அஞ்சப் பிள்ளை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 127
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வளர்ச்சி என்றால் உரு மாறுதல் என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அதனால்தான் எதிர்த்தாப்போல் இருப்பது திண்ணை என்று பலருக்குப் புலப் படாமல் போய்விட்டது. அந்தத் திண்ணையைத்தான் இப்பொழுது பாலம் என்கிறார்கள். பாலம் என்றால் வெள்ளம் போகும் ஆறோ, மணலோடும் காட்டாறோ இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். மழைஜலம் போவதற்காக, பங்களா வாசலில் ஒரு கால்வாய் வெட்டி னார்கள். கால்வாயினால் மோட்டாருக்கு இடைஞ்சலாக இருந்தது. அதற்காகப் பாலம் கட்டினார்கள். இருபுறத் திலும் இடுப்பளவு உயரத்திற்கு இரண்டு சுவர் எழுப்பிச் சிமென்டு பூசிவிட்டார்கள். முக்கால் அடிச்சுவர் ஆனபடி யால் தாராளமாக உட்கார்ந்து பேசலாம். வாசல் புறத் தில் நாலு பேர் உட்கார்ந்து பேச மேடை இருந்தால் அது திண்ணைதானே! ஒன்றாய் இருந்த பின்னல் இந்த நாளில் இரண்டாகி விட்டாலும் அதைப் பின்னல் என்று சொல்லாமல் இருப்பதில்லை. பங்களா வாசலில் இருக்க வேண்டிய திண்ணைதான் இப்பொழுது இரண்டு கை பிடிச் சுவர் ஆகிவிட்டது. அதைத்தான் பாலம் என்கிறார் கள். போகட்டும்!
இந்தத் திண்ணையில் ஆடுகளும் ஆட்டுக் குட்டிகளும் நிற்கும். பால் குடிக்க, கொடுக்க, உறங்க, துள்ளிக் குதிக்க, டீப்பாய எல்லாவற்றிற்கும் இந்தத் திண்ணைகள் தான். ஆனால் பொதுவாக மாலை வேளைகளில் இவை தொழிலாளர் முகாம் – குறிப்பாக மோட்டார் ஓட்டிகள், கண்டக்டர்கள், மோட்டார் வாண்டுகள், டிக்கட் தரகர் கார் முதலியவர்கள் முகாம்.
அன்று மீசைக்காரச் சோமுவும் அக்கடா ஆசை த் தம்பியும் பாலத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தனர்.
“என்ன தம்பி! விடுதியா?’ ”ஆமாங்கறேன்” என்று ஆசைத்தம்பி சொல்லிவிட்டுக் காக்கிச் சட்டையிலிருந்து இரண்டு புரச இலைப் பீடியை எடுத்து ஒன்றைச் சோமு விடம் கொடுத்துவிட்டு மற்றொன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.
“ஒரு வாரச் சோத்தை ஒரே நாளிலே தின்னூட்டுப் பாக்கி நாள் சும்மா இருந்தா எப்படி இருக்கும்?”
“நல்லாத்தான் இருக்கும்!”
“தொழிலாளிங்களுக்காக என்னவோ வெட்டிச் சாச் சூட்டது மாதிரி பேசறாங்க. ஒவ்வொரு நாளைக்கும் சேர்ந்தாப்போலெ அக்கடான்னு இருக்க நான்கு மணி விடுதி இருக்கிறது எப்படி? சேத்து வச்ச விடுதி எப்படி?”
“நான் பொழைக்கறத்துக்கு ஒன்னைப் பாத்துப் பாவம்ங்கிறேன். நீ பொழைக்கிறத்துக்கு என்னைப் பார்த்துப் பாவங்கிறே.. இவ்வளவுதான் கதை. இந்த மோட்டார் கீட்டார் இல்லாத நாளிலே இருந்த சொகத்தை இப்பொக் காணும்.”
“கையிலே காசுதான் புரளுதே!”
“புரளுது.சந்தோஷம் புரளல்லியே!”
இந்தச் சந்தர்ப்பத்தில் பாலத்தை நோக்கி ஒருவர் வந்துகொண் டிருந்தார். மோட்டார் ஓட்டிகள் வழக்க மாக அணியும் சாக்குக் காக்கி நிஜாரும், சாக்குக் காக்கிக் கோட்டும் போட்டிருந்தார். கோட்டுப் பொத்தான்கள் மளிகைக் கடை வெள்ளிக்கிழமைக் குத்துவிளக்கைப் போல் சுடர் விட்டுக்கொண் டிருந்தன. தலையில் மட்டும் குல்லாய் இல்லை; வழுக்கை இருந்தது. கொஞ்சம் கூனிய நடை. பாலத்தடியில் வந்ததும், “என்னாங்க வீசைக் காரரே?’ என்றார்.
”ஆமாங்க” என்ற சோமு இடத்தை விட்டு இறங்கிச் சுகமா என்று விசாரித்தார்.
“நான் ஊரிலேதானே இருக்கேன்” என்றார் வந்தவர்.
“இல்லை, சுகமான்னு கேட்டேன்.”
“பெரிய மவன் இப்பொத்தான் சீராகிக்கிட்டு வர்றான்” என்றார்.
அப்பொழுதுதான் ஒன்பது வாசலில் இரண்டு அடைபட்டுப்போன மனிதன் என்ற உண்மை ஆசைத் தம்பிக்குத் தெரிந்தது.
உரக்கப் பேசுவதில் பயனில்லை என்று அறிந்த சோமு, குழித்த அபய ஹஸ்த முத்திரைரைக் காட்டியது தான் தாமதம்.
”சொகந்தான்,சொகந்தான். இப்பொ எல்லாம் காது சரியாக் கேக்கல்லே…. சம்பளம் ஓசரும் இன்னியே?”
ஆகிவிட்டதற்கு அறிகுறியாகச் சோமு தலையை ஆட்டிவிட்டு மேற்குப் பக்கமாகப் பார்த்தான்.
“வீட்டைப்பத்திக் கேக்கிறயா? அதொரு தொல்லை யாப் போச்சு. என்னவோ இரும்புக் கொக்கி வேணும் கறாரு மேஸ்திரி; வாங்கப் போறேன். ஒன்னைப் பார்த்த தும் நின்னூட்டேன். நீதான் ஊட்டைப் பாக்க வர மாட்டேங்கிறியே? எப்பொ வர்றே?”
வருகிறேன் என்று சோமு சமிக்ஞை செய்தார். வந்தவர் ஷாப்புக் கடைக்குக் கிளம்பிவிட்டார்.
“தம்பி இவரைத் தெரியுமா? உனக்கு?” “தெரியாதே”
“அஞ்சப்பிள்ளைன்னு கேள்விப்பட்டதில்லே?”
“ஆமாம்.”
“அவருதான்.”
“என்ன கேள்விப்பட்டிருக்கே?’
“ஒண்ணுமில்லே, பெரிய சூரன்னு சொல்லுவாங்க.’
“வாஸ்தவந்தான். இப்பொ பார்த்தால் பல்லுப் போன புலி மாதிரி இருக்கிறாரு. அப்போ பாத்திருக்கணும். பட்டாக்கத்தி மாதிரி இருப்பார்!”
“அதுக்கென்ன? வாட்டசாட்டமா நான்கூடத்தான் இருக்கேன்.’
“நீயும் அவரும் ஒண்ணாயிடுவியா? மாசச் சம்பளம் போதாமெ இருவது முப்பதுன்னு கடன் வாங்கறே… அவரு ஊடு கட்டியிருக்கிறாரு. நாமும் அவரும் எப்பிடி ஒண்ணாக முடியும்?”
“ஊடு கட்டிப்பிட்டாரா? அப்பிடீன்னா சாமர்த்தியந்தான்.”
“மனுஷங்களை மயக்கறதுலே பலே பேர்வழி. ஆதி யில் ஒரு மலைத்தோட்ட முதலாளி கிட்டெ மோட்டார் ஓட்டியா 10 வருஷம் இருந்தார். துரைக்கு இவரிடத்திலே ரொம்ப விசுவாசம். அதைவிடப் பத்துப் பங்கு துரை சாணிக்கு. இந்தப் பத்து வருஷத்திலே, ரோடிலே ஒரு சின்னத் தகராறுகூட இவரு செஞ்சதில்லேன்னாப் பாத் துக்கோ. இவருக்கு ஒரு தரம் சுரம் அடிச்சபொழு தொரைசாணியே வண்டியை ஒட்டிக்கிட்டு வந்து இவரு குடி இருந்த ஊட்டுல பாத்தூட்டுப் போனாளாமின்னாப் பாத்துக்கோ!
“ஒரு தடவை இவுங்களெல்லாம் பங்களூரில் இருந் தாங்க. அப்பொ தொரைசாணி முழுகாமெ இருந்திச்சு. மலைத்தோட்டத்திலெ என்னவோ ஆளுங்க தகராறு இன்னு சேதி வந்திச்சு. உடனே மலைத்தோட்டத்துக்குப் போய்ப பார்த்துவிட்டு வந்தவரு துரைசாணியோடெ என்ன பேசினாரோ தெரியாது. ரெண்டு நாளுக்குள்ளாற துரை, தோட்டத்தை வித்துப்புட்டாரு.
“எல்லோரும் சீமையோடெயே போறதுன்னு முடிவு செஞ்சது இவருக்குத் தெரிஞ்சதிலே இருந்து இவரு மோட்டார் ஷெட்டிலேயே கிடந்தாரு. வேளைக்குச் சாப் பிடறதில்லே. அதுக்காகப் பொழுது சாயாமே இருக்குமா? சீமைக்குப் போற விமானம் பழுதாயிடுமா? ஒரு வாரத் திலே அவுங்க கிளம்பிட்டாங்க.
“போறப்பொ துரை ஒரு காரியம் செஞ்சாரு. மலைத் தோட்டத்தை வித்தபொழுது மோட்டாரையும் வித்தூட் டாரு. அவர் கிட்டெ ஒரு லாரி இருந்துச்சு. லாரி லைசென்ஸை அஞ்சப் பிள்ளை பேருக்கு மாத்தி லாரியை அவருக்கே கொடுத்துட்டாரு. அதுமுதல் இவரு லாரி சொந்தக்கார ராயிட்டாரு!”
“நல்ல லாரியா, இல்லாட்டிப் பீர்க்கங்காய்க் கூடா?” என்று குறுக்கிட்டார் ஆசைத்தம்பி!
“ஒண்ணாம் நம்பர் வண்டி. டியூப் கூட எல்லாம் புதுசு. ஒரு வாரம் லாரியை வச்சுக்கிட்டு இவரு சும்மாவே இருந் தூட்டாரு. ஒண்ணும் மனசு சரிப்படலே.. எத்தினி நாளு இப்பிடியே இருக்க முடியும்? அப்புறம் மெதுவாக லாரியை உள்ளூரிலே அடிக்கத் துவங்கினாரு. பொறவு தொலைவுக்கு மளிகை சாமான் அது இது ஏத்திக்கிட்டுப் போக ஆரம்பிச் சாரு . பணம் கையிலே பொழங்க ஆரம்பிச்சுது. பணம் பொழங்க ஆரம்பிச்ச உடனே அங்கங்கே ஆளுங்களும் இவருக்குச் சேர ஆரம்பிச்சுது.
‘இவருகிட்டே ஒரு சுபாவம். வெள்ளைக்காரனோடே பழகின காரணமோ என்னமோ! அங்கங்கே கிளப்புக்குப் போனா அவனை இவனைக் கூட்டிக்காமெ போகமாட்டாரு. பலாப்பழத்தை ஈ மொய்க்காதா? ஒவ்வொரு ஊரிலேயும் பாதை எல்லாம் இவருக்கு ஆள் சேர்ந்து போச்சு.
“ஒரு தடவை எதோ சாமானை ஏத்திக்கிட்டுச் சேலத் துக்குப் போயிக்கிட்டிருந்தாரு. முசிரியிலே ஒரு ஆபத்தா யிடுத்து. அவருக்கே ஷாக் அடிச்சாப்போல ஆயிடுச்சு.
ஓர் ஆட்டுக்கிடாவைப் பொடிப் பயலுங்க கல்லால் அடிச்சு விரட்டினாங்க. எங்கேயோ போறாப்பலே போன ஆடு ரஸ்தாவிலே குறுக்கே ஓடிச்சு. அப்படியும் இவரு பிரேக் போட்டாரு. உபயோகப்படல்லே. ஆட்டுக்கிடா போயிடுச்சு. அவ்வளவுதான்; தெருவிலே இருந்த பேரெல் லாம் கும்பல் கூடிக்கிட்டு ஆளுக்கொண்ணாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இவரு தம்மாலே குத்தம் இல்லே இங்கிறதைக் காட்டிப்புட்டு, ஆட்டுச் சொந்தக்காரனிடத்திலே பத்து ரூபாய்ப் பணத்தைக் குடுத்தூட்டு ஆட்டை யும் வண்டியிலே போட்டுக்கிட்டுக் கிளம்பிட்டாரு.
“அரை மைலுக்கு அப்பாலேதான் இவரு மாமனார் வீடு அங்கே போய் வண்டியை நிறுத்திக்கிட்டு மாமனா ரிடம் எதோ சொல்லி ஆட்டைக் கீழே தள்ளிவிட்டு லாரியை ஓட்டிக்கிட்டுப் போய்ட்டாரு. சேலத்தில் சரக்கை இறக்கிப் போட்டூட்டுப் புதுச் சரக்கை ஏத்திக்கிட்டு மாம னார் வீட்டண்டை திரும்புகாலில் வண்டியை நிறுத்தினாரு. முப்பத்து ஒண்ணரை ரூபாய்ப் பணத்தை எண்ணி மாமனாரு இவருகிட்டெக் கொடுத்தாரு. பணம் ஏதுன்னு இவரு கேட்டாரு. இறைச்சியாப் பண்ணி வித்த பணம் இன்னாரு.
“அதிலே இருந்து இவருக்கு என்ன தோணித்தோ என்னவோ! லாரி வாடகையைத் தவிரக் கஷ்டமில்லாமெ சம்பாதிக்க வழி இருக்கிறதுன்னு ரகசியமா எண்ணித் தெரிஞ்சுக்கிட்டாரு. ஆள் சம்பந்தப்பட்ட ஆபாத்தா யிருந்தா இவரு கதை எப்படி ஆயிருக்குமோ யார் கண்டா?
“இதற்குப் பதினைஞ்சு நாளைக்குப் பிறகு முசிரிக்கு அஞ்சு மைல் தெற்கே இதே மாதிரி ஒரு கிடா அடிபட்டுப் போச்சு. இவருதான் ஏத்திப்பிட்டாருன்னு பார்த்தவன் ஒருவன் சொன்னான். வாயில்லா ஜீவனுக்கும் எனக்கும் சண்டையா, வேணுமினு ஏத்த?’ இன்னு பதில் சொன் னதை ஆட்டுச் சொந்தக்காரனால் மறுக்க முடியல்லே. பேரம் பேசி பதினொரு ரூபாய்ப் பணத்தை வாங்கிக்கிட் டான். இவரு தன் ஜமா ஒருவன் கிட்டெ ஆட்டைக் குடுத்து ரகஸியமா அவன் கிட்டே எதோ சொல்லி அனுப்பிச்சூட்டாரு. திரும்புகாலிலே அவருக்கு முப்பத்து மூணு ரூபாய் கிடைச்சுப் போச்சு.
“கிடைச்சாமாத்திரம் என்ன? கிடைக்கிறதெல்லாம் நெலைச்சா போகுது? எங்கிருந்தோ ஒரு போலீஸ்காரன் வந்து சேர்ந்தான். அவனுக்கு வாய்க்கட்டை போட்ட பிறகுதான் சிக்கல் தீர்ந்துச்சு.
“அதிலிருந்து பாரு, கெட்டதெல்லாம் இவருக்கு நல்லதாகவே முடிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சுட்டுது. ஒரு போலீஸ்காரன் சிநேகமான உடனே மத்தவங்களோடெ சிநேகமாயிப் போச்சு.
அதற்குப் பொறவு ஒரு வாரத்துக்கு ஒரு தடவை ஆடு கோழி அடிபட ஆரம்பிச்சுது. ஒரு கிறிஸ்த்மஸ் பண்டிகை அப்பொ ஒரு பன்னிகூட அடிபட்டுப் போயிடுச்சு.
“இதிலே இருந்துதான் இதை அஞ்சப் பிள்ளை ஒரு சில்லறை வியாபாரம் ஆக்கிவிட்டார். அதிலேதான் இவருக்குச் சிறுகச் சிறுகப் பணம் சேர்ந்து போச்சு.’
“இதுக்கெல்லாம் கேள்வி முறை இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் ஆசைத்தம்பி கேட்டார்.
ஏன் கேள்வி வருது? அவருக்கு இறைச்சி; இவருக் குக் கறைச்சின்னு குடுத்தா ஏன் மேலே இருக்கிறவங்க கேக்கப் போறாங்க? இருந்தாலும் இவருக்குக் காசு சேரச் சேர இவரு மேலே புகாரும் சேந்து போச்சு. திடீருனு ஒரு நாள் லாரியிலே வீட்டுச் சாமானை எல்லாம் ஏத்திக் கிட்டுக் குடும்பத்தோடே கும்பகோணத்துக்குப் போயிட்டாரு.
“அங்கே ஏழு வருஷம் இதே கதைதான். அங்கே யும் புகார் முத்தினப்பறம் செங்கல்பட்டுக்கு வந்துட்டாரு
“செங்கல்பட்டிலே இருந்தப்பொ இவரு எனக்குச் சிநேகமானாரு. கதை கதையாய்ச் சொல்வாரு, தான் தப்பிச்சதைப்பத்தி எல்லாம். இந்தப் பக்கத்திலேயும் ஒரு ஏழு வருஷம் இதே கதைதான்.
“இங்கேதான் புகார் ரொம்ப முத்திப் போச்சு. போலீஸ் ஜில்லா சூபரின்டென்டெண்டு பொல்லாத ஆள். இவரைப் பத்தி நல்லா விசாரிச்சுக்கிட்டு லாரி லைசென்ஸ் கொடுக்கக்கூடாதுன்னு எழுதிப் போட்டுட்டாரு. அஞ்சப் பிள்ளை அப்பீல் கிப்பீல் எல்லாம் பண்ணினாரு ஒண்ணும் பலிக்கல்லே. அதோடே இவரு ஆட்டம் முடிஞ்சு போச்சு. சிவனேன்னு லாரியை வித்துப்புட்டுப் பட்டணம் வந்து சேர்ந்தூட்டாரு.
“மேற்கே ஒரு சின்ன மனையை வாங்கி ஊட்டைக் கட்டினாரு. பெரிய மவனுக்கு ஒரு கடை வச்சுக்குடுத்தாரு. இப்பொ இங்கே இருக்காரு. இப்பொ யாரைப்பாத்தாலும் வீட்டைப் பார்க்க வரல்லியான்னு நச்சறிப்பாரு.
இப்படிப் பேசிக்கொண் டிருக்கும்பொழுதே அஞ்சப் பிள்ளை நீளமான புகைச் சுருட்டு ஒன்றைக் குடித்துக் கொண்டு பாலத்தை நோக்கி வந்துகொண் டிருந்தார். இவர்களைப் பார்த்ததும், ஆசைத்தம்பியைக் குறிப்பிட்டு விசாரித்தார். மோட்டார் டிரைவர் என்று சோமு சொன்ன பதில் காதில் விழவில்லை. “பட்டாளத்திலே இருக்காறா? நல்ல வேலையாச்சே. இங்கே உக்காந்து பேசிக் கிட்டு இருக்கியே; அவரையும் இட்டுக்கிட்டு வாயேன் ஊட்டைப் பார்க்க. வறேன் வறேன் இன்னு பயமுறுத்திக் கிட்டே இருக்கியே” என்றார் அஞ்சப்பிள்ளை.
வீசைக்கார சோமுவும் அக்கடா ஆசைத்தம்பியும் திண்ணையை விட்டுப் புறப்பட்டார்கள்.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.