ஃபீலிங் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,732
சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு வங்கி மேலாளராக பதவி உயர்வோடு பணிமாற்றம் கிடைத்திருந்தது புருஷோத்தமனுக்கு.
முதல் நாள் வேலைக்குப் போய் வந்ததும், தன் நண்பன் குமாரோடு நாகராஜர் கோயிலுக்குப் புறப்பட்டார். சிரத்தையோடு நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.
என்ன திடீர்னு பக்தி மயம்? பிரமோஷனுக்கு நன்றி சொல்றீயா? இல்ல, சீக்கிரம் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியா..? – நண்பர் குமார் கேட்டார்.
‘இல்ல குமார்! எனக்கு முதல்ல கல்யாணம் பேசினப்ப, அது திடீர்னு நின்னு போனது உனக்கே தெரியும். அப்போ எனக்கு விலாசினிங்கிற ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாங்க. ஆனால் அவ, கல்யாணத்துக்கு ஒரு வாரத்திக்கு முன்னால் அவ காதலனோட ஓடிப்போயிட்டா, இந்த ஊர்லதான் அவ செட்டில் ஆனதா கேள்விப்பட்டேன். விலாசினியை நான் எந்த சூழ்நிலையிலயும் பார்த்துடக்கூடாதுன்னுதான் வேண்டிக்கிட்டேன்!
‘தப்பு பண்ணினது அவ…நீ ஏன் அவளைப் பார்க்க பயப்படறே…?
அவ புருஷன் சாதாரண கூலி வேலைதான் செய்யறான். வசதி வாய்ப்பு இல்லாம, வாழ்க்கை ரொம்ப சிரமத்துல போய்க்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்.
ஒரு வேளை அவ என்னைப் பார்த்துட்டா, பேசாம இவர கட்டியிருந்திருக்கலாம்னு ஒரு ஃபீலிங் வந்துடக் கூடாது, அது அவ காதலுக்கே களங்கம். அதனால்தான் அப்படி வேண்டிக்கிட்டேன்’ என்றார் புருஷோத்தமன்.
– ஜூன் 2012