காட்டு ருசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 5,849 
 

அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம்.

வழக்கத்துக்கு மாறாக… காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு “சள் சள்” ளென்று சீறுகிறான்.

மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல் கூலியாட்கள் ஏய்த்து விடுவார்களே என்கிற பதற்றம், அவனுக்குள். சம்பளம் வாங்கத் தீயாய் வருகிற ஆட்கள். பாடுபடாமல் தேங்கின தண்ணீராகத் தேய்ந்து போகிற வஞ்சகம். ச்சே! நினைத்தாலே மனசு கிடந்து கொதிக்கிறது.

என்றைக்குமில்லாத அதிசயமாக விடிவதற்கு முன்பே விழித்துவிட்டான் சீனிவாசன். டீக்கடை போய், ஓடைக்குப் போய், பல்லையும் தேய்த்துவிட்டு –

“என்ன ரெடியா?” என்று காலில் கொதி நீரை ஊற்றிக் கொண்டு நிற்கிறான்.

வேணித்தாய்க்கு எரிச்சலாக இருக்கிறது.

….வழக்கம் இப்படியல்ல. இந்நேரம் படுத்துக் கிடப்பார். நீட்டி நிமிர்ந்து எழுந்து டீக்கடைக்குப் போனால், ரெண்டு டீக்கடைகளிலும் டீ குடித்து. பேப்பர் பார்த்து, ஊர்க்கதைகள் பேசி….

ஆள் தட்டுப்படவே மாட்டார், ஒன்பது மணி வரைக்கும்.

இன்றைக்கு என்ன அதிசயமோ… சரியாய் விடிவதற்குள் “ரெடியா” என்கிறான். என்ன கூத்தோ….? கேட்க முடியாது கேட்டால். வள்ளென்று விழுவான்.

இப்போது தான் முற்றம் தெளித்திருக்கிறாள். வெல்லம், தேயிலை போட்டு, காப்பி போட்டுவிட்டு… அடுப்பில் இட்லிச் சட்டியை தூக்கி வைத்திருக்கிறாள்.

வழக்கம் போல…. சோறு என்றாலாவது. சட்டு புட்டென்று வேலை முடியும். கடைசி ஆடி… ஊரெல்லாம் தோசை விசேஷம்.

தோசை என்றாலாவது… சட்டி காய்ந்தவுடன் மாவை சர் சர்ரென்று ஊற்றிப் புரட்டி எடுத்து விடலாம்.

இந்த ராசாவுக்குத் தோசை என்றால் தொண்டையில் இறங்காது. ஆவியே ஆகாது என்பார். தோசையில் எண்ணெய் வாடை வருமாம். சாப்பிட்டால்… நாவறட்சி எடுக்குமாம். நெஞ்சுக்கரிப்பு ஆளைக் கொல்லும் என்று பயப்படுவார். தோசை என்றால். மூஞ்சி முந்நூறு கோணலாகும்.

இட்லிக்கு மாவை ஊற்றி வைத்தால்…. வெந்து முடிய ரொம்ப நேரமாகும். சொய்ங்யென்று விசிலடிக்கிற புகைச் சீறல், வேணித்தாய்க்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்.

அவசர அவசரமாய் அம்மியில் சட்னிக்கு அரைத்தாள்.

சீனிவாசன் பறந்து கொண்டு வருகிறான்.

“சாப்புடலாமா?”

“சித்தெ பொறுங்க”

“டக்கர் போயிருச்சு மண்ணடிக்க…”

“ஆளுக போய்ட்டாகளா?”

“ம்”

“மண்ணை புஞ்சைக்குள்ளே தட்டவா, வெளியே தட்டவா?”

“புஞ்சைக்குள்ளேதான்”

“சர்க்கரை தேயிலை வாங்கிக் குடுத்தனுப்பிச்சிட்டீகளா?”

“ம் தண்ணிக்கொடம். காப்பிச்சட்டி, கிளாஸ் எல்லாம் குடுத்தனுப்பியாச்சு”

“கலிங்கப்பட்டி கம்மாயிலே தண்ணில்லியா?”

“ம்”

“பாதை நல்லாயிருக்கா?”

“என்ன…. தொண தொணன்னு பேசியே உயிரை வாங்குறே?”

சிரித்தாள் வேணி. காத்திருத்தலைத் தோன்றவிடாமல் மறக்கடிக்கத்தான் பேச்சை ரப்பராய் இழுத்தாள்.

“என்ன சிரிப்பாணி?”

“கேக்குறதுமா குத்தம்?”

“அப்படியில்லே. டக்கருக்கு நானூத்தைம்பது ரூவா வாடகை. கூலியாளுக்கு எறநூத்தம்பது. இம்புட்டு செலவழிச்சு மண்ணடிக்கிறப்ப. நா போய் நிக்க வேண்டாமா? ரெண்டு நடை மண்ணு கொறைஞ்சிட்டாக்கூட… நூற்றி நாப்பது வட்டம் வரும்.”

“இப்ப யாரு….. உங்களைப் போக வேண்டாம்னது?”

“சாப்புடாம எப்படிப் போக?”

உக்காருங்க. இதோ – சட்னியைத் தாளிச்சிடுறேன்”

“அந்தா, இந்தா” வென்று கால்மணி நேரம் ஆகிவிட்டது.

முள்ளின் மேல் நிற்பவனைப்போல் பொறுமையற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிற சீனிவாசன் முன்னால்… வட்டில் ஆவி பறக்க இட்லிகள், கருகிப்போன கடுகும், கருவேப்பிலையும் சட்னிக்கு ஒரு லட்சணத்தையும் வாசத்தையும் தந்தது.

பறக்கப் பறக்க சாப்பிடுகிறான்.

“சட்னி இன்னைக்கு அம்சமா அமைஞ்சிருக்கு. தாளிச்ச வாசம் ஆளைத் தூக்குது”.

நிலக்குளிர்ச்சியான அந்தப் பனிப்பூ வார்த்தையில் வேணியின் எரிச்சல், கோபம் எல்லாம் மாயமாகி மறைகிறது வியர்வைக்குரிய கிரீடம் கிட்டிவிட்ட மனத்ததும்பல் அவளுக்கு அவள் குரலில் ஒரு மென்மையும் குழைவும்….

“நல்லாவாயிருக்கு? அவசர அவசரமா அரைச்சேன்… உப்புக்கூடப் பாக்கலே.”

“கச்சிதமாயிருக்கு வேணி. நெசந்தா.”

“இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கங்க.”

அந்தக் கணத்தில், அவள் அவளாகியிருக்கிறாள். உள்ளும் புறமும் மிருதுவாகி. அன்பால் நெஞ்சு ததும்ப… புருஷனை புதிய வாஞ்சையோடு பார்க்கிறாள். உள்ளுக்குள் உவகைப் பெருக்கு பீறிடுகிற பரிவுணர்ச்சி கண்ணோரங்களில் நீர்த்துளிகளாய் மனப்பரவசம்.

காய்ந்து கனல் பறக்கிற லௌகீக வாழ்வை ஜீவதப் படுத்துகிற மனச்சங்கமம். மானுட ஈரத்தில் வேர் விட்டு உயிர் வளர்கிற – முகம் கழுவிக் கொள்கிற – புது வாழ்க்கையின் கணங்கள்.

கையை கழுவினான். சட்டையை மாட்டிக் கொண்டான். சிகரெட், தீப்பெட்டி, செருப்பு, பரபரப்பு.

“வேணி, நீ புஞ்சைக்குப் போவணுமா?”

“மேலப் புஞ்சையிலே பருத்தி வெடிச்சு பூத்துக்கெடக்கு.”

“போ, சரி… மதியத்துக்கு?”

“கம்மாயிலேதானே இருப்பீக?”

“ம் சின்னவன் கிட்டே குடுத்து. தெக்குப்புஞ்சைக்கு அனுப்பிவை. மண்ணைத் தட்ட வர்ற டக்கர்லே கம்மாய்க்கு வந்துருவான்.”

“ஆட்டும்…”

“என்ன குடுத்துவிடப் போறே மதியம்? தோசை தானே சுடுவே?”

“உங்களுக்குத்தான் தோசை ஒவ்வாதுல்லே? அவிக்கிற இட்லியிலே மிச்சம் வச்சிருந்து… புதுசட்னியோட குடுத்துவுடட்டா?

“ம்.”

“ஆறின இட்லின்னு கோவிக்கக்கூடாது?”

“ம்”

அவன் முகத்தில் மெல்லிய பூஞ்சிரிப்பு. உள்ளுக்குள் பௌர்ணமி வெளிச்ச மகிழ்ச்சி. இங்கிதம் அறிந்து பேசுகிற வேணியின் மன அண்மையில் விளைந்த தன்மை.

தெருவில் இறங்கினான்.

சீனிவாசன் ஓடியாடிப் பாடுபடுகிறவனில்லை. ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியிலும் ரெண்டு வருஷம் குப்பை கொட்டினான். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

நாலா பக்கமும் காடுகரைகள். இறவைத்தோட்டங்கள், மானாவாரிக் கரிசல்காடு. கண்மாய்ப் பாசனத்தில் கொஞ்சம் வயல்காடு. பெரிய பண்ணைப் பிரபு கிடையாது மத்திய தர விவசாயி.

வரவு செலவு வருஷா வருஷம் இழுபறிதான். விளைச்சல் சரியாக இருக்காது. விளைந்த வருஷத்தில் விலை கிடைக்காது. ரெண்டும் கைகூடி வருகிற மாதிரியிருந்தால்… கல் மழை மாதிரி இயற்கை உற்பாதம் வந்து நாசக்காடு பண்ணிவிடும்.

விரல் நகத்தில் அழுக்குப்படாமல் மேற்பார்வை பார்ப்பான். உடலுழைப்புக்கு இயலாது. சில்லான் மாதிரி ஒல்லியான உடம்பு. மம்பட்டி பிடித்து ஒரு வாய்க்கால் வரப்பைக்கூட செதுக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் சம்பள ஆள்தான். தண்ணீர் பாய்ச்ச, பாத்திகட்ட, மூலை முடக்கு கொத்த… எல்லாமே கூலியாட்கள்தான்.

வேணித்தாய் ஓயாமல் பொருமுவாள்.

“வெளையுற வெள்ளாமை சம்பளம் குடுத்தே சாம்பலாயிரும்.”

“அதுக்கு என்ன செய்யச் சொல்றே?”

“உங்களாலே தண்ணி பாய்ச்சவுமா முடியாது பொம்பளைகூட பாய்ச்சுதாளே?”

“நமக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது”

படிப்பு படிச்சவுகளாம்! படிச்சிருந்தா… மம்பட்டியை தொடக்கூடாதுன்னு சட்டமா? கீரிடம் எறங்கிருமாக்கும்.

“நொய் நொய்ன்னு நச்சரியாதே…”

“வேர்வை சிந்தப் பாடுபாட்டாத்தான்…. அதோட அருமையும் அழகும் தெரியும்.”

“ஒழைக்கிறதுலே என்ன அழகு இருக்கு.

“ஒழைச்சப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். ஒடம்பு வலுப்படும். மனசுலே ஒரு தைர்யம் வரும். வேர்வை சிந்தி ஒழைச்சுப் பார்த்தாத்தான்… மனுசருக்கு மனுசக்குணமே வரும்.”

“வேணி… அஞ்சுலே வளையாத ஒடம்பு. முப்பத்தைஞ்சுலே வளைக்கணும்னு ஆசைப்படதே.”

“இதுலே ஒரு பெருமையாக்கும்?”

விளையாட்டான வெளுப்பாக உதட்டைப் பிதுக்கினாள் வேணி. ஆனாலும் விளையாட்டல்ல. வெளிப்படுகிற ஏளனம். ரொம்ப ஆழத்திலிருந்து கூர்மையாக வருவதாய். உணர்வான். ஆயினும் சீனிவாசன் அசையவில்லை. அப்படியேதான் இருந்தான்.

புஞ்சையில் கூலியாட்கள் பாத்திக் கட்டிக் கொண்டிருந்தால்… அவன் பாட்டுக்கு. டீக்கடையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பான். சாயங்காலம் போய்ப்பார்த்துவிட்டு வயிறெரிவான். காட்டுக்கத்தலாய்க் கத்துவான்.

“வாங்குற காசுக்கு வஞ்சமில்லாம ஒழைக்க வேண்டாம்? ஆள் இருந்தா, ஒரு மாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரி. மோசக்காரப் பாவிக. பாத்தி கட்டியிருக்குற லட்சணமா, இது? வரட்டும். பேசிக்கிடுதேன்.

சம்பளம் வாங்க வருகிறவர்களிடம் ஒரே சண்டைக்காடுதான். வருஷம் பூராவும் வம்பு வழக்குதான். தகராறுகள், கூலியாட்களைக் குறை சொல்லிச் சண்டை போடுவது… அவனது சுபாவமாகிவிட்டது.

வேலை தளத்துக்க போக முடியாமுலும் ஜோலிகள் வந்துவிடும். மேற்பார்வை ஜோலிகள், போங்குக்கு நகை அடகுவைக்க. கடன் வாங்க, கொடுக்க, உரம் வாங்க…. பூச்சி மருந்து வாங்க என்று ஜோலிகள்.

….போன வருஷம் மண்ணடிக்கிறபோது இப்படித்தான் எல்லா சம்சாரிக்கும் டக்கர் பன்னிரண்டு நடைகொண்டு வந்து கொட்டியது. இவனுக்கு பத்துநடை மட்டும்.

கேட்டால்… கண்மாயிலிருந்து புஞ்சை ரொம்பத் தூரம் என்கிற சால்ஜாப்பு. ஏமாளியாகிப் போய்ட்டோமே என்கிற மனக்கொதிப்பு, ரொம்ப நாளைக்கிருந்தது.

இந்தத்தடவை விடக்கூடாது என்ற முடிவு. கண்மாயிலிருந்து கடைசிவரைக்கும் வேலை நடக்கிற லட்சணத்தைக் கண்காணிப்பது என்கிற வைராக்யம்.

….வந்தாயிற்று, தெற்குப் புஞ்சை. அதோ. தூரத்தில் சிவப்பாய் வருகிற டக்கர். கோபு

ரங்குத்தியாய் மண். நல்ல வண்டல். புஞ்சைக்குள் ரெண்டாவது குமி தட்டி முடித்துவிட்டுத் திரும்பிய டக்கரில் ஏறிக்கொண்டான். வெறும் டிரெய்லர், லோடு இல்லாமல், வண்டி போகிற வேகத்துக்கு “பேய்க்குதி” குதித்து அதிர்ந்தது. தடதட சத்தம் காதைக்குடைந்தது போய்க்கூப்பாடு.

கலிங்கப்பட்டியை தாண்டிப் போகணும். இங்கிருந்து கண்மாய் மூன்று மைல் இருக்கும் கண்மாயின் உள்வாய்ப் பகுதி முழுக்க கருவேல மரங்கள். ஒன்றையொன்று உரசிக்கொண்டு. பின்னிக்கொண்டு, அடர்த்தி என்றால் அடர்த்தி, கற்றை அடர்த்தி, ஆள் போக முடியாது.

கரையை ஒட்டிய மடைகள், மடைகள் இருக்கிற உட்பகுதிகளில் கொஞ்ச தூரம் மரங்களில்லை. கன்னங்கரேலென்று இருள் மாதிரியான கரிசல் மண். ஈரல் கட்டி மாதிரி. ஆள் உயரத்திற்கு வெட்டுக் கிடங்குகள். அங்குதான் கூலியாட்கள்.

டக்கர் போய் வட்டமடித்து நின்றவுடன்…

அள்ளி வைத்திருந்த அறுபது கூடை மண்ணையும் சடபுடவென்று தூக்கிக் தட்டினார்கள். அள்ளிவிட, தூக்கிவிட என்று புயல் சுறுசுறுப்பாய் வேலைகள், பரஸ்பரம் அதட்டுகிற… ஏவுகிற… உசுப்புகிற சப்த அதிர்வுகள்.

“மம்பட்டியை ஓங்கிப்போடு!”

“கூடையை விருட்டுன்னு தூக்கிப்போடு”

“நடுவுலே எட்டி எறி”

“வெட்டி அள்ளு”

“ஏய், கையிலே உசுர் இல்லியா? ஓங்கிக் குத்து”

கண்மூடி முழிப்பதற்குள் வண்டி லோடாகிவிட, பீடியை சுண்டியெறிந்துவிட்டு டிரைவர் ஏறி… டக்கரை உயிர்ப்பித்தார்.

வண்டி போனவுடன் அவரவர் மரத்தடிகளில் போய்ச்சாயவில்லை. மாறாக, வேலைகள், சுறுசுறுப்புக் குன்றாத வேக வேலைகள். கடப்பாறையில் ஓங்கி ஓங்கி குத்தி மண்ணை நெகிழ்ந்து விடுகிற இருவர். நெகிழ்ந்து புரளும் கட்டிகளை உடைத்து இழுத்துக் குவியலாக்குகிற நால்வர். அறுபது கூடைகளிலும் மண்ணை அள்ளி அடுக்குகிற நால்வர். ரெக்கை கட்டிப்பறக்கிற வேலைகள்.

வியர்வை வரி வரியாய். துடைக்க நேரமில்லை. கரிசல மண்ணைப் போல கறுத்த உடம்புகளில் வியர்வைக் கசகசப்பில் அடைஅடையாய் கரிசல் தூசி.

கருவேல மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். சீனிவாசன். நிழலும் பொய் நிழல், வெக்கையான நிழல், செருப்பைப்போட்டு அதன் மேல்தான் உட்கார முடிகிறது.

வெயில் என்றால் வெயில். அப்படி வெயில், தீ வெயில், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கண்ணெல்லாம் காந்துகிறது. அலை அலையாய் அந்தரத்தில் நெளிந்தோடுகிற கானற் சங்கிலிகள்.

சீனிவாசனைப் பார்த்து அன்போடு சொன்னார்கள்.

“நீங்க எதுக்கு வெயில்லே சீரழியணும்? வீட்டைப் பாத்துப் போங்க.”

“எள்ளு காஞ்சதுன்னு… கூடவே எலிப் புழுக்கையும் காயஞ்சதாம்…”

“அதானே? நாங்க காய்றது சரிதான். தலைவிதி. வயித்துப்பாடு. நீங்க எதுக்குக் காயணும்?”

எல்லோருக்கும் பொதுவாக மெல்லிசாகச் சிரித்துப் பதில் சொன்னான். “இல்லே… நா இருக்கேன்.”

“அப்ப… இருங்க. எங்க தோள்லேயா இருக்கீக? ராசாப்போல இருங்க.”

வியர்வையைப் போலவே அவர்களுக்குள் வற்றாத கேலிகள், கிண்டல்கள், பரஸ்பர நையாண்டிகள், தாறுமாறான கெட்ட வார்த்தை வசவுகள். சண்டை போடுகிற மாதிரி காட்டமான கோபப் பேச்சுகள். எல்லாமே வேடிக்கை விளையாட்டுகள்தான். அலுப்புத் தெரியாமலிருக்க உணர்ச்சி வடிகால்கள்.

பேச்சு பேச்சாக இருந்தாலும்… சீனிவாசன் அடிக்கடி மணியைப் பார்த்தான். போயிருக்கிற நடைகளை எண்ணி மனசுக்குள் கணக்குப் போட்டான். பத்து நடைபோய்ச்சேரும் என்பதே சந்தேகம்தான்.

அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல்… அவனும் “கூடமாட” வேலைகள் செய்கிறான். சும்மாவே இருப்பதில் ஒரு குற்ற உணர்வு. உள் உறுத்தல். அதற்காகவே அவனும் உழைப்பில் பங்கெடுத்துக் கொண்டான்.

கடப்பாரையால் ஓங்கி ஓங்கிப் போட்டு அசைத்தான். மண் உருண்டைகளைப் பெயர்த்து உருட்டினான். கருவேலச் சல்லி வேர்களை அறுத்துக்கொண்டு மண் பெயர்கிறபோது… இவனுள் மழலைத்தனமான மகிழ்ச்சி. வெற்றி கண்ட மனப்பூரிப்பு. உழைப்பின் விளைவாய் நிகழும் மாறுதல்கள், அவனுள் ஒரு லாகிரியாய்.

நிழல் காலடியில் சுருண்டது. மதியமாகிவிட்டது. டக்கர் வந்து லோடு ஏற்றிப்போனவுடன்… லேசுமாசாய் கையைக் கழுவினர். தூக்குச்சட்டிகளை எடுத்து, வெட்ட வெயிலில் வட்டமாய் உட்கார்ந்தனர். திறந்தால்…. ஒவ்வொரு சட்டியிலும் பத்துத் தோசை, பனிரெண்டு தோசை. சட்னியில் நனைந்துகிடந்தது.

சீனிவாசன் அசந்து போனான். ஒரு மனுசனுக்கு இம்புட்டுத் தோசையா! சாப்பிட முடியுமா? அதுவும் தோசையா!

இவனையும் சாப்பிடச் சொல்லி ஆள் ஆளுக்கு உபசரித்தனர். மறுத்துவிட்டான். தோசை உடம்புக்கு ஒத்துக்காது.”

அவர்கள் சாப்பிட்ட வேகம். மறைத்துக் கொள்ளாத ஆசையோடு தின்கிற ஆர்வம். ருசி பற்றிய பேச்சுக்கள். அதிலேயே கேலிகளும் கிண்டல்களும்…. வாழ்வின் அவலமும்….

“தின்னுங்க தோசையை… விடாதீக.”

“ஆமா… நாளையிலேருந்து புளிச்ச கஞ்சிதான்.”

“ஆமப்பா…. புரட்டாசி மொதச் சனிக்குத்தான் தோசையைக் கண்ணாலே பாக்கமுடியும் நம்மாலே!”

“கூலிக்காரன் தெனம் தோசைக்கு ஆசைப்பட முடியுமா?”

“நடக்குற காரியமா?”

“துட்டுக்காரன் வீட்லே தெனம் தெனம் கடைசி ஆடிதான். தோசை மணந்தான்.”

“தோசைன்னா… தனி ருசிதான்.”

“ஆசைதோசை, அப்பள வடைன்னு சும்மாவா சொல்லுதாக”

“அதுலேயும் காட்டு ருசியிருக்கே…. அது ஒரு தனி ருசி.”

“கஞ்சின்னா… குடிச்ச மாத்திரத்துலே பசிச்சிரும். தோசைன்னா… கம்முன்னு கெடக்கும்.”

“கல்லு மாதிரி.”

வினோதப் பிறவிகளைப் பார்க்கிற மாதிரி ஆச்சரியமாய்ப் பார்த்தான் சீனிவாசன்.

“ராட்சஸங்கதான். தோசையையே இந்தப்போடு போடுறாங்களே, பாவிக. நம்மாலே ரெண்டு தோசையைக் கூட சாப்பிட முடியாதே.

இவனுக்கு இது ரொம்பப் புதுசு. ஆச்சர்ய அனுபவம் இவனுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்ட மலைப்பும், வியப்பும்.

பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது.

வேலையால் வழிகிற வியர்வை. சட்டையைக் கழற்றி வைத்துவிட்டான்.

தடதடவென்று பேயிரைச்சலாய்த் திரும்ப வந்த டக்கரின் சின்னவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவன் கையில் எவர்சில்வர் தூக்குச் சட்டி. அந்தரத்தில் ஏந்திப்பிடித்திருந்தான். குலுங்காமலிருப்பதற்காக.

கடப்பாரையை மண்ணில் குத்தி நிறுத்தினான். உள்ளங்கைகளைப் பார்த்தான். பிசுபிசத்த கரம்பைமண். அதையும் தாண்டித்தெரிகிற கன்றிப்போன சிவப்பு. காந்தலான வலி.

குடத்துத் தண்ணீரில் கையை லேசாகக் கழுவினான்.

ஆட்கள் டக்கருக்கு நிமிஷத்தில் லோடு பண்ணி முடித்தார்கள். திரும்பிப்போன டக்கரில் கோபுரங்குத்தியாக மண். தேர் அசைந்து நகர்கிற மாதிரியான தோற்றம்.

மரத்தடிக்கி வந்தான். அடத்தியான பெருமூச்சு. உட்கார்ந்தான்.

“என்னடா… அம்மா குடுத்துவிட்டாளா?”

“ஆம்ப்பா….”

“நீ சாப்பிட்டுட்டீயாடா?”

“சாப்ட்டுட்டேன்ப்பா?”

“இங்கேயும் சாப்புடுதியா?”

“வேண்டாம்ப்பா”

“அம்மா இட்லிதா குடுத்துவிட்டாளா?”

“இல்லேப்பா…”

சின்னவன் குரலில் மெல்லிய அச்சம். பூகம்பத்தை முன்னுணர்ந்த நடுக்கம்.

சீனிவாசனுக்குள் சுள்ளென்று வருகிற கோபம்.

“பொறகு?”

“தோசை”

சட்டென்று நிமிர்கிற சீனிவாசன். விரிகிற கண்களில் ஒரு விறைப்பு. மூக்கு நுனியில் மெல்லிய துடிப்பு. கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் படைப்பு.

“தோ…சை…யா?”

அவனுள் சண்டாளமாய்ப் பீறிட்ட வெறி. பிடிக்காது என்று தெரிந்தும் தோசை கொடுத்தனுப்பினால்….. அத்தனை அலட்சியமா? சின்னவன் முகத்தில் ஒரு மிரட்சி.

“இல்லேப்பா…. காலையிலே ஒரு விருந்தாளி வந்திருச்சு. எடுத்து வைச்சிருந்த இட்லியை அவுகளுக்கு அம்மா வைச்சிட்டாக.”

“ம்” அதில் ஒரு இறுக்கம்.

“தோசையை குடுத்தனுப்புறப்பவே… அம்மா சொன்னாக”

“என்னன்னு”

“உங்கப்பா என்னை வையத்தான் போறாரு. வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்னு சொன்னாக”

வேணித்தாய் சொன்ன சொற்கள் குளிர் நீராய் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனசை ஆசுவாசப்படுத்தியது. சமாதானப்படுத்தியது.

அலட்சியம் செய்யவில்லை. மதிக்கிறாள் என்பதை உணர்ந்த மனத்திருப்தி. உள்ளே புதைந்து கிடந்த பெருந்தன்மையுணர்ச்சியை உசுப்பிவிட்டது.

பெருமூச்சோடு சட்டியைத் திறந்தான். நாலு தோசை. ஒரு கிண்ணத்தில் சட்னி. அலம்பி விழுந்து தோசை நனைந்திருந்தது.

ஒரு தோசையை மட்டும் சாப்பிடுவது என்று உள்ளுக்குள் வைராக்யமான முடிவு. சகிப்புத்தன்மையை மீறிக்கொண்ட கசிகிற முணுமுணுப்போடு சாப்பிட்டான்.

சின்னவன் அவனது அம்மாவைப்போல, ரொம்பத் துறுதுறுப்பு. ஓடியாடி வேலை செய்கிற ஆர்வம். உழைப்பின் நாட்டம் ஓடி ஓடி மண்கட்டிகளைத் தூக்கிக் கூடைகளில் வைத்தான். பெரிய பெரிய கட்டிகளாய்க்கிடந்ததை மம்பட்டியால் உடைத்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான்.

அந்தப் பிஞ்சுப்பயல் வேலைசெய்கிற நேர்த்தியை – அழகை – சுறுசுறுப்பையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன்.

குனிந்து தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதிர்ந்தே போனான்.

நாலு தோசையும் காலி. நான்தான் சாப்பிட்டேனா என்கிற மலைப்பு. ஆச்சர்யம் இன்னும் கூட ஒரு தோசை சாப்பிடலாம் போல வயிற்றுக்குள் இடம்.

எண்ணெய் வாடை ஒத்துக்கொள்ளாது. நிஜம்தான். ஆனால், இப்போது ருசியாகவே இருந்ததாய் நினைவு. எப்படி? நாலு தோசை விழுங்க முடிந்ததே… அது எப்படி?

காட்டு ருசியே தனி ருசி என்பது இதுதானா? காட்டு ருசி என்றால்… உழைப்புக்குப் பிறகு வருகிற பசியா?

“வியர்வை சிந்தப் பாடுபட்டாத்தான்… அதோட அருமையும் அழகும் தெரியும்.”

“ஒழைச்சுப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும்.

வேணி அடிக்கிற சொல்கிற வேதம். நிஜம்தானோ?

ராட்சஸமாய் உழைப்பதால்தான்…. இவர்கள் பத்துத்தோசை என்று ராட்சஸதனமாய்ச் சாப்பிடுகிறார்களோ…

அவனுக்குள் ஆச்சர்யமான வெளிச்சம். சுபாவத்தையே அலசிக் காயப்போடுகிற அனுபவ வெளிச்சம். உள்ளுக்குள் துருவேறிக்கிடந்த சாளரங்கள் திறந்துகொண்ட உணர்வு.

சாயங்காலம்….

சம்பளம், வாங்க வந்த கூலிக்காரர்களோடு சண்டை போடவில்லை. சீனிவாசன். அன்றைக்கு மட்டுமல்ல….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *