அவனுக்கும் தமிழ் என்று பேர்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 4,234 
 

உயிர் பிரியும் தருவாயில் கூட நமச்சிவாய ஓதுவார் திலகவதி கையைப் பிடித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் இப்போதும் தமிழ் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

“திலகம்..ஏதோ. நான் வாழும் வரைக்கும் ‘ தமிழ்.. தமிழ்னு ஒரே மூச்சாக இருந்திட்டேன்.. !

தமிழுக்கு என்னால் செய்ய முடிஞ்சதெல்லாம் செஞ்சிட்டேன்னு நெனைக்கிறேன்.

இப்ப நான் சொன்னது நம்ப மகன் தமிழப்பத்தி.!

எந்த காலத்திலும் அவன் தமிழை மறக்காம இருக்க நீதான் அவனுக்கு உறுதுணையா இருக்கணும்.

‘ தமிழ்…இங்க வாப்பா…உன்ன பிள்ளையா பெத்ததுக்கு நான் ரொம்ப பெருமப் படறேன்.

நீ வாழ்க்கையில எத்தன உசரத்துக்கு போனாலும் தாய் மண்ணையும் .. தாய் மொழியையும் மறக்கக்கூடாது..

கடைசி மூச்சு இருக்கும் வரை இதை மறக்க
மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடுப்பியா..??”

“அப்பா.உங்களுக்கு எம்மேல சந்தேகம் வரலாமா..??? நான் உங்க மகனாகப் பிறந்தது என்னோட பாக்கியம் அப்பா.!”

தமிழ்….

நமச்சிவாய ஓதுவாரின் உயிர் மூச்சு. அதனால்தான் தனது ஒரே மகனுக்கும் ‘ தமிழ்’ என்று பெயர் வைத்தார்.. மூச்சுக்கு முன்னூறு முறை கூப்பிட்டாலும் அலுக்காது அல்லவா.??

நமச்சிவாய ஓதுவாருக்கு அந்த பெயர் எப்படி வந்தது???

அவர் ஓதுவார் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரும் இல்லை.. கோயிலின் ஓதுவாராக இருந்ததும் இல்லை..

மதுரையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவருக்கு அம்மா சிவஞானம் தாயும் தந்தையுமானாள்.

அந்தக் காலத்திலேயே அடுப்படியில் கிடந்து உழலாமல் , நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவாரம், திருவாசகம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பாள்.

சிறந்த சிவபக்தை. தனது மகன் நமச்சிவாயத்துக்கு சிவபுராணக் கதைகள் அத்தனையும் பாவத்தோடு பாட சொல்லிக் குடுத்தவள் அவள்தான்..

அவளுக்கு கணீரென்ற நல்ல குரல் வேறு…

‘ பொன்னார் மேனியனே.’ என்று திருமழப்பாடியில் குடிகொண்டுள்ள ஈசனை சுந்தரர் பாடியதை அப்படியே நமசிவாயம் பாடும்போது அவள் உச்சி குளிர்ந்தாள்.

பள்ளிபடிப்பு முடிக்கும்போதே பன்னிரு திருமுறைகளையும் கற்றுத் தேர்ந்தார்..

அவரது மனம் வேலைக்கு சென்று பொருளீட்டுவதில் சிறிதும் நாட்டம் கொள்ளவில்லை..

அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் சொல்லிக்கொடுப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டார்..

யாரிடமும் கைநீட்டி பணம் வாங்கியதில்லை.. அவர்கள் பிரியத்துடன் கொடுக்கும் பணத்தில் சிக்கனமான குடும்பம் நடத்தினாள் சிவஞானம்..

ஒரு நாள் சாப்பிட்டால் இரண்டு நாட்கள் பட்டினி என்று இருந்தாலும் செவிக்குணவு கிடைப்பதில் திருப்தியடைந்தனர் தாயும் மகனும்..

அவரை எல்லோரும்’ நமசிவாய ஓதுவார்’ என்று கூப்பிட ஆரம்பித்தனர்..

நமச்சிவாயத்திடம் தேவாரம் கற்றுக்கொள்ள கர்நாடகாவைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் சேர்ந்தாள்.

அவளுடைய குடும்பம் சமீபத்தில்தான் மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார்கள்…

ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப் போக அவளுடைய திறமை நமச்சிவாயத்தை வியக்க வைத்தது.

‘மாசில் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கிள வேனிலும்..’

என்ற காலை வணக்கத்துடன் தான் அவரது வகுப்பு ஆரம்பிக்கும்..

சௌம்யா தனது இனிய குரலால் அதைப் பாடும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கும்…

மெள்ள மெள்ள அவரது மனதிலும் இடம்பிடித்த சௌம்யா ஒரு நாள் திலகவதியாகி அவரது கரம் பிடித்தாள்..

திலகவதி என்ற பெயரை அவளுக்கு சூட்டிய காரணத்தையும் அவளுக்கு கூறியிருக்கிறார் நமசிவாயம்.

அப்பர் என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்படுபவரும், திருநாவுக்கரசர் எனும் பெயரைத் தாங்கிய மருணீசுவரர் சைவ மதத்திலிருந்து சமண மதத்தை தழுவினார்.

ஒருமுறை தீராத வயிற்று வலியால் துடித்த அவருக்கு சிவ பக்தையான அவரது தமக்கை வைத்தியம் செய்து குணப்படுத்தியதால் மீண்டும் சைவத்தை தழுவினார்..

அவளது நினவாக சௌம்யாவுக்கு திலகவதி எனும் பெயரையும் இட்டார்..

இருவரும் கருத்து ஒருமித்து வாழ்க்கை நடத்துவதைப் பார்த்த மகிழ்ச்சியிலேயே சிவஞானம் கண்ணை மூடினாள்..

குழந்தை பிறந்ததுமே இருவர் மனதிலும் தோன்றிய பெயர்

‘தமிழ்’

தமிழை தமிழாலேயே குளிப்பாட்டி கார்கள்..சோற்றில் தமிழைக் குழைத்து ஊட்டினார்கள்.

நமசிவாயத்துக்கு அதிக நாட்கள் இந்த வாழ்க்கை வாழ கொடுத்து வைக்கவில்லை..

நமசிவாயத்தின் மறைவுக்குப் பின்தான் அவர் விட்டுச் சென்ற சொத்து தமிழ் மட்டும்தான் என்பதை புரிந்து கொண்டனர் தாயும் மகனும்.

தமிழ் பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான்..

திலகவதி வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் அவளை குஜராத்தைச் சேர்ந்த பெரிய பிஸினஸ் குடும்பத்தில், குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பதற்கு உதவி செய்தார்.

திலகவதிக்கு இந்தியும்
தெரியுமானதால் அந்தக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது சுலபமாயிருந்தது..

அந்தக் குடும்பமே திலகவதியிடமும் , தமிழிடமும் மிகவும் பிரியமாய் இருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்கோண்டு செய்வதறியாமல் தமிழ் தவித்துக் கொண்டிருந்தபோது பானுமதி ஒரு யோசனை கூறினாள்.

“திலகா..அமர் சாப்புக்கு ஆமதாபாத்தில் சொந்தமாக மூன்று பெரிய துணிக்கடைகள் இருக்கிறது.அது தவிர ஒரு டெக்ஸ்டைல் மில்லும் இருக்கிறது.. பார்த்துக் கொள்ள நல்ல நம்பிக்கையான ஆள் தேவை.

நாங்கள் அவனை மூன்று வருடம் அக்கவுண்ட்டன்சி படிப்பு படிக்க வைக்கிறோம்.. இந்தியும் நன்றாகக் கற்றுக் கொள்ளட்டும்.
அங்கு போய் கடைகளைப் பார்த்துக் கொண்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

இங்கேயே இருந்தால் அவனால் பிழைக்க முடியாது. தங்கும் செலவு, சாப்பாடு எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

நீயும் எங்களுடனே தங்கிக் கொள்ளலாம்..

அவன் சம்பளத்தை அப்படியே உனக்கு அனுப்பலாம்.. அப்புறம் உனக்கென்ன கவலை..நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்ய வேண்டியது மட்டுமே உன் பொறுப்பு..”

திலகவதிக்கு இந்த ஏற்பாடு ரொம்பவே பிடித்திருந்தது.

அமர்சாப் பெண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்.

தமிழ்தான் முதலில் தயங்கினான்..

“அம்மா..அப்பா உயிர் போகும் போது கூட என்னிடம் ‘ தமிழையும், தாய் மண்ணையும் மறக்காதே ‘ என்று சத்தியம் வாங்கிக் கொண்டாரே.

ஒரு வேளை நான் அங்க போனபின்னாலே திரும்பிவர மனசில்லாமல் அங்கேயே நிரந்தரமாக குடியேறி விட ஆசைப்பட்டால் அப்பாவுக்கு குடுத்த வாக்கு…???

“தமிழ்..நீ சம்பாதிக்க தானே அங்க போற.. நிச்சயம் திரும்பி வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..

இது மாதிரி வாய்ப்பு யாருக்கும் கெடைக்காது.. போய்ட்டு வாப்பா..”

ஆமதாபாத் நகரம் தமிழை இருகரம் நீட்டி வரவேற்றது.. பானுமதி அம்மா சொன்னபடியே செய்தாள்..

தமிழுக்கு தங்குவதற்கு ஒரு நல்ல அறை ஒதுக்கப்பட்டிருந்தது..

அவனுடன் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் திலீபன், சூரஜ் இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்..

போகும்போதே ஓரளவுக்கு இந்தியில் பேசக் கற்றுக் கொண்டிருந்ததால் தமிழுக்கு அவர்களுடன் தங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

வந்து சேர்ந்தவுடன் முதல் வேலையாக அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.

அம்மாவை விட்டு முதன்முறையாக பிரிந்த ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் புதிதாக ஏற்றுக்கொள்ளப்போகும் பொறுப்பைப் பற்றிய சிந்தனையும், புதிய சூழ்நிலையின் மாற்றமும் அவனை அதிகம் பாதிப்பைத் தரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அமீர் சாப்பின் கம்பெனியிலிருந்து பிரேம்சந்த் என்ற வாலிபன் தமிழை கூட்டிக் கொண்டு போக வந்தான்.

மிகவும் அன்பாகப் பழகினான்.. ஆமதாபாத்திலிருந்த மூன்று கடைகளையும் கொண்டு காட்டினான்..

தமிழுக்கு ரொம்பவே பிரமிப்பாக இருத்தது. நிறைய தமிழ் குடும்பங்கள் இருந்ததால் புடவைகள் இருந்த இடத்தில் கூட்டம் அலைமோதியது..

அங்கிருந்து சாந்தினி டெக்ஸ்டைல் மில் இருக்கும் சூரத் என்று இடத்திற்கு கூட்டிக் கொண்டு போனான்.

இவ்வளவு பெரிய மில்லாக இருக்குமென்று தமிழ் எதிர்பார்க்கவில்லை.
எல்லாம் பட்டு இழைகள்.

“தமிழ் சாப்..இவை எல்லாமே இனி உங்கள் பொறுப்பில்தான்.. ஒரு வருடத்துக்கு உங்களுக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்கு என்னை நியமித்திருக்கிறார்கள்.

எனக்கு வயதான அம்மா..அப்பா.நவி மும்பையில் வசிக்கிறார்கள்.. என் மனைவிதான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள்..

திருமணமாகி நாங்கள் சேர்ந்தே இருக்கவில்லை.. அதனால்தான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்..

அமீர் சாரும் பானுமதியம்மாவும் தங்கமானவர்கள். உனக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்..”

தமிழுக்கு பிரேமின் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது..

அம்மா பக்கத்தில் இல்லையென்பதைத் தவிர குறையொன்றும் இல்லை..

‘அன்புள்ள அம்மா,

நீங்கள் என் அருகில் இல்லையென்பதைத் தவிர வேறு ஒரு எந்த குறையும் இல்லை.

இங்கு இருக்கும் எல்லோருமே என்னை அன்புடன் நடத்துகிறார்கள்..

கூடிய சீக்கிரமே மிகப் பெரிய பொறுப்பை என் தலையில் தூக்கி சுமக்கும் நேரம் வரப்போகிறது..

அமீர் சாப் இவ்வளவு செல்வந்தராய் இருப்பார் என்று நான் நினைத்ததேயில்லை… இருந்தும் அவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள்???

நான் அடிக்கடி வியாபார நிமித்தம் சூரத் என்ற ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும்..

அங்கு இவர்களுடைய பட்டு நெசவு ஆலை இருக்கிறது.. நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்…!!

வியாபார நிமித்தம் சூரத் என்ற ஊருக்கு அடிக்கடி போக வேண்டிய வேலை இருக்கும்..

இங்கு துர்க்கா பூஜையை மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்..

உலகிலேயே முதன் முதலில் இங்குதான் துர்கா பூஜை கொண்டாடத் தொடங்கினார்களாம்.

நீங்கள் நலமா.??? நான் தவறாமல் மருந்து எடுத்துக் கொள்கிறேன்.. என்னைப் பற்றிய கவலை வேண்டாம்.

ஆனால் எனது முழு விவரங்களையும் யாரிடமும் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

சமயம் வரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்..

இங்கு இருப்பவர்களுடன் இந்தியிலேயே பேச வேண்டியிருப்பதால் தமிழை மறந்து விடுவேன் என்ற அச்சம் வேண்டாம்..

இரவு படுக்குமுன் ஒரு மணிநேரம் தேவாரம், திருவாசகம் பாராயணம் பண்ணி விட்டுத்தான் படுக்கிறேன்.

எனது நண்பர்களும் கற்றுக் கொள்ள ஆர்வமாயிருக்கிறார்கள்.

அன்பு,
தமிழ்

தமிழுக்கும் ஒரு நாள் வந்தது சோதனை..!!!

தமிழ் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியதாயிற்று.

ஆமதாபாத்தை சுற்றிலும் பல நெசவாளிகளை நேரில் சென்று பார்த்து ஆர்டர் கொடுக்கும் பணியும் சேர்ந்து கொண்டது..

அங்கிருந்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்ச் எனும் நகரைச் சுற்றி உள்ள கிராமங்களில்
பல குடும்பங்கள் பரம்பரையாக
நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்..

ஷாம்ஜி மகேசுவரி என்பவருக்கு சொந்தமான பல நெசவு ஆலைகள் அங்கு மிகவும் பிரபலம்..

அங்கிருந்து அமீர் கம்பளி சால்வைகளை வாங்குவது வழக்கம்..

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்பி வாங்குவார்கள்.

புஜ் என்ற இடம் வரை ரயிலில் சென்று அங்கிருந்து ஒரு பஸ்ஸையோ , டாக்ஸியையோ பிடித்து கட்ச் போவது வழக்கம்..

விடியற்காலை கிளப்பி புஜ் வந்ததுமே ஒரு டாக்ஸி பிடித்தான்.

ஏறும்போதே தகராறு செய்த டிரைவர் வண்டியை படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்..

தமிழ் பல முறை கூறியும் காதில் வாங்காமல் தாறுமாறாக ஒட்டிக் கொண்டே …..

ஏதோ ஒரு புதரில் தூக்கி எறியப்பட்டதுதான் கடைசியாக நினைவில் இருந்தது..

கண்விழித்தது புஜ்ஜில் இருந்த மருத்துவமனையில்…

அரைகுறை மயக்கத்தில்.

சுற்றிலும் பேச்சுக் குரல்கள்..

எல்லோரும் குஜராத்தியில் பேசுவது மட்டும் புரிந்தது..

“பாவம்..இந்த பையனைப் பார்த்தால் வெளியூரிலிருந்து வருகிறான் என்று புரிகிறது.. அவன் சொல்வது ஒன்றுமே புரியவில்லையே..

தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் சந்தீப் தலைமையில் தமிழின் ஒவ்வொரு துடிப்பும் மானிட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தது..

அவ்வப்போது கண் விழிப்பதும், ஏதோ முனகுவதும், மீண்டும் மயக்கத்தில் ஆழ்வதுமாயிருந்தான் தமிழ்.

“பேடா(beta), தும் கௌன் ஹோ?காஹான் ஸே ஆ ரஹே ஹோ?

ஜோ தும் போல்தே ஹோ ஹம் நஹீன் ஸமஜ் பா ரஹே ஹைன்..”

“தம்பி.நீ யார் ..??? எங்கிருந்து வருகிறாய்..?? நீ சொல்வது ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை..

“டாக்டர்.. சந்தீப்.. ஹி இஸ் ப்ளீடிங் நான் ஸ்டாப்..”

தமிழ் கண் திறந்தான்.

“தும் காயல் ஹோகே அபி ஏக் அஸ்பதால் மே ஹோ..”

“நீ அடிபட்டு ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறாய்..

“தமிழ்..மதுரை..அம்மா..அம்மா..சூரத்…சாந்தினி டெக்ஸ்டைல்..எனக்கு இரத்தத்தில .ஆஸ்ப்ரின்.”

ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறினான்.

“டாக்டர்.. மனோஜ். ஐ திங் ஹி இஸ் டாக்கிங் இன் டமில் .”

இங்கே யாருக்காவது தமிழ் தெரியுமா.. மிகவும் அவசரம்.. இவனுடைய கண்டிஷன் சீரியசாகிக் கொண்டிருக்கிறது.

..ப்ளீஸ்..ட்ரை..”

“டாக்டர்.. சந்தீப்..கார்டியாலஜி ப்ளாக்கில் டாக்டர் குப்தான்னு போன வருஷம் சேர்ந்தாரே.. தெரியுமா.???

அவர் பல மொழிகள் தெரிந்தவர் என்று ஒரு தடவை என்னிடம் கூறியிருக்கிறார்.

“தென்..க்விக்.. கெட் மீ டாக்டர் குப்தா.இப்போதே இங்கு வரச்சொல்லுங்கள்.!”

அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கிருந்தார் டாக்டர் குப்தா..

தமிழ் கண்விழிக்க பத்து நிமிடங்களானது..

அவன் மறுபடியும் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்..

குப்தாவுக்கு அவர் வேண்டிய விவரங்கள் எல்லாம் கிடைத்து விட்டது..

“டாக்டர்.. இவன் பெயர் தமிழ்.. தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்..இங்கு வேலை பார்க்கிறான்.இவனுக்கு இரத்தத்தில் த்ராம்போஸிஸ் இருக்கிறது.

நமது ட்ரீட்மெண்ட் ப்ளானை மாற்ற வேண்டும்..அதிக நேரமில்லை.மீதியை அப்புறம் சொல்கிறேன்.”

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் தமிழ் சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

“இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆப்ஸர்வேஷனில் இருக்கட்டும்..

அதற்குள் போலீஸ் டிபார்ட்மெண்டில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்லலாம்.”

“கமான்.. டாக்டர்.குப்தா..லெட்டஸ் ரிலாக்ஸ் வித் சம் காஃபி..உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.”

“மை ப்ளஷர்..”

***

டாக்டர் சந்தீப், குப்தா, மனோஜ், அகர்வால் எல்லோரும் காஃபி டேபிள் முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார்கள்..

“டாக்டர் குப்தா. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்..

உங்கள் தமிழ்தான் தமிழைக் காப்பாற்றி இருக்கிறது. உங்களுக்கு எப்படி தமிழில் இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது..???”

“தமிழ் மட்டுமல்ல.எனக்கு பல மொழிகளில் ஆர்வம் உண்டு..
என்னுடைய அப்பா ரயில்வேயில் இருந்ததால் நாங்கள் ஒரு ஊரில் மூன்று வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை..

ஒவ்வொரு மொழி கற்கும் போதும் எனக்கு ஒரு புதிய உலகத்தில் காலடி எடுத்து வைப்பது போன்ற புத்துணர்ச்சி.

சிலர் தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு மொழியை வேலியாக மாற்றிவிடுகிறார்கள்..

தாங்களும் வெளியே போகாமல், மற்றவர்களையும் வரவிடாமல்.

ஆனால் அது வேலியல்ல.. பாலம்..என்று புரிந்து கொள்பவர்களுக்கு அது ஒரு புதிய உலகத்தின் கதவுகளை திறந்து வைக்கிறது.”

“டாக்டர்.. இன்னுமொரு கேள்வி. தமிழ் இத்தனை நாள் இங்கு வேலை பார்த்தவன்தானே. ஏன் இந்தியிலோ அல்லது குஜாராத்தியிலோ பேசியிருக்கலாமே..”

“பொதுவாகவே ஒருவர் மயக்க நிலையில் இருக்கும் போது அவர்கள் குழந்தையில் கற்ற மொழிதான் அவர்கள் நினைவில் இருக்கும்.

அவன் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் தானே..அதனால்தானே மொழியை ‘தாய்மொழி’ என்கிறோம்..

அவரவர் தாய்தான் உலகிலேயே சிறந்தவர் என்று எண்ணுபவர்கள் எல்லா தாயையும் மதிப்பதுதானே பண்பாடு..!!”

தமிழ் பிழைத்துவிடுவான்…!!

தமிழும் தான்..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *