அஹிம்சா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 3,639 
 

அன்று மாலை மறைந்துகொண்டிருந்த சூரியனின் செங்கதிர்களைவிட அதிகமான சிகப்பு நிற இரத்தம்கசிய ஓர் உடல் தரையில் கிடந்தது. அதுவும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், டி.சி – வெள்ளை மாளிகைஅருகே…

​விற்பனைக்காகக் குவிந்துகிடக்கும் பனியன்கள் நிரம்பிய அந்த சின்ன தள்ளுவண்டியின் அருகே, சற்றுமுன்நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் போன ஒருவனின் உடல் கிடந்தது. அமொரிக்க தெருக்களில், பள்ளிக்கூடங்களில்,‌ஷாப்பிங் மால்களில், சினிமா அரங்குகளில் – பொதுவாக எங்கே, எப்போது இப்படிகுண்டுக்குப் பலியான உடல்கள் கிடக்கும் என்து மக்களுக்குப் புரியாத ஒரு பரிதாப நிலை.

​சனிக்கிழமை என்றாலே வாஷிங்டன், டி.சியில் கேட்கவே வேண்டாம். தலைநகரை மொய்த்துக் கொண்டுஅங்குள்ள காட்சிகளைப் பார்க்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வந்து நகருக்கு திருவிழாக் கோலத்தைஉண்டாக்கி விடுவார்கள். வாஷிங்டன் டி.சி.யில் இருக்கும் பல பொருட்காட்சிச்சாலைகளையும், நினைவுச்சின்னங்களையும், அழகிய பூங்காக்களையும் மக்கள் இலவசமாகக் கண்டு மகிழ அமெரிக்க அரசு நல்லவசதிகளைச் செய்திருக்கிறது; விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். வெள்ளைமாளிகை அருகே எப்போதும்போல போலீஸ் பாதுகாப்புப் பலமாகவே இருந்தது. சனி, ஞாயிறன்று அதிகமான போலீஸ் நிச்சயம் இருக்கும்.

அந்த சின்ன ’சுவினியர்’ தள்ளுவண்டியின் அருகே அன்று தலைநகருக்கு வந்த பயணிகள் அனைவருமேகுவிந்தனர் போல இருந்தது. நகர போலீஸ் உடனே வந்து சூழந்து கொண்டு கூட்டத்தை மிக விரைவாகக்கட்டுப் படுத்திவிட்டனர். கீழே கிடந்த அந்த ஆளின் உடலிலிருந்து இரத்தம் கசிந்து இப்போது குட்டையாகசேர்ந்துவிட்டது. கொல்லபட்ட அவன் உடல், அமெரிக்காவின் தெருக்களிலே வன்முறைக்கு இலக்கானவர்விவரத்தில் இன்னுமொரு புள்ளியாக நொடிப்பொழுதில் மாறிவிட்டது. அவனுடைய எழுபத்திமூன்றாம் வயதில்வாழ்க்கை முடிந்தது. போலீஸ் அவனுடைய உடமைகளை எடுத்துப் பார்த்துவிட்டு அவன் மனைவிக்கு போன்அடித்தார்கள். அலறிப் புடைத்துக் கொண்டு அவள் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவாள். அன்று ஏதோமுக்கிய காரியமாக தான் வேலை செய்யும் கல்லூரிக்குப் போயிருந்த அவனுடைய மகனும், செய்தி எட்டிவந்துவிடுவான்.

​உயிர் பி்ரிந்த உடலுக்கு, உயிர் இருந்தபோது அன்பரசன் என்று பெயர். இது பிறகுதான் தெரிந்தது. மனைவியும் நண்பர்களும் அவனை ‘அன்பு’ என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்குக் காரணம் அவன் பெயர்மட்டுமல்ல; அவனுடைய குணமும்தான் – எல்லோரிடமும் அன்பாகப் பேசி அன்பாகவே நடந்து கொள்வான். அடிமனத்திலே அவன் ஒரு அசைக்கமுடியாத காந்தியவாதியாகவே வாழ்ந்தான்.

​அவன் மனைவிக்கு அடிக்கடி காந்தியைப் பற்றிச் சொல்லி அவருடைய ‘அகிம்சா’ தத்துவத்தை தனக்குத்தெரிந்தவரை விளக்குவான். யாருக்குமே எண்ணத்தாலும், சொல்லாலும், உடலாலும் கெடுதல் செய்வதுமனிதநேயத்துக்கு எவ்வளவு முரணான செயல்கள் என்பதை அவன் விளக்கும்போது அவன் கண்கள் பனித்ததைஅவன் மனைவி பலமுறை கவனித்திருக்கிறாள்.

சில சமயங்களில் ’அன்பு’ ஏன் இப்படி ஒரு வெகுளியாகஇருக்கிறாரே என்றுகூட நினைப்பாள். உலகமே பகட்டிலே மின்னுகிறது; பதவி, ஏமாற்று, பித்தலாட்டம் என்றுஇறங்கி, எப்படியெல்லமோ பணம் திரட்டி, பகட்டு வாழ்க்கை வாழலாம் என்பதைத் தினமும் திட்டம்போட்டுச்செய்கிறது. மனிதநேயத்தை மறந்து மயங்கிக் கிடக்கிறது. இதனிடையே அன்பு போல் சிலரா…?

​மகாத்மா காந்தியின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, அமெரிக்கக் கறுப்பர்களுக்கு சமூகத்தில்சமஉரிமையும், ஓட்டுரிமையும் வாங்கித் தந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின்மீதும் அன்புக்குஅளவற்ற மரியாதையுண்டு. காந்தியும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும் உபயோகித்த அகிம்சா முறைகள்இருபத்தோராம் நூற்றாண்டுக்கு ஒத்துவருமா என்பதைப் பற்றி யாராலும் தீர்மானமாகச் சொல்லமுடியுமா? நம்மில் யார் அகிம்சாவைப் பற்றி எப்போதாவதுகூட நினைக்கிறோம்? இவர் – அன்பரசன்- ஏதோ காந்தியின்அகிம்சா கொள்கையை இம்மியளவு பரப்ப நினைத்து, அந்த சொல் அச்சிட்ட பனியன் கடை வைத்து, வாஷிங்டன் டி.சியிலே பயணிகளுக்கு ‘டி – ஷர்ட்’ விக்கிற தள்ளுவண்டி வியாபாரம் செய்யறாரே? ‘இவர்காந்தியவாதியாகவோ, ஒரு பைத்தியமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று நினைத்து, அன்பு செய்தஅந்தத் தொழிலை ‘ஏதோ நல்லது செய்கிறார்’ என்று எண்ணி அவள் தடுத்ததே இல்லை.

​அன்பு தன் குடும்பத்தை வசதியான பொருளாதார நிலையில் வைத்திருந்தான். நல்ல வேலையிலிருந்துஓய்வுக்குப் பின்தான் தள்ளுவண்டி தொழில் ஆரம்பித்தான். அமெரிக்காவில் சராசரி மத்திமர் வாழ்க்கையைத்தொடர போதுமான பணமும் வீட்டு வசதியும் இருந்தது; சிறிய, அழகான குடும்பம்; மூவருமே நிதானகுணமுடையவர்கள். அவர்களின் தினசரி வாழ்க்கை அமைதியாக நடந்தபோதுதான் அன்புக்கு அழைப்பு வந்தது.

​தவிர்க்கமுடியாத கடைசி அழைப்பு வரும்போது எவருமே இந்த உலகைவிட்டு போக வேண்டியதுதானே? அனைவருக்குமே வாழ்க்கையின் கடைசி அழைப்பு எதிர்பாராதத் தருணத்தில்தானே வருகிறது? அன்புக்குஅந்த சனிக்கிழமை மாலை ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலமாகக் கடைசி அழைப்பு வந்தது. அவன் உயிர்பிரிந்தபோது அன்பு என்ற காந்தியவாதியின் மனதில் என்ன தோன்றியதோ அதையும் அந்த துப்பாக்கிக் குண்டுபறித்துவிட்டது.

​அலறிக்கொண்டே வந்த ஆம்புலன்ஸ் தள்ளுவண்டியின் அருகே வந்து நின்றது. அது அங்கு பரப்பிய சிகப்புவிளக்குகளின் ஒளி, தரையில் குட்டையாகத் தேங்கியிருந்த இரத்தத்தின்மேல் பட்டபோது யாருக்குமேஅடிவயிற்றை பிழிவதைப் போல இருக்கும்.

​அன்பரசன் மனைவியும் மகனும் வந்தனர். கணவனின் உயிரற்ற உடலைப் பார்த்த அடுத்த வினாடி அவள்அப்படியே மயங்கி சாய்ந்தாள். அவளை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

அவளுடன் வந்த மகனும்அதற்கு உதவி செய்தான். போலீசும் மற்ற அதிகாரிகளும் கேட்ட கேள்விகளுக்கு அவன் முடிந்தவரைநிதானமாகவே பதில் சொன்னான்.

​அவன் பார்வை மட்டும் தன் தந்தையின் உடலின் மீது பதிந்திருந்தது. மனதைக் கட்டுப்படுத்தப்பார்த்த அந்தஇளைஞனுக்கு, தன் தந்தையின்மேலிருந்த அளவற்ற பாசத்தின் வெள்ளப் பெருக்கு அவனுடைய மனதிலிருந்துபொங்கி கண்ணீராக வெளிவரத்தான் செய்தது.

​‘கர்னி’யில் போட்ட அன்பரசனின் உடலைப் போர்த்த வெள்ளைத் துணியை எடுத்துவந்தனர். மகன்சட்டென வந்து கையைக் காட்டி அவர்களைத் தடுத்தான் ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தந்தையின் தள்ளுவண்டிக்குப் போய், அதிலிருந்து மூன்று வெள்ளைநிற பனியன்களை எடுத்து வந்தான். ஒவ்வொரு பனியனின் முன்புறத்திலும் சிகப்பு எழுத்துக்களில் ஒரு சொல் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுஇருந்தது.

​தந்தையின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, வாய்விட்டு கதறி விடுவோமா என்ற எண்ணத்திலே உதட்டை இறுக்கிக்கொண்டு ஒரு பனியனால் அன்பரசனின் முகத்தை மூடினான்; மற்ற இரண்டு பனியன்களைதந்தையின் உடல்மேல் சீராக வைத்து இரத்தம் கசிந்த மார்பையும் மூடினான். மறைக்கப்பட்ட தந்தையின்உடலைப் பார்த்தவனுக்கு தன் உடல் முழுக்க நெருப்பு வைத்ததுபோல உணர்வு ஏற்பட்டது; அந்தஉணர்வினால் கண்ணீரும் நெருப்பாக சுட்டதுபோல் உணர்ந்தான்.

‘அன்பை கொன்றவன் மட்டும் என் கையில் இப்போது கிடைத்தால்…?’ துப்பாக்கி வன்முறை இவ்வளவுகொடூரமானதா? துப்பாக்கிகளை வாங்கி வைத்துக்கொள்ள அமெரிக்க சாசனத்தில் இருக்கும் உரிமை வெகுளி மக்களை சுட்டுத் தள்ளும் உரிமையையும் தருகிறதா? அமெரிக்காவில் இப்படி ஏன் ஒரு துப்பாக்கிமோகம்? அரசியல் ஆதாயத்திற்காக சட்ட உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளின் மனிதநேயம் பற்றி என்ன சொல்வது? மகனுக்கு மனதில் இப்போது வெறுப்புணர்ச்சி பரவ ஆரம்பிக்க அதற்கு அணைபோடுவது போல் ஒரு போலீஸ் குரல் கேட்டது. ‘அந்த டி – ஷர்ட்டுல இருக்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?’ என்று விசாரித்தார்.

அவன் தந்தையின் மார்பை மூடியிருந்த பனியனின் மேல் சிகப்பு வண்ணத்தில் எழுதியிருந்த சொல்லைப்பார்த்தான். அந்த சொல் அன்பரசனுக்கு மிகவும் பிடித்த சொல் – அவனுடைய இலட்சிய வாழ்க்கையைஉருவாக்கிய காந்தியின் சொல்லாயிற்றே; ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வடமொழிச்சொல் – வன்முறை மிகுந்தஉலகில் மக்களின் மனதில் தோன்றும் கடைசிச் சொல்லாகக் கூட இருக்கலாம்.

​​‘அஹிம்சா’

​கொஞ்சம் கொஞ்சமாக அந்த பனியன்மேலிருந்த சிகப்பு ‘அஹிம்சா’ எழுத்துக்கள் அன்பரசனின் இரத்தக்கசிவுடன் சேர்ந்து மறைய ஆரம்பித்தன. அன்பின் உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லும் ஊர்திஅங்கிருந்து நகர்ந்தது.

பாரதம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவேறப் போகிறது. இந்த ஆண்டு நாம் அனைவருமே அஹிம்சாஎன்ற சொல்லின் உட்பொருளை நினைத்து சிறய அளவிலாவது செயல்பட ஆரம்பிக்கலாமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *