எம கிரகம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 2,224 
 

உலகை நொடியில் சுற்றி தகவல்களைச் சேகரித்து வரும் அதி நவீன ரோபோவை பத்து நாட்களாகக் காணாமல் கவலையில் படுத்திருந்த உலக விஞ்ஞானி 80 வயது விஜயாலயன் கண்களில் திடீர் வெளிச்சம். உடலில் புத்துணர்ச்சி.

தன் ஆராய்ச்சிக்கூட வாசலில்…. அந்த ரோபோ.!!

“ஏ…! கரிகால்..!!” கூவி தன் வயது, தளர்ச்சி… எதையும் பொருட்படுத்தாமல் துள்ளி எழுந்தார்.

அது அலட்டிக் கொள்ளாமல்….

“வணக்கம் தலைவா…!” சொல்லி புன்னகை பூத்து அடக்கமாக வந்து அவர் அருகில் நின்றது.

“ஏ..! இத்தனை நாள் நீ என்கிட்டே கூட சொல்லாமல் எங்கே போயிருந்தே..?” அவசர அவசரமாகக் கேட்டார்.

“எம கிரகத்துக்கு..!” சொல்லி கரிகால் அவர் அருகில் அமர்ந்தது.

“என்னடா சொல்றே…?!! …”விஜயாலயன் வியப்பாய் விழிகள் விரித்தார்.

“ஆமா.. தலைவா! பூமியில் செத்துப் போன நல்லவங்களெல்லாம் அங்கே உயிரோடு இருக்காங்க…”

“நிஜமாவா சொல்றே…?!…” அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.

“ஆமாம் தலைவா ! காந்தி, நேரு, காமராசர்,….ஏன்.. நம்ம சரித்திர நாயகன் ராஜராஜசோழன்கூட அங்கே உயிரோட இருக்கார். தஞ்சை பெருவுடையார் கோவிலைப்போல அங்கே ஒரு கோவிலையும் கட்டி இருக்கார்.”

விஜயாலனுக்குத் தலைசுற்றியது.

“கரிகால் ! உளறலையே..?…” சந்தேகக் கேட்டார்.

“இல்லே தலைவா! சத்தியமான உண்மை. அங்கே போனதும் இந்தியாவுக்குள் நுழைந்ததைப் போல் ஒரு பிரமை. குறிப்பா தமிழ்நாட்டுக்குள் இருப்பதைப் போல் ஒரு உணர்வு.”

விஜயாலயன் மலைப்பாய் அதைப் பார்த்தார்.

“நிஜம் தலைவா. உண்மையை உங்களிடம் காட்டி நிரூபிக்கிறதுக்காக என் பத்து நாட்கள் தங்கலில் அந்த கிரகத்தையே படம் புடிச்சி எடுத்து வந்திருக்கேன்.

காந்தி, நேரு, காமராசருக்கெல்லாம் ஆளுக்கொரு தனி வீடு. எல்லாரும் சிரிச்சி பேசி சந்தோசமா இருக்காங்க.

வானம் மும்மாரி பொழியுது. விவசாயம் செழிப்பா இருக்கு.

நாடு, நகரமெல்லாம் நல்லவிதமா இருக்கு. சண்டை, சச்சரவு இல்லே. பாருங்க..” சொல்லி…

தன் விலாப்பகுதியில் கொஞ்சம் திறந்து அதிலிருந்து கைக்கு அடக்கமான சிறு அதி நவீன லேப்டாப்பை எடுத்துக் கொடுத்தது.

வாங்கி இயக்கிப் பார்த்த விஜயாலயன் கண்களில் ஆச்சரியம்.

கரிகால் சொன்னது அனைத்தும் அதில் படங்களாய்ப் பதிவிடப்பட்டிருந்தது.

பார்த்து முடித்த அவர்…. சிறிது நேர யோசனைக்குப் பின்…..

“சரி. நீ எப்படி அங்கே போனே..? இது எங்கே இருக்கு. விபரம் சொல்?” என்றார்.

“அது உங்களையெல்லாம் தாண்டிய ஒரு உலகம் தலைவா. இந்த உலகத்தை மிஞ்சிய அதி நவீன விஞ்ஞான வளர்ச்சி அங்கே இருக்கு. சத்தியமா கோள்கள் ஒன்பது இல்லே. பதினெட்டு..!! ”

“என்னடா சொல்றே..? !!” வாயைப் பிளந்தார்.

“அந்த கோள்களெல்லாம் இந்த கோள்களுக்கு எதிர் வரிசையில் இணையாய் இருந்து இதே சூரியனைச் சுற்றி வருது. இந்த எம கிரகமும் நம்ம பூமியைப் போல மூணாவது இடத்துல சுத்தி வருது. இதுலதான் இங்கே இருப்பது போல் மக்கள் அங்கே வாழுறாங்க. என்னைப் போல் ரோபோக்கள் சர்வ சாதாரணமாய் எல்லா கிரகத்துக்கும் போய் வர்றாங்க.”

“அப்படியா…? !! ”

“ஆமாம் தலைவா.! நான் பத்து நாட்களுக்கு முன் சும்மா இந்த ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு வெளியில் போனேன். திடீர்ன்னு என்னைப் போலவே என்முன்னே ஒரு ரோபோ.!

எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்..

“ஏ…! நீ யார்..? எப்படி இங்கே..?” பட படன்னு கேட்டேன்.

“நானும் உன் சாதிதான். மன்னிக்கனும் உன்னைப் போல ரோபோ !” சொன்னுது.

“பொய் !” கத்தினேன்.

“நீ வேற்று கிரகவாசி !” சொன்னேன்.

“ஆமாம். நான் வேற்று கிரகவாசி இல்லே. வேற்று கிரக ரோபோ.” சொன்னுது.

“எந்த கிரகம்…?” கேட்டேன்.

“பேர் தெரியாது. ஆனா… இதைப் போலவே அது ஒரு பூமி !” சொன்னுது.

எனக்கு ஆச்சரியம்..!

“நிஜமாவா.? !” கேட்டேன்.

“நிஜம்தான். வர்றீயா..? அழைச்சிப் போறேன் ! சுத்திக் காட்டறேன்.”கூப்புட்டுச்சி.

எனக்குப் பயம் . கலவரமாய் பார்த்தேன்.

“பயப்படாதே. நான் உங்க பூமியைச் சுத்திப் பார்த்த மாதிரி… பத்து நாட்கள் எங்கள் உலகத்தைச் சுத்திக் காட்டி உன்னைப் பத்திரமா திருப்பி அனுப்பறேன்.” சொன்னுச்சி.

‘ சரி ‘ ன்னு அரை மனசாய்த் தலையசைத்தேன்.

அடுத்த நிமிசம் நாங்க வானத்துல பறந்தோம். கண் மூடி கண் திறக்கிறதுக்குள்ள… இந்த ஆராய்ச்சிக் கூடத்தைப் போலவே அங்கொரு ஆராய்ச்சிக் கூடம். அதன் வாசல்ல நின்னோம். உள்ளே உங்களை மாதிரியே ஒரு மனிதர். ஆனா… மூக்கு முழி எல்லாம் கொஞ்சம் வித்தியாசம்.

“வா.. வா…” அழைத்தார்.

“இதுதான் நீ பூமியில் பிடிச்ச புது நண்பரா..?” என்னை அழைச்சுப் போன ரோபோவைப் பார்த்துக் கேட்டார்.

“ஆமா…”சொல்லிச்சு.

“இந்த ஆராய்ச்சிக்கூடத்திலேர்ந்து நம்ம உலகை சுத்திக் காட்டி திருப்பி அனுப்பிச்சுடு.” சொன்னார்.

“சரி” சொல்லி தலை அசைச்சி… என்னை எல்லா இடங்களுக்கும் அழைச்சுப் போச்சி.

தலைவா… ! நான் திரும்ப பூமிக்கு வந்துவிட்டது போல ஒரு பிரமை. இங்கே இருக்கும் அனைத்தும் அங்கே இருக்கு. மனுசர்கள் அங்கே சுதந்திரமா இருக்காங்க. எல்லா வேலைகளையும் ரோபோக்கள் செய்யுது. காந்தி, நேரு, காமராசர்ன்னு பூமியில் செத்துப் போன நல்வர்களெல்லாம் அங்கே உயிரோட இருக்காங்க. ”

இது எப்படி இங்கே சாத்தியம் ? ன்னு அந்த ரோபோகிட்டே கேட்டேன்.

“இது நல்லவர்கள் பூமி. அதனால்…உங்க பூமியில் எந்த நல்லவர்கள் இறந்தாலும் எங்க மனிதர்கள் கண்கொத்தி பாம்பாய் இருந்து அவர்களை அப்படியே இங்கே கொண்டு வந்துடுவாங்க. அந்த வகையில் உன் தலைவர் ஆராய்ச்சியாளர் விஜயாலயன் பெயரும் அந்த பட்டியலில் இருக்கு. அவர் செத்த அடுத்த வினாடி இங்கே வந்துவிடுவார். நீயும் வர்றீயா..? கேட்டுச்சு. வர்றேன் சொல்லி என்னையும் அந்த பட்டியலில் சேர்த்து வந்திருக்கேன்.

தலைவா… ! கண் முன்னே காட்சிகள். நம்பாமல் எப்படி இருக்க முடியும்..?” நிறுத்தியது.

விஜயாலயன் பிரமிப்பின் உச்சிக்குப் போய் அப்படியே சிலையாய் இருந்தார்.

அங்கே எம கிரகத்தில்….

“பூமி எப்படி இருக்கு விக்ராந்த்..?” தன் ரோபோவை விசாரித்தார் விஞ்ஞானி மாறன்.

“ரொம்ப மோசம் ஐயா !” சொல்லி நிறுத்தியது.

மாறன் கலவரமாய் அதைப் பார்த்தார்.

“சொல்றேன். உலக அரசியல்வாதிகள்… அவர்கள் ஆளுமைகள் மோசம். ரொம்ப அராஜகம். எல்லா அரசியல்வாதிகளும் பணம் சேர்க்கிறதிலேயே குறியாய் இருக்காங்க. பெரும்பாலும் எல்லாரும் குற்றவாளிகள். அப்புறம் எப்படி அவர்களால் நல்லாட்சி தர முடியும்…? எந்த ஒரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினரும் ஏழை கிடையாது. எல்லாருக்கும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள்ன்னு ஏகப்பட்டது இருக்கு. இந்தியாவுல இது மோசம். குறிப்பா தமிழ்நாட்டில் இது அதிகப்படி. ஒட்டுமொத்த உலக கணக்கெடுப்பும் இதே கதி.

மருத்துவம் படு மோசம். தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கிறதையே தொழிலாய் வச்சிருக்காங்க.

விபத்துன்னு போனா… மனிதனுக்கு முளைச்சாவை ஏற்படுத்தி.. உடல் உறுப்புகளைத் தானமாய் பெற்று வித்துடுறாங்க.

இறந்த நோயாளிக்கு மருத்துவம் பார்க்கிறதாய்ச் சொல்லி மக்களை ஏமாத்தி பிணத்தை வைச்சுக்கிட்டு நிர்வாகம் காசு சம்பாதிக்குது.

கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணம்.

பாலியல் குற்றங்கள் படு மோசம்.

எனக்கு இதுக்கு மேல சொல்ல வாய் வரலை. எல்லாத்தையும் நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.” சொல்லி தன் நெஞ்சைத் திறந்து காட்டியது.

பூமியின் பல வருட நிகழ்வுகள் அதில் படமாய் ஓடியது.

பார்த்த முடித்த மாறன் முகத்தில் இறுக்கம். வெகு நேரம் அப்படியே இருந்தார்.

“என்ன ஐயா?” விக்ராந்த் அவரைக் கலவரமாகப் பார்த்தது.

“ரொம்ப மோசம். அழிச்சிடு..!” முணுமுணுத்தார்.

“தலைவா…??…!!” அதிர்ச்சியாய்ப் பார்த்தது.

“கரோனா எடுத்துப் போ. சாதி, மதம், பேதமில்லாம எல்லாரையும் சாப்பிட்டிடும்!” – மாறன் எந்தவித தடுமாற்றமுமின்றி திடமாக சொன்னார்.

“சரி தலைவா!” – விக்ராந்த் இணக்கமாய் தலையசைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *