அடுத்த வீட்டுக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2025
பார்வையிட்டோர்: 264 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல புருசனும் – பொண்டாட்டியும் இருந்தாங்க. இருக்கயில, அந்த ஊர்ல இருக்றவங்க, எல்லாரும் காடு வெதச்சாங்க. ராசாவும் வெதச்சாரு எல்லாரு காடும் நல்லா வெளஞ்சிருக்கு. ராசா காடு மட்டும் ஒண்ணுமே வெளையல. வெளையாம் இருக்கவும், என்னாண்டு பாக்கணும்ண்டு சோசியங்கேக்கப் போனாரு. போயிக் கேக்கயில, அந்தச் சோசியன், ஒம் பொண்டாட்டிய வெட்டிப் பொலி (பலி) குடு, பொலி குடுத்தா நல்லா வெளையும்ண்டு சொல்லிட்டா. ஆரு? சோசியன். 

சரிண்ட்டு, வீட்டுக்கு வந்து, காட்ல பொங்க வைக்கணும் வாண்டு கூப்டுறர். புருசங் கூப்டவும், இவளும் பொங்கப் பானயத் தூக்கிட்டுப் போறா. காட்ல போயி, பொங்க வக்கிறாங்க. பொங்க வச்சிட்டு, குனுஞ்சு எரக்கயில, ஒரே வெட்டா வெட்டிட்டர் வெட்டிப் போட்டுட்டு, வீட்டுக்கு வந்திட்டர்.. 

வீட்டுக்கு வரவும், எங்கப்பா? அம்மாளண்டு பிள்ளைக கேட்டுச்சு. கேக்கவும், அம்மா பாட்டி ஊருக்குப் போயிட்டாண்டு சொல்லிட்டா. அம்மா வரும் – வரும்ண்டு நெனச்சுக்கிட்டிருந்த பிள்ளைக, நாளாகவும் மறந்திருச்சுக. 

காடும் வெளையல, கஞ்சிக்கும் இல்ல, வெறகு வெட்டிப் பொளச்சுக்கிட்டிருக்கார். பிள்ளைகளுக்குக் கஞ்சி காச்சி வச்சிட்டு, வெறகு வெட்டப் போயிருவா. வந்து பாத்தா – பிள்ளைக பட்டினியா கெடக்குங்க. 

இவ், கஞ்சியக் காச்சி வச்சிட்டுப் போகவும், அடுத்த வீட்டுக்காரி திய்யெடுக்க வர்ர சாக்ல வந்து, கஞ்சியக் குடிச்சிட்டுக் – குடிச்சிட்டுப் போயிர்றது. 

இப்டி இருக்கயில, ஒருநா, கஞ்சியக் காச்சி வச்சிட்டு, வெறகு வெட்டப் போற மாதிரி, போக்குக் காமுச்சு, மெத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டா. இவ,திய்யெடுக்க வந்தவ, கஞ்சிய ஊத்திக் குடிக்றா. குடிக்கயில, மெத்ல இருந்து எரங்கி வந்து, அண்ணாக்கவுத்த அத்து, தாலியக் கெட்டி, புருச் – பொஞ்சாதியா நல்லாப் பொளச்சாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *