அதே நிலை!




ஊரின் மத்தியில் இருந்த கிராமத்து ஆலமரத்தடியில் பெரிய கூட்டம். அனைவரும் வரிசையாக அமர்ந்திருக்க கதர் வேட்டி, சட்டை அணிந்தவாறு ராமசாமி ஐயா நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவதைக்கேட்க அந்த சுற்று வட்டார மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு புரிய வைக்க, ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறூட்டக்கதை சொல்வது போல் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களிடம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்த காந்தியடிகள், நேரு, வல்லபாய் படேல், நேதாஜி, வ.உ.சி, பாரதியார் போன்றோர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப்பற்றி எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.

“காலங்காலமா நம்ம முன்னோர்கள் ஆண்டனுபவித்து வந்த நம்ம தேசத்த, ஒற்றுமையில்லாம நமக்குள்ளயே பகைச்சிட்டிருந்ததை, மொழி வாரியா பிரிஞ்சு கிடந்ததை கண்ட வியாபாரம் பண்ண வந்த ஆங்கிலேயர்கள், சூழ்ச்சியால ஒவ்வொரு பகுதியா புடிச்சு இப்ப ஒட்டு மொத்த பாரத தேசத்தையும் அடிமைப்படுத்தி நம்ம பூமில விவசாயம் செய்யவே நமக்கு வரி விதிச்சதோட, கட்டாயப்படுத்தி வசூல் பண்ணறதோட, அந்த பணத்த நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு, சாலை வசதிகள், கல்விச்செலவு, மருத்துவ செலவுன்னு பயன்படுத்தாம அவங்க நாட்டுக்கு எடுத்துட்டு போறாங்க. நம்ம வளத்தை கொள்ளையடிக்கறாங்க. தட்டிக்கேக்கறவங்கள ஈவு, இரக்கமில்லாம சிறைல போடறாங்க, தூக்குலயும் போடறாங்க, சுட்டுக்கொல்லறாங்க. ஆடு, மாடு போல வண்டி இழுக்கவும், செக்கிழுக்கவும் பயன்படுத்தறாங்க. குறுகிய வழில கூட்டத்தை ஓட விட்டு ஜாலியன் வாலாபாக்னு ஓர் இடத்துல பல பேரை சுட்டு கொலை பண்ணிருக்காங்க. இனியும் நாம முழிச்சிட்டே தூங்கினா நம்ம வருங்கால குழந்தைகள் நிரந்தர அடிமையாக வேண்டியிருக்கும். உயிரே போனாலும் சரி உறுதியுடன் போராடனம் ஜெய்ஹிந்த்” என்ற போது கூட்டமே “ஜெய்ஹிந்த்” என ஆர்ப்பரித்து முழக்கமிட்டது.
அப்போது அங்கே வந்து நின்ற காவல் துறை அதிகாரி அவரது மார்பில் சுட “ஜெய்ஹிந்த்” என சொல்லிக்கொண்டே சரிந்தவரை தரையில் விழாமல் கூட்டத்தினர் தாங்கிக்கொண்டு எதிர்க்க முடியாமல் கண்ணீர் விட்டுக்கதறினர்.
சுதந்திரத்திற்க்காக தன் உயிரைக்கொடுத்த ராமசாமி ஐயாவின் பேரன் ரவி ராமசாமி அதே இடத்தில் நடக்கும் கூட்டத்தில் மிகவும் ஆக்ரோசமாகப்பேசிக்கொண்டிருந்தார்.
“எனது தாத்தாவைப்போல, திருப்பூர் குமரனைப்போல எண்ணிலடங்கா தியாகிகள் எதற்காக தங்களது இன்னுயிரை கொடுத்தார்களோ அவர்களுடைய எண்ணம் சுதந்திரம் கிடைத்த பின்னும் இன்னும் நிறைவேறவில்லை. அதிகாரம் மாறினாலும் அவலநிலை மாறவில்லை. அன்று மக்களின் வரிப்பணம் வெளிநாட்டுக்குச்சென்றது. இன்றும் செல்கிறது. பல வருடங்கள் கடந்தும் பரதேசிகளைப்போல இன்றும் குடிசையில் வாழ்பவர்களும், அன்றாட உணவுக்கு சிரமப்படுவோரும், பிச்சையெடுப்போரும், அதிகாரத்திலிருப்போர் செய்யும் தவறுகளை எதிர்த்துப்பேச பயப்பட்டு ஒதுங்கிச்செல்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். எனக்கும் இந்தக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கூட்டம் முடிந்தவுடன் கைது செய்யப்படலாம். கொலை, கொள்ளை, பலாத்காரம் பற்றிய செய்திகள் நாடு முழுவதுமிருந்து செய்திகளாக தினமும் வந்தவண்ணமாக உள்ளதோடு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைப்பதில்லை. ஒரு பெரிய குற்றத்தைச்செய்த குற்றவாளி மறுபடியும் குற்றச்செயலில் தைரியமாக ஈடு படுகிறான். அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். கடவுளைப்போல தங்களையும் வணங்கும்படி வலம் வருகின்றனர். கந்தையணிந்த மக்கள் முன்னே விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தபடி பேசுகின்றனர். பல வாகனங்கள் பின் தொடர தங்களை மன்னர்களின் வாரிசு போலக்காட்டிக்கொள்கின்றனர். அவர்களது குடும்பத்துப்பெண்களும் அரண்மனை போன்ற வீடுகளில் வசிப்பதோடு, மிகவும் ஆடம்பரமாக வெளிப்படையாகவே வாழ்கின்றனர். வரிப்பணம் ஒரு சிலரின் ஆடம்பரத்தேவைக்காக கரைந்து போகிறது. நாடு பெரிய கடனில் இருக்கிறது. நாட்டையே விலைக்கு வாங்கும் நிலையில் ஒருசிலர் வளர்ந்து விட்டனர். மக்களாகிய நீங்களும் நானும் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நம் முன்னோர்களைப்போல இவர்களையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இன்றும் இலவசங்களைப்பெறும் ஏழைகளாகவே இருக்கின்றோம்” என உண்மையைப்பேசியதற்க்காக அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர், நெஞ்சு வலியால் இறந்து விட்டார் என சடலமாக ஊருக்குள் கொண்டுவரப்பட்டபோது தாத்தாவுக்காக கதறியழுத மக்கள் இன்று பேரனுக்காகவும் கதறியழுதனர். கதறியழுவதைத்தவிர அநீதியை எதிர்த்து அன்றும், இன்றும் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை!