சிந்தாத முத்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 8,203 
 

கால்வட்டமாய் கழுத்தை இடதுதோள் பக்கம் திருப்பி இடது கண்ணால் பார்த்தான் முருகன்.

‘அவளா? ; கண்கள் பேச, மனம் பார்த்தது.

‘அவளேதான்!’ மனம் சொல்ல, கண்கள் தொட்டுப்பார்த்தது.

அவசரமாய் அரைவட்டம் அடித்து கழுத்து தானாகவே வலதுதோள் பக்கம் திரும்பியது.

யாரை மறப்பதற்காக சொந்தம், பந்தம,; உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் மறந்து ஒரு அனாதையாக இன்று நிற்கிறானோ அவளே அருகில் நின்றால், காலுக்கு கீழே பூமி ஆடாமல் நிற்குமா? பூமி ஆடிக்கொண்டுதான் இருந்தது முருகன் விழாமல் நின்றான், இல்லை… வீம்பாக நின்றான். அவள் முன் விழுந்துவிடக்கூடாது என்ற வீம்பில்.

கல்யாணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் கண்ணீர்விடும் மனைவி சுமதியை நினைத்து நினைத்து தினம்தினம் நொந்து குழந்தையாகிப்போகும் நண்பன் பரமகுருவை, முருகன்தான் துறையூர் ஸ்ரீவாழவைக்கும் வண்டித்துரை கருப்புசாமி கோயிலுக்கு குழந்தைவரம் வேண்டி வாரம்தோறும் செவ்வாய், புதன் கிழமை சென்று வரச்சொன்னான். வரம்கிடைத்தது.

கருப்புசாமியின் பேரருளால் சிலமாதங்களிலேயே சுமதி தாயானாள். மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்து கொள்ள கிளம்பிய பரமுவும்,சுமதியும் ‘நீயும் கட்டாயம் வரணும்’ என்று வற்புறுத்தியதால் தவிர்க்க முடியாமல் கூட வந்தான். பசிக்கையில் உணவாய், உடுத்தையில் கைகளாய் இருப்பதுதானே நட்பு.

அண்ணன் இல்லாத சுமதிக்கு அண்ணனாய் முருகனும், சொந்தம் இல்லாத முருகனுக்கு சொந்தமாய் நண்பன் பரமகுருவும், சுமதியும் இருக்கிறார்கள்.

உறவு என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது ஓரு சுமைதானே. உறவுகள் சுமையாக இருப்பது அவரவருக்கு அமைந்த உறவைப்பொறுத்தது.

பரமகுருவும், சுமதியும் மருத்துவர் அறைக்குள் நுழைந்துவிட, முருகன் வாசலுக்கு வந்தான். வந்தவிடத்தில்தான் கவிதாவைப் பார்த்தான்.

கவிதா தாயாகி, தான் தந்தையாகி இதுபோல் ஒரு மருத்துவ மனைக்கு சிறப்பு பரிசோதனைக்கு வரவேண்டியவன் இன்று நண்பனுக்காக வந்திருக்கிறான். அதுவும் நாற்பது வயதில் கல்யாணமாகதவர்கள் வரிசையில் இருந்தபடி. ஒருவேளை கவிதா தாயாகி வந்திருப்பாளோ?. மனம் மீண்டும் அவளைப் பார் என்றது ஏக்கமாய்.

இந்த பதினேழு ஆண்டு காலத்தில் கனவில்கூட தனக்குள் நுழைந்துவிடாமல் யாரை துரத்திக்கொண்டு இருக்கிறானோ அவளே இன்று கண்களின் வழியாக நுழைந்துவிட்டாள்.

அது அவளாக இருக்காது, இருக்கக்கூடாது என்று தன்னையே சமாதானம் செய்துகொள்கிறான் தனக்குள்ளேயே போராடியபடியே.

அறிவு சொல்லி மனம் கேட்கும் இடத்தில் மனிதன் எப்பவாவதுதான் இருக்கிறான். அல்லது யாராவதுதான் இருக்கிறார்கள். மீண்டும் பார் என்றது மனம் அவனிடம் இருந்து திமிரித்திமிரி.

அவனை கேட்காமலே மீண்டும் ஒரு அரைவட்டம் அடிக்க அவன் கழுத்து தயாரானது. மீண்டும் அவளைப் பாத்தால் நடக்கக்கூடாதது நடந்துவிடலாம். ஏன் மனிதனாகக்கூட இல்லாமல் போய்விட நேரிடலாம். அந்த இடத்திலேயே இனி நிற்கக்கூடாது வேகமாக நடக்கத் தொடங்கினான். கால்களின் கீழே பூமி நழுவி நழுவி போய்கொண்டே இருந்தது. பூமி நழுவ நழுவ இவனும் கீழே கீழே இறங்கி நடந்துக்கொண்டே இருந்தான்.

‘பார்த்துப்போங்க சார்’ என்று சொல்லிய படியே பிரேக் பிடித்த இளைஞனின் பைக்கின் இடது கைப்பிடி முருகனின் வயிற்றில் குத்தி நடையை நிறுத்தியது.

இளைஞன் இடது காலை பூமியில் ஊன்றியபடி நின்று மெல்ல சிரித்தான். பைக்கின் பின்னால் உட்கார்ந்து இருந்த அவன் மனைவியும் சிரித்தாள். அவளின் கருவுற்ற வயிறு புடவைக்கட்டிக்கொண்ட பலாப்பழம்போல் இருந்தது.

பூவில் ஒரு பூ பூத்ததுபோல அத்தனை அழகு அந்த சிரிப்பு. கருவுற்ற பெண்ணிடத்தில் இவ்வளவு அழகை பரிசாகக் கொடுக்கும் காலம் வள்ளல்களின் வள்ளல்தான்.

அம்மா ஆகப்போகிறேன் என்பதே இவ்வளவு அழகு என்றால், அம்மா என்பது அழகின் உச்சமோ?. உறவுகள் அனைத்தும் வெறும் உருவமாய் மனதில் பதிய, அம்மா மட்டும்தானே இறைவன்போல குணங்களின் வடிவமாயும் மனதில் பரந்து பதிந்து விடுகிறாள். அதனால்தானே அம்மா காலதேசங்களைக்கடந்தும் குழந்தைகளை தழுவிய படியே வாழ்கிறாள்.

நினைவுகளின் திரைவிலக்கி ஒரு கோணல் புன்னகையுடன் ‘மன்னிக்கனும்’ என்று சிரித்தப்படி முகம்காட்டினான் முருகன்.

‘பார்த்துப் போங்கண்ணா’ என்றாள் சிரித்தப்படி அந்த குழந்தை சுமந்திருக்கும் குழந்தை.

முருகனுக்கு சுமதியின் ஞாபகம் வந்தது. ‘தனது முதல் வாழ்த்துக்காகத்தானே தன்னையும் கூட வரச்சொன்னாள், இப்படி பண்ணிவிட்டோமே’ என்ற குற்ற உணர்வு பிடரியைப்பிடித்து தள்ள அவசரமாக மருத்துவ மனையை நோக்கித்திரும்பினான்.

கவிதா அங்கு இல்லை. ஒரு நிம்மதி கலந்த மூச்சு வெளிப்பட்டு காற்றில் கலந்தது. கவிதா அங்கு இல்லை என்பதாலேயே கண்கள் அலைந்து அலைந்து அவளைத்தேடியது. சோர்ந்துப்போன கண்கள் வாடி அவன் இமைகூட்டுகள் சுருண்டது. இனம்புரியாத ஒரு சுமை நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அழுத்தி திணறடித்தது.

வெறுத்துக்கொண்டே நேசிக்கவும், நேசித்துக்கொண்டே வெறுக்கவும் மனதை புரட்டி புரட்டி பாடம் படிக்க வைக்கும் காதல்தான் எத்தனை கொடுமையானது.

உயிரோடு சாகவும். செத்தும் வாழவும் காதல் செய்யும் மாயஜாலம். அவதாரம் எடுத்த ஆண்டவனும் செய்வதில்லை.

காதல் காற்றைவிடவும் மென்மையாகத்தான் உள்நுழைகிறது. இமயத்தைவிடவும் கனமாக எப்படி கனக்கிறது.

ஏசுநாதர் பிரியமாண(ன)வனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, எதிரிகளால் சிலுவையில் ஒரு முறைதான் அறையப்பட்டார். காதல் பிரியமானவருக்காக தன்னைத்தானே சிலுவையில் அறைந்துக்கொள்ளும் கொடூரத்தை கணம் கணம் செய்கிறது. காதல் தன்னைத்தானே காட்டிக்கொடுத்துக்கொள்ளும் முடிவுறாத கல்வாரி பயணமல்லவா?

சிவன் ஆலகாலம் குடித்ததோடு நிறுத்திக்கொண்டார். காதலை குடித்திருந்தால் தெரியும். மங்கை ஒரு பாகனாகி அங்கம் ஒன்றாகி உயிர் இரண்டாக இருக்கும் எருதுவாகனன் அறிவதில்லை, உயிர் ஒன்றாகி உடல் இரண்டாக இருக்கும் காதலின் வலி.

வேகவேகமாக நடந்து மருத்துவமனைக்குள் நுழைந்தான். சுமதியும் பரமுவும் இன்னும் மருத்துவர் அறையிலேயே இருந்தார்கள். வெளிவரவில்லை. சற்று ஆறுதலாக இருந்தது. சுமதி வந்து ஏமாந்திருந்தால், வந்ததிற்கு அர்த்தமே இல்லாமல் ஆகியிருக்கும்.

பார்வையாளர்களுக்காக போடப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இடது கை பெருவிரல் நகத்தை கடிப்பதுபோல் வாயில் வைத்து கண்களால் உலாவி கொண்டு இருந்தான் மருத்துவ மனையில்.

கவிதாவை பார்க்கவேண்டும் என்ற ஆவலுடன் அலைகின்ற கண்களுக்கும், பார்க்கக்கூடாது என்கிற கோபத்துடன் துடிக்கின்ற மனதிற்கும் இடையில் வைத்து தன்னைத்தானே நசுக்கிக்கொண்டு இருந்தான். நெற்றி ஓரத்தில் வியர்த்தது. கைக்குட்டையை உதறி துடைத்துக்கொண்டு எதிரே பார்த்தான்.

சுவற்றில் ஒட்டி இருந்த வண்ணப்படத்தில் இருந்து ரோஜாப்பூப்போன்ற ஒரு குழந்தை ‘ஸ்….ஸ்….ஸ்’ என்று தனது அரும்புவிரலை செந்தாமரை இதழில் வைத்து மௌனம் கற்றுக்n;காடுத்தது.

பூவைப் பூப்போலவே படைக்கும் இறைவன், சில குழந்தைகளை பூப்போல கனிபோல படைத்து நான் ரசிகன்டா, அப்புறம்தான் இறைவன் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறான்.

இறைவன் இருப்பதை நம்புகின்றீர்களோ இல்லையோ அவன் ரசிகன் என்பதை நம்புங்கப்பா.

கவிதாவை வாழ்வில் பார்க்கும்வரை இறைவன் ரசிகன் என்பதை முருகனும் நம்பாமல்தான் இருந்தான்.

நிலத்தில் செந்தாமரை முளைக்கும், நிலக்கரியில் முளைக்குமா?. முளைத்ததே. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கறுப்பு வயிற்றில் வளர்ந்து நடந்தால் தார்ரோடு தங்கமாகிவிடும் பொன்னொளி சிந்த பிறந்தவள் கவிதா.

கவிதா எங்காவது தட்டுப்படுகிறாளா என்று கண்கள் அலைய அலைய மனம் சற்று பணிந்துதான் போனது. மருத்துவ மனையை சுற்றி ஒரு நோட்டம் விட்;டான்.

மருத்துவ மனையின் வரண்டாவில் பிரசவ நேரத்தை எதிர்ப்பார்த்து தாயின் தோளில் கைபோட்டு சாய்ந்தபடி நடந்த மகள் ‘ஐயோ..வலிக்குதும்மா’ என்று தளர்ந்து சரிந்த தன் வயிற்றை இடது கையால் தாங்கிக்கொண்டு தரையில் நழுவிடப்போகையில் ஓடிவந்து அணைத்துக்;கொண்ட கணவனின் கண்களில் கண்ணீர். மனைவியை அணைத்;தப்படி அவனே ஒரு குழந்தையாகிக் கொண்டு இருந்தான்.

உயிரின் கனத்தையும் உறவுகளின் உயரத்தையும் அறியும் அளவாக இருந்தது அந்த கணம்.

கவிதாவை பார்க்கவேண்டும்போல் மனதுக்குள்ளும் நெகிழ்வு. மனம் நெகிழ்ந்த நேரத்தில் கவிதாவை காணத கண்களில் கண்ணீர். காலம் கரைக்காத மனக்கல்லையும் காட்சிகள் கரைத்துவிடுமோ?. உட்கார்ந்து இருந்தவன் எழுந்து மெல்ல மருத்துவ மனையை சுற்றிப்பார்ப்பதுபோல கவிதாவைத்தேடினான்.

உடல் இருப்பதை மறக்கவும், மனம் இருப்பதை பார்க்கவும் மருத்துவ மனைபோல் உலகில் நல்ல குருகுலம் இல்லை..

‘நான் அவளைப்பார்த்ததுபோல என்னை அவள் பார்த்து இருப்பாளோ, அதனாலேயே என் கண்ணில் படாமல் மறைந்திருப்பாளோ’ ஒரு சந்தேக முள் மனதில் மையத்தில் குத்தி அவன் வலிதாங்கும் வல்லமையின் எடை எவ்வளவு என்று பார்த்தது.

எண்ணங்களைவிட மென்மையான பூவும் இன்னும் பூக்கவில்லை, எண்ணங்களைவிட கூரான முள்ளும் இன்னும் முளைக்கவில்லை.

‘கவிதா’ என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் அனுபவித்த ஆனந்தம் இன்று ‘கவிதா’ என்று எண்ணும்போதெல்லாம் வானிடிந்து விழும் சுமையாய் வலிக்கிறது.

உறவுகளைக்கூட பார்க்கமல் கவிழ்ந்துபோகும் கண்கள்தான் சிலநேரம் எதிரியைக்கூட விரும்பி பார்க்கிறது. கவிதாவை பார்க்கத்துடிக்கும் முருகனின் மனம் பழைய காதலியை எண்ணியா? புதிய பகையை எண்ணியா? ஆனால் அவன் கண்ணீரில் கரைந்தொழுகும் அவள்மீது கொண்ட காதல் எப்போதும் இருப்பதுதான்.

முகம் துடைப்பதுபோல் கண்ணீரை துடைத்துக்கொண்டான். கண்களின் ஈரம்மட்டும் குறையவே இல்லை. பெண்கள் நீளமான கண்ணீரோடு அழுகிறார்கள் ஆனால் கண்கள் காய்ந்தே இருக்கிறது. ஆண்கள் துளித்துளியாக அழுகிறார்கள் கண்கள் ஈரமாகிக்கொண்டே இருக்கிறது.

கல்லூரி சேர்ந்த முதல்நாள் அம்மாவுடன் காரில் வந்த கவிதா, கூடவே ஒரு பாட்டியையும் அழைத்துவந்தாள். கல்லூரி எதிரில் இளநீர் விற்கும் தாத்தாவின் மனைவி. அலுமினிய வாளியில் அந்த பாட்டியம்மா தாத்தாவிற்கு சோறு கொண்டு போனது.

மதிய சாப்பாட்டை ஆளுக்கு கொஞ்சம் பங்குப்போட்டு சாப்பிடயில், அவள் மட்டும் காக்காவுக்கும் குருவிக்கும் பங்கு வைப்பாள்.

அம்மாவிடம் அழுது அடம்பிடித்து வாங்கி போட்டுவந்த புதிய விலையுயர்ந்த செருப்பு என்று தோழிகளிடம் சொல்லி காலைக்காட்டி சிரித்தவளை ஒரு நாள் வகுப்பில் செருப்பில்லாமல் பார்த்தான் முருகன். அன்று மாலையே முள்சுமந்து ஆடு ஓட்டிக்கொண்டு போகின்றவள் காலில் அந்த செருப்பு செம்மண்பூசி ‘இவளுக்கு இவ்வளவு போதும்’ என்று தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு தேய்ந்;தது.

ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு, சிலநேரம் ஒரு பேருந்து பயணம், சிலவேளை ஒரே ஆய்வகமேசையில் சோதனை இது மட்டுமே போதுமா ஒருத்திமீது ஒருவன் காதல் கொள்ள.

கோழியை குருமாவாகவும், மீனை வறுவலாகவும், ஆட்டை உப்பு கண்டமாகவும் பார்க்க தெரிந்த அவனுக்கு, பறவையோடு பறக்கவும், மீன்களோடு நீந்தவும், ஆடுகளோடு உலவவும். உதிரும் பூக்களில் நடனங்கள் ரசிக்கவும் கவிதாதான் கற்றுக்கொடுத்தாள்.

வாய்மட்டுமே பேசுவதை கேட்டு பழக்கப்பட்டவனுக்கு, மனம் பேசுவதையும் கேட்க பழக்கப்படுத்தினாள். மனம் பேசப்பேச உடல் உதிர்த்து மனம் கிளைத்து உலகமெங்கும் விரிந்தான். உலமெங்கும் விரிந்தவனுக்கு அவளே உலகமாகிக்போனாள்.

கல்லூரி வரும்வேளையில் கஞ்சி கொண்டுவரும் பாட்டிக்கு காரில் இடம் கொடுக்கவும், ஆடுமேய்ப்பவளுக்கு செருப்புக்கொடுக்கவும் அவளால் முடியுது என்றால் அவள் அவளுக்குள்ளே இன்னொன்றாகவும் இருக்கிறாள் என்பதை அப்பதான் புரிந்து கொண்டான் முருகன்.

கற்றுக்கொடுக்க சரியான குரு கிடைக்கும்வரை, கற்றுக்கொள்வேண்டிய அனைத்தையுமே தேவையில்லாதவை என்று தள்ளிவிட்டு போகும் மானிடக்கூட்டத்திற்குதான் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவை இறைவன் பரிசாக கொடுத்திருக்கிறான். கவிதா என்னும் காதல்தேவதை குருவாக கிடைக்காமல் இருந்திருந்தால் ஓவியத்தை மூடியே வைத்திருக்கும் பேதையில் ஒருவனாய்தான் முருகனும் இருந்திருப்பான்.

நியூட்டனின் மூன்றாம்விதி செயல்படாத செயல் பிரபஞ்சத்தில் இல்லாமல் இருந்தாலும், காதலில் செயல்படுற அளவு துல்லியமாக செயல்படும் செயல் உலகில் வேறு ஏதாவது இருக்கா? என்பது கேட்கப்படவேண்டியக் கேள்வி.

காதலனும் காதலியும் பிரியவே முடியாது என்கின்ற நிலையில் தவிக்கும்போது பிரிப்பான் பாருங்க ஆண்டவன், அப்பதான் அவனை பித்தன் என்று சொன்னவன் முத்தன் என்பதை நாம யோசிக்க வேண்டி இருக்கு.

முருகன் அறிவானா? கவிதாவின் அப்பாவிடம்தான் முருகனின் அப்பா கைகட்டி சேவகம் செய்கின்றார் என்பதை. அறியாதது எல்லாம் நடக்காது என்று எப்படி நினைக்க?. தானே புயல் கடலூர் மாவட்டத்தை அழித்தது அறிந்த பின்னா நடந்தது?

சேவகன் மகன் முதலாளியின் மகளை காதல் செய்வது காதல் சரித்திரத்தில் முதலும் இல்லை, இதுவே முடிவும் இல்லை. இது காதல் தேவன் அறியாத காதல் காட்சியும் இல்லை. எந்த கதாசிரியன் புத்திக்கும் புலப்படாத புதிரும் இல்லை.

காதலியைப் பார்க்கப்போன இடத்தில் காதலியின் அப்பா காதலனின் அப்பாவை தென்னை மரத்தில் அம்மனமாய் கட்டிவைத்து சவுக்கால் அடிப்பதை காதலன் பார்த்தான் பாருங்கள் அது……?

உதிர்ந்த இறகில்கூட வாழ்ந்த பறவையின் அழகை ரசிக்கும், வரலாற்றை வாசிக்கும் கருணை உள்ளம் படைத்த காதலியின் அப்பாவாக வாய்த்தவர், தொழிலாளியின் உடம்பையே கல்லாக நினைத்து துவைக்கும் அளவுக்கு கொடூரன் என்பதை காதலன் பார்த்தான் பாருங்கள் அது…?

அந்த பிள்ளைகளுக்கு இடையே உள்ள தூரத்தை காற்றால்கூட நுழைந்து அளக்க முடியவில்லை. அந்த அப்பாக்களுக்கு இடையே உள்ள தூரத்தை வானம்கூட விழுந்து அடைக்கமுடியவில்லை.

முருகன் எவ்வளவோ கேட்டும் கடைசிவரை காரணம் சொல்லாத அப்பா கடைசியில் கவிதா வீட்டு கிணற்றில் விழுந்தே பிணமாகிப்போனார்.

அப்பாவின் பிணத்தை எரிக்கும்வரை கவிதாவின் அப்பாவை தேடிக்கொண்டுதான் இருந்தான் முருகன். கிடைத்திருந்தால் அன்று முருகனின் அப்பா விறகில் எரிந்து இருக்கமாட்டார். கவிதாவின் அப்பாவின் கறியில் எரிந்து இருப்பார்.

அம்மாவை இழந்து பிழைக்கவந்த இடத்தில் அப்பாவையும் இழந்த முருகன் அநாதையாகி ஊரையும் உறவையும் நட்பையும் விட்டுப்போனான். கொலைகாரனாக இருப்பதைவிட அநாதையாக இருப்பது சுமையில்லாமல் இருந்தது அவனுக்கு. கவிதாதான் அவனுக்கு மனம்பேசுவதை கேட்க பழக்கப் படுத்தி இருக்கிறாளே.

வாயும் கையும் மட்டுமே பேசும் நிலையிலேயே மனித இனம் இருந்திருந்தால் மனிதர்கள் குரங்குகளை தங்கள் மூதாதையர்கள் என்று சொன்னதற்கு குரங்குகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கும். மனம் பேசும் நிலைக்கு மனிதன் உயர்ந்தபோதுதான் பூக்களைவிடவும் புனிதமாக மானிடன் பாதமும் பூஜிக்கப்படுகிறது.

கவிதாவின் அளவுகடந்த கருணையின் வெளிப்பாடு, தந்தையின் கொடூர சுபாவத்தின் எதிர்வினையோ? இரணியனுக்கு மகனாக பிரகலாதன் பிறந்ததுபோல,

மனம் பேசுவதை கேட்க கற்றுக்கொடுத்தவளிடம், மனமே இனி பேசாதே என்று சொல்லும் தூரத்திற்கு போய்விட்டான்.

எவள் அவன் உலகமாக இருந்தாளோ அவளே அவன் கல்லறையாகவும் ஆகிவிட்டாள்.

கவிதாவை இத்தனை காலம் கடந்து பார்த்ததும், கல்லறை உடைந்து ஒரு ஜீவன் எழுவதை பார்க்கும்போது ஏற்படும் அதிர்வுபோலத்தான் அதிர்ந்தது இதயம்.

காலன் ஒரு கல்நெஞ்சக்காரன், நல்ல முழுசிலையை மூளியாக்கிவிடுவான். மூளியை தூக்கிவைத்து முழுசிலைபோல கும்பிடவைத்துவிடுவான். கவிதாவை விரும்பி பார்க்கப் போன நேரத்தில் பார்க்கவே முடியாமல் ஆக்கியவன். பார்க்கவே கூடாது என்று நினைக்கின்ற நேரத்தில் பார்க்க வைத்துவிட்டான்.

‘அவள்தானா?…அவளேதானா!’ என்று மீண்டும் ஒருமுறைப் பார்த்து ‘இல்லை’ என்று உறுதி செய்துவிடேன் என்றது மனம்.

கவிதாவால்தான் பூமி புதையலாகவும், வானம் பூமரமாகவும் ஆனது முருகனுக்கு.

இறக்கைகள் இல்லாமல் பறந்து கொண்டு இருந்ததெல்லாம் ஒரு காலம். இன்று அவனைக்கேட்டால் அது ஏதோ ஒரு ஜென்மம் என்றுதான் சொல்வான். இல்லை…இல்லை கேட்டவனை நிச்சயம் கொல்வான்.

காதலால் உள்ளம் செத்துப்போனவன் உயிரோடு இருப்பது ஒரு ஜென்மத்தின் தொடர்கதை என்று யாராவது நினைத்தால், நினைத்தவன் இன்னும் காதலிக்கவில்லை என்று அர்த்தம். இல்லை, இனி எப்போதுமே அவனுக்கு காதல் இல்லை என்றுதான் அர்த்தம்.

கவிதாவோடு இருந்த நாட்கள் எல்லாம் முருகனுக்கு கவிதையான நாட்கள், பிரியமான நாட்கள், இனிமையான நாட்கள்.

நான்கு விழிகளில் ஒரு பார்வை, நான்கு பாதங்களில் ஒரு பயணம், நான்கு கைகளில் ஒரு தழுவல், இரு இதயத்தில் ஒரு ஓசை, இரு உடலில் ஒரு உயிர் இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கிய காதல், முத்தம் என்ற ஒன்றை மட்டும் இரண்டு வாயில் பாதி பாதியாக பிரித்துவைத்து உள்ளது.

கவிதாதான் அவள் வாயில் இருந்த பாதி முத்தத்தை அவன் வாயில் இருந்த பாதி முத்தத்துடன் சேர்த்து ஒன்றாக்கினாள். அந்த சந்தோஷ இம்சையில் அவன் செத்துப்போயி பல நூறாகப் பிறந்தான். சந்தோஷ இம்சை செய்வதில் கவிதா ஒரு கவிதைதான்.

உண்மையிலேயே அவன் இம்சைப்படும்போது அவள் ஏன் வீட்டை விட்டே வெளிவரவே இல்லை? அடிபடுவது அவன் அப்பா என்று தெரிந்தும் ஏன் அவள் கருணை மனம் கண்டு கொள்ளவில்லை?. பெய்யவேண்டிய நேரத்தில் பெய்யாத மழையோ அவள்!.

மருத்துவரின் அறையில் இருந்து வெளிவந்த சுமதி ஒரு குழந்தையாகவே மாறி இருந்தாள். ‘அண்ணா’ என்று மருத்துவ மனையை மறந்து முருகனைக் கட்டிக்கொண்டாள்.

முருகன் கண்கள் மின்ன பரமுவையும் சேர்த்து அணைத்துக்கொண்டான். முருகனுக்குள் தான் தாய்மாமன் ஆகிவிட்ட சந்தோஷம். இதயம் இளகும்போதுதான் உறவுகள் எத்தனை அற்புதத்துடன் முளைத்து தழைத்துவிடுகிறது.

பரமுவையும், சுமதியையும் ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக வீட்டுக்கு போக சொல்லிவிட்டு, தனது அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி சுமதி பெயரில் அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரிக்கு அர்ச்சனைக்கொடுக்க அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு நடராஜர்கோயிலுக்குப் போனான் முருகன்.

கல்லூரி சுற்றுலாவிற்காக பிச்சாவரம் மாங்குரோ காடுகள் என்னும் சதுப்பு நிலத்தாவரங்களை பார்க்கவந்தபோது சிதம்பரம் லேனாவில் சின்னத்தம்பி படம் கவிதாவோடு சேர்ந்து பார்த்துவிட்டு நடராஜர்கோயிலுக்கு போகும்போது ‘நாமும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்றான் சிரித்தபடி.

‘நீயும் பிரபு மாதரி பாட்டுபாடிகிட்டு, என்வீட்டுல வேலை செஞ்சிகிட்டு என்னை பார்த்துகிறதுன்னா சம்மதம்’ என்றாள்.

‘அப்ப இன்னைக்கே சிவகாமிஅம்மன் கோயிலுல தாலிகட்டிவிடுறேன்’ என்றான்.

‘என் புருஷன் எனக்காகக்கூட அடிமையாக இருக்கக்கூடாது, நாலுபேருக்கு நல்லது செய்யுற செயல்வீரனாக இருக்கனும்’ என்றாள்.

‘அந்த கவிதாவா இன்று என்னை மறந்தேபோன கவிதா’ அதற்கு மேலும் அவளை நினைக்க அவனுக்கு மனம்மில்லை. இப்பொழுது சிதம்பரத்திலேயே குடியிருந்தும் கவிதா இல்லாததால் நடராஜர்கோயிலுக்கு

அவன் போனதேயில்லை.

அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரி ஆலயத்தின் பிரதான வாசலில் நுழைந்து மேல் படியில் இருந்து கீழே இறங்கிய முருகனின் கண்கள், வெளிப்பிரகாரத்தின் வடதிசையில் இருக்கும் ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம் இருக்கும் மண்டபத்தின் மேல்படியைத்தான் ஆவலுடன் நோக்கியது. அங்குதான் முருகனும் கவிதாவும் முதன் முதலில் வந்தபோது உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

‘இப்போது கவிதா அங்கு இருப்பாளா?’ கண்கள் தேடியது.கண்ணும் குழந்தையும் ஒன்றுதான். பிடித்த உடனேயே பிணையும், பிடிக்காத உடனேயே விலகும்.

மேல் படியில் உட்கார்ந்து இருந்த கவிதா முருகனின் தோளில் கைவைத்திருந்தாள். கீழ்படியில் உட்கார்ந்து இருந்த முருகன் கவிதாவின் மலர்பாதத்தை எடுத்து தன் மடியில் வைத்திருந்தான். அவன் சின்ன இதயத்தில் கனக்க கனக்க ஆனந்தமாக சப்பனம்போட்டு உட்கார்ந்து இருப்பவள் அவன் பெரிய மடியில் தன் சின்னபாதம் படுவதற்கு கூசிக்கூசி குறுகி சினிங்கி கோபித்தாள் அவனுக்கு வலிக்கும் என்பதுபோல தன் பாதத்தை இழுத்தப்படி. அவள் பாதத்தை இழுத்துக்கொண்ட போதெல்லாம் அவனுக்கு மடிவலித்தது.

அம்மாவையே பார்த்து அறியாத முருகன் அன்று அவன் அம்மாவைப்பார்த்தான் கவிதா கொண்டுவந்த சோற்றை அவனுக்கு ஊட்டிவிடையில். பிறந்ததில் இருந்து இன்றுவரை எத்தனையோ வேளை சாப்பிட்டாகி விட்டது. அந்த ஒற்றைநொடியில் அந்த ஒரு கை உணவு வாழ்வின் கவிதையான பேரானந்தம். கண்கள் கலங்க முருகன் கவிதாவின் கையைபிடித்து சோற்றோடு தனது நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டான்.

‘ஐய….ஆளப்பாரு அழுமூஞ்சி, சப்பாணி, மூக்கொழுவி, கொழந்ந்ந்த… இதுக்கு கல்யாணம்வேறு வேண்டுமாம்’ என்று முருகனை கிண்டல் செய்து கொண்டே தனது தாவணியால் அவன் சட்டையில் ஒட்டி இருந்த சாப்பாட்டை துடைத்த கவிதா சிரித்தாலும், அவள் தன் கண்களை அவனுக்கு காட்டவில்லை. அதிலும் கண்ணீர்.

இன்னும் படிகள் இருப்பதுபோலவே நினைத்து காலை கீழ் படியில் வைக்கப்போன முருகனின் கால் சமதளத்தில் மெத்தென்று மோதி அதிர்ச்சியை உண்டாக்க, அவனுக்குள் ஓடிக்கொண்டு இருந்த ஒளிஒலி நினைவுநாடா அறுந்துவிழ, கண்முன்னே கோயில் கொடிமரம் தகதகவென பொன்னில் மின்னியது நிஜத்தில்.

அன்று கவிதா தாவணியால் துடைத்த இடத்தை அவனை அறியாமல் கைகள் தடவிப்பார்த்தது இன்று. நினைவுகளே தீயாக உருகுவதுதான் காதலோ?. காதலியுடன் இருக்கையில் பூவாக இருந்த எல்லாம் காதலியின் பிரிவில் தீயாக மாறும் அதிசயம் மனித மனங்களில் மறைந்து கிடக்கும் ஆச்சர்யமோ?

கருணையே வடிவமான மரகதவல்லியாகிய அருளரசி அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரியின் திருவடியில் நிற்பதே அவனுக்கு பேரானந்தமாக இருந்தது. கவிதாவால் உண்டான தீக்காயத்தில் தேன் விழுவதுபோன்ற சுகமான சிலிர்ப்பு. ஒரு தாயின் மகன் என்ற நினைவழிந்து, எல்லோரும் ஒரே தாயின் மகனென்ற பரவசம் ததும்பியது அவனுக்குள்.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே என்ற அபிராமி பட்டரின் அமுதகவியான அபிராமி அந்தாதியை மனம் சுவைக்க கண்மூடி நின்றவன் விழிதிறந்தான். தீட்சதர் ஏற்றிக் காட்டிய கற்பூர தீபஒளி மலர் சூடி அன்னை ஸ்ரீசிவகாமசுந்திரி திசையெங்கும் மின்ன புன்னகைக்காட்டி தானும் ஒரு பூவாகப் பூத்தாள் அந்த புவனம் முழுதும் பூத்தவள்.

அர்ச்சனைத் தட்டில் காணிக்கை வைத்து கற்பூர ஆரத்தியை கண்களில் ஒற்றி, குங்குமம் இட்டுக்கொண்டு, அர்ச்சனைத்தட்டை வாங்கிக்கொண்டு பிரகாரம் சுற்றி, கொடிமரத்தடியில் விழுந்து கும்பிட்டு எழுந்து நடக்கத்தொடங்கியவனை தடுத்தது அர்ச்சகர் குரல்.

கனிந்த அந்த அர்ச்சகரின் குளிர்ந்த விழிகளில் வழியும் தண்ளொளி தன்னை தழுவ பக்தியுடன் அவரைப் பார்த்தான் முருகன்.

கையில் வைத்திருந்த குழந்தைகள் பள்ளிக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் எவர்சில்வர் கப்பொன்றை அவனிடம் நீட்டி ‘கீழ சன்னதியில் அலமேலுன்னு ஒரு அம்மா பூ விக்கிறா, அவகிட்ட கொடுத்திடுங்கோ’ என்றார்.

கப்பை வாங்க நீட்டிய கையை கீழே இறக்கிக்கொண்டான் முருகன்.

‘பரவாயில்ல நீங்க போங்கோ’ என்றார் அவர்.

முருகன் குறுகிப்போனான். கணத்தில் உள்ளுக்குள் தோன்றி கவிதா சிரித்து இன்னும் குறுக்கினாள். கவிதாவின் காரில் இருந்து அலுமினிய சாப்பாட்டுவாளியுடன் எப்போதும் இறங்கும் பாட்டி, இப்பொழுது அவன் மனவெளியில் தோன்றி தன் வாயில் குதப்பிக்கொண்டு இருந்த வெற்றிலைபாக்கு எச்சியை பொதுக்குன்னு அவன் நெஞ்சுக்குள் துப்பி, அவன் மனசு டார்டாராய் கிழிந்து தொங்கி இரத்தம் வடிப்பதுபோல சிவப்பாக்கினாள்.

அந்த கணத்தின் கனம் தாங்கமுடியாமல் ‘மன்னிக்கனும் ஐயா, கொடுங்க கொடுத்துடுறேன்’ என்று பவ்வியமாக அந்த சாப்பாட்டு பாத்திரத்தை வாங்க கைநீட்டினான்.

கனிந்த அந்த முதிய தீட்சதரின் முகத்தில் ஒரு குழந்தையின் புன்னகை. அந்த புன்னகையில் உதிர்ந்து கொண்டே இருக்கும் பூக்கள். சிலர் பூக்களை தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதை புன்னகை என்ற பொருளில் அருகில் இருப்பர்மேல் உதிர்த்துவிடுகிறார்கள். கவிதாகூட அப்படித்தான். புன்னகைக்கும்போது அவள் ஒரு பூந்தோட்டமாகிவிடும் பூ.

முருகனின் கையில் அந்த பாத்திரத்தை வைத்தவர் ‘ஒரு புண்ணியவதி நித்தம் அம்பாளுக்கு பூக்கொடுக்குற பாத்திரம்ப்பா, காலையில பூக்கொண்டு வந்தவ ஏதே அவசரமுன்னு அம்பாள் அபிஷேகம்கூடப் பார்க்காம போயிட்டா. இது அவளோட உயிர். ஒரு நாள் தெரியாம தவறி கீழ விழுந்துட்டதிற்காக துடித்து அழுதிட்டான்னா பார்த்துக்கோயேன். அந்த பூக்கார அம்மா விட்டுக்கிட்டதான் அவவீடு இருக்காம்’ என்று பேசிக்கொண்டே போனவரை இளநகையோடு பார்த்த முருகன் ‘அப்பேர் பட்ட சாப்பாட்டு கப்பை தொடுவதற்கு நான் புண்ணியம் செஞ்சவன்னு சொல்லுங்க’ என்று சிரித்தான்.

‘அதில் என்ன சந்தேகம், இந்த பாத்திரத்தை தொடுவதற்கு நீ புண்ணியம்தான் செஞ்சி இருக்கனும். அந்த பொண்ண பார்த்தின்னா சொல்லாமலே அதுவுனக்கு புரியும.; அப்பனும், ஆத்தாவும் யாரை ஏமாத்தி சம்பாதித்தாலும், லஞ்சம் வாங்கினாலும், திருடினாலும் பரவாயில்லை ஆடம்பரமா வாழ்ந்தா போதுமுன்னு நினைக்கிற உலகத்துல, அரசியா வாழபிறந்தவ, அப்பன் செய்த கொடூரம் தெரிஞ்சதும் வீட்டை விட்டே வெளியில் வந்து கல்யாணம்கூட பண்ணிக்காம ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துகிட்டு, வேலைக்கு போயி தான்சம்பாதிக்கும் பணத்தையும் ஏழைகளுக்கு தானதருமம் செஞ்சிகிட்டு ஒரு சந்நியாசிபோல கன்னியாவே வாழுறா, அவள பாக்கும்போதெல்லாம் திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார்தான் எனக்கு ஞாபகத்துக்குவரார்’ என்று மெல்லிய சோகத்தை சுமந்தபடி ‘போயிட்டு வா’ என்பதுபோல கை தூக்கி ஆசிர்வாதம் செய்தார்.

அவரை வணங்குவதுபோல் தலை தாழ்த்தி ‘அந்த புண்ணியவதி நல்லா இருக்கணும் சாமி, என்சார்பா என் வாழ்த்த சொல்லுங்க, அப்படியே கல்யாணமும் செஞ்சிக்க சொல்லுங்க. இவுங்க மாதரி நல்லவங்க வயித்துலதான் நல்ல பிள்ளைகள் பிறக்கமுடியும். ஆம்பளைக்கு குடும்பம் அமையிலன்னா ஒரு கிளை விறகானமாதரிதான். அதுவே ஒரு பொம்பளைக்கு குடும்பம் அமையலன்னா ஒரு தோப்பே கரியானமாதரி’ என்று அந்த சாப்பாட்டு கப்பை தூக்கி தன் முகத்திற்கு நேர்வைத்து திருப்பிப்பார்த்தான்;.

அந்த எவர்சில்வர் சாப்பாட்டுக் கப்பில் பொறித்து இருந்த ‘கவிதாமுருகன்’ என்ற பெயர் அவன் கண்களில் பளீர் என்று அறைந்தது.

– பிப்-22, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *