கண்ணில் தெரியும் ஓவியங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 7,308 
 

வாயிற் கதவுகளற்ற ஒரு படியில் அப்போது அவள் நின்றிருந்தாள். அது Under groundற்குப் பக்கத்தில் இருந்தது.

வர்ணம் தேய்ந்த வெளிச்சுவரொன்றில் ஒட்டப்பட்டிருந்த, யாரையும் கவர முடியாததுபோல் தோன்றிய ஒரு ஓவியத்தை அவள் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அழகையும் அபூர்வங்களையும் நடந்தபடியே ரசித்துச் செல்வதென்பது இந்த அவசர நாட்டின் பொது நடைமுறை! ஆனாலும் எத்தகைய வேளைகளிலும் சில நிமிடங்களாவது தரித்து நின்று, ரசித்து விட்டுச் செல்லவே அவள் மனத்தில் ஆர்வமிருக்கும்!

ஓவியத்தினூடாய் நெஞ்சிற்குள் ரசனையற்ற கேள்விகள் எழுந்து கொண்டன.

அடுத்த கணமே அந்த ஓவியத்தை அதில் கொண்டு வந்து ஒட்டி வைத்தவனை ‘முட்டாள்’ என்று தனக்குள் திட்டினாள்.

நவீன ஓவியங்கள் என்ற பெயரில் வர்ணக்கலவைகளின் சிதறல்களில் எதைப் போட்டாலும் குற்றம் சொல்லாமல் இரசிக்க வேண்டுமென்ற ஓவியனின் அதீதத் தன்னம்பிக்கை அவளுக்கு எரிச்சலூட்டியது.

‘இல்லாத அர்த்தமொன்றைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது ..?’

ஒருவித அதிருப்தி உணர்வுகளோடு அதிலிருந்து விலக முற்பட்டாள். மெதுவாக நடந்தவாறே ஏனோ அதை மீண்டும் திரும்பிப் பார்த்தாள். ஓவியத்தின் வர்ணங்களும் தெளிவற்ற கோடுகளும் எதையோ குறியீடுகளாய்ச் சொல்கிற மாதிரியும் இருந்தது. ஆடைகளைத் துறந்த, கொங்கைகள் பருத்த பெண்ணின் சாயல் ஒன்று தெரிவதுபோலவும் இப்போ மாயம் காட்டியது! புரிவதும் புரியாததுமான சில ஜாலங்கள் அந்த வர்ணக் கலவையினுள் தோன்றி மறைவது போலிருந்தது! கவனத்தைக் குவியப்படுத்தி மீண்டும் கவனித்தாள்.

அது சொல்லும் சேதியைப் புரிந்துகொள்ளப் பிரயத்தனப்படுகிற வேளை பார்த்து, உலகத்தில் தானொருவனே, தனி மனிதன் என்பதுபோல, யாரோ ஒருவன் கைத்தொலைபேசியில் உச்சத் தொனியில் கத்திப் பேசிக்கொண்டு இவளைக் கடந்து போனான். அவனின் அதட்டலான பேச்சொலி அவளின் புலன்களை அடித்துப் பறித்துவிட்ட ஒரு நிலையில் அந்தச் சூழலின் நிஜம் திடீரென்று அவள் நினைவில் உறைத்தது! சுற்றுமுற்றும் அவசரமாகப் பார்த்தாள். அவளுடன் கூடவே வந்திருந்த ஒரு ‘குட்டி ஆராய்ச்சியாளன்’ தொலைந்து போயிருந்தது அப்போ தான் அவளுக்குத் தெரிய வந்தது!

இரண்டடிகள் பின்னால் வந்து எட்டிப் பார்த்தாள். அவனைக் காணவில்லை என்ற உணர்வு வேகமாக மூளைக்குள் பரவியபோது ஒரு அதிர்வு ஏற்பட்டது! உடல் முழுதும் பதற்றம் பரவி அவளை உரத்துச் சத்தமிட வைத்தது.

“அருண் … அருண் . .. ”

அவளின் பதற்றமான பெரிய குரலை, நாற்பது மைல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் வாரியள்ளிச் சென்றுகொண்டிருந்தன.

அவள் ‘Underground’ஐ நோக்கி அவசரமாய் ஓடினாள். வாசலில் அவளுக்கு அறவே பிடிக்காத அந்த உயரமான நாய் கட்டப்பட்டிருந்தது. German Shepherdக்குரிய அதே பளபளக்கும் கண்கள்! சிறு பருவத்தில் கண்ட அவளின் செல்ல நாயகியான ‘ஜிக்கி’யைத் தவிர வேறெந்த நாய்க்கும் அவளின் மானசீக உலகில் இடமிருப்பதில்லை என்பதால், அவள் எதையும் பொருட்படுத்தாமல் வேகமாய் உள்நுழைந்து பரபரவென்று கண்களைச் சுழல விட்டாள். நாயிற்கும் அப்பால் நான்கு பொலிஸ்காரர்கள் நின்றிருந்தார்கள்.

“அருண் … ”

இப்போ தழும்பலோடு வரும் அவளின் குரலை விழுங்குவதுபோல ‘German Shepherd’, அவளது உதடுகளின் அசைவினை ஊடுருவிப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அதன் மெல்லிய மஞ்சள் விழிகளும் நீண்டு தொங்கும் நாக்கும், தடித்த குஞ்சம் போன்ற வாலும் ஒரு கணம், “அருண்” என்று கத்துவதை நிறுத்தி வைத்தது.

யாரையோ விசாரித்துக்கொண்டிருந்த பொலீஸ்காரர்கள் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். ‘Under groundற்குள் போவோர் வருவோர் எல்லாம் வகைவயான பார்வைகளை வீசியெறிந்தபடி வேகம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். ‘Security’ அருகில் வந்தான். அவளுக்கு அவசரத்திலும் பதற்றத்திலும் மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது.

“அம்மா .. .” மெல்லிய கீச்சுக் குரலோடு, ரிக்கற் மெஷினுக்கு அருகில் நீண்டிருந்த ஜனவரிசையைப் பிய்த்துக்கொண்டு அருண் சிரித்தபடி ஓடிவந்தான்.

Securityக்கு விளங்கியிருக்க வேண்டும். ஒரு புன்னகையோடு checking pointஇல் மீண்டும் போய் நின்றுகொண்டான்.

“எங்கடா போனே .. ?” கையைப்பற்றி, ஒரு காலை மடித்துக்குந்தியமர்ந்தவாறே பேருவகையுடன் அவனை முத்தமிட்டாள். தலையை ஒரு தடவை கோதி விட்டாள். போகும் தறுவாயிலிருந்த உயிர் மீண்டு வந்தது போலிருந்தது! ‘German shepherd’ ஒரு தடவை குரைத்தது. குழந்தை முத்தத்தை நுகர்ந்த படியே இவளது தோளின் மேலாய் எட்டிப்பார்த்தான். இலேசான திகில் பரவிய கண்களை விரித்தபடி நாயின் பற்களைப் பார்த்துக்கொண்டே முத்தங்களை அனுபவித்தான். நாயின் ஒவ்வொரு குரைப்பும் அடைபட்ட ‘Under ground’ சுவர்களில் மோதி, பேரதிர்வுகளுடனான எதிரொலிகளை எழுப்பிவிட்டு, பிரதான வாயிலால் வெளியேறிக் காற்றில் கரைந்து காணாமல் போயிற்று!

அவள், அருணின் ஒரு கையை இறுகப்பற்றியபடி, கீழிறங்கும் மின்சாரப்படிகளில் போய் நின்றுகொண்டாள். வலப்புறம் வண்ணவண்ண மனிதர்கள் அன்ன வாகனத்தில் பறப்பது போல் மேலே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மேலாகச் சுவரில் ஓவியங்களும் விளம்பரங்களும், சிரித்தபடியும் முறுகியபடியும் போதைநிறைந்த கண்களுடன் ஆடைகளைத் துறந்தது பாதி .. . துறவாதது பாதியாய் அழகழகாய் நகர்ந்துகொண்டிருந்தன! ஒவ்வொன்றையும் ஒருவித லயிப்போடு பார்த்து முடிக்குமுன் அவை கண்சிமிட்டி மறைந்தன. ‘ஜில்’லென்ற காற்றுக் கீழிருந்து மேலாகத் தவழ்ந்து வந்து அவளின் கூந்தலை மெதுவாகத் தழுவுவதும் கலைப்பது மாய் அலைய வைத்துக்கொண்டிருந்தது! பாவாடை குடை விரிப்பதும் சுருங்குவதுமாய் ஜாலம் காட்டியபடியிருந்தது. கழுத்தில் சுற்றியிருந்த மெல்லிய ‘கிறீன் ஸ்காவ்’ முகத்தை நளினத்துடன் வருடுவதும் விலகுவதுமாய்த் தத்தளித்துக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் தலைமுடி கலைய, பரவசக் கண்களோடு அருண் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். லண்டனின் கோடைக் காலத்தில் ரெயில்களோடு சேர்ந்து ‘ஜில்’லென்று தள்ளியபடி வரும் இந்த ‘அண்டகிறவுண்ட்’ காற்று ஒரு புது சுகத்தைத் தருவது பற்றி அருμக்கும் தெரிந்திருக்கும்.

கீழ்த்தளம் பரபரப்பிலும் சுறுசுறுப்பிலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. North bound Platform அவள் திரும்பினாள்.

கனவுகளில் மிதந்தபடி ஏராளம் இளைஞர்கள்! இடைவெளிகளிருந்தால் காற்றுப் புகுந்துவிடலாமென, ஜோடிகள் இடைவிடாத நெருக்கத்தைப் பேணியபடியே போய்க்கொண்டிருந்தார்கள்.

Platform சுவரில் ஒற்றைக் காலை மடித்துச் சாய்ந்தபடி சுகிர்தராஜ்! அவன் கைகளில் ஏதோ சில புத்தகங்கள். இவர்களைக் கண்டதும் உற்சாகம் பொங்க, சிரித்தபடி அருகில் வந்தான். அருணைப் பார்த்து ஒரு செல்லமான சல்யூட் அடித்து, hello சொல்லிவிட்டு அவனைத் தூக்கிக் கொஞ்சிய படியே “நானிப்ப அக்கவுண்ட் கொம்பனி ஒண்டிலை வேலை செய்யிறனக்கா. Friend ஒருத்தனைச் சந்திச்சிட்டு வீட்டை போய்க்கொண்டிருக்கிறன்” என்றான் கண்களைத் திருப்பாமலே. தொடர்ந்து அருணின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டும், செல்லக் கதைகள் கேட்டுக்கொண்டும் தன் நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருந்தான்.

சில மாதங்களிற்கு முன்னர் . . .

அவனிடம் குழந்தைகளைப் பழகவிட வேண்டாம் என்று கமலினி சொல்லியிருந்தாள். ஆனால் குழந்தைகளுக்கு அவனை நிறையப் பிடிக்கிறதே என்பது இவளின் கேள்வி? அவன் ஆண்களுடனான நெருக்கமான வாழ்வைப் பல வருடங்களாகப் பேணிக்கொண்டிருப்பவன் என எல்லோராலும் அறியப்பட்டவன் என்றாள் கமலினி.

அவனின் மென்மையான பண்பான குணங்களை இவள் சிலாகித்துக் கூறியபோது தனது பேச்சை இவள் நம்பவில்லையோ என்ற தகிப்புக் கமலினியின் கண்களில்!

கமலினியின் அதீதக் கற்பனைப் பேச்சுக்கள் எப்பவும் இவளை மகிழ்ச்சிப்படுத்தியதாக ஞாபகம் இல்லை. அவள் கருத்துக்களை எப்பவுமே திணித்துச் சாதிக்க விரும்புபவள் என்பது இவள் எண்ணம்.

இவளின் மெல்லிய புன்னகை கமலினியை அப்போது எந்தவிதத்திலும் ஆசுவாசப்படுத்தியிருக்காது என்பது மட்டும் தெரியும்.

“புதிய திறமையாளர்களின் வரவு ஏற்படுத்தும் மனப்பாதிப்புகள் அந்தச் சூழலை ஆக்கிரமித்திருப்பது எப்பவும் தவிர்க்க முடியாமலே இருக்கிறது” என்று ஆர்.கே. சொன்ன போது “அது பழையவர்களை மட்டுமல்ல முழு நிறுவனத்தையுமே பாதிக்கும் நிலை வந்துகொண்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விடயம்” என்று பணியாளர்கள் சபைக் கூட்டத்தில் பணிப்பாளர் சொன்னார்! கமலினி பெரும் ஆமோதிப்புடன் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள்.

“ஊதியம் இல்லாமல், ஒலிவாங்கியை மட்டும் குறியாகக் கொண்டு வரும் புதியவர்களால் ‘நிகழ்ச்சிகளின் தரம் கேள்விக்குறியாகிக்கொண்டு போகிறது’ என நேயர்கள் பக்கமிருந்து கருத்துக்கள் வருகிறது” என்றான் இளங்கோவன். ஊதியப் பிரச்சனைகளால் ஏற்கெனவே அடிபட்டுப் போயிருந்த பணிப்பாளரின் முகம் அப்போது சட்டென்று சுருங்கிப்போனது.

கூட்டத்தில் புதியவர்களாய்ச் சமூகமளித்திருந்த சுகிர்தராஜும் முரளியும் மௌனமாகவே எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதன் பின்னர் அவனைப் பற்றிய அதிகப் பேச்சு அவர்களிடம் இருக்கவில்லை. அப்படிப் பேசுவதையும் அசாதாரண ஆராய்ச்சிகள் செய்வதையும் இவள் விரும்பவுமில்லை.

பின்னர் ஒரு நாள் . . .

ஸ்ரூடியோவில் (studio) நாடக ஒலிப்பதிவு தூள் கிளப்பிக் கொண்டிருந்தது. இளங்கோவனும் பார்த்திபனும் சுகிர்தராஜும் நண்பர்களாகவும் அதே நேரம் ஒருவரையருவர் மட்டம் தட்டியபடியே கிண்டல் பண்ணிக்கொண்டு சமைப்பதாகவும் ஒலிவடிவக் காட்சி! கூடவே கரண்டிகள் கத்திகள், பீங்கான் கோப்பைகளின் ஓசைகளோடு ஒலிப்பதிவு வெகு சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. சுகிர்தராஜ் கரண்டிகளை அடிக்க தட்டி, ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். ஸ்ரூடியோ மேசையில் பீங்கான் platesம் cupsம் பரவிக் கிடந்தன. இளங்கோவன் சாட்டோடு சாட்டாக சுகிர்தராஜை உண்டு இல்லை என்பது போல் மிக மோசமாக மட்டம் தட்டிப் பேசிக்கொண்டிருந்தான். நாடகப்பிரதியில் இல்லாத சில சொற்களையும் கவர்ச்சியுடன் சேர்த்துக்கொள்வதுபோலச் சேர்த்துக்கொண்டு அட்டகாசமாய் நடித்துக்கொண்டிருந்தான். கவிதா, பார்த்திபனின் girl friend வேடத்திற்குரிய குரலில் வெகு அநாயாசமாகப் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் கையை நீட்டி ஆவேசத்துடன் “இப்ப .. . உந்தக் கண்டறியாத சமையலை விட்டிட்டு வரப்போறீங்களோ இல்லையோ … ” என்று கேட்டு முடிக்கு முன், அவளின் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த தொங்கு ‘mic’கில் அவளின் வலது கை இடிக்க ‘mic’ தடாலென்று கீழே விழுந்து பெரிய ஆரவாரத்துடன் உருளும் ஓசை head phoneஇல் பயங்கரமாய் வந்தறைய, சாரு “cut . . .cut . . .” என்றபடியே ஒலிப்பதிவை அவசரமாய் நிறுத்திக் கொள்கிறாள்.

சுகிர்தராஜ் தாம் தூம் என்று கத்தத் தொடங்கினான்.

“ஆ .. . நல்லாப் போய்க் கொண்டிருந்தது .. . அதுக்குள்ளை குழப்பிப்போட்டீர் கவிதா. மைக்கிற்குக் கிட்ட நிண்டு கத்தாமல் கொஞ்சம் தள்ளி நிண்டு கத்தியிருக்கலாமே .. ?” என்றவாறே அவளைச் செல்லக் கோபத்துடன் பார்த்தான்.

“இஞ்சை … mic தெரியாமல் தட்டுப்பட்டது, நான் வேμமெண்டு விழுத்தேல்லை. உமக்கு இதுகளெல்லாம் பிடிக்கேல்லையெண்டால் பிடிக்கேல்லை எண்டு சொல்லும். அதுக்கேன் … micஐச் சாட்டிக்கொண்டு என்னிலை பாயுறீர்?”

கவிதா பகிடிபோலக் கோபத்தோடு சிரித்தாள். அவளின் அடுக்குப் பற்களுக்குள் ஆயிரம் நாகப்பாம்புகள் இருப்பதாக இவள் எப்பவும் கற்பனை பண்μவாள்!

சம்பந்தமில்லாத கவிதாவின் பதிலில் சுகிர்தராஜின் கண்கள் இலேசாகச் சிவந்து கிடந்தன!

பார்த்திபனும் இளங்கோவனும் காரணமின்றிச் சிரித்தார் கள்.

சின்ன சங்கரின் முகம் ஸ்ரூடியோவின் சிறிய ஜன்னல் கண்ணாடியினூடாகத் தெரிந்தது.

“என்னய்யா நடக்குது. நியூஸ் ரைம் எல்லே . . .” என்ற பாவனையோடு நியூஸ் றூமிலிருந்து கொண்டு வந்திருந்த பேப்பர்களை அவன் தூக்கிக் காட்டினான்.

பார்த்திபன் ஜன்னலினூடாய் அகன்ற விழிகளுடன் ஆடிய சின்னசங்கரின் முகத்தைக் கண்டதும் திடுக்குற்றுப் போய்க் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.

“ஐயோ .. . எனக்கிப்ப ‘நியூஸ் ரைம்’! நான் தான் ‘நியூஸ்’ வாசிக்க வேμம்” என்றவாறே கதிரையைத் தள்ளிக் கொண்டு அவசரமாக எழுந்தான். அதே நேரம் பரபரப்போடு அங்குமிங்கும் தலையை நீட்டி, studioவின் நீண்ட கண்ணாடிச் சுவரினூடாகப் பிரதான ஒலிபரப்புக் கூடத்தை (Beam) எட்டிப் பார்த்தான். ஒலிபரப்புக் கூடத்திலிருந்து ஆர்.கே, Recording studioவை எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். பார்த்திபனின் தலையைக் கண்டதும் வரும்படி சைகை காட்டியவாறே குறிப்பிட்ட விளம்பரங்களை ஒலிபரப்புச் செய்துகொண்டிருந்தார். ஆர்.கேயின் கணீரென்ற குரல், விளம்பரங்களின் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டு சிறிய ஒலிபெருக்கிகளினூடாகக் கலையகமெங்கும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது.

“இப்ப என்ரை Beam time எண்டு தான் time sheetஇல போட்டுக் கிடக்குது” சுகிர்தராஜ் தத்தளிப்பு நிறைந்த கேள்விக்குறியோடு பார்த்திபனைப் பார்த்தான். பார்த்திபன் எதுவும் பேசாமல் இவளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு வெளியேறினான்.

இவள் studioஐ off செய்துவிட்டு ஒலிப்பதிவை எப்போ தொடருவது என்ற யோசனையில் பிரதியைப் பார்த்தபடியிருந்தாள். ஒலிப்பதிவின் சில இடங்களில் பின்னணி இசை ஒத்துவராததுபோலத் துருத்திக்கொண்டிருந்தமை பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தாள்.

‘ரீ’ குடித்தால் இந்நேரம் நல்லாயிருக்கும் போலவும் தோன்றியது.

“உம்மட ‘வொய்ஸ்க்கு ‘நியூஸ்’ஐ விட ‘உங்கள் விருப்பம்’ நல்லாயிருக்கு சுகிர் … ” கவிதா வெளியில் யாரையோ பார்ப்பதுபோலப் பாசாங்கு பண்ணியபடி சொன்னாள். அவனுக்குக் ‘குப்’பென்று முகம் சிவந்து கொண்டு வந்தது. குரல் நடுங்க, தெத்திப்பல் தெரிய, “உம்மட வேலையை நீர் பாக்கிறது எப்பவும் நல்லது .. . நான் ஒரு ‘கொமன்ஸ்’ம் உம்மட்ட இருந்து எதிர்பார்க்கேல்லை .. .” என்றபடி தடா லென்று எழுந்து பதற்றத்தோடு வெளியேறினான்.

நாடக ஒலிப்பதிவில் அடுத்து இடம்பெறவிருந்த பாடல் காட்சியில் நடிப்பதற்குத் தயாராக நின்றிருந்த கமலினி அவன் வெளியேறுவதைப் பார்த்துக் கண்ணைக் காட்டினாள்.

அது சுகிர்தராஜை முற்றிலும் கேலி செய்வதாக இருந்தது! கவிதா சிரித்தாள். அவளுக்கு அது வரப்பிரசாதமாக இருந்தது. கோபம் வழியவழிய விழுந்துவிழுந்து சிரித்தாள். அவளது சிரிப்பின் நளினமான இராக அலைகளோடு ஆயிரம் நாகங்கள் தலைநீட்டி ஆடிவிட்டுப் பின் தலைகளை உள்ளே இழுத்துக் கொள்வதாய் இவள் கற்பனை பண்ணிக்கொண்டாள்.

“சரி . . . பார்த்திபன் நியூஸ் முடிச்சிட்டு வரட்டும். எல்லாரும் ஒரு ‘ரீ’ குடிச்சிட்டுத் தொடருவம்” என்றவாறே இவள் எழுந்தாள்.

“எனக்கு ‘அட்வேர்ட்’ செய்ய ஸ்ரூடியோ வேμமக்கா … ” கவிதா சொன்னவாறே ஒலிவாங்கிகளை உரிய இடங்களில் வைத்தாள்.

“அட்வேர்ட்க்கு மற்ற ஸ்ரூடியோ தானே பாவிக்கிறது ..? ” சாரு கேள்விக் குறியோடு பார்த்தாள்.

“அங்க இன்ரவியூ ரெக்கோடிங் நடந்து கொண்டிருக்கு … ” – கவிதா.

“அதுக்கு நானொண்டும் செய்யேலாது கவிதா. பின்னேரம் 3மணி வரைக்கும் நான் book பண்ணியிருக்கிறன். நாடகம் ‘ரெக்கோட்’ பண்ணி முடிச்சு, ‘எடிற்’ பண்ணி மற்ற புரொகிராமும் ரெக்கோட் பண்ணிக் குடுத்திட்டுத் தான் நான் வீட்டை போக வேμம். உம்மை மாதிரிப் பக்கத்திலை யில்லை என்ரை வீடு”

கவிதா ஒன்றும் பேசவில்லை. வெளியேறினாள். ஸ்ரூடியோவின் கண்ணாடிச் சுவரினூடாக beamஐயே நோட்டம் விட்டபடி நின்றிருந்த கமலினி சட்டென்று திரும்பி “நான் ரீ குடிக்கப் போறன். சாரு உங்களுக்கும் போடுறன் வாங்கோ..” என்றபடி கீழே kitchenக்குப் படியிறங்கினாள்.

ஆர்.கே. கண் சிமிட்டியபடி உள்ளே நுழைந்தார். தீமீணீனீ பார்த்திபனிடம் பாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

“ரெக்கோடிங் முடியேல்லையாக்கும் .. .” – எப்பவும் போலவே கண்களுக்குள் குறும்பை நிரப்பியபடி அவளைப் பார்த்துக்கொண்டு முன்னால் இருக்கும் கதிரையில் வந்து அமர்ந்தார். அவள் வெற்றுப் புன்னகையன்றைச் சிந்தியபடியே தலையை இலேசாக ஆட்டிவிட்டு ஒலிப்பதிவுச் சாதனங்களை முழுமையாக off செய்தாள். சில நேரங்களில் கோபத்தையும் கவலையையும் அடக்க, அந்த air condition அறையும் ஆர்.கேயின் புன்னகையும் எப்பவும் உதவியாக இருப்பதை அவள் உணர்ந்து ரசிப்பாள்.

“ஆர்.கே. அண்ணை. . . எனக்கிந்த இளையராஜாவின்ரை ‘How to Name it?’ CD ஒருக்கால் வேμம்” பிரதிகளை அடுக்கியவாறே அவரைப் பார்க்காமல் கேட்டாள்.

“என்ரை லொக்கருக்குள்ளை இருக்கு. இந்தாங்கோ ளீமீஹ் தேவையானதை எடுங்கோ எண்டுதானே சொல்லுறன் .. .”

அவர் புன்னகை மாறாமலே சொன்னார்.

“நீங்கள் ‘ரீ’ குடிக்கேல்லையோ?” அவளும் புன்னகையோடு கேட்டாள்.

“சாருவும் வந்தால் குடிக்கலாம் எண்டு தான் காத்துக் கொண்டிருக்கிறன்”

அந்த நேரம் அவரின் பேச்சும் புன்னகையும் மனத்திற்கு இதமாக இருந்தது. அவர் தனது நீண்டு வளர்ந்த கவர்ச்சியான சுருண்ட கேசத்தைக் கைகளால் கோதியபடியே எழுந்தார்.

Studioவுக்கு வெளியே அடுத்த பகுதியில் உள்ள தொழில் நுட்பச் சாதனங்கள் பொருத்தப்பட்ட மற்றைய அறைகளில் தமிழ்த் தொலைக்காட்சிக்கான ஒலி, ஒளிப்பதிவுகளும் விளம்பரப் படப்பிடிப்புகளும் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்களில் இருவரின் குரல்கள் இவளின் நாடகத்திற்கு அவசியமான குரல்கள் என்று மிகவும் அங்கலாய்த்தவாறே இவள் படியிறங்கினாள்.

‘வானொலிக்குத் தேவையான குவியப்படுத்தப்பட்ட தெளிவான குரல் எல்லோருக்கும் வாய்த்து விடாது. சுழியோடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது ..!’

Kitchenகுள் கமலினி ரீ தயாரித்துக்கொண்டிருந்தாள். சுகிர்தராஜ் ஏற்கெனவே ரீ குடிக்க ஆரம்பித்திருந்தான். திடுமென்று சொல்லாமல் கொள்ளாமல் கதவைத் தள்ளிக் கொண்டு கவிதா வந்து நின்றாள்.

ஆர்.கே – சாரு நட்பு, எப்பவும் கவிதாவைப் பாதிக்கிறது என்பது அவளின் ஏக்கமும் கோபமும் கலந்த, பொய்யான புன்னகை நிரம்பி வழியும் இடுங்கிய விழிகளிலும், திடுமென்ற அதிரடி வரவுகளிலும் சாருவுக்கு நன்றாகவே விளங்கும்!

ஒலிரப்புக் கூடத்திலிருந்து ஜெயச்சந்திரனின் குரலில் “பொன்னென்ன பூவென்ன கண்ணே .. . உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே .. .” என்ற பாடல் இதமாகக் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த ஒரு குளிர் நிறைந்த மார்கழி மாதத்து வெள்ளிக்கிழமை நாளன்று, கலையகமெங்கும் மின்சார ஒளி நிறைந்து இசையில் பரவசமடைந்திருந்த அழகான மாலை வேளையன்றில், சடாரெனக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று “அது என்ன அவவுக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயம்? அவ மட்டும் இதுக்
குள்ளை வந்து ஸ்பெஷல் ரோக் செய்திட்டுப் போகலாம் …

நான் மட்டும் வரக்கூடாதாக்கும் ..? ” – என்று ஙிமீணீனீஇலிருந்த ஆர்.கேயின் முகத்தில் கவிதா அள்ளி வீசிய சூடான வார்த்தைகளை இவள் தூர இருந்தே கவனித்ததும், அந்த வெப்பத்தில் ஆர்.கே. துடித்துச் சிவந்து போனதும் நல்ல ஞாபகம்! அந்த
அதிர்ச்சி சாருவின் மனத்தில் அடிக்கடி வந்து போனது பற்றி ஆர்.கேக்கும் தெரியாது.

கணவனில்லாமல் வாழும் அவளிடம் சாரு எப்பவுமே அன்பு செய்ய ஆசைப்பட்டாள். அவளின் தனிமை நிறைந்த வாழ்வு பற்றி நினைக்கும் போதெல்லாம் துயர இசையன்று எப்பவும் இவள் மனத்தினுள் ஒலித்துக்கொண்டேயிருப்பது பற்றி எப்போதும் அவளிடம் சரியாகச் சொல்லிவிட முடிவதில்லை. அவளின் மெலிந்த தோற்றமும் இடுங்கிய கண்களும் இயலாமை நிறைந்த நடையும் பார்ப்பவர் மனத்தில் அளவற்ற கருணையை ஏற்படுத்தக்கூடியவை. நிறைய வானொலி நாடகங்களில் கண்ணீர் ததும்பும் காட்சிகளை ஒரு தொலைக்காட்சி நாடகத்திற்குரிய தத்ரூபக் காட்சியாக அவள் நடித்து விட்டிருக்கிறாள். அந்த நேரங்களில் சாருவின் கண்களிலும் கண்ணீர் ததும்பும். அவளின் high pitch voice, நாடகங்களுக்கு அடிக்கடி தேவையாக இருந்தது என்பதால் சாரு அவளைத் தாராளமாகப் பயன்படுத்தினாள்.

“சாரு அக்கா … அருணை ஏன் இண்டைக்குக் கூட்டிக் கொண்டு வரேல்லை?” – சுகிர்தராஜ் ஆவலுடன் கேட்டான்.

கவிதா தன் விழிகளை உருட்டி எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு உதடுகளைக் குவித்து நளினம் பண்ணியவாறே ஒரு கேலிப்புன்னகையை நெளியவிட்டாள். கமலினி அடக்க முடியாதவள் போலக் ‘கிளுக்’கென்று சிரித்தபடியே tea cupsஐ மேசையில் வைத்துவிட்டு “ஏன் சின்ன பெடியன் இல்லாவிட்டால் வேலை ஓடாதாக்கும் … ” என்றாள் சிரித்தபடியே.

சுகிர்தராஜ் தலையைத் திருப்பி ஏற்கெனவே சீண்டப்பட்ட ஒரு பிராணியைப்போல இலேசான சினத்துடன் அவளைப் பார்த்தான்.

அருவருப்புகள் நிறைந்த அந்தப் பொழுதைத் தவிர்த்திருக்கலாம் என்று சாரு அவஸ்தைப்பட்டாள். ‘ரீ’ குடிப்பதற்குப் பிறகொரு நேரத்தைத் தெரிவு செய்திருக்கலாமே என்றும் கவலைப்பட்டாள்.

“உமக்கொரு பொம்பிளை பார்க்கிறம் சுகிர் … ” என்றாள் கமலினி.

“ஓ . . . அதுதான் இப்ப இல்லாத குறையாக்கும். எனக்கு அதொண்டும் தேவையில்லை … ” என்றான் சுகிர்தராஜ்.

“ஏன் .. . கலியாணம் கட்டி, குடியும் குடித்தனமுமாய் இருக்கப் பிடிக்கேல்லையோ அல்லது பொம்பிளைகளையே பிடிக்கேல்லையோ ..? ” – கவிதா அட்டணக்காலை ஆட்டிய படியே தலையைச் சரித்து, ஒரு தினுசில் கேட்டாள்.

சுகிர்தராஜ் சடாரென்று மேசையைத் தள்ளிவிட்டுக் கொண்டு எழுந்தான். கைகளும் கால்களும் கோபத்தில் நடுங்கின. உரு வந்தவன்போல் கண்கள் வெறிக்கப் பார்த்தான்.

சாரு வெலவெலத்துப் போய் ஆர்.கேயைப் பார்த்தாள். ஆர்.கே. செய்வதறியாது திகைத்துப் போயிருந்தார்.

கனத்த அமைதி நிலவிய கணத்தில் அவன் விசுக்கென்று வெளியேறினான். அவனின் tea cup, அரைவாசி ரீயுடன் இன்னமும் அப்படியே மேசையில் கிடந்தது.

பார்த்திபன் வெற்றிக்களிப்போடு உள்ளே நுழைந்தான்.

“ரீ இருக்கா .. ?” என்று ஒரு சாட்டுக்குக் கேட்டு வைத்தான். சுகிர்தராஜ் அந்தக் கட்டடத்தை விட்டே வெளியேறிவிட்ட மகிழ்ச்சி பார்த்திபனின் கண்களில்.

சாருவுக்கு இனம்புரியாத அசூயை உணர்வுகள் கிளம்பின!

அந்த இடமும் மனிதர்களும் அந்நியம் நிறைந்ததாய்த் தோன்றின! நான்கு பேருடன் அமைதியாக உச்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த உறவுப்பாலம் ஒன்று நாற்பது பேர் வந்தவுடன் அடைபட்டு நெரிபட்டு … ஈற்றில் உடைந்து விழுந்து விடுமோ என்று அச்சப்படுமளவிற்குச் சிதைவுகள் கூடிக்கொண்டே போவது போலிருந்தது! வெளியிலிருந்து தூண்டிவிடப்படும் சக்திகள் மிக வேகமாக ஊடுருவிக்கொண்டு வருவது போலவும் பயம் காட்டின.

பார்த்திபன் உற்சாகமாகப் பகிடி விட்டுக்கொண்டிருந்தான். கவிதாவைத் தவிர, யாரும் சிரிக்கவில்லை. கவிதா ஓரக்கண்ணால் ஆர்.கேயைப் பார்த்தபடியே சிரித்துக்கொண்டிருந்தாள். ஆர்.கே. எதை விரும்பிக் கீழே ‘ரீ’ குடிக்க வந்தாரோ அது அங்கே எரிச்சல் ஊட்டுவதாக அமைந்திருந்ததை அவரின் கண்கள் கூறின.

சாரு ஸ்ரூடியோவிற்கு மீண்டபோது சாந்தன் அதற்குள் ஒலிப்பதிவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சாரு தயங்காமல் கதவைத் திறந்தாள். அவனது ஒலிப்பதிவு இதனால் தடைப்படுமென்று தெரிந்தும் அவள் சினத்தோடு வாசலில் நின்றிருந்தாள். பின்னால் யாரோ திடும் திடுமென்று ஓடி வருவதுபோல் தோன்றத் திரும்பிப் பார்த்தாள். டொக்டர் சிறீ அவர்கள் கொடுத்துவிட்டுப் போன சில புத்தகங்களை மூச்சு வாங்காமலே ஓடிவந்த சின்னபாபு, இவளிடம் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சியின் விளம்பரப் பகுதிக்குள் நுழைந்து கொண்டான்.

“சாரு அக்கா, இப்ப நாலு மணிக்குரிய நிகழ்ச்சி இது. கெதியா முடிச்சிட்டு விடுறன் .. . பிளீஸ் … ” சாந்தன் கெஞ்சினான். அவள் ஒன்றும் பேசவில்லை. கதவை மூடிவிட்டுக் கையிலுள்ள புத்தகங்களைப் பார்த்தபடி வெளியில் வந்தாள்.

சுவரில் அடுத்த கிழமைக்குரிய பணியாளர்கள் கூட்டம் பற்றிய அறிவித்தல் புதிதாகப் போடப்பட்டிருந்தது.

“சாரு … இப்ப போகவேண்டிய நிகழ்ச்சி தான் சாந்தன் ரெக்கோட் பண்ணிக்கொண்டிருக்கிறார். என்னட்டைக் கேட்டிட்டுத் தான் செய்யிறார். 20 நிமிசத்தில விட்டிடுவாராம் . . .பிளீஸ் கொஞ்சம் adjust பண்μங்கோ” உப இயக்குனர் புன்னகையோடு கூறியவாறே இவளைக் கடந்து வெளியில் போய்க்கொண்டிருந்தார்.

மேசை மீதிருந்த தோற்பையினுள் இவளின் கைத்தொலை பேசியில் கிறிஸ் பிறவுண் காதல் ஏக்கத்தில் பாடத்தொடங்கியிருந்தார். இது வீட்டிலிருந்து வரும் அழைப்பு என்பது மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவசரப்படாமல் ஆறுதலாகப் போய்க் கைத்தொலைபேசியைத் தூக்கினாள்.

“இரவு எங்களுக்கு என்ன சாப்பாடு .. ?”

இத்தகைய அத்தியாவசியக் கேள்வியை இந்த நேரத்தில், அறிவு கூடிய ஒரேயரு நபர் மட்டும் தான் கேட்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். தொலைபேசியில் பதில் சொல்லி விட்டு வைத்தபோது அவளுக்குத் தலையை வலித்தது!

மீண்டும் ஒலிப்பதிவைத் தொடங்குவதற்கு எல்லோரையும் ஒன்று சேர்க்கவே ஒருமணி நேரம் போதாது. அதன் பின்னர் ஒலிப்பதிவு முடிந்து, train எடுக்க 7 அல்லது 8 மணியாகிவிடும்.

வீடு போய்ச்சேர 10 மணியாகிவிடும். வீட்டில் உருத்திர தாண்டவங்களைச் சந்திக்கும் திராணி இப்போ வரவர அவளுக்குக் குறைந்துகொண்டே போகிறது!

அவள் எல்லாவற்றையும் மூடிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானாள். ஆர்.கே. துடித்துப் போனவராய் “என்ன ரெக்கோடிங் முடிக்காமலே போறீங்களா?” என்றபடி அருகில் வந்தார். இவள் கவலையோடு தலையை ஆட்டினாள்.

அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“நாளைக்கு ஸ்ரூடியோ phone பண்ணி விடவா?” என்று கேட்டார்.

“இல்லை .. . பிறகு நான் ஜீலீஷீஸீமீ பண்μறன்” என்றாள்.

“நான் undergroundஇல dropபண்ணி விடவா .. ?” என்றார்.

“பரவாயில்லை நான் நடந்து போறன் .. .” புன்னகையன்றை உதிர்த்தவாறே அவள் படியிறங்கினாள். கவிதா அவசியமற்ற பொருளன்றைத் தேடுவதாய் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு திரிந்தாள்.

வாசலுக்கு வந்த ஆர்.கே. “சரி அப்ப கவனமாய்ப் போயிட்டு வாங்கோ … ” என்றார். இவள் திரும்பிப் பார்த்து நன்றியோடு தலையசைத்தவாறே “சுகிர் போயிட்டானோ .. ?” என்றாள்.

“போயிட்டான் .. .” என்றார் ஒருவிதத் தயக்கத்துடன். இவள் கையை அசைத்துவிட்டு, புத்தகங்களையும் தோற்பையையும் சுமந்து கொண்டு வெளிப்படியைத் தாண்டி நடக்கத் தொடங்கினாள். வெளியில் இருளும் ஒளியும் கைகோத்தபடி ஒரு அந்திப் பொழுதினை அரவணைக்கத் தொடங்கியிருந்தன. இவள் ‘சென் ஜோஜஸ்’ வீதியைக் கடந்து, ஏ24 பிரதான வீதியில் ஏறினாள். canon companyயின் உயர்ந்த கட்டிடமும் வர்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட பெயர்ப் பலகையும் தூரத்திலிருந்தே கண்களைப் பறித்தன. வாகனங்கள் இரைச்சலைக் கொட்டியபடி இவளைக் கடந்து போய்க் கொண்டேயிருந்தன. Argos, Marks & Spencer, JJB, Boots . . .எல்லாவற்றையும் கடந்து சென்று McDonalds வாசனையை நுகர்ந்தபடி undergroundற்குள் இறங்கினாள். Trainற்குள் ஏறிய போது வீட்டு ஞாபகம் மட்டுமே இருந்தது.

கலையகத்தில் சுகிர்தராஜ் இல்லாமல் போன சில மாதங்களின் பின் . . .

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்தான் அருணையும் கூட்டிக்கொண்டு சாரு கலையகத்திற்கு வந்திருந்தாள். திரும்பிப் போகும்போது அண்டர்கிறவுண்டில் சுகிர்தராஜைச் சந்திப்பாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை தான்.

அவனும் அவளை எதிர்பார்க்கவில்லை என்பதை இலேசான சங்கடம் கலந்த அவனின் சுருங்கிய விழிகள் சொல்லாமல் சொல்லின. சுகிர்தராஜைக் கண்டதில் அவனின் நாடகப் பாத்திரங்களும் அவனுக்காக வேறொருவரைக் குரல் கொடுக்க வைத்ததில் ஏற்பட்ட அவஸ்தைகளும் தான் முந்திக்கொண்டு அவள் மனக் கண்முன் ஓடிவந்து நின்றன.

அருண் தொடர்ந்து செல்லக்கதைகள் பல சொல்லிக் கொண்டேயிருந்தான். German sheperd பற்றியும் விழுங்கி விழுங்கி ஏதோ மழலையில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சுகிர்தராஜ் அதை ரசிப்பதும் கேள்விகள் கேட்பதுமாய் அருணின் தலைமுடியை ஆதரவுடன் கோதிக்கொண்டிருந்தான். அருகில் நின்றிருந்த ஜோடிகள் முத்தத்தை விட்டுக் கொடுப்பதாயில்லை. வாயும் வாயும் உறிஞ்சியபடியே கைகளால் உடலைச் சுற்றிக் காற்றைப் போகவிடாமல் இறுகத் தழுவியபடி நீண்ட நேரமாய் நின்றிருந்தார்கள். அந்த இடத்தை விட்டுச் சற்று அப்பால் போய் நகர்ந்து நிற்கலாமோ என்றும் எண்ணம் தோன்றியது. சுகிர்தராஜ் எவற்றையும் சட்டை செய்யாமல் அருμடன் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தான்.

இடையில் சாருவை நிமிர்ந்து பார்த்தவன் “sஷீக்ஷீக்ஷீஹ் அக்கா, உங்கட ரெண்டு நாடகங்களும் ரெக்கோடிங் முடிக்க முதலே நான் வராமல் நிண்டதால .. . நீங்கள் சரியா கஷ்டப்பட்டிருப்பீங்கள் .. . sஷீக்ஷீக்ஷீஹ் அக்கா .. . என்னால வேற ஒண்டும் செய்ய முடியேல .. .” அவன் சற்றே தயக்கத்துடன் கூறினான்.

“அதொண்டும் பரவாயில்லை. நீரிப்ப எங்கையிருக்கிறீர் சுகிர் .. ?” அவள் கேட்டாள்.

“உங்க தான் harrowவில .. .” அவன் சாதாரணமாகக் கூறினான்.

“Familyயோட இருக்கிறீரோ .. ?”

“இல்லை சாரு அக்கா .. ! அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் ஊரில தானே .. . நானிங்கை பெடியள் கொஞ்சப் பேரோடை சேர்ந்து வீடெடுத்து இருக்கிறன் … ”

“ ஓ .. . அப்பிடியோ .. . அப்ப .. . அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போற எண்ணமொண்டும் இல்லையோ .. .எல்லாரும் இப்ப விழுந்தடிச்சுப் போகினம் வருகினம் .. .”

சாரு எதார்த்தமாகக் கேட்டாள்.

“சே . .! தம்பி .. . அண்மையில வீரச்சாவு. இப்ப நான் அங்கை வாறது அவ்வளவு பாதுகாப்பில்லையெண்டு அம்மா சொன்னா. அதால … பார்த்துச் செய்வமெண்டு யோசிக்கிறன்.

“எத்தினை வருசமா குடும்பத்தைச் சந்திக்காமல் இருக்கிறீர்?”

“இப்ப 8 வருசமாகுதக்கா .. .” அவன் சற்றே தொய்ந்து போன குரலில் கூறிவிட்டு, “இருந்தாலும் அங்கை தான் என்ரை முழு அலுவலும் இருக்குது … கெதியாப் போகத்தான் வேμம் … பார்ப்பம் … ” என்றவாறே “ஙா … பிறகு dog என்ன செய்தது .. ?” என்றவாறே அருணின் பக்கம் திரும்பினான்.

“டேய் மச்சான் . .. எத்தினை தரமடாப்பா .. . உனக்கு phone பண்μறது? phoneஐ offலேயே வைச்சிருக்கிறாய் .. ?” கேட்டவாறே இளைஞன் ஒருவன் வந்து அவனின் தோளில் கையைப் போட்டான்.

“டேய் … அண்டகிறவுண்டில எல்லே நிக்கிறன் …என்னெண்டு கொமினிக்கேசன் கிடைக்கும்? கிட்னியைப் பாவியடா” – சுகிர்தராஜ் கிண்டலாகக் கூறினான்.

Train குளிர்ந்த காற்றைத் தள்ளியபடி மெதுவாக வந்து நின்றது. பயணிகள் மின்னல் வேகத்தில் இறங்குவதும் ஏறுவது மாக இருந்தார்கள். மண்டபம் இடைவெளிகளின்றிச் சில நிமிடங்கள் நிரம்பி வழிந்தது.

சுகிர்தராஜ், அருணை அவசரமாகக் கீழே இறக்கி விட்டுச் “சரியக்கா . . . ரெயின் வந்திட்டுது. நான் பிறகு உங்களைச் சந்திக்கிறன் .. .” என்றவாறே திரும்பி அருμக்கு “ஙிஹ்மீ” சொல்லிவிட்டு, அந்த இளைஞனுடன் கதைத்துக் கொண்டு போய் trainஇல் ஏறினான். train ஆயிரம் சனங்களை அள்ளிச் சுமந்தபடி நீண்ட சுரங்கத்தினூடாய் இருளைத் துளைத்துக் கொண்டு நகரத் தொடங்கியது.

இவள் தனக்குரிய அடுத்த train எப்போ வருமென்று digital information displayஇல் நேரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அருண் “பசிக்குதம்மா … ” என்றான்.

அவள் எல்லாம் மறந்து வீட்டைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்கியிருந்தாள் ..!

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *