அடடா மழைடா… அடைமழைடா..!






அந்தப் பண்டிகைக்காக ஊருக்குப் போக முடிவு செய்தான்., பேருந்து வசதிகள் என்ன கூடியிருந்தாலும், இருக்கும் ஜனத்தொகைக்குப் போதுமானதா இல்லை!. மழைக்கு முன்னாடி ஊர்போய்ச் சேர்ந்துவிட முடியுமா?! உள்ளுக்குள் நினைத்தான் உமாபதி.
சர்ரென்று திரும்பி நின்ற பேருந்தில் ஏறி அமர, கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி நிரம்பியது! பஸ்ஸின் எல்லா சீட்டும் கம்பியைஇணைத்துப் பற்றியே இருந்தன. முல்லைக்குத் தேர் கொடுத்த பரம்பரை ஆட்சியாளர்கள்ங்கற நினைப்போ என்னவோ ஒவொரு சீட்டும் ஒரு கம்பியோடுதான் இணைத்து இருந்தன. மூணுபேர் உக்கார்ற சீட்டும் இரண்டு பேர் உக்கார்ற சீட்டும் எல்லாம் அப்படித்தான்.
இடம்பிடித்தான் ஜன்னலோரம். வந்து அமர்ந்தான். அருகில் வஞ்சகமில்லாமல் தின்றிருப்பான் என்கிறா மாதிரி ஒருத்தன் பெரிய புராணத்தில் வரும் திண்ணன் மாதிரி இருந்தான்.
வண்டி புறபடும் முன் தூங்கத் தொடங்கினான். மேலே தூங்கித் தூங்கி விழுந்தான். நல்ல வேளை ஜொள்ளுவிடவில்லை. ரெண்டு மூணுதடவை தள்ளித் தள்ளி நிமிர்த்துவிட, நொந்து போனவனாய்,
ஜன்னல் வழியாய் இவனை நெட்டி ஒதுக்கி, எட்டிப்பார்த்துத் தலையை உள்ளே இழுத்து, “மழை வருங்கறீங்க?!” என்றான். கிண்டல் பண்றானாம். அவனைத் தூங்க விடாம எழுப்பி ஒதுக்கிவிட்டதுக்காகனு புரிந்தது.
ரெண்டரை மணி ஓடிய பஸ் டிபன் சாப்பிட நின்றது. அந்த சாலை ஓர சால்னா கடையில் டிபன் சாப்பிட உமாபதி உக்கார தூங்கி வழிந்தவனும் வந்து அமர்ந்தான். சர்வர் வால்பேனைக் கயிழுத்து ஆன் செய்து, உதவிப் போனான். நல்லவன் போலிருக்கே?! சாப்பிட்டு முடித்து எழுந்தான் உமாபதி.
வால்பேனின் தொங்கு கயிறு குண்டு மனிதன் பக்கம் இருந்தததால் சாப்பிட்டு முடிச்சாச்சே?! எதுக்கு இனி வீணாய்ப் பேன் ஓடணும்கற நினைப்பில் அதை ஆப் பண்ணிவிட்டுக் கைகழுவிவிட்டு சீட்டில் அமர வந்து அமர்ந்த குண்டன் குனிந்து உமாபதி காதுபட சொன்னான்.
“கண்டிப்பா மழைவரும் சார்..! உங்கள மாதிரி பொறுப்பானவங்க இன்னும் உலகில் எங்கோ இருக்கத்தான் செய்கிறார்கள்” என்றான்.
வெளியில் வானம் தூறல் போட…அடை மழை வரும்போலிருந்தது. நல்லவன் எப்போதும் நல்லவனாகவேதான் இருப்பான். அடுத்தவனை நையாண்டி செய்பவன் தொந்திரவு செய்பவன் மாறுவதுதான் அதிசயம்!