அக்கரையோடு…




மாலை 6 மணிக்கு மேல்,
தனியார் அப்பார்ட்மென்ட் , ஆறாவது மாடி B பிளாக் ,
அலுவலக வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள் அபிநயா. தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிகிறாள்.
சோபா மீது மௌனமாக அமர்ந்திருந்தான் மகன் வருண். வருண் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான்.
அபிநயா உள்ளே வந்ததும் , “ என்னடா ? உன் முகம் வாடி போன மாதிரி இருக்கு ? “ என்று கேட்க ,

உடனே பள்ளியில் கொடுத்த அந்த மதிப்பெண் பட்டியலை நீட்டினான் வருண்.
அதனை பார்த்த அபிநயா , கோவம் உச்சத்திற்கு சென்று , வருண் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.
“ என்னடா ? பண்ணி வச்சிருக்க. எல்லா பாடத்திலும் பெயில் ஆயிருக்க. வர வர உன் படிப்பு என்னாச்சு ? உன் அப்பன மாதிரி திமிரு. போ , முகத்தில முழிக்காத , பள்ளிகூடத்தில மீட்டிங் கூப்பிட்டா உன் அப்பாவ கூட்டிட்டு போ “ என்று மதிப்பெண் சான்றிதழை தூக்கி எரிந்து விட்டு சென்றாள் அபிநயா.
கண்களில் கண்ணீர் , கீழே விழுந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து ஷோபாவின் மீது வைத்து மீண்டும் அமர்ந்தான் வருண்.
சில மணி நேரங்களில் ,
அலுவலக வேலையை முடித்து விட்டு , வீட்டிற்குள் நுழைந்தான் அசோக். தனியார் அலுவலகத்தில் கிளை அதிகாரியாய் வேலை பார்க்கிறான். உள்ளே நுழையும் போதே அலுவலக வேலை தொடர்பாக தொலைபேசியில் கோவமாக பேசிய படி உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்ததும் இணைப்பை துண்டித்தான் அசோக். அலுவலக பணியின் அழுத்தம் காரணமாக சோர்வாக தெரிந்தான்.
மகன் வருண் அமர்ந்து இருப்பதை பார்த்தான். வருணை பார்த்த படி தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அசோக்.
அப்போது சோபாவின் மீது இருந்த மதிப்பெண் பட்டியல் அசோக்கின் கண்ணில் தென்பட்டது.
“ என்னடா ? தம்பி, என்ன மதிப்பெண் எடுத்த ? இந்த தடவ ? “ என்று கேள்விகனையுடன் மதிப்பெண் பட்டியலை பார்த்த அசோக்கிற்கு கோவம் வந்தது.
வருணின் மற்றொரு கன்னத்தில் அறைந்தான் அசோக்.
“என்னடா ? பண்ணி வச்சிருக்க , எல்லா பாடத்திலும் பெயில் ஆயிருக்க. வர வர உன் படிப்பு என்னாச்சு ? எல்லாம் உன் அம்மாவ சொல்லணும். போ அங்கிட்டு. “ என்று அசோக் அங்கிருந்து நகர்ந்தான்.
வருணின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“ இந்தா வருண் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் , நைட்டுக்கு சாப்பிடு ,. இந்த டேபிள்ல அப்பா அம்மாக்கு காபி போட்டு வச்சிருக்கேன். அவங்களுக்கும் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் , பாட்டி வீட்டுக்கு கெளம்புறேன். காலைல வாரேன் “ என்று வேலைக்காரி மீனாச்சி அங்கிருந்து விடை பெற்றாள்.
மறுநாள் காலை , வழக்கம் போல் வீட்டு வேலைக்கு வந்தாள் மீனாச்சி.
வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு அதிர்ச்சி. அந்த சோபா மீதே வருண் தூங்கிருந்தான்.
நேற்று இரவு எடுத்து வைத்த உணவு அனைத்தும் அப்படியே இருந்தது. வீட்டில் யாரும் இரவு உணவு உண்ணவில்லை. வைத்தது வைத்த படியே இருந்தது. வருண் சில நாட்களாவே இரவு சாப்பாடு சாப்பிடுவது இல்லை.
இரவு முழுதும் அழுத படியே உறங்கியதால் காய்ச்சல் வந்து விட்டது.
“மீனாச்சிம்மா , டீ போடு , ரொம்ப பசிக்குது” என்றபடி தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் அபிநயா.
சோபா மீது வருண் படுத்திருப்பதை பார்த்து , “இங்கேயே தூங்கிட்டனா.? இவன அவன் ரூம்ல் தூங்க வைக்க கூட அவரால முடியாது , திமிரு “ என்று கணவனை வசை பாடிய படி , வருணை எழுப்பினாள் அபிநயா.
வருணை எழுப்பினாள் அபிநயா. வருண் உடல் அனலாய் கொதித்தது.
“அடடே ! வருண் உடம்பு கொதிக்குது. காய்ச்சலோடு அப்படியே தூங்கிட்டான் போல! “ என்று அபிநயா கூறி அவனை உசிப்பினாள்.
“மீனாச்சிம்மா, டீ போட்டியா.?..” என்றபடி தன் அறையில் இருந்து எழுந்து வந்தான் அசோக்.
ஷோபாவின் மீது அமர்ந்து இருந்த அபிநயா மற்றும் வருணை பார்த்தான் அசோக்.
“குட் மார்னிங் டு ஆல் “ என்றான் அசோக். அதற்க்கு பதில் இல்லை. அதனை எதிர்பர்க்கதவனாய் அமர்ந்தான்.
“என்ன வருண்? உடம்பு டல்லா இருக்க மாதிரி இருக்கு. “ என்றான் அசோக்.
“தம்பி , இந்தாங்க டீ குடிங்க “ என்று டீ டம்ளரை நீட்டினாள் வேலைக்காரி மீனாட்சி.
அபிநயா , அசோக் இருவரும் டம்ளரை எடுத்தனர்.
“மீனாட்சி அம்மா, வருண் உடம்பு சரியில்லையா ? வர வர அவன் ரொம்ப சோர்வா இருக்கிற மாதிரி இருக்கே.? நல்லா சாப்பிடுறானா? என்ன தான் பண்றான் ? “ என்று கேள்விகனையை வேலைக்காரி மீனாட்சி அம்மாவை நோக்கி கேட்டான் அசோக்.
“தம்பி நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதிங்க. வருண் சில நாளாவே நைட்டு சாப்பாடு சாப்பிடறது இல்ல. வருண் நல்லா ஜாலியா பேசியே பல மாதம் ஆகிருச்சு. எந்த விசயத்திலும் ஈடுபாடு இல்லாமல் தனிமையா இருக்கான் “ என்று வேலைக்காரி மீனாட்சி அம்மா கூறினாள்.
“ வருண் இங்க வா. அப்பாட்ட சொல்லு உன் பிரச்னை என்னான்னு ? காய்ச்சல் வந்திருக்கு , நைட்டு உன் ரூம்ல தூங்காம , ஏன் இங்க படுத்த ? உனக்கு என்ன பிரச்சன சொல்லு அப்பாட்ட..” என்று வருணை கூப்பிட்டு தன் அருகில் அமர வைத்தான் அசோக்.
வருண் அமைதியாக இருந்தான்.
“வாய தொறந்து பேசு வருண். என்னான்னு சொல்லுப்பா ? “ என்று அசோக் கேட்க ,
கண்களில் கண்ணீருடன் வருண் பேச ஆரம்பித்தான்.
“ நான் தனிமையா இருக்கிற மாதிரி தோணுது. நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்தா , என்கிட்ட பேச நேரம் கிடைக்க மாட்டேங்குதுல. நான் சாப்டேனா , தூங்குனேனா , படிச்சேனா என்று கேட்டிங்களா? , இதுவரை எதுவும் கேக்கல?. நான் ஏதோ ஹாஸ்டல்ல இருக்கிற மாதிரி தோணுது. வீட்டுல இருப்பது ஏதோ ஜெயில்ல இருக்கிற மாதிரி இருக்கு. “ என்று கூறி தேம்பி அழ ஆரம்பித்தான் வருண்.
“ தம்பி , நான் உங்க வீட்டு வேலைக்காரி தான் , இருந்தாலும் வயசுல உன் அம்மா மாதிரி , அதனால நான் சொல்றத கொஞ்சம் கேளுங்கபா.. உங்க வீட்டுல மொத்தமே மூணு பேருதான். மூணு பேருமே மூணு விதமா தனியா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. இந்த கால கட்டதுல புருஷன் , பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்கு போகிற சூழ்நிலை இருக்கு. ஆனாலும் பிள்ளைங்க நமக்கு ரொம்ப முக்கியம் தான. வேலைக்கு போய்ட்டு வந்த பிறகு அந்த பிள்ளைங்க கூட கொஞ்ச நேரம் அக்கறையோடு பாசமா பேசி பாருங்க. பிள்ளைங்க சந்தோசமா இருக்கும். புருஷன் பொண்டாட்டி உங்க இரண்டு பேருல நீ பெருசா இல்ல நான் பெருசா என்ற பிரச்சனைல , அந்த பையன் என்ன பன்னுவான்?. “ என்று மீனாட்சி அம்மா கூற , அபிநயா , அசோக்கிற்கு சற்று உரைத்தது.
மகன் வருண் தேம்பி தேம்பி அழுவதை பார்த்து அபிநயா சற்று கண்கலங்க ஆரம்பித்தாள்.
“பணம் சம்பாதிப்பது முக்கியம் தான் , இருந்தாலும் நம் பிள்ளைங்க ரொம்ப முக்கியம் தான. உங்களுக்கு கெடைக்கிற நேரத்தில் அவனிடம் நல்லா பேசுங்க. அது போதும். அவன் நல்லா படிக்க ஆரம்பிச்சிருவான். சந்தோசமா இருப்பான். அவனுக்குன்னு கொஞ்ச நேரம் ஒதுக்குங்க. முதல்ல உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையை முடிங்க. புருஷன், பொண்டாட்டி விட்டு கொடுத்து போங்க. இப்பல்லாம் உப்பு சப்பில்லா பிரச்சனைக்கு சண்ட போட்டு ரெண்டு பேரும் பிரிஞ்சு வாழ்ற சூழ்நிலை இருக்கு. அதனால அத விட்டுட்டு புருஷன் பொண்டாட்டி ஒத்த்துமையா இருங்க. நல்ல படியா பிள்ளைய வளர்க்க பாருங்க “ என்று கூறி விட்டு அடுப்பாங்கரையை நோக்கி போனாள் வேலைக்காரி மீனாட்சியம்மா .
மீனாட்சி பேச்சு இருவருக்கும், சவுக்கடி மாதிரி இருந்தாலும் உண்மை தானே! , என்று அபிநயா மற்றும் அசோக் இருவரின் மனம் அதனை ஏற்று கொள்ள ஆரம்பித்தது.
இருவரையும் அணைத்த படி வந்து அமர்ந்தான் வருண், முகத்தில் லேசான புன்னகை.
இந்த கால கட்டத்தில் கணவன் , மனைவி இருவரும் வேலைக்கு செல்வது சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.
இருப்பினும் வீட்டில் இருக்கும் தன் பிள்ளைகள், பெற்றோர்களிடம் அக்கறையோடு பேசவோ , அல்லது அவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்கவோ, அதற்காக கொஞ்ச நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் கொஞ்சம் நிம்மதி இருக்கும்.
அக்கறை நிச்சயம் தேவை இக்கணம்.