இட்லிக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 3,872 
 

எப்போதும்போல அன்று காலையும் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, இட்லிகளை வேக வைத்தாள் அந்த இட்லிக்காரி.

கணவன் சில வருடங்களுக்கு முன் இறந்தபிறகு, வீட்டிலேயே இட்லிகள் செய்து விற்க ஆரம்பித்தாள். வியாபாரம் சூடு பிடிக்கவே இட்லி தவிர வடை, தோசை என்று காலை ஒன்பது மணிவரை விற்றாள். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது.

ஒரே மகன் வயது பதினெட்டு. சரியாகப் படிக்காமல் சோம்பேறியாக இருந்தான். அவனை தனக்கு உதவியாக இருக்குமாறு இட்லிக்காரி சொன்னதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நல்ல வேலை தேடி வீட்டைவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டான்… பயமறியா வயசு. இட்லிக்காரி தவித்துப் போனாள். அவனைத் தேடியும் பயனில்லை.

மனதைத் தேற்றிக்கொண்டு தன் இட்லி வியாபாரத்தைத் தொடர்ந்தாள். வியாபாரம் ஆரம்பிக்கும் முன், அன்றும் எப்போதும்போல முதல் இட்லிகளை ஏட்டில் இருந்து எடுத்து, அதில் இரண்டு இட்லிகளை மட்டும் ஒரு சிறிய இலையில் எடுத்து, வீட்டின் சுற்றுச் சுவரின் மேல் வைத்தாள். இது அவளுடைய தினசரி தர்ம பழக்கம்.

இதைத் தெரிந்துகொண்ட ஒரு கூனல் முதுகுக் கிழவன் தினசரி காத்திருந்து அந்த இட்லிகளை எடுத்துச் சென்று விடுவான். அப்படி எடுத்துச் செல்லும்போது தனக்குள் ஏதோ முனகிக்கொண்டே போவான். இது ஒரு அன்றாட வழக்கமாயிற்று.

ஒருநாள் இட்லிக்காரி மதில் அருகிலேயே நின்று, அந்தக் கூன் முதுகுக் கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்துக் கேட்டாள்.

அவன் முனகியது, “நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” தினந்தோறும் இதையே முனகிக்கொண்டே போவான்.

இட்லிக்காரி கடுப்பானாள். ‘தினமும் இட்லி வைக்கிறேன். எடுத்துட்டுப் போறான… சரி. ‘நீ மவராசி, ரொம்ப நல்லா இருக்கணும்னு’ கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழலைன்னாலும்; இட்லி நல்லா இருக்குன்னு பாராட்டலைனாலும்; ரொம்ப நன்றி தாயேன்னு சொல்லக் கூடவா அவனுக்குத் தோணலை!?

ஏதோ, “செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும்” என்று தினம் தினம் உளறிட்டுப் போறானே? என்று எண்ணி எண்ணி மறுகிப் போனாள் இட்லிக்காரி.

‘இவன் என்ன பித்தனா இல்லை சித்தனா… பரதேசிப் பய’ என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள். நாளடைவில் நன்றி கெட்ட அந்தக் கூனக் கிழவனை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள்.

சிறிது நாட்களில் அவளது கோபம் தலைக்கேறி, பின்பு அதுவே கொலை வெறியாக மாறியது.

ஒருநாள், ‘அந்தக் கூனல் கிழவன் செத்து ஒழியட்டும்’ என்று முடிவு செய்து, இட்லியில் விஷம் கலந்து அதை மதில் மேல் வைக்க முடிவு செய்தாள்.

இட்லியில் விஷமும் கலந்து விட்டாள். ஆனால் மனம் ஏனோ கலங்கியது. கைகள் நடுங்கின. ச்சே! அவன்தான் அப்படி என்றால், நான் ஏன் ஒரு கொலைகாரியாக மாற வேண்டும்? நீண்ட யோசனைக்குப் பின் மனம் மாறி, அந்த விஷம் கலந்த இட்லிகளை சாக்கடையில் எறிந்துவிட்டு, வேறு நல்ல இட்லிகளை மதில் மேல் வைத்துவிட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம்போல் அன்றும் கூனக் கிழவன் வந்தான். இட்லிகளை எடுத்துக் கொண்டு வழக்கம்போல், “நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” என்று சொல்லிக்கொண்டே சென்றான். அவனை அப்படியே ஓங்கி அறையலாம் போலிருந்தது இட்லிக்காரிக்கு!

அன்று மதியம் சற்று அசதியுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவு தட தடவென தட்டப்படும் சத்தம் கேட்டு, இட்லிக்காரி பதட்டத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

அங்கு அவளுடைய ஒரே மகன் கசங்கிய உடைகளோடு சோகமாக வெளியே நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு ஆறு மாதங்கள் முன்பு வேலை தேடி வீட்டை விட்டுச் சென்றவன் இப்படி சோகமாக காணப்படுவது அவளுக்கு வேதனையாக இருந்தது.

“அம்மா, வீட்டுக்குத் திரும்பி வரும்போது என் மணிபர்ஸ் காணாமல் போய்விட்டது, கையில் ஒரு பைசா கிடையாது. தெரிஞ்சவங்க யாருமே கண்ணில் படவில்லை. அதனால் வெகு தூரம் நடந்தே வந்தேன். நல்ல வெயில் வேற. அகோரப் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ரோடிலேயே மயங்கி விழுந்து விட்டேன் அம்மா…

அப்போது யாரோ ஒரு கூன் முதுகுக் கிழவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து, என்னைத் தூக்கி உக்கார வச்சு இரண்டு இட்லிகளைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

நான் அவைகளை ஆசையுடன் சாப்பிட்டேன். பிறகு அந்தக் கிழவருக்கு நன்றி சொன்னபோது, அவர் தன் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் காண்பித்தபடி, உன் நன்றிகள் அந்தப் புண்ணியவதிக்குப் போகட்டும் என்று யாரோயோ குறிப்பிட்டுச் சொன்னார்…” என்றான்.

“………………….”

“மேலும் அந்தக் கிழவர், இந்த இட்லிகளை நான் தினமும் யாருக்காவது சாப்பிடக் கொடுப்பேன்… இன்றைக்கு உனக்கு வாய்த்திருக்கிறது…” என்றும் சொன்னார்ம்மா.

“…………………….”

“அந்த இரண்டு இட்லிகளைச் சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது.”

இதைக் கேட்டதும் இட்லிக்காரி பேயறைந்தது போல அதிர்ச்சி அடைந்தாள்.

‘விஷம் கலந்த இட்லிகளை அந்தக் கூனனுக்கு மதில் சுவர் மேல் வைத்திருந்தால், அது என் ஒரே மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே…! என்று நினைத்து அந்தத் தாய் உள்ளம் பதை பதைத்தது… அவள் கண்கள் பனித்தன… ஆண்டவா!

“நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்…” கூனன் தினசரி முனகலின் பொருள் இப்போது இட்லிக்காரிக்கு நன்கு புரிந்தது…

அவைகள் எவ்வளவு உண்மையான வார்த்தைகள்…!

எல்லோருக்கும் எல்லாம் புரிவதில்லை. புரியும் போது வாழ யாரும் இருப்பதும் இல்லை.

தெரியாமல் செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்; ஆனால் தெரிந்தே செய்த பாவம், ஏழு ஜென்மத்திற்கும் நம் தலைமுறைகளையும் தாக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை நம்முள் வளர்த்துக் கொள்வோம். வாழ்வில் சிறக்க ஒரே வழி, முகம் கோணாத எதிர்பார்ப்பு இல்லாத தர்மம் மட்டுமே…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *