விசை வாத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 9,513 
 

என் அத்தானைப் புத்திசாலி என்று கொண்டாடாதவர் இல்லை. அப்படி ஊரெல்லாம் கொண்டாட என்ன என்ன வேண்டுமோ அந்தப் பாக்கியங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கின்றன. ஸ்வீகார அம்மா வைத்த பெரும் பணம் இருக்கிறது; அலங்காரமான வீடு இருக்கிறது; கிளி மாதிரி மனைவி இருக்கிறாள். ஒன்று மாத்திரம் அவ்வளவாக இல்லை. இந்த விஷயம் கொஞ்சம் சுமார்தான். அது ஒன்றும் அப்படிப் பெரிய விஷயம் அல்ல. எதைச் சொல்லுகிறேன் என்றால், அதைத்தான் மண்டைக்குள்ளே மூளை என்று சொல்லுவார்களே; அந்தச் சங்கதியை. இதற்காக அவனை அசடு என்று சொல்ல மாட்டேன்.

சின்ன வயசில் அவனுக்கு ஒரு பெயர் உண்டு. இன்று யாரும் அதை வாய் தவறிக்கூட அவன் முன்னிலையில் சொல்ல மாட்டார்கள். இங்கே ரகசியமாக உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன் : ‘களிமண் மண்டை ‘ என்பதுதான் அது.

அவனுடைய அம்மா – ஸ்கார அம்மா அல்ல, பெற்றெடுத்த நிஜ அம்மா – எனக்கு அத்தை. “என் அம்மா இருக்கச்சே…..’ என்று அவன் இன்று சிலசமயம் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது எந்த அம்மாவை என்று சட்டென்று புரிந்து கொள்ள முடியாது; அது சற்றுக் குழப்பமான விஷயம்.

அவனுடைய அத்தையே அவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாள். நல்ல பணக்காரி. சில பேர் மாதிரி திதி செய்வதற்கு மாத்திரம் அதிகாரம் கொடுத்துவிட்டுப் போகவில்லை; நல்ல பணமும் வைத்துவிட்டே போனாள். என் அத்தானுக்கு விமரிசையாகவே கல்யாணம் செய்து வைத்தாள்.

வீட்டுக்கு மருமகள் வந்தாள். தங்கத் தகட்டையே கவசமாக அடித்துப் போட்டது போலத்தான் அவளுக்குக் கால் முதல் தலை வரைக்கும் நகை செய்து போட்டாள். அப்புறம் வெகு நாள் இருக்கவில்லை. சீக்கிரமே போய் விட்டாள்; மாமிக்கும் மருகிக்கும் சண்டை தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே மாமி போய்விட்டாள். இதுதானே இயற்கை? கீழ்க்கிளை வலுத்ததும் மேல் மரம் சாய வேண்டியதுதானே?

அத்தான் சுகவாசி. வீடு அழகான வீடானாலும் பட்டணத்துச் சந்து ஒன்றிலேதான் இருந்தது. சந்தாக இருந்தால் என்ன, பொந்தாக இருந்தால் என்ன? பட்டணம் என்றால் பட்டணந்தான். கிராமத்திலே தேரோடும் திருவீதியாகவே இருக்கட்டுமே; பட்டணத்துச் சிறு சந்து ஒன்றுக்கு ஈடாகுமா? அதன் மதிப்பு எங்கே, இதன் மதிப்பு எங்கே? அதன் நாகரிகம் எங்கே, இதன் நாகரிகம் எங்கே? பட்டணம் என்றால் பட்டணந்தான் – சென்னப் பட்டணம்; இந்தியாவிலேயே முதல் முதலாக வெள்ளைக்காரர் பெரிய அளவில் குடியேறி மகத்தான ஒரு சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் போட்ட பட்டணம். அந்தச் சாம்ராஜ்யம் இப்போது போகத்தான் போய்விட்டது; அதனால் என்ன?

அன்று தினம் அத்தானிடம் ஓர் ஐந்து ரூபாய் கடன் கேட்பதற்காக நான் போயிருந்தேன். எனக்கு எப்போதும் முடை; எப்போதுமே கடன். என்னுடைய முதல் சம்பாத்தியமே கடன்தான்; வேலை தேடப் போவதற்காகக் கடன் வாங்கினேன். அப்புறம் ஒவ்வொரு கட்டத்திலும் கடன். சில்லறைக் கடன் வாங்காத நாளே கிடையாது. என் நண்பர் ஒருவர் இந்தக் கடன் விஷயத்தைப் பற்றி வெகு ரசமாக ஒன்று சொல்லுவார். அவர் கடன்காரக்கலையில் நிபுணர். இது அவருடையவாக்கு: ”உலகத்திலே இரண்டு வகையான பேர் இருக்கிறார்கள்: பல்லக்குச் சுமப்போர் ஒரு வகை; பல்லக்கு ஏறுவோர் மறு வகை. சுமக்கும் சோம்பேறிகள் ஏறவே மாட்டார்கள்; ஏறும் மகான்கள் இறங்கவே மாட்டார்கள். ஆமாம்; சுமப்போர்தான் சோம்பேறிகள். ஏனென்றால், சோம்பேறிகள் தான் சுமப்பார்கள். இதே மாதிரி கடன் கொடுக்கும் சோம்பேறி களும் கடன் வாங்கும் மகான்களும் உலகத்திலே இருக்கிறார்கள். இந்த மர்மத்தை ஆதாரமாகக் கொண்டு தான் பாங்குகள் நடக்கின்றன.” எல்லாம் சரி; கடன் கொடுக்கும் சோம்பேறிகள் கடன் வாங்கும் மகான்களின் மென்னியிலே சில சமயம் கத்தியை வைத்து விடுகிறார் களே; அதுதான் ரசப்படவில்லை .

என் அத்தானிடம் கடன் வாங்குவதென்றால், சுபலமான காரியம் அல்ல. எவரெஸ்ட் சிகரப் படை யெடுப்பையே அதற்கு உவமை சொல்ல வேண்டும். ‘இருந்து முகம் திருத்தி ஈருருவிப் பேன் பார்த்த கணவன் மாதிரியெல்லாம் செய்தே அத்தானிடம் ஐந்து ரூபாய் வாங்க வேண்டும். இதற்காக அத்தானின் வீட்டுக்குப் போய், அவனுக்குப் பக்கத்திலே ஒருநாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

அத்தானுக்கு அநேக சமயம் அக்கம் பக்கமே என்ன? உலகத்திலே தன்னைத் தவிர வேறு ஜீவராசிகளும் உண்டு என்பதையே அவன் மறந்துவிடுவான். அவனுக்கு உலகம் மித்தை அல்ல உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மட்டுமே மித்தை. இந்தப் பரவச யோக நிலையில் அவன் இருக்கும் போது, யார் வந்தாலும் யார் போனாலும் அவனுக்குக் கவலை இல்லை; அவன் கவனிக்க மாட்டான். அவன் உண்டு; உலகம் – அதாவது அவனுடைய ஆஸ்தி-உண்டு,

”என்ன அத்தான், மதனி மயிலாப்பூர் போயிருக் கிறாளா?” என்று மெல்ல பேச்செடுத்துப்பார்த்தேன்.

இ ‘ஊம்ம்ம் ” என்றான் அத்தான்.

அப்புறம் ஒரு வார்த்தை இல்லை. மேலே மச்சிலிருந்து தொங்கிய எலெக்ட்ரிக் விளக்கு ஒன்றை அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு தினுசான பார்வை. அந்தப் பார்வை தொடங்கிவிட்ட சமயத்தில் இடியோசைகூட அத்தான் காதில் விழாது. ஆனால், அத்தானிடம் இந்தப் பார்வை யில்லாத கோலத்தை நாம் பார்ப்பது மிகவும் துர்லபம். அதற்கு நமக்கு அதிருஷ்டம் கிட்டவேண்டும்.

நான் சற்று நேரம் பேசாதிருந்தேன். அந்த அதிருஷ்ட வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அத்தான்தான் வாய் திறக்கவில்லை; எனக்குப் பொழுது போக வேண்டாமா? அங்கும் இங்கும் அப்படி இப்படிச் சுற்றிப் பார்த்தேன். ரேடியோவைப் பார்த்தேன். மதனி அதற்குப் பூப்போட்டுப் போர்த்தியிருந்த புதிய உறையோடு அது துலங்கியது. ரேடியோவுக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பாரா கொடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் பொம்மையும் ராமன் பொம்மையும் இன்று இடம் மாறியிருந்தன. இன்னொரு விசேஷம்: வில் பிடித்த கை ஒடிந்து போயிருந்த ராமன் பொம்மை இப்போது ‘முழுசாக இருந்தது. கோந்து போட்டு அத்தான் அதை ஒட்டி வைத்துவிட்டான். தவிர, மூங்கில் சிம்பினால் அழகாக ஒரு கோதண்டமும் செய்து அந்தக் கையிலே கொடுத்திருந்தான்.

அலங்கார வித்தையில் நிபுணன் என் அத்தான். அவனை ஸினிமா ஸெட் ஒன்றில் ஆர்ட் டைரெக்டராகப் போட்டிருந்தால், இந்திரலோக ஸீன் எத்தனை தயாராகி யிருக்கும் தெரியுமா? அநேகமாக அமராவதிக்கதிபன் அதைவிட்டு இதற்குள்ளே பூலோகத்துக்கே வந்தாலும் வந்திருப்பான். ஆனால் எந்தப் படமுதலாளிக்குத் தெரிகிறது இப்படி மூலையிலே பதுங்கிக் கிடக்கிறது ஒரு பெரும் மேதை என்று! இப்போது என் அத்தான் எத்தனை நெருப்புப் பெட்டி லேபிள்களை எடுத்து, மரத்தட்டியில் அழகழகாக ஒட்டியிருந்தான்! பொம்மை, படம் இரண்டையும் எங்கே கண்டாலும் அவன் விடமாட்டான். சுவரிலே பல காலண்டர் படங்களைக் கிழித்துக் கிழித்து, ஒட்டி ஒட்டி, பிறகு கிழித்தெறிந்து, புதுப் படங்களை ஒட்டிச் சிங்காரம் செய்து கொண்டே யிருப்பது அவனுடைய வழக்கம். அதுவும் கொலுச் சமயம் வந்து விட்டால், ஒரு கந்தல் காகிதம் பாக்கி இராது; ஒரு கள்ளிப் பலகை பாக்கி இராது. வெட்டுவதும் ஆணி அடிப்பதும் கொட்டுவதும் கட்டுவதும் கத்தரிப்பதும் ஜிகினா ஒட்டுவதுமாய்ப் படி பண்ணிவிடுவான். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீல விளக்கெல்லாம் போட்டு, வரிசையாய் மாட்டி, வந்தவர்க்கெல்லாம் காட்டி மகிழ்வான். அப்போது அவனுக்குப் பூரிக்கும் பெருமையைப் பார்த்தால், தன்னையே தாமஸ் ஆல்வா எடிஸனாக அவன் நினைத்துக் கொண்டது போல் தோன்றும்.

நாலு நாளைக்கு முன் அத்தானிடம் ஒரு வாத்து இருந்தது. சாதாரண வாத்து அல்ல; நடக்கும் வாத்து! ‘கீ’ கொடுத்துக் கீழே வைக்க வேண்டியது. உடனே அது உயிருள்ள ஜந்துவைப்போல அசைந்து அசைந்து, ஆடி ஆடி, கால்களை மாற்றி மாற்றித் தூக்கித் தூக்கி வைத்து நடக்கும்.

அது இங்கே யெல்லாம் கிடைக்காதாம். ஜப்பானுக்குப் போய் வந்த ஒரு நண்பர் கொடுத்த வாத்தாம். “நம்மளவனுக்கு என்னப்பா பண்ணத் தெரியும்? ஒரு வாத்துப் பண்ணத் தெரியுமா, வாத்து? நான் ஒரு சின்ன ‘வாத்து ஃபாக்டரி’ வைக்கலாம் என்று எண்ணி யிருக்கிறேன்” என்றான் அத்தான். அன்று; இன்றல்ல.

அத்தான் எப்போதுமே இப்படித்தான். ஏழு வருஷமாகவே ஏதாவது தொழில் தொடங்கப் போவதாகத் தான் சொல்லிகொண் டிருக்கிறான். முப்பது ரிக்ஷா வாங்கிப் போடப் போவதாக ஒரு நாள் சொல்லுவான். அச்சாபீஸ் வைத்து, சுடச் சுடப் பத்திரிகை போடப் போவதாக இன்னொரு நாள் சொல்லுவான். மளிகைக் கடை, ரேடியோ ஷாப், ஸினிமா விநியோகம், ‘சீப்’ பான மர ஸைக்கிள் கண்டுபிடித்துச் செய்யும் தொழிற்சாலை இப்படி எத்தனையோ அவன் திட்டம் போட்டிருக்கிறான். இப்போது வந்து ‘ஃபாக்டரி’ யோசனை உதயமாகியிருக்கிறது.

இந்த வாத்தைப்பற்றி நேற்று அவனுடைய வீட்டிலே பெரிய ரகளை. அப்படி ஒன்றும் உரக்கச் சண்டை போடும் வழக்கமே அவனுக்குக் கிடையாது. தொண தொணத்துக் கொண்டேயிருப்பான். அதை யாராலும் சகிக்க முடியாது. அதைவிடப் பெரிய ரகளை வேறில்லை.

மயிலைாப்பூரிலிருந்து மதனிக்கு அக்காவும் அவளுடைய பெண்ணும் முந்தாநாள் னவந்திருந்தார்கள். மைத்துனிக்கும் மைத்துனியின் பெண்ணுக்கும் விசை வாத்து வேடிக்கை காட்டினான் அத்தான். எல்லாருக்குமே அவன் இப்படி வேடிக்கை காட்டுவான். எனக்கும் உங்களுக்கும் – நேருவே அவன் வீட்டுக்கு வந்தால் அவருக்குக் கூடத்தான் – இப்படி வேடிக்கை காட்டுவான். முந்தாநாள் அந்தக் குழந்தை அந்த வாத்தைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டு விளையாடியது. போகும்போது ‘விடமாட்டேன்’ என்று கொண்டுபோய் விட்டது.

“இந்தா, நளீ. அதை வாங்காதே. போனால் போகிறது. குழந்தை கொண்டு போகட்டும்” என்றுதான். அப்போது மதனியிடம் அத்தான் சொன்னான். அத்தானுக்கு விவாக மகோற்சவம் நடந்து பத்து வருஷமாகியும் இந்தக் குழந்தை உபத்திரவம் எல்லாம் சொந்தத்தில் கிடையாது. பிறருடைய குழந்தைகளைக் கண்டாலே தாராளமான மனசு. தவிர, தன் பெருமை விளங்க நடப்பதிலும் கொஞ்சம் ஆசை உண்டு. அதனால்தான் அப்போது அப்படிச் சொன்னான்.

ஆனால், இப்போது அத்தானின் யோசனை மாறிவிட்டது. என் அத்தானுக்கே இது வழக்கம்.

நேற்று மாலை ‘நளீ’ என்று மதனியைக் கூப்பிட்டான்.

அவள் சட்டென்று வந்தாள்; அத்தானுக்கு எதிரே நின்றாள்.

“வாத்து ஃபாக்டரி வைக்கலாம்னு நானும் அம்மான் சேயும் ஒரு யோசனை செய்திருக்கிறோம். உனக்குச் சொன்னேன் இல்லையா?” என்றான் அத்தான்.

“ஆமாம்; அதற்கு என்ன இப்ப?” என்று அவள் கேட்டாள்.

சற்று இழுத்த ஏக்கக் குரலில் அந்த – அந்த – வாத்துப் போய்விட்டதே!” என்று சொன்னான் அத்தான்.

“போச்சு!”

“நீ ஒரு காரியம் செய்கிறாயா? நாளைக்கு மயிலாப்பூருக்குப் போ. மெள்ள நைஸாக அந்த வாத்தை வாங்கிக்கொண்டு வந்துவிடு. ‘சீனாவிருந்து ஒரு ரெயில் வண்டி விசைப் பொம்மை வரப்போகிறது. அதைத் தருகிறோம்’ என்று சொல்லு. தப்பாக உன் அக்கா நினைத்துக்கொள்ளும்படி செய்து விடாதே. இல்லே, நானும் வரட்டுமா?”

“சரித்தான்!” என்று சலிப்போடு சொல்லி, உள்ளே போனாள் மதனி.

அத்தான் தொணதொணக்கத் தொடங்கினான். அப்புறம் இரண்டு மூன்று தடவை மதனியைக் கூப்பிட்டான்; அந்த வாத்துப் பொம்மையைத் திருப்பிக் கொண்டு வருவதற்கு வேண்டிய சம்பாஷணை முதலிய தந்திர மரியாதை முறைகளை யெல்லாம் பக்குவமாய் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். மதனிக்கே சலிப்பாய்ப் போய்விட்டது. தொண தொண, தொண தொண என்றால், யாருக்குமே சலிப்பாய்த்தானே இருக்கும்? இதோ பாருங்கள், கிணற்றடியிலே ‘லபோ லபோ, லபோ லபோ’ என்று ஒரு கிழவி அடித்துக் கொள்கிறாள். அதனால் தனக்குத் தலை நோவு எடுத்து விட்டதாக ஒரு பையன் சீறுகிறான். இயற்கை.

“நாளைக்குத்தானே? போகிறேன். உங்கள் வாத்தைக் கொண்டு வந்து விடுகிறேன். கவலையை விடுங்கள்” என்று அழுத்தமாக உறுதி சொன்னாள் மதனி.

இது நேற்று நடந்த விஷயம். சுவர்த் தட்டிலே இன்று அந்த வாத்து இருக்கிறதா என்று பார்த்தேன்; காணவில்லை.

இதனால்தான், “மதனி மயிலாப்பூருக்குப் போயிருக்கிறாளோ?” என்று நான் விசாரித்தேன். அத்தான் பதிலே சொல்லவில்லை.

மதனியும் அத்தானுக்கு ஏற்ற மனைவிதான். உள்ளே உட்கார்ந்து கதைப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் பிரித்துக் கொண்டாளானால், அடுப்பிலே பால் பொங்கி வழிந்து தீய்ந்தாலும் அவளுக்குத் தெரியாது.

இரண்டு பேரும் இப்படி யோக நிலையில் இருக்கும் போது, வீட்டுக்குள்ளே ஒரு யானை வேண்டுமானாலும் புகுந்து தவலை அரிசியை விழுங்கி உருட்டிவிட்டு ‘ஹாய்’யாக வெளியே போகலாம்; தடை ஒன்றும் இராது.

ஆனால் அத்தான் காபி சாப்பிட்டிருந்தான். அவனுடைய நாற்காலிக்குப் பக்கத்தில் கீழே காலி டம்ளர் கிடந்தது.

“அத்தான், மதனி இல்லையா?” என்று மீண்டும் கேட்டேன்.

“ஊம்ம்ம்…” என்றான் அத்தான்.

இன்னும் அவனுடைய யோக நித்திரை கலையவில்லை .

இந்தச் சமயம் வாயிற்படியில் ஒரு நண்பர் வந்து நின்று, ”ஸார், மித்ரன் வந்து விட்டதா, மித்ரன்?” என்றார்.

வாடிக்கையாக அத்தானிடம் வந்து பேப்பர் வாங்கிப் படிக்கும் ராயர் அவர்.

அத்தான் பேசத் தொடங்கினான்? “வாங்கோ ; வாங்கோ, ராயர்வாள். நாங்கள் ஒரு யோசனை செய்திருக்கிறோம். ஒரு வாத்து ஃபாக்டரி வைக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள் : வாத்து ஃபாக்டரி நல்ல பிஸினஸா? இல்லை, நாலு ஆட்டோ ரிக்ஷா வாங்கிவிடலாமா?…”

இப்படி ஏதோ சொல்லிக்கொண்டே போனானே யொழிய ராயருக்கும் பதில் இலை; எனக்கும் பதில் இல்லை.

“ஸார், லஸ் முனையிலே பஸ் விபத்தாம் ஸார். ஒரு கூடைக்காரி போய்விட்டாளாம். ஒரு பையனுக்கு இரண்டு கால்களும் போய்விட்டனவாம். வண்டிக்குள்ளே இருந்தவர்களுக் கெல்லாம் பலத்த அடியாம். மித்ரன் வந்துவிட்டதோ, மித்ரன்? பார்க்கலாம் என்று பார்த்தேன்” என்றார் ராயர்.

“அப்படியா! நளீ, பேப்பரைக் கொண்டுவா?” என்று உரக்கச் சொல்லிவிட்டு, “உட்காருங்கள், ராயர்வாள். இதெல்லாம் சகஜம், ஸார். உலகத்திலே எத்தனையோ விபத்து. விமானம் கவிழ்கிறது; ரெயில் மோதுகிறது. எல்லாம் நாகரிக முட்டாள் தனம். நம் ரிஷிகள் மாதிரி வாழ்ந்தால், மனிதகுலத்துக்கு ஒரு கஷ்டம் இராது. போகட்டும், ஸார்; நம்ம விஷயத்தைப் பார்க்கலாம் – சொன்னேனே அந்தப் பிஸினஸ்’ விஷயம். டிரைவர்களை நம்பி ஆட்டோக்களைக் கொடுக்க வேண்டி யிருக்கிறது. அதைவிடப் பேபி டாக்ஸி இரண்டு வாங்கி விடுவது நல்லதில்லையா? இல்லை, வாத்து ஃபாக்டரியே சரி என்று நீங்கள் சொல்லுகிறீர்களா?” என்று தன் தொழில் திட்டத்தைப் பற்றி மீண்டும் விவரிக்கத் தொடங்கினான் அத்தான்.

ராயர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் “மகா கோரமாம், ஸார். இந்த ஓட்டைப் பஸ்களை யெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும், ஸார். ஸ்டீயரிங் வீல் உடைந்து விட்டது என்கிறார்கள். என்ன என்னவோ சொல்கிறார்கள், ஸார்” என்று அவர் என்னைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

“நளீ” என்று ஒர குரல் அழைத்துவிட்டு, அத்தான் எழுந்து போய் ரேடியோவைத் திருகினான். அது ‘ஹோ!’ என்று சங்கீதம் பொழியத் தொடங்கியது.

இது அவனுடைய யுக்தி. அத்தானுக்கு முன்னே யாராவது இரண்டு பேர், அவனது பேச்சைக் கேட்காமல், தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளத் தொடங்கி விட்டால், அவன் இப்படித்தான் ரேடியோவைத் திருகி விடுவான்.

அந்த ரேடியோ சங்கீத சமுத்திரத்திற்கு நடுவிலே, அவனும் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்; ராயரும் பேசிக்கொண்டிருந்தார். இரண்டும் என் காதில் சரியாக விழவில்லை . இருந்தாலும் நானும் அமுத்த லை விடாமல் தலையை ஆட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தேன்.

வாத்து ஃபாக்டரி, ஆட்டோ ரிக்ஷா, பேபி டாக்ஸி, மளிகைக் கடை, பீங்கான் ஷாப். மர சைக்கிள் தொழிற்சாலை – இந்தச் சொற்கள் மட்டும் அத்தான் வாயிலிருந்து வந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

ராயருடைய பேச்சின் இடையிடையே மித்ரன், ஸார்; மித்ரன்’ என்ற சொற்கள் ஒலித்தது புரிந்தது.

நான் என்ன பேசினேன் என்று எனக்கே சரியாய்த் தெரியாது. ஆனால், இந்தச் சந்தடி சாக்கில் அத்தானிடம் ஐந்து ரூபாய்க் கடனை இடுக்கில் கேட்டு வைத்தேன் என்று மட்டும் நினைவிருக்கிறது. அத்தான் உடனே பதில் சொல்லத் தேவையில்லை, எதற்கும் அத்தானின் காதிலே ஓர் ‘ஐடியா’வைப் போட்டு வைத்தால், சரியான சமயத்தில் அது முளை விட்டு வளர்ந்து பலன் தரும் என்பது எனக்குக் கண்கண்ட அநுபவம். அதற்கு ‘இந்தச் சந்தடியிலா சொல்வது?’ என்று யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. பாம்புச் செவி என்று ஒன்று சொல்கிறார்களே, அந்தச் செவி அத்தானுக்கு.

ராயரின் பேச்சுக்கு இடையிலே, “மித்ரன்” என்ற சொல் ஒலித்த ஒவ்வொரு தடவையும், அத்தானின் வாயிலிருந்து, “நளீ, பேப்பர் கொண்டுவா” என்ற குரல் எழுந்து, பிறகு வேறு விஷயங்களில் திரும்பி விடும்.

இப்படியே சுமார் ஒரு மணி நேரம் போயிருக்கும்.

அந்தச் சமயத்தில் மூன்றாவது வீட்டிலிருந்து ஓர் ஆள் ஓடி வந்து, அத்தானுக்கு டெலிபோன் செய்தி வந்திருப்பதாகச் சொன்னான்.

“அது யாராப்பா அவன், எனக்கு டெலிபோன் செய்கிறவன், ஒரு நாளும் இல்லாத திருநாளாய்!” என்று சொல்லிக்கொண்டே எழுந்த அத்தான், “நளீ, அங்க வஸ்திரம் கொண்டுவா?” என்றான்.

மதனி வரவில்லை. “என்ன இது! நளீ!” பதில் இல்லை .

“மந்தம்! மந்தம்!” என்று சொல்லிக் கொண்டே, உள்ளே போகத் திரும்பிய அத்தானுக்கு விஷயம் சட்டென்று ஞாபகம் வந்தது.

“காபி கொடுத்தாள். குடித்தேன். ‘போய் வரவா?’ என்றாள்; தலையை ஆட்டினேன். சரிதான்; சரிதான். அவள் மயிலாப்பூருக்குப் போயிருக்கிறாள். இரண்டு பேரும் ரேடியோ கேட்டுக்கொண் டிருங்கள், ராயர்வாள். டெலிபோன் செய்தியைக் கேட்டுவிட்டு இதோ வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் அத்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் பரபரப்புடன், கை விதிர்க்கக் கால் கடுங்க, “போகணும், போகணும்; கிளம்பு, கிளம்பு” என்று கத்திக் கொண்டே அவன் திரும்பி வந்தான்.

அவனது கோலத்தைக் கண்டு, எனக்கும் பரபரப்பாய்த்தான் இருந்தது. “எங்கே, எங்கே? என்ன, என்ன?” என்றேன்.

“ஆஸ்பத்திரிக்கு, ஆஸ்பத்திரிக்கு” என்று சொல்லி, பெட்டியைத் திறந்து பணம் எடுத்துக்கொண்டு, பூட்டையும் சாவியையும் தேடினான் அத்தான்.

நான் ரேடியோவை நிறுத்தினேன்.

இந்த அவந்தரையில் பேப்பர் எங்கே கிடைக்கப் போகிறது ராயருக்கு? “வருகிறேன், ஸார்” என்று அவர் எழுந்து நடந்தார்.

பேபி டாக்ஸி அமர்த்திக் கொண்டு, இரண்டு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போனோம்.

அங்கே மதனி இருந்தாள். அவள் அந்தப் பஸ்ஸில் தான் வந்திருக்கிறாள். பெரிய உள்காயமோ என்று முதலில் டாக்டர்கள் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். நன்றாகப் பரீட்சை செய்து பார்த்துவிட்டு, அப்படி ஒன்றும் இல்லை’ என்று தீர்மானித்தார்கள். கையிலே மட்டும் சிறிய அடி. ஒரு விரல் சற்றுத் திரும்பியிருந்தது. வேதனை இரண்டு நாளைக்கு இருக்கத்தான் இருக்குமாம். ஏதோ கட்டுக் கட்டி, “உடனே வீட்டுக்குப் போகலாம்” என்று அனுமதி கொடுத்தார்கள். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!” என்றேன் நான்.

ஆனால், அத்தான் மட்டும் அவள் போன காரியத்தை மறக்கவில்லை . “என்ன நடந்தது? வாத்து எங்கே” என்று மதனியைக் கேட்டான்.

“நல்ல வேளையாக வாத்தை இந்தக் கையிலேதான் வைத்திருந்தேன்…”

மதனி முடிக்கவில்லை. “எங்கே, கொடு” என்றான் அத்தான்.

“அதைத்தானே சொல்ல வந்தேன். அது நொறுங்கி போச்சு; அது நொறுங்கவில்லையானால் என் கை நொறுங்கிப் போயிருக்குமாம்” என்றாள் மதனி.

வருத்தத்தோடு சப்புக்கொட்டினான் அத்தான். ‘பொன் வாத்தை இழந்த பேராசைக்கார’னின் முகம் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அத்தானின் முகம் துலக்கியது. மதனியின் கை போயிருந்து, வாத்துப் பத்திரமாக இருந்திருந்தால், அத்தானுக்கு இவ்வளவு துயரம் ஏற்பட்டிராது என்றே தோன்றியது. நியாயந்தானே? கைக்கு வைத்தியம் செய்திருக்க முடியும். வாத்துப் போனது போனதுதானே; திரும்பி வருமா? ஜப்பான் வாத்து இல்லையா? நடையாய் நடக்கும் விசை வாத்து ஆயிற்றே !

என்னவோ, வாத்துப் போய்விட்டது. ஏதோ, யார் செய்த புண்ணியமோ, சௌக்கியமாக மதனியை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

கடைசியில் “பணம் கேட்டாயே; ஐந்து ரூபாயா?” என்று சொல்லி, ஒரு நோட்டை என்னிடம் கொடுத்தான் அதோடு, “நம்முடைய வாத்து ஃபாக்டரிதான் போய் விட்டது. மர ஸைக்கிள் யோசனையைக் கொஞ்சம் நீயும் சிந்தித்துப் பார். நாளை மாலை வருகிறாய் இல்லையா?” என்றான்.

“ஆஹா! கட்டாயம்” என்று சொல்லிக்கொண்டே கிளம்பினேன்.

அத்தானைப் பார்த்துப் பதினைந்து நாள் ஆகி விட்டது. இன்று சாயங்காலம் போகவேண்டும். அதற்காகத்தான் இப்போது காதுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறேன். கடன் விஷயமாகத்தான் போகிறேன். அந்த ஐந்து ரூபாயை திருப்பிக்கொடுக்க அல்ல; இன்னோர் ஐந்து ரூபாய் கேட்பதற்காக. என் முடைதான் தீராத முடை என்று முன்னமே சொல்லியிருக்கிறேனே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *