சூடேறும் பாறைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 11,193 
 

பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று போல நிமிர்ந்து நிற்கும். பாறைக்கு நடுவுல இருந்த நீம்பல்ல காட்டு மரம் ஒன்னு ரொம்ப அடர்த்தியா கிளை பரப்பி நெழல் தர்றதால உச்சி வெயில்ல கூட அந்தப் பாற சூடேறாது. அந்தக் காட்டு மரத்தோட பேர எத்தனையோ பேர்கிட்ட கேட்டிட்டேன், இன்னும் கண்டுபிடிக்க முடியல.

இஸ்கூல் லீவு வுட்டு மூணு வாரம் முடியப் போவுது. திங்கக் கெழம இஸ்கூலுக்கு போவனும். ஆனா எப்படி போவப் போறேன்னு எனக்கு புரியல. எல்லா பெரச்சினைகளுக்கும் காரணம் இந்த இஸ்கூல் ரிப்போட்ட அப்பாக்கிட்ட காட்டி சைன் வாங்க முடியாம போனதுதா.

இஸ்கூல் லீவு உட்டதுமே “எங்கடா ஓ ரிப்போட்டு” அப்படீன்னு அப்பா கேட்டாரு. நா இன்னும் தரல்லன்னு பொய் சொல்லிப்புட்டேன்.

என்னா பெரச்சனன்னா வகுப்புல எப்போதுமே ஒன்னாம் புள்ளைல இருந்து ஐந்தாம் புள்ளைக்குள்ளார நா வந்துருவே. இந்த மொற என்னைய பதினாறாம் புள்ளைக்கு தள்ளிப் புட்டாங்க. நா பதினாறாம் புள்ளையா வந்திருக்கிற விசயம் அப்பாவுக்கு தெரிஞ்சா முதுகுத் தோல உறிச்சி உப்புக் கண்டம் போட்ருவாரு.

அவுரு சொல்ற மாதிரியி முதுகுத் தோல உறிச்சி உப்புக்கண்டம் எல்லா போட முடியாதுன்னு எனக்குந் தெரியு. ஆனா அவரு தோட்டத்து வேலியில இருக்கிற நேரான சப்பாத்து செடி கம்ப வெட்டி கைப்பிடியெல்லா வச்சி சீவி காய வச்சி கட்டலுக்கடியில சொருகி வச்சிருப்பாரு. அந்தக் கம்பு முதுகுல பதம் பாக்குறதும் உப்புக் கண்டம் போடுறதும் ஒன்னுதான்.

நா அந்த பாறமேல குந்திக்கின்னு கன்னத்தில கைவச்சிக்கிட்டு கப்பல் கவுந்தது மாதிரி யோசிச்சிட்டு இருக்கையிலதா அந்த ரெண்டு கரிச்சாங் குருவிகளும் வந்து மரத்தில இருந்தாங்க. கரிச்சாங்குருவிங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அவுங்க மாத்திரந்தான் நாம கொடுக்கிற கொரலுக்கு எதிர்க்கொரல் குடுப்பாங்க. நம்மளோட பேசுவாங்க.

கிச்சி.. கிச்சிக்கிச்சி… கிச்சுகிச்சி… கிச்சுகிச்சி

கிச்சி… கிச்சி கிச்சி கிச்சி… கிச்சி… கிச்சி…

கிச்சுக் கிச்சி கிச்சுக்கிச்சி… கிச்சி…

கிச்சி… கிச்சி… கிச்சி… கிச்சி… கிச்சி…

இந்த நாளு வரிகள நல்லா கவனிச்சிங்கன்னா “கிச்சி.. கிச்சி…” அப்படிங்கிறதுக்கு மேலாக ஒவ்வொரு வரியிலயும் நெறைய வித்தியாசம் இருப்பது வெளங்கும். கவனிக்காம ரோட்ல போறவங்களுக்கு இந்தக் குருவிப் பாசை காட்டுக் கத்தலாகத்தா தோனும். ஆனா காது கொடுத்து கேட்டா அதன் இசை, தொனி, ராகம், தாளம் இம்மி பிசகாம கேக்கும். ஏதோ அர்த்தம் புரியிறது போலவும் இருக்கும். நா அதோட கதைய கேட்டு நெறயதடவ ரசிச்சிருக்கேன்.

நா இந்த கரிச்சாங் குருவிகளோட நெறைய தடவ பேசி இருக்கேன். அதுங்களோட பேசுறதுல இருக்கிற மகிழ்ச்சி பேசுனவங்களுக்கு மட்டுந்தாந் தெரியும். அவுங்களோட பேசுறதுன்னா விசிலடிக்க தெரிஞ்சிருக்கணும். விசில் பாச தான் அவுங்களுக்கு வெளங்கும். ஏன், மைனாங்களுக்கிட்ட கூட விசில் பாசையில பேசலாம். அதுவும் “பூ மைனாங்கிற” நாகனவாய் பறவ விசில் பாசைக்கு நல்லாவே காது கொடுத்து கேட்கும். பயப்படாம கிட்ட வந்து எதையெல்லாமோ பேசும்.

***

நா இந்த மூணுவாரமா சரியா வெளையாடவே இல்ல. இந்தக் கல்லு மேல வந்து குந்திக்கிட்டு கரிச்சாங் குருவியோடயும், மைனாக்களோடயும் பேச நெனைக்கிறேன். முடியல. இந்த ரிப்போட் வெளகாரம் தலைக்குள்ள புகுந்துகிட்டு பயமுறுத்திக்கிட்டே இருக்கு.

நா வகுப்புல ஒன்னாவுதுல இருந்து ஐஞ்சாவது எடத்துக்குள்ள வந்துருவேன்னு சொன்னத வைச்சு நா நல்லா படிக்கிற பொடியன் அப்படீன்னு நீங்கள்லாம் தப்பா நெனச்சிற கூடாது. ஏன்னா எனக்கு படிக்கிறதுல கொஞ்சங் கூட விருப்பம் இல்ல. படிக்கிறதுங்கிறது பாவக்கா சாப்பிடுற மாதிரி கசக்கும். எனக்கு வெளையாடுறதான் பிடிக்கும். விட்டா முழு நாளும் விளையாடுவோம். ஆனா வுட மாட்டாங்க. பாதியில இழுத்துக்கிட்டு போயி “இவந்தான் லீடர்னு” செமத்தியா மொத்துவாங்க. நா அதுக்கெல்லா கலங்கினதே கிடையாது. பெரியவங்கன்னா சின்ன பொடியங்கள அடிக்கணும்னு நெனச்சிக்கிட்டிருக்காங்க……….

எங்க வீட்ல மத்தவங்க எல்லாம் விழுந்து விழுந்து படிப்பாங்க. அவங்க தான் எனக்கு எமங்க. தம்பி, தங்கச்சி, அண்ணா, எங்க மூத்த அக்காவோட மூணு புள்ளைங்க எல்லா ஒரே வீட்ல இருந்து இஸ்கூலுக்கு போவோம். அவுங்கல்லாம் நல்ல மார்க் வாங்கும் போது ஒனக்கு ஏன்டா மார்க் கொறையுதுன்னு அடிப்பாங்க. அதனால வகுப்புல ஒன்னாவது ரெண்டாவது புள்ளையா வாரதுக்கு நா ஒரு டெக்குனிக்கு வைச்சிருந்தே. அந்த டெக்னிக்கு என்னான்னு தெரிஞ்சா நீங்க கூட ஆச்சரியப்படுவீங்க.

நா ஒன்னாங்கிளாஸ் ரெண்டாம் கிளாஸ் படிக்கிறப்ப இருந்தே சித்திர பாடத்தில நூறு மார்க் வாங் கிருவே. நா நல்லா சித்திரம் வரைபவன்னு பேர்வாங்கிட்டே. இப்ப எட்டாங் கிளாஸ் வரைக்கும் அது தொடருது. அதுபோல “கைப்பணி”ன்னு ஒரு பாடம் இருந்துச்சு. அதுவும் எனக்கு கைவந்த கல. சின்னதா பஸ், லொறி, கார், மாட்டு வண்டி இப்படி எல்லா செஞ்சி செஞ்சி கூட்டாளிங்களுக்கெல்லா கொடுப்பேன்.

வீசுன செமன் டின்ன வெட்டி தட்டையாக்குனா தங்கத் தகடு போல தகதகன்னு இருக்கும். அதுல ரெட்டை மயில்கள் ரெட்டைக் கிளிகள், அப்பொறம் வேற வேற டிசைன் னெல்லா போட்டு அப்பா மெஷின் தைக்கிறதுக்கு வைச்சிருக்கிற கத்திரிக்கோல களவா எடுத்து அழகா வெட்டி நண்பங்க வீடுகளுக்கெல்லாம் குடுத்துருவே. இப்ப கூட நெறைய பேர் வீட்டு செவத்துல இந்த மாதிரி ஜோடனை எல்லாம் தொங்கிக் கிட்டும் ஜொலிச்சுக்கிட்டுந்தான் இருக்கு. சில நேரம் அது கறள் பிடிச்சி இருந்ததும் கழட்டி வீசிப் புடுவாங்க. அப்பதா எனக்கு மனசு வருத்தமா இருக்கும். இப்படிதா ஒரு மாதிரி “கைப்பணி” பாடத்திலயும் நூறு மாக்ஸ் வாங்கிருவன்.

எங்க தோட்டத்த சுத்தி சில சிங்கள கிராமங்க இருந்ததால எங்களோட வெளையாட சிங்கள பொடியங்களும் வருவாங்க. அவுங்களோட சிங்களத்துல பேசி பேசி எனக்குள்ள சிங்கள பாஷையும் கொஞ்சம் வளந்துருச்சி. எங்க இஸ்கூல்ல முதியான்சேங்கிற சிங்கள மாஸ்டர் இருந்தாரு. அவரு சிங்கள பாடம் எடுக்கிற போது பாடப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து என்னத் தான் வாசிக்கச் சொல்லுவாரு. நானுங் கூட சிங்கள பாடத்தில கொஞ்சம் அதிகமா கரிசனை காட்றது எனக்கே தெரிஞ்சது.

“ஹெட்ட இஸ்கோல பட்டங் கன்னா தவச, எஹி மா யன்னட்ட பொஹோம கெமத்தி” (நாளைக்கு இஸ்கூல் ஆரம்பிக்கும் நாள். எனக்கு அங்கு போறதவிட சந்தோஷம் வேறு கிடையாது…) இது நாளாம் வகுப்புல நான் படித்த சிங்கள பாடத்தின் வரிகள். இப்பவுங் கூட அது எனக்கு ஞாபகம் இருக்குன்னா பாத்துக்குங்களே. அது நால சிங்கள மாஸ்டர் எனக்கு நூறு மாக்ஸ் போடுவார்கிறதுல உங்களுக்கு சந்தேகம் வர காரணமிருக்காதுன்னு நெனைக்கிறேன்.

இதுதான் நா வகுப்புல ஒன்றாம் புள்ள, ரெண்டாம் புள்ள வார டெக்குனிக்கு. இந்த மூணு பாடத்தில வேற எந்த பயலு நூறு மாக்ஸ் வாங்க மாட்டானுக. அவுங்க எல்லா கணிதம், விஞ்ஞானம் பாடங்களதான் முக்கி, முக்கி படிப்பாங்க. அதுல கூட ஆகக் கூடுதலா வாங்குனா அறுபதுக்கு மேல போகாது. நானு கூட மத்த பாடங்கல்லயும் நாப்பது மாக்ஸ் எப்படியாவது வாங்கிடுவே.

எனக்கு கொஞ்சங் கூட புடிக்காத பாடம்னா கணக்குதா. கணக்கு மாஸ்டர் படிப்பிக்கிறது ஒன்னுமே வெளங்காது. ஆனா தாட்டு பூட்டுனு படிப்புச்சுட்டு பத்து கணக்குப் போட்டுட்டு நாளைக்கு செஞ்சுகிட்டு வாங்கன்னு போயிருவாறு. எனக்கு அப்பவே பாதி உசுறு போயிரும். எப்படியாவது மத்த பயலுங்கக்கிட்ட கெஞ்சி கூத்தாடி கொப்பியடிச்சிக்கிட்டு போனா அத கணக்கு மாஸ்டர் கண்டு பிடிச்சிருவாரு. அவரு கேக்கிற ரெண்டு கேள்விக்கு எங்க கிட்ட பதிலு இருக்காது. நாங்க முழியோ முழியோன்னு முழிக்கிறத பாத்துபெரம்ப எடுப்பாரு.

நாங்க ஒரு ஏழெட்டு பேரு எந்த நாளும் அவருகிட்ட அடிவாங்குவோ. அவரு கையில அடிக்க மாட்டாரு. எல்லாரையும் வரிசையா நிக்க வைச்சு செவத்து பக்கம் திரும்பச் சொல்லி பின்னால தட்டத்துல மூணு அடி அடிப்பாரு. குண்டிச்சத பிஞ்சிர்ற மாதிரி இருக்கும். அதுனால கணக்கு பாடம் இருக்கிற நாள்ல ரெண்டு கால் சட்ட போட்டுக்கிட்டு வருவோம். மேலதிக பாதுகாப்பா தடிச்ச கொப்பி புத்தக மட்டைய கிழிச்சுட்டு கால் சட்டைக்கு உள்ளார சொருகி மேல சட்டய போட்டுருவோம். மட்டையோட கொப்பிய சொருகுனா அடிக்கிறப்ப “மடீர்னு” சத்தங் கேட்கும். மாஸ்டரு கண்டு பிடிச்சுருவாரு.

***

கரிச்சாங்குருவி பாட்ட நிறுத்தி ரொம்ப நேரமாச்சு. அது எப்போ தனது பாட்ட நிறுத்திச்சின்னு எனக்குத் தெரியாது. ஏங் கவல எனக்கு, யாருக்கிட்ட போயி இதச் சொல்றது. சூரியன் உச்சிக்குப் போக போக எம் மண்டையும் சூடாகிக்கிட்டே போவுது.

இந்த ரிப்போர்டு வெசயத்த சொல்ல வந்து எதையெதையோ சொல்லிக்கிட்டிருக்கே, இல்ல, விசயம் இதுதான். எங்க இஸ்கூலுக்கு கைப்பணி பாடத்துக்கு புதுசா ஒரு மாஸ்டர் வந்தாரு. அவருக்கு இன்னமும் எங்களப் பத்தியெல்லாம் சரியா வெளரம் தெரியாது. அப்படி இருக்கும் போதுதா இந்த ஆண்டு இறுதிப் பரீட்ச வந்துச்சி. நானுங் கூட எல்லாரும் மாதிரி வழக்கம் போலதான் பரீட்ச எழுதினே. ஆனா இந்த கைப்பணி பாடத்துக்கு பரீட்ச ஒன்னும் எழுதுறது இல்ல. ஏதாவது ஒரு கைபணிப் பொருள வீட்ல இருந்து செஞ்சிக்கிட்டு வரும்படி மாஸ்டரு சொல்லுவாரு. நாங்களும் நாங்க விரும்பினத செஞ்சிக்கிட்டுப் போவம். அதப்பாத்துட்டு மாஸ்டர் மாக்ஸ் போடுவாரு.

இந்த முறை நா ரொம்ப மெனக்கெட்டு வேலைப்பாடுகளெல்லாம் வச்சி ஒரு அழகான அலுமாரி செஞ்சி எடுத்துக்கிட்டு போனே. மாஸ்ட்டரு எல்லாரும் செஞ்சிக்கிட்டு வந்த கைப்பணிப் பொருள்கள எல்லாம் ஒவ்வொன்னா எடுத்து யாருதுன்னு கேட்டு கேட்டு மாக்ஸ் போட்டுக்கிட்டே வந்தாரு. என்னோட அலுமாரியை அவரு தொட்டுத் தடவி எடுத்த போது எனக்கு தலைய பிச்சுக்கிட்டு போற மாதிரி சந்தோஷமா இருந்திச்சி.

பொறகு அத கையில எடுத்து பெரட்டிப் பெரட்டி பாத்தாரு. யாரு செஞ்சுக் கிட்டு வந்ததுன்னு கேட்டாரு. எல்லாப் பயலுகளுக்கும் தெரியும் அத நான்தான் செஞ்சேன்னு. நா, நாந்தா செஞ்சே அப்பிடீங்கிறதுக்கு அடையாளமா எந்திருச்சி நின்னே. கிட்ட வரச் சொன்னாரு. பாராட்டப் போரார்னு நெனச்சி நானும் துள்ளிக் குதிச்சு மானாட்டம் போனே.

நா சிரிச்சுக்கிட்டே ஏதோ விஞ்ஞானக் கண்டுபிடிப்ப செஞ்சுப் புட்ட செருக்கோடவும் ஆணவத்தோடவும் அவரு பக்கத்தில போய் நின்னே. புது மாஸ்டர் என்னைய புரிஞ்சிக்கிட்டார்னு நெனைச்சே. எல்லா பயலுகளையும் எளக்காரமா ஒரு பார்வை பார்த்தேன்.

ஆனா, அதென்னா அவரு கண்ணுல நெருப்பெரியிற மாதிரி கோவம்ல தெரியுது. நா சுதாரிச்சி நிமிர்றதுக்கெடையில கன்னத்துல பளார்னு ஒரு அறை விழுந்துருச்சி. நா ஆசை ஆசையா மெனக்கெட்டு செஞ்சிக்கிட்டு வந்திருந்த அலுமாரி தூரத்தில் போய் விழுந்து ரெண்டா ஒடைஞ்சி என்னப் பாத்து சிரிச்சுது.

மாஸ்டர் என் தோளப் புடிச்சி உலுப்பினாரு.

“ஏன்டா… வெறும் பயலே….! கைப்பணி பொருள் ஒன்னைய செஞ்சுக்கிட்டு வரச் சொன்னா… ஒங்கப்பன செய்யச் சொல்லி வாங்கிட்டு வந்திருக்கிற… போ… ஒனக்கு மாக்ஸ்சே கெடையாதுன்னுட்டாரு…”

அன்னைக்குத்தா ஒலகம் மறுபுறமா சுத்துரது எனக்கு தெரிஞ்சுச்சு. நா கண்ணீர் விட்டு அழுதே. எல்லா பயலுகளும் என் மீது அனுதாப பட்டாங்க. மாஸ்டரத் தவிர. அவரு நெனச்சாரு அடிச்சதால வலி தாங்காம அழுவுரேன்னு. ஆனா எம் மனசுல விழுந்த அடியாருக்கும் தெரியல.

எங்கப்பா எத்தனை முறை என்ன அடிச்சிருக்காரு. முதுகு பிஞ்சு போற அளவு அடிச்சிருப்பாரு. அப்பவும் நா அழுதுருக்கேன். அது ஏ ஒடம்புல உழுந்த அடி. அதுக்காக நான் மனசால வருத்தப்பட்டது கெடையாது. அப்படியே வருத்தப்பட்டாலும் அம்மா வந்து அப்பாக்கிட்டருந்து “ஏங்க… சின்ன பயல போட்டு இப்புடி அடிக்கிறீங்கன்னு” இழுத்துக்கிட்டுப் போய் கட்டி அணைத்து தடவுன ஒடன எல்லா வலியும் ஓடிப் போயிரும்.

ஆனா இந்த மாஸ்டர் அடிச்ச அடிய மறக்கேலாது. ஏ உசுறு இருக்கு வரைக்கு மறக்கேலாது.

பொறகு மாஸ்டர் எனக்கு கைப்பணி பாடத்துக்கு முப்பது மாக்ஸ்தான் போட்டாரு. அதனால எனக்கு சேர வேண்டிய எழுபது மாக்ஸ் இல்லாம போச்சி. என்னைய பதினாறாம் புள்ளைக்கு தள்ளிப்புட்டாங்க.

***

என்னதான் மரம் நெழல் தந்தாலும் பாறை சூடாகிறத அதால தடுக்க முடியல. சூரியன் உச்சிக்கு வரும் போது பாற மட்டுமா சூடாகுது. ஒலகமே சூடாகுதுனு ஏ சின்ன மண்டைக்கு புரிஞ்ச போது அதுக்கு மேலயும் அந்த பாற மேல ஒக்காந்திருக்க எம்மனசு விரும்பல.

நா பாறையில் இருந்து எறங்கி கீழே வந்தே. எந்தப் பக்கமா எந்த எடத்துக்கு போறதுன்னு கூட நெனைக்க முடியாம குட்டிப் போட்ட நாய் போல அங்கேயு இங்கேயும் கொஞ்ச நேரம் அலைஞ்சேன். இந்த விசயத்தை எந்த பயலுகிட்டயும் சொல்ல முடியாமலிருக்கிறதுதான் என்னோட தவிப்பு. என்னோட அண்ணந் தம்பிக்கிட்ட கூட சொல்ல முடியாது. அவிங்க அப்பாக்கிட்ட காட்டிக் குடுத்திருவானுங்க. பொறகு முதுகுத் தோல உரிக்கிறே… உப்புக்கண்டம் போடுறேன்னு அவுரு கௌம்பிடுவாரு.

நா என்னா செய்யப் போறே…?

நா என்னா செய்யப் போறே…?

எம் மனசு இந்தக் கேள்விய திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டிருந்திச்சி. ஒரே ஒரு வழிய தவிர எனக்கு இந்த இக்கட்டில இருந்து தப்புறதுக்கு வேற மார்க்கமே இல்லைனு எம் மனசுக்கு தோணுது.

ரிப்போட்ல அப்பாவோட சைன நாமலே போட்ற வேண்டியதுதான். இப்படி நெனச்சப்பவே ஒடம்புக்கு கொஞ்சம் நடுக்கமாத்தான் இருந்திச்சி. தப்பு செய்யப் போறமேன்னு. ஆனா அப்புடியெல்லாம் பாத்தா வேலைக்கு ஆவாதுன்னு யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்துட்டே.

எங்கப்பா கையெழுத்த போடுறது ஒன்னும் கஷ்டமில்ல. அவுரு “சு. மு. சு ராமசாமி”ன்னு அச்சா எழுதியிருப்பாரு. ஏற்கனவே ரிப்போட்ல அவரு கையெழுத்து இருக்கு. அத பாத்து அப்பிடியே எழுதிறலாம்.

பாறைக்குன்று வெயில்ல சூடேறி தகிச்சுக்கிட்டிருந்துச்சு. இனிமே அது நாலு மணிக்குப் பொறகுதான் குளிர்வடையு. கரிச்சான் குருவிகளையோ, மைனாக்களையோ கண்ணுக்கெட்ற தூரம் வரை காண முடியல.

நா வீட்டை நோக்கித்தா போய்க்கிட்டிருக்கேனாங்கிறது கால்களுக்கு மட்டுந்தான் தெரியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *