அதிர்ஷ்டக்கட்டைகள்!





இரவில் திடீரென்று தெரு விளக்குகள் அணைந்தன. நல்ல வேளையாக நிலவின் வெளிச்சம் ஓரளவு கை கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் எதிரில் வந்த அவளைப் பார்த்ததும் சடாரென்று நின்றான் வாசு. யாரைச் சந்தித்து கிழி கிழி என்று கிழிக்க வேண்டும் என்ற வன்மத்தோடு நீண்ட நாட்களாக மனதில் நினைத்துக் கொண்டி ருந்தானோ அவள் இப்போது அகப்பட்டு விட்டாள். நேருக்கு நேர் வந்து மாட்டிக் கொண்டாள்.
“ வாடி கிராதகி லதா! என்னை நீ சந்திப்பேன்னு எதிர்பார்க்கல்ல இல்லையா…” வெகு கிட்டத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து கேட்டான் வாசு
“………….” லதா வாயைத் திறக்கவில்லை,
வாசு தொடர்ந்து “ நீ ஒரு சரியான நம்பிக்கை துரோகி! உன் பின்னாடியே சுற்றிக் கிட்டிருந்த எனக்கு அல்வா கொடுத்திட்டியே ராட்சசி . ஏன் என்னை ஏமாற்றினே ?” வார்த்தைகள் சூடாக தெறித்து விழுந்தன.
“ ……….. .” லதா ‘உம்’மென்றிருந்தாள்.
“ ரெண்டு வருஷம் உன்னை உயிருக்குயிராய் காதலிச்சேன். உன்னையே நினைச்சு இரவும் பகலும் உருகிக்கிட்டிருந்தேன். அதுமட்டுமா…சக்திக்கு மீறி, கணக்கு பார்க்காமல் உனக்காக எவ்வளவு செலவு செய்தேன் ! நீ விரும்பிக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். எல்லாவற்றையும் வாங்கி ஏப்பம் விட்டு விட்டு கடைசியில் அம்போன்னு என்னைக் கட் பண்ணி விட்டாயே படு பாவி..”
“ …………” ம்ஹூம் வாய் திறக்கவில்லை.
“ உன்னைக் கடைசி வரை வெச்சு காப்பாத்துவேன்னு வாக்கு கொடுத்தேன் நான். நீ
யும் என்னோடு கடைசி வரை இருப்பதாக சத்தியம் செய்தாய். அந்தச் சத்தியம் என்ன
வாயிற்று ? சர்க்கரைப் பொங்கலாயிடிச்சா? உனக்கெல்லாம் சத்தியம் ஒரு கேடா
கேடு கெட்டவளே, பதில் சொல்லுடி ?”
“…………..” நோ ஆன்ஸர்.
“ நாம் சந்திக்கும்போதேல்லாம், ‘ எனக்கு நீ, உனக்கு நான் ‘ அப்படின்னு வாய் கிழிய பேசினாயே . அதன்படி நீ நடந்து கொண்டாயா ? அதைக் காற்றில் பறக்கவிட்டாயே
பாவி !”
” ……….” இன்னும் கீப்பிங் கொயட்.
” ஒரு விஷயம் நான் கேள்விப் பட்டேன். உனக்கப்புறம் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்யாணம் செய்ய உங்கப்பாவுக்கு வசதி இல்லை. அதனால் உன்னைப் பெரிய பணக்கார வரனாகப் பார்த்து தள்ளிவிட்டு அந்தப் பொறுப்பை அவன் தலையில் கட்டிவிட உங்கப்பா செய்த சூழுச்சி என ஒரு ஃப்ரெண்டு மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். நீயும் அதற்கு உடந்தை; அதனால் என்னைச் சந்திப்பதை நிறுத்திக் கொண்டேன்னு புரிஞ்சுக்கிட்டேன். சண்டாளி, உன் அப்பனோட விருப்பத் திற்காக நம் காதலை அடகு வெச்ச நீயெல்லாம் இனி உயிரோடு இருக்கக்கூடாது. ” என்று வாசு அவள் மென்னியைப் பிடித்து திருக முற்பட்டபோது , லேசாகச் சிரித்தவள், ” நீ என்னைக் கொல்ல முடியாது வாசு ! ” என்றதும் தன் கைகளை சரேலென இழுத்துக் கொண்டான்.
” ஏன்?”
” சொல்றேன். முதலில் நீ கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் என்னுடைய ஓரே பதில் ‘இயலாமை’. யெஸ், அதற்கெல்லாம் காரணம் என் தந்தை. நீ சொல்வதுபோல் என்னையும் சேர்த்து மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலைமை. அதனால் என்னை விட பதிமூன்று வயது மூத்தவர், காலம் கடந்து பிறந்த நான்கு வயது பெண் குழந்தை வைத்திருக்கும் மனைவியை இழந்த ஒருவருக்கு என்னைக் கட்டி வைக்க முயற்சி செய்தார் என் தந்தை. காரணம் பெரும் பணக்காரர். எங்கள் குடும்ப பொறுப்புகளை தான் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார். நான் முடியாது என பிடிவாதம் பிடித்தேன். தன் சொல்படி நடக்கவில்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தினார் என் தந்தை. இதனிடையில் நான் ஹவுஸ் அரெஸ்டில் வைக்கப்பட்டேன். என் செல்ஃபோனையும் பிடுங்கிக் கொண்டார் தந்தை. நீண்ட நாள் என் தொடர்பு இல்லாத காரணத்தால் நீ மனசு வெறுத்துப் போய் தற்கோலை செய்து கொண்டதாக செய்தி கேள்விப் பட்டேன். என் மேல் உயிரையே வைத்திருந்ததாக அடிக்கடி கூறி வந்த நீ அந்த உயிரைப் போக்கிக் கொண்டதால் உள்ளம் நொறுங்கிக் போய் இதயமே வெடித்துவிடும் போல இருந்தது எனக்கு. அதனால் துக்கம் தாளாமல் தூக்குப் போட்டு நானும் தற்கொலை செய்து கொண் டேன்….”
சட்டென இடைமறித்தவன், ” என்ன நீயும் தற்கொலை செய்து கொண்டாயா ?” என்
றான் அதிர்ச்சியோடு.
” ஆமாம். நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை. உன் நினைவில்லாத இதய த்திலே சிந்தனை இல்லை. காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்க வில்லை. உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்பெண்ணுறங்கவில்லை.. என் கற்பனை வான் நிலாவில் உன் முகம் கண்டேன். தூக்கமிழந்தேன். நிம்மதியற்ற வாழ்க்கை; சிந்தனையற்ற இதயம் ! வாழப் பிடிக்கவில்லை. ஒரே வழி தற்கொலை. அதை வெற்றிகரமாகச் செய்தேன். நான் ஏற்கனவே இறந்து போன விஷயம் உனக்குத் தெரியாது. அதனால்தான் என்னை நீ கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற போது , உன்னால் முடியாது என்று கூறினேன். உனக்கு இப்போது என் நிலைமை புரிந்திருக்கும்…”
“லதா ! ஒரு திரைப்படத்தில் வரும் பாடலின் சில வைர வரிகளை சுட்டிக் காட்டி உனக்கு
என் மீது இருக்கும் அசாத்திய காதலை உணர்த்தி விட்டாய். உண்மையில் நீ உயர்ந்த பண்புடையவள் ! அப்படிப்பட்ட உன்னைப் போய் சந்தேகப்பட்டு திட்டித் தீர்த்த என்னை மன்னித்து விடு. “
“ பரவாயில்லை வாசு ! சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உன்னை அப்படி ரியாக்ட் பண்ண வச்சிடுச்சி. “
“ சரி, உயிரோடிருந்தபோதுதான் நாம் இணைந்து வாழ கொடுப்பினை இல்லை. அட்லீஸ்ட் ஆவிகள் ரூபத்திலாவது நம்மை ஒன்றாகச் சேர்த்து வைத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம். ”
திடுக்கிட்டு கண் விழித்தான் சுந்தர். ‘என்ன பயங்கரமான கனவு ! சே ! கதையில் வருவது போல் காதல், தற்கொலை, ஆவிகள் இவைகளெல்லாம் தத்ரூபக் காட்சி களாக கனவில் வந்தது நல்ல வேடிக்கை! ‘ சமீபத்தில் தான் படித்த ஒரு அமானுஷ கதையின் தாக்கம் தான் அது என்பது அப்போதுதான் புரிந்தது. எழுந்து ஹாலுக்குச் சென்று ஃப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டரை எடுத்துக் குடித்தவனுக்கு கொஞ்சம் ஆஸூவாஸமாயிருந்தது. மணி பார்த்தபோது காலை ஐந்தரை மணி ஆகியிருந்தது.