கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 18,006 
 

அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.

‘நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்’ வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.

‘வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.

‘ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்’. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.

அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.

அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.

ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,’ ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?’.

அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.

தங்கள் வீட்டு வாசற்படியில் வந்து நின்றிருக்கும் ஆங்கிலேயப் பெண்ணுக்கு முப்பது வயதுக்கு மேலிருக்காது என்று ஞானேஸ்வரி தனக்குள் ஏன் நினைத்துக் கொண்டாள் என்று தெரியாது. ஞானேஸ்வரியின் கணவர் அருளம்பலத்திற்குப் பல வைத்திய சேவைகள் இருப்பதால் அதையொட்டிப் பல தரப்பட்ட உத்தியோகத்தர்களும் அடிக்கடி வருவது வழக்கம். அவர்களிற் பெரும்பாலோர் கிட்டத்தட்ட முப்பது நாற்பது வயதுடையவர்களாக இருப்பதை ஒரு காலத்தில் ஆசிரியையாகவிருந்த ஞானேஸ்வரி ஊகித்துக் கொண்டாள்.

வந்திருந்த பெண்மணியை வீட்டுக்குள் வரவேற்று அழைத்துச் சென்ற ஞானேஸ் அவளின் கணவர் அமர்ந்திருக்கும் முன்னறையில் அவளை அமரச் சொன்னாள். வந்திருந்த பெண்மணி அருளம்பலத்தாருக்கு,’குட்மோர்ணிங்’ சொல்லித் தன்னை அறிமுகம் செய்தபின்; தனது பைலைத் திறந்தாள்.

ஞானேஸ் வந்திருந்த உத்தியோகத்தருக்கு அருந்துவதற்கு என்ன கொடுக்கலாம் என்ற யோசனையில் கணவரிற் தனது பார்வையைச் செலுத்தினாள். வந்திருப்பவள் பட படவென்று சில பேப்பர்களை எடுத்தாள். பின்னர். துpரு. அருளம்பலத்தைப் பார்த்து, ‘மிஸ்டர் அருளம்பலம், நீங்கள் இங்கு உங்களுக்கு உதவிக்கு இங்கு வந்திருந்த வேலையாள் ஒருத்தர் உங்கள் மனைவியுடன் தேவையற்ற முறையில் பழக முயன்றதாக முறைப்பாடு செய்திருக்கிறீர்;கள். அதைப்பற்றிக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டாள் வந்திருந்த ஆங்கிலப் பெண்மணியின் தொனியில் ஒரு அழுத்தமான தொனி தெரிந்தது.

அதைக் கேட்ட ஞானேஸ்வரிக்கு மேரி டானியல் என்ற அந்த ஆங்கிலப் பெண் என்ன பேசுகிறாள் என்று தெரியவில்லை. ஞானேஸ்வரியும் அவர் கணவர் அருளம்பலமும் வயதுபோன தம்பதிகள் குழந்தைகள் கிடையாது. சொந்தக்காரர்களும் தூரத்திலிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய சோசியல் சேர்விஸ் அல்லது உள்ளு+ர் ஆட்சியிலிருந்து அவ்வப்போது முதியோர்களுக்கு உதவி செய்யும் வேலையாட்களையனுப்புவார்கள்.

அவர்கள் யாரும் தன்னிடம் ‘தேவையற்ற’முறையிற் பேசவில்லை என்று ஞானேஸ்வரிக்குத் தெரியும்.

கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவர் மனைவியைக் கவனிக்காமல், தனது தொண்டையைக் கனைத்துக் கொண்டு’ நாங்கள் உங்களை விட வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். கூலிக்கு வேலைக்கு வருபவர்கள் எங்களுக்குரிய மரியாதையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்’ என்று ஆரம்பித்தார்.

‘அதைத்தான் விசாரிக்க வந்திருக்கிறேன்.உங்களின் டாய்லெட்டைத் திருத்த வந்தவர் உங்கள் மனைவியுடன் தகாத மொழியில் பேசியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறிர்கள்.அதை விபரமாகச் சொல்ல முடியுமா?’

ஞானேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. அருளம்பலத்தார்,இருதய நோய்,நீரழிவு நோய் என்று நாற்பது வயதிலிருந்தே பல வருத்தங்களுடன் வாழ்பவர். நோய்காரணமாக அவர் எதுவும் பெரிதாகச் செய்ய முடியாததால் அவர்களுக்கு உதவி செய்யச் சிலரை அவர்கள் சோசியல் சேர்விஸில் கேட்பார்கள். அப்படி வருபவர்களில் யாரும் தன்னிடம் தேவையற்ற முறையில் பழக முயன்றதாக அவளுக்குத் தெரியாது.

வந்திருந்த பெண் ஞானேஸ்வரியைப் பார்த்து,அழகிய புன்முறுவலைத் தன்முகத்தில் தவழவிட்டாள்.ஞானேஸ்வரிக்க அவள் தன்னை ‘விசாரிக்கப் போகிறாள்’ என்று புரிந்தது. ‘எனது கணவர் சொல்வதுபோல் இங்கு எங்களுக்கு உதவி செய்ய வந்த யாரும் என்னிடம் தேவையற்ற முறையிற் பழகவில்லை’என்று சொல்ல நினைத்தவள் அதைச் சொல்லவில்லை. தேவையற்ற மொழியில் அவளுடன் யாரோ ஒருத்தர்; பழக முயன்றதாக முறைப்பாடு கொடுத்திருக்கும் கணவனின் முறைப்பாட்டை எதிர்த்து அவள் ஏதும் சொன்னால் அதன்பின் அந்த வீடு போர்க்களமாகிவிடும் என்று அவளுக்குத் தெரியும்.

ஆனாலும் அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமற் கணவரைச் சாடையாகப் பார்த்தாள். அவர் வேறு எங்கேயோ பார்ப்பதுபோல் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

வந்திருந்தபெண் தனக்கு முன்னாலிருந்த தமிழ்த் தம்பதிகளைப் பார்த்தாள். ஞானேஸ்வரி தயங்குவது அவளின் முகபாவத்திலிருந்து தெரிந்தது.அருளம்பலம், மனைவியைப் பார்க்காமல், மேரியைப் பார்த்துச் சொன்னார்,’எனது மனைவி மிகவும் சங்கோஜமான பிறவி. மனம் விட்டு எதையும் சொல்லமாட்டாள்.நான் உங்களுக்கு எழுதிய கடிததத்தில் இங்கு எங்கள் டாய்லெட்டைத் திருத்த வந்தவன் எனது மனைவியிடம் தேவையற்ற முறையில் பழகினார் அது எங்களை அவமதிப்பதாகவும் எனது மனைவிக்குக் கடும் மன உளைச்சலைத் தந்ததாகவும் எழுதியிருந்தேன்’ என்று தொடங்கினார்.

மேரி அவரின் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஞானேஸ்வரிக்கத் தன் கணவர் என்ற சொல்லத் தொடங்குகிறார் என்று சாடையாகப் புரியத் தொடங்கியது.

அவர் தொடர்ந்தர்,

‘எனது மனைவியை அவர் திருமதி அருளம்பலம் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வேலையாள் எனது மனைவியை டார்லிங் என்று அழைத்தார். நாங்கள் தமிழர்கள். எங்கள் மனைவியை டார்லிங் என்று கண்டவன் நிண்டவன் எல்லாம் கூப்பிட அனுமதிக்க மாட்டோம். அந்த வேலையாள் அப்படி அழைத்ததால் எனது மனைவி பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. நான் பல வருத்தங்களாலும் மிகவும் துன்பப்படுவன். என்னைப் பார்க்க எனது மனைவி மட்டும்தானிருக்கிறாள். அவளின் மனமும் சரியில்லாவிட்டால் எங்கள் நிலமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்’. அவர் குரல் கரகரத்தது.

கணவரின் முகபாவமும் குரலும் நடிப்பும் ஞானேஸ்வரிக்குப் புரியத் தொடங்கியது.

அவளுடன் யாரும் அன்பாகப்பேசுவது அவருக்குப் பிடிக்காது என்பது அவளுக்கு எப்போதிருந்தோ தெரியும். அவர்களின்; வீட்டு டாய்லெட் பிரச்சினை தந்தபோது அதை என்னவென்று பார்த்து உதவி செய்ய வந்த அந்த வேலைக்காரன் ஒரு மூதாட்டியை டார்லிங் என்றழைத்தது அவரின் கவுரவத்திற்து அவமானமாக இருந்ததாகச் சொல்கிறார். அவள் பேசாமலிருந்தாள்.ஞானேஸ்வரியின் மவுனம் மேரிக்குத் தர்ம சங்கடத்தையுண்டாக்கியிருக்கவேண்டும்.

‘ ஐயாம் வெரி சாரி மிஸஸ் அருளம்பலம், அந்த வேலையாள் வேண்டுமென்றே உங்களைத் தவறானமுறையில் நினைத்துக் கொண்டு அப்படிச் சொல்லி உங்களை மனவருத்தம் தந்திருந்தால் தயவு செய்து உங்கள் கைபட என்ன நடந்தது என்று எழுதித் தரவும் அதன்பின் அவரை வேலையிலிருந்து நீக்குவதா இல்லையா என்று நாங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம்’. மேரி அதிகம் பேசாமல் சென்று விட்டாள்.

ஞானேஸ்வரி கணவரிடம் ஒன்றும் கேட்காமல் வழக்கம்போல் சமயலறைக்குச் சென்றுவிட்டாள். அவர் அவளைச் சாட்டாக வைத்துக்கொண்டு இந்த உலகத்தையே பழிவாங்கத் தயங்காதவர் என்பதை அவள் யாரிடமும் சொல்ல மாட்டாள், சொல்ல முடியாது. அவள் அவரின் முகத்தைப் பார்க்காமல், ஏன் இப்படி ஒருத்தனில் அபாண்டப் பழி போடுகிறீர்கள் என்று கேட்காமல் நகர்ந்து விட்டாள். கணவன் மனைவியாக ஒரு வீட்டில் வாழும் இருவேறு ‘பிறவிகள்’ அவர்கள்.

அவளின் தனிப் பட்ட உலகம் சமயலறையம் தோட்டமும்தான். சமயலறைப் பாத்திரங்களும் தோட்டத்துச் செடிகொடிகளும் அவளின் துயரத்தைப் பகிர்ந்து கொள்பவை.

டாய்லெட் பிரச்சினையில் அதைத்திருத்த வந்த சாம் என்ற வெள்ளையன் ‘ஹலோ டார்லிங்’ என்று தன்னையழைத்தது ஞானாவுக்குப் பிரச்சினையில்லை. வயதுபோன முதியவர்களைக் கடை கண்ணி வைத்திருப்பவர்கள், வேலைக்கு வருபவர்கள் ‘டார்லிங்’ என்ற அழைப்பது ஆங்கிலேய உழைக்கும் வர்க்கத்தின் பழக்கவழக்கங்களில் ஒன்று என்பதை ஞானா லண்டனுக்கு வந்து சொற்ப நாட்களிலியே உணர்ந்து கொண்டவள்.

லண்டனுக்கு வரும்போது அவளுக்கு இருபத்தைந்து வயது. லண்டனுக்கு வந்த கால கட்டத்தில் சொந்தக்காரர் வீட்டிலிருந்ததார்கள். அங்கிருந்த ஞானாவின் மாமி முறையான ஒரு மூதாட்டியுடன் லண்டன் கடை கண்ணிகளுக்குப் போகும்போது பெரும்பாலும் ஆங்கிலேயக் கடைக்காரர்கள் ‘வட் யு வான்ட் மை டியர்’ என்றோ அல்லது ‘கான் ஐ ஹெல்ப் யு டார்லிங்’ என்று கேட்பதை ஞானா அவதானித்தாள்.

அதைப் பற்றித் தனது மாமியார் மூதாட்டியிடம் கேட்டபோது,’ஆங்கிலேயர்கள் தங்கள் தாய்மாரை அல்லது வயதுபோனவர்களை அப்படித்தான் அழைப்பார்கள்’ என்றாள். ஆனாலும் ஒரு சில ஆங்கிலேயக் கடைக்காரர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் தங்களிடம் சாமான்கள் வாங்க வரும் பெண்களை ‘ஹலோ டார்லிங்’ அல்லது,’ ஹை சுவீட்டி,’ அல்லது,’,ஹலோ மை டியர்’ என்பதும் பரவலான விடயம்.

அருளம்பலத்தாருக்கு அது கொஞ்சமும் பிடிக்காது.’இவன் என்ன தொட்டுத் தாலி கட்டியவன் மாதிரி’ டார்லிங்’ சொல்கிறான் என்று பொருமுவார். ஆனால் அவர் தொட்டுத் தாலி கட்டிய ஞானேஸ்வரியை டார்லிங்’ என்று கூப்பிட்டது கிடையாது.

அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதே அருமை.

‘ ஏய்’ அல்லது’ இஞ்ச பார்’ அல்லது, ‘என்னப்பா’ என்ற மொழிகளிற்தான் அழைப்பார்.யாரும் வீட்டுக்கு வந்திருந்தால் மட்டும் ‘ஞானேஸ்வரி’ என்று அழைப்பார். அவளின் சொந்தக்காரர்கள் அவளை ‘ஞானா’ என்று அழைத்தாலும் அவருக்குக் கோபம் வரும்.

‘ஞானா என்றால் ஆண்பிள்ளைத் தனம் ஒலிக்கும்’ என்று சொல்வார்.

ஞானேஸ்வரி அவருக்கெதிராக எதுவும் பேசுவது கிடையாது. அவரைப் பகைத்தால் என்ன நடக்கும் என்று அவளின் சிறுவயதிலேயே தெரிந்துகொண்டவள்.

அவளின் நினைவு எங்கேயோ விரிகிறது.

ஞானேஸ்வரி ஓரு பரவாயில்லாத வசதி படைத்த குடும்பத்தின் முதற்பெண். இரண்டு தங்கைகளும் இரண்டு தம்பிகளுமுடன் சந்தோசமான வாழ்க்கையில் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.அவளின் தகப்பனார் கொழும்பில் ஒரு அரச உத்தியோகத்தராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு தரம் ஊருக்கு வருவார்.அவரது மனைவி ஊரில் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டு தனது குழந்தைகளை மிகவும் கவனமாக வளர்த்தாள்.

அப்பா என்பவர் மாதமொருமுறை கொழும்பிலிருந்து வருபவர்.அல்லது,ஊரில் திருவிழா,உற்றார் உறவினர் திருமணம் அல்லது இறந்த வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரு சில நாட்கள் வந்து போகிறவர் என்ற நினைவே ஞானேஸ்வரியின் நினைவில் பதிந்திருந்தது.அவர்களின் குடும்பத்திற்கு அவளின் தாயே நிர்வாகி,பாதுகாப்பாளர்,அன்பைச் சொரிந்து அணைத்துக் கொள்பவர்.பெரும்பாலான வசதியான பெண்கள் மாதிரியல்லாமல் அவர்களின் வீட்டுக்கு வரும் வேலைக்காரியையும் அம்மா அன்பாக நடத்துவாள். அம்மாவின் அத்தனை பண்புகளும் ஞானாவிடமிருந்தது.தம்பி தங்கைகளை அன்புடன் பார்த்துக் கொள்வாள்.

ஞானாவும்; அவளின் சகோதர சகோதரிகளும் படிப்பில் கெட்டித்தனமான இருப்பதற்கு அவளின் தாய் மிகவும் ஊக்கம் எடுத்தாள். மூத்த இரு பிள்ளைகளையும் டியுட்டரியிலும் சேர்த்தாள்.கண்டவர்களுடன் பழகக் கூடாது என்று மிகவும் கடுமையாக எச்சரித்து அனுப்பினாள்.அப்போது அங்கு, மிகவும் கோபக்காரக் குணமுள்ள, பணக்காரத் திமிருள்ள,சாதி வெறி பிடித்த அருளப்பலம் மத்ஸ் ஆசிரியராகவிருந்தார். அவரைக் கண்ட முதல் நாளே ஞானா ஒரு பயத்துடன் பழகினாள் அவர் பார்வை அவர் ஒரு ஆசிரியர் என்பதற்குப் பதிலாக அவளில் மேய்வதை அவள் உணர்ந்தாள்.

ஆனால் அவரின் நடத்தையை யாரிடமாவது வாய்விட்டுச் சொன்னால் அவரை அப்படிப் பழகுவதற்கு ஞானாவின் பார்வையும் குணபாவங்களும்தான் காரணிகளாகவிருக்கும் என்று பழிபோட அவர் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ இருப்பார்கள் என்பதை அந்த இளம் வயதிலேயே அவளது தீர்க்கமான உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டவள்.

அப்போது அவளின் துரத்துச் சொந்தகக்காரனான கிருஷ்ணராஜா தனது படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பில் போலிஸ் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனின் தகப்பன் ஒரு ஆங்கில ஆசிரியர் ஊரில் மிகவும் மதிப்புடையவர் நிறைய வாசிப்பவர். அதனால் அவரைச் சுற்றி ஒரு மாணவர் வட்டம் வாஞ்சையுடன் உலவி வரும்.

அவரின் மகனான கிருஷ்ணாவும்; தகப்பனைப் போலவே இலக்கியத்திலும் எழுத்திலும் ஆர்வமுள்ளவன்.வாட்டசாட்டமானவன். நிறைய வாசிப்பவன்.’ கண்டதும் கற்றால் பண்டிதர் ஆகலாம்’ என்று விளையாட்டாக அவளிடம் குறும்பு செய்பவன்.அவள் கல்கியும் கலைமகளுடனும் காலத்தைக் கழிப்பவள்.ஆங்கிலப் பத்தகங்களையும் படிக்கச் சொல்லி அவளைத் துண்டுபவன்.

அவனின் சிரித்தமுகத்தில் எபபோதும் ஒரு அலாதியான கவர்ச்சி தவழும். அந்த முகத்தை ஒரு நாள் பார்க்காவிட்டாலும் அவளுக்கு ஏதோ தவிப்பு வருவதை அவள் உணர்ந்து கொண்டபோது அதன் அர்த்தத்தைச் சாடையாகப் புரிந்து கொண்டதும் அவள் தனக்குள் நாணிக் கொண்டாள். அவர்கள் இருவரும் உறவுக்காரர் என்பதால் அவர்கள் கோயில், அல்லது டியுட்டரிக்குப் போகும்போது சந்தித்துப் பேசிக்கொள்வதை அவர்களுக்குத் தெரிந்தவர்கள் சந்தேகமாகப் பார்ப்பதற்கு இடமில்லை.

அவன்,ஞானாவை விட கொஞ்சம் வசதி குறைந்த குடும்பத்திற் பிறந்தாலும் அவனுடைய போலிஸ் படிப்புக்கப்பால் அவனது பெரும் விருப்பமாக நிறையப் புத்தகங்கள் படிப்பதும் அவ்வப்போது கவிதைகளை எழுதிப் பிரசுரிப்பதும் பலருக்குத் தெரியும்.

சிறுவயதிலிருந்தே அவளிடம் அவன் மிகவும் பிரியமாகவிருந்தான் என்பதை அவர்கள் வளர்ந்து வந்த காலத்தில்,வாய்விட்டுச் சொல்லாமல் மனம் விட்டு எழுதிய சில கவிதைகளை அவளிடம் கொடுத்தபோது அவற்றை ஆயிரம் தடவைகள் தனிமையில் படித்து ஆனந்தப் பட்டவள்.கிருஷ்ணனின் ராதையாக அவள் சிறுவயதிலேயே அவனிடம் தன் மனதைப் பறி கொடுத்து விட்டாள்.

எப்போதாவது அவன் அவளின் டியுட்டரியின் வாசலிற் தற்செயலாக வருவதுபோல் வருவதையும் அவள் கடைக் கண்களால் இனிய பார்வையை அவனின் பக்கம் காட்டுவதையும் ஒரு நாள் அருளம்பலம் மாஸ்டர் தனது குரூரக் கண்களால் அவதானித்து விட்டார்.

தனக்குத் தெரிந்தவர்களிடம் அவர்களின் பின் புலத்தை விசாரித்தார்.

கிருஷ்ணன் ஞானேஸ்வரியை விட நான்கு வயது மூத்தவன்.இரு தங்கைகளைக் கரையேற்றிவிட்டுத்தான் அவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று பொறுப்பையுணர்ந்தவன்.தங்களை விட வசதி குறைந்த அவனிடமுள்ள அவளின் ஈர்ப்பைத் தனது தாய் தகப்பன் எப்படி எடுத்துக்கொளவார்கள் என்ற பயமிருந்தாலும்,கிருஷ்ணனின்; குடும்பத்திலுள்ள நல்ல பெயரால்,தங்கள் குழந்தைகளின் சந்தோசமான எதிர்காலத்தை விரும்பும் தனது தாய் தகப்பன் எப்படியோ ஒரு காலத்தில்அவளது ஆசையை ஏற்றுக் கொள்வார்கள் என்று அவள் நம்பினாள்.

1980ம் ஆண்டு தைமாதம், ஞானா ஆசிரியை பயிற்சியைத் தொடங்கக் காத்திருந்தாள். ஒரு நாள்ப் பின்னேரம் கோயிலுக்குச் சென்றபோது, போலிஸ் படிப்பு முடிந்து கம்பீரமான உடையுடன் டியுட்டிக்கு நின்றிருந்த கிருஷ்ணனைக் கண்டு அவள் கண்ணனைக் கண்ட ஆண்டாளாக மகிழ்ந்து போனாள்.

அன்று அவன் அவளுக்கு ஒரு கவிதைக் கடிதம் வடித்திருந்தான். வழக்கம்போல என்னுயின் ஞானா என்று தொடங்காமல் ‘மை டார்லிங் ஞானா’ என்று ஆங்கித்தில் அழைத்திருந்தான்.அவள் அந்தக் கடிதத்தை அவள் இருதயத்துடன்அவனை இணைத்ததுபோல் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

இலங்கையின் வடபகுதியில் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டிருந்த காலம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண ஆயுதப் போராhட்டத்தைத் தவிர வேறொரு வழியும் கிடையாது என்ற கோஷம் வலுக்கத் தொடங்கியிருந்தது. ஓரு சிலர் அதைச் செயற்படுத்த இரகசிய முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை அடக்க இலங்கை அரசு தனது போலிஸ் படையைத் தயார் செய்தது.

‘தமிழீழப் போராளிகள் பதினாறு குழுக்களுக்குமேல் விரிந்து பரந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப்; ‘பயங்கரவாதிகளாக’ வலைபோட்டுப் பிடித்து வதை செய்து போராளிகளின் சிதைந்த உடல்களைப் பகிரங்கத் தெருக்களில் எறிந்து விட்டும்போகும் போலிசாருக்கு எதிராகத் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் வாலிபர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். சில தமிழ்ப் போலிசார்,தமிழ்ப் போராளிகளின் அந்தத் தாக்குதல்களில் பலியாகிக் கொண்டிருந்தார்கள்.

அன்று ஒருநாள்,ஞானேஸ்வரி தனது அன்பனான கிருஷ்ணனைக்; கோயிலில் கண்டபோது, இளமையும் கண்ணியமுமான அவனது உத்தியோக தோற்றம் அவளுக்குப் பெருமையாயிருந்தது. அவன் அனுப்பியிருந்த கவிதையின் காதல் மொழிகள் அவளின் ஆத்மாவுடன் நுழைந்து விட்டன.

தமிழ்ப் போராளிகள் விடயத்தில் அவனை எச்சரிக்க வேண்டும்போலிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஒன்றிண்டு நாட்களுக்கு முன் பலியாகிய, மூன்று குழந்தைகளின் தந்தையாகிய ஒரு தமிழ்ப் போலிசார் பற்றி ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள. அவளின் பாட்டியார் தங்களுடன் வந்திருந்த ஒரு மாமியுடன் பெரிய சத்தத்தில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது.யாரும் பார்க்காத தருணம் பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்து கொண்டு, ‘கவனமா இருங்கோ’ என்று பதட்டத்துடன் சொன்னாள்.

அவன் அவளது கட்டளைளைக்கு புன்முறுவலுடன் தலையசைத்து ‘அப்படியே மை டார்லிங்’ என்று காதல் பொங்கக் கிசுகிசுத்தான். அந்தப் புன்னகையிலிருந்த அன்பு. பாசம்,அளப்பரிய காதல் அவளைத் திக்கு முக்காடப் பண்ணியது.

‘இந்த ஆழமான காதலைத் தனது ஆத்மாவுடன் பிணைத்து வைத்திருக்கும் இந்தக் கம்பீரமான ,கவுரமான, கண்ணியமான மனிதன் இன்னும் சிலகாலத்தில், என்னுடையவனாக இருக்கப் போகிறவன்’ என்று உண்மை அந்தக் கோயிலின் சன்னிதானத்தில் அவளின் சிந்தனையில் தெறித்து விழுந்தது.

அவனது பாதுகாப்பு பற்றி ஒரு சில வார்த்தைகளை விளக்கமாகப் பேசவேண்டு என்று அவள் முடிவுகட்டிக் கொண்டு,கோயில் பூசை முடியத் திரும்பி வரும்போது, அவளுடன் வந்த பாட்டியிடம் ஏதோ சாட்டுச் சொல்லி விட்டுப் போலிசார் நின்றிருந்த கடைப் பக்கம் சென்றாள். கோயிலால் வருபவர்கள் தொகையாகவிருந்தததால், அந்த நேரத்தில் இவர்களை விசேடமாக அவதானிக்கப் போவதில்லை என்று அவளின் பேதை மனம் சொன்னது.

அவனைச் சந்திக்க போலிசார் நின்றிருந்த ஒதுக்குப் புறமான பக்கத்தை நெருங்கும்போது அவளுக்கு முன்னால் நந்தி மாதிரி வந்து நின்ற அருளம்பலம் மாஸ்டரை அவள் எதிர்பார்க்கவில்லை.

‘என்ன ஞானேஸ்வரி, வீட்டுக்குப் போறவழி இந்தப் பக்கமில்லையே’ என்ற அருளப்பலம் மாஸ்டரின் குரலிலிருந்த நக்கலான தொனி,அவரின் நயவஞ்சகமான பார்வை அவளுக்கு ஒரு சில வினாடிகளில் எத்தனையோ விடயங்ளையுணர்த்தியது.அவர் தன்னைப் பின்தொடர்ந்து உளவு பார்க்கிறார் என்ற அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.

‘இல்ல மாஸ்டர் கடையில் தண்ணி வாங்கப் போறன்’ அவள் வாயில் வந்த பொய்யைச் சொல்லி விட்டு நகர்ந்தாள். அவள் வலது கண் துடித்தது. உடம்பு படபடத்தது.இரவில் நித்திரை வரவில்லை.மனம் மிகவும் பதட்டத்தடன் எதையெல்லாமோ யோசித்தது.

அடுத்த வெள்ளிக் கிழமை எப்படியும் அவனுடன் பேசவேண்டும் என்று முடிவுடன் அடுத்த நாள் அதி; காலையிலெழுந்தபோது தூரத்தில் வெடித்த துப்பாக்கி சத்தம் அவளின் இதயத்தைப் பிழந்து கொண்டு போனது.

ஓரு சில நிமிடங்களில்@’கிருஷ்ணராஜா என்ற போலிஸ்காரனைப் பெடியன்கள் சுட்டுப் போட்டான்கள்,யாரோ அந்தப் போலிஸ்காரனைப் பற்றிப் பெடியன்களுக்குச்; சொல்லியிருக்க வேணும்’ என்ற தகவல் பரவத் தொடங்கியது. கிருஷ்ணராஜா போலிஸ் பயிற்சி முடித்து விட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து சிலமாதங்களே ஆகியிருந்தன.

அநியாயமாகக் கொல்லப் பட்ட தனது அன்பன்,கிருஷ்ணாவுக்காக ஞானாவால் வாய்விட்டழவும் முடியாது. அவளின் ஆத்மா,’ சமுதாயப் பிரச்சினையின்றி வாழ்வதாகவிருந்தால் இன்றிலிருந்து நீ ஊமையாக இருக்கப் பழகிக் கொள்” என்று ஆணையிட்டது.ஒன்றிரண்டு நாட்கள் இரவு பகல் என்ற வித்தியாசம் தெரியாமல் அவள் சித்தம் மரத்திருந்தது. தன்னோடு பிணைந்திருந்த உண்மையான ஞானேஸ்வரி என்ற பெண் இறந்து போனதான ஒரு உணர்வு அவளையிறுக்கியது.

வாழ்வென்ற யதார்த்த தொடர் நாடகத்தில், மற்றவர்களுக்காக இன்னுமொரு பாத்திரமாக அவள் நடமாடவேண்டிய துரதிர்ஷ்டத்தை அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.இரு தங்கைகளுக்கும் இரு தம்பிகளுக்கும் மூத்தவள் அவள்.அவளின் செயற்பாடுகளில் அவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

இதுவரைக்கும் அவன் காதலின் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த ஞானாவின் உயிரின் பாதி

அவனின் இறப்புடன் சட்டென்று பிரிந்தததை யாரும் பரிந்து கொள்ள முடியவில்லை. அவனின் கொலையை, ‘தமிழருக்கெதிரான’ இன்னுமொரு போலிசாரின் இறப்பாக ஊரார் எடுத்துக் கொண்டார்கள். கிருஷ்ணராஜா அவர்களின் தூரத்துச் சொந்தக்காரன் என்பதை விட ஞானாவின் குடும்பத்தினருக்கு அவனின் கொலை எந்தத் தாக்கமுமில்லை. ஞானாவுக்கும் அவனுக்குமுள்ள தொடர்பைத் தெரிந்த ஒரே ஒரு பேர்வழியான அருளம்பலம் அவர்களுக்கு அதைச் சொல்ல மாட்டார் என்று அவளின் உள்ளுணர்வு சொல்லியது.

போராளிகளால் ‘தமிழ்த் துரோகிகள்’ என்று சுடப்பட்ட பலரின் மரணச் சடங்குக்குப் பொதுமக்கள் போகப் பயந்தார்கள்.அந்தப் பயத்தை மனதில் வைத்துக்கொண்டு

ஞானாவின் தாயார் சாட்டுக்காக ஒரு சில நிமிடங்கள் தலையைக் காட்டி விட்டு வந்தாள்.

‘தமிழருக்கு எதிராக வந்த போலிசைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்’.

‘போராளிகளுக்குப் பிடிக்காத தமிழரின்’ சடுதியான இறப்புக்களுக்குக் காரணங்களும் நியாயப் படுத்தலும் மிகவும் கவனமாக நிலை நிறுத்தப் பட்டன. அதைக் கேள்வி கேட்க யாருக்கும் துணிவில்லை. யாருக்கும் யாரையும் பிடிக்காவிட்டால் அந்தத் தமிழனைத் ‘துரோகியாகக் காட்டிக் கொடுக்க’ அருளம்பலம் மாதிரியான ஒரு கேவலமான மனிதக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் உருவாகிக் கொண்டிருந்தது.

கிருஷ்ணராஜா இறந்த எட்டாம் நாள் இரவு அவளின் கனவில்,அருளம்பலம் மாஸ்டரின் கோரமான சிரித்த முகம் வந்தது. அதைத் தொடர்ந்து குரூரமாகச் சுடப் பட்டு விழுந்த கிருஷ்ணாவின்; இரத்தம் வடியும் உடலை அவள் தாங்குவதாக அந்தக் கனவு தொடர்ந்தது.

தன் உயிரைப் பறித்தவன் யாரொன்று கிருஷ்ணாவின் ஆவி கனவில் வந்து அவளிடம் கதறுகிறதா,?

அவள் எழுந்தாள் காலையிருள் சாடையாகப் பிரிந்து கொண்டிருந்தது. அவளின் அன்பன் கிருஷ்ணாவைக் காட்டிக் கொடுத்தது யார் என்று ஞானாவுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. அவளால் ஒன்றும் செய்ய முடியாது.

ஞானா ஆசிரியை பயிற்சிக் கலாசாலைக்குப் போனாள்.படித்தாள் ஆசிரியையானாள்.

1983ம் ஆண்டு கலவரம் கொழும்பிலுள்ள தமிழர்ளை அகதிகளாக்கி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி விட்டது. அவள் தகப்பன் எப்படியோ உயிர் தப்பி அவரின் குடும்பத்திடம் வந்தார். அவர் கொழும்பில் பட்ட கொடுமைகளைச் சொல்லிக் குழந்தை மாதிரி விம்மியழுதார். அந்தக் குடும்பம் எதிர்காலத்தை நினைத்துப் பயப்பட்டது. வேலையிழந்தால் மனமுடைந்த தகப்பன்.அவரைத் தாங்கித் தவிக்கும் தாய். குடும்ப நிலை அவளைத் துயர்பட வைத்தது.

அடுத்தநாள் என்ன நடக்குமோ என்று தெரியாதமாதிரி அநியாயங்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தன.

தகப்பனார் வீட்டோடு இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிச் சிலவேளை எல்லேரிடமும் பாய்ந்து விழுந்தார் அல்லது அமைதியாக வெறித்துப் பார்த்தடி இருந்தார். குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றத் தவிக்கும் தவிப்பு ஞானேஸ்வரியைத் துயரப்படுத்தியது. தாயும் மகளும் ஊரிலேயே ஆசிரியைகளாக இருப்பது ஒரு விதத்தில் நிம்மதியாகவிருந்தாலும் வீட்டில் வளரும் ஆண்குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அந்த வீட்டில் எல்லோர் மனதிலும் வியாபித்திருந்தது.

யாழ்ப்பாணம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பல தமிழ் இளைஞர்கள் ‘போராளிகளாகப’ பல குழுக்களில் சேர்ந்து கொண்டிருந்தார்கள். வசதியுள்ளவர்கள் தங்கள் பையன்களை எப்படியோ வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள் அவளது பெரிய தம்பியை வெளிநாடு அனுப்பத் திட்டம் நடந்து கொண்டிருந்தது.அதற்குத் தேவையான பணத்தை எப்படிப்புரட்டுவது என்பது அவர்களுக்குப் பெரிய கவலையாயிருந்தது. அத்துடன் வீட்டிலிருக்கும் வயது வந்த பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளை தேடுவதும்; தலையிடியைத் தந்தது.

பெரிய இடத்து முக்கிய மனிதர்களில் ஒருத்தரான அருளம்பலம் மாஸ்டரும் லண்டன் போவதாகக் கதையடிபட்டது. அது மட்டுமல்லமல்,அருளம்பலம் மாஸ்டர் ஞானாவைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியனுப்பியபோது. அவளின் தாய் தகப்பன் மிகவும் பூரிப்புடன் லண்டன் செல்லப் போகும் அவளின் அதிர்ஷ்டத்தைப் பற்றிப் பேசினார்கள்.

அவருக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம் என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை.அவளுக்கு அவரைத் திருமணம் செய்ய விருப்பமா என்று கூட யாரும் கேட்கவுமில்லை, கவலைப்படவமில்லை.அவளுக்கு இருபத்தைந்து வயது,அவருக்கு முப்பத்தைந்து வயது,அத்துடன் அவருக்கு அப்போதே ‘ கர்ம வியாதி’ என்று சொல்லப் படும் நீரழிவு நோய் இருந்தது.திருமணத்தில் அவளின் கருத்துப்பாட்டுக்கு அக்கறை எடுக்க அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் யாருக்கும் பொறுமையோ அல்லது தேவையோ இருக்கவில்லை.

அவளின் முடிவில் அவளின் தம்பி லண்டன் செல்வது தங்கியிருக்கிறது. அத்துடன் தங்கைகளின் எதிர்காலமும் தங்கியிருக்கிறது என்று அவளுக்குத் தெரியும்.

அவள் மவுனமாக அவருக்குத் தலையைத் தாழ்த்தித் தாலியை மாட்டிக் கொண்டாள். ஊர் உலகிற்காக,ஒரு நடமாடும் பிணமான அவளைத் தன்னுடையவளாக்கி அவர் அவள் உடம்புடன் புணரப்போவதை நினைத்து அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

லண்டன் வாழ்க்கை கடினமானது. அவரின் படிப்புக்குரிய வேலை கிடைக்கவில்லை. அவர் எதிர்பார்த்தபடி திருமணவாழ்வும் அவருக்கு மிகவும் அதிருப்தியாகவிருந்தது. இரவின் அமைதியில் இன்னொரு உயிர் தன்னருகில் படுக்கிறதா என்று கூட அவருக்குச் சந்தேகமாகவிருந்தது.அமைதியான வெற்றிருளில் அவர் அவளின் உடம்புடன் புணர்ந்து முடிந்ததும் அவர் அயர்ந்து தூங்கிவிடுவார். அவள் குளியலறைக்குச் சென்று குளித்து விட்டுப் படுப்பாள்.

யாரும் வந்தால் கல கலப்பாகவிருக்கும் ஞானா, அவர்கள் இருவரும் தனிமையாக இருக்கும்போது அவருக்குரிய கடமைகளைச் செய்தாள். அதற்கப்பால் அவர்கள் இருவருக்குமிடையில் பெரிதாக எந்த இணைப்பும் கிடையாது.அவளின் அசாதாரண மவுனம் அவரைப் பயமுறுத்தியது.

அவர் தனது நோய்களுக்கு விடிவு தேடிக் கோயில்களை நாடினார். ஆனால் வயது கூடிக்கொண்டுவர,அவரின் நோய்களும் விரிந்து முக்கல்களும் முனகல்களும் இரவை நிறைத்தது. அவள் அவருக்குக் ‘கரைச்சல்’ கொடுக்குக் கூடாது என்று தனியறையில் தஞ்சம் புகுந்து விட்டாள். அவளுக்கு அப்போது வயது நாற்பது.

ஞானா மிகவும் திறந்த நிர்வாகியாகஅவர்களின் (அவரின்?) வீட்டை நிர்வகித்தாள். ஏற்கனவே சலரோகக்காரனான அவருக்குத் தேவையான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுத்தாள். இருவரும் ஒரே வீட்டில் ஒட்டுதலற்ற ஒரு கவுரவத் தம்பதிகளாகப் பவனி வந்தார்கள்.

அவர்கள் கார் வாங்கினார்கள்.அவரின் விரக்தியை மறைக்கக் கொஞ்சம் குடிக்கத் தொடங்கினார்.நீரழிவு நோயுடன் குடியும் சேர்ந்ததால் அவரின் ‘சினேகிதர்களாக’ லண்டனுக்கு வந்த கொஞ்சகாலத்தில் அவருக்கு இருதய நோயும் பிளட் பிரஷரும் வந்தன.

அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. லண்டனுக்கு வந்த காலத்தில் அவர்கள் ஞானாவின் தம்பியுடன் ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள.;ஞானாவின் தம்பிக்கு மூன்று குழந்தைகள்.அவனது மனைவி ஒரு அவளது வீட்டில் ஒரே செல்லப் பிள்ளை அத்துடன்,லண்டன் குளிரால் அடிக்கடி தடிமலும் இருமலும் என்று அவதிப் படும் ஒரு நோஞ்சான்,அத்துடன் குழந்தை வளர்ப்பு அதிகம் தெரியாதவள்.

தம்பி தங்கைகளுடன் வளர்ந்த ஞானா தம்பியின் முதலாவது குழந்தை மைதிலியைத் தனது குழந்தைமாதிரி வளர்த்தாள். மைதிலியின் அணைப்பும், ஆறுதலும் ஞானாவின் ஒடிந்து விட்ட இதயம் ஒரேயடியாகச் செயற்படமல் விடுவதைத் தடுத்து ஞானாவின் வாழ்வில் எதோ ஒரு பிடிப்பையுண்டாக்கியது.’மை டார்லிங் பேபி’ என்று கட்டிக் கொஞ்சுவாள.;

மைதிலியை அவள் கட்டிக் கொஞ்சுவதை அருளம்பலத்தார் அதிகம் விருப்பமில்லை. ஆனால் ஞானாவை ஒரு ‘மலடி’ என்று அவரால் திட்டவும் முடியவில்லை.

அவர்களுக்குக் குழந்தைகள் இல்லாமைக்கு அவரின் நோய்கள்தான் ஒருகாரணம் என்று அவர் மனம் சொல்லியது.மைதிலி மாமி ஞானாவின் அளப்பரிய அன்பில் வளர்ந்தாள்.மைதிலியுடன் ஞானா இறுக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. கூடிய விரைவில் தங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொண்டு அவர்கள் தனிக்குடித்தனம் வந்தார்கள்.டாக்டராக இப்போது வேலை செய்யும் மைதிலிக்குத் தனது மாமி ஞானாவில் மிகவும் பற்று.

அருளம்பலத்துக்கு இப்போது எழுபது வயது. ஞானேஸ்வரிக்கு அறுபது வயது. அவர்கள் லண்டனுக்கு அகதிகளாக வந்து வந்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன. அருளம்பலத்தார் ஞானாவை நடத்தும் விதம் மைதிலிக்கு அறவே பிடிக்காது.

அருளம்பலத்தாரின் சம்பளமற்ற வேலைக்காரியாகத்தான் ஞானா அந்த வீட்டிலிருக்கிறாள் என்று மைதிலிக்குத் தெரியும்.மைதிலிக்குத் தனது மாமியின் வாழ்க்கை புரியத் தொடங்கியிருப்பதை ஞானா உணர்ந்து கொண்டாள். ஆனால் மைதிலி தங்களின் தனிப் பட்ட வாழ்க்கைக்குள் உள்நுழைவதை அவள் அனுமதிக்கப் போவதில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லி விட்டாள்.

அருளம்பலத்தாhரின் வீட்டுக்கு டாய்லெட் திருத்த வந்த ஆங்கிலேயன் ஞானாவை’ டார்லிங்’ என்று கூப்பிட்டதற்காக உள்ளுராட்சியில் முறைப்பாடு செய்த சில தினங்களில் மைதிலி மாமியைப் பார்க்க வந்திருந்தாள்.

அருளம்பலத்தார் மிகவும் ஆத்திரத்துடனிருப்பதற்கு மைதிலிக்குக்; காரணம் தெரியவில்லை. அவளின் விசாரணையின்போது, தனது மனைவியின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஞானாவை’ டார்லிங்’ என்று அழைத்த அந்த ஆங்கிலேய வேலைக்காரனைப் பழிவாங்க ஞானா உதவி செய்யவில்லை,அந்த ஆங்கிலேயனின் ‘டார்லிங்’ வார்த்தையால் ஞானா மன உளைச்சலால் வருந்தினாள் என்று எழுதித்தர மறுக்கிறாள் என்று அருளம்பலத்தார் துள்ளிக் குதித்தார்.

மைதிலி லண்டனிற் பிறந்து வளர்ந்தவள். ‘டார்லிங்’ என்ற வார்த்தைக்கும் தமிழுணர்வின் பரிசுத்த சிந்தனைகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று தெரிந்தவள். வயதுபோன பெண்களை கடைக்காரர்கள்,மட்டுமல்ல,ரெயில்வெ உத்தியோகத்தர். டக்சிக்காரர்கள் என்போர் ‘டார்லிங்’ என்று சொல்வது சர்வ சாதாரணம் என்று மைதிலி அவருக்கு விளங்கப் படுத்தினாள்.

ஞானாவுக்கு அவரின் வஞ்சக உணர்வு தெரியும். அன்று வேலைக்கு வந்திருந்த ஆங்கிலேயன் ஐம்பது வயதுள்ளவன். கல கல வென்று பேசிக் கொண்டிருந்தவன். ஞானாவை’ டார்லிங்’ என்று கூப்பிட்டவன். அன்று அவன் அன்புடன் அவளுடன் ‘டார்லிங்’பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை.அவளை அன்புடன் நேசித்தவர்களுக்கு என்ன நடக்கும் என்ற தெரியும்.இந்த வேலைக்காரனுக்கு எதிரான முறைப் பாடு கொடுத்தால் அவனுக்கு வேலை போவது மட்டுமல்ல, முதியோருடன் கவுரவக் குறைவாக நடந்த குற்றத்தின் அடிப்படையில் இனி அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமலும் போகலாம்.

டாய்லெட் திருத்த வந்தவன் ஞானாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கு இரு வளர்ந்த குழந்தைகளிருப்பதாகவும், முதற்பெண் தாயாகப் போவதாகவும் தனது பேரக் குழந்தைக்குத் தொட்டில் வாங்கிக் கொடுக்க ஓவர் டைம் செய்வதாவும் ஞானாவுக்குச் சொல்லியிருந்தான்.

அவனுக்கு வேலை போக ஞானா உதவி செய்ய மாட்டாள்.அவன் ஒரு நல்ல தகப்பன் என்று அவனின் பேச்சிலிருந்து தெரிந்தது. அருளம்பலத்தார், ஞானாவின் பிடிவாதம், தன்னை மதிக்காத அகங்காரம் பற்றி மைதிலிக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏனோ அந்த நேரம் ஞானாவின் ஞாபகத்தில் அவள் அன்பனாகவிருந்த கிருஷ்ணன் வந்தான். அவனின் கவிதைகளில் ‘எனது உயிரின் மறுபாதி’ என்றுதான் தொடங்கினான். உறவு நெருங்கியிணைந்த காலத்தில் ‘மை டார்லிங்’ என்று அவளைக் கூப்பிடத் தொடங்கியிருந்தான்.அவனுடன் வாழக் கொடுத்து வைத்திருந்தால், இரவின் தனிமையில் காதலில்; அவளையணைத்துக் கொண்டு ‘மை டார்லிங் என்று கொஞ்சியிருப்பானா?

அருளம்பலத்தாரைவிட ஆங்கிலத்தில் மிகவும் திறமையுள்ள கிருஷ்ணன் அவளை’டார்லிங்’ என்று அழைத்திருப்பான் என்று நினைத்து மனதுக்குள் கொதிப்படைந்து,அவளை யாரும் ,’டார்லிங்’ என்றழைத்தால் எரிச்சல் படுகிறாரா அவள் கணவர்? அல்லது, அவள் டியுட்டரியிற் படித்த காலத்தில்,அவளுக்குத் தெரியாமல் கிருஷ்ணாவின் கடிதங்களை அருளம்பலம் கள்ளமாகப் படித்திருப்பாரா?

ஞானாவைக் காதலித்த குற்றத்திற்காகத், தமிழ்ப் போராளிகளுக்கு கிருஷ்ணனை ஒரு தமிழ்த் துரோகியாகக் காட்டிக் கொடுத்து அவனின் உயிரை எடுத்து விட்டு ஞானாவைத் தன் சேவகியாகப் பழிவாங்குபவர்; தனது கணவர் என்பதை ஒருநாளைக்கு மைதிலிக்குச் சொல்ல வேண்டும்போலிருந்தது.

தோட்டத்து, மரம் செடி கொடிகளைத் தடவும்போது அவளுக்குக் கிருஷ்ணாவின்; ஞாபகம் வரும். மலர் மொட்டுக்கள் ‘மை டார்லிங்’ என்று கிசுகிசுத்துக்கொண்டு காற்றுடன் அவளைத் தடவுவதாகக் கற்பனை செய்வாள். பூத்துக் குலுங்கும் மல்லிகையில் அவனின் புன்னகை நிழலாடும். அவள் இறந்து அழியும்வரை அவளின் தொலைந்து விட்ட பாதி உயிர் யாழ்ப்பாணத்தில்,அவளின் ‘டார்லிங்’ கிருஷ்ணாவின்; நினைவில் ஊசலாடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *