கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 10,455 
 

“சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம் உங்களுக்கு டெஸ்ட் பண்ணறோம். ஓகே-வா?” என அந்த மலையாள நர்ஸ் சொன்னபோது மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை. அழகிகள் என்ன சொன்னாலும் அதை மறுப்பேதுமின்றி கேட்டுக்கொள்கிற இயல்புடையவன் என்பதால்.

இன்னும் ஒரு மாதத்தில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அதன் பொருட்டு அவர்கள் தந்த மருத்துவமனைப் பட்டியலில் இருக்கும் ஏதோவொன்றில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமாதலால் காலை ஏழரை மணிக்கே பெங்களூரு old Airport road-ல் இருக்கக் கூடிய அந்த பெரிய மருத்துவமனைக்கு வந்தாயிற்று. கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரம். வந்து போவதற்கு சற்றே எளிதான இடம் என்பது இது மட்டுமே. காலை நேரம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சாலையில் உதிர்ந்து கிடந்த இலைகளும், பூக்களும் இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன.

வயதானவர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு என் சுற்று வரவும், எல்லா பரிசோதனைகளையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடித்தனர். ஆனால் அதற்குள்ளாகவே மணி பத்தாகியிருந்தது. அதனால் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் உணவகத்திலேயே காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றால் சரியாக இருக்குமென அங்கு சென்று ஒரு தோசை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன்.

வந்த வேலை முடிந்து விட்டது. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவதாக மனைவிக்கு அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு நிமிர்ந்த போது, “ஹே, நீ அரவிந்த் தானே?” என ஒரு பெண் கேட்க, “ஆமா, நீங்க?” என என் ஞாபக அடுக்குகளில் ஒரு கன நொடி சல்லடையிட்ட போதும் கிடைக்காத பதிலை அவராகவே, “தெரியலையா? சரண்ய ப்ரியா” என்ற போது இருபது வருடங்களுக்கு முன்பான அந்த ஒரு நாள் சட்டென குமிழி போல மேலெழுந்து உடைந்தது. ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தெரிந்த ஒரு நபரை நோக்கி ஏற்படும் மகிழ்ச்சியை எவ்வளவோ முயன்றும் என் முகத்தில் கொண்டு வர இயலாமல் தடுமாறினேன். அதை அவளும் கண்டு கொண்டதாகவே மனதிற்கு பட்டது. ஆனாலும் நான் இயல்பாக பேச முயற்சித்தேன்.

“நீ, நம்ம ஸ்கூல்ல விட்டு போனதுக்கு அப்பறம் நாம பாக்கவே இல்ல-ல?” என நன்கு தெரிந்த ஓர் உண்மையை தெரியாதது போல கேட்டாள். அவளும் என்ன செய்வாள்? பாவம் என நினைத்துக் கொண்டு ஒருவாறாக இயல்பாய் பேச ஆரம்பித்தேன்.

“இங்க, பெங்களூரு-ல தான் இருக்கியா? இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு? கல்யாணம் ஆயிடுச்சா? எத்தனை கொழந்தைங்க” என ஒரு கேள்விக்குப் பின் மற்றுமொரு கேள்வியாக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.

எல்லாவற்றிற்கும் மிகவும் பிரக்ஞையுடன் நேர்மறையாக பதிலளித்தேன். பின்பு கேட்கலாமா, வேண்டாமா என மிகவும் தயங்கி தயங்கி, “ஜெயராமன் சார் எப்படி இருக்காரு” எனக் கேட்கவும் அதற்குத்தான் அவள் காத்திருந்தது போல, “ஹப்பாடா, இப்பவாது கேட்டியே” என்ற போது இயல்பாகவே அவளுக்கு கண்களில் கண்ணீர் வலை பின்னியது.

எதற்காக இவள் அழுகிறாள் என ஒன்றும் புரியாதவனாக தலை சாய்த்துப் பார்க்கும் ஒரு குருவி போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கைக்குட்டையால் தனது விழிகளின் ஓரத்தை துடைத்துக் கொண்டவள், “ஒண்ணுமில்ல, அப்பா ஒண்ண ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைபட்டாரு. ஆனா, நீ எங்க இருக்கன்னு ஒன்னும் தெரியல. Facebook-ல நீ இல்லையோ?” என கேட்டவளை ஆமோதிப்பதைப் போல தலையசைத்தேன்.

“படிப்ஸ்லாம் இப்படித்தான். மெண்டலா திரிவானுங்க” என சொல்லி சிரித்துக் கொண்டாள்.

எனக்கும் சிரிப்பு வந்துவிடவே வாய்விட்டு சிரித்தேன்.

“அக்காவுக்கு ரெண்டாவதா பையன் பொறந்துருக்கான். நேத்து நைட்தான். அதான் நாங்க பாக்க வந்தோம். அப்பாவும் வந்துருக்காரு. ஒண்ண பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாரு. வாயேன்” என்ற போது மறுப்பதற்கான காரணத்தை மனதில் தேடிக் கொண்டிருக்கும் போதே, “நீ என்ன காரணம் சொன்னாலும் நான் விடமாட்டேன். ஒழுங்கா வந்துட்டு போ” என மனதைப் படித்தவளாக சொன்னவளிடம் இனி ஒன்றும் சொல்லிவிட முடியாது என்பதனால், ” சரி. நீ போ. நான் சாப்டுட்டு வரேன்” என்றேன்.

“சத்தியமா?” என அவள் கேட்டபோது ஒவ்வொரு உரையாடலுக்கும் அவள் சொல்லக்கூடிய வார்த்தையது என்பது நினைவுக்கு வந்தவனாக “சத்தியமா வரேன், நீ போ” என்றேன்.

“B – Block. 3rd Floor. Room number – 310” என சொல்லிச் சென்றாள் பெரும் ஆசுவாசத்துடன்.

கொண்டுவரப்பட்ட தோசையை சாப்பிட்டு விட்டு, தேநீர் கோப்பையுடன் அந்த குல்முஹர் மரத்தடியில் நின்று கொண்டிருந்த போது அதே குல்முஹர் மரங்கள் நிறைந்த எங்கள் பள்ளி நினைவுக்கு வந்தது – ஆயுளுக்கும் நான் மறக்க முடியாமல் தவிக்கும் அந்த ஒரு நாள்.

காலை ஒன்பது மணிக்கு சரியாக நிகழும் அசெம்பிளியில் ஒவ்வொரு நாளும் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒவ்வொரு வகுப்பின் தரவரிசைப் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்து மாணவர்களின் பெற்றோரை ஒருவர் ஒருவராக அழைத்து நாளொன்றாக அவர்களை கொடியேற்ற வைத்து கௌரவிப்பது வழக்கம். அவர்களுக்கான வரவேற்புரையை வழங்குவது தலைமையாசிரியர் சக்திவேல் அய்யா. அவர் வராத நாட்களில் உதவி தலைமையாசிரியர் லோகநாதன் சார் பொறுப்பேற்றுக் கொள்வார். ஆனால், அன்றைக்கு அதுநாள் வரை இல்லாத வகையில் ஜெயராமன் சார் பொறுப்பேற்றிருந்த போதே அவர்கள் இருவரும் விடுப்பில் இருந்ததை புரிந்துக் கொண்டோம். ஆனாலும், அவர்கள் இருவர் வராத ஒரு நாளில் அனந்த கிருஷ்ணன் சார் பொறுப்பேற்றிருந்ததும் ஏனோ தற்செயலாக நினைவுக்கு வந்தாலும் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அது ஆகஸ்டு எட்டாம் தேதி என்பது இப்போதும் நினைவிருக்கிறது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாம் தேதியன்றுதான் அதற்கு முந்தைய மாத இறுதியில் நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண்களை வழங்குவது எங்கள் பள்ளியின் வழக்கம். படிப்பிற்கும், மேலாக ஒழுக்கத்திற்கும் மிக கண்டிப்பான பள்ளி என்பதனால் எட்டாம் தேதி என்பது பலரையும் பயம் கொள்ள வைப்பதுண்டு. ஒட்டுமொத்த பள்ளியிலும் பிரம்படிச் சத்தம் மட்டுமே கேட்கும், கூடவே உயிர் அலற துடிக்கும் சிறுவர்களின் கதறல்களும். ஆரை நூற்றாண்டுப் பழமையான பள்ளி என்பதனால் ஓடு வேயப்பட்டு ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையேயான தடுப்புச் சுவர் என்பது முக்கால்பங்கு மட்டுமே இருக்கும். அதனால் அருகாமை வகுப்பில் அடி தாளாத சிறுவர்களின் கதறல்கள் மற்ற வகுப்பில் இருப்பவரையும் நடுநடுங்க வைக்கும். ஆனால், அப்பிரம்படி என்பது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டுமே என்பதனால் வகுப்பில் எங்களைப் போன்ற சிலர் நிம்மதியாக இருப்பதுண்டு.

அன்றைய தினத்தன்று தாங்கள் திருத்திய விடைத் தாள்களை வகுப்பு மற்றும் பாடங்கள் வாரியாக தலைமை ஆசிரியரின் பார்வைக்கு அவரது மேசை மேல் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வைத்து விடுவர், ஆசிரியர்கள் . அசெம்பிளி முடிந்து முதல் இரு பாட வேலைகளுக்குள்ளாக ஒவ்வொரு கட்டுக்குள் இருந்தும் தலா இரண்டு விடைத்தாள்களை பார்வையிட்டு அதில் தேர்ச்சி பெறாத மாணவனை தன்னை வந்து சந்திக்குமாறு கையொப்பமிட்டுருப்பார். அப்படி தலைமையாசிரியரிடம் அனுப்புவதற்கு முன்னதாக ஆசிரியர்களும் அவர்கள் பங்குக்கு கொடுக்க வேண்டிய பிரம்படிகளை கொடுத்தே அனுப்புவார்கள்.

அன்று, காலை இடைவேளை முடிந்து எங்களுக்கு கணித பாடவேளை. விடைத்தாள்களுடன் வந்த மகேஷ் சார் இன்ன இடத்தில்தான் அடிக்க வேண்டும் என்கிற நாகரிகம் அறியாதவர். முதல் இரண்டு விடைத்தாள்கள் தலைமையாசிரியர் கையொப்பமிட்டவை என்பதனால் எல்லா வகுப்புகளிலும் அந்த முதல் இரண்டு நபர் யாரென மிகுந்த அச்சத்துடன் காத்திருப்பர்.

முதலாவதாக “ராஜேஷ் கண்ணா” என்ன அழைக்கும் போதே அங்கு நடக்கப் போவது என்ன என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றவனை தன் பலம் கொண்ட மட்டும் அடித்து நொறுக்கியவர், “அய்யா, meet me -னு போட்ருக்காரு. போ” எனத் அன்றைய தலைமையாசிரியரான ஜெயராமன் சாரிடம் அனுப்பி வைத்தார். அடுத்து, “அரவிந்த்” என அழைக்கவும் நான் மிக நிதானத்துடனும், பொறுமையாகவும் செல்ல, “ninety five” என்றவர் விடைத்தாளை கொடுக்க என்னிடம் நீட்டிவர் மீண்டும் அவசரமாக அவர் வசம் இழுத்து ஒருமுறை மேலும் கீழும் பார்த்தவர், “என்னடா, meet me-னு போட்ருக்கு” என அவரே குழம்பி போயிருந்தார். வகுப்பில் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. “ஒரு நிமிஷம் இரு” என வெளியே சென்றவர் பக்கத்து வகுப்பாசிரியரிடம் விசாரிக்க அவரும், “ஆமா சார். இந்த பையன் science -ல எண்பத்து ஏழு வாங்கிருக்கான். இவனுக்கும் meet me -னு போட்ருக்காரு” என சொல்லவும் அதே குழப்பத்துடன் எங்கள் வகுப்பை பார்த்து வந்த கவிதா மேடமும் அவர் வகுப்பின் விடைத்தாள் ஒன்றைக் கொண்டு வந்தார்.

“டேய், என்னனு தெரியல. எதுக்கும் போய் பாத்துட்டு வந்துருங்க” என என்னையும் பக்கத்து வகுப்பில் எண்பத்து ஏழு மதிப்பெண்கள் பெற்ற சபரியையும் தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பினார்கள். நாங்கள் தலைமையாசிரியர் அறையை அடைந்த போது அங்கு எங்கள் வகுப்பைச் சேர்த்த ராஜேஷ் கண்ணாவை ஜெயராமன் சார் அடித்த அடி இதுவரை அவன் வாங்கியிராததும், அவர் அடித்திராததும்.

எங்கள் பள்ளி எவ்வளவு கண்டிப்பானதாக இருப்பினும், சில ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணக்கமாகவும், மற்ற ஆசிரியர்களைப் போல அடித்து துன்புறுத்தாதவர்களாகவும் இருந்தனர். அதில் ஜெயராமன் சாரும் அடக்கம். அவர் மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியர். ஒரு கணக்கு ஒரு மாணவனுக்கு புரியவில்லை எனில் அவனுக்கு கணிதம் எந்தளவு தெரியும் என ஆராய்ந்து , தேவைப்பட்டால் அவன் சந்தேகம் கேட்ட கணக்கின் தொடர்புடைய ஆரம்பப்புள்ளி ஒன்பதாம் வுகுப்புடையது என்றாலும் மிகப் பொறுமையாக படிப்படியாக பாடம் நடத்தக் கூடியவர். அவர் இத்தனை மூர்க்கமாக ஒரு மாணவனை அடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே நம்ப முடியாமல் நான் வெளியில் நின்றுக் கொண்டிருக்க, “next” என அழைக்கவும் நான் உள்ளே சென்றேன்.

விடைத்தாளை என்னிடம் இருந்து வாங்கியவர், “அரவிந்த், 9th Standard, Mathematics – 95 marks” என என்னை மேலும் கீழும் பார்த்தவர், “ஏன் சென்டம் வாங்க மாட்டியா? ” என பிரம்பால் என் மண்டையில் இரண்டு அடி அடித்தார். அப்பள்ளியில் நான் வாங்கிய முதல் அடி. நிலைக் குலைந்து போனேன். அதுநாள் வரையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டுமே விழுந்த பிரம்படிகள் இப்போது வகுப்பில் முதல் தரவரிசை மாணவனுக்கும் விழுவது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கையில் விழுந்த இரண்டு பிரம்படிகளுள் ஒன்று எனது இடது சுண்டுவிரலின் நுனியை கொஞ்சம் பலி கேட்டது.

நான் வெளியே வரும் போது வகுப்பிற்கு இருவராக கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்கள் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர் அவர்களது சுற்றுக்காக. தாங்க முடியாத அழுகையுடன் எங்கள் வகுப்புக்கு சென்ற போது எல்லா விடைத்தாள்களையும் கொடுத்துவிட்டு மதிப்பெண்களை தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொண்டிருந்தார் மகேஷ் சார். நான் அழுது கொண்டே உள்நுழைவதை பார்த்தவர், “ஏன்டா, என்னாச்சு” எனவும் எனது இடக்கையை வலக்கைக்கு உள்ளாக வலிக்கு தாங்கிப் பிடித்துக் கொண்டே நடந்தவற்றை சொல்லி முடித்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர் முன்பு போலவே பக்கத்து வகுப்பில் சென்று விசாரிக்க அவர்கள் வகுப்பில் அறிவியலில் 87% வாங்கிய சபரிக்கும் அதே நிலைதான் என அந்த ஆசிரியர் சொன்னபோது ஒரு பெரும் நிசப்தம் ஒவ்வொரு வகுப்பாக உருவாகுவதை உணர்ந்தோம்.

சரியாக மணி ஒலிக்கவே அடுத்த பாடவேளைக்கு தமிழாசிரியை கங்கா வந்தார். இம்முறை முதல் இரண்டு விடைத்தாள்கள் யாருடையவை என்பது எல்லோரும் எதிர்பார்க்கிற மர்மமாக இருந்தது. ஆனால், இம்முறை முதல் இரண்டு பேருமே தேர்ச்சியடையாததனால் அதில் பெரிய வித்தியாசமில்லாமலும் இருந்தது. ஆனாலும் எல்லோருக்குள்ளும் ஒரு கேள்வி புதிதாக எழுந்திருந்தது. அதன் காரணமாக எங்கள் வகுப்பிலிருந்த ஜெயராமன் சாரின் மகள் சரண்யா ப்ரியாவை அவளது சிநேகிதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள். இருப்பினும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

உணவு இடைவேளையின் போது ஜெயராமன் சாரின் முற்றிலும் மாறிய நடவடிக்கைகள்தான் ஒட்டு மொத்த பள்ளியின் பேசுபொருளாக இருந்தது. தன்னிடம் படிக்கும் மாணவர்களைக் கூட இப்படி அடித்திராதவர் இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். அதிலும், வழக்கத்திற்கு மாறாக. கண்டிப்புக்கு பெயர் போன தமது தலைமையாசிரியர் சக்திவேல் அய்யா கூட ஒருநாளும் தேர்ச்சி பெற்றவர்களை அடித்ததில்லை – அவர்கள் 35% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட.

மைதானத்தில் உணவு உட்கொள்ளும் போது அருகருகே இருக்கும் மற்ற வகுப்பு மாணவர்களிடம் என்ன நடந்தது என ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். எனக்கு நடந்ததைப் போலவேதான் எல்லா வகுப்பிலும் நடந்திருந்தன என்ற போது பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மீதமிருக்கும் நான்கு மணி நேரத்தில் இன்னும் என்னென்ன நடக்கக்கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருந்தது.

ஒரு மணிக்கு மேலாக – உணவு இடைவேளையின் போது – எப்பொழுதும் பிரம்பின் சகிதம் பள்ளியை வலம் வரும் சக்திவேல் அய்யா, ஒழுங்கை மீறி வகுப்பில் கத்திக் கொண்டிருக்கும் மாணவர்களை அடிப்பது எங்கள் அன்றாடங்களில் ஒன்று. அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு சாரார் வகுப்பறையின் வெளியே புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டு படிப்பது போல தரையில் அமர்ந்துக் கொண்டு அமைதியாக இருப்போம். அன்றும் அது போல இருப்பதுவே அனைத்து வகையிலும் தப்பிப்பதற்கான வழி என்பதை உணர்ந்து கிட்டத்தட்ட வகுப்பின் பெரும்பாலான மாணவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தோம்.

வீசிய தென்னைக் காற்றுக்கும், தின்ற தயிர் சோற்றுக்கும் கண் சிறிது அசந்த போது, திடீரென பிரம்படி ஓசைகள் கேட்ட திசையப் பார்த்த போது ஜெயரமான் சார் எங்கள் கட்டிட வரிசையில் இருந்த முதல் வகுப்பு மாணவர்களை மண்டியிட வைத்து வரிசையாக அடித்துக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என புரியாமலும், அடுத்து என்ன செய்வது என தெரியாமலும் புத்தகத்தை உற்று நோக்குவது போல ஓரக்கண்ணால் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தோம் வியர்வை ஒழுக.

“lunch break -ல சாப்டுட்டு ஒழுக்கமா class -ல ஒக்காந்து படிக்காம எதுக்குடா எல்லாரும் கூட்டமா வெளிய ஒக்காந்துட்டு இருக்கீங்க” என அவர் வரிசையாக அவர் கைக்கு வந்தது போல அடித்துக் கொண்டே வந்தபோதுதான் எங்களுக்கு காரணமே புரிந்தது. பாதிவரை அடித்துக் கொண்டே வந்து திடீரென நிறுத்தியவர், “ஒடுங்கடா உள்ள” என சினங்கொண்டு கர்ஜித்தது எங்களை இன்னும் பயமுறுத்துவது போல எங்கிருந்தோ எதிரொலித்தது.

சிதறி ஓடிய நாங்கள் எங்கள் வகுப்பில் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டோம். மீதமிருக்கும் நான்கு பட வேளைகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு முகங்களிலும் தெரிந்தன. ஆசிரியர்களுக்குகூட அவரின் இச்செய்கைகள் ஆச்சரியப்படுத்தின.

ஆனாலும், நாங்கள் பயந்தது போலல்லாது எங்கள் தாளாளரின் வருகையால் ஜெயராமன் சார் ஓய்வின்றி இருக்க, மீதமிருந்த மூன்று மணிநேரத்தை இலகுவாக கடந்தோம்.

அன்றைய தினத்தின் இறுதி மணி ஒலிக்கவே நிம்மதிப் பெருமூச்சுடன் எங்களது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாய் எப்போதும் போல இருவர் இருவராக அசெம்பிளி மைதானத்தில் அணிவகுத்து நிற்பதற்கு முன்பாகவே ஜெயராமன் சார் பிரம்புடன் பள்ளியின் நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். எப்போதும் அணிவகுத்து நிற்பவர்கள் சிறிது கூட்டம் சேர்ந்தவுடன் மென்னோட்டத்துடன் வெளியே செல்வது வழக்கம். ஆனாலும் அன்று நிலவி வந்த அசாதாரண சூழலில் என்ன செய்வதென தெரியாமல் முதலில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தனர்.

பிரம்பை நாங்கள் இருந்த திசையைப் பார்த்து அசைத்தவாறே, “வாங்கடா” என பச்சைக் கொடி காட்டுவது போல கையசைக்க எல்லோரும் மெதுவாக நுழைவாயிலை நோக்கி நகர்ந்தோம்.

கண்டிப்பான பள்ளி என்பதனால் பெரும்பாலானோர் அந்த சிறுநகரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தோம். 4.30 மணிக்கு முடியும் பள்ளி என்பதனால், திரும்பிச் செல்கையில் 4.45 மணி அரசாங்க பேருந்தில் ஒரு சாராரும், 5.30 மணிக்கு வருகிற மற்றுமொரு அரசாங்க பேருந்தில் மறுசாராரும் இலவச பயணம் மேற்கொள்வதுண்டு.

முதல் பேருந்தில் எப்போதுமே கூட்டம் அதிகாமாக இருக்கும் என்பதனால் அதை தவிர்த்துவிட்டு 5.30 மணிக்கு செல்வது எனது வழக்கம். அன்றும் அது போலவே வெளியே வந்து எனது புத்தகப் பையை வரிசையில் வைத்து விட்டு பள்ளியின் மதில் சுவரை ஒட்டி நின்றுக் கொண்டேன்.

4.45 மணிக்கு வந்த பேருந்தில் எல்லோரும் வரிசையாக ஏறுவதைக் கவனித்த ஜெயராமன் சார், பேருந்தின் கடைசிப்படி வரை மாணவர்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். ஏதோவொரு அசம்பாவிதம் இப்பொழுதும் கூட நிகழக்கூடும் என்பதாக எங்கள் மனதிற்குபட்டது. பள்ளியின் உள்பக்கம் பார்த்தவர் கைதட்டி அழைத்தவரின் திசை நோக்கி மேல்நிலை மாணவர்கள் இருவர் வரவே அவர்களிடம் பேருந்தைப் பார்த்து ஏதோ சொன்னதும் அவர்கள் நின்றுக் கொண்டிருந்த பேருந்தின் கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள் இருப்பவர்களை நகரச் சொல்லி, கடைசிப் படிக்கட்டுகளில் இருந்தவர்களையும் நன்கு மேலே உட்புறமாக போகச் செய்யவும் பேருந்து கிளம்பவும் சரியாக இருந்தது, அதன் படிகளில் மட்டும் யாரும் நிற்காதவாறு.

எதிர்பார்த்தது போல ஏதும் நடக்காமல் இருக்கவே சிறிது ஆசுவாசப்பட்ட எங்களை ஜெயராமன் சார் அழைத்த போதுதான் ஒரு திகில் உள்ளுக்குள்ளாக வேகமாக பரவியது. எங்களை அழைத்த போதே அடுத்த பேருந்திற்கு எங்களைப் போல காத்திருந்த இரண்டு மாணவர்கள் பள்ளியின் பக்கவாட்டிலிருந்து பின்புறம் ஓட, அவரருகில் இருந்த இரண்டு மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம் அவர்களைப் பிடித்து வரச் சொன்னார்.

யார் முன் செல்வது எனதறியாது ஒவ்வொரு அடியாக முன் நகர்ந்துக் கொண்டிருந்த எங்களை, “வாங்கடா வேகமா” எனவும் பயந்துபோய் அவர் முன்பாக நின்றோம்.

“எல்லாரும் அங்க போய் நில்லுங்கடா” என தலைமையாசிரியர் அறையை நோக்கி அவர் கை காட்டவும் ஏதோ பெரிதாக ஒன்று நடக்கப் போகிறது என்பதை புரிந்துக் கொண்டோம். எங்களுடன் இருந்த இளையோர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழத் தொடங்கியிருந்தனர். அதுநாள் வரையில் சத்திவேல் அய்யாதான் அப்பள்ளியின் கண்டிப்பானவர் என்கிற எங்கள் நம்பிக்கையை வெறும் ஒற்றை நாளில் மாற்றியிருந்தார்.

“ராமசாமி! அந்த பிரம்பை கொண்டு வா” என எங்கள் பள்ளியின் பணியாளை அழைத்த போதும்கூட எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அம்மைதானத்தில் வரிசையாக எல்லோரையும் மண்டியிட வைத்தவர் சரமாரியாக பிரம்பால் விளாசிய போது வயது வித்தியாசமின்றி அழத் தொடங்கினோம்.

“ஸ்கூல் முடிஞ்ச ஒடனே வூட்டுக்கு போகாம இங்க எதுக்குடா ஆட்டம் போட்டுட்டு இருக்கீங்க? என அடுத்த பேருந்துக்கு காத்திருந்தவர்களை தயவு தாட்சண்யமின்றி அடித்தார். ஊழியர்கள் அறையில் இருந்த அத்தனை ஆசிரியர்களும் சத்தம் கேட்டு வெளியே வந்து அதிர்ச்சியுடன் பார்த்தனர் இதுவரை தாங்கள் பார்க்காத நிகழ்வொன்று அரங்கேறுவதை. இருப்பினும் எவரும் எங்களுக்காக பரிந்து பேச முன்வரவில்லை.

அடி பொறுக்க முடியாத மாணவன்களில் ஒருவன், “சார், அந்த பஸ்ல கூட்டமா இருந்துச்சு சார். எடமே இல்ல. அதுனாலதான் அடுத்த பஸ்ல போலாம்னு இருந்தேன் சார்” என்றவனின் மயிரை இழுத்துப் பிடித்து மண் தரையில் தள்ளியவர், “அதான், அவ்வளவு எடம் இருந்துச்சே. அப்பறம் ஏண்டா போகல” என அவர் சொன்னது அப்பேருந்தின் மூன்று படிகளைத்தான். அதற்காகத்தான் வெறிக்கொண்டு அடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தபோது கிட்டத்தட்ட எல்லோரும் மனம் உடைந்து போனோம்.

“உங்க பஸ் வர வரைக்கும் இங்கயே முட்டி போடுங்கடா” என சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார். ஆனால், பேருந்து வரும்வரையிலான அரைமணி நேரத்தை கடக்கவியலாது நாங்கள் அனைவரும் தகித்துக் கொண்டிருந்தோம்.

வீட்டுக்குள் நுழையும் போதே பெரும் அழுகையுடன் நுழைந்தவனை ஒன்றும் புரியாமல் பார்த்த எனது பெற்றோரிடமும், “இனிமே நான் அந்த ஸ்கூலுக்கு போக மாட்டேன். நாளைக்கே எனக்கு TC வாங்கி கொடுங்க” என்ற போது என் அப்பா அதிர்ந்து போனார்.

“என்னடா ஆச்சு. திடீர்னு வந்து சொன்னா எப்படி?”

“அதுலாம் எனக்கு தெரியாது. இனிமே நான் அந்த ஸ்கூல்ல படிக்க மாட்டேன். அங்கதான் நான் படிக்கணும்னு நெனச்சீங்கனா இனிமே நான் படிக்கவே போகல. என்னை எங்கயாவது mechanic shop – ல சேத்து விடுங்க” என்ற போது எனது மொத்த குடும்பமும் ஒன்றும் விளங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அழுகிறேன் என எனது அக்காவும் அழுது கொண்டிருந்தாள் காரணமே தெரியாமல்.

இன்றொரு நாள் கடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த அப்பா, “சரிடா. நீ அந்த ஸ்கூலுக்கு ஒன்னும் போக வேணாம். ஆனா, திடீர்னு வேற ஸ்கூல்ல சீட் எப்படி கெடைக்கும். எல்லாம் பாக்கணும்ல” என்பது எனக்கு புரிந்தது. ஆனாலும் எனது பிடிவாதத்தை நான் தளர்த்திக் கொள்ளப் போவதில்லை என்பதில் திடமாக இருந்தேன்.

அடுத்தநாள் வெள்ளிக் கிழமை. இனிமேல் அந்தப் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதில் திடமாக இருந்த அதே சமயம், பள்ளியில் நடந்தவற்றையும் எங்கள் வீட்டில் சொல்வதற்கில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன். அப்படி அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்களுக்கு என் வலி புரியப் போவதில்லை. எனது அன்றாடங்கள் அவர்களுக்கு வெற்றுக் கதைகள் மட்டுமே.

அடுத்த நாள் சனிக்கிழமை, எனது வகுப்புத்தோழன் செந்தில் வீட்டுக்கு சென்ற போதுதான் வியாழக்கிழமையின் உண்மைகளை தெரிந்துக் கொள்ள நேரிட்டது.

எங்கள் வகுப்பில் இருக்கும் ரேகா, சரண்யப்ரியாவின் நெருங்கியத் தோழி. அவள் மூலமாகத்தான் அந்த உண்மைகசிந்திருந்தது. சக்திவேல் அய்யா இன்னும் இரண்டு வருடங்களில் ஒய்வு பெறுவதால், அவருக்கடுத்து லோகநாதன் சார்தான் தலைமையாசிரியர் என்பது உறுதியாகிருந்தது. ஆனால் துணை தலைமையாசிரியர் பதவிக்கு ஜெயராமன் சார் அல்லது அனந்த கிருஷ்ணன் சாரை நியமிக்க வேண்டும். அங்குதான் யாரும் எதிர்பாராத சிக்கல் இருந்தது. இருவரும் ஒரே நாள் பணிக்கு சேர்ந்தவர்கள். அதனால் அனுபவத்தில் மூத்தவர் யார் என்பதில் குழப்பம் வரவே, அவர்களது பிறந்த நாளை கணக்கில் கொள்ளலாம் என பார்த்தபோது இருவரும் ஒரே நாளில்தான் பிறந்திருக்கிறார்கள். அதன் பிறகே, நிர்வாகத் திறமை யாரிடம் சிறந்து இருக்கிறது எனப் பார்ப்பதற்காக அவரிடம் கொடுக்கப்பட்டதுதான் அன்றைய தினம்.

இதை எல்லாம் கேட்ட போது இன்னும் நொறுங்கிப் போனேன். எக்காரணத்தைக் கொண்டும் எனது முடிவில் இனி பின்வாங்கக் கூடாது என்பதில் இன்னும் உறுதியாக இருந்தேன்.

மறுநாள், வேறெந்த பள்ளியிலும் இடமில்லை. அரசாங்கப் பள்ளியில் மட்டும் இடமிருக்கிறது. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என்பதை அப்பா தெரிவித்தார். அப்படியானால், நானும் படிப்பை தொடரப் போவதில்லை என சொல்லவும் நீடித்த பெரும் வாக்குவாதத்தில், என்னை வீட்டருகில் இருக்கும் அரசாங்கப் பள்ளியில் சேர்க்க ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் ஒருவேளை பத்தாம் வகுப்பில் 475-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றால் மீண்டும் இப்போதிருக்கிற பள்ளியிலேயே சேர்த்துவிடுவார்கள் என்கிற உடன்படிக்கையில் சமரசத்திற்கு வந்தோம்.

அதன் விளைவாக, SSLC -ல், 488 பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகவும், மாநிலத்தில் ஐந்தாமவனாகவும் தேர்ச்சி பெறவே அப்பாக்கும், அம்மாக்கும் அத்தனை அதிர்ச்சி, ஆனாலும் பேரானந்தம்.

எனக்கு TC தர மறுத்த சக்திவேல் அய்யாவிடம் தனக்கு மதுரைக்கு பணி மாற்றம் காரணமாக குடும்பம் சகிதமாக இடம் பெயரப் போவதாக பொய் சொல்லிருந்தார் அப்பா. வெளிவந்த தேர்வு முடிவுகளைப் பார்த்து அதிர்ந்த சக்திவேல் அய்யா எங்கள் வீடு தேடியே வந்துவிட்டார். எல்லாவற்றையும் கேட்டறிந்தவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டவர் மீண்டும் என்னை தங்கள் பள்ளியில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.

அடுத்து நான் டிப்ளமோ பண்ணப்போவதாக சொன்னபோது அப்பாவும் அதிர்ந்து போனார். காரணம், மருத்துவர் ஆவதுதான் எனது கனவு என அதுநாள் வரையிலும் சொல்லிக் கொண்டிருந்தவன் இந்த அற்ப காரணத்திற்காக ஒரு முக்கிய முடிவை நொடிப்பொழுதில் எடுத்ததை அவரால் தாங்கிக் கொள்ளவில்லை. இருந்தாலும் என் மனதை புரிந்துக் கொண்டவரான சக்திவேல் அய்யா மேலும் வற்புறுத்தாமல் விடைப்பெற்றுச் சென்றார்.

என் கனவுகளையும், என் உளவியலையும் அந்த அற்ப பதவி உயர்வுக்காக ஒற்றை நாளில் சிதைத்துச் சென்ற அந்த மனிதனை அவசியம் சந்திக்க வேண்டுமா என யோசித்த போது எதிர்பாராவிதமாக சரண்யாவே நானிருந்த இடத்திற்கு மீண்டும் வந்துவிட்டாள்.

வேறு வழியின்றி அவளுடன் செல்ல வேண்டியதாக இருந்தது. செல்லும் வரையிலும் எனது தற்கால வாழ்வில் நான் நலமாக இருக்கிறேனா என்பதை தெரிந்துக் கொள்வதற்கான கேள்விகளை பல வழிகளில் கேட்டுக் கொண்டே வந்தாள்.

மூன்றாவது தளத்தில் நுழைந்து அந்த அறையின் கதவருகில் இருந்த இருக்கையில் என்னை அமரச் சொன்னவள், உள் சென்று தனது தந்தையை அழைத்து வருவதாக சொல்லிச் சென்றாள்.

என்ன செய்வதென தெரியாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, “அரவிந்த்தே….” என ஒரு நடுங்கும் குரல் மிக மெலிதாக கேட்க தலை நிமிர்ந்த போது ஒடுங்கிய உடலுடனும், வாயில் வெளியே வந்து வந்து செல்லும் நாக்குடனும், மடித்தே வைக்கப்பட்ட வலது கை அசைவு ஏதுமின்றி, தரைகள் உரசும் பிறழ்ந்து போன வலது காலுடன் தனது மொத்த தேகத்தின் எடையையும் இடப்பக்க உடலில் அசைவால் மட்டுமே நகர்த்திக் கொண்டு என் முன்னால் வந்து நின்றார் ஜெயராமன் சார்.

மனம் அதிர எழுந்து நின்ற என் தலை முடியை வருடியவர், “நல்லா இருக்கியாப்பா?” என்றார். பதிலேதும் பேச முடியாமல் குரல்வளையை யாரோ நெருக்குவது போலிருந்து.

என்னை உற்றுப்பார்த்தவர் எனது வலக்கையை அவரது இடக்கையால் இறுகப் பற்றிக்கொண்டவர், “எல்லாம் என்னாலதான?” என்ற போது அவரது கண்ணீரின் முதல் துளி எனது கரங்களில் விழுந்தது.

அடக்க முடியாமல் பொங்கி எழுந்த எனது கண்ணீர்த் துளி ஒன்று அவரது உள்ளங்கையில் வழிந்தோடியது – அவர் சொன்ன “எல்லாம் என்னாலதான” என்பதை என்னால் சொல்ல இயலாமல்.

எல்லாம் முடிந்த அன்றைய பள்ளிக்கூட தினத்தின் நள்ளிரவில் எங்கள் வீட்டின் மொட்டை மாடியின் மேல் கவிந்த வானம் அதிர நான் கத்தியது – “…த்தா, உனக்கு கை கால் வெளங்காம போகும்டா. தாயளி” என்பதை நினைத்து.

– ஏப்ரல் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *