பரிசுப்பொருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 5,231 
 

பத்து வயதான வாசு பரபரப்பாக வண்ண காகிதங்களை கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தான். முகத்தில் வியர்வைத் துளிகள், சட்டை நனைந்திருந்தது. அடிக்கடி தன் அறைக் கதவைப்
பார்த்துக் கொண்டான். அம்மா வந்துவிடப் போகிறார்கள் என்ற பயம்! எழுந்து போய்க்; கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான். பின்னர் மீண்டும் தரையில் அமர்ந்து தன் வேலையைத் தொடங்கினான்.

எதையோ மறந்து விட்டவன் போலத் தன் பக்கத்தில் இருந்த மடிக்கணினியைத் தட்டினான். அதில் தெரிந்த காணொளியைத் திரும்பப் பார்த்தான், தான் செய்யும் பொருள் சரியாக இருப்பதைக் கண்டு திருப்தியடைந்தான். தான் வெட்டி வைத்திருப்பதை ஒவ்வொன்றாக இணைக்கும்போது மட்டும் அவன் கைகள் நடுங்குவதை வாசு உணர்ந்தான். அதை அன்றைக்குள் எப்படியாவது செய்து முடித்துவிட அவன் மனம் துடித்தது. இறுதியாகப் பச்சை, சிவப்பு, நீல நிறத்தில் இருந்த மெல்லிய மின்கம்பிகளைப் பிணைத்து அந்த பொருளோடு இணைத்தான். “டேய் கிச்சா! என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னா சொன்ன! நாளைக்கு தெரிந்துவிடும் நான் யார் என்று!” வாசு தனக்குள் விஷமமாக சிரித்துக் கொண்டான். ஓர் அட்டைப்பெட்டிக்குள் அதைப் பத்திரமாக வைத்து, பரிசுப்பொருள் போல மடித்தான். அதை எடுத்துப் பையில் வைக்கவும், அம்மா வாசுவைச் சாப்பிட கூப்பிடவும் சரியாக இருந்தது.

இரவு படுப்பதற்கு முன், அந்தப் பொருள் உள்ள பையை மீண்டும் பார்த்தான். மூன்று நாளைக்கு முன் பள்ளியில் நடந்த அந்தச் சம்பவத்தை நினைத்துக் கொண்டான்.

“வரும் வியாழக்கிழமை ஆசிரியர் தினக் கொண்டாட்டம், நான் சொன்னது போல உங்கள் கைப்படச் செய்த வாழ்த்து அட்டையோ, பரிசுப்பொருளையோ மட்டுமே ஆசிரியர்களுக்குப் பரிசாகத் தரணும், என்ன சரியா?” என்று வகுப்பு ஆசிரியர் திருமதி பாலா சொல்லிக் கொண்டிருந்தார். “சரி, டீச்சர்,” என்றனர் அனைத்து மாணவர்களும். வாசு மட்டும் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துவிட்ட ஆசிரியர், “என்ன வாசு! நான் சொன்னது காதில் விழுந்ததா?” என்றார். திடுக்கிட்டவாறு எழுந்து நின்றான் வாசு. “நான் என்ன சொன்னேன், சொல்லு?” என்றார் திருமதி பாலா. வாசு தலையைச் சொறிந்து கொண்டு நின்றான; “டீச்சர், அவன் சோம்பேறி அவனால் ஒன்னும் செய்ய முடியாது!” என்றான் முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் கிச்சா! வாசுவின் முகம் வாடிவிட்டது. ஆசிரியர் கிச்சாவைப் பேசாமல் இருக்குமாறு சொன்னார். வாசுவை உட்காரச் சொல்லிவிட்டு, ஆசிரியர் தினம் பற்றி மீண்டும் விளக்கினார். அப்போதே வாசு ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். அதுதான் இப்போது அவன் தயாரித்து வைத்திருக்கும் அந்தப் பரிசுப்பொருள்! நாளைக்கு எல்லாருக்கும் தெரிந்துவிடும் வாசு யார் என்று!

மறுநாள் காலை வாசு பள்ளிக்கு மற்ற மாணவர்கள் வரும் முன்னரே வந்துவிட்டான். பள்ளி மணி அடித்தது. பையைத் தூக்கிக் கொண்டு கவனமாக நடந்தான். அந்தப் பொருளுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று அவன் பயந்தான். வழக்கமான பள்ளி சடங்குகள் எல்லாம் முடிந்தபின் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பினர். வாசுவின் மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது. அதற்குள் இதர மாணவர்கள் திருமதி பாலாவை சூழ்ந்துவிட்டனர். வாசு தயங்கியப்படி நின்றான். ஆசிரியர் அவனைப் பார்த்துவிட்டார். கையசைத்து அவனை வரும்படிக் கூப்பிட்டார். மெதுவாக நடந்து வந்து அவர் முன் நின்றான். அவன் தன் பையிலிருந்து பரிசுப்பொருளை எடுத்துக் கொடுப்பதற்குள், வாசு கையில் உள்ளதைப் பறித்து ஆசிரியரிடம் நீட்டினான் கிச்சா! இதைத் தான் வாசு எதிர்பார்த்தான். கிச்சா கையில் இருந்த அதை தம் கையில் வாங்கிய ஆசிரியர், “வாசு, நீ தானே செய்தாய்?” என்று கேட்டுவிட்டுப் பொட்டலத்தைப் பிரித்தார். அதனுள் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த காகிதப்பூக்கள் சிரித்தன. ஆசிரியர் ஆச்சரியத்துடன் வாசுவைப் பார்த்து புன்னகைத்தார். “அழகாய் இருக்கே! நீ தான் செய்தாயா? இதென்ன கம்பிகள்?” என்றார் அவர்;

“டீச்சர்! அதை கிச்சாவை இழுக்கச் சொல்லுங்க,” என்று சொல்லிவிட்டு வாசு வேகமாக வெளியே ஓடிவிட்டான். அவர் வாசுவைத் தடுத்து நிறுத்துவதற்குள், அவர் கையில் இருந்த பூங்கொத்தை “இப்படிக் கொடுங்க டீச்சர்,” என்று சொல்லிக் கொண்டே வாங்கிய கிச்சா, பிணைக்கப்பட்டிருந்த அந்த பச்சை, சிவப்பு, நீல நிறத்தில் இருந்த மின் கம்பிகளை வேகமாக இழுக்கவும், ‘பட் பட் பட்’ பட்டாசு போலச் சத்தம் காதைத் துளைத்தது. தொடர்ந்து மாணவர்களின் அலறல் சத்தம்; வாசு நின்று மெதுவாக திரும்பிப் பார்த்தான். சில ஆசிரியர்கள் திருமதி பாலாவின் வகுப்பை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. அதற்குள் அவரே வெளியே வந்து, “வாசு! இங்கே வா!” என்றார் அதட்டும் குரலில். ஆனால் வாசு நிற்கவில்லை. நடந்து கொண்டிருந்த அவன் காதுகளில் சிரிப்பொலி கேட்டது!

வகுப்பில் கிச்சாவைத் தவிர எல்லாரும் ‘கெக்க, பெக்க’ என்று சிரித்தனர். கிச்சா அசடுவழிந்தான். அவன் முகத்தில் மினுமினுப்பான துகள்கள் ஒட்டியிருந்தன! ஆசிரியர் கைகளிலும், சேலையிலும் கூட அவை ஒட்டி இருந்தன.

அதே வேளையில், பள்ளி வளாகத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த வாசு, தான் செய்த பரிசுப்பொருளால் தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த போது, “வாசு வகுப்பு 4சி, பள்ளி முதல்வர் அறைக்கு உடனே வரவும்!” என்ற அறிவிப்பு பள்ளி எங்கும் ஒலித்தது!

வாசுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *