அதே முகம்!





பெண் பார்க்க வந்த வீட்டில் இருந்த புகைப்படம் தன்னை அதிர்ச்சியடையச்செய்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேறு சிந்தனைகளிலேயே மனதைச்செலுத்தி முகமலர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டான் கவின்.

தாய், தந்தை தவிர சகோதரி, அவளது கணவனுடன் வந்திருந்தனர். சகோதரியின் மூன்று வயது குழந்தை அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.
பெண்ணின் மாமன் என சொல்லிக்கொண்டவர் கவின் அருகே வந்து அமர்ந்து கொண்டு பேச்சுக்கொடுத்தார். சில கேள்விகளைக்கேட்டு பதில் பெற்றுக்கொண்டவர் பின் எழுந்து சென்று தனது மனைவி காதில் ஏதோ சொல்ல, அவர் மனைவியும் முகம் மலர்ந்தவாறு பெண் இருக்கும் அறைக்குச்சென்றாள்.
இரண்டு வருடங்கள் பின்னோக்கி டைம் டிராவலை இயக்கி பயணித்துச்சென்றான் கவின். தினமும் அலுவலகம் சென்று பணி முடித்து வீட்டிற்குச்செல்ல பேருந்து நிறுத்தத்தில் நிற்பது வழக்கம். அன்று பேருந்து நிறுத்தம் வந்த போது அருகில் கூட்டமாக நின்று மயங்கிக்கிடந்த ஒருவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஓர் இளம்பெண் அழுவதும் கண்ணீரைத்துடைப்பதுமாக நின்று கொண்டிருந்தவளருகில் சென்று” உங்களுக்கு இவர் என்ன வேணும்?” என அப்பாவியாய் கேட்டான்.
“யாருன்னு தெரியாது. ஆனா டெய்லியும் நாம்போற நாற்பத்தஞ்சு ஏ ல தான் வருவாரு. நூத்தியெட்டு ஆம்புலன்ஸ்ஸூக்கு போன் பண்ணிட்டேன். எனக்கு வேற உடனே வீட்டுக்கு போகனம். என்னைப்பொண்ணு பார்க்க வராங்க. நீங்க இந்த பேசன்ட் கூட போக முடியுமா? செலவுக்கு வேணும்னா என்னோட சைன வெச்சுக்கங்க” என கூறி உடனே கழுத்திலிருந்த சைனை கழட்டி கவின் கையில் திணித்து விட்டு, யாரென கூட கேட்காமல், போன் நெம்பர் கூட வாங்காமல் அவள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி சென்று விட்டாள்.
மயங்கிய நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்து, நினைவு வந்ததும் நோயாளியின் உறவினர்களை வரவழைத்து விட்டு வீட்டிற்கு சென்றவன், ஒவ்வொரு நாளும் அப்பேருந்து நிறுத்தம் வந்து அப்பெண்ணைத்தேடியும் கிடைக்கவில்லை.
அவள் தனது கையில் திணித்த சைனை வீட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டான்.
‘யாரென்று தெரியாத ஒரு நோயாளிக்காக யாரென்று தெரியாத ஒருவரிடம் தனது மூன்று பவுன் தங்கத்திலான சைனை யார் தான் கழட்டித்தருவார்? பெரிய மனசாக இருக்க வேண்டும். தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்பவன் பாக்யசாலிதான். அதுவே நாமாக இருந்தால்…’ என நினைப்பதோடு கோவிலுக்குச்சென்றாலே ‘அப்பெண்ணை எனக்கு காட்டிக்கொடு இறைவா’ என வேண்டிக்கொள்வான்.
நல்ல மேக்கப்புடன் தனது அறையை விட்டு வெளியே வந்த பெண் அனைவரையும் வணங்கி விட்டு தனது தாயிடமிருந்த காஃபி தட்டை வாங்கி புன்னகையுடன் வந்து கொடுத்த போது அவளது முகத்தைப்பார்த்து மேலும் அதிர்ந்தான் கவின்.
‘மாலை போட்டபடி இறந்து போன பெண் போட்டோவில் இருப்பது நம்மிடம் சைன் கழட்டிக்கொடுத்த பெண்ணா…? நாம் பார்க்க வந்திருக்கும் இப்பெண்ணா…? இரண்டு பேரும் ஒரே ஜாடையில் இருக்கிறார்களே.... கண்டிப்பாக இரண்டு பேரில் ஒருவர் தான். அது நிச்சயம்.ஒரு வேளை போட்டோவில் இருப்பது இப்பெண்ணின் சகோதரியாக இருக்குமோ….?’ குழப்பமடைந்தவன் “நீங்க…. நகை…. என்கிட்ட…. கொடுத்து….” என தயங்கித்தயங்கி கழுத்தைக்காட்டியபடி வார்த்தைகளை இழுத்ததைக்கண்டு கோபித்த படி பெண் தன் தாயையும் அழைத்துக்கொண்டு வேகமாக தனது அறைக்குள் சென்றாள்.
அறையிலிருந்த வெளியில் வந்த தாய் “இத பாருங்க பொண்ணு பார்க்க வந்து காஃபி கூட குடித்து முடிக்கிறதுக்குள்ள மாப்பிள்ளை நகையைப்பத்தி பேசினது என்னோட பொண்ணுக்கு புடிக்கல. அதனால நீங்க கெளம்புங்க…” சொல்லி விட்டு அறைக்குள் பெண்ணின் தாய் சென்று விட கவினுக்கு தலை சுற்றியது. அவனது தாயும், சகோதரியும் அழுதே விட்டனர்.
“பொண்ணு கிட்ட என்னடா சொன்னே…? நகை எத்தன பவுன் போடுவாங்கன்னு கேட்டியா…? உனக்கு சைன் போடுவாங்களான்னு கேட்டியா..? வரதட்சணையே வேண்டான்னுதானே சொன்னே….? இப்ப எதுக்கு திடீர்னு..?” தனது தாய் கோபமாக பேசி விட்டு வெளியே சென்று விட்டாள் தன் மகளுடன்.
‘தான் பேசியது தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ எனத்தெரிந்து கவலையடைந்தவன் பெண்ணின் மாமனை பேச அழைக்க, அவரும் கவினை புழுவாகப்பார்த்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தாம் இனி என்ன பேசினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனத்தெரிந்து தனது கழுத்திலிருந்த அந்த தங்க சைனை அவர்களது வீட்டின் டீபாய் மீது வைத்து விட்டு வெளியேறினான்.
மிகவும் கவலையுடன் அனைவரும் தாங்கள் வந்திருந்த காரில் கிளம்பினர். ‘நல்ல சம்மந்தத்தை வீணாக்கிட்டீங்க’ என திருமண தரகர் கவினைத்திட்டினார். போகிற வழியில் கோவிலுக்கு சென்று விட்டுச்செல்ல வேண்டும் என கவின் விரும்பியபடி சுவாமி தரிசனம் முடித்து வீட்டிற்கு சென்ற போது வீட்டிலிருந்த பாட்டியும், தாத்தாவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்து சொல்லி உச்சி முகர்ந்த போது மேலும் குழம்பியவனுக்கு தங்களது சமையலறையிலிருந்து வந்த காஃபி மணம் ஈர்க்க, உள்ளே நுழைந்தவனை ஓர் இளம் பெண் இனிப்பு ஊட்டி காலைத்தொட்டு வணங்கி வரவேற்றாள்.
அவள் வேறு யாருமில்லை. காலையில் பெண் பார்க்கப்போன அதே பெண்ணே தான். அவளது கழுத்தில் கவின் அவர்கள் வீட்டின் டீபாய் மேல் வைத்து விட்டு வந்த தங்கச்சைன் மின்னியது.
“இறந்து போனது அஞ்சு நிமிசம் எனக்கு முன்னாடி பொறந்த என்னோட அக்கா. நாங்க டிவின்ஸ். அவங்க போட்டோவப்பார்த்து கன்பியூஸ் ஆயிருப்பீங்க. இந்த சைனை உங்க கிட்ட கழட்டி கொடுத்தது நான் தான். யாருன்னு தெரியாம முதலா பார்த்த அடுத்த நொடி உங்களை நம்பியிருக்கேன்னா இப்ப முழுசா விசாரிச்சுட்டு பொண்ணு பார்க்க வரச்சொன்ன பின்னாடி உங்களை விடுவேனா? உங்களை பார்த்ததும் ஓரளவு அடையாளம் தெரிஞ்சிட்டேன். சைன்னு சொன்னதும் உறுதிப்படுத்திட்டேன். உடனே ஓகேன்னு சொன்னா வேல்யூ இருக்காதுன்னு தான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு நீங்க எங்க வீட்ல இருந்து கிளம்பினதும் குறுக்கு வழில கெளம்பி உங்களுக்கு முன்னாடி இங்கே வந்திட்டோம்” என பெண் காம்யா கூறியபோது கவின் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தான் வேண்டிய அனைத்து தெய்வங்களுக்கும் மானசீகமாக நன்றி சொன்னான்.
நல்ல கதை. எதிர்பாரா திருப்பம். எதிர்பார்த்த முடிவு. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊
அதே முகம் அசத்தலான கதை. ஆசிரியருக்கு ஒரு ஜே