திரைக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 5,196 
 

இரவு மணி ஏழு.

இருவது வருடங்களாய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராய் கொடி நாட்டி வரும் ஹரிபிரசாத் ,சமீபத்தில் ரிலீசாகி ,மெகா ஹிட்டான தனது படம் ‘ ஆக்‌ஷன் ஹீரோ’ வினை தனிமையில் தனது அறையில் அமர்ந்து ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ஆக்‌ஷன் ஹீரோவில் ‘க்ளைமேக்ஸ் காட்சி நெருங்கிக்கொண்டிருந்தது.

இதை எல்லாம் இவ்ளோ சரியா சொல்றியே நீ யார்னுதானே என்னைப்பார்த்து கேக்கறீங்க.சரிதானே?!
சொல்றேன்..அப்புறமா!

சதீஷ் வேறு யாருமல்ல.

ஹரிபிரசாத்தின் அசோசியேட் டைரக்டர்தான் சதீஷ்.மீன் குட்டிக்கு நீச்சல் கற்று கொடுக்கணுமா என்ன?

அவரின் அஸிஸ்டண்ட்களிலேயே சதீஷ்தான் ‘துரு துரு’ பேர்வழி.கற்பூர புத்திக்காரன்.

ஹரி பிரசாத்தின் முந்தைய படத்தின் தயாரிப்பாளர்தான், சதீஷ் இயக்கிய முதல் படத்தின் தயாரிப்பாளரும். பல அசோசியேட் டைரக்டர்களுக்கு வாய்ப்பு இப்படிதானே வந்து சேர்கிறது ?!

ஹரிபிரசாத்தின் அசோசியேட்டாய் சதீஷ் ,ஓடியாடி வேலை செய்துவந்ததையும், ‘சீன் ‘சொல்வதில் அவனின் கெட்டிக்காரத்தனத்தையும் பார்த்த அந்த தயாரிப்பாளர் , ஒரு நல்ல நாளாய் பார்த்து அவனின் கையில் அட்வான்ஸை திணித்துவிட்டு சொன்னார்.

“நீதான் என் அடுத்த படத்தோட டைரக்டர்.இந்தா பிடி அட்வான்ஸை”

பக்கத்திலிருந்து பார்த்தமாதிரியே சொல்றியே..நீ யார் னு மறுபடி கேக்கறீங்க சரியா? சொல்றேன்..அப்புறமா.

தனது குரு, ஹரிபிரசாத்தின் ஆசீர்வாதத்தோடு அசோசியேட் டைரக்டர் சதீஷ், டைரக்டர் சதீஷாய் பதவி உயர்வு பெற்றான்.

வெளியேவந்து அவன் இயக்கிய முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஹரி பிரசாத்துக்கு தெரியும்.சதீஷ் திறமையானவன் என்று.ஆனால்…இப்படி ஒரு மெகா ஹிட் படத்தை கொடுப்பான் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.

ஹரிபிரசாத்தே அசந்து போனார் அவனின் மேக்கிங் ஸ்டைலைக்கண்டு.

மூலை முடுக்கெல்லாம், சதீஷின் பெயர் போற்றப்பட்டுக்கொண்டிருந்தது.
குருவை மிஞ்சிய சிஷ்யனென்று சதீஷ்க்கு பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருந்தன.

எந்த டிவியை திறந்தாலும் சதீஷ் பேட்டிதான்.

சதீஷ் இப்படி வெற்றி சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தபோது தான் இன்னொரு சந்தோஷமும் அவனை தொலைபேசி வழியாய் வந்ததடைந்தது.

ஃபோன் வந்தப்போ நீ அவர் கூடவே இருந்தியாக்கும்னு கேக்கற மாதிரி தெரியுதே?!!

ஆமாம்..ஆனா, நான் யார்னு இப்போ சொல்ல மாட்டேன் அப்புறமா சொல்றேன்.

“நீதான் என் அடுத்த படத்தோட ஹீரோ.சம்மதமா?” என்றார், ஹரிபிரசாத்.

சதீஷ் பார்க்க ஹேண்ட்சமாய் இருப்பான்.
அதுதான் அவர் அவனை பிடித்துக்கொண்டாரோ தனது படத்துக்கு?

பெரிய இயக்குனராயிற்றே…பார்வை ஒன்றே போதுமே அவருக்கு? யார் யார் எந்த கேரக்டருக்கு செட் ஆவார்கள் என்று தெரியாதா என்ன அவருக்கு?

“சார்..கரும்பு தின்ன கூலியா?” என்று சொல்லி அடுத்த கணமே சம்மதித்தான்.

கரும்பு தின்பதற்குள் கூலி அவனுக்கு ‘கருப்பு’ப்பெட்டியில் அனுப்பி வைக்கப்பட்டது.

45 நாட்களில் ஹரிபிரசாத் எடுத்து முடித்த ‘ஆக்‌ஷன் ஹீரோ’ படம் மெகா சைஸில் ஹிட்டடித்தது

அன்றையிலிருந்து, சதீஷ் போட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோகிராஃபிற்கு கணக்கே கிடையாது. அவ்வளவு விசிறிகளை சம்பாரித்துக்கொண்டான். நடிப்பும் தண்ணீர்பட்ட பாடாய் வருகிறது சதீஷ்க்கு.

அடுத்த ஏழெட்டு வருஷத்துக்கு சதீஷின் கால்ஷீட் ஃபுல். பழந்தின்று கொட்டை போட்ட டைரக்டர்ஸ் எல்லாம் ,ஹீரோ சதீஷின் கால்ஷீட்டுக்கு வரிசையில் காத்திருந்தார்கள். டீமானிட்டைசேஷனில் ATM முன்பு நீங்கள் வரிசையில் காத்திருந்தது போல.

ஹரிபிரசாத் சாரின் கைராசிதான் சதீஷ் இவ்ளோ பெரிய ஹீரோவானது என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஹரிபிரசாத்தின் அறை.

ஆக்‌ஷன் ஹீரோவின் கிளைமாக்ஸ் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

வில்லன் ரித்துராஜ் , ஹீரோ சதீஷை கத்தியால் குத்துவது போல சீன் .அதில் ஹீரோ சதீஷ் அருமையாய் நடித்திருப்பதை பார்த்து மெல்லியதாய் சிரித்துக்கொண்டார், ஹரிபிரசாத்.

ஹீரோ சதீஷை அடிச்சிக்க தமிழ் இண்டஸ்ட்ரியில இனி ஆளே கிடையாது என நினைத்துக்கொண்டு மகிழ்ந்தார்.

“20 வருஷ தமிழ் சினிமா அனுபவத்தில் நீ எழுதிய திரைக்கதையில் இதுதான் பெஸ்ட் திரைக்கதை ஹரி. நீதான் எப்பவுமே நம்பர் ஒன் டைரக்டர்.உனை அடிச்சிக்க இனி ஆளே இல்லை”

அசரீரிபோல அவரிடம் சொன்ன குரல் கேட்டு ஆனந்தப்பட்டார்,ஹரிபிரசாத்.

அந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சீனை ரீவைண்ட் செய்து திரும்பிப்பார்க்க ஆரம்பித்தார் ஹரி பிரசாத்.

வில்லன், ஹீரோ சதீஷை கத்தியால் குத்திக்கொண்டிருந்தான்.

அந்த வில்லன் ரீத்துராஜ் ரூபத்தில் ஹரிப்பிரசாத் தெரிந்தார். அவரின் ஆக்ரோஷத்தில் ,இயக்குனர் சதீஷ் காணாமல் போய் ,அவன் ஒரு நடிகனாய் உருமாறிக்கொண்டிருப்பதை போல சீன் அவர் மனதில் ஓடியது.

தமிழ் சினிமாவின் எதிர்கால சிறந்த இயக்குனராகவிருந்த , அதுவும் இருவது வருஷமாய் நம்பர் ஒன் இயக்குனராய் இருக்கும் தன்னையும் பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் இயக்குனராய் ஒளிரும் திறமை கொண்ட சதீஷை, ஒரு நடிகனாக திசை திருப்பி விட்டு, தன்னுடைய நம்பர் ஒன் பொசிஷனை தக்க வைத்துக்கொண்ட திட்டம் வெற்றி அடைந்ததாய் எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தார், ஹரிபிரசாத்.

அதே நேரம். சென்னையின் பெரிய ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தனக்கு ராசியான அறை எண் 300 ல் ‘ஆக்‌ஷன் ஹீரோ ‘தயாரிப்பாளர் அமர்ந்திருக்க, அவரின் முன்னாடி அடக்கமாய் நின்றிருந்தான்,விக்னேஷ்.

ஹரிப்பிரசாத்தின் இப்போதைய அசோஸியேட் டைரக்டர்தான் விக்னேஷ். இவனும் திறமையானவன்தான்.

அந்த தயாரிப்பாளர் ,விக்னேஷின் கைகளில் அட்வான்ஸ் பணத்தை திணித்து விட்டு,

“நீதான் என் அடுத்த படத்தோட இயக்குனர்.இந்தா பிடி அட்வான்ஸை”
என்றார்.

நம்பிக்கையோடு அட்வான்ஸை வாங்கிய விக்னேஷ்,அடுத்த நொடியிலிருந்து உழைக்க தயாரானான்.

நம்பர் ஒன் பொசிஷனிலிருந்து தன்னை தூக்கி வீசி எறிய இருந்தவன் சதீஷ் அல்ல விக்னேஷ்தான் என்று பாவம் ஹரிபிரசாத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால்,விக்னேஷின் தொடர் வெற்றி ஹரிபிரசாத்தை ஒன்றுமில்லா இடத்துக்கு தள்ளப்போகிறதென்று காலத்துக்கு நன்றாய் தெரியும்.

அதான்!! இவ்ளோ அழுத்தமா சொல்றேன்.!

இவ்ளோ அழுத்தமா சொல்றியே? நீ யார்தான்பா? இப்பவாச்சும் சொல்லேன் எனும் உங்களுக்கு சொல்கிறேன் நான் யார் என்று.

எனது பெயர் ‘காலம்’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *