புதியதாக வந்த நட்பும், உதவியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 7,239 
 

ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் நல்ல பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருந்தது. அந்த விவசாயிடம்
ஏராளமான மாடுகள் இருந்தன.அந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விவசாயியும் அந்த நாயும் கூட்டிச்செல்வர்.தினமும் காலையில் கிளம்பி அருகில் உள்ள மலைக்காடுகளுக்கு அழைத்துச்சென்று மாடுகளை மேய விட்டுவிட்டும் மாலையில் வீட்டுக்கு கூட்டி வருவர்.விவசாயி மாடுகளின் பின்னால் நடந்து வர, நாய் இரு பக்கமும் மாறி, மாறிச்சென்று கட்டுக்கோப்பாக காட்டுக்கு கூட்டிச்செல்லும்.இவ்வாறு தினம் தினம் சென்று வருவதை நரி ஒன்று கவனித்து வந்தது.

நரிக்கு மிகவும் வயதாகிவிட்டது. அதனால் ஓடி ஆடி வேட்டையாட முடியவில்லை.

இந்த மாடுகளை பார்த்ததும்,அதற்கு எச்சில் ஊறியது,ஆனால் நாயை பார்க்கவும் பயமாக இருந்தது.நாயும் நல்ல உயரத்துடன் பலசாலியாக இருந்தது. நரி எப்படியாவது மாட்டை வேட்டையாட சமயம் பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த புலி ஒன்றுக்கு நரியைப்போலவே வயதாகிவிட்டதால்,முன்னைப்போல காட்டில் வேட்டையாட முடியவில்லை. காட்டை விட்டு வெளியே வந்து மனிதர்கள் வளர்த்து வரும் விலங்குகளை வேட்டையாடலாம் என்று கருதி வந்தது. அப்படி வரும்பொழுது இந்த வயதான நரியை பார்த்தது. நரியாருக்கு ஒரு துணை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் மெல்ல புலியிடம் வந்து புலியண்ணா சவுக்கியமா? என்று கேட்டது. சந்தோசத்துக்கு என்ன குறைச்சல் ! என்று பதில் சொன்னது புலி. என்ன புலியண்ணா ரொம்ப வருத்தமா பேசறீங்க,என்று நரியார் கேட்க, எனக்கு வயசாயிடுச்சு முன்ன மாதிரி வேட்டையாட முடியல்ல, அதுதான் இந்த மனுசங்க வளர்க்கற ஏதாவது கிடைக்குமான்னு தேடி வந்தேன் என்றது. நரிக்கு உடனே ஒரு திட்டம் தோன்றியது.

நான் ஒரு திட்டம் வசச்சிருக்கேன், நீங்க மட்டும் சரின்னு சொன்னா நமக்கு நல்ல வேட்டை கிடைக்கும், நீங்க பாதி நான் பாதி எடுத்துக்கலாம், என்ன சொல்றீங்க? என்று கேட்டது நரி. புலிக்கு கோபம் வந்துவிட்டது, நீ எனக்கு சமமா பாதி கேட்கறயே, அப்படீன்னா இந்த திட்டமே வேண்டாம் என்று சொல்லிவிட்டது. நரிக்கு அட்டா அவசரப்பட்டுட்டமே, என்று நினைத்து, அப்படி எல்லாம் வேண்டாம். நீங்க சாப்பிட்டது போக மிச்சம் கொடுத்தா போதும் என்று சொல்லி புலியை சந்தோசப்படுத்தியது.புலியும் ஒத்துக்கொண்டது.

நரியின் திட்டப்படி, அந்த காட்டில் ஒரு பொ¢ய குழி ஒன்று இருந்தது. அந்த குழியை அங்குள்ள இலை தழைகளைக்கொண்டு மூடி விட்டது. ஒரு பொ¢ய மரக்கிளையை இழுத்து வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டது.மறு நாள் மாடுகள் வருவதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.வழக்கம்போல மாடுகள் ஒவ்வொரு இடமாக மேய ஆரம்பித்தன. ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த நரி அந்த நாயின் கண் படாத தொலைவு ஒரு மாடு மேய்ந்து கொண்டு வருவதை கவனித்து மெல்ல அருகில் வந்து நண்பா இந்த காய்ந்த புல்களைத்தான் தினமும் மேய்கிறாயா? என்று கேட்டது. கேட்டது யார் என நிமிர்ந்து பார்த்த மாடு, நரியிடம் என்ன செய்வது இந்த இடங்களில் புற்கள் காய்ந்து விட்டன. தள்ளி போய் மேயலாம் என்றால் இந்த நாய் விடுவதில்லை, இப்பொழுது கூட உன்னிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால் பாய்ந்து வந்து விடும், அது இந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மேய்ந்தால் ஆபத்து வரும் என்று சதா கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று அலுத்துக்கொண்டது.

நீ மட்டும் சரி என்று சொன்னால் இதை விட அழகான பச்சைப்பசேல் என்ற புல் வெளியை காட்டுகிறேன் என்றது, ஐயையோ, நாயார் என்னை விடமாட்டாரே என்று மாடு சொன்னது. அதைப்பற்றி கவலைப்படாதே, நாளை இதே போல் வா, வந்தவுடன் எல்லோரையும் போல மேய்ந்து கொண்டே இந்த இடத்துக்கு வா, உன்னை அங்கு அழைத்துப்போகிறேன், உனக்கு வேண்டியதை மேய்ந்துவிட்டு மாலைக்குள் இங்கு வந்து விடு, என்றது.மாட்டுக்கு ஒரே மகிழ்ச்சி, நாளை பசும்புல் சாப்பிடப்போகிறேன், என்று நினைத்தது.

அன்று மாலையே நரி புலியிடம் போய் நீங்கள் அந்த குழியில் ஒளிந்து கொள்ளுங்கள், அந்த குழியினை இலைதழைகளால் மூடி விடுகிறேன், நாளை அந்த மாட்டை அழைத்து வருகிறேன் அது குழியில் விழுந்தவுடன் நீங்கள் அடித்து சாப்பிட்டு விட்டு மேலே வர இந்த மரக்கிளையை போடுகிறேன் அதில் ஏறி வந்து விடுங்கள், நான் இந்த மரக்கிளையில் இறங்கி உள்ளே சென்று மிச்சத்தைசாப்பிட்டுவிட்டு இதே மரக்கிளை வழியாக மேலே வந்து விடுகிறேன் என்று சொல்லியது. புலியும் அந்த மரக்கிளை வழியாக குழியில் போய் படுத்துக்கொண்டது.நரி மரக்கிளையை வெளியே எடுத்து விட்டு முதலில் இருந்தது போல் இலை தழைகளால் மூடி விட்டது.

மறு நாள் வழக்கம்போல விவசாயியும், நாயும், மாடுகளை அழைத்து சென்றனர்.அப்படி செல்லும் பொழுது எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த மாடு மட்டும் ஒதுங்கிப் போவதையும், அதே நேரத்தில் வித்தியாசமாகவும் நடந்து கொள்வதை நாய் கவனித்தது. தன்னுடைய கண் பார்வையை இதன் மீது வைக்க ஆரம்பித்தது.

வழக்கம்போல அவைகள் மேயும் இடத்திற்கு சென்றவுடன், இந்த மாடு மட்டும் ஒதுங்கி மறைவதை பார்த்த நாய் மெல்ல அதற்கு தொ¢யாமல் என்ன செய்கிறது என பார்த்த்து. அந்த மாடு மெல்ல ஒதுங்கி மேய்வது போல காண்பித்தது, அப்பொழுது பதுங்கி வந்த நரி இந்த மாட்டை சைகை காட்டி அழைத்து கூட்டி செல்ல ஆரம்பித்தது.நரியுடன் மாடும் செல்ல ஆரம்பித்தது. பின் தொடர்ந்த நாய், நரி ஏதோ சதி செய்து அழைத்து செல்கிறது என்பதை புரிந்து கொண்டது. சிறிது தூரத்தில் ஒரு பெரும் குழி இருப்பது அதற்கு ஞாபகம் வந்தது.உடனே ஒரு முடிவு எடுத்து நரியின் மீது பாய்ந்தது, திடீரென்று பாய்ந்த நாயை கண்டவுடன் தலை தெறிக்க ஓட ஆரம்பிக்க நாய் வேண்டுமென்றே அந்த குழியை நோக்கியே விரட்ட ஆரம்பித்த்து.

நாயிற்கு பயந்து ஓடிக்கொண்டிருந்த நரிக்கு உயிர் பயத்தில் குழியை மறந்து விட்டது.

அந்த குழியினுள் காலை வைக்க உள்ளே விழுந்தது. ஒரே அடியில் கொன்றுவிட வேண்டும் என்று காத்திருந்த புலி ஒங்கி அடிக்க பரிதாபமாய் உயிரை விட்டது நரி. அடித்த பின்தான்
கவனித்தது புலி, அய்யையோ நரியை கொன்று விட்டோமே என மேலே பார்க்க அங்கே நாயும், பக்கத்தில் நரியை நம்பி வந்த மாடும் நின்று கொண்டிருந்தன.பார்த்து என்ன செய்ய? மேலே வர, மரக்கிளையை போட்டால்தானே வர முடியும். மேலே வர முடியாமல் சுற்றி சுற்றி வர ஆரம்பித்த்து.

நாய், மாட்டிடம் பார்த்தாயா, புதிதாக ஒருவன் வந்து உதவி செய்கிறேன் என்று சொன்னால் அதில் உள்ள ஆபத்துக்களை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றது. மாடும் உண்மையை உணர்ந்து நாயிடம் மன்னிப்பு கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *