அனாதை பிணம் பணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 29,562 
 

மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர்.

“அனாதைப் பொணமுங்கோ… தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்…”

மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்… கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது.

மாலை மடிந்தது.

பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு.

ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள்.

“ஐம்பத்தேழு ரூபா” என்றான் ராஜன்.

இருவரும் சுறுசுறுப்பாய் இயங்கினார்கள். புதிதாய் ஒரு துணி வாங்கிப் போர்த்தி, விறகு வாங்கி…

இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுடுகாட்டில் அந்த அனாதைப் பிணம் எரிந்து கொண்டிருந்தது.

வெட்டியானுக்குத் தந்தது போக சுத்தமாக பத்து ரூபாய் மிச்சமிருந்தது.

“என்ன செய்யலாம் இதை?” என்றான் ராஜன்.

“முனியாண்டி விலாஸ் போகலாம்” என்றான் முத்து.

“ச்சி! அது தப்பு?.”

“இது நம்ம காசில்லை. அந்தப் பொணத்துக்கு சேர வேண்டிய காசு.”

“என்னடா உளர்றே? பொணம் அனாதையாக் கிடக்குதேன்னு வசூலிச்சோம். இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு. ஓட்டல் வேணாம்னா விடு, சினிமா போகலாம் வா.”

“இல்லை. இந்தக் காசு அந்தப் பொணத்தோட காசு.”

“உனக்கென்ன பைத்தியமா? பொணத்து கைல கொண்டு போய் கொடுக்கணுங்கறியா? சரி, உன் பேச்சையே வச்சிக்குவோம். இது அந்தப் பொணத்தோட காசு தான். நாம செஞ்சதுக்குக் கூலியா வச்சிக்குவோம்…”

“போடா சோமாறி? இதைக் கூலிக்காக வாடா நாம செஞ்சோம்? அந்த ஆத்மாவுக்கு ஒரு சாந்தி. நம்ம மனசுக்கு ஒரு சாந்தி. அதுக்காக செஞ்சோம். இப்பவும் சொல்றேன். இது அந்தப் பொணத்தோட காசு தான். என்ன ‘செய்யலாம் சொல்லு?”

“சரி, கொழந்தைங்களுக்கு முட்டாயி வாங்கித் தரலாமா?”

”உருப்படியா சொல்லு”

“கோயில் உண்டியல்ல போட்டுட்டா?”

“அது சாமிக்குப் போகுதா, ஆசாமிக்குப் போகுதான்னு கரெக்ட்டா சொல்ல முடியாது.”

“யாராச்சும் பிச்சைக்காரனுக்குப் போட்டுடுவோம்”

“நிஜப் பிச்சைக்காரனைக் கண்டுபிடிக்கறது கஷ்டம்”

“அப்ப என்ன தான் செய்யணுங்கற?”

“வா, நடந்துகிட்டே யோசிப்போம்”

ராஜன் சிந்தனையோடு, முத்து எரிச்சலோடு நடந்தார்கள்.

தூரத்தில் ஒரு கூட்டம் நெருங்கினார்கள்.

வட்டமாக ஒரு கூட்டம் நிற்க… இரண்டு பேர் துண்டு ஏந்திக் கொண்டு…

“அனாதைப் பொணமுங்க… தர்மம் செய்ங்க சார்.”

ராஜன் பத்து ரூபாயை எடுத்துப் போட்டான்.

“அந்த அனாதைப் பொணத்தோட பணம் இன்னொரு அனாதைப் பொணத்துக்கு போய்சேர்ந்துடுச்சு. இது தான் நியாயம்” என்று நடந்தான்.

ஆனாலும் அந்த நியாயம் முத்துவுக்குப் பிடிக்கவில்லை. புரியவில்லை.

– நவம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *