காலனி களவானிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,726 
 

எலே! ஏன்டா! அந்த வேலியைத் தாண்டி போய் போய் நிக்கிறீக? அதான் வாரா வாரம் வந்து கேஸைப் போட்டு நம்ம தாலியை அறுக்குறனோ இல்ல. அப்புறம் ஏண்டா? என ஒரு பெரிசு அதட்டியது ரமேசையும் அங்கே நின்ற பாபுவையும்..

ரமேசு கையில் உள்ள காசுக்கு குடிக்கனும், மேற்கொண்டு வாங்கிக் கொடுத்தா அதையும் குடித்து வூட்டுக்கு வந்து சாப்பிட்டு,தெளிந்து
மனைவி ஜெயாகிட்டே இருக்கிற காசையும் பிடுங்கி குடிக்கனும்..

ஆக நல்லா குடித்து கவர்ன்மென்டுக்காக உழைக்கும் ஓர் குடிமகன்.

அரசு ஒரு இலக்கை வைத்து விற்பனைக்கு விடுவதே இவர்களை நம்பித்தானே!

இவர்கள் இருவரும் நின்றது இரயில்வே பகுதியில், இவர்களின் குடிசையை ஒட்டியே தண்டவாளம்…சற்று தொலைவில் ரயில் நிலையம்.

இந்தப் பக்கம் இருபது குடிசைகள்.. அதில் துப்புரவு பணியாளர்கள், அன்றாட கூலிப் பணியாளர்கள்.. என வாழும் இடம் …. இல்லை இல்லை இருக்கும் இடம். அவ்வளவுதான்.

ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்படும் இடமும் இங்குதான், அதை கழுவி விட்ட அசுத்தங்கள் தேங்கி நின்று அடுத்த மழையில் கரைந்து இவர்களின் குடிசை ஓரத்தில் தேங்கி நின்று நாற்றத்தை கூட்டும். ஊரின் ஒட்டுமொத்த அசுத்தத்தை அகற்றும் இவர்களின் இடம் மட்டும் யாராலும் ஏன் அவர்களால் கூட கவனிக்கப் படாமலே இருப்பதுதான் ஆச்சரியம்.

சுத்தமாக இருப்பதை விட இப்பகுதி, சுத்தமாக்குவது வருடத்திற்கு இரண்டுமுறை… ஒன்று இப்பகுதி தீப்பிடித்து எறிந்து சுத்தமாகும், அல்லது புயல் மழையால் நீர் சூழ்ந்து மூழ்கி சுத்தமாகிடும்.

தங்களது வாழ்வாதாரத்திற்காக வாழ்வதே இவர்கள் வாழ்க்கையாகிப்போனது.

அப்போது ,ரயில் ஒன்று வரும் நேரம், ரமேசுக்கு ஒரு போனும் வந்தது.

ம்..ம். D8 ஆபத்து தேறுமா? ஓகே என சொல்லி, முடிக்க ரயில் ஒன்று வர, பெட்டிகள் மெதுவாக இவனை கடக்கத் தொடங்கின.

ஒரே தாவலில் பாய்ந்து ஏறி பெட்டியின் வெளியே ஜன்னலில் தொங்கிக் கொண்டே நகர்ந்தான்,கிடைத்த தகவல் படி D8 கோச்சுக்கு ஓரமாய் அமர்ந்து இருந்த பெண்ணின் சங்கிலி இவன் கைக்கு வந்து இருந்தது.

குதித்தான், ஓடி அங்கே மரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த கயிற்றைப் பிடித்து ஒரே தாவலில் தண்டவாளத்திற்கும், குடிசைகளுக்கும் நடுவே உள்ள வேலியைத் தான்டினான்.

விஷயம் அறிந்து இவனை பிடிக்க வேண்டுமானால் குடிசைப்பகுதியை அடைய பதினைந்து நிமிடம் ஆகும்.
வேலியைத் தாண்டி நிமிடத்தில் கானாமல் போகவே இந்த கயிறு.

கயிற்றில் இருந்து குதித்தான், ரயில்வே காவல்துறையினர் அங்கே சூழ்ந்து நின்றியிருந்தனர். கையும் கயிருமாக பிடிப்பட்டான். இவனுக்கு முதல் நிலையத்தில் இருந்து D8 கோச் குறித்து சேதி சொன்னவனும் அங்கே நின்று இருக்க பேச வார்த்தை மட்டும் வரவே இல்லை…ரமேசுக்கு. எதிர்பாராதவிதமாக பிடிபட்டான்.

அவன் கண் முன்னே குடியும், தீபாவளிக்காக அவன் மனைவி கேட்ட சொற்ப பணம் இரண்டாயிரமும் நினைவில் வந்து போனது.

நகையை வாங்கிக்கொண்டு அன்றே உரியவரிடம் ஒப்படைத்து பாராட்டைப் பெற்றனர் காவலர்கள்.

ரமேசின் மனைவி ஜெயந்தி அங்கு வந்து காவலரிடம் கெஞ்சி கேட்டு கணவனை மீட்டாள்….. சாவித்ரியாய்…உதவி ஆய்வாளரின் கோரப் பார்வையில் சிக்கினாள் இரையாய்…

தீபாவளி நேரமா இருக்கு ஓடிப் போயிடு, என இரண்டு நூறு ரூபாய் தாளை கொடுத்து விரட்டி விட்டு மனிதம் காத்தனர் காவலர்கள்.

கைக்கூப்பி நின்ற ஜெயந்தியை காவல் நிலையம் வரை அழைத்துச் சென்றனர், விலாசம் விசாரிக்க.

பண்டிகைக்கு முதல்நாள்..

அதே போல் களவு மீண்டும் நடக்க, இரவு ஒரு மணி இருக்கும், மழை இனி பெய்யப் போவதே இல்லை போல் பெய்து கொண்டு இருந்தது.

திபு திபுவென காவலர்கள்,சேறும் சகதியுமாய் இருக்கும் காலனிக்குள் ரமேசு குடிசைத் தேடி உள் நுழைந்தனர்.

அங்கே குடிகார கணவனுக்காக, குழந்தைக்காக, நாளைய தீபாவளிக்காகவும் ஒருத்தனுடன் உழைத்து ஓய்ந்த களைப்பில், உறங்கிக் கொண்டு இருந்த ஜெயந்தியின் ஆடைகள் கலைந்திருக்க,

சேற்றில் நுழைந்து வந்த எருமைகள் மூன்று அவளின் சம்மதத்தோடு அவளையும் சகதியாக்கி விட்டுச் சென்றது,

வழித் தவறிப் போனதை நினைத்து, ஓலமிட்ட அழுகைக் கூட மழையின் சப்தத்தில் அவளுக்குள்ளேயே அடங்கிப் போனது.

சாதி,மதம் பாராமல் செய்யப்படும் ஒரு சங்கதி இது மட்டும்தான்!

ரமேசு, நீ செஞ்ச மாதிரியே நான் அடிச்சேன் பாருடா! இன்னிக்கு. அஞ்சு பவுன் தேறும்! என உற்சாகத்தில் பாபு கூற சந்தோஷமாக குடித்து விட்டு, பாபு மட்டும் எங்கோ கானாமல் போனான்.

ரமேசு மட்டும் தடுமாறி வீட்டுக்கு திரும்பவும், காவலர்கள் காலனியை விட்டு வெளியேறவும் சரியாக இருந்தது.

நிலை புரியாமல் தடுமாறி விழுந்து ரமேசு எழுந்து பார்த்தபோது விடிந்து இருந்தது. கலைத்துப் போட்ட காகிதமாய் இருந்த ஜெயந்தியைப் பார்த்தான்..

சுருக்குப் பை மட்டுமே அவன் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தான் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது..

அவனின் அன்றைய தேவைக்கு கிடைத்த மகிழ்வில் வீட்டை விட்டு வெளியேறினான். அக்கம் பக்கம் எல்லாம் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டி இருந்தது.

இவளின் குழந்தை மட்டும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வெடிக்கவும் இல்லை..

ரமேசு அரசின் மது விற்பனை இலக்கை எட்டத் தன்னாலான முயற்சியில் இருந்தான்..

குடும்பத்திற்காக சுயத்தை இழந்தும், பிள்ளைக்காக வாழவேண்டி நடைப் பிணமானாள்..

பரிதாபங்கள் என்றும் ஓய்வதே இல்லை!

காலனியும் விதிவிலக்கல்ல!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *