இருப்பல்ல இழப்பே இன்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 3,308 
 

சோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம் என்பது அவனுக்கு இன்று அனுபவமாகியது. ஆனால் இழப்பது இலகு இல்லை என்பதை அவன் வாழ்வு அவனுக்கு இரணத்தின் ஊடே ஆழமாக உணர்த்தியது. மொத்தத்தில் எல்லாம் போன பின்பே எது அவனுக்குத் தேவையானதோ அது வந்தது சேர்ந்தது. அது வந்தபோது அத்தினையும் இல்லையே என்கின்ற எந்த ஏக்கமும் அவனிடம் இல்லை. தேட வேண்டும். ஆனால் தேடிக் கொண்டே இருப்பது மட்டும் வாழ்வல்ல என்பதும் அவனுக்கு விளங்கியது. மனித வாழ்க்கைக்குத் தேவை இல்லாததைத் தேவையானதாக எண்ணி வாழ்வைப் பாழாக்கிக் கொண்டு இருந்த மடமை விளங்குவதற்கு அவனுக்கு நீண்ட ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. அது எப்படிக் கிட்டியது என்பதை அவன் ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தான்.

சோதி தனித்தே வாழ்வைத் தொடங்கியவன். மனித வாழ்வு பொதுவாக அப்படியே தொடங்குகிறது. இடையில் வருவதும் போவதும் எத்தினை எத்தினையோ? அது பற்றி அலட்டிக் கொள்ளாதவன் மனித வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பார்க்கிறான். அதைத் தவற விடுபவன் செக்கு மாடாகிறான். அதுவே வாழ்வு என்று நம்புகிறான்.
அது அப்படி இருந்தாலும் இவ்வுலகில் மனிதன் தனித்து வாழ்ந்துவிடுவதில்லை. உறவுகள் சுற்றி வளைத்த உணர்ச்சிகளில் சிக்கித் தவிப்பதே இந்த உலகில் வாழ்வாகிறது. அதுவே சாதாரண மனிதர்களால் போற்றப்படுகிறது. அதையே சிறப்புற்ற வாழ்வாகப் பலரும் பார்க்கிறார்கள். போற்றுகிறார்கள். அந்த உறவுகளில் நல்லதும் வருகின்றன. கெட்டதும் வருகின்றன. எது எம்மை ஆட்சி செய்கிறது என்பதைப் பொறுத்தே எமது வாழ்வு அமைகிறது.

நகுலனே சோதியின் வாழ்வில் அவனை அடுத்து வந்தான். ஏன் வந்தான் என்பது விளங்கவில்லை. எப்பிடி வந்தான் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. மனதிற்குள் ஏதாவது சிறிய அநியாயத்தை உணர்ந்தாலும் அவனே முன்னுக்கு வந்து நிற்பான். வதம் பண்ண என்று உப்புப் பெறாதவற்றிற்கும் உத்திர தாண்டவம் ஆடச் சொல்வான். தொடக்கத்தில் அவன் பாதிப்பு சிறிதாகவே இருந்தது. ஆனால் வயது போகப் போக பிரச்சனைகள் கூடக் கூட அவனின் பிடி மேலும் அதிகரித்தது. எள்ளுப் போன்ற பிரச்சனையை மலையாக அவனால் ஊதி உருவகப்படுத்தப்பட்டன. என்ன விளைவு வரும் என்பதை எண்ணாது எதையும் செய் என்கின்ற அழிவான ஊக்கத்தை எந்தக் கூச்சமும் இன்றி அவன் சோதிக்குத் தரத் தொடங்கினான். சோதிக்கு வரவர அவனைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இருந்தும் அவனைத் தள்ளி வைக்க முடியவில்லை. இந்தச் செய்கைகளால் சோதியைத் தேடிப் பல நோய்களும் வந்தன. அவனின் மன உளைச்சல் அதிகரித்தது. அதைப் பற்றி நகுலன் சிறிதும் கவலைப்படாது எப்போதும் கூடவே இருப்பான். எப்போது சந்தர்ப்பம் வருகிறதோ அப்போது எல்லாம் ருத்திர தாண்டவம் ஆடுவான். அவன் யோசிக்காமல் ஒரு கணத்தில் ஆடும் ஆட்டம் அடங்கிய பின்பே அந்த ஆட்டத்தின் விளைவு விளங்கும். அவன் ஆட்டத்தில் நடந்த தவறுகளை சிதறிய கண்ணாடியைப் போல பின்பு திருத்த முடியாது.

விமலன் இரண்டாவதாக நகுலனோடு போராடுவதற்கு என்றே வந்தவன் போல வந்தான். அவனைச் சோதிக்கு மிகவும் பிடிக்கும். அவன் வரவு சோதிக்கு நிம்மதியைத் தந்தது. ஆனால் நகுலனுக்கு முன்பு விமலன் சில வேளைகளில் ஒன்றும் இல்லாதவனாகப் போய்விடுகிறான். அதைப் பார்க்கச் சோதிக்கு கவலையாக இருக்கும். பரிதாபமாக இருக்கும். அவன் விமலனைப் பலப்படுத்த வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் நகுலனின் பிரசன்னத்தில் சோதியால் விமலனைச் சில வேளைக் கவனிக்க முடிவதில்லை. விமலனோடு மட்டும் குடியிருந்தால் அவன் வாழ்வு மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றும். மனித நட்பு ஒருவருடன் முற்றுப் பெற்று விடுவதில்லை. பல நபர்களோடு பல கோணங்களில் அது அபிவிருத்தியாகும். சில வேளை திடீரெனப் பல அழிந்து அல்லது அகன்று போய்விடும். பின்பு மீண்டும் தொடங்கும்.

இவர்களின் பின்பு சுரேஸ் சோதியுடன் சேர்ந்து கொண்டான். சுரேஸ் வந்தால் அந்த இடம் சோபை இழந்து போய்விடும். அனைவரும் தலையில் கைவைத்துக் கொண்டு மற்றவர்களோடு கதைக்கக்கூட விருப்பம் இல்லாது சோம்பி இருப்பார்கள். ஏன் அவன் வரவு அப்படிச் செய்கிறது என்பது பலருக்கும் விளங்குவதில்லை. விளங்கினாலும் விளங்காவிட்டாலும் அவன் வரவு அப்படிச் செய்கிறது. மனித இயல்புகள் பலவிதம். சிலர் வந்தாலே அந்த இடமே கலகலப்பாகிவிடும். சிலர் வந்தால் அந்த இடமே சோபை இழந்துவிடும். அது அவர்கள் தவறு என்று இல்லை. ஆண்டவனின் படைப்பு அப்படியாக இருக்கிறது. அல்லது மனித மூளையின் விசித்திரம் என்று சொல்லலாம்.

இதற்கு முன்பே தினேஸ் வந்துவிட்டான். சோதிக்கு நிச்சயம் தெரியும் அவன் வரவே மற்றவர்களையும் இழுத்து வந்தது என்று. நல்ல நட்புகளோடு சேர்ந்து நல்ல நட்புகள் வரலாம். வராமலும் போகலாம். தீய நட்புகளோடு அனேகம் தீய நட்புகளே வரும் என்பது பல மனிதருக்கும் தெரியும். அவன் இந்த வீட்டில் இருந்து போனால் மற்றவர்களும் போய்விடுவார்கள் என்பது சோதிக்கு நன்கு விளங்கி இருந்தது. இருந்தும் அவனை வெளி ஏற்றுவது இலகு இல்லை என்பதும் விளங்கியது. நல்லது, கெட்டது என்று இல்லாமல் எல்லாவற்றையும் முழுமையாக இழக்க வேண்டும் என்கிற எண்ணமும் சோதியிடம் இருந்தது. அது எப்படி என்பதே அவனுக்கு விளங்கவில்லை. இவர்களோடு சேர்ந்து இருப்பதால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.

கடைசியாக தினேசை வெளியேற்ற, தான் வாழ்வைப் பற்றி ஞானத்தைப் பெற வேண்டும் என்பது சோதிக்கு விளங்கியது. அதனால் முதலில் அவன் வாழ்வு பற்றிய ஞானத்தைத் தேடி அலைந்தான். புத்தரின் போதி மரம் போல அவனுக்கு ஒரு நூல்நிலையம் கிடைத்தது. அதில் இருந்த சில ஏடுகளில் அவனுக்குத் தேவையான சில ஞானங்கள் கிடைத்தன. அவன் அதை முதலில் உணர்ந்து கற்றான். அவன் அந்த ஞானத்தைக் கற்கக் கற்க அவனிடம் ஒரு ஒளி உள்ளிருந்து பிரகாசித்தது. அவனின் அந்தப் பிரகாசம் வீட்டில் இருந்த பலருக்கும் பயத்தை உண்டு பண்ணியது. அவர்கள் சோதிக்கு கிட்ட வருவதற்கே பயப்பட்டார்கள். வரவர அந்த ஒளி சோதியில் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதைத் தினேசால் தாங்க முடியவில்லை. அவனுக்குச் சோதியைச் சீண்ட வேண்டும் போல் இருந்தாலும் பயத்தில் அதைச் செய்யாது தூரே தள்ளி நின்றான். சோதிக்கு முன்பு வருவதற்குப் பயப்பட்டான். பல வேளைகளில் அவனைக் காண விரும்பாது அறைக்குள் அடைந்து கொள்வான். பின்பு கடைசியாக இப்படிப் பயந்து பயந்து இருப்பதிலும் தான் வெளியேறுவதே சரியாக இருக்கும் என்று நம்பினான். அதைத் தொடர்ந்து தினேஸ் முதலில் வெளியேறினான். அதன் பின்பு நகுலனுக்கும் அலுப்படித்திருக்க வேண்டும். அவனும் வெளியேறினான். சோதியின் ஒளி கூடக் கூடக் சுரேசாலும் அங்கு இருக்க முடியவில்லை. இறுதியாக அவனும் வெளியேறினான். விமலன் மாத்திரம் சோதியை விட்டு வெளியேறவில்லை. அவன் சோதியோடு தொடர்ந்து வாசித்தான். இருந்தும் அவன் இருப்பு என்பது மற்றவர்களைப் போல் அல்ல. அவன் இருப்பு மேலும் சோதியின் ஞானத்தையும், ஓளியையும் கூட்டியது.

இப்படி அவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்பு சோதி எதிர்பார்த்தது கிடைத்தது. உலக வாழ்வில் இது இவ்வளவு சுகத்தையும் நிம்மதியையும் தரும் என்பதை அவன் இப்போது உணர்ந்து அனுபவிக்கிறான். இந்த அனுபவம் அவனுக்கு இருப்பல்ல இழப்பே இன்பம் என்கிறது.

– செப்ரெம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *