கரடியாரின் உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 15,087 
 

நரியாருக்கு அன்று ஒரே சந்தோசம், அருமையான முயல் குட்டி ஒன்று கிடைத்திருக்கிறது. அப்படியே கவ்விக்கொண்டு போய் தன்னுடைய குகையில் வைத்து விட்டது. இப்பொழுது பசியில்லை, என்றாலும், கிடைத்த இரையை விடவும் மனமில்லை. அதுவும், முயல் குட்டியாக வந்து நரியாரிடம் மாட்டிக்கொண்டது.

குரங்கு ஒன்றூ மரத்தில் இருந்து கீழே பார்க்க, முயல் ஒன்று கண்ணீரும் கம்பலையுமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்த்து. என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள மரத்தை விட்டு இறங்கியது.

என்ன நண்பா? ஏன் இப்படி அழுதுகொண்டிருக்கிறாய்? கேட்டவுடம் முயல் கேவி கேவி அழுது கொண்டு என் பிள்ளையை காணவில்லை. இங்குதான் விளையாண்டு கொண்டிருந்தான். நான் இரை தேட போய் வருவதற்குள் இவனை காணவில்லை. எல்ல இடங்களிலும் தேடி விட்டேன், என்ன செய்வது என்று தெரியவில்லை.

முயலின் அழுகையை கேட்டதும், குரங்கு சிறிது யோசித்து கேட்டது. உன் பையன் எங்கு விளையாண்டு கொண்டிருந்ததாக சொன்னாய்?

அதோ அந்த மரத்துக்கு பக்கத்தில்தான் விளையாண்டு கொண்டிருந்தான். எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும், சொல்ல சொல்ல அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

அழுகாதே சற்று பொறு என் நண்பர்களை கேட்டு பார்க்கிறேன், எப்படியும் என் நண்பர்கள் அந்த மரத்தின் மேல் இருந்திருப்பார்கள், அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. வா என்ன நடந்திருக்கும் என்று கேட்டுப்பார்க்கலாம்.

முயலை அழைத்துக்கொண்டு அந்த மரத்தடிக்கு வந்தது. மரத்தின் மேல் இருந்த நண்பர்களை அழைக்க அவர்கள் அனைவரும் கீழே வந்து என்னவென்று விசாரித்தன.

முயலிடம் இங்கு ஒரு முயல் குட்டி விளையாண்டு கொண்டிருந்த்தை நாங்கள் பார்த்தோம். சற்று தள்ளி ஒரு நரியார் தூங்கிக்கொண்டிருந்தார், அதையும் பார்த்தோம்.முயல் குட்டி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த்தால், ஒரு வேளை நரியாரிடம் மாட்டியிருக்கலாம். சொன்னவுடன் ஓ..என்று அழ ஆரம்பித்து விட்டது முயல்.

முயலை அழைத்து வந்த குரங்கு, பொறு அவசர்ப்படாதே, முதலில் நரி எங்கு போயிருக்கும் என்று தேடிப்பார்க்கலாம். எனக்கு தெரிந்து அரை மைல் தூரத்தில் ஒரு நரி இருப்பது தெரியும். அநேகமாக அங்குதான் இருக்கும், போய் பார்க்கலாம், முயலை அழைத்துக்கொண்டு அந்த இடம் சென்றது.

சத்தமில்லாமல் இரண்டும் குகைக்குள் எட்டி பார்க்க நரியார் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்க சற்று தொலைவில் முயல் குட்டி திரு திருவென விழித்தபடி முகத்தில் பயத்துடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தன.

அப்பாடி என் மகன் உயிரோடு இருக்கிறான், ஆனால் எப்படி அவனை தப்பிக்க வைப்பது இரண்டும் யோசித்தன.

குரங்கு முயலிடம் என் நண்பன் கரடி இருக்கிறான், வா அவனிடம் அழைத்து செல்கிறேன், அவன் ஏதாவது யோசனை சொல்வான்.

இவர்கள் கதையை கேட்ட கரடி சற்று யோசித்து, நான் நரியாரிடம் வீணாக சண்டைக்கு போக மாட்டேன், இருந்தாலும் நான் ஒரு உபாயம் செய்கிறேன். நீங்கள் அதற்குள் உள்ளே புகுந்து உங்கள் குட்டியை காப்பாற்றி கொண்டு செல்வது உங்கள் பொறுப்பு.

சரி என்று சொன்னார்கள், குரங்கும், முயலும். கரடி அவர்களுடன் வந்து நரியின் குகைக்கு சற்று தள்ளி அவர்களை மறைவாக நிற்க சொல்லிவிட்டு வெளியில் நின்றவாறு நரியாரை அழைத்தது.

வெளியே வந்த நரியார் கரடியை பார்த்த்தும் உற்சாகமானது. இப்ப தேன் வேட்டைக்கு போறேன் வர்றியா? கேட்ட கரடியாரிடம் வேண்டாம், இப்ப பசியில்லை, இராத்திரி பசிச்சா முயல் குட்டியை புடிச்சு வச்சிருக்கேன், அது போதும், சொல்லிவிட்டு உள்ளே போக எத்தனித்தது.

இதை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த முயலுக்கு அழுகையே வந்து விட்டது. நல்ல வேளை குரங்கு அதனை சமாதானப்படுத்தி, அமைதியாய் இரு, கரடியார் பார்த்துக்குவாரு என்று சொன்னது.

கரடியார் விடாப்பிடியாய், அது சரி, முயல் குட்டி ஒரு வேளைக்கு போதும்னா, அதை காலையில சாப்பிட்டுக்கோ, இப்ப தேனுக்கு போனமுன்னா, அதை இரண்டு மூணு நாளைக்கு வச்சுக்கலாம், என்ன சொல்றே?

உள்ளோ போகப்போன நரியாருக்கும் சட்டென அந்த யோசனை வந்தது. அதானே? தேனை கொண்டு வந்து வச்சுட்டா மெதுவா கூட சாப்பிட்டுக்கலாம், இல்லை இரண்டு நாளைக்கு கூட வச்சுக்கலாம், முடிவு செய்தவுடன் சரி, போகலாம், கரடியாருடன் கிளம்பி விட்டது.

அவைகள் இரண்டும் சற்று தூரம் சென்றதும், முயலும், குரங்கும் சட்டென உள்ளே நுழைந்து, முயல் குட்டியை விடுவித்து கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தன.

கரடியாரிடம் சென்ற நரி கை நிறைய தேனடைகளை கவ்விக்கொண்டு மகிழ்ச்சியாய் உள்ளே நுழைந்தது. உள்ளே முயல் குட்டியை காணாமல் திகைத்து நின்றது. இருந்தாலும் நன்றாக தேனை குடித்து வந்த மயக்கத்தில் இருந்ததாலும், வாய் நிறைய தேனடைகள் இருந்ததாலும், இரண்டு நாட்களுக்கு கவலை இல்லை என்பதால் அதிகமாக கவலைப்பட்டுக்கொள்ளவில்லை.

முயல் குரங்குக்கும், கரடியாருக்கும் நன்றி சொல்லி சென்றது. அது மட்டுமல்ல அவைகள் மூன்றும் உற்ற நண்பர்களாகவும் ஆகி விட்டனர்.

விலங்குகள் ஆகட்டும், மனிதர்கள் ஆகட்டும், ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ முடியும் குட்டீஸ். இருந்தாலும், ஒரு முயல் குட்டி தப்பி விட்டதால், நரியாருக்கு எந்த உணவு தட்டுப்பாடும் வரவில்லை என்பதால், நாம் முயல் குட்டிக்கு வாழ்த்து சொல்லி, இனிமேல் ஆபத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்று சொல்லி விடுவோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *