ஆறுகால்மடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 3,350 
 

Aarukalஎன்னுரை

யாழ் இந்துக்கல்லூரியின் , நூற்றாண்டு நிறைவு ஆண்டில், அக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதர மாணவனாக இருந்த 1957 ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் என்னால் எழுதப்பட்ட ‘ஆறுகால் மடம்’ என்ற சிறுவர் நாவல் இன்று எதுவிதமாற்றமுமின்றி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அக்காலத்தின் சிறுவர் பத்திரிகையாகத் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டிக்காக எழுதப்பட்டு, அனுப்பப்பட்டு, கண்ணன் ஆசிரியரால் பாராட்டப்பட்டது. பின்னர் 1965 ஆம் ஆண்டில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நண்பர் சங்கரால் (இன்று அவர் செட்டியார் அச்சக முகாமையானர்) விரும்பி ஏற்கப்பட்டு ‘வளர்மதி’ சிறுவர் பகுதியில் தொடராக வெளி வந்தது. நூற்றுக் கணக்கான வாசகர்கள் ஆறுகால்மடத்தைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதினர். அவையும் சுதந்திரனில் வெளிவந்தன. அவற்றில் சிலவற்றை இச்சிறுவர் நாவலின் முன்னுரையாக்கியுள்ளேன். அவற்றை எழுதிய சிறுவர்கள், இன்று குடும்பஸ்தர்களாக இருப்பார்கள் என்று நினைக்கும்போது வியப்பும், மகிழ்வும் ஏற்படுகின்றது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்:

நண்பர் சங்கர், ஓவியர் தயா, அபிராமி அச்சகத்தினர் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.

செங்கை ஆழியான்
மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
கிளிநொச்சி
25.01.1991

1. சூழ்நிலை

ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த காலம்; யாழ்ப்பாணத்திற் கூட ஆங்கிலவரசாட்சியே நடந்து கொண்டிருந்து. அக்காலத்தில் பெரும் பெரும் தார்வீதிகள் மிகக்குறைவு. பெரும் கல்வீதிகள் முக்கிய நகரங்களையும், போர்வீரர்களின் முகாம்களையும் இணைப்பனவாய் இருந்தன. மற்றையபடி எல்லா வீதிகளும் அக்கால ஒழுங்கைகள் போல் மணல் வீதிகளாவே இருந்தன.

தோட்டங்களும், வயல்களும் நிறைந்து, அழகு கொஞ்சும் எழிற் கிராமங்ளில் மக்கள் வீடிலாழ்ந்து வந்தனர். நகரங்களாக உருவா காது அமைதி நிலவும் கிராமங்களில் மக்கள் பெரும்பாலும் கமக்காரர்களாக இருந்ததால், சூரியன் எழுமன் தோட்டங்களிலோ, வயல் சளிலோ வேலைக்கு இறங்கிவிடுவார்கள், சூரியன் மாலையில் மேற்றிசையில் ஒளிக்கதிர்களை ஒடுக் கிச் சரிந்ததும் வீடுகளுக்குச் சென்றுவிடுவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப் பாணத்திற் கள்ளர் பயம் அதிகமாக இருந்தது. ஈவிரக்கமற்ற அரக்க மனம் படைத்த இக்கள்ளர்கள் கொலை செய்யவும் அஞ்சார்கள். அதனால் இருள் அரக்கனின் போர்வை கவியத் தொடங்கியதும் எவரும் வெளியே வரத்துணியார்.

அத்தகைய ஒரு காலத்தில், ஒரு நாளில் நமது கதை தொடங்குகிறது………

தில்லை

முழுநிலாக்காலம். இரவு பத்துமணிக்கு மேவி ராது. ஆனால், ஆனைக்கோட்டையிலிருந்து நல்லுாரை நோக்கிவரும் அந்த மண் வீதியிலும், அதனைச் சூழ்ந்துள்ள வீடுகளிலும் நேரம் இரவு ஒரு மணிக்குமேல் போன்றிருக்கும்.

வங்கிய அம்மண்வீதியில், மனித சஞ்சார மற்ற அந்த வேளையில், பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தன்னந்தனியனாய் ‘விறுவிறு வென்று நடந்துவந்து கொண்டிருந் கான்.

மண்வீதியை இருளாக்க இருபக்கங்களிலும், இாைகளைப் பரப்பி வானையளாவி களர்ந் இருந்த மரங்கள் முயன்றன. எனினும், முழு நிலாக் காலமானபடியினால் மண் வீதி ஓரளவு இருளடையவில்லை .

அரையில் ஒரு வேட்டியுடன் வேறெவ்வித ஆடைகளுமற்ற அச்சிறுவன் இந்நேரத்தில் எப்படி வெளியே வந்தானோ தெரியாது. அவன் பயந்தவன் போலக் காணப்படவில்லை. எதற்கும் துணிந்த அசாத்திய தன்மை வன் முகத்திற் சுடர்விட்டது.

‘விறுவிறு’ என நடந்துவந்து கொண்டிருந்த அவன் இடைக்கிடையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தான். இருபக்கங்களிலும் தென்னத் தோட்டங்கள் பரந்து கிடந்தன அத்தோட்டங்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு டிசைகளில் விளக்குகள் மின்னி மின்னி எரிவது ‘செத்தை’களுக்கு ஊடாகத் தெரிந்தது.

தூரத்தில் ஒரு நாய் ஊளையிடுவது கர்ண கடூரமாக அவன் காதுத்துளைகளில் இறங்கியது.

அவன் நடந்து கொண்டிருந்தான்.

‘என்றைக்குமே அவனை அடித்திராத மாமா இன்றைக்கு ஏன் அப்படி அடிக்க வேண்டும்? ஒரு கிழமை அவர் வீட்டில் தங்கச் சென்றார்…. இப்படியா அடிப்பது?…’

அலன் தனக்குள் அந்த நேரத்தில்கூடச் சிரித்துக் கொண்டான். குறைந்தது மாதத்தில் ஐந்து நாட்களாவது அவன் மாமா வீட்டில் தான் தங்குவான். மாமிக்கு அவன் மேல் கொள்ளை அன்பு. ‘தில்லை. தில்லை’ என அன்பொழுகக் கூப்பிட்டுச் சிலவேளை முத்தமிடுவாள். மச்சான் முத்தையா அவன் மேல் எவ்வளவு அன்பாயிருப்பான். தனக்குக் கிடைக்கும் பட்சணத்தில் மேலுமொரு பங்கை இவனுக்குக் கொடுப்பானே?…

தில்லையம்பலம் என்ற அச்சிறுவன் தன் நடையைக் கூட்டினான். தென்னந் தோட்டங்கள் கழிந்துவிட்டன. இனிமேல் வரப்போவது வயல் வெளி. அவ்வயல் வெளியை அடுத்து ஒரு வீட்டையும் காணமுடியாது. வயல் வெளியை நினைத்தபோது அவனுக்குத் ‘திக்’ சென்ற வயல் வெளிக்குள்ளுள்ள சுடலையையும் கடதெல்லவா செல்ல வேண்டும்?

அவன் கோழையல்ல; அவனுடைய தாயார் வீரர்களின் கதைகளைக் கூறும்போதெல் லாம், கண்களை அகலத் திறந்து கொண்டு கேட்பான், வீரர்களின் கதைகக் கேட்டுக் கேட்டு அவனும் அவர்களைப்போல லாக கனவு காண்பான்.

மாமாவை எண்ணிக் கொண்டபோது அனுக்கு கோபமே உண்டாகியது. அவருடைய பட்டுவேட்டியை அவன் ஒருக்கால் கட்டியது குற்றமா? தற்செயலாகக் கிழித்து போனதற்காக அவனுக்கு அடிப்பதா? அடித்த பின்பும் அவருடைய வீட்டில் இருக்க அவனுக்கு. என்ன வெட்கமில்லையா?

எல்லாரும் படுக்கைக்குப் போனதும் ஒருவருக்கும் தெரியாமல் படலையை அவிழ்த்துக் கொண்டு, கலட்டியிலுள்ள தனது வீட்டிற்குப் புறப்பட்டு விட்டான்.

வயல்வெளிகள் வந்து விட்டன; அதோ பெரியதோர் ஆலமரத்தின் கீழ் தெரிவததன் ஆறுகால்மடம்; அதை அடுத்துச் சிறிது தூரத்தில் தெரிவது தான் கோம்பயன்மணல் சுடனை. தில்லையம்பலம் தனது நடையை வேகமாக்கினான். அவனை அறியாமல் பயம் உண்டாகத் தொடங்கியது. தேவாரம் படித்தால் ஒருவித பயமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். அவன் அம்மா கூறியிருக்கிறாள்.

அவன் ‘தோடுடைய செவியன்’ எனும் தேவாரத்தை மனதிற்குள் முணுமுனுத்தபடி நடந்தான், ஆறுகால்மடத்தை நெருங்கியாகி விட்டது.

இந்நேரத்தில் அம்மடத்தில் ஒருவரையும் காணமுடியாது.

‘ஆனால், இதென்ன…? மடத்தில் பலர் அமர்ந்திருப்பது தெரிகிறதே?’

தில்லையின் நடை சற்றுத் தடைப்பட்டது. நின்று மடத்தையே பார்த்தான், மடத்தைகடந்து தான் போகவேண்டும். அவன் பிஞ்சு மனத்தில் பற்பல கற்பனைகள் தோன்றின;

அங்கிருப்பவர்கள் ஒருவேளை கள்வரோ?. அவர்கலா இப்போது என்னைக் கேட்டால்…?

அதை நினைக்கவே அவனால் முடிய வில்லை.

வேகமாக ஓடத் தொடங்கினான். மடத்தை மின்னலெனக் கடந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். சற்று ஓடியவன். நின்று திரும்பிப் பார்த்தான்.

‘ஐயோ…’

யாரோ ஒரு முரடன் அவனைத் துரத்திக் கொக ஓடி வருவது தெரிந்தது. தில்லையின் கால்கள் மானெலத் தாவின. பயம் பிடரியைப் பிடித்துத் தள்ளத் தன் முழுசக்தியையும் கால் களிற் சேர்த்து ஓடத் தொடங்கினான். கால் களில் கட்டியிருந்த வேட்டி இடறியது.

2. திருடர்களேதான்

நிலவுக் கதிர்கள் அம் மண் வீதியில், மரங்களை ஊடறுத்து வந்து படிந்திருந்தன. மணல் வீதியாக இருந்தபடியினால் தில்லையால் வே மாக ஓடமுடியவில்லை. கால்கள் புதைந்து புதைந்து வந்தன. கால் மூட்டோடு தெறித்து விடுவது போல நொந்தது. வேட்டி வேறு அவிழ்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. எனினும் தில்லை வேகமாக ஓடினான்.

‘அவனுக்கா ஓடத் தெரியாது? துள்ளி வேகமாக ஓடுகின்ற நாம்பன் கன்றைக்கூடத் துரத் திப் பிடித்திருக்கின்றானே?’

பின்னால் துரத்தி வருபவனின் காலடி ஓசை இவனுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது; தில்லையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மூச்சுவாங்க ஓடிக்கொண்டேயிருந்தான்.

ஐயனார் கோவிலடி வந்து விட்டது; இன்னமும் கொஞ்சத் தூரம் தான். வேகமாக ஓடினால் தட்டாதெரு வந்துவிடும். அதன் பின் அவனுடைய வீடுதானே?

அவனால் தொடர்ந்து ஓட முடியாது போலிருந்தது.

‘எங்காவது சட்டென்று ஒளிந்து இவனை ஏமாற்றிவிட்டுப் போகலாம்’ என்று எண்ணிக் கொண்டான்.

ஐயனார் கோவிலை நெருங்கியபோது கிளைகளைப் பரப்பி இருளாக்கிக் கொண்டு பெரிய அசுரன் போல நின்று கொண்டிருந்த ஆலமரம் அவன் கண்களிற் பட்டது. உடனே ஓடி ஆல மரத்தின் வேர்களோடு ஒன்றிக் கொண்டான்.

மரத்தின் கிழ் நல்ல இருளானதால் அவனைக் காண முடியாது. அவனைத் துரத்தி வந்தவன் ஆலமரததை கடந்து ஓடினான்.

அதைக் கண்டு அந்நேரத்திற்கூட அவன் சிரித்துக் கொண்டான். அவனுக்கு அவனை ஏமாற்றியதில் பரம திருப்தி. எனினும் மனதின் அடியில் படமிருந்து கொண்டே இருந்தது. போனவன் – இவ்வழியால் தானே திரும்பி வர வேண்டும்?.

தான் இருந்த விடத்தில் இருந்து தலையை நீட்டித்தான் ஒடிவந்த வழியைப் பார்த்தான். பார்த்தவன் திகைத்துப் போனான். ஏனெனில், வேறொருவன் அங்கிருந்து, மண் வீதியில் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தான்.

தில்லைக்குப் ‘பகீர்’ என்றது. திரும்பவும் வேரோடு ஒன்றிக் கொண்டான். இரண்டாமவனும் ஆலமரத்தைக் கடந்து ஓடினான். மூச்சு விடக்கூடப் பயந்து இப்போது ஆலமரவேரோடு இணைந்து கிடந்தான், தில்லை.

ஆலமரத்தில் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பறவைகள் சிறகடித்தன. நாய்கள் பல சண்டையிட்டுக் கடிபடும் சத்தம் வெகு தூரத்தில் இருந்து கேட்டது.

அவன் இருந்த விடத்தை விட்டு அசைய வில்லை.

மேலும் சிறிது நேரம் ஓடியது. அந்த இரு முரடர்களும் திரும்பி வந்து கொண்டிருப்பதை அவன் கண்டான். இவன் ஒழிந்திருந்த இடம் இருள்: ஆனால், அவர்கள் வந்துகொண்டிருந்த பகுதி நிலவு வெளி.

அவர்களை இவனால் நன்கு பார்க்க முடிந்தது. உருண்டு திரண்ட அவர்கள் உடல்கள், அவன் ஒன்றியிருந்த ஆலமரத்தின் வேர் போலி இருந்தது. அந்த மீசைகள்…? மகாபயங்கரம். அவர்கள் – சுருட்டைப் புதைத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் பேசுவது தன்னைப்பற்றி என்பதை அவன் அறிவான். அவர்கள் ஆலமரத்தை நெருங்கி விட்டார்கள். ஆலமரவிருளில் புகுந்தனர். இரு சுருட்டு நெருப்புத் துணுக்குகள் நன்கு இருளில் தெரிந்தன. இருளிடையே ஒருவனின் குரல் ஒலித்தது.

‘அண்ணெய் நாங்க பேசினதை அவன் கேட்டிருப்பானோ?…’

‘உடையார் வீட்டு விசயத்தையே?… அவன போட்டிரான்… நாளண்டைக்கு உடையார் வீட்டிற்குத்தான் போகப் போகின்றோம்? நல்லாப் பங்குகேறும்…’

இருவரும் பேசியபடி நடந்து சென்றனர். இல்லை தினகத்துப் போனான். அவர்கள் பேசியதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது; அவர்கள் பெரும் திருடர்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை.

அவர்கள் திட்டத்தைக் கேட்டதால் அவன் இசைப்பிற்குள்ளானான்.

‘அந்தப் பெரியவர் வீட்டிலா திருடப்போகிறார்கள்? பாவிகள்..’

அப்போது ‘அடேய்! நில்லுங்கடா’ என்றொரு குரல் ஒலித்தது.

தில்லை குரல் வந்த திசையைப் பார்த்தான். ‘டக்டக்’ என்ற ‘பூட்ஸ்’ ஒலியோடு இரண்டு ஊர்க்காவலர்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒருவன் வெள்ளைக்காரன், மற்றவன் யாழ்ப்பாணத்தான்.

ஊர்காவலர்களின் குரலைக் கேட்ட அந்த இரு முரடர்களும் ஓடத் தொடங்கினார்கள். இப்போது அந்த முரடர்களைத் துரத்திக் கொண்டு, இந்தவிரு ஊர்க்காவலர்களும் ஓடினர்.

சற்று நேரத்தில் எங்கும் அமைதி நிலவியது: நிலவும் சற்று மேற்றிசையில் சரிந்தது:

3. மாணிக்கச் சித்தப்பா

என்றும் போலக் காலை மலர்ந்தது. வைக றைப் பொழுதிலேயே படுக்கையை விட்டு எழுந்து பழகிப் போன தில்லை அன்று எழுப்பவில்லை. பெற்றோர் எப்போதோ எழுந்து விட்டனர்; அவனது தங்கை லீலா பல முறை வந்து, ‘அண்ணா எழும்பு’ என்று எழுப்பிக் கூட அவன் அசைத்து கொடுக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.

இருந்தாற் போல தலைவாசலில் யாருடை யதோ பேச்சுக் குரல் கேட்டது. அவன் தந்தையாரோடு யாரோ பேசிக்கொண்டிருந் தார்கள். தூக்கக் கலக்கத்தில் யார் பேசுகிறார் களென நன்கு புரியவில்லை. படுக்கையைவிட்டு எழுந்தவன் தன் பெயர் அவர்கள் பேச்சில் அடி படுவதைக் கேட்டு அப்படியே இருந்து விட்டான். குரலிலிருந்து அவனுடைய மாமா தான் என்பது புரிந்தது.

மாமாவை எண்ணிய போது சிறிது பயந்தான். ‘சென்றவிரவு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்ததற்காக விசாரிக்க வந்திருக்கிறாரோ?’.

“இவன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வருவான் எண்டு தான் ஒருக்காலும் எண்ணியதில்லை, மச்சான்! விடிய எழும்பிப் பார்த்தால் இவனைக் காணவில்லை! இவனுடைய மாமி அங்கை ஒப்பாரி வைக்கிறா…” அவனுடைய மாமா தான் பேசுகிறார்.

‘மாமி அழுகிறாவாமே…?’ என்று எண்ணிய போது தில்லைக்கு அழுகை அழுகையாக வந்தது: ஓடிப்போய் மாமியைக் கட்டியணைத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது.

“அதுசரி, மச்சான்! இவன் இராத்திரி எப்ப வந்தவன்? என்ன சொன்னான்?” திரும்பவும் மாமாதான் கேட்கிறார். இப்போது அவனுடைய அப்பா பதில் சொல்வது கேட்கிறது:

“நான் இவன் அந்த நேரத்திலை வருவான் என்று எண்ணவில்லை! படலை சங்கிலி போட்டுக் கட்டியிருந்தது! இவன் படலைக்கு மேலாலே ஏறி உள்ளே வந்து தாயை எழுப்பினான். நான் உடனே முழிச்சுக்கொண்டன்! ‘யாருடனடா வந்தனீ?’ என்றேன். சும்மா மரம் போல நின்றான்! பிறகு ‘மாமா அடிச்சார் ஓடி வந்துடன்’ என்றான். பிறகென்ன பேசுகிறது. ‘போய்ப் படு… விடியட்டும்! உன்னைப் பார்க்கிறன்’ என்றான். போய்ப் படுத்தவன்…. இன்னும் எழும் பவில்லை”

“நான் ஏதோ அடிச்சேன் என்றதுக்காக ஓடிவருவதா? காலங்கெட்ட காலத்திலே. அடிச்ச பிறகு எனக்கும் துக்கமாகத்தான் இருந்தது. எனக்கும் அந்த நேரத்திலை மனம் சரியில்லை…! உன்ரை மோள், லீலா எங்கே?” என்றவர், “லீலா!” என்று கூப்பிட்டார்.

காற்சதங்கைச் சத்தத்திலிருந்து லீலா மாமா விடம் ஓடுகிறாள் என்பதைத் தில்லை உணர்ந்து கொண்டான்.

“என்ன, மாமா?”

“உன் கொண்ணனை எழுப்பி வா, அம்மா!”

“சரி மாமா!”

இனியும் படுத்திருப்பது சரியில்லை என்று தில்லை எழுந்தான்; லீலாவும் ஒடி வந்தார் –

“மாமா, வரட்டாம்…”

“ஏன், நீ….?” என்று அவன் கேட்டான்.

“எனக்குத் தெரியாது!”

குற்றவாளியைப் போலத் தலையைக் குனிந்தபடி மாமா முன் சென்றான். தகப்பன் அவனை விழித்துப் பார்த்தார்.

“என்னடா, நீ இப்படிச் செய்யலாமா?” என்று மாமா கேட்டார். அவன் பதில் பேசவில்லை. ‘இவரோடை எனக்கென்ன கதை’ என்று மனம் நினைத்தது.

‘இந்தா!’ என்று மாமா எதையோ ஒரு பையை எடுத்து நீட்டினார். ‘பெரியவர்கள் தருவதை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று அவன் அம்மா கூறியிருக்கிறாள். தில்லை கையை நீட்டியபடியே, ‘இதென்ன, மாமா?’ என்றான்.

‘பட்டு வேட்டியடா? நீ ஆசைப்பட்டது எனக்கெதுக்கு! இது உன்ரை மச்சான் முத்தையாவின்ரை..நீ கட்டிக்கொள்! நர்ன் அவனுக்குப் பிறகு வாங்கிக் கொடுக்கின்றேன்!’

தில்லையின் கண்கள் கலங்கின. எவ்வளவு அன்புடையவர், மாமா? அவர் அடித்தால் என்ன? அன்புள்ள இடத்தில் கோபமும் இருக்கத்தானே செய்யும்? அவனால் பேச முடியவில்லை.

‘மாமா’ என விக்கினான்: ‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், மாமா!’

மாமா அவனை அணைத்துக் கொண்டார்.

‘இனிமேல் இப்படிச் செய்யாதே?’ என்று புத்திமதி கூறினார்.

‘மச்சான், இனக்கொரு புதினந்தெரியுமே?’ என்றார். மாமா இருந்தாற்போல்.

‘என்ன புதினம்?’

‘கோம்பயன் மணற் சுடலைக்குப் பக்கத்திலுள்ள அந்த ஆறுகால் மடத்திலை இராத்திரி கொஞ்சக் கள்ளர், இரண்டு ஊர்க் காலவர்களை நல்லா அடிச்சுக் கட்டிப் போட்டுவிட்டுப் போட்டாங்களாம்!’

தில்லைக்குப் ‘பகீர்’ என்றது. இராத்திரி நிகழ்ச்சிகள் அவன் கண்களின் முன் தோன்றின. அந்நேரத்தை எண்ணிய போது அவனுக்கு இப்பவும் உடல் நடுங்கியது. அந்த முரடர்களைத் துரத்திக் கொண்டு போன ஊர்க் காவலர்தாம் அந்நிலைக்கு ஆளானவர்களோ?

இரவு நிகழ்ச்சிகளை அவன் ஒருவருக்கும் கூறவில்லை இவர்களுக்குக் கூறுவதாற்பயலில்லை என அவன் நினைத்தான். சென்றனிரவுச் சம்ப வங்களையும், அவ்விரு முரடர்கள் பேசியதையும் மாணிக்கச் சித்தப்பாவிடம் கூறி ஆவன செய்ய அவன் விரும்பினான். மாணிக்கச் சித்தப்பா அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஊர்க் காவலர். அவன் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

‘பூட்ஸ்’ போட்டுக் கொண்டு தானும் நடக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை.

“சித்தப்பா, சப்பாத்தைத் தாருங்களேன்’ என்பான்.

‘நீ பெரியவனானதும் போடலாம்’ என்பார். மாமா பேசுகிறார்:

‘கட்டப்பட்ட அந்த இருவரிலே தம்ம மாணிக்கமும் ஒருவனாய்!’ என்று மாமா கூறியதைக் கேட்ட தில்லை திக் பிரமை அடைந்தவனானான். அவன் கையிலிருந்த மாமா கொடுத்த பை ‘பொத்’ தென நிலத்தில் விழுந்தது.

4. எங்கே அவன்?

தென்னங்கீற்றினால் வேயப்பட்ட அந்த நாற்சார் வீட்டின் புறத்தின்ணையில் மாணிக் கச்சித்தப்பா அமர்த்திருந்தார். வீட்டைச்சுற்றி வளவுமுழுவதும் தென்னை மரங்களே வளர்ந்து காட்சி தந்தன. தென்னம் வட்டுகளிற் குலை குலையாகக் காய்த்துத் தொங்கிய காய்களைப் பார்த்தபடி பலத்த சிந்தனை வயப்பட்டு இருந் தார். அவருடைய தலை, கை, கால் முதலி யனவற்றில் துணிக்கட்டுகள் காட்சிதந்தன. முகம் ஓரளவு வீங்கியிருந்தது.

மாணிக்கச்சித்*ப்பாவின் வீடு காங்கோன் துறைக்குச் செல்லும் கல் வீதியினருகே இருந்த தால் வீதியிற் சனப்புழக்கம் அதிகமாயிருப்பதை அவர் அருகே அமர்ந்திருந்த தில்லைகவனித்தான். மாட்டு வண்டிகளின், ‘ லொட லொட’ சத்தத்தினிடையே பெரும் உத்தியோகத்தர்களும், வீரர்களும், குதிரைகளிற் செல்வதையும், குதிரை வண்டிகள் வேகமாகச் செல்வதையும் இவனாற் காணமுடிந்தது.

இருவரிடையேயும் நீண்ட மெளனம்.. அமைதியைத்தில்லை கலைத்தான் :

‘சித்தப்பா!’ என அழைத்தான். சிந்தனை வயப்பட்டிருந்த சித்தப்பா திரும்பினார்.

‘என்ன, தில்லை?’ என்றவர் தொடர்ந்து, ‘தில்லை நீ உண்மையிலேயே கெட்டிக்காரன் தான்! அது சரி நீ எனக்குக் கூறியவற்றை வேறு யாருக்காவது கூறினாயா?’ எனக்கேட்டார்.

‘ஒருத்தருக்கும் கூற வில்லை , சித்தப்பா!”

‘உன் ஐயாவிற்கு?…’

‘அவருக்கும் கூறவில்லை !’

‘நீ இதை இனி ஒருவருக்கும் கூறி விடாதே!’

‘சரி சித்தப்பா!….. நாளைக்கு உடையார் வீட்டிலே அவர்கள் களவெடுக்கப் போகிறார்களே?… அதைத் தடுக்க முடியாதா, சித்தப்பா?’

சித்தப்பா தூணோடு சாய்ந்து கொண்டார்,

‘அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்! உடையாருக்கு இந்த விடயத்தை அறிவித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். கலெக்டருக்கு அறிவித்து அவர்களைப் பிடிக்க வீரர்களைத் தருவிக்க வேண்டும்!… இதை நீ வேறு யாருக்காவது கூறினாயோ, அது எப்படியாவது இந்தக் கள்ளர் கூட்டத்திற்குத் தெரிந்துவிடும். பின் அவர்கள் வராது திட்டத்தை மாற்றி விடுவர்கள்….!”

‘சித்தப்பா; இந்தக் கள்ளர் கூட்டத்தை இவ்வளவு காலமும் பிடிக்காது ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?’

சித்தப்பா இதைக் கேட்டுச் சிரித்தார். ‘ஏன் சிரிக்கிறீர்கள், சித்தப்பா?’

‘தில்லை! வெள்ளை வேட்டிக் கள்ளர் என்று கேள்விப் பட்டிருக்கிறாயோ?*

‘அதென்ன, சித்தப்பா?’

மாணிக்கச் சித்தப்பா சிறிது நேரமௌனத்தின் பின் கூறினார்:

‘இந்தக் கள்ளர் இருக்கிறார்களே…. அவர்களுக்குத் துணையாகப் பல பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். பகலிலே இந்தப் பெரிய மனிதர்கள் நல்லவர்களாகக் காட்சி தருவார்கள். இரவிலே கள்ளருக்கு உதவி செய்து, அவர்கள் களவெடுப்பதில் பங்கு வாங்குவர்கள்: இந்தப் பெரிய மனிதர்களைத்தான் கூறுவது வெள்ளை வேட்டிக் கள்ளர் என்று…’

தில்லைக்கு ஒரு சந்தேகம். ‘ஏன் சித்தப்பா இந்த வெள்ளை வேட்டிக்கள்ளரையும் பிடித்தால் என்ன?

“அது அவ்வளவு சுலபமல்ல, தில்லை ! அவர்கள் யார்…யார்…என்று தெரியாதே?”.

“நீங்கள் முந்தி ஒரு கள்ளர் கூட்டத்தை பாவது பிடிக்வில்லையா?”

‘நானா …?’

“இல்லை …உங்கள் கவுண்மேந்து?…”

‘மூன்று நான்கு கள்ளர் கூட்டங்களைப் பிடித்திருக்கின்றோம். ஆவரங்கால் ஆறுமுகம், சுன்னாகத்து மாடன், வேலணை முத்தன் முதலி கோர் கூட்டம் பிடிக்கப்பட்டு விட்டது! இப்போது ஆனைக்கோட்டையில் ஒரு கள்ளர் கூட்டம் இருக்கிறது! — அதைத்தான் நீ இராத்திரி கண்டாய்! – அவர்களுக்கு உதவி செய்ய ஒரு சில வெள்ளை வேட்டிக் கள்ளரும் இருக்கிறார்களாம்! அவர்கள் யார் என்று தெரியவில்லை!… இவர்களை எப்படியாவது பிடிப்பது என்று நான் தீர்மானித்து விட்டேன்…’

‘உங்களை அடித்துக் கட்டிப் போட்டதற்காகத் தானே, சித்தப்பா?’

‘போடா, போக்கிரி!’

மானிக்கச்சித்தப்பா எழுந்திருந்தார் தில்லையும் எழுந்தான்.

“தில்லை! சாப்பிட்டு விட்டாயா?”

“சாப்பிட்டிட்டேன்!.. ஆனைக்கோட்டைக் கள்ளருக்குத் தலைவன் யார்?… உங்களுக்குத் தெரியுமா, சித்தப்பா?”

“யாரோ… கந்தப்பன் என்றுதான் செய்தி கிடைத்தது!”

தில்லை சித்தப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான், வீட்டிற்கு வந்தவனை அவனுடைய தகப்பன் தின்ற கோலம். திடுக்கிட வைத்தது நன்றாகக் குடித்துவிட்டு வெறி மயக்கத்தில், “எங்கே அவன்?” என்று கத்திக் கொண்டிருந்தார். தன்னைத்தான் அப்பா தேடுகிறார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். எதற்கும் பயப்படாத அவன் உடல் தந்தையின் குரலால் நடுநடுங்கியது.

5. கேள்விக் குறி?

தில்லையின் அம்மா அவனுக்குப் பல கதைகள் கூறியிருக்கின்றாள். கதைகளை கூறிவிட்டுப் பல புத்திமதிகளும் கூறுவான். தில்லை பள்ளிக்கூடத் தால் வந்ததும், கைகால் முகம் கழுவிவிட்டுத் தாயார். கொடுக்கும் பானத்தை அருந்திவிட்டு, விளையாடச் செல்வான். விளையாடி விட்டு பாடங்களைப் படிப்பான். பின் படுக்கப்போகுஞ் சமயம் தாயைக் கதை சொல்லும்படி வற்புறுத்து வான். லீலாவிற்கும் கதை கேட்பதென்றால் ஆசை. அவளும் தமையனுடன் இருந்து கதை கேட்பாள்.

வீரர்களின் கதைகளை ஆர்வத்தோடு கேட் பான், தில்லை. தாயார் கதை சொல்லும்போது, அவன் அவ் வீரர்களாக மாறிவிடுவான். இராம னைப்போல, கரிகாற் சோழனைப் போல வீரனாக வர வேண்டும் என்பது அவனது விருப் பம். வீரர்களின் கதைகளைக் கேட்டுக் கேட்டு அவனது மனம் எதற்கும் பயப்படாத தன்மை யைப் பெற்றுவிட்டது. பக்கத்து வீட்டு மாமி குழந்தை அழுதால் காட்டுப் பூனையிடம் பிடித் துக்கொடுத்து விடுவதாகப் பயமுறுத்துவதைக் சண்டால், இவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். குழந்தைகள் வளரும் போது பயமுறுத்தக் கூடாது என்று அவன் அம்மா அடிக்கடி கூறுவாள்.

அவனுடைய தாய் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களைப் பற்றியெல்லாம் விளக்க மாகக் கூறுவாள். சிங்கையாரியச் ‘சக்கிரவர்த்தி கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட வீர வாழ்க்கை யைக் கூறும் போது, அக்காலத்தில் தான் இருக் கவில்லையே எனத் தில்லை என்ணுவான்.

சிறுவயதிலேயே மனத்தில் பதிந்த திடமும், வீரவுணர்வும் அவனுள் என்றுமிருந்தது, ஆனால், தந்தை முன் அவன் வீரம் பயப்படாத தன்மை உறைந்து விட்டது. அது இயல்புதான்; அதுவும் ஒருவகை வீரம்தான்.

படலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனைத் தந்தை நின்ற நிலையும், “எங்கே அவன்?’ என்று கேட்ட தொனியும் நடுங்க வைத்தன. அம்மாவும், லீலாவும் பயந்து நடுங்கிப் போய் ஒரு மூலையில் நிற்பதை அவன் கண்டான். இவன் வந்ததைக் கண்ட அப்பா வெளியே போய்விட்டு வரும்படி கண் ஜாடை காட்டியும் அவன் போகத் தயாராகவில்லை. தந்தையின் கோபத்திற்குரிய காரணத்தை அறிய அவன் விரும்பினான்.

அம்மா கண் ஜாடை காட்டியதை அப்பா கண்டுவிட்டார். திரும்பிப் பார்த்தார். தில்லை நின்றிருந்தான். குடிவெறியாற் சிவந்த அவரது கண்களைப் பார்க்க இவனுக்கு பயமாக இருந்தது. அவர் அவனை அடிப்பதில்லை. அடிக்கத் தொடங்கினால் அடியைப்பற்றி கூறத் தேவையில்லை .

“வாடா இங்கே!”

தில்லை குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிபோல அவர் முன் போனான்.

“அவனை ஒன்றும் செய்யாதீங்க…!” அம்மா தடுத்தும் பயனில்லாது போனது. கை ஓயுமட்டும் தில்லை அடிவாங்கினான். அவன் அழவில்லை; வீரர்கள் அழுவதில்லை. தமையனுக்கு அடி விழுவதைக் கண்டு லீலா விம்மி அழுதாள்.

“அடோய் ராத்திரி நடந்ததொன்றும் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாய் வடுகா… நீ செய்த வேலையாலை அவர்கள் உன்னைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள்! டேய்…என்ன நடந்தது…வடிவாய்ச் சொல்ஓ! இல்லாட்டி…”

தில்லை திகைத்துப் போனான். மாணிக்கச் சித்தப்பா கூறியதை மறந்து விட்டான். தன்னை முரடன் ஒருவன் துரத்தியதையும் , தான் ஆல மரத்தடியில் ஒளிந்திருந்ததையும், அவர்கள் உடையார் வீட்டில் கன்வெடுக்க போவதாகக் கூறியதையும் ஒன்றுவிடாமல் கூறினான். இவன் கூறியவற்றைக் கேட்ட அப்பா தலையிற் கை வைத்துக் கொண்டு சாக்குக் கட்டிலில் சாய்ந்து விட்டார், சிறிது நேரம் அமைதியாகக் கிடந்தார்.

அம்மா தில்லையை அணைத்துக கொண்டாள். அழாதிருந்த தில்லை தாயின் அரவணைப்பில் ‘உம்மா’ என்று விம்மத் தொடங்கினான்.

“டேய்…” தந்தையின் குரல் ஒலித்தது; “இதையாருக்காவது சொன்னியாடா…?”

தில்லை தனல நீமிர்ந்தான்;

“மாணிக்சச் சித்தப்பா விற்கச் சொன்னன்!”

“அடப்பாவி! இதெல்லாம் அவன்களுக்குத் தெரிந்தால் எங்கள் குடும்பத்தையே அழித்து விடுவான்களே?…”

தில்லை ஒன்றும் பேசவில்லை, லீலா மெதுவாக அவனிடம் வந்தாள்.

‘அண்ணா!…’

‘நோகுதா அண்ணா?’

தங்கையை நிமிர்ந்து பார்த்தவனால் பேச முடியவில்லை . சிரிச்சுத்தான் முடிந்தது.

அவனுடைய பிஞ்சு உள்ளத்தில் ஒரேயொரு கேள்விக்குறி எழுந்தது. இவருக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?’ என்பதுதான் அது.

6. குடிகாரத் தந்தை

தில்லை அறிந்த மட்டில், அப்பாவிடம் ஒரே யொரு குறைதான் இருந்தது. நன்றாகக் கள் குடித்து வீட்டு வந்தால் அவர் நல்லவராக இருப்பதில்லை. வாய்க்கு வந்தபடி வீட்டில் எஎவரையும் ஏசுவார். குடிக்காத வேளைகளில் அவர் மிகவும் நல்லவர். எல்லார் மேலும் அன்பாக இருப்பார். லீலாவைத் தூக்கி மடியில் வைத்துச் செல்லக் கொட்டுவார்.

தில்லை ஓரனவு பணம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன், தந்தை மூழு நேர உழைப்பாளி. வயல்களும், தோட்டங்களும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன.

“ஐயா…!” என அழைப்பான், தில்லை.

“என்ன தில்லை?…” என அன்பாகப் கேட்பார், அப்பா.

“நம்மிடம் கண காசிருக்கு, இல்லையா?”

“உனக்கு வேணுமா, தில்லை ?”.

“எனக்கு வேணாம்: கணகாசிருந்தா குடிக்க வேணுமா?…”

அப்பா திகைத்துப் போவார். அவரால் எதுவுமே பேசமுடியாது: தில்வையைக் கண்ணிமைக்காது பார்ப்பார். பின் பக்கத்தில் அழைத்துக் கொள்வார்.

“தில்லை…”

“…ம்…”

“நீ பெரியவனானனும் குடிப்பாயா?”

“சீச்சீ! பாராவது குடிப்பார்களோ?” என முகத்தைச் சுழித்துக் கொள்வான், அதைக் கண்டு அவன் அப்பா அவனைக் கொஞ்சுவார்.

அவனுக்கு வெட்கமாக இருக்கும். வளர்ந்தவர்களைக் கொஞ்சலாமோ? லீலாவைக் கொஞ்சலாம்!

அவன் மீது அப்பாவுக்கு உயிர். அத்தகைய அப்பாதான் இன்று அவனை அடித்து விட்டார். அவர் அடித்ததற்காக அவன் என்றும் துக்கப்பட்டதில்லை, ஆனால் காரணமில்லாமல் அடித்துவிட்டார் என எண்ணினான்.

“என்னைக் கள்ளர் துரத்தியது, என் தவறே? ஆனால், மாமா வீட்டிலிருந்து இரவிலே சொல்லாமற் கொள்ளாமல் புறப்பட்டது தவறு தான்’ எனச் சமாதானம் கூறிக்கொண்டான்:

குடிமயக்கம் தீர்ந்த பின் அவன் அப்பா அன்பாகத்தான் இருந்தார். எனினும் அவன் மனதில் எஞ்சிநின்ற அந்தக் கேள்விக்குறி, கொக்கி போட்டு அவன் மனதை இழுத்தது. அதற்குரிய விடை அவன் தகப்பனிடம் தான் இருந்தது.

“இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று தகப்பனிடம் கேட்க அவனுக்குத் துணிவில்லை. ஆனால் அந்தக் கேள்விக்குரிய விட்ட இரு நாட்களின் பின் அவனுக்குத் தெரிந்தது.

உடையார் வீட்டில் கண்வர் திட்டமிட்ட படி திருட வரவில்லை. மாணிக்கச் சித்தப்பா உடையார் வீட்டில் வீரர்களுடன் இரவு முழுவதும் காவலிருந்ததுதான் மிச்சம்.

அடுத்தநாள் மாணிக்கச் சித்தப்பாவைக் காணத் தில்லை ஓடிவந்தான்.

“தில்லை! அக்கள்ளர் பேசியதை நீ நன்றாகக் கேட்டாயா?”

“நன்றாகக் கேட்டேன், சித்தப்பா! என்னை நீங்கள் நம்பவில்லையா?”

“நம்புகிறேன், தில்லை…! நாம் அவர்களைப் பிடிக்கத் தயாராக இருந்ததை அவர்கள் எப்படியோ அறிந்திருக்க வேண்டும்! அதுதான் திட்டப்படி வரவில்லை…திட்டத்கை மாற்றிக் கொண்டார்..”

மாணிக்கச் சித்தப்பா சிறிது சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, தில்லையை நிமிர்ந்து பார்த்தார்.

“தில்லை? நீ எனக்குக் கூறியவற்றை வேறு போருக்காவது கூறினாயா?”

ஆமாம், அவன் கூறியிருக்கிறானே? அவனுடைய அப்பா அடித்தபோது உண்மைகளையெல் லாம் சொல்லியிருக்கிறானே?

“ஐயாவிற்கு மட்டும் கூறினேன்!” என்று தொடங்கித் தன்னை அப்பா அடித்ததையும், தான் எல்லாவற்றையும் கூறியதையும் கூறினான்.

“நான் கூறாமல் இருக்க இவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று நான் எண்ணினேன், சித்தப்பா!” என்றான், தில்லை.

“அதையே தான் நானும் எண்ணுகிறேன், தில்லை!” என்று சித்தப்பா பலத்த சிந்தனையிலாழ்ந்தார். தில்லையின் அப்பாவிற்கு அவன் கூறாமல் இதெல்லாம் எப்படித் தெரிந்தது? ஒரு வேளை? சித்தப்பாவின் முகமாற்றத்தைக் கண்ட தில்லைக்கு ஏதோ ஒருவித பயம் எழுந்தது.

அவனால் நினைக்கவே முடியவில்லை. சிறுவனது அடி மனதில் என்றோ மாணிக்கச் சித்தப்பா ‘வெள்ளை வேட்டிக் கள்ளர்’ என்று கூறியது நினைவு வரவே, அவனுடல் பதறியது.

“சித்தப்பா!…” எனக் கண்ணீர் ததும்ப அழைத்தான்.

7. தந்தத்திற் செய்த யானை

உடையார் சுப்பிரமணியம் ஒரு பெரிய மனிதர். வண்ணார்பண்ணை மக்களுக்கு அவரிடம் தனியான அன்பு. எந்த விசயமாக இருந்தாலும் அவரிடம் யோசனை கேட்டுவிட்டு..செய்வார்கள். அவருடைய நல்ல குணத்தினால் ஏராளமான செல்வம் அவரிடமிருந்தது.

அவருடைய வீடு பெரிய ஒரு மாளிகை. அக்கால வீடுகள் போலத் தாழ்ந்த தாழ்வாரத்தையும், வெளிச்சாலையையும், தலைவாயிலையும் உடைய எட்டுச்சாரம் வீடு. அந்த வீட்டிலே விலையுயர்ந்த பல பொருட்கள் நிறைந்திருந்தன. மேசை கதிரைகள் உயர்ந்த கருங்காலிகளால் செய்யப்பட்டிருந்தன.

அவருடைய மாளிகையின் வெளிக்கதவைத் திறந்துகொண்டு மாணிக்கச் சித்தப்பாவும், தில்லையும் உள்ளே சென்றனர்.

தில்லை பலமுறை அவ்வீட்டிற்கு வந்திருக்கின்றான். பெரியவரோடு பேசியுமுள்ளான். அவருடைய சிவப்புக்குதிரையைப் பார்ப்பதென்றால் இவனுக்கு மிகுந்த ஆசை.

தலைவாசலில் ‘ஈசிச்சியரி’ல் படுத்திருந்த உடையார் இவர்களை எழுந்து மகிழ்வோடு வரவேற்றார். வயது ஐம்பதிற்கு மேல் இருக்கும் என்றாலும் அவருடல் வலு இன்னும் குறையவில்லை. குதிரைச் சவாரி செய்து செய்து அவருடல் கட்டுக்குலையாமல் இருந்தது.

சித்தப்பாவும், தில்லையும் கதிரைகளில் அமர்ந்து கொண்டனர்.

“இவனை உங்களுக்குத்தெரியுந்தானே? உங்கள் வீட்டில் கள்ளர் கண்போட்டிருப்பதை அறிவித்தவன் இவன் தான்! இவனைப் பார்க்க வேண்டுமான்றீர்கள்! கூட்டி வந்திருக்கிறேன்!” என்று மாணிக்கச் சித்தப்பா தில்லையைச் சுட்டிக்காட்டிக் கூறினார்:

உடையார் மகிழ்ச்சியோடு ஏதேதோ கூறினார். சித்தப்பாவும், அவரும் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அவையெல்லாம் தில்லையின் காதுகளில் ஏறவில்லை. சற்று முன் வீட்டில் மாணிக்கச்சித்தப்பா தனக்குச் சமாதானம் கூறியதை எண்ணிப் பார்த்தான்.

‘தில்லை! நீயேன் கண்கலங்குகிறாய், என்று எனக்குத்தெரியும் அப்படியொன்றும் நீ நினைப்பது போல இருக்காது? பயப்படாதே. உள் அப்பாவை நான் நன்கறிவேன்! அவர் இப்படித் தவறான வழியில் போகக்கூடிய வரல்லர்! எதற்கும் அன்றிரவு நடந்தவை அவருக்கு எப்படித் தெரியும் என்று பக்குவமாக விசாரித்துப் பார்க்கின்றேன்! பயப்படாதே…!’

சித்தப்பாவின் ஆறுதல் மொழி அவனுக்குப் புதுத் தெம்பையளித்தது.

‘சித்தப்பா! அவரிடம் விசாரிக்கும்போது கவனமாக விசாரியுங்கள்! அவர் குடித்துவிட்டு இருக்கேக்கை போய்க் கேட்டுவிடாதீர்கள்!’ என்றான்.

“தம்பி! நீ எத்தனையாம் வகுப்புப் படிக்கறாய்?” என்று உடையார் கேட்ட குரல் கேட்டுத் திரும்பி அவரைப்பார்த்தான் தில்லை.

‘எட்டாம் வகுப்பு!’ என்று கூறினாள்.

‘கெட்டிக்காரன்! என்ன இருந்தாலும் எனக்கு நீ பெரிய உதவி செய்திருக்கிறாய். நீ மட்டும் கூறாதிருந்தால் இன்று நான் ஓட்டாண்டியாக றோட்டில் நின்றிருப்பேன்!’ என்று அவர் அவனைப் புகழவே அவனுக்கு வெட்கமாகிவிட்டது: தலையைக் குனிந்து கொண்டான்.

‘ஐயா, நீங்க இனியும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்! ஒருக்காத்திட்டம் போட்ட கள்ளர் மறுபடியும் முயலலாம், கவனம்!’ என்றார் மாணிக்கச் சித்தப்பா.

‘ஓம், தம்பி! நீ கூறுவது சரி! நான் மூன்று காவல்காரரைப் போட்டிருக்கிறேன்! என்னிடம் துப்பாக்கியுமிருக்கு’ என்றவர் தொடர்ந் தார்; ‘தம்பி, மாணிக்கம்! நீயும் கொஞ்சம் இந்தப்பக்கம் இரவிலே வா…’

சித்தப்பா ஒப்புக்கொண்டார்: தில்லையின் மனம் ஒரு நிலையில்லாது தவித்துக் கொண்டிருந்தது. சிவப்புக்குதிரை தூரத்தில் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு எழுந்திருந்தான். எழுந்தவன் கண்கள் சுவர் மாடத்தில் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளின் மீது பதிந்து அப்படியே நின்றன,

அது தந்தத்தாற் செய்யப்பட்ட ஒருயானைப் பொம்மை. வளவனப்பான அதன் நந்தவுடன் மினுமினுத்தக, துதிக்கையைப் பிலிறுவது போல உயர்த்தியிரந்தர அதன் சிறிய கண்களில் மணிகள் இரண்டு பதித்திருந்தார்கள். யானையை உற்றுப் பார்த்தான். அதன் ஒரு உடைந்து காணப்பட்டது.

தில்லையின் கண்கள் அந்தத் தந்த யானையின் மேற்பதிந்திருப்பதைக் கவனித்த உடையார் ‘தம்பி! உனக்கு வேணுமா? நீ செய்த உதவிக்கு இதைத் தந்தால் என்ன?’ என்று வினாவினார்.

“பெரியவர்கள் விரும்பித் தருவதைத் தட்டாது வாங்க வேண்டும்’ என்று அவன் அம்மா கூறியிருக்கிறாள். அதே அம்மா இன்னொன்றையும் அவனுக்குக் கூறியிருக்கிறாள். ‘ஒரு உதவியைச் செய்துவிட்டு அதற்கு விலையாக ஒன்றையும் வாங்கக்கூடாது’ என்று.

‘வேண்டாம், ஐபா!’ என்றான் தில்லை.

அதன்பின் இருவரும் விடைபெற்றுத் திரும்பினர். வீடு திரும்பும்போது தில்லை, மாணிக்கச் சித்தப்பாவிடம் கேட்டான்.

‘சித்தப்பா! எனக்கு ஒரு விடயம் தெரிய வேண்டும்! என் ஐயாவவிற்கு நான் கூறாமல், என்னைக் கள்ளர் தூரத்தியது எப்படி தெரிந்தது என்று?’

மாணிக்கச் சித்தப்பா விசாரித்துக் கூறுவதாக ஒப்புக்கொண்டார். அவர் விசாரிக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாமலேயே அந்தவுண்மை வலியத் தெளிவாகவிடவேண்டிய நிலைமை மறுநாள் ஏற்பட்டது.

8. உடையார் வீட்டில் களவு

அன்றிரவு முழுவதும் தில்லையால் தூங்க முடியவில்லை. அவன் மனதில் பல கேள்விகள் தோன்றிக் குழப்பிக்கொண்டிருந்தன. அவனை ஒரேயொரு எண்ணம் தான் பெரிதும் வருத்தியது. அவனுடைய தகப்பனாருக்கும் கள்ளருக்கும் ஏதாவது தொடர்புன்டோ? என்பது தான். அப்படி எண்ணுவதே வேதனையாக இருந்தது. அப்புடி இருக்கக் கூடாது எனக் கடவுளை வேண்டிக் கொண்டான்: உன்மையான கள்ளரைக்கண்டு பிடித்துக் கொடுத்து அவர்களுக்கும் தகப்பனுக்கும் ஒருவித உறவுமில்லை என்பது தெரிந்தால் தான் அவன் மனம் சாந்தி அடையும்.

மனம் குழம்பியபடி உறங்கிப் போனான்.

வழக்கப்படியே அதிகாலையே படுக்கையை விட்டு எழுந்து விட்டான். தாயார் அடுக்களையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். தகப்பனார் மண்வெட்டியால் தென்னம்பிள்ளை களுக்கு வாய்க்கால் கட்டிக்கொண்டிருந்தார். லீலா இன்னமும் நித்திரைவிட்டு எழுந்திருக்கவில்லை. பல் விளக்கக்கரியைக் கையில் எடுத்துக் கொண்டு, கிணற்றடிக்கு புறப்பட்டபோது பட லையைத் திறந்து கொண்டு மாணிக்கச் சித்தப்பா வந்தார்.

“தில்லை..தில்லை.”

“என்ன சித்தப்பா?”

“உனக்குவிசயம் தெரியுமா? ஆனைக்கோட்டைக் கந்தப்பனும் அவன் ஆட்களும் திட்டமிட்டபடி செய்திட்டான்கள். உடையார் வீட்டில் இராத்திரி, ஒரு சாமானும் விடாமல் களவெடுத் திட்டாக்கள்.”

தில்லை திகைத்துப் போனான்.

“சித்தப்பா, காவற்காரர்..?”

“அடித்துப்போட்டுவிட்டான்கள்.”

“உடையாருக்கு ஒன்றுமில்லையே?”

“இல்லை. அவரைக் கட்டிப் போட்டுவிட்டான்கள்.”

மாணிக்கச் சித்தப்பா குரல் கேட்டு அப்பா வந்தார்.

“என்ன உடையார் வீட்டில் களவா?” என்று சந்தேகத்தோடு கேட்டார். சித்தப்பா கவலையோடு தலையை ஆட்டினார்.

“எனக்கு இது நடக்குமென்டு தெரியும்.” என்றார் தில்லையின் அப்பா.

“எது நடக்குபென்?…”

“உனக்குச் சொன்னா என்ன? அண்டைக்குப் பார் தம்பி, அது தான் தில்லையைக் கள்ளர் துரத்திய அன்றைக்கு அடுத்த நாள் காலை, நான் கொட்டிலுக்குச் சென்றிருந்தேன். எதுக் கெண்டு தெரியந்தானே? அங்கை வேலிக்கு அங்கால இருந்து சிலர் பேசிக்கொண்டது எனக்குக் கேட்டது…” என்று கூறிய அப்பா வாய்க் காலைக் சட்டத்தொடங்கினார். மாணிக்கச் சித்தப்பா கேட்டார்:

“என்ன பேசிக்கொண்டார்கள்?”

“ஒரு பொடியனை சென்றவிரவு தாங்கள் துரத்தியதாகவும் அவன் தப்பி ஓடி விட்டதாகவும் கதைத்துக்கொண்டார்கள். அத்தோடு தாங்கள் போட்ட திட்டத்தை அவன் கேட்டிருப்பானோ என்றும் கூறிக்கொண்டார்கள். அவற்றைக் கேட்க எனக்குத் திக்கென்றது. எனக்து ஒன்றையும் அவன் கூறவில்லையே என்று ஆத்திரத்தோடு ஒடி இந்தேன்” என்று மகனை அன்போடு பார்த்தார். தில்லைக்குத் தந்தையின் அடிகள் நினைவு வந்தன.

“நீங்கள் கதைத்தவர்களைப் பார்க்க வில்லையா?”

“இல்லை மாணிக்கம். எனக்கும் நல்ல வெறி, ஒன்றுந் தெரியவில்லை. போய் இரு தம்பி. இதோ வந்திட்டன்.”

தில்லை, சித்தப்பாவைக் கூட்டிக்கொண்டு சென்றான். உடையார் வீட்டில் களவு போனது அவனுக்குத் துயரத்தைக் கொடுத்தாலும், அவனுள்ளத்தில் இரவு பகலாக வருத்திய கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. மகிழ்ச்சி அளித்தது.

“இப்ப என்ன நினைக்கிறிடள் சித்தப்பா..! ஐயா நல்லவர்” என்றான். அவன் எதைக் கருதிக்கேட்கிறான் என்பதைச் சித்தப்பா புரிந்து கொண்டார்.

“தில்லை”

“என்ன சித்தப்பா?”

“ஆனைக்கோட்டைக் கந்தப்பனையும் கூட்டத்தினரையையும் எப்படியாவது பிடிக்க வேண்டும், என்று மேலிடத்து உத்தரவு. எப்படியாவது அவர்களைப்பிடித்தே ஆக வேண்டும்”.

“நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் சித்தப்பா..”

மாணிக்கச் சித்தப்பா சிரித்தார்.

“நீ இதிலெலாம் ஈடுபடக்கூடாது. முதலில் கவனமாகப் படித்து முன்னேற வேண்டும். பிறகு தான் இதெல்லாம்..”

அதன் பின்னர் மாணிக்கச் சித்தப்பா கள்வரைப்பிடிப்பதில் கூடிய கவனம் எடுத்தார், சந்தேகப்பட்டவர்கள் எல்லாரையும் விசாரித்தார். ஒரு மாதம் கழிந்தது. தில்லைக்கும் பாடசாலை விடுமுறைவிட்டார்கள். விடுமுறைவிட்ட அன்று மாலையே தில்லை, மாமா வீட்டிற்குப் போனான். மாமா வீட்டிற்கு வந்தவனை அவன் மச்சான் முத்தையா வைத்திருந்த ஒரு பொருள் திடுக்கிடவைத்தது.

9. மாமா வீட்டில்….?

ஆனைக்கோட்டைக்குச் செல்லும் விதி பிற்கால் பதித்து நடக்கும்போது அவனுக்குப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. நேரம் மாலை நான்கு மணி. மாமா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த தில் மலயின் முகத்தில் சாய்ந்த கதிரகனின் மஞ்சட் கதிர்கள் படிந்தன. வீதியின் இரு மருங்கிலும் வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் நிழல்கள் கிழக்கே நீண்டிருந்தன. அன்றிரவு அவன் மறைந்து ஒளிந்திருந்த ஐயனார் கோவில் ஆலமரத்தைக் கடந்தபோது அவானயறியாமல் அவன் கால்கள் நின்று தயங்கின.

சோம்பயன் மணற் சுடலையைக் கடக்கும் போது, சற்று நின்று தான் நடந்து கடந்து வந்த மண் வீதியைப் பார்த்தான். சித்த வீதியிலே கள்ளரால் துரத்தப்பட்டுத் தான் ஓடிய நிகழ்ச்சியை எண்ணிக்கொண்டான், கள்ளர் கூடியிருந்த ஆறுகால் மடத்தைக்கண்டதும் அவன் கால்கள் அவனை பறியாமலேயே தயங்கின. மகாபயங்கர இரவு தான் அது.

மாமா வீடு நோக்கி நடந்தான், மாமா வீட்டிவில்லை. வெளியே போனவர் இன்னும் வரவில்லை. மச்சானும் பக்கத்து விட் டுக்கு விளையாடப்போய்த்தான். மாமி நான் இருந்தாள். தில்லையைக் கண்டதும் அன்போடு வரவேற்றாள்.

“மாமி! மச்சான் எங்கே?”

“விளையாடப் போனான்: போய்க்கூட்டிக் கொண்டுவாவேன்!” என்றாள் மாமி. முத்தையாவைக் கூட்டிவர அவன் எழுந்தபோது, தகரப்படலையை அறைந்து சாத்திக்கொண்டு முத்தையா ஓடிவந்தான்.

“அட, தில்லை மச்சான்! இப்பத்தான் வாறியா?” எனக் கேட்டான். தில்லை தலையை ஆட்டினான்,

“இருந்து கொள்! உனக்கு நானொரு சாமான் வைத்திருக்கிறேன்!” என்று உள்ள ஓடியன் திரும்பி வந்தான். அவன் கையிலே –

தில்லை கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். அவன் காண்பது உண்மை தான். உடையார் வீட்டு மாடத்திலே பார்த்த அந்த தந்த யானை! ‘உனக்கு வேணுமா?’ என உடையார் கேட்கக்காரணமாக இருக்க அந்த யானை மினு மினுத்த உடல்! மணிர் கண்கன்! பிலிறும் நிலையில் துதிக்கை. தில்லை அதன் தத்தங்களைப் பார்த்தான் ஓரதந்தம் உடைந்திருந்தது. உடையார் வீட்டில் களவு போன பானை இங்கு எப்ப வந்தது? அவனுக்கு அடிவயிற்றில் ஏதா செய்தது.

“என்னடா திகைச்சிட்டாய்?” என முத்தையா அவனை உலுக்கினான் : தில்லை சமாளித்துக்கொண்டான்.

“இதை உனக்கு யார் தந்தது?”

“ஐயா தந்தார்! ஏன்…?” ‘

“எப்ப…?”

“ஒரு கிழமைக்கு முன்…! இந்தா, இது உனக்குத்தான்!” என்று அந்த யாலைப்பொம்மையைத் தில்லையின் கைகளில் திணித்தான்.

முத்தையா எதைக் கொடுத்தாலும் மகிழ்வோடு வாங்கும் அவன், இன்று அந்தத் தந்தயானையை மிகுந்த அருவருட்போடு வாங்கினான். அவன் மனதில் பல சந்தேகங்கள் எழுந்தன. மாமா வீட்டிற்குள்ளும், தன் வீட்டிற்குள்ளும் ஏதோ இரகசியம் நூலிழை போல் மறைந்திருப்பதாக அவன் பிஞ்சு மனத்திற்குப்பட்டது. அவன் தனக்குள் பொருமினான்.

எங்காவது வெளியே சென்றுவந்தால் நல்லாயிருக்குமென எண்ணினான். மாமாவின் வயலுக்குப் போய்வர மச்சானும் ஒப்புக்கொண்டான்.

“பொழுது படுமூன் வந்திடுங்கள்?” என்று மாமி கூறியனுப்பினாள். வயல் வெளி வரம்பிலே நடக்கத் தொடங்கினார்கள். சூரியன் மேற்கே நன்கு சாய்த்து விட்டான். கதிர்கள் மேகத்திரையில் வர்ணக் குழம்பை வாரியிறைத்திருந்தன. நடந்து கொண்டிருந்த தில்லை, முத்தையாவைக் கேட்டான்:

“எங்கே மாமா இந்தப் பொம்மையை வாங்கினாராம்?”

“எனக்குத் தெரியாதடா? அவராத்தான் கொண்டுவந்து தந்தார்!”

இருவரும் மௌனமாகச் சிறிது தூரம் நடந்தனர்,

“அதோ … ஐயா வாறார்!” என்று கூவினான் முத்தையா. தில்லை அவன் காட்டிய பக்கமாகப் பார்த்தான். மாமாவும் இன்னொருத்தனும் வந்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள், அவர்களை நெருங்கியபோது தில்லை திரும்பவும் திடுக்கிட நேர்ந்தது. மாமாவுடன் கூடவந்தவனைப் பார்த்தபோது அவனை எங்கோ பார்த்தது போன்ற ஒரு நினைவு அவனுள் எழுந்தது. “இவனை எங்கே எப்போது பார்த்தேன்?” என யோசித்தான். ‘ஆலமரத்தின் பருத்த வேர் போன்ற உருண்டு திரண்ட இந்த உடம்பை எங்கோ கண்டிருக்கிறேனே?’

‘ஆலமரம்’ என்று நினைவு வந்ததும் அவன் யாரென்று அவனுக்குத் தெரிந்து விட்டது. இவனுக்கும் மாமாவிற்கும் என்ன சம்பந்தம்?

‘தில்லை! எப்ப வந்தாய்?’ என மாமா அழைத்தார்.

10. நாளைக்கு வருவாய்

விடுமுறை நாட்களில் பெரும் பகுதியைத் தில்லை மாமா வீட்டிலேயே கழிப்பான். மாமா வீட்டிலுள்ளோர் அவன் மீது வைத்திருந்த அன்பு அவனை அங்கே காந்தமென இழுத்தது. ஆனால் இம்முறை விடுமுறையைக் கழிக்க அவன் மாமா வீட்டிற்குச் சென்றிருந்த போதிலும், வழக்கம் போல் பல நாட்கள் அங்கு தங்கவில்லை. பழைய நிலையில் என்றால் அவன் தங்கியிருப்பான். ஆனால், அவன் மனம் ஒரு நிலையில் இல்லாது குழம்பித் தவித்தாலும், விடைகாணாத சில சந்தேகங்களை மனதில் திரையிட்டதாலும் அவனால் மாமா வீட்டில் இருக்க முடியவில்லை. வந்த மூன்றாம் நாளே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டான். மாமா மாமி மச்சான், எவ்வளவு தடுத்தும் ஏதோ சாக்குப். போக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.

வீட்டிற்கு வந்தவன் தேரே மாணிக்கச் சித்தப்பாவிடம் ஓடிச் சென்றான். அவர் வீட்டிலில்லை. வெளியே சென்றுவிட்டதாக அறிந்தான். ஏமாற்றத்தோடு வீட்டிற்குத் திரும்பினான்.

அன்ற பின்னேரம் – சித்தப்பாவை வீட்டில் சந்தித்தான்.

‘எப்போது மாமா வீட்டில் இருந்து வந்தாய்?’ எனச்சித்தப்பா வினவினார்.

‘காலமை, வந்தனான் சித்தப்பா! இங்கே உங்களைத் தேடி வந்தேன்! நீங்கள் இல்லை. அதுசரி சித்தப்பா! உடையார் வீட்டுக் களவு விடயமாக ஆரையாவது பிடித்து விட்டீர்களா?’…

சித்தப்பா சிரித்தார்:

‘பிடித்திருந்தால் உனக்குத் தெரிந்திருக் காதா?’ என்றார். பின் தொடர்ந்தார்: ‘தில்லை, காலை வந்ததும் என் கனத்தேடி ஏன் வந்தாய்? ஏதாவது முக்கியவிடயமா?…..!’

தில்லை சிறிது யோசனையிலாழ்ந்தான்: மாமா வீட்டில் உடையார் வீட்டுத்தந்த யானை இருந்ததையும், வயலில் தன்னைத் துரத்திய கள்ளனை மாமாவுடன் கண்டதையும் கூறுவதா வேண்டாமா என்று யோசித்தான். தான் அவற்றைக் கூறுவதால் மாமாவிற்கு ஏதாவது நடந்து விட்டால்…? எனினும் சித்தப்பாவிடம் எல்லாவற்றையும் கூறிப் பரிகாரம் கேட்பது நல்லது என முடிவு செய்து கொண்ட தில்லை, எல்லாவற்றையும் விபரமாகக் கூறினான்.

மாணிக்கச் சித்தப்பா திகைத்தது போல அவனுக்குப் பட்டது, சித்தப்பா எதுவும் கூறாது சிந்தனையிலாழ்ந்ததைக் கண்ட தில்லை சற்று அச்சமடைந்தான்.

‘சித்தப்பா! மாமாவிற்கு அந்தயானை எப்படிக் கிடைத்தது?’

மாணிக்கச் சித்தப்பா கூறியது சரிபோலவே அவனுக்குப்பட்டது. யாராவது கள்ளர் விற்க, மாமா ஏமாந்து போய் வாங்கியிருக்கலாந் தானே? அப்படியானால் மாமாவிற்கும், அவனைத் துரத்திய அந்த முரடனுக்கும் என்ன சம்பந்தம்? இதை அவன் சித்தப்பாவிடம் கேட்டான்,

‘தில்லை! இது வேறு யாராகவும் இருக்கலாம் அல்லவா? ஒருவரைப்போல இன்னொருவர் இருப்பதில்லையா?’ என்றார், மாணிக்கச் சித்தப்பா.

அவனுக்கும் அது சரியாகவே தெரிந்தது. எனினும் இனந்தெரியாத ஒரு வேதனை அவனுள் இருந்து கொண்டே இருந்தது. அதனை நீக்க அவனால் முடியவில்லை,

சித்தப்பா வெளியே போகப் புறப்பட்டார். தன்னுடைய துப்பாக்கியையும் தோளில் மாட்டிக்கொண்டார், எல்லா வேளைகளிலும் மாணிக்கச் சித்தப்பா துட்பாக்கியை வெளியே கொண்டு செல்வதில்லை. இன்று மட்டுமேன்….?

‘சித்தப்பா! துவக்கோடு எங்கு வெளிக்கிடு கிறியள்!’. ஒருவர் வெளியே புறப்படும் போது ‘எங்கே போகிறீர்கள்’ என்று கேட்கக்கூடாது என்பது அவனுக்குத் தெரியும் என்றாலும் கேட்டுவிட்டான்.

சித்தப்பா அவனுக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார்.

“இன்றிரவு ஒரு முக்கியவேலை இருக்கிறது தில்லை! ஒருவருக்கும் கூறிவிடாதே! இன்றிரவு ஆனைக்கோட்டைக் கந்தப்பனையும், கள்ளர்களையும் பிடிக்கப்போகின்றோம்!’

‘எப்படிச் சித்தப்பா..?’

“தில்லை… இன்றிரவு முதலியார் கனகரத்தினம் வீட்டில், களவெடுக்கப்போகிறார்கள்! அங்கு அவர்களை வளைத்துப் பிடிக்கப் போகின்றோம் பிடிபடாத பட்சத்தில் துப்பாக்கிக்கு இரையாகப் போகின்றோம்!’

‘முதலியார் வீட்டில் களவெடுக்கப் போவது உங்களுக்கு எப்படித் தெரியும்’

‘எப்படித் தெரியும் என்று பிறகு கூறுகிறேன்! எனக்கு நேரமாகிவிட்டது! நீ வீட்டிற்குப் போ…நாளைக்கு நீயே என்னைத் தேடி வருவாய்!…’

ஆம், அவன் அடுத்த நாள் மாணிக்கச்சித்தப்பாவை தேடி ஓடினான், ஆனால், அவன் என்றும் செல்லும் தில்லையாகவன்று, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்ட அனாதைபோல மாணிக்கச் சித்தப்பாவைத் தேடி ஓடினான்,

11. தில்லை அழுதான்!

வைகறை மங்கற் பொழுது. கதிரவன் இன் னும் தன் ஒளிக்கதிர்களை நன்றாக நீட்ட வில்லை. வாடைக்காற்றின் மெல்லிய வருடலால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை யாரோ விசும்பியழும் சத்தம் விழித்துக்கொள்ள வைத்தது. பதறிப்போய் எழுந்தவன், சுற்று முற்றும் பார்த்தான். தலை வாயிலிருந்து விசும்பல் ஒலி வந்து கொண்டிருந்தது. எழுத்து வந்தான்.

தந்தை தலைமேற் கை வைத்தபடி இருப்பதையும் தாயார் அழுது கொண்டிருப்பதையும் பார்த்ததில்லை. முதலிற் பதறிப் போனான் லீலாவிற்குத் தான் ஏதாவதோ…?

‘அம்மா..’

அம்மா திரும்பினாள்; தில்லையைக் கட்டிக் கொண்டு விம்மியழத் தொடங்கினாள். தந்தை தலையை நிமிர்த்தவில்லை.

*என்னம்மா, நடந்தது? கூறேன்’ என்று தாயை உலுப்பினான்.

‘எப்படியடா கூறுவேன். தில்லை! உன் மாமாவை இராத்திரி….’

‘என்னம்மா’

‘பிடித்துக் கொண்டு போட்டாங்களாம். போட்டாங்களாம்!’ என்றபடி அழத் தொடங்கினாள். தில்லையின் தேசம் ‘வெட வெட’ வென நடுங்கியது, அவனுள் பிரளயமே நிகழ்ந்தது. ‘மாணிக்கச் சித்தப்பா! மோசம் செய்து விட்டீர்களா?’ என்று அவனிதயம் ஓலமிட்டது. படலையைத் திறந்து கொண்டு வெறி கொண்டவன் போல் ஓடினான்; மாணிக்கச் சித்தப்பாவின் வீட்டை நோக்கி ஓடினான்.

சித்தப்பா வீட்டின் வெளித் திண்ணையில் இருந்தார். யாரையோ எதிர்பார்த்தவர் போலக் காணப்பட்டார். படலையை வேகமாகத் திறந்து கொண்டு, தில்லை ஓடிவந்தான்.

‘சித்தப்பா’ என அலறினான் சித்தப்பா திண்ணையிலிருந்து விருட்டென்று எழுந்தார். ‘படீ’ எனத் தலையில் மேல்வளை இடித்தது.

‘கள்ளர் எல்லாரையும் இராத்திரிப் பிடித்த விட்டோம். தில்லை! ஆனைக்கோட்டைக் கந்தப்பன் என்ற அந்த வெள்ளை வேட்டிக்கள்ளனும் பிடிபட்டு விட்டான்! ஆனால்…’

‘அந்த வெள்ளை வேட்டிக் கள்ளன் உன் மாமா எனக் கூற ஏன் தயங்குகிறீர்கள்? நீங்கள் செய்தது மோசம்! துரோகம்!’ என்று தில்லை கதறினான். அவன் கண்கள் பொல பொல வென நீரைச்சொரிந்தன. அதைக் காண சித்தப்பாவிற்கு வேதனையாக இருந்தது. அவர் கண்களும் கலங்கின.

‘தில்லை! நீ புத்திசாலி! நீயா இப்படி அழுகிறாய்? ஒருவன் செய்த குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்?’

தில்லை நிமிர்ந்தான். ‘மாமா என்ன குற்றம் செய்தார்?’

‘என்ன குற்றமென்று கேட்கிறாயா, தில்லை? சுருக்கமாகக் கூறில் ஒரு கள்ளர் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தது எவ்வளவு குற்றம்?’

‘எதைக் கொண்டு அவரைக் கைது செய்தீர்கள்?’ என்று அழுகையோடு கேட்டான் தில்லை. சொற்கள் குழறின.

‘தில்லை, காரணங்களும், ஆதாரங்களும் பலவுள்ளன! உடையார் வீட்டில் களவு போன பொருட்களில் ஒன்றான தந்த யானைப் பொம்மை உன் மாமா வீட்டில் இருக்கின்றது!’

‘சித்தப்பா! இது அபந்தம்! இதைக் கொண்டு அவரை ஓரு போதும் கைதாக்க முடியாது! இந்த யானைப் பொம்மையை அவர் யாரிடமிருந்தாவது வாங்கியிருக்கலாந் தானே?’ என வீரிட்டான் தில்லை;

‘அப்படித்தான் நானும் முதலில் எண்ணினேன். தில்லை! ஆனால் கள்ளருக்கும் அவருக்கும் சம்பந்தமிருக்கிறது என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சியும் சாட்சியாகின்றது! உன்னைத் துரத்திய கள்ளனை நீ மாமாவுடன் கண்டிருக்கின்றாய்?’

தில்லை விம்மலை நிறுத்தினான்.

‘ஒருவரைப்போல இன்னொருத்தர் இருப்ப தில்லையா சித்தப்பா!’

தில்லை தான் சொன்னவற்றைத் தனக்குக் திருப்பிக் கூறிகிறான் என்பதை மாணிக்கச் சித்தப்பா உணர்ந்து கொண்டார்.

‘அப்படியுமிருக்கலாம். தில்லை நினைப்பது போலவே, தந்த யானையை உன் மாமா யாரிடமாவது வாங்கியிருக்கலாம்! நீ கண்ட கள்ளன் வேறு யாராவதாகவும் இருக்கலாம்! ஆனால் நானே என் கண்களாற் கண்ட ஒரு நிகழ்ச்சி இருக்கிறதே? அச்சந்தர்ப்பத்தில் நான் கேட்ட செய்தி ஒருவராலும் மறுக்க முடியாது’

அது என்ன என்பது போலத் தில்லை ஊன்றிப் பார்த்தான், சித்தப்பா தொடர்ந்தார்;

12. முறிந்த தந்தம்!

மாணிக்கச் சித்தப்பா தொடர்ந்து கூறிக் கொண்டே வந்தார். தில்லை கண்கள் நீரைச் சொரியக்கேட்டான்.

‘உடையார் வீட்டில் களவு போனபின் கள்ளரைப்பிடிப்பதில் நான் மும்முரமாக ஈடுபட் டேன். எங்களைக் கட்டிப்போட்ட ஆறுகால் மடத்தின் பக்கம் என் பார்வை அதிகமிருந்தது நானும் வேறுசில ஊர்க்காவலரும் அடிக்கடி இரவு வேளைகளில் அம்மடம் பக்கம் திரிந்தோம்.

நாம் எதிர் பார்த்த படி அவர்கள் அம்மடத்தில் கூடவில்லை! ஒரு நாள் கோம்பயன் மணல் சுடலைக்குள்ளிருந்த மடத்தில் சிலர் கூடியிருப்பதைக் கண்டோம்! எல்லாரையும் வெளியே நிறுத்திவிட்டு நான் மட்டும் அவர்கள் கதைப்பதைப் ஓட்டுக்கேட்கப் போனேன்! சுடலையில் வளர்ந்திருந்த பாரிய மரங்கள் நான் மறைந்து மறைந்து அவர்கள் இருந்த மடத்தை நெருங்க உதவின. அவர்கள் பேசியவற்றை எல்லாம் ஒட்டுக் கேட்டேன்! அவற்றிலிருந்து தெரிந்தது முதலியார் கனகரத்தினம் வீட்டில் கொள்ளையிடுவது அவர்களது அடுத்த திட்டமென! அரை மணி நேரம் வரை மறைந்திருந்தேன்!…. இருந்தாற்போல ஒருவன் பேசினான், ‘அண்டைக்கு நான் துரத்தினன்ரா ஒரு பொடியனை…? அந்தப் பொடியன் தம்மடை கந்தப்பற்றை மருமோனாம்!’ என, இதைக் கேட்ட தான் திடுக்கிட்டேன்! அன்று துரத்தப் பட்ட பொடியன் நீ! நீ மருமகன் என்றால் கந்தப்பன் யார்? உன் மாமா தானே? கூறு தில்லை…?’

தில்லை ஒன்றும் பேசாதிருந்தான். சித்தப்பாவே தொடர்ந்தார்.

இதைக் கேட்ட பின்பு கூட. உன் மாமா மேல் சந்தேகப்படத் தயச்சமாக இருந்தது. ஆனால் அத்தயக்கத்தை நீ கூறிய இரு விஷங்கள் தீர்த்தன! ஒன்று உடையார் வீட்டில் சளவு போன தந்த யானை உன் மாமா விட்டில் இருந்தது! மற்றது உன்னைத் துரத்திய கள்ளன் மாமாவோடு பேசியது…! இவ்வளவும் உன் மாமாவிற்குப் பாதகமாக நின்றன! அதன் பிறகும் நான் என் கடமையைச் செய்யாதிருக்க முடியுமா? உன் மாமாவைக் கைது செய்து, வீட்டைக் சோதனை போட்டதில், பலர் வீட்டில் களவு போன நகைகள் அகப்பட்டன! அதுமட்டுமன்று…. கள்ளர் எல்லாரோடும் வைத்து விசாரித்த போது தான் ஆனைக்கோட்டைக் கந்தப்பன் என்பதையும் ஒப்பு கொண்டு விட்டார்…!’

‘மாமாவே ஒப்புக் கொண்டாரா?’

‘ஆம்மாம், தில்லை!’

தில்லை பழையபடி ‘விக்கி விக்கி’ அழத் தொடங்கினான்.

“நீங்கள் மாமா குடும்பத்தைச் சீர்குலைத்த விட்டீர்களே, சித்தப்பா?”

சித்தப்பா வேதனைப்பட்டார்.

‘தில்லை! உன் மாமாவால் எத்தனை குடும்பங்கள் சீர்குலைந்தன, தெரியுமா?’

வெதும்பி வெதும்பி அழும் தில்லையின் முதுகில் அன்போடு மாணிக்கச் சித்தப்பா தடவினார்.

‘தில்லை! குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்! தண்டனை என்பது அவர்களைத் திருத்துவதற்காக அளிக்கப்படுவது! உன் மாமாவை நான் கைது செய்யாதிருந்தால், அவர் செய்யும் குற்றம் மேன் மேலும் கூடிக்கொண்டே போகும்! இப்போது தான் செய்த குற்றங்களுக்காக அவர் வேதனைப்படுவார்! அந்தப் பச்சாதாபம் அவர் சிறையிலிருந்து மீண்டு வரும்போது அவரை மாற்றி விடும்! குற்றம் செய்யாத புது மனிதராக வெளி வருவார்! அழாதே, எழுந்திரு தில்லை!… உன் மாமி, மச்சானுக்கு ஆறுதல் கூறித் தேற்ற வேண்டாமா?’

தில்லை எழுந்திருந்தான். மாமியை எண்ணிய போது வேதனையாக இருந்தது.

‘போய் வாறன் சித்தப்பா’ மாணிக்கச் சித்தப்பா கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். தில்லை மாமா வீடு நோக்கி நடந்தான்,

அதோ வருவது தான் ஆறுகால்மடம். இரவு அம்மடத்தைக் கடக்க தேர்ந்ததால் தான் தன் மாமாவின் குடும்பம் தவிக்க நேர்ந்தது எனத் தில்லை எண்ணிக் கொண்டான். ஆறுகால் மடத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தால் அது எதுவும் தெரியாதது போல தூங்கி வழிந்தது.

இருந்தாற் போலத் தில்லைக்கு அந்தத் தந்த யானைப் பொம்மை நினைவு வந்தது. மினுமினுத்த உடல்! மணிக் கண்கள்! பிலிறும் நிலையில் துதிக்கை! உடைந்த ஒரு தந்தம்! அவன் கண்கள் கலங்கின! ஓரு மட்டில் அவன் வாழ்விலும் ஒரு தந்தம் உடைந்து தான் விட்டது.

தில்லை நடந்து கொண்டே இருந்தான். அவன் உள்ளம் அழுது கொண்டே இருந்தது.

(முற்றும்)

காணிக்கை:

1957 இல் இலக்கியத்தடத்தை எமக்குக்காட்டிய நல்லாசான் அமரர் வை.ஏரம்பமூர்த்தி (ஈழத்துறைவன்) அவர்களுக்கு இந்நூல் காணிக்கை – செ.ஆ.

– ஆறுகால்மடம் (சிறுவர் நாவல்), முதற்பதிப்பு: ஜனவரி 1991, ஹம்சா வெளியீடு, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *