‘பலான’எந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,503 
 

“வளரு..வளரு..!”..

குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை.

அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் …ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை.

யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் “என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?”என்றாள்.

“இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் எதிர்தாப்ல வந்தாருன்னு ஒதுங்கி நின்னேன்.அவரு வண்டியை நிறுத்தி ‘ஆபிசுல குப்பைக் கூலமா கெடக்கு..சுத்தம் பண்ணிட்டு பின்னாடி கிளப்புல வெத்துபாட்டிலுங்க கெடக்கு…எடுத்து வித்து காசாக்கி கைச்செலவுக்கு வச்சுக்க..’ன்னு சொல்லிட்டு போயிட்டாரு..!”

“………………”

“இரண்டு மணிநேர வேல.!..கையில முந்நூறுக்கு மேல..!எப்படி உன் மாமன்..சமத்து!?”குழந்தைகள் கவனிக்காதவாறு கண்ணடித்தான்.

“அதான்,புள்ளைகளுக்கு காராசேவு,பூந்தி.!..உனக்கு மல்லிகைச்சரம்,அல்வா’ன்னு வாங்கிட்டு வந்தேன்.என்ன ஒண்ணு,உனக்கு பிடிக்காதேன்னு நான் ‘மருந்து’மட்டும் போட்டுக்கல..!”என்றான்.

பன்னிரண்டு ஆண்டு தாம்பத்திய வாழ்க்கையில் அவள் அறியாததா?

‘ம்…பகல்பந்திக்கு பாய் விரிக்கச்சொல்கிறான்.பாவம்,ஒன்றரை மாதமாக பட்டினி போட்டுவிட்டாள்.விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் எப்படி அவளால் ஆசை கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியும்.?’

சிந்தனையோடு சிரித்தபடியே நகர்ந்தவள்,கணவன் தனக்காக வாங்கிவந்த பூவை குழந்தைகளுக்கு பிரித்து வைத்துவிட்டு..பூந்தி,அல்வா,காராச்சேவையும் பகிர்ந்தளித்தாள்.

“செல்லங்களா!பள்ளிக்கூட சாப்பாடு சரியில்லைன்னு மதியம் யாரும் வீட்டுக்கு வரவேணாம்..வெயில் மண்டைய பொளக்குது.இந்தாங்க பத்து ரூவா இருக்கு..சேட்டு பாவாகடையில புரோட்டா வாங்கி சாப்பிடுங்க.சாயங்காலம் உங்களை அழைச்சிகிட்டு வர அப்பா வருவேன்.வெயிலில் அலையாதீங்க”என்றான்.

கணவனின் திடீர் கரிசனத்தையும் ,குழந்தைகளின் முகத்தில் தாண்டவமாடும் மகிழ்ச்சியையும் ரசித்தவளாக…ஒரு பெருமூச்சோடு பழைய துணிகளை அள்ளியபடி பின் கட்டுக்கு நடந்தாள்.

கதவின் தாழ்ப்பாளை இட்டபடி “என்ன வளரு..!..புரிஞ்சிக்கமாட்டியா.?..இப்ப என்ன அவசரம் வீட்டு வேலைக்கு.?”என்றான்.

“அட..சும்மா இருய்யா,அலையாதே..பத்துக்குபத்து குடிசையில படுக்க இடமில்ல..ஆனா வீடுகொண்ட புள்ளைங்க ஆறு..”

“………………”

“ஆபரேசன் பண்ணிக்கலாம்னு போனா இரத்தக்கொறவுன்னு துரத்துறா டாக்டரம்மா..பாம்பு விழுங்கின தவளை மாதிரி விழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம நான் தலைய தொங்கப்போட்டு அலையறேன்.”

“போகட்டும்..விடு..வளரு.!..செல்வமில்லாத வீட்டுக்கு புள்ளைங்கதானே செல்வம்.!”

“இந்த சப்பைக்கட்டெல்லாம் ஆகாது…மாமா.!..ஒண்ணு நீ ஆபரேசன் பண்ணிக்க..இல்ல..மருந்துக்கடையில் ஒரு ரூபாய்க்கோ,ரெண்டு ரூபாய்க்கோ விக்கிறானாம்…அதையாவது வாங்கிட்டு வா..இல்ல நான் உனக்கு ஒத்துழைப்பு தர முடியாது “வெடுக்கென தலையை திருப்பியபடியே நடந்தாள்.

“வளரு..வளரு..அட நில்லு புள்ள..!..நான் தான் நாலுங்கெட்ட நாட்டுப்புறம்..நீ நாலெழுத்து படிச்சவ.!..கொஞ்சம் வெளக்கமா சொல்லு புள்ள..ஆஸ்பத்திரின்னாலே எனக்கு அலர்சி..தெரியும்ல உனக்கு…ஏதோ ஒரு ரூவா..ரெண்டு ரூவா மேட்டரு சொன்னியே…அதை விளக்கமா சொல்லு”அவள் கண்ணத்தில் கைகொடுத்து முகத்தை திருப்பினான் இன்னாசி.

“ம்…பட்டை சரக்கு எங்கே விற்குதுன்னு விசாரிக்க தெரியுதுல்ல…போய் விசாரி மாமா..வெட்கம் புடுங்குதோ.?..அதுதான் இப்ப டவுன்ல எல்லாம் முக்கியமான இடங்களில் மிஷின் வச்சிருக்காங்களாம்ல..ஒரு ரூவா போட்டா ஒன்னு வெளியில வந்து விழும்.!..எடுத்துகிட்டு வந்துடு மாமா..யாரையும் கேட்கனும்னு அவசியமும் இல்லை..கூச்சப்படவும் தேவையில்லை.!”
என்றாள்.

மனம் உற்சாகத்தில் துள்ள “சரி..வளரு..இப்பவே டவுனுக்கு போயிட்டு அரைமணி நேரத்துல வந்துடுறேன்.அப்புறம் வீட்டு வேலைக்கு உனக்கு ஒத்தாசை பண்ணுறேன்”என்றபடி சைக்கிளை மிதித்தான்.

பேருந்து நிலையத்தில் ‘அந்த’பெட்டியை பார்த்துவிட்டான்.

‘நம்மை யாராவது கவனிக்கிறார்களா….சேச்சே என்ன எழவு இது.?’

‘ அதோ ஒரு பெண் ,ஒரு ரூபாயை போட்டுட்டு எதையே எடுத்துகிட்டு போறாளே…நான் ஆண் ஏன் கூச்சப்படனும்.?’

‘அடச்சே..காமம் கண்ணை மறைக்கும்ங்கறது இது தானோ.!’

சட்டைப்பையில் துழாவி ,ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டான்.

‘இதுக்கு போயி என்னமாய் அலங்கரிச்சிருக்கான்.!வண்ண வண்ண மின்விளக்குகள் ஒ ளிர…உள்ளுக்குள் ஏதோ சக்கரம் வேறு சுற்றுகிறதே..ம்..நாடு ரொம்பதான் கெட்டுப்போச்சு.!’
பிளாட்பாரத்தில் நின்றபடியே ஒருரூபாயை மெஷினில் காசு போடுவதற்கான பிளவில் திணித்தான்.

எதுவும் வரக்காணோமே.? மலைமுழுங்கி மகாதேவனாக நாணயத்தை மட்டும் விழுங்கிவிட்டது எந்திரம்.

கூச்சத்தோடு நெளிந்தவனை நெருங்கிய பெரியவர் ஒருவர்.”தம்பி,மிஷின் மேல ஏறிநின்னு காசு போடுங்க..”என்றார்.

‘ஐ.!இதை சொல்லாம விட்டுட்டாளே நம்ம வளரு’

மகிழ்ச்சி தாண்டவமாட ஏறிநின்று இன்னொரு நாணயத்தை திணித்தான்.ஒரு பல்பு ஒ ளியை உமிழ…சங்கீதத்தோடு எந்திரம் எதையோ வெளியே தள்ளியது….

எடுத்தான்.

‘இதை என்ன பண்ணுறதாம்.? ஏதோ நாலெழுத்து படிச்ச கழுத.!..எல்லாம் அவளுக்கு தெரியும்..மெச்சியபடியே தீவிர உடல்பசியோடு வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
“உங்கள் எடை 81கிலோ.நீங்கள் மகா புத்திசாலி..பிறரின் அன்புக்கு பாத்திரமானவர்.!”என்ற வாசகத்துடன் இன்னாசியின் பையில் பயணித்துக்கொண்டிருந்தது ,எடை பார்க்கும் இயந்திரம் துப்பிய காக்கி நிற அட்டை.

– 18-6-2006 வாராந்தரி ‘ராணி’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *