அழகோவியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,481 
 

விழா மேடையில், சென்னை ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பெரியவர்கள் வீற்றிருக்க, அரங்கமே நிறைந்து கிடந்தது. ஓவியத்துறை ஜாம்பவான்கள் பலர் கூடியிருக்க அகில இந்திய அளவில் ஓவியம் வரைவுப்போட்டி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கபடும் நேரத்திற்காக அனைத்து மாநில மாணவர்களும் தம் தம் படைப்புகளை காட்சிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

ஆனால் என் மனமோ பின்னோக்கி மூன்றாண்டுகளுக்கு முன் சென்றது.

கவிதா, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளைக்கு மருத்துவரிடம் சொல்வோம், ஏதாவது அலர்ஜியாகிருக்கும் பயப்படாதே! என தேற்றினாள் கவிதாவின் அம்மா மாலதி.

கவிதா,சுமாரன அழகு, கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் ஓர் நிறம்,ஆனால் கலையான முக அமைப்பு , நீண்ட கூந்தல், பார்த்தால் திரும்பி பார்க்க வைக்கும் முட்டையாய் கண்கள், நல்ல உயரம்,உடைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி இறுதி பள்ளித்தேர்வுகள் முடிந்த விடுமுறை சமயம்..

கவிதாவிற்கு திடீரென தலை, கை கால் முகம் முழுவதும் கொப்புளங்கள் வந்து அரிக்க ஆரம்பித்தது . மறுநாள் மருத்துவரிடம் சென்றனர்.

என்ன சாப்பிட்டிங்க! எனக்கேட்டு அசைவம் சாப்பிட்டதாக கூற, அதுதான் அலர்ஜியாகிருக்கும், இதை சாப்பிடுங்க என மாத்திரைகள் சிலவற்றை எழுதிக் கொடுக்க அதை சாப்பிட இன்னும் அதிகமானதுதான் மிச்சம், வேற ஒரு மருத்துவரை நாடிக் கேட்டபோது இது வியாதி இல்லை, மெலனின் குறைபாடு தோலின் நிறம் மாறும்.

வெண் குஷ்டமா? என அதிர்ந்தனர்.

அப்படி பயப்படாதிங்க, வெண்புள்ளி போலத் தெரிகிறது, சரியாக கூடியதுதான் என வேறு சில மருந்துகள் கொடுத்தார்.

அன்று ஆரம்பித்தது கவிதாவின் வேதனைகள்.தலை,கழுத்து ,கை என வெண் புள்ளிகளாய் மாறி தலைமுடி உதிர்ந்து தோல் நிறம் மாறத் தொடங்கியது. வீட்டிலே தனிமைப் படுத்தப்பட்டாள், வருவர்,போவர் எல்லாம் மஞ்சள் பொடி தடவு, முள்ளங்கி சாறு போடு,வெயில்ல நில்லு,கேரட் ஜூஸ் சாப்பிடு என ஆலோசனைகளும்,
இதை சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே என தடங்கள்களும், பேரூந்திலும், சென்ற இடங்கள் எல்லாம் பார்வை மாறியதையும் அருகில் அமர மறுத்து முகம் சுளிப்பதையும் கண்டாள்.

கல்லூரி சேர வேண்டிய நேரம், சேர மறுத்தாள்,அசிங்கமா இருக்கும்மா, நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தாள். விடுமுறைக்குச் சென்று திரும்பிய அவளின் உற்றத் தோழி சாவி என்கிற சாவித்ரி இதைக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்க ஒடி வந்து மனத்தை தேற்றினாள்.

யார் உன்னை விலக்கினாலும் நான் உன்னுடனே இருப்பேன். உனக்கு பிடித்த பாடமே கல்லூரியில் எடு. நான் துணை நிற்பேன் என உறுதி கூறுனாள். அவள் கொடுத்த தைரியத்தில் கும்பகோணத்தில் உள்ள கவின் கலை கல்லூரியில் சேர்ந்ததும், அங்கு தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், கேலிகள் எல்லாவற்றையும் சமாளித்து முடித்து சகஜ நிலைக்கு திரும்ப இருவருக்கும் ஆறு மாதமானது.

இந்த மூன்று வருடங்களில் , சாவியும் தனக்காக முடிகளைத் துறந்து என்னைப்போல் பாப் கட்டிங் வைத்துக்கொண்டதும், ஆடைகளில் ஜீன்ஸ் பேன்டும், கையை மறைக்க ஃபுல் ஸ்கர்ட்டும், தலைக்கு மேல் ஒரு ஸ்கார்பும் என என்னையும் மாற்றி, அவளும் மாறிப்போயிருந்தாள். ஒரு வழியாக இறுதி ஆண்டு வரை என்னுடன் கூடவே இருந்து தனது படிப்பையும் பார்த்துக்கொண்டு, என்னையும் மனசு தளராமல் பார்த்துக்கொண்டதை யெல்லாம் நினைக்கும் போது அவள் எனக்காகவே படைக்கபட்டாளோ எனத் தோன்றியது. அந்தளவிற்கு அக்கறையாக என் வீட்டார் கூட இருந்ததில்லை என்பதுதான் உண்மை என யோசித்துக்கொண்டே கண்ணீர் பெருகி அழுதுக் கொண்டு இருந்தாள் மாலதி.

இதோ இன்று இறுதி ஆண்டின் ஓவியப் போட்டிக்கான விருது பெறும் ஓவியம் அறிவிக்கப்படவுள்ளது. எல்லோர் கவனமும் மேடையில் இருக்க ..

மூன்றாம் ஆண்டு, கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி மாணவி செல்வி.கவிதா என்ற அறிவிப்பு அரங்கத்தை அதிர வைத்தது. இவள் வரைந்த ஓவியம் திரையில் காண்பிக்கப்பட்டது.

அதில் அவள் வெண் புள்ளிகளுடன் தனது உருவப் படத்தையும், கறுப்பு நிற பட்டாம் பூச்சு ஒன்று வெள்ளை நிறப் புள்ளிகளுடனும், வரிக்குதிரைப் படம் ஒன்றும், டால்மேஷன் நாய் படம் ஒன்று, பச்சை நிற இலையில் வெள்ளை புள்ளிகள், மேலே உச்சியில் பாதி தேய்ந்த நிலா இவைகளை ஓவியமாக வரைந்து இருந்தாள்.

கவிதாவை மேடைக்கு அழைத்து தாங்கள் வரைந்த இந்தப் படத்தைப் பற்றி சொல்லுங்கள் என கேட்க..

இது ஒரு படம் அல்ல, ஒரு பாடம்.

வெண் புள்ளிகள் வந்த பெண்ணை ஒரு நோயாளியாக பார்க்கும் இந்த சமூகம், அதுவே விலங்கிலும், தாவரத்திலும், இயற்கையிலும் இருந்தால் அழகு என்று ரசிக்கின்றது. ஏன் இந்த முரண்பாடு?

அழகு என்பது வெறும் தோற்றத்தில் மட்டும் இல்லை திறமையிலும் பண்பாட்டிலும் தான் உள்ளது, அன்னைதெரசாவின் அழகு அவரது கருணை, ஜெயலலிதா ஒரு பெண் சிங்கமாகவே வாழ்ந்து மறைந்தார். இதுவே அவரின் அழகு.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், பத்மா சுப்ரமணியத்தின் நடனம் இறகு பந்து விளையாட்டிற்கு பி.வி.சிந்து என ஒவ்வொரு சாதனையாளர்களையும் நினைக்கும்போது, அவர்களுடைய புற அழகு தெரிவதில்லை; மாறாக அவர்களின் திறமையே நமக்கு அழகாக தெரியும்.அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.

வெண்புள்ளி என்பது நோயல்ல, ஒரு குறைபாடு!

இது களையக் கூடியதுதான் என்ற விழிப்புணர்வு குறைவே, எங்களை இழிவாக சமூகம் பார்க்கவைத்து இருக்கிறது.

இதற்கான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவே வரையப் பட்டது இந்த ஓவியம், என தன்னம்பிக்கை பொங்க விளக்கி, விருது வழங்கும் நேரத்தில்,ஒரு விருப்பத்தை தெரிவித்தாள், எனக்காக தன் சுக துக்கம் பாராது என்னுடனே பயனித்த என் சகி சாவி என்கிற சாவித்ரியையும் மேடைக்கு அழைக்க வேண்டும்,
இவ் விருதினை இருவரும் சேர்ந்தே பொற்றுக்கொள்கிறோம் எனக் கூறி அவளை மேடையேற்றி மகிழ்ந்தாள்.

எழுந்து நின்று தட்டிய கரவொலி ஓய ஐந்து நிமிடமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *