அது ஒரு நிலாக்காலம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 16

சென்னை மெரீனாவில் இருக்கும் உழைப்பாளர் சிலையின் பின்னால் மணலில் வெகு தூரத்தில் அநேகமாக இருட்டத் துவங்கியிருந்த வேளையில் – அதுவரை என்றும் இல்லாத திருக்கோலத்தில் சுகந்தா என் மடியில் தலை வைத்து அமுத கண்ணீரெல்லாம் கன்னங்களில் காய்ந்திருக்சு, களைப்புடன் மண்ணில் படுத்திருந்த அந்த உணர்ச்சி நெரிசல் மிகுந்த சம்பவம். இன்றும் அந்த உழைப்பாளர் சிலை போல என் நினைவுகளில் திண்மையுடன் ஒரு சின்னம் போலவே பீடம் கொண்டிருக்கிறது.
உயிரே போவதாக இருந்தாலும் இனி விளையாட்டுக்காகக் கூடச் சின்னஞ்சிறு பொய்கூடச் சொல்ல மாட்டேனென்று அவளின் கைகளில் அடித்துச் அடித்துச் சத்தியம் செய்தேன். பொய்கள் எல்லாம் களையப்பட்டு விட்ட ஸ்படிகமாக நான் எழுச்சி அடைய உதவியாக மிக மென்மை மிக்க பெண்மணி கடைசியில் வீழ்ச்சி பெற நேர்ந்து விட்டது.
நன்றாகவே இருட்டி விட்டது.
“போலாமாம்மா?”
எழுந்து உட்கார்ந்து முகத்தை துடைத்தாள்.
“நான் அந்த ருத்ராகிட்டே உனக்கும் எனக்கும் சீக்கிரமே நடக்கப் போற மேரேஜ் பத்தியெல்லாம் சொல்லிட்டுத் தான் அவளை மீட் பண்றதுக்குச் சம்மதிச்சேன். ஆனா, உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. ருத்ராவை நான் அப்படியே மீட் பண்ணாமலே விட்டுடறேன்!”
சுகந்தா பதில் சொல்லாமல் தலையை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தாள்.
”சொல்லு. குத்ராவை இனிமே நான் மீட் பண்ணவா, வேண்டாமா?”
“வேண்டாம்:”
“சரி, சத்தியமா இனிமே அவளை மீட் பண்ணலை. போதுமா?”
எழுந்து புடலையை நன்றாக உதறி விட்டுக் கொண்டு சொன்னாள்: “ராம்ஜி, ப்ளீஸ் என் பேக்கை எடுத்துத் தாங்கோ…”
குனிந்து எடுத்தேன். வழக்கத்தைவிடக் கனமாக இருந்தது. சந்தேகத்தில் அதைத் திறந்து டிபன்பாக்ஸைப் பார்த்தேன். மதியம் அவள் சாப்பிடாத மோர் சாதம் அப்படியே இருந்தது.
“மத்யானம் சாப்பிடலையாம்மா?’ ‘- கேட்கக்கூட முடியாமல் என் குரல் உடைந்து நொறுங்கியது.
“அந்த மாதிரியெல்லாம் போன்ல பேசினா ஒரு மனுஷி சாப்பிடவா முடியும்?” – மீண்டும் அவளை மீறி அழுகை வெடிக்க, மனம் தாள முடியாமல் டிபன் பாக்ஸை மணலில் வைத்து விட்டுப் பாய்ந்து மனம் பதற என் கண்ணம்மாவைக் கட்டித் தழுவிக் கொண்டேன். இருவருக்குமே அந்த அழுகை அடங்கவில்லை. இருவருக்குமே அந்த அணைப்பு போதவில்லை. சுகந்தாவின் கூந்தலில் முத்தமிட்டேன். உப்புக் கரித்த கண்களில் முத்தமிட்டேன். எனக்கே உரிய அவளின் உதடுகளில் முதல் முறையாக நான் பல நிமிடங்களுக்கு முத்தமிட்டேன்.
பௌர்ணமி கழிந்த நிலா நன்கு உதயமாகிவிட்டது. கடலில் நிலா வெளிச்சம் ரம்மியமாகப் புரண்டு கொண்டிருந்தது. அந்த மனோரம்மியமான காட்சியைக் கண்ட வாறே ஜில்லிட்டுப் போயிருந்த மோர் சாதத்தை நானும் சுகந்தாவும் நிலாச் சோறாக உண்டோம்.
“ராம்ஜி… ப்ராப்ளம் வரும் போலத் தோணுது. அந்த வேணுகோபாலன் நவம்பர்லேயே இண்டியா வரப் போறாராம்…”
“பயப்படாதே. அதுக்கு முன்னாடி என் தங்கை கல்யாணம் முடிஞ்சி நாம ஒரே ஒட்டமா பெரியகுளம் இடையர் தெருவுக்கு ஓடியே போயிடலாம்…”
“உங்க தங்கைக்கு எதுவும் நல்ல அலையன்ஸ் வந்திருக்கா?”
“போன வாரம் ட்ரங்கால் போட்டு எங்க அப்பாவை ஒரு வாங்கு வாங்கினேன். ‘சட்டுபுட்டுனு தமிழரசியை எவன் தலையிலாவது கட்றீரா, இல்லை நம்ம ஆளோட மெட்ராஸ்ல இருந்து வந்து ஜின்னிங் ஃபேக்டரியில் இறங்கட்டுமா?’ன்னு அவரைக் கேட்டு நடுங்க வெச்சிட்டேன்! பத்தே நாள்ல மாப்பிள்ளை பார்த்து முடிச்சிடறேன்னு வாய்தா கேட்டிருக்கார்! அடுத்த வாய்தா கெடையவே கெடையாதுன்னு சொல்லி போன வச்சிட்டேன்…பார், பத்தே நாள்ல கல்யாண நியூஸ் வருதா, இல்லையா பார்…!”
ஆனால், என் தங்கையின் கல்யாணச் செய்தி பத்து நாட்களில் வரவில்லை; இருபத்தெட்டாவது நாள் டெலிபோனில் வந்தது;
“ஹலோ ! ராம்குமாரா? அப்பா பேசறேன் !” – என் செவிப்பறையே கிழிந்து போவது போல என் அப்பா அலறினார்.
”என்னப்பா? நான்தான் ராம்குமார் பேசறேன்!” – நானும் பதிலுக்கு வேண்டுமென்றே அலறினேன்.
“நான் பேசறது நல்லா கேக்குதா?” – அவரின் அலறல், “கேக்குது அப்பா!” என்னுடைய அலறல்.
“நம்ம தமிழுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு…”
ஜில்லென்று நான் பாராசூட்டில் ஆகாயத்தில் மிதப்பது போலப் பறந்தேன். என் கண் எதிரில் சுசுந்தா தெரிந்தாள். செத்தான் வேணுகோபாலன்!
“மாப்பிள்ளை எந்த ஊர்ப்பா?”
“ராசபாளையம். நமக்கெல்லாம் நல்லா தெரிஞ்சவுக தான். அவுகளுக்கும் ஜின்னிங் ஃபேக்டரி இருக்கு, மாந்தோப்பு இருக்கு… நல்ல குடும்பம்தான்…”
“மாப்பிள்ளை, பொண்ணைப் பார்த்தாச்சா?”
“பாத்தாச்சி. நம்ம தமிழை அவருக்குப் பிடிச்சிப் போச்சி!”
எப்படித்தான் பிடித்ததோ? எனக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது! என் தங்கை தமிரசியையும் ஒருவனுக்குப் பிடிக்கிறது! நமக்கென்ன? எவனாவது ஒருவனுக்குப் பிடித்தால் சரி.
உடனே சுகந்தாவுக்கு போன் செய்தேன்…
”மனசை என்னவோ பண்றது ராம்ஜி…”
“ஆஞ்சநேயரைப் பார்த்துச் சொல்லிடு! சீக்கிரமே அவருக்கு திருமஞ்சனம் பண்றதா உடனே போய் ஞாபக மூட்டிடு”
“நெஜமாவே. இன்னிக்கி அம்மா, நான், கௌஸி எல்லோரும் போறோம் – ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தறதுக்கு…!”
“ஐயைய! அப்ப இன்னிக்கு ஈவினிங் உன்னைப் பார்க்க முடியாதா?”
“ஸாரி…! நாளைக்கி ஈவினிங் பார்த்தா போறது…”
“ஏ அப்பா! நாளைக்கி ஈவினிங்கா? அதுவரைக்கும் தாங்காதும்மா!”
“கல்யாணத் தேதி நிச்சயம் பண்ணிட்டாளா?”
”இன்னும் இல்லை. நிச்சயதார்த்தம் தான் அடுத்த வெள்ளிக்கிழமை…”
“நீங்க போறேளா?”
“நோ… இனிமே நமக்கு அங்கே என்ன வேலை. இங்கேதான் தலைபோற வேலை! நமக்கு வீடு பார்க்கணும். குடித்தனம் பண்ண அத்தனை சாமானும் வாங்கணும்… உன்னைப் பெரியகுளத்துக்கு கடத்திட்டு போக ஏற்பாடெல்லாம் பண்ணணும்…”
அன்று மாலை சுகந்தாவோடு இருக்கமுடியாத நிலையில் ரோஸ்மேரியைப் பார்க்க ஓடினேன். ஸீலியா குன்னூர் போயிருந்தாள். ரோஸிக்கு துணையாக ஆண்ட்டி மட்டும் என் சொற்படி இருந்தது. தோட்டத்துக்கு ஓடிப்போய் ரோஜா பறித்து வந்து ரோஸியின் ஒற்றை ஜடையில் சூட்டினேன்.
“பாஸ்… ரொம்ப ஜாலியா இருக்கே! உனக்குக் கல்யாணமா?”
“கரெக்டா சொல்லிட்டே…”
ரோஸி என் கழுத்தைப் பின்னிக் கொண்டாள்.
“உன் மேரேஜுக்கு எனக்கு நெறைய புது ட்ரஸ் வேணும்…”
“உனக்கு இல்லாததா? மூர்மார்கெட்ல லண்டன் ஸ்டோர்ல கொண்டு போய் ஒன்னை விட்டுடறேன். உன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடு! சரி. எங்கே பெரியவளை…?”
“குன்னுர் போயிருக்கு…”
“திரும்பி வரச்சொல்லாத, வந்தா இன்னும் கொஞ்ச நாள்ல அவ தெருவுலதான் நிப்பா…!”
“அப்படியெல்லாம் சொல்லாத பாஸ்,”
வந்த வேகத்திலேயே கிளம்பி விட்டேன்.
மறுநாள் மதியமே சுகந்தா பர்மிஷனில் வந்து விட்டாள். ஒரு மாறுதலுக்காக மாம்பலம் நடேச முதலியார் பார்க்கில், ஒரு விசிறி வாழையின் அருகில் இருவரும் அமர்ந்து கொண்டோம்.
“நிச்சயதார்த்தத்துக்கு நெஜமாகவே நீங்க போகலையா ராம்ஜி!”
“நமக்கு ஒத்துக்காதும்மா அந்த கூட்டமெல்லாம். அதுவும் இல்லாம என்னைக் கொஞ்சம் தள்ளி வச்சிட்ட மாதிரி வச்சிருக்கானுங்க… அவனுங்க மூஞ்சியில போயி முழிக்க முடியுமா?”
“சரி, கல்யாணத்துக்குப் போவேள் இல்லையா?”
“போயாகணுமே! தமிழரசி கல்யாணத்துக்கு ஏழாவது நாள் நம்ம கல்யாணமாச்சே…!”
“சரி, நம்ம ப்ளான் என்ன? நான் என்னிக்கு உங்க ஊருக்குப் புறப்பட்டு வர்றது? எப்படி நம்ம கல்யாணத்தை நடத்தறது? இப்பவே பேசி முடிவு செஞ்சிடலாம்…”
“நேத்திக்கி நைட்டே கம்ப்ளீட்டா ப்ளான் பண்ணி வச்சிட்டேன். சொல்லட்டுமா ப்ளானை”
“சொல்லுங்கோ சொல்லுங்கோ…”
“நான் வந்து நாளைக்கே எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுதிடறேன்…”
“என்ன எழுதப் போறேள்?”
“இந்த மாதிரி நான் உங்ககிட்டே நேர்ல சொன்ன மாதிரி சுசுந்தா என்கிற பொண்ணை தமிழரசி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பெரியகுளத்துக்கு அழைச்சிட்டு வந்து உங்க முன்னாடி நம்ம வீட்ல வச்சி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எழுதிடறேன். மத்ததெல்லாம் எங்கம்மா பார்த்துப்பாங்க. தாலி செயின் ஒண்ணு பெரிய மாட்டுச் சங்கிலி மாதிரி செய்வாங்க பார். அதை நாலு நாள் நீ போட்டிருந்தாலே போதும். கழுத்து அறுந்து போயிடும்!”
“அவ்வளவு கனமா செய்வாளா?”
“அது ஒண்ணே பதினெட்டு பவுன்…!”
“யம்மாடி…!”
“அப்புறம் ஒவ்வொரு கைக்கும் தங்க வளையல் நாலு ஜோடி, கல் வளையல் ரெண்டு ஜோடி – என்ன ஆச்சி கணக்கு? ஒரு கைக்கு மட்டும் பன்னிரண்டு வளையல்கள்! ரெண்டு கைக்கும் சேத்து இருபத்தினாலு வளையல்…”
”கையே சுழண்டு விழுந்துடும்.”
“அப்புறம் ஷார்ட் செயின். லாங் செயின். தங்க நெக்லஸ் வைர நெக்லஸ். வைரத்ல கம்மல்…”
“ரொம்ப செலவாகுமே ராம்ஜி.”
“பேசாம இரு. எங்க அப்பா கிட்ட இருந்து இப்படித் தான் பணத்தைக் கறக்கணும்! எல்லாம் எங்கம்மா க்ளீயரா செய்திடுவாங்க! அவங்களுக்கு எத்தனை வருஷப் பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து பணத்தை கறந்து கறந்து!”
“புடவை?”
“எல்லாம் உன் மாமனார் மாமியார் செலவுதாம்மா. கல்யாணத்துக்கு நமக்கு ஒரு பைசா செலவு கிடையாது. இங்கேருந்து பெரியகுளம் போற செலவு ஒண்ணுதான். நான் முதல்ல தமிழரசி கல்யாணத்துக்கு போயிடறேன். நம்ம கல்யாண டேட் என்னிக்கி பிக்ஸ் பண்றோமோ, அதுக்கு முந்தின நாளுக்கு முந்தின நாள், உனக்கு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் டிக்கெட் ரிசர்வ் செய்து தந்திடறேன். நீ புறப்பட்டு வந்திரு. கொடைக்கானல் ரோட் ஸ்டேஷன்ல ஒரு ப்ரைவேட் டாக்ஸியோடு நான் வந்து காத்திருக்கிறேன். நேரா பெரியகுளம். மறுநாள் சப்த மில்லாமலே நம்ம கல்யாணம்…”
“உங்க ரிலேட்டிவ்ஸ் யாரையும் கூப்பிட மாட் டேளா?”
“ஒரு பயலைக் கூப்பிடமாட்டேன். பெரியகுளத்துல எண்ணி நாலே நாள். அதுவும் எங்க அம்மாவுக்காக, அங்கிருந்து நேரா கொடைக்கானல். அங்கேதான் நமக்கு சாந்தி முகூர்த்தம்…அதுக்கு முன்னாடி அவசரப்பட்டீன்னா ஸாரி, என்னாவ முடியாது…”
அப்போது, அன்றைக்கு என் சுசுந்தா மிகப் பலமாகக் கிள்ளினாளே. அது தான் என்னை அவள் கடைசியாகக் கிள்ளியது.
ஒரு வாரம் சுழித்து என் தங்கை தமிழரசியின் நிச்சயதார்த்தம் பெரியகுளத்தில் நடந்து முடிந்ததை என் அப்பா மறுபடியும் ட்ரங்கால் போட்டு அலறி அலறிச் சொன்னார், கல்யாணத் தேதி நவம்பர் 5 என்று திருப்பித் திருப்பி ஐந்து தடவை சொன்னார்.
“நவம்பர் அஞ்சாம் தேதி தமிழரசி கல்யாண கேஸ் பைல் ஆகுது சுகந்தா…”
“யம்மாடி! தப்பிச்சேன். ஸ்டேட்ஸ்லேர்ந்து வேணு கோபாலன் நவம்பர் பதினாலாம் தேதி வர்றாராம்…”
“நம்ம கல்யாணம் நவம்பர் பத்து… நீ இங்கேயிருந்து எங்க ஊருக்குக் கிளம்ப வேண்டிய டேட் நவம்பர் எட்டு, நவம்பர் பதினாலாம் தேதி நாம கொடைக்கானல்ல குளிருக்கு நல்லா இழுத்து போர்த்திப் படுத்து நடுங்கிக் கிட்டிருப்போம்…”
சுகந்தா பணிபுரிந்திருந்த சில வருடங்களில் தன்னுடைய சொந்த சேமிப்பாக வங்கிகளில் பாதுகாத்து வைத்திருந்த ஒன்பதாயிரம் ரூபாயை எடுத்து என்னிடம் ஒப்படைத்து விட்டாள். நான் வேண்டாமென்று சொல்லியும், தீர்மானமாகத் திரும்பப் பெற்று கொள்ள மறுத்து விட்டாள்.
பெரியகுளத்தில் திருமண வேலைகள் துவங்கிவிட்டன. நான் சாந்தோம் பகுதியில் அருமையான வீடாகப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தேன். ஒரு நாள் மாலை சுகந்தாவும் என்னுடன் வந்து வீட்டைப் பார்த்தாள். வீட்டைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பரவசமாக இருந்தது.
“இந்த வாடகை வீட்டைப் பார்த்தே அசந்து போறியே திருவான்மியூரில் கட்டப்போறேன் பார். சுகந்த பவனம்… அதைப் பார்த்தா உனக்கு மூச்சே நின்னுடும்…”
“நம்ம வீட்டுக்குத் தேவையானதெல்லாம் எப்போ வாங்கப் போறேள்?”
“நாலு நாள் பொறுத்துக்க. ஸ்பென்சர் போயிடலாம். என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்துடு…”
“அதெல்லாம் போட்டு வச்சுட்டேன்!”
“ப்ரிஜ் வாங்கணுமா?”
”சின்னதா போறும்…”
“மிக்ஸி, க்ரைண்டர்…?”
“அது இல்லாமலா!”
“சரி, மறுபடியும் நல்லா யோச்சி லிஸ்ட் தயார் பண்ணிடு.”
“நீங்க எனக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி வச்சுடுங்கோ…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…”
கணவன் மனைவியாக அந்த வீட்டில் வாழ்க்கையைத் துவங்கப் போகிற சுகந்தாவின் கண்களில் விரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தபடி நின்ற நான், உணர்வு மேலிட்டு அவளின் கைகளைப் பற்றினேன். நன்றிக் கடனுடன் அவளின் அழகிய முகம் என் மார்பில் சாய்ந்து கொண்டது. அந்த முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டேன், எத்தனை முத்தமிட்டும் தாகம் தீரவில்லை. இது எத்தனை வருட தாகம்? எத்தனை வருடக் களைப்பு? முத்தத்துக்கும் அப்பால் அவளைச் செலுத்தத் துடித்த என் துடிப்பை உணர்ந்து என் பிடியிலிருந்து திமிறி விலகி நின்ற சுகந்தாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளின் விரைவான மூச்சும் வியர்வையும் கூட என்னை மோகம் கொள்ள வைத்தன. இரு கைகளையும் நீட்டியபடி அவளை நெருங்கினேன்.
“ஊஹும் ராம்ஜி. ப்ளீஸ், வேணாம். வேணாம். உங்களுக்கு இல்லாம நான் எங்கே போயிடப் போறேன். இந்தக் கிணத்து நீரை வெள்ளமா கொண்டு போயிடும் ஏன் ராம்ஜி?”
”கிணத்துத் தண்ணியை வெள்ளம் கொண்டு போயிடாதுங்கறது எங்களுக்குத் தெரியாதா?” – எரிச்சலுடன் கேட்டேன்.
சுசுந்தா பதில் சொல்லாமல் இரக்கத்துடன் சிரித்தாள்.
“இப்ப தாகமா இருக்கே கண்ணம்மா! இப்ப தாகத் துக்குக் குடிக்க எனக்குத தண்ணி வேணுமே!”
இதைச் சிறிதும் எதிர்பாராமல் சுகந்தா அதிர்ந்து விட்டாள். ஒரு சன்னமான விம்மல் அவளின் நெஞ்சில் வெடிக்க, தலை தாழ்ந்துவிட்டாள். ‘அவ்வளவு தாகமாக இருந்தால் எடுத்துக் கொள்…’ என்ற நெகிழ்ச்சி அவளின் உடலில் இளகித் தெரிந்தது. அவளின் வருத்தம் கலந்த இணக்கம் என் உணர்வுகளைக் கலையச் செய்து விட்டது. அவளுடைய மனப்பூர்வமான சம்மதமின்றி அவளை த் தொடுவது கூடப் பாவம் என்ற பக்தி ஏற்பட்டுவிட்டது. செல்லமாக அவளின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன்… செவிகள் தீர்க்கமாகத் தெரியும்படி அவளின் கூந்தலைச் செம்மையாக்கினேன். “வா, போகலாம்.”
“அப்போ நான் வீட்டுக்குக் கிளம்பட்டுமா ராம்ஜி?”
“மகராசியா போ!”
சுகந்தாவை மகராசியாகப்போ என்றுதான் நான் சொல்லி வழியனுப்பினேன். துரதிர்ஷ்டவசமாக, ‘போய் வா’ என்று சொல்லி வழியனுப்பவில்லை!
அத்தியாயம் – 17
ஸ்பென்ஸர் போய் எங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்வதற்காக நாங்கள் குறித்து வைத்திருந்த அந்த நாளுக்கு இரண்டு தினங்கள் முன்பாக, ஆபீஸில் நான் தபாலில் என் தங்கை தமிழரசியின் திருமண அழைப்பிதழ் வருகிறதா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், பெரியகுளத்திலிருந்து எனக்கு ட்ரங்க் கால் வந்தது. குதூகலத்துடன் “அப்பா!” என்று கூவினேன்.
“ராம்குமாரா?” – என் அப்பாவின் குரல் சிறிது சுரகரத்துக் கேட்டது.
“ஆமாம்ப்பா. தமிழரசியின் கல்யாண வேலையெல்லாம் நடக்குதா?”
அப்பா மிகவும் தயங்கிவிட்டுச் சொன்னார் “சில காரணத்தால நம்ம தமிழரசி கல்யாணத்தை நிறுத்த வேண்டியாயிடுச்சி…”
விர்ரென்று தலைக்குள் எதுவோ ஓசையுடன் சுழல்வது போலிருந்தது. எல்லா ரத்தமும் என் உச்சந் தலையில் சுழியிட்டது. அநேகமாக போனில் நான் கதறினேன் :
“விவரமா சொல்லுங்கப்பா. அவசரப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடாதீங்க.”
“முழு விவரமும் உனக்கு நான் சுகடுதாசியில எழுதியிருக்கேன். இப்படி ஆயிட்டதாலே எல்லாருக்குமே ரொம்ப வருத்தம்தான். இருந்தாலும், கல்யாணத்தை நிறுத்தறதைத் தவிர வேற வழியில்லை. தமிழரசிதான் வேண்டவே வேண்டாம் இந்த சம்பந்தம்னு கண்டிப்பாச் சொல்லிட்டா… அதனால ஒன் கல்யாணத்தை இப்ப ஊர்ல வச்சிக்க வேண்டாம். வச்சிக்கிறதும் சரியில்லை, பழனி முருகன் அருளால எல்லாம் நல்லபடியா முடியும்… வச்சிரட்டுமா?”
அத்தனையும் தலைகீழாகக் கவிழ்ந்து விட்ட பயங்கரப் பிரமையில் நான் நிலை குலைந்துவிட்டேன். சுகந்தாவிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வேன்? எப்படி அவளைச் சமாதானம் பண்ணுவேன் என்றெல்லாம் எண்ணிக் கலங்கினேன். டெலிபோன் மணி ஒலித்தாலே அவள்தானோ என்று அஞ்சி நடுங்கினேன். எனக்குள் எப்போதுமே உயிர் கொண்டிருக்கும் அகங்காரம் மரண அடிவாங்கி விட்டது. சுகந்தாவை எதிர்நோக்கும் என் ஆண்மை முற்றிலுமாக வடிந்து வற்றிக் கொண்டிருந்தது. இருட்டும் வரை ஆபீஸ் அறையிலேயே முடங்கிக் கிடந்தேன்.
என் அறைக்குத் திரும்பி இரவு வெகுநேரம் வரை ஏதேதோ இசைத்தட்டுக்களை அலற விட்டுக் கொண்டிருந்தேன். கடைசியீல், ஆஷாபுத்திலியின் மிகப் பழைய இசைத்தட்டு ஒன்றை ஒலிக்க விட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தபடியே தூங்கிப் போனேன்.
அந்த மிக மோசமான நாளின் பொழுது எந்த வேறு பாடுமின்றி விடிந்தது. குளிக்கவில்லை. உடை மாற்றிக் கொள்ளவில்லை. காப்பி மட்டும் குடித்து விட்டுப் பதினோரு மணிக்குக் கிளம்பி மெதுவாக ஆபீஸ் நோக்கி நடந்தேன்.
என் அப்பாவின் கனத்த கடிதம் என் வருகைக்கு மேஜையில் காத்திருந்தது. ஒவ்வொரு வரியையும் வெறியுடன் படித்தேன். வரதட்சணை விஷயத்தில் நிச்சயதார்த்தம் போது சம்மதித்திருந்த அத்தனையிலும் மாப்பிள்ளை வீட்டார் மிக அதிகபட்ச கோரிக்கைகளைத் திடீரென எழுப்பி விட்டார்கள். பெண் மிகவும் கருப்பாம். அதனால் நகைகளும் கையில் பணமும் பேசியதைவிட அதிகம் வேண்டுமாம். கேட்டது, கிடைத்துவிடும் என்ற அகம்பாவத்தில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளா விட்டால் கல்யாணத்தையே நிறுத்தி விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். கல்யாணத்துக்கு முன்பே இந்த மிரட்டலென்றால், சுல்யாணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் இருப்பார்களோ என்ற அச்சத்தில் என் தங்கை சிலிர்த்து விட்டாள். உடனே அந்த ஒப்பந்தத்தை முறித்து லிட்டார்கள்… முறிந்து போனது அந்த சம்பந்தம் மட்டும்தானா?
படிக்கப் படிக்க என் உடம்பெல்லாம் தகித்தது. வன விலங்குகளைச் சுட்டுத்தள்ளுகிற வெறி அந்த மனிதர்களையும் பொசுக்கிட என் உணர்வுகளில் மூண்டு எழுந்தது. அடுத்தவன் வீட்டுப் பணத்துக்குக் கேடு கெட்டு அலையும் அந்த மனிதப் பேய்களைக் கிழித்தெறிகிற வன்மத்தோடு என் அப்பாவின் அந்தக் கடிதத்தைக் கிழித்து காலில் போட்டு மிதித்து நசுக்கித் தீயிட்டுச் கொளுத்தினேன். நான் இட்ட அந்தத் தீயில் எரிந்து கருகிப் போனது அந்தக் கடிதம் மட்டும்தானா?
வெகு நேரம் கழித்து என் எல்லா உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் இறுக்கிப் புதைத்துக் கொண்டு சுசுந்தாவுக்கு டயல் செய்தேன்.
“சுகந்தா…!”
“என்ன ராம்ஜி… நாளைக்கு நாம ஸ்பென்சர் போயிடலாமா? கம்ப்ளீட் லிஸ்ட் தயார் பண்ணி வச்சிட்டேன்…”
நான் என்ன பதில் சொல்வேன்?
“என்ன, ஒண்ணுமே சொல்லாம இருக்கேள்?”
“போகலாம். சுகந்தா. கண்டிப்பா போகலாம். ஆனா, நாளைக்கு நாம ஸ்பென்ஸர் போறதும் போகாததும் உன் கையிலதான் இருக்கு…”
“நான் ரெடி ராம்ஜி…”
“அதில்லை சுகந்தா… வேறொரு ரொம்ப ரொம்ப அதிர்ச்சியான இன்ஸிடெண்ட் ஒண்ணு நடந்திடுச்சி. அதைச் சொல்றதுக்குத்தான் போன் பண்ணினேன்…”
“என்ன ஆச்சு ராம்ஜி ?”
“சுகந்தா…”
“எதுவானாலும் சொல்லுங்கோ…”
“கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்துக்கம்மா… சட்டுனு ஸ்லிப் ஆயிடாத…”
“ஆகமாட்டேன் சொல்லுங்கோ…”
“சொல்றேன். என் தங்கையோட கல்யாணம் நின்னு போச்சி சுகந்தா…”
“ஓ…!”
“வரதட்சணை விஷயத்ல ஏற்பட்ட சில பெரிய ப்ராப்ளத்தால அந்த சம்பந்தமே வேண்டாம்னு கல்யாணத்தை நிறுத்திட்டாங்க…”
“ஓ…!”
“அதுக்காக நாம ஒண்ணும் நம்மளோட ப்ளானை மாத்திக்க வேண்டாம். அதே டேட்ல இங்கேயே நாம ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிடலாம்… ஸாரி ! இது ரொம்ப எதிர்பாராம நடந்திடுச்சி… ஈவினிங் எல்லா விஷயத்தையும் டீடெய்லா பொறுமையா பேசி ஒரு முடிவுக்கு வருவோம்… நீ நேரா நம்ம இடத்துக்கு வந்திடு… என்ன? வச்சிரட்டுமா?”
ரிஸீவரை வைத்தேன். அந்தக் காற்றாடியின் கீழ் எனக்கு வியர்த்துக் கொட்டிருந்தது.
மத்யானம் ஒரு மணிக்கே அறையை அடைந்தேன்.
உடலும் உள்ளமும் வெறி கொண்டாற் போல இம்சைப் பட்டன. கூண்டுப் பிராணியாய் அறையில் நடந்து கொண்டே இருந்தேன். கருஞ்சிவப்புத் திரவத்தைக் கச்சாவாக ஊற்றி மேலும் என் எரிதலைத் தூண்டி விட்டேன். கடிகாரத்தில் மணி நாலரை. முனைக் கடையில் இரண்டு பாக்கெட் சிகரெட் வாங்கி, பாக்கெட்டில் திணித்துக் கொண்டு பந்தயக் குதிரையின் பாய்ச்சலோடு ஸ்கூட்டரில் அமர்ந்து மெரீனா நோக்கி விரைந்தேன்.
எனக்கு முன்பாகவே வெகுதூரத்தில் மணலில் அமர்ந்திருந்த சுகந்தாவை உழைப்பாளர் சிலையின் அருகில் நின்று சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் அமர்ந்திருந்தவள் புறத்தே என் சுகந்தா வாகவே தெரிந்தாலும் அகத்தே அவள் சுகந்தா அல்ல…. இந்த உள்ளுணர்வின் திகிலோடு அவளை நோக்கி நான் சிகரெட் புகைத்தபடி மிகமிக மெதுவாக நடந்தேன்.
நான் வந்து கொண்டிருந்ததை உணர்ந்தும் இழை கூட என்னைத் திரும்பிப் பார்க்காமல் முகம் பூராவும் ரத்தம் போல் கன்றிச் சிவந்திருக்க, சுசுந்தா ஒரு நெருப்பெனத் தெரிந்தாள்.
அவளாக எதுவும் கேட்காத வரையில் நானாக வாயைத் திறந்து எதையும் சொல்லக் கூடாது என்ற வைராக்கியத்தில் சிகரெட் புகைத்தபடி அவளுக்கு எதிரில் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். என்றும் போலத்தான் கடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. தூரத்தில் சாக்கோபார் வண்டிகள் எந்த மாறுதலும் இன்றி நின்றன.
நெடுநேரத்துக்குப் பின் சுகந்தாவின் குரல் ஒலித்தது “மெஸேஜ் எப்போ வந்தது?”
“நேத்திக்கி… அப்பா ட்ரங்க்கால் போட்டுப் பேசினார்.”
அடுத்து என்ன கேட்கப் போகிறாள் என்ற எதிர் பார்ப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுகந்தா எதுவுமே பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ட்ரங்க் கால்ல சுல்யாணம் நின்னு போச்சிங்கற விஷயத்தை மட்டும் அப்பா சுருக்கமா சொல்லிட்டு டீடெய்லா நடந்தது பூராவையும் இன்னிக்கிக் காலையில் கெடைச்ச லெட்டர்ல எழுதியிருந்தார்…” – பயந்து பயந்து சொன்னேன்.
சில நிமிஷங்களுக்குப் பின் சுகந்தாலின் ஒற்றை வளையல் அணிந்த கரம் என்னை நோக்கி நீண்டது.
“அந்த லெட்டரைக் காட்டுங்கோ!”
வலை போட்டு பிடிப்பது போன்ற என்னைப் நிச்சயத்துடன் என்னைப் பார்த்தவாறே கேட்டாள்.
குபுக்கென்று எனக்குள் சகல ஆதாரங்களும் என்னை நிர்க்கதியில் நிறுத்திவிட்ட கலவரத்தோடு தேய்ந்த குரலில் கேட்டேன்.
“எந்த வெட்டர்?”
“உங்க ஃபாதர் டீடெய்லா எழுதியிருந்தார்னு இப்ப சொன்னேளே அந்த லெட்டர்…” – மிகத் தீர்மானமான குரலில் கேட்டாள்.
எங்கள் உறவின் கதி என் கண் எதிரில் மாறிக் கொண்டிருந்த கலக்கத்தோடு சொன்னேன்: “ஸாரி… அந்த லெட்டர் இல்லை!'”
வழக்கின் எதிர்த்தரப்புக்கு உரிய குரூரத் தன்மையில் மறுபடியும் கேட்டாள்: ”அந்த லெட்டர் எனக்கு வேணும்.”
“இல்லை சுசுந்தா அந்த லெட்டர்”
“அதுக்குள்ளே என்னாச்சு அந்த லெட்டருக்கு?”
“அதைத் தீ வச்சிக் கொளுத்திட்டேன்…!” – சொல் லும்போதே என் குரல் உடைந்துவிட்டது.
“ஓ…!”
கவனித்துக் கொண்டே இருந்தேன். சுகந்தாவின் மென்மையான முகம் இறுகிக் கறுத்தது. அழகு மறைந்து ஓர் அகோரம் கண்களில் படிந்திருந்தது. ஓர் அற்பமான புழுவைப் பார்ப்பது போல என்னைப் பார்த்துக் கொண்டே கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டாள்:
“தமிழரசின்னு தங்கை ஒருத்தி நெஜமாவே உங்களுக்கு இருக்காளா?”
முகத்தின் மிக அருகே வெடிகுண்டு வெடித்துச் சிதறியது போலிருந்தது. எனக்குள் ஓர் அசுரக் குதிரைச் சக்தி பிடரியைச் சிலிர்த்தெழுந்தது. புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டைத் தூக்கி எறிந்தேன். என் குரல் வாள் போல அறுத்துக் கொண்டு ஒலித்தது:
“எங்கே, உனக்குத் தைரியம் இருந்தா மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேளு பார்க்கலாம்…”
சுகந்தாவின் முகபாவனை சற்றும் மாறவில்லை. அஞ்சாமல் என்னை எதிர் நோக்கினாள்: “ஒரு தடவை இல்லை. ஆயிரம் தடவைகூடக் கேட்பேன் அந்தக் கேள்வியை…”
“அப்போ தமிழரசின்னு ஒரு தங்கையே எனக்குக் கிடையாதுன்னு நினைக்கிறே…”
“ஆமா. எல்லாமே பொய்தான்…?”
பளீரென்று அவளின் தலைமயிரைப் பிடித்து ஆட்டலாம் போலிருந்தது எனக்கு. கஷ்டப்பட்டு மனக் கொந்தளிப்பை அடக்கிக் கொண்டேன். ஆவேசத்தில் சிதறி வெடித்து விடக்கூடாது என்று சிறிது நேரத்துக்குப் பல்லைக் கடித்தபடி உட்கார்ந்திருந்தேன்.
“புரியுது புரியுது…சுகந்தா! எத்தனையோ தடலை நீ என் தங்கையோட போட்டோ கேட்டப்பல்லாம் போட்டோ உனக்குக் குடுக்காமலே விட்டுட்டதை நெனச்சி இவ்வளவு கேவலமா என்னை எடை போட்டுட்டே… வேணாம். தயவுசெய்து வேணாம். ரெண்டுபேர் தலையிலேயுமே மண்ணைப் போட்டுடாதே… எத்தினியோ விஷயத்ல நான் உன்கிட்ட பொய் சொல்லியிருக்கேன். இல்லேன்னு சொல்வலை. ஆனா, ஸாரி… இந்த மாதிரி உன்னை மோசடி பண்ற அளவுக்கு நான் ஒரு பொய்கூடச் சொன்னது கிடையாது…”
அவளின் முகத்தில் இருந்த இறுக்கம் கடுகளவுகூட இளகவில்லை.
“சரி, உனக்கு என் தங்கையோட போட்டோதானே வேணும்? ஒரு பத்து நாள் பொறுத்துக்க. நேரே பெரிய குளத்துக்கே போய், தமிழரசி போட்டோ ஒண்ணை வாங்கிட்டு வந்து உனக்குக் காட்றேன்…”
பட்டென அவளின் முகம் வெறுப்புடன் என்னை நோக்கித் திரும்பியது. கண்கள் இகழ்ச்சியாக விரிந்தன- மிக அலட்சியமாகக் கேட்டான்:
“போட்டோ காட்டுவேள். ஆனா, அந்த போட் டோல இருக்கறவுதான் ஓங்க தங்கைன்னு எனக்கு எப்படித் தெரியும்? அதுக்கு என்ன ஆதாரம் காட்டுவேள்?”
ஆயிரம் சூரியன் என் தலைக்குள் கொடும் நெருப்பாகப் பாய்ந்து என் உடலையே பொசுக்கினாற் போலிருந்தது. எந்த மனிதனிடமும் நான் தோற்றதில்லை. எந்தக் கொடிய பிராணியையும் என் இலக்குத் தவற விட்டதேயில்லை. இவள் மட்டும் இத்தனை ஆணவமான கேள்வியைக் கேட்டு விட்டுத் தப்பி விடுவாளோ? நான்தான் இவளிடம் தோற்றுப் போவேனோ?
“ஓ… அவ்வளவு கெட்டிக்காரத்தனமா கேக்கறியா நீ. ஆதாரம் என்னன்னு? சுகந்தா! ஆதாரத்தைக் காட்றேன் நான்! கண்டிப்பா காட்றேன். ஆனா, அதுக்கு முன்னாடி என்னோட இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்…!”
கேள்வியை எதிர்நோக்கி ஆணவத்துடன் காத்திருந்தாள்,
“சுகந்தா… உங்க அப்பா துரைசாமிக்குத்தான் நீ பொறந்தே என்கிறதுக்கு என்ன ஆதாரம்? என்னோட இந்த கேள்விக்கு நீ பதில் சொல். நான் உன்னோட கேள்விக்குப் பதில் சொல்றேன்…”
இந்த இரண்டே இரண்டு கேள்விகளின் எரிமலை வெடிப்பில் ராம்குமார் – சுகந்தா என்ற இரண்டு ஜீவன்களின் மணங்களில் எழுப்பப்பட்டிருந்த காதல் மாளிகை தூள் தூளாக நொறுங்கி வீழ்ந்து தரைமட்டமாகியது
நெருப்பிடப்பட்டவள் போலப் பதறித் துடித்து, காற்றில் காறி உமிழ்ந்து பொங்கி அழுது எழுந்து வேகமாக மணலில் ஓடியவளை சில விநாடிகள் பேதலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்து, பின் நானும் எழுந்து அவள் பின்னால் ஓடினேன். நிறையப் பேர் பார்த்துக் கொண்டிருக்க மானம் அற்றுப் போய்த்தான் ஓடினேன். என்னை விட்டு அவள் போய்விடக் கூடாதே என்ற பரிதவிப்பில் தான் ஓடினேன்.
நான் அவளின் பின்னால் ஓடி வருகிறேன் என்பது தெரிந்ததும் சுசுந்தா மதம் கொண்டவளாகக் குனிந்து மண்ணை அள்ளி என்மேல் வீசினாள். சில கணங்களுக்கு அவளை நான் நெருக்கவே முடியாமல் என் உடல்பூராவும் மண்ணை வாரி இறைத்தாள். முற்றிலுமாக நான் ஸ்தம்பித்துப் போனேன். இரண்டு கைகளிலும் மண்ணை அள்ளிக் கொண்டு ஓர் அசுரப் பாவை விளக்காக நின்றவள் மண்ணை அப்படியே கீழே கொட்டிவிட்டுச் சொன்னாள்:
“இந்த மண்ணை உதறிட்டுப் போற மாதிரி உங்களையும் உதறிட்டுப் போறேன். எனக்கும் உங்களுக்கும் இருந்த உறவு இன்னியோட முடிஞ்சாச்சி. இனிமே நமக்குள் எந்த சம்பந்தமும் கிடையாது, என் பின்னாடியும் நீங்க வரப்படாது. வந்தேள்…நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…குட்-பை!”
சில கணங்கள அப்படியே தீப்பிழம்பாய் நின்றவள், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சாலையில் வேகமாக நடந்து என் கண்களிலிருந்து மறைந்தாள்.
பரந்த மெரினா மணல்வெளியில் சூறைக் காற்றில் வேரோடு சாய்ந்து விட்ட பெரும் விருட்சமாகப் பல மணி நேரங்கள் நான் வீழ்ந்து கிடந்தேன். சுற்றிலும் கவிழ்ந்திருந்த இருள் என் வாழ்க்கையிலும் கவிழ்ந்துவிட்டதை உணர்ந்தேன். என் எதிர்கால வளமை பெரும் கேள்விக் குறியாகிப் போயிருப்பதைத் தெரிந்து கொண்டேன். இந்தக் கடலின் எதிரில்தானே என் கண்ணம்மாவுடன் கொஞ்சி விளையாடினேன். இதே கடலின் எதிரில் தானே என் கண்ணம்மாவுடன் நிலாச் சோறுண்டேன். கண்ணீர் வடித்தேன். அலையில் நின்று கதறினேன். ஓர் அற்புத ஸ்திரீயை என்னுடன் இணைத்து, கத்தரித்துவிட்ட கடவுளிடம் கெஞ்சினேன். என் சுகந்தா இல்லாமல் வாழவே முடியாதென்று புலம்பியும், ஆனால் எத்தனை கண்ணீர் வடித்தும், எவ்வளவு புலம்பியும் என் காதல் ஏக்க முறையீடுகள் எந்தக் கடவுளின் திருச்சபையிலும் எடுபடவே இல்லை.
என் சுகந்தாவின் காதலையும் உறவையும் நான் இழந்தேன்.
அத்தியாயம் – 18
எங்கள் காதல் முறிவின் இறுதிச் சடங்குகள் அடுத்த சில தினங்களில் நடந்தேறின.
என்னிடம் இருந்த சுகந்தாவின் பணம், அவளின் சில லெட்டர்கள், அவளுடைய போட்டோ இன்னும் சில பொருள்களையும் ஞாபகமாகக் குறிப்பிட்டு அவற்றைத் தவறாமல் எடுத்து வந்து அவளிடம் ஜானகியின் வீட்டில் வைத்து ஒப்படைத்து விடும்படி எனக்குக் கடிதம் எழுதினாள் சுகந்தா. அவளுக்கே தெரியாமல் அவளுடைய பொருள் வேறு ஏதாவது என்னடம் இருந்தால் அதையும் நாணயத்துடன் அவளிடம் சேர்த்து விடும்படி அக் கடிதத்தில் ஒரு பின் குறிப்பு சேர்த்திருந்தாள்.
சுகந்தா குறிப்பிட்ட பொருள்களைக் கவனமாகச் சேகரித்துக் கொண்டேன். அவளுக்கே தெரியாமல் என்னிடம் அடைக்கலமாக இருந்த அவளின் ஃபுல்வாயில் புடவையை எடுத்தபோது என் மனம் உணர்ச்சி வசப்பட்டது. அறிவு ஒரு கணம் அப்புடவையை வைத்துக் கொள்ளலாமா என்று மயங்கியது. ஆனால், இதயம் மறுத்து விட்டது. ‘சுகந்தாவே எனக்கு இல்லாதபோது அவளின் புடவை மட்டும் எனக்கு ஏன்?’
ஜானகியின் வீட்டில் நானும் அவளும் முடிந்து போன ஒரு வழக்கின் இரண்டு பிரதிநிதிகளாக எதிர் எதிராக நின்றோம்.
நான் கொடுத்தவற்றைச் சரி பார்த்து வாங்கிக் கொண்டாள். கடைசியாக, அந்த ஃபுல்வாயில் புடவையைத் தலைக்குனிவுடன் எடுத்து அவளிடம் நீட்டினேன். புடவையைப் பார்த்து ஒரு கணம் குழம்பினாள். சில கணங்கள் மிகவும் இகழ்ச்சியாக அவளின் கண்கள் என் கண்களைச் சந்தித்து ஜானகியின் பக்கம் திரும்பின.
“பார்த்துக்கோ ஜானகி! காணாமல் போயிடுத்துன்னு சொன்ன புடவை வரது பார்! பேசறது ஒவ்வொண்ணும் பொய்… அந்தப் புடவை ஒண்ணும் எனக்குத் தேவை யில்லை…” – கோபத்துடன் கத்தினாள்.
திருப்பிக் கத்துகிற நிலையில் நான் இல்லை. அத்தப் புடவையை மௌனமாகக் கசக்கி அவளுடைய காலடியில் எறிந்தேன். பதிலுக்கு அவள், நான் அவளுக்குப் பரிசப் புடவையாக வாங்கிக் கொடுத்திருந்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை என் காலடியில் வீசியெறிந்தாள்.
நான் ஜானகியிடம்தான் சொன்னேன் “ஜானகி நான் அவளுக்குக் குடுத்த எதையும் திருப்பிக் கேக்கலை. அதனால இந்தப் பட்டுப் புடவையை நான் எடுத்துக்கப் போறதில்லை. அதை எடுத்து அவ வீதியில் எறிஞ்சாக் கூட எனக்கு கவலையில்லை…கடைசில ஒரு மோசமான வார்த்தையால நான் அவளைக் கேவலமா பேசிட்டது தப்புத்தான். அதுக்காக மனப்பூர்வமா நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஆனா, எனக்குத் தமிழரசின்னு ஒரு தங்கை இருக்காளான்னு கேக்கற அளவுக்கு என்னை அவ கேவலமா எடை போட்டுட்ட அந்த அவமாரியாதையை, அந்தக் கொடுமையை எந்த ஜென்மத்திலும் நான் மன்னிக்கவே மாட்டேன். ஆனா இப்பவும் சொல்றேன். சுகந்தா மேல எனக்குக் கோவமே கிடையாது. வருத்தம் தான். இந்த உலகம் பூராவும் அவ தேடினாலும் கெடைக்கவே முடியாத என்னை மாதிரி ஒரு மனுஷன் முகத்துல காறித்துப்பிட்டுப் போற அளவுக்குக் கேவலமாகப் போயிட்டாளேங்கற அந்த வருத்தம்தான்… ஆனா, அவ என்னை விட்டுப் பிரிஞ்சு எங்கே போனாலும் எப்படி வாழ்ந்தாலும் அவளுக்கு நிம்மதி இருக்கப் போறதில்லை. அது என்னமோ உண்மை, பட் ஏ டே வில் கம்; அனனிக்கித் தெரியும் அவளுக்கு, உண்மையிலேயே இந்த ராம்குமார் யார்னு…மண்ணை வாரி எறிஞ்சுட்டுப் போனா, என் கிட்டேயே வந்து ஒரு நாள் மன்னிப்பு கேட்கத்தான் போறா… தட்ஸ் ஆல். குட்-பை ”
பத்துப் பதினைந்து நாள்கள் யாரும் என்னைத் தேடி வரவேண்டாம் என்று ஆபீஸுக்குத் தகவல் தந்துவிட்டு வேண்டிய உடைகளை எடுத்துக்கொண்டு டாக்ஸியில் ஏறி செயிண்ட் தாமஸ் மவுண்ட் போய்ச் சேர்ந்தேன்.
ரோஸ்மேரி ஆபீஸ் போயிருந்தாள். ஸீலியா ஒரு சிறிய சொத்து விற்பனை விஷயமாகக் குன்னூர் போனவள் இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை. ஆன்ம களைப்புடன் கட்டிலில் சாய்ந்தேன்.
ஐந்து மணிக்கு ஆபீசிலிருந்து ரோஸ்மேரி சைக்கிளில் திரும்பி வந்தாள். என்னைப் பார்த்ததுமே அந்தி மந்தாரையாக அவளின் கண்கள் மலர்ந்தன. ஒடி வந்து மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“எப்ப வந்தே பாஸ்?”
“காலையிலேயே வந்துட்டேன் ரோஸி.”
“இன்னிக்கு நீ ஆபீஸ் போகலையா?”
“பதினைஞ்சி நாள் லீவ்! இங்கே தான் உன் கூட இருக்கப் போறேன்…”
“இது உன் வீடு. இங்கேயே இருந்திடு பாஸ்…”
இறுகிப் போயிருந்த என் சோகம், அந்த அன்பில் மீண்டும் சிதறிக் கொட்ட ரோஸ்மேரியின் மடியில் சாய்ந்து விட்டேன். என் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. என்னுடைய அழுகையைப் பார்த்து ரோஸ்மேரியும் விம்மத் தொடங்கி விட்டாள்.
“நீ அழாத பாஸ்… நீ அழுதா எனக்கும் அழுகை வருது… அழாத பாஸ்…” – ரோஸ்மேரியின் மடியிலிருந்து எழுந்தேன்.
“சீச்சீ! நீ ஏன் கண்ணம்மா அழறே!”
“நீ மட்டும் அழறே!”
“நான் செஞ்ச பாவத்துக்கு நான் அழறேன். சுசுந்தாவை நினைச்சு அழறேன்… ஒனக்கென்ன. ராஜாத்தி?”
“சுசுந்தா கூட ஏதாவது சண்டை போட்டியா?”
“அவதான் முதல்ல சண்டைக்கு வந்தா…”
“ஏன் சண்டைக்கு வந்தா?”
நடந்தது பூராவையும் சொன்னேன். அவளால் நம்பவே முடியவில்லை.
“சே! சுகந்தா ரொம்ப மோசம். நான் போய் அவளை நல்லா திட்டிட்டு வரட்டுமா பாஸ்…?”
“அதான் – நான் நல்லா திட்டி விட்டுட்டேனே!”
“இனிமே என்ன பண்ணப் போறே பாஸ்?”
“அதான் தெரியலை…”
ரோஸ்மேரி சில நிமிடங்கள் மௌனமாக இருந்தாள்.
இந்தத் துயரமான சம்பவத்தில் எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவள் சிந்திக்கிறாள் என்பது அவளுடைய தோற்றத்தில் தெரிந்தது. ஆனால் எதையும் அவள் வாய் விட்டு அப்போது சொல்லவில்லை.
அந்தப் பதினைந்து நாள்களும் ரோஸ்மேரி என்னுடனே இருந்தான். பதினைந்து நாளும் எந்த வெளி உலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு வனவாசத்தை மேற் கொண்டாற் போலத்தான் இருந்தது. என்னை ஒரு விநாடி கூடப் பிரியாமல், என்னைப் போஷித்தவள் போன்ற – என்னை அரவணைத்தவள் போன்ற – என் சின்னக் கண்ணம்மாவுக்கு நன்றி சொல்லி விட்டுப் பதினாறாவது நாள் மாம்பலம் கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தேன்.
“சுசுந்தாகிட்ட நீ மறுபடியும் போகவே மாட்டியா பாஸ்?”
“இல்லை ரோஸி. அது முடிஞ்சு போச்சு.”
“அப்ப உன் மேரேஜ்?”
“எனக்கு இனிமே கல்யாணமே கிடையாது ரோஸி.”
“அப்படியெல்லாம் சொல்லாத பாஸ். என்னை மேரேஜ் பண்ணிக்க பாஸ். உனக்கு நான் ரொம்ப ஃபெய்த்ஃபுல்லா இருக்கேன். வேணும்னா நானும் ஹிண்டுவா கன்வர்ட் ஆயிடறேன்… மாட்டேன்னு சொல்லாதே பாஸ். ஏன்னா, உன் மாதிரி ஆளை நான் லைஃப்ல மீட் பண்ணவே போறதில்லை பாஸ்…”
சொல்லிக் கொண்டே அந்த மனச்சிறுமி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். ஆறுதலாக அவளை அரவணைத்தபடி நான் மெளனமாக் நின்றேன். எனக்குள் மாற்றம் கொண்டிருக்கும் மிகப் பல தன்மைகளை அவளுக்கு எப்படி நான் வார்த்தைகளில் சொல்வேன்? எனக்குள் முறிந்து விழுந்து விட்ட சில கட்டு மானங்களை மீண்டும் எப்படி நான் நிர்மாணம் செய்வேன்? எதுவும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டேன். அதைப் பற்றி சில நாள்கள் கழித்துப் பேசலாம் என அவளுக்கு அப்போதைக்குப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானேன்.
மாம்பலம் சரோஜினி தெருவில் இருந்த என் அறையின் கதவைத் திறந்ததும் இடுக்கு வழியாகத் திணிக்கப் பட்டிருந்த அந்தத் திருமண அழைப்பிதழ்தான் என் காலில் மிதிப்பட்டது!
ஆச்சரியத்துடன் குனிந்து எடுத்தேன். ககந்தாவின் திருமணப் பத்திரிக்கை! திருச்சானூரில் அவளுக்கும் வேணுகோபாலனுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட வண்ணம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறப் போகிற திருமணத்துக்கான, நான்கு முனைகளிலும் மஞ்சள் தேய்க்கப்பட்ட அழைப்பிதழ்!
நான் துக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டேன். எனக்கு ஏன் இந்தத் தண்டனை? எனக்கு ஏன் இந்த அவமானம்? சகல மென்மைகளும் கொண்ட அந்தப் பெண்ணுக்கு ஏன் இத்தனை பழி வாங்கும் உணர்ச்சி? வெட்டி வீழ்த்தி விட்ட பறவையின் மிச்சமிருக்கும் ரத்தத்தையும் கொட்ட வைத்துப் பார்க்கிற இந்தக் குரூரம் ஏன் என் கண்ணாம்மாவுக்கு? பளீரென்று என் ரத்த நாளங்கள் வெடித்துத் தெரித்தன. என் இழப்பும் துக்கமும் அவமானமும் பொங்கிச் சிலிர்த்தன.
அந்த நவம்பர் 19ஆம் தேதி சுகந்தாவுக்கும் வேணு கோபாலனுக்கும் திருச்சானூரில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது, பம்பாய் வீதிகளில் இலக்கு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.
நான் உலகக் கசடுகள் அனைத்தும் தூர்ந்துவிட்ட ஸ்படிகமாக களிம்பு நீங்கியிருந்தேன். கிரஹணம் முற்றிலும் நீங்கி விட்டிருந்தது. சுசுந்தா, நான் என்ற ரோஸ்மேரி, தமிழரசி, மாடசாமி என்ற உறவின் முறைகள் எல்லாமே களைந்து போயிருந்தன. பணம், தொழில், காதல், குடும்பம் என்ற மன-சமூக இயல்புகள் வறண்டு விட்டன. வெறும் தனிமனிதனாக வானக் கூரையின் கீழ் சுதந்தரமாக எழுந்து நின்றேன்.
சில வாரங்களில் சென்னை திரும்பி, கிண்டியில் இயங்கிக் கொண்டிருந்த தொழிலை மூடி விட்டேன். என் பணத்தையெல்லாம் திரட்டி ரோஸ்மேரியிடம் ஒப்படைத்து விட்டு அவனிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்ள ஓர் இரவில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் சென்றேன்.
ஸீலியா என்னைக் கண்டதும் ஓடி வந்து அழுதாள். அன்புச் சிறுமி ரோஸ்மேரியின் வாழ்க்கையில் ஒரு விபரீதம் நிகழ்ந்திருந்தது, சில நாள்களுக்கு முன் இரவில் வாழ்க்கையில் ஒரு போலீஸ் ஆபீஸர்கள் என்று சொல்லிக் கொண்டு மூன்று பேர் காரில் வந்து அவளை மூர்க்கத்தனமாகக் கடத்திக் கொண்டு போய் பூந்தமல்லியின் அருகில் ஒரு வீட்டில் வைத்து அவளின் கற்பைச் சூறையாடி விட்டு, விடியும் முன் தெரு முனையில் விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். விலங்குகளால் குதறப்பட்ட பட்சியாக ரோஸ்மேரி சிதைந்து போய் படுக்கையில் கிடந்தாள்.
அந்த வேதனையிலும், “நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன் பாஸ்?” என்று கேட்டுத்தான் அவள் கண்ணீர் வடித்தாள்.
”என்னைக் கைவிட்டுடாத பாஸ். என்னை மேரேஜ் பண்ணிக்க பாஸ்…” என்று கெஞ்சினாள்.
அனைத்தையுமே கைவிட்டு விட்டதை எப்படி அவளுக்குச் சொல்வேன்? மனத்தில் துறவியாக ஆகி விட்டதை எவ்விதம் விளக்குவேன்?
“ரோஸி, என்னை நீ என்ன வேணுமானாலும் கேள். என் உயிரைக் குடுத்தாவது அதைச் செய்யறேன். ஆனா கல்யாணம் மட்டும் என்னால பண்ணிக்க முடியாது. ஸாரி…! இனிமே தயவு செஞ்சி அந்த பேச்சை மட்டும் எடுக்காதே…”
“எடுக்கலை பாஸ். இனிமே நான் அந்தப் பேச்சையே எடுக்கலை…”
“நல்ல பெண் நீ. என் பணம், சொத்து அத்தனையும் ஒனக்குத்தான். ஒரு நல்ல பையனா செலக்ட் பண்ணி ஒனக்கு நான் சுல்யாணம் பண்ணி வைக்கிறேன் கண்ணம்மா… அழாத… ஒனக்கு இனிமே எந்தக் குறையும் இல்லை. பயப்படாம நிம்மதியா நீ தூங்கு…”
“நிம்மதியா தூங்கிடறேன் பாஸ்.”
நடு இரவில் மாம்பலத்தில் என் அறைக் கதவை ஸீலியாவின் நண்பன் ஜார்ஜ் தட்டினான். எழுந்து கதவைத் திறந்தேன்.
”என்ன ஜார்ஜ்?”
”உடனே வா… ரோஸி பாய்ஸன் சாப்பிட்டிச்சி…”
“இப்ப எங்கே ரோஸி?”
“அடையாறுல பிரைவேட் நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணியிருக்கோம்…”
என் ஸ்கூட்டரில் தலைதெறிக்க விரைந்தோம். நர்ஸிங் ஹோம் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே ஓடிய போது ஸீலியாவின் அழுகைக் குரல் உரக்க ஒலித்தது.
வாடி உதிர்ந்த ரோஜாக் கனியாக என் சின்னக் கண்ணம்மா ரோஸ்மேரி, வெள்ளைத் துணியின் கீழ் சலவைக் கல் பதுமையாக உயிரற்றுப் போயிருந்தாள்…
ரோஸ்மேரியின் அந்த மரணக் காட்சியின் முன்னிலையில் நின்று கொண்டிருந்த என் மொத்த வாழ்க்கையுமே சுழற்சி இழந்து ஸ்தம்பித்து நின்றது. நான் அழவில்லை. கண்ணீர் விட்டுப் புலம்பவில்லை. இப்படியெல்லாம் அழிவுகள் நிகழ்ந்து விட்டனவே யென்று எந்தக் கடவுளையும் நிந்திக்கவும் இல்லை. முற்றிலுமாக நிர்மூலங்கள் ஏற்பட்டு நான் என்ற அகங்கார ரூபத்தையே நொறுக்கி உதிர்த்து விட்ட அந்நிலையில் கண்ணீர் ஏது? வெறும் எதிர்விளைவுகள் என்று அழுகையும் கதறலும் தான் ஏது?
ரோஸ்மேரியின் சடலத்தின் எதிரில் இயற்கையோடு இயற்கையாய் இயைந்த ஒரு தாவரமாக வெறும் கைகட்டி நான் நின்று கொண்டிருந்தேன் சற்றும் எதிர் பாராமல் அந்தத் தருணத்தில் தான் புதிதாகவும் பிறந்தேன். மனைவியாக வர இருந்த சுகந்தாவை இழந்து, மகளாக வாழ இருந்த ரோஸ்மேரியைப் பறி கொடுத்து – தன்னந் தனிமையில் நின்ற அந்தக் கணத்தில் ஒரு விநாடி என் இரண்டு கண்களின் பார்வையும் அற்றுப் போன அகண்ட இருளில் நிற்பதாக உணர்ந்தேனே – அந்த இமைப்பொழுதில் என்னுள் மூன்றாவது கண் நெற்றி மேட்டில் திறந்தது. அந்த நெற்றிக் கண்ணின் பார்வையில் இருள். வெளிச்சம், நிழல் என்ற இந்த முப்பரிமாண உலகுக்கு அப்பாற்பட்ட ஆரம்பமோ, முடிவோ அற்ற காலவெளியையும் தாண்டிய பரந்த ஜோதிர்மய ஒளி வெள்ளமே எங்கும் நீக்கமற விரிந்து கிடக்கிறது என்ற தரிசனத்தைக் காட்டுகிற முத்தாய்ப்புடன் என்னுடைய இந்த நினைவுத் தொடர் முற்றுப் பெறுகிறது…
இத்தனை குரூரங்களையும் அவலங்களையும் விழுப் புண்களாக மார்பில் ஏற்றுக் கொண்டு சித்தம் கலங்கி விடாமல், சிதைந்து போகாமல் மானிட வாழ்க்கையின் அத்தனை விபரீதங்களிலிருந்தும் அந்த ராம்குமார் மீண்டு வந்து விட்டான். அவனுக்குத் தொழில் இல்லை. குடும்பம். இல்லை. பொறுப்பு இல்லை. ஆசை இல்லை. கவலை இல்லை. இன்றும் அவன் தனித்துத்தான் வாழ்கிறான். தனித்தே அலைந்து திரிகிறான். நினைத்த நேரங்களில் கடற்கரையில் நிற்கிறான். எப்போதாவது சில சமயங்களில் ரோஸ்மேரியை நினைக்கிறான். நாட்டிய நர்த்தகி ருத்ரா, சினிமா நடிகையாக வேஷமிட்டு ஆடிக் கொண்டிருக்கிற காட்சிகளை செய்தித் தாள்களில் பார்க்கிறான்.
அந்த சுகந்தா மட்டும் தான் குவாலியர் நகரிலிருந்து சில மாதங்களுக்கு ஒரு முறை அவனுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாள். ஒரு குறிப்பிட்ட மதச் சார்பு கொண்ட இயக்கம் குவாலியர் நகரில், வாழ்விழந்த பெண்களுக்காக நடத்தி வருகிற அமைப்பில் அறிய பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டே அவளும் ஓர் அபலைப் பெண்ணாகத் தனித்து தான் வாழ்ந்து வருகிறாள். இறுதி நாள்களில் ராம்குமாருக்குத் தான் செய்த துரோகத்துக்கும், அவனை அவமதித்த துர்நடத்தைக்கும் அப்படித் தனிமைப்பட்டு ஆதரவற்றுத் தான் வாழ வேண்டும்; அந்த வாழ்க்கை தான் அதற்கான பிராயச்சித்தம் என்ற அவளின் சொந்த நியாயப்படி நாள்களைக் கழித்துக் கொண்டிருக்கிறாள்.
தமிழரசி என்று ஒரு தங்கை உங்களுக்கு நிஜமாகவே இருக்கிறாளா என்று ஓர் இதிகாச முக்கியத்துவமான கேள்வியை ராம்குமாரிடம் கேட்டாளே – அந்தக் கேள்வியின் உள்மனச் சந்தேக வடிவம் என்ன தெரியுமா? அப்படி யொரு தங்கை அவனுக்கு இல்லவே இல்லை என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஏற்கனவே அவனுக்குத் திருமணமாகி பெரிய குளத்தில் அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்ற வலிமையான சந்தேகமும் அவளின் அறிவில் ஒரு புற்றாக வளர்ந்திருந்தது! அந்த மனைவிக்குத் தான், மாதம் ஒரு முறை புடவைகளை வாங்கி அள்ளிக் கொண்டு ஊருக்கு ஓடுகிறான் என்றெல்லாம் அவள் விபரீதச் சந்தேகங்களை மனத்திலேயே புதைத்துப் புதைத்துப் புரையோடி போய் விட்டாள். அந்த விஷ விதையை முதன் முதலாக அவளுடைய மனத்தில் விதைத்தது சுகந்தாவின் தோழி ஜானகிதான்.
அந்த ராமாயணத்தில் கைகேயியை கூனிக் கிழவி என்னென்ன வக்கரிப்புக்கெல்லாம் ஆளாக்கிச் சீரழிய வைத்தாளோ, அதே போல் ஜானகியும் நவீன யுகக் கூனியாகச் செயல்பட்டு, “தங்கைக்குத்தான் புடவை வாங்கிப் போறார்னு என்ன நிச்சயம்?” என்ற கேள்வியை எழுப்பி வேறொரு இதிகாசமே நிகழக் காரணமாகி விட்டாள். கடைசியில் ஜானகி விதைத்த அந்த விதை, சுசுந்தாவின் மொத்த வாழ்க்கையும் நச்சுப் படுத்தி விட்டது. எப்படித் தெரியுமா? எந்த சந்தேகத்தில் ராம்குமாரை நிராகரித்து, அவசர அவசரமாக அமெரிக்காவில் மாண்டேனா யுனிவர்ஸிட்டியில் பேராசிரியராகப் பணியாற்றிய வேணுகோபாலனை மணந்து இந்த தேசத்தை விட்டே ஓடிப் போனாளோ, அந்த வேணுகோபாலனுக்குத் தான் அந்த அமெரிக்க மண்ணில் ஏற்கனவே மணமாகி, ஓர் இத்தாலியப் பெண் அவனுடன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்…
அந்த உண்மையை அறிந்த சுகந்தா அடைந்த அதிர்ச்சியும் அவமானமும், அமெரிக்க வீதியொன்றில் இதனால் அவள் சித்தம் களங்கியவள் போல ஓடிய கொடுமையும் அலங்கோலமும், சில மாதங்களிலேயே ஓர் அகதியென அவள் இந்தியாவிற்கு மீண்டு வந்த நிர்க்கதியும் சோகமும்; எந்தக் கடற்கரையில் மண்ணை வாரி எறிந்து காறி உமிழ்ந்து உறவை முறித்துக் கொண்டு சென்றாளோ, அதே கடற்கரையில் அதே ராம்குமாரின் கால்களில் விழுந்து அவள் கதறியழுத பரிதாபமும் வேதனையும், வாழ்க்கையெனும் நெடுங்கதையின் மிக வறண்ட அத்தியாயங்கள்…
(முற்றும்)
– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.
– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.