அண்ணல் காட்டிய வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 583 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வைத்தியர் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் தொழில் அது. அவர் எழுதித் தந்திருக்கும் ஊசி மருந்தை இன் னும் இரண்டு மணி நேரத்திற்குள் கொடுக்காவிட்டால் என் மகன் சங்கரன் பிழைப்பதே அரிதாம். பணத்திற்கு எங்கே போவது? வண்ணானுக்குப் போடாத சட்டையும் தைத்த வேஷ்டி யுமாக நான் கடன் கேட்கப் போனால் யார்தான் தர முன் வரு வார்கள்? யாரைத்தான் போய்க் கேட்பது? மழை வேறு தூறிக் கொண்டே இருக்கிறது. ஆயிற்று, மழை வலுத்தால் வீட்டில் ஆங்காங்கு ஒழுக ஆரம்பித்துவிடும். பாத்திரங்களைப் பார்த்து ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும்.

எல்லாம் எனக்குச் சகஜமாகி விட்டது. இங்கு அமர்ந்து நான் யோசிக்கும்போது என் பலகீனம் நன்றாகப் புரிகிறது. இன்று கடன் வாங்கி மருந்து வாங்கி என் மகனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் நாளைக்கு? என் வயிற்றில் பிறந்த தோஷத் திற்காக இன்று இல்லாவிட்டால் நாளை அவன் இறக்கவேண்டி யது தானே? அவனுக்கு வந்திருக்கும் வியாதி கொடிது. அரசன் வீட்டு உணவு தந்தால் தான் அவன் உடல் தேறும். இன்று வியாதியால் மடிவான், அல்லது நாளை பட்டினியால் போவான். 

நான் குழந்தையைத் திரும்பிப் பார்க்கவில்லை. 

இந்தாருங்கள்—இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருந்தால் எப்படி? ஏதாவது வழி செய்யக் கூடாதா ?” என்று கண்ணீர் மல்க, தொண்டை அடைக்க என் மனைவி புலம்புகிறாள். 

“கரைத்த புளி மாதிரி ஓடுவதற்கு என் கையில் பணம் இல்லையே ? இடித்த புளி மாதிரி சமைந்து கிடக்கிறேன். என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று நான் சீறி விழுந்தேன். 

அவள் தன் புடவை முந்தாணியை வாயில் அடைத்துக் கொண்டு விம்மியபடியே பின்புறம் போனாள். 

நான் கல்லாகச் சமைந்து கிடந்தேன், கூடத்தில் நினைவின் றிப் போராடும் என் ஒரே குழந்தையைப் பார்த்தேன். மீண்டும் திரும்பிக் கொண்டேன். 

வீட்டுக்காரன் வந்து விட்டுப் போனான். கூரையிலுள்ள பொத்தல்களைப் பழுது பார்க்க மாட்டானாம். நான் காலி செய் தால் அவனுக்கு நிறைய வாடகை வருமாம். வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறி விட்டான். 

என் மனைவி கோபித்துக் கொண்டு எங்கே போனாளோ? அவள் உடலிலும் தாலியைத் தவிர நகை இல்லை. எல்லாம் உரித் தாகி விட்டது. நடுக்கடல் வரை இறங்கி விட்ட ஒருவன் அலை அடிக்குமே என்று பயப்படத்தான் முடியுமா? பயந்துதான் எங்கு போக முடியும்? அப்படி ஒரு நிலையில் என் மனம் மரத்து நின்று விட்டது. 

கஷ்டம் வந்தால் மனம் குழம்பும் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. துயரம் வரும் காலையில் தான் புத்தி மிகத் தெளிவாக, நிலையாக இருக்கிறது. எனக்கு வருத்தமோ படபடப்போ தோன்றவில்லை. நான் உயிரோடு இருந்து என்ன சுகத்தைக் கண்டுவிட்டேன். என் மகன் இறந்து போனால்தான் என்ன? அவன் பிழைத்தெழுந்ததும் அவனுக்கு என்ன பெரு வாழ்வு நான் அளித்துவிடப் போகிறேன் ? 

நான் ஒரு ஏழையின் மகனாகப் பிறந்தேன். என் தந்தையை விட என்னை ஏழையாக ஆக்கிவிட்டது பொருள்களின் அகவிலை. என் தந்தை ஒரு சிறிய பிள்ளையார் கோவில் பூஜை செய்து வந் தார். தவிரவும், குளத்தங்கரை அரச மரத்தடியில் அமர்ந்திருப் பார். அங்கு ஸ்நாநம் செய்ய வருபவர்கள், அரசமரம் சுற்றுப வர்கள், பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் இப் படி யாராவது தட்சிணை தருவார்களா என்று ஏங்கிக் கிடப்பார். ஏழ்மையிலேயே பழகிப் போராடி அவர் மனமே ஒரு தினுசாகி விட்டது. இரண்டணா காசுக்காக அவர் சில பொய்களைச் சொல்லி விடுவார். 

சில சமயம் அவர் கடினமாகப் பேசுவார். “இந்த ஊரில் இன்னும் நிறைய பேர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கவேண்டும் என்று தினமும் பிள்ளையாரை வேண்டுகிறேன்” என்பார். 

என் அம்மா சிரிப்பாள். “அத்தனை பேரும் உங்கள் அரச மரத்தைச் சுற்றினால் அல்லவா உங்கள் வேண்டுகோள் நிறை வேறும்? இப்பொழுதெல்லாம் அவரவர்களும் பட்டணக்கரையில் சென்று வைத்தியமல்லவா செய்து கொள்கிறார்கள்?” என்பாள். இருவரும் சிரிப்பார்கள். 

எனக்கு புத்தி தெரிய ஆரம்பித்ததும் எனக்கு அவர்கள் பேச்சு ரசிக்கவில்லை. அதற்குமுன் என் தாயின் பின்னாடியே எங்கு தின்பண்டம் கிடைக்கும், எங்கு ஒரு பைசா கிடைக்கும் என்று ஏங்கி ஓடிக்கொண்டிருப்பேன். நாளடைவில் அதில் எல்லாம்கூட என் மனம் லயிக்க மறுத்தது. 

நாங்கள் குடியிருந்த சத்திரத்திற்கு ஒரு நாள் ஓர் இளைஞர் வந்தார். நல்ல தேஜஸான முகம், தீர்மையான நாசி, தெளி வான பெரிய கண்கள் – தபஸ்விபோல இருந்தார் அவர். தூய கதர் ஆடை உடுத்து, கையில் ஒரு புத்தகத்துடனும், ஒரு சிறு பையுடனும் அவர் நுழைந்ததும் எனக்கு என்னவோ ஒருவித சிரிப்பு ஏற்பட்டது. கருகருவென்ற தலைமயிரைப் பின்னாடி வாரி விட்டிருந்தார் அவர். அதே கருகருவென்ற தாடி அவருக்குக் கம்பீரத்தை அளித்தது. 

நான் அப்பொழுது திண்ணை மீது படுத்துப் புரண்டுகொண்டே திருக்குறள் மனப்பாடம் செய்துகொண்டிருந்தேன். என்னைப் பிடித்து எழுப்பினார் அந்த இளைஞர். அழுக்குப் பிடித்த என் பக்கத்தில் அவர் அமர்ந்துகொண்டார். மெதுவாகப் பேச்சுக் கொடுத்து என்னைப்பற்றி விசாரித்தார். திருக்குறளின் மேன் மையை விளக்கி, அதைப் படிக்கும்போது பக்தி சிரத்தையோடு படிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அன்று மாலை பொதுக்கூட்டத்தில் திருக்குறள் போட்டி நடக்கப் போவ தாகவும், அதில் ஐந்து ரூபாய் பரிசு வைத்திருப்பதாகவும் அதற் காகப் படிப்பதாகவும் கூறினேன். 

அவர் என்னவோ போலச் சிரித்தார். பிறகு என்னைத் தன்னுடனேயே இருத்திப் பேச்சுக் கொடுத்தார். அன்றையப் பொதுக் கூட்டத்தை நடத்தவே அவர் வந்திருந்தார் என்பது பிறகு விளங்கியது. 

அன்று பரிசு பெற்றேன் நான். அதைக்கொண்டு என் தாயிடம் தரும்போது அவரும் என்னுடன் வந்தார். என்னை தன்னுடனேயே அழைத்துச் செல்ல என் தந்தையை அநுமதி கேட்டார். ஐந்து குழந்தைகளில் ஒருவன் குறைவதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லது, அவனாவது எங்காவது வயிறாற உண்ணட்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ. 

நான் அவருடன் வார்தாவுக்குப் போனேன். அங்கேயே படித்தேன், பயிற்சி பெற்றேன். பெரியவனாகி என் ஊர்திரும்பினேன். 

ஆசிரியப் பயிற்சி பெற்று எங்கள் ஊரிலேயே பணி புரியலா னேன். என் பெற்றோர்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற பேரவா என் மனத்துள் இருந்தது. 

நாளடைவில் அவர்கள் இறந்துவிட்டார்கள். என் இரு தங்கைகளுக்கும் மணம் செய்து அவர்களைப் புக்ககம் அனுப்பி விட்டேன். என் உடன் பிறந்த சகோதரர்கள் வேலை தேடி எங்கோ நகரத்திற்குச் சென்று விட்டார்கள். 

நான் மட்டும் எனக்கு குருவாக விளங்கிய அந்தக் கதராடை இளைஞரின் வாக்குப்படி இன்றுவரை எளிய வாழ்க்கையும் நேர்மையுமாகக் கண்ணியமாக வாழ்கிறேன். ஆயின் ஏழ்மை கொடிய வியாதி. அதை விரட்டி அடிக்க எனக்கு வழி தெரிய வில்லை. 

மணம் புரிந்துகொண்டேன். மக்கள் பிறந்தன. இறந்தன. இன்று இந்த ஒருவன்தான் மிஞ்சியிருக்கிறான். அவனும் சற்றுப் பொறுத்து என்னவாக ஆவானோ? 

நான் கூடத்திற்குச் சென்று மகனின் அருகில் அமர்ந்தேன். எட்டு வயதுச் சிறுவன். எலும்பும் தோலுமாகக் கிடந்தான். தொண்டையில் வந்து அடைந்துவிட்டது. கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். பெரிய கண்கள். தெளிந்த தடாகங்கள் போன்ற கண்கள் என்னைச் சீர் தூக்கிப் பார்த்தனவோ? 

என் உடல் பலம், மனவலுவு யாவற்றையும் திரட்டி ஓர் அமைதியான சிரிப்புச் சிரித்தேன். 

கீதையைப் பிரித்தேன். அவனுக்குக் காது கேட்கும்படிப் படிக்க ஆரம்பித்தேன். அவனுக்கு மனப்பாடமானபடியால் கேட்டுக்கொண்டே யிருந்தான். அவன் மூச்சு முட்டத் தவிப்பது எனக்கும் தெரிந்தது அவனுக்கும் தெரிந்தது. தெரியா தது போல இருவரும் பகவத்கீதையில் ஈடுபட்டோம். என் மனம் தளராமலிருக்க வேண்டும் என்று ஆண்டவனைத் துதித்த வண்ண மிருந்தேன். 

என் மனைவி எங்கு சென்றாளோ? 

குழந்தை தூங்கி விட்டானோ? இல்லை…? அவன் கண்கள் மூடியிருப்பதைப் பார்த்தேன். அதற்குள் என் மனைவி டாக்டரு டன் உள்ளே நுழைந்தாள்! என் வியப்பை அடக்கிக் கொண்டு ஒதுங்கி நின்றேன். என்னை வெட்டிவிடும் பார்வை ஒன்றை வீசி விட்டு அவள் வைத்தியருக்கு ஒத்தாசை செய்தாள். அவர் ஊசி மருந்தை ஏற்றிவிட்டுப் போய்விட்டார். 

“எப்படி வாங்கினாய் மருந்து ? டாக்டரை எப்படிச் சந்தித் தாய் ?” என்று நான் கேட்ட கேள்விக்கு மனைவி பதில் சொல்ல வில்லை. அதற்கு மாறாக அவள் என்னையே மடக்கினாள். 

“ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறதே? உங்கள் காதுக்கு ஒன்றுமே எட்டவில்லையா? ” என்று என்னைத் தாக்கினாள் அவள். ” ‘என்ன?” என்று கேட்ட எனக்கு, விஷயம் தெரியாமல் இல்லை. 

“என்ன’வா? வீட்டிலேயே களி மண் கட்டியாட்டமா விழுந்து கிடந்தால் எப்படி? லாட்டரி விழுந்து விட்டதாமே, போய்ப் பார்த்தீர்களா?” 

“பார்த்தேன்.” 

“என்ன, என்ன! போய்ப் பார்த்தீர்களா? நமக்கு வர வில்லையாக்கும். யாருக்கு வந்ததாம்? எவனாவது பணக்காரனுக்குத்தான் விழுந்திருக்கும். நம் தசை நமக்குத் தெரியாதா?” அவள் பலவாறும் புலம்ப ஆரம்பித்தாள், 

“உஷ் !  சத்தம் போடாதே!” என்று அடக்கி அவளை அப்பால் அழைத்துப் போனேன். 

“என்ன எண் பரிசு பெற்றது தெரியுமா?” என்று நான் கேட்டான், மெதுவாக. 

“இதோ எழுதிவந்தேனே ! 5342. இன்னமும் இதற்கு உரியவர் வரவில்லையாம். அதனால் பெயரைப் போடவில்லை, யாருக்கு அடித்ததோ? ” 

“இதோ பார். சத்தம் போடாதே. நம் ஸ்ரீநிவாசனுக்குத் தான் கிடைத்திருக்கிறது. இதோ பார்த்தாயா?” என்று கூறி அவளுக்கு என்னிடமுன்ள லாட்டரி டிக்கட்டைக் காட்டினேன்? 

அவள் வாயடைத்துப் போனாள். “அட, பாவி, அவன் தான் பணத்திலே புரளுகிறானே! இன்னமும் கிடைத்தால் என்ன செய்யப் போகிறான்? வாரி இறைப்பான்.”

“அது அவன் பாடு.” 

என் மனைவி ஒரே கணம் நிதானித்தாள். உடனே என்னிடம் வந்து யோசனை கூறினாள். அவள் முகம் தன் புத்தியின் மேன்மையில் பூரித்துப் போயிருந்தது. “ஸ்ரீனிவாசனுக்கு இந்த எண் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

“நான் தானே வாங்கினேன்?” 

“உங்கள் எண் தான் இது” என்றாள் அவள், தீர்மானமாக.  

“இல்லை, அவனுக்காக எடுத்த எண் தான் இது” என்று நானும் தீர்மானமாகக் கூறினேன், 

“யார் அறிவார்கள்? அவன் பெயர் கூட டிக்கட்டில் இல்லை. உங்கள் மனசில் தானே இந்தப் பாகுபாடெல்லாம்? ஸ்ரீநிவாச னுக்குத் தெரியாது. இந்தப் பணத்தைப் பெறுவது நமக்குப் பாலமாகாது. குழந்தை பிழைப்பான். ஸ்ரீநிவாசன் பணம் நாச மாகிறதே? இந்த ஒன்றாவது நல்லமுறையில் பயன்படட்டுமே? பேசாமல் உங்களுடையது என்றே சொல்லுங்கள். அவ்வாறே நினைத்துக் கொள்ளுங்கள்” என்று அவள் புத்தி புகட்டினாள். 

“நான் அவனுக்குத் தந்தி அடித்துவிட்டேன் ” என்றேன் நான், வெற்றி முறுவலுடன். 

அவள் தலையில் பளீர், பளீர் என்று அடித்துக் கொண்டாள். “இப்படியும் ஓர் அசட்டுத்தனமா? அவனுக்கு இந்த ஆயிரம் ரூபாய் வரவா, செலவா? அவன் கண்டானா ? பேசாமல் உங்களுடையது என்று சொல்லவேண்டியது தானே ? வெண்ணெயைத் திரட்டிக் கையில் கொடுத்தால் அதைச் சாக்கடையில் எறிவார்களா?” என்று அவள் புலம்பினாள். 

“இதோ பார். இதெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை. குழந்தை உயிருக்கே மன்றாடுகிறாள். நாம் அங்கு சென்றிருந்து ஆண்டவன் பெயரையாவது உச்சரிப்போம்” என்றேன். 

அவள் காளி உருவம் எடுத்துவிட்டாள். கண்கள் பிதுங்க, பல்லை நெற நெறவென்று கடித்தாள். அடங்கிப் பழகி விட்ட தனால் தான் என்னை அடிக்கவில்லை, இன்றேல் அவளுக்கு அப் பொழுது வந்த ஆத்திரத்தில் என்னைக் கொன்றுவிட்டிருப்பாள். 

“என் வயிறு எரிகிறதே ? என் மகனைக் கொன்ற பாவியல்லவா நீங்கள்! தந்தி கொடுக்க உங்களிடம் பணமேது? அது என் மகனுக்கல்லவா பயன்பட்டிருக்கவேண்டிய பொருள்?” என்று அவள் அழுது தீர்த்தாள். 

அவளது பெற்ற மனத்தின் வேதனையை நான் உணராமல் இல்லை.ஆயினும் என் மனம் நேர்மையினின்று தளர இடம் தரவில்லை. 

என் மகன் அருகில் நான் அமர்ந்தேன். கிழித்த நார் போல் கிடந்தான் அவன். 

வேண்டாம் என்று தடுத்தாலும் என் மனம் அவன் நிலையை ஆராயாமல் விடவில்லை. இனி எத்தனை நேரம் இந்தக் குழந்தை இங்கு கிடப்பான்? பிறகு? பிறகு என்று நினைத்துப் பார்க்கக் கூட எனக்குத் தைரியம் இருக்கவில்லை. 

மனைவியின் விசும்பல் அடங்கியது. அவளும் என்னருகில், குழந்தையின் காலடியில் வந்து விழுந்து கிடந்தாள். அழுது அழுது அவள் சக்தியிழந்துவிட்டாள் போலும். 

என்னைத் தொட்டு எழுப்பினாள் அவள். அவள் கண்கள் கெஞ்சின. “இப்பொபாழுது தான் என்ன? அந்த எண் உங்களுடையது என்று கூறிவிடுங்களேன்!’ என்றிரைஞ்சியது அந்தப் பார்வை. 

நான் தெய்வமல்ல. நான் மகான் அல்ல, எல்லாம் வென்ற தபஸ்வியுமல்ல. அந்தக் குரு அளித்த பயிற்சி என்னுள் ஊறி விட்டது. உடலிலும் குடிகொண்டு விட்டது. அவ்வளவுதான். என் வீட்டின் அவல நிலையும். என் ஒரே குழந்தையின் மரண அவஸ்தையும், என் மனைவியின் இதயத் துடிப்பும் என்னை மிருகத் தினும் கீழான நிலைக்கு இழுத்துச் செல்ல முயலவில்லையா? என் னுள் ஏற்பட்ட போராட்டம் எனக்கல்லவா தெரியும் ! 


விடிய விடியக் குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தேன். விடிந்ததும் டாக்டரைத் தேடிச் சென்றேன். அவர் கிளம்பச் சற்று நேரமாகும் என்றபடியால் அருகிலுள்ள பள்ளிக்கூடத் திற்குச் சென்றேன். அந்த டாக்டரின் முயற்சியால் அங்கு ஓர் இலவச வைத்தியசாலை நடந்து வந்தது. அதன் கட்டட நிதிக்காக லாட்டரி வைத்திருந்தனர். 

போன தடவை என் நண்பன் ஸ்ரீநிவாசன் வந்திருந்தபோது வீடு வீடாக டிக்கட்டு விற்க வந்திருந்தனர். அவன் அலட்சிய மாக இரண்டு ரூபாய்களை என்னிடம் தந்து இரண்டு டிக்கட்டு வாங்கச் சொன்னாள். எண்ணைக் குறித்துக்கொள்ளக்கூட மறுத்து விட்டான். 

“நேர்மையாகப் போடமாட்டார்களடா. நமக்கெல்லாம் வராது. உள்ளுக்குள் ஆள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கே போகும். பரவாயில்லை. இரண்டு ரூபாய் தர்மம்” என்றான் அவன். 

 அவனிடமிருந்து ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டேன். ”சீனு, நேர்மை என்பது உலகத்திலிருந்தே அழிந்துவிடவில்லை” என்றேன். 

“போடா, முட்டாள்! இந்த உலகமே கள்ளச் சந்தை. அதனால் தான் செழிப்பாக இருக்கிறது. அதன் நடுவில் நேர்மை இருக்குமானால் அது உன் போலத்தான் இருக்கும். நீ இருக்கிறாய். பார். உடுக்க உடுப்புக் கிடையாது, குடிக்கக் கஞ்சி கிடையாது. வாயிலே கொள்கை, மனசிலே பிடிவாதம், நல்ல காலம், நாட்டிலே நேர்மை குறைவாக இருக்கிறது” என்று கூறி அவன் கடகட வென்று சிரித்தான். 

அவன் ரூபாயை அவன் மீதே எறிந்துவிட என் மனம் துடித் தது. ஆயினும் அடக்கிக்கொண்டேன். “உன் இருட்டு மனசை வெளிச்சமாக்கவாவது உனக்கே பரிசு வரவேண்டும்” என்றேன். 

அன்று கூறியது இன்று பலித்தது. டாக்டர் அந்தக் குலுக் கலைத்தான் நடத்திக்கொண்டிருந்தார், அப்போது. நான் அது முடியும் வரை இருந்து விட்டு விஷயத்தைச் சொல்லி அவரை என் வீட்டிற்கு அழைத்தேன். அவர் ஓடோடி வந்தார். அதிருஷ்ட எண்ணைக் குறித்துக் கொண்டு வந்த நான், அவர் போன பிறகு தான் பார்த்தேன். ஸ்ரீநிவாசனின் எண்ணிற்குத்தான் பரிசு வந் திருந்தது, என் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தது என்னை எள்ளி நகையாடியது. 

அதைக் கண்டதும் என் மனம் தவிக்கவில்லையா? என் புத்தி பேதலிக்கவில்லையா? நான் ரிஷியா, முனியா? சதையும் ரத்த மும் கொண்ட சாதாரண மனிதன் தானே? 

குறிப்புப் புத்தகத்தின் ஏட்டைக் கிழிக்க என் கை ஓடியது. மகனின் உடல் நிலையைப் பற்றிய துயரத்தின் வேலை அது. பெற்ற மனத்தின் பித்து என்னைப் பலவாறும் தூண்டியது. ஸ்ரீநிவாசன் இதனால் ஒன்றும் கஷ்டப்படப் போவதில்லை. ஆயின், என் வாழ்க்கையே மேன்படும். என் மகன் பிழைப்பான். என் வீடு நிலைக்கும். நான் தலைநிமிரலாம். 

ஆனால் என் கை பதறியது. ‘புழுதியில் புரளாதே!’ என்று என் குருநாதர் எச்சரிப்பதுபோல ஒரு பிரமை தட்டியது. என் குறிப்புப் புத்தகத்தில் அந்தக் குருத்துத் தாடியும், ஊடுருவும் கண்களும், தெளிந்த பார்வையும் தெரியக் கண்டேன். உடனே கண்களை இரு கைகளாலும் பொத்தி மன்னிப்புக் கோரினேன். 

என் சட்டையில் இருந்த சில்லறையைக் கொட்டி எண்ணினேன். தபாலாபீசுக்குப் போய்த் தந்தியைக் கொடுத்து விட்டு வந்த பிறகே என் பரபரப்பு அடங்கியது. என் தவற்றிற்கு ஈடு செய்ய ராமநாமத்தை ஜபித்துக்கொண்டு முற்றத்துக் குறட்டில் அமர்ந்தேன். 

என் மனைவி என்ன அறிவாள், பாவம்! என்னை நிந்தித்தாள். தானே வெளியே சென்றாள் அந்த மழைத் தூற்றலில் வைத்தி யரை அழைத்து வந்தாள். 

“டாக்டர் எப்படி வந்தார்? மருந்துக்குக் காசு ஏது?” என்று மீண்டும் நான் கேட்டேன். 

தன் கழுத்துத் தாலிச் சரட்டைக் காட்டினாள் அவள். அதிலிருந்த தங்கத் திருமாங்கல்யத்திற்குப் பதிலாக ஒரு மஞ்சளைக் கட்டியிருந்தாள். 

“விற்றுவிட்டாயா?” 

“விற்கப் போனேன். ஆனால் அந்தக் கடைக்காரன் வாங்க மறுத்துவிட்டான். என் கண்ணீரைப் பார்த்துக் கடனாகத் தந்தான்”, அவளால் பேசமுடியவில்லை. 

அந்த அன்னையின் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என் கண்களின் கடையில் கசிவு இருப்பதை உணர்ந்தேன். 

அவளே எழுந்தாள். இடுப்பில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து மீண்டும் கயிற்றில் கோத்துக் கட்டிக்கொண்டாள். 

“கடனை எப்படித் திருப்புவாய் ” என்று நான் இரக்கமற்றுக் கேட்டேன். 

“வீட்டிலுள்ள பாத்திரங்களை விற்பேன்” என்றாள் அவள், உறுதியாக. 

கூடத்து மூலையில் மழையை ஏந்திக்கொண்டு நின்ற அண்டா வைப் பார்த்தேன். மழை நன்றாக வலுத்துவிட்டது. 

அப்பொழுது சிலர் வீட்டிற்குள் வந்தனர். “வாத்தியார், சார்!” என்று அழைத்தனர். 

”என்ன?’” என்று கேட்டுக்கொண்டே போனேன்.  

“உங்கள் டிக்கட்டு எண் என்ன, சார்? முதற் பரிசு வந்தவர் யார் என்று தெரியவில்லையே? நீங்களும் வாங்கினீர்கள். பேசாமல் இருந்துவிடப் போகிறீர்களே என்று வந்தோம். உங்கள் பையனுக்கு வேறு உடம்பு சரியில்லையாமே?” கமிட்டி யைச் சேர்ந்தவர்கள் வளவளவென்று பேசினார்கள். 

“பரிசு கிடைத்தால் வீட்டில் கிடப்பேனா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். 

“நீங்கள் கிடப்பீர்கள், சார்” என்று சொல்லி ஒருவர் சிரித்தார். 

நான் எழுந்து என் குறிப்புப் புத்தகத்தைக் கொண்டு காட்டினேன். 

“என்ன ஆச்சரியம்! ஒரே கையினால் வாங்கிய டிக்கட்டு கள். அடுத்தடுத்த எண். அவருக்குக் கிடைப்பானேன், உங்களுக்கு இல்லாமல் போவானேன், சார்? கடவுளுக்குக் கண் இல்லை, சார், உண்மையாக!” 

“எனக்குத் தேவை இல்லை போலும். இருந்திருந்தால் ஆண்டவன் தந்திருப்பார்”, என்று பதிலளித்தேன் நான், மேதாவி போல். 

என் மனம் தளருவதற்கு முன் என்னைக் கட்டிப் போட்டுவிட வேண்டும் என்றல்லவா நான் என் நண்பனுக்குத் தந்தி அடித் தேன்? எனக்கே உறுதி இருந்திருந்தால் காலையிலேயே எண்ணைக் காட்டி, டிக்கட்டைக் காட்டிப் பரிசுப் பணத்தை வாங்கி வந்து அவனுக்கு அனுப்பியிருக்க மாட்டேனா? பணத்தை என் கையில் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல்தானே ஸ்ரீநிவாச னுக்கே தந்தி கொடுத்தேன். அவன் வந்து விடுவான் என்ற பயம் என் கையைக் கட்டிப்போடும் என்றல்லவா நானாகப் பூட்டுப் போட்டுக் கொண்டேன் ! 

என்னை அவர்கள் புகழ்ந்தார்கள் ! நேர்மை என்ற போர்வை யாவது இருந்ததே என்று நினைத்தேன். சமயத்தில் தளரப் பார்த்ததே உறுதி ! நேர்மை என்பது வெளிப்பூச்சுத்தானோ, அல்லது வெறும் பழக்கமாகி விட்டதோ? நான் ஆத்ம சிந்தனை யில் லயித்திருக்க அதிக அவகாசம் கிடைக்கவில்லை. 

ஸ்ரீநிவாசனின் கார் சங்கு அலற என் வீட்டின் முன் நின்றது. அவன் ஆர்ப்பாட்டமாக இறங்கி வருவான் என்று எதிர்நோக்கி நான் வாசலை அடைந்தேன். அதற்குள் கமிட்டி யார் அவனைச் சூழ்ந்து கொண்டு, ஒரே மூச்சில் அனைவரும் பேசி அவனைத் திணற வைத்துக் கொண்டிருந்தனர். 

அவன் ஒருவாறு விடுபட்டு உள்ளே வந்தான். ஒரே பார்வை யில் எங்கள் குடும்ப நிலைமை அனைத்தும் அவனுக்கு விளங்கி விட்டது போலும். அவன் என் மனைவியைப் பார்த்துச் சினந்து பேசினான். 

“ஒரு முட்டாளைக் கட்டிக் கொண்டதனாலேயே உங்கள் மூளையும் மழுங்கி விட வேண்டுமா? இந்த நிலைக்கு வரும்வரை என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? எனக்கு ஒரு வரி எழுதக் கூடாதா?” என்று அவன் கடிந்து பேசினான். 

அவள் பதிலே சொல்லவில்லை. இதுவரை அடங்கியிருந்த அவள் துக்கம் பீறிட்டு வந்தது. அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் கதறினாள். 

நான் என் மகனின் தலைமாட்டில் கற்சிலையாக அமர்ந்தேன். அந்தச் சிறு உடலில் லேசாக மூச்சு இழையோடியது. நான் எதிலும் ஒன்றாமல் அங்கேயே கிடந்தேன்: 

ஸ்ரீனிவாசன் எங்கோ போனான். யாரோ வந்தார்கள், யாரோ போனார்கள். டாக்டர் வந்தார். 

மாலை நேரம் வந்தது கூடத் தெரியவில்லை எனக்கு.

ஸ்ரீநிவாசன் என்னைத் தட்டி எழுப்பினான். “எழுந்திரடா !” என்றான். 

தெருவில் ஆஸ்பத்திரி வண்டி நின்றது. அதில் குழந்தையையும் என் மனைவியையும் ஏற்றினார்கள். 

என்னை ஸ்ரீநிவாசனின் வண்டியில் யாரோ தள்ளினார்கள்* மயக்கமுற்ற நிலையில் நான் அவர்களைத் தொடர்ந்தேன். நேரம் ஆக ஆக என் மகனின் உயிரைப் பற்றி நம்பிக்கையே அற்று விட்டது. அவன் அருகில் இருந்தபோது இரண்டுமுறை என் உடல் லேசாக வலித்ததைக் கண்டேன். யாரிடம் சொல்வது? எதற்காகச் சொல்வது என்று மவுனமாகக் கீதைபாராயணம் செய்து கொண்டு அமர்ந்துவிட்டேன். என்னைச் சுற்றி நடந்தது ஒன்றுமே புரியவில்லை. 

இதெல்லாம் நடந்து ஒரு வாரமாகிவிட்டது; என் பிள்ளை பிழைத்து விட்டான். என் மனைவி அவனோடு வைத்தியசாலை யில் இருக்கிறாள். நான் என் நண்பன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். 

ஸ்ரீநிவாசன் வந்தான். என்னைத் தழுவிக்கொண்டான். வியப்பு மேலீட்டால் நான் அவனையே பார்த்தேன். 

”எவ்வளவு பெரிய முட்டாளடா, நீ ? வேறு யாராவது உன் நிலையில் இருந்திருந்தால் இப்படிக் கைக்குக் கிடைத்த பணத்தை இழப்பானா?” 

நான் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. 

“அன்று என் உள்ளத்திலே பெரிய அதிர்ச்சியடா. எந்த மனிதனும் ஓரளவுதான் நேர்மையாக இருக்க முடியும், நெருக்கடி யில் பிறழாதவனே கிடையாது என்று அடித்துப் பேசிய என்னை நீ மாற்றிவிட்டாயடா. ஊரார் உன்னை எப்படி மெச்சினார்கள் தெரியுமா? என்னிடமுள்ள செல்வம் உன்னிடம் இருந்தால் உலகமே உய்யும். என்னுடையது ஒரு குடும்பத்துக்கேனும் உதவட்டும் என்று தீர்மானித்துவிட்டேன். இனி நீ என்னுடன் தான் இருக்கவேண்டும். உன் மகன் இனி என் மகன். என்ன?” உணர்ச்சியோடு பேசினான் ஸ்ரீநிவாசன். 

“நான் வெறும் மனிதன் தானடா. எனக்கும் சபலம் உண்டு” என்றேன் நான், கரகரத்த குரலில். 

ஆனால் சபலத்தை வென்று நிலையாக நின்ற என் நேர்மை என் இதயத்தில் பெரியதொரு அமைதியையும் ஒளியையும் நிரப்பியது. அதன் மத்தியில் என் குருநாதரின் முகம் ஜோதியினுள் அருட்ஜோதியாக என்னைக் கண்டு முறுவலித்தது.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *