாங்கள் ஏசி காரில் தனிமையில் இருந்தபோது, “ஜானு….சம் டைம்ஸ், வி மீட் ரைட் பீப்பிள் இன் த ராங் டைம்” என்று குரல் உடைந்து சொல்ல, அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.
“ஆமாம் ஜானு….கல்யாணத்துக்கு முன்னாலேயே உன்னைப் பார்த்திருந்தா நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கொண்டு உனக்கு நான் ஒரு ரசனையுள்ள கணவனாக இருந்திருப்பேன்….ஆனா இப்ப நாம கணவன் மனைவியா ஒன்றாக இருக்க முடியலையே” என்றேன்.
இதைச் சொல்லும்போது மிகவும் உருக்கமாகப் பேசினேன். ஜானகி உருகிவிட்டாள். “ப்ளீஸ்….டோன்ட் டாக் லைக் திஸ் வினோத், ஸ்டில் ஐ கேன் பி எ குட் வைப் டு யூ” என்றாள்.
“ இப் யூ ட்ரஸ்ட் மீ…. நீ அதை செயலில் காட்டவேண்டும் ஜானு…”
“எப்படிக் காட்டவேண்டும்… சொல்லுங்க வினோத் !”
“ஐ நீட் யு பிஸிக்கலி…ஐ லவ்யு வெரிமச் ஜானு” என்று அவளை காரிலேயே கட்டியணைத்தேன்.
அதன்பிறகு நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டோம். உடல்ரீதியாக அவ்வளவு அழகான ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. ஜானகியுடன் மிகவும் நெருக்கமாகி, ஒருகட்டத்தில் என்னுடைய அனைத்துவிதமான ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஜானகி மட்டுமே எனக்கு வடிகாலாக இருந்தாள். மற்றவர்களை நான் சுத்தமாக ஒதுக்கிவிட்டேன். எனக்கு ஜானகிதான் எல்லாமே என்று ஆகிவிட்டது.
வெறும் உடல் இச்சை மட்டுமின்றி, அவளது பேச்சை, சுத்தமான பழக்கங்களை, நல்ல சாரீரத்தை, நேர்த்தியாக உடையணியும் பாங்கை என்று அவளை முற்றிலுமாக ரசித்து அவளிடம் மயங்கிக்கிடந்தேன் என்றால் அதுமிகையல்ல.
நாங்கள் தனிமையில் இருக்கும்போது, அவள் மடியில் படுத்துக்கொண்டு பாவயாமி, ஸ்ரீரங்கபுர விஹாரா, சின்னஞ்சிறுகிளியே பாடச்சொல்லி அவள் குரல்வளத்தில் பலதடவைகள் உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறேன். இந்த ஜென்மத்தில் எனக்கு அவளின் அறிமுகம் என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். மூன்று வருடங்கள் இதுமாதிரி அவளுடன் நல்ல உறவில் இருந்தேன்.
ஒருமுறை அலுவலக விஷயமாக நான் மும்பைக்கு நான்கு நாட்கள் செல்ல நேரிட்டது. இரண்டாவதுநாள் நடுஇரவில் என் மனைவி “என்னங்க நம்ம ஜானகியின் கணவர் ராகவன் ஹார்ட்அட்டாக் வந்து ஆஸ்பத்திரி போகிற வழியிலேயே இறந்துட்டாருங்க..” என்றாள். நான் உடனே ஜானகியைத் தொடர்புகொண்டு தைரியமாக இருக்கும்படி சொல்லிவிட்டு என் ஆபீஸ் அட்மின் மனேஜர் கோகுல்ராஜை எழுப்பினேன். முதலில் என் வீட்டிற்கு சென்று, என் மனைவியுடன் ஜானகி விட்டுக்குப் போய் அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யச்சொன்னேன். எதற்கும் கையில் ஒரு பத்தாயிரம் எடுத்துக்கொண்டுபோய் அதை என் மனைவியிடம் கொடுத்து ஜானகி மேடத்திடம் கொடுக்கச்சொன்னேன். அதன்பிறகு வந்த ஞாயிற்றுக்கிழமை நானும் என் மனைவியும் ஜானகியின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தோம். அவள் வீட்டில் நிறைய உறவினர்கள் கூடியிருந்தனர்.
ஒருமாதம் கடந்துவிட்டது. ஜானகி என்னை தொடர்பு கொள்ளவில்லை. தன் மொபைலை சுவிட்ச் ஆப் செய்திருந்தாள். நானும் அவளை தொந்திரவு செய்யாமல் நிறைய இடைவெளி விட்டேன்.
மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. என்னால் பொறுமைகாக்க முடியவில்லை. அன்று ஜானகிக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன்.
ஜானு, இறப்பு என்பது ஈடுசெய்யமுடியாத இழப்பு. உன் துக்கம் எனக்குப் புரிகிறது. இனிமேல் நீ உனக்காக வாழவேண்டும். தைரியமாக இரு. நாம் பழையபடியே நம் நட்பைத் தொடரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். மொபைலில் போன் பண்ணு. வினோத்
அனுப்பி இரண்டுநாட்களாகியும் அவள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் செய்வதறியாது தவித்துப்போனேன்.
மூன்றாவது நாள், அவளிடமிருந்து எனக்கு மெயில் வந்தது. ஆர்வத்துடன் அவசரமாகப் படித்தேன்:
வினோத், பழையபடி நம் நட்பை நாம் தொடரமுடியாது. ராகவன் இருந்தவரை அவரை அத்துமீறி உங்களிடம் தஞ்சமடைந்தது என்னுடைய அப்போதைய தேவை. அவரை பழிதீர்த்துக்கொண்ட ஒரு திருப்தி. அவர் இருக்கும்போது அவரை மீறி ஏமாற்றியது எனக்கு ஒரு சுகானுபவம். ஆனால் தற்போது அவரது ஆத்மாவை ஏமாற்றுவது என் நோக்கமல்ல.
இப்போது எனக்கு எல்லாம் என் இஷ்டம். கட்டுப்படுத்தப்படாத சுதந்திரம் கிடைக்கும்போது அதை நல்லமுறையில் ஆரோக்கியமாக அணுகுவதுதான் முறையானது.
அதற்காக நான் தவறு செய்துவிட்டேன், தவறை உணர்ந்து திருந்திவிட்டேன் என்று சொல்ல வரவில்லை. தவறு, சரி என்பது நம் மனநிலையை பொருத்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சில தேவைகளின் பொருட்டு சிலகாரணங்களுக்காக நாம் அத்துமீறுகிறோம். அது தேவையில்லை என்றான பிறகு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவது இயல்புதானே.
சம்பவங்களின் கோர்வைதானே வாழ்க்கை. எனக்கு ராகவனிடம் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால், உங்களிடம் சுவாரசியம் ஏற்பட்டது நிஜம். இப்போது ராகவனே இல்லை என்றான பிறகு, எனக்கு நீங்களும் இல்லைதான் வினோத். நான் வேறுவீடு மாறிச் செல்கிறேன். எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை நீங்கள் சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.
இனி நாம் தொடர்பில் இருப்பது அவசியமற்றது.
ஜானகி