உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 5,921 
 

இன்று அவளுக்கு chemistry பரீட்சை. முதலாம் பகுதி என்பதால் பதினொரு மணிக்கெல்லாம் பரீட்சை முடிந்து விடும். எனக்குள் மெதுவான ஒரு பதட்டம் பரவத்தொடங்கி இருந்தது. அவளை கடைசியாக பார்த்து ஒரு வாரம் ஆகியிருக்குமா? கண்ணாடியில் பார்த்த போது முன்பக்க முடி இலேசாக கொட்ட ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. பத்தொன்பது வயதிலேயே இந்த நிலை என்றால் முப்பது வயதில் எப்படி இருக்கும்? ம்ஹூம்.. அவள் கவனித்திருக்க மாட்டாள். எதற்கும் தொப்பியை எடுத்து மாட்டிக்கொள்வோம், என்று யோசித்து கொண்டே aஅவசரமாக எனது சிவப்பு நிற TShirt ஐ எடுத்து போட்டுகொண்டு தயாரானேன். சிவப்பு எங்கள் இருவரது பாடசாலைகளின் நிறம். அவளுக்குப்பிடிக்கும்.

“சோதினைக்கு இன்னும் ஒரு கிழமை தான் இருக்கு, அதுக்குள்ள என்ன விடிய வெள்ளன ஊர் அடிபன்ன வெளிக்கிட்டாய்?”

“இல்லை அம்மா, economicsல ஒரு சின்ன டவுட் இருக்கு, அதான் குரூப் ஸ்டடிக்கு போறன்”

“என்னவோ, கவனமா படிச்சா தான் கம்பசு எண்டர் பண்ணி வெளிநாடு ஏதும் போகலாம். இந்த ஏஜென்ட்மாரிட்ட வித்து கொடுத்து வெளிநாடு அனுப்ப எங்களிட்ட காணி கூட இல்லை”

“சரியன, சரியன, காலத்தால தொடங்காத, எனக்கு இப்ப ஒரு பிளேன்டீ ஒண்டு ஊத்துறியா?”

——————————————————

“அப்பா பிளேன்டீ இந்தா, குடி”

என்றபடி தேநீர் கோப்பையுடன் அறைக்குள் வந்த கண்ணம்மாவுக்கு வரும் ஐப்பசியோடு நான்கு வயதாகிறது என்றால் நம்பமுடியாது. நான்கு ஆண்டுகளில் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாள். வயதுக்கு மீறிய அறிவாற்றல். அம்மா மாதிரி தலை முடியை ஷார்ட் ஆக காது மடல்கள் வரை வெட்டியிருந்தாள். அவள் எங்கே வெட்டினாள்? தாயின் வேலை தான் இது. பார்க்கும்போது கண்ணம்மாவும் தாயைப்போலவே அழகாக இருந்தாள். கறுப்பி தான். ஆனால் அந்த வசீகரம் அவளை அப்படியே தூக்கி வைத்து உச்சி முகர சொல்லும். தாயையும் தான்!

“அம்மா எழும்பீட்டா போல? இண்டைக்கு மழை வந்த மாதிரி தான்”

“எழுத்தாளரே, மழை கிழை எண்டு கதை விட வேண்டாம். இண்டைக்கு சனிக்கிழமை, நாங்க Gangaroo பார்க்க போகணும். மறக்க வேண்டாம் என்று சொல்லு கண்ணம்மா”

அவளுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டது. இரண்டு வாரத்துக்கு முன்னமேயே திட்டமிட்டு இருந்தோம் அங்கே போவது என்று. Discovery இல் கங்காருக்களை பார்த்த நாள் முதல் கண்ணம்மா நச்சரித்து கொண்டிருந்தாள். இன்று London Zoo வுக்கு சென்று பார்ப்பதாக திட்டம்.

“எள்ளுத்தாலரே, மலி, கிழி எல்லாம் வேண்டாம். இன்னிக்கு சண்டே, நாங்க கங்காரூட போணும். அம்மா சனிகிலமை எண்டா சண்டே தானே?

“ஆ? தமிழ் எழுத்த புரட்டி போட புறப்பட்ட சிங்கத்தையே கேளு! இண்டைக்கு எந்த பொண்ண பற்றி எழுதுறார் என்று விசாரி”,

திருமணமாகி ஏழு வருடங்கள் ஆனாலும் அந்த possessiveness அப்பிடியே இருக்கிறது அவளுக்கு.

“அம்மாக்கு பின்னால அப்பா அந்த காலத்தில திரிஞ்ச கதை தான் எழுதுறன் எண்டு சொல்லு கண்ணம்மா”

“ஆ அப்படினா நான் செருப்பு காட்டின சீன் வருதா எண்டு கேளு?”

“அப்பா … அம்மா உனக்கு செருப்ப காட்டின….”

“அப்பா பிஸி, போய் விளையாடு செல்லம்!”

——————————————————

விளையாட்டாய் ஆரம்பித்தது இப்போது கொஞ்சம் சீரியஸ் ஆகவே போய் கொண்டு இருந்தது. நான் அவளை முதன் முதலில் சந்தித்தது கைதடியில். 95ம் ஆண்டு மாபெரும் இடப்பெயர்வின் போது நாங்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளுடன் சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த நேரம். நாங்கள் எல்லாம் நன்றாக களைத்து உருட்ட முடியாமல் சைக்கிள் உருட்டி வந்துகொண்டிருந்த போது அவளும் அவள் நண்பிகளும் தண்ணீர் பந்தல் வைத்து மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். அவள் அப்போதே அத்தனை பேர் மத்தியிலும் தனியாக தெரிந்தாள். யாழ்ப்பாணத்து பாடசாலை பெண்கள் சம வயது ஆண்களுடன் அதிகம் பேச மாட்டார்கள். அவள் அப்படி இல்லை. எல்லோருடமும் சகஜமாகவும் ஸ்நேகமாகவும் பழகினாள்.

“எங்கே இருந்து வாறீங்க, டவுன் தானே?”

“ஓம், திருநெல்வேலி, உங்கட பக்கம் இடம் பெயர சொல்ல இல்லையா”

“இல்லை வலிகாமம் தனிய தான் அனௌன்ஸ் பண்ணினவங்கள் போல. இங்கால பக்கம் ஆர்மிய வர விடமாட்டாங்கள் எண்டு கதைக்கினம்!”

“நீங்க எந்த ஸ்கூல், இங்கேயா படிக்கிறீங்க”

“இல்லை நான், சுண்டுக்குளி, உங்கள நான் எங்கேயோ கண்டு இருக்கிறன், நீங்க எங்க படிக்கிறீங்க?”

“What a surprise? நானும் St.John’s தான், நம்ப முடியேல்ல, உங்கள முந்தி ஒருக்காலும் காணேல்ல”

அது என்னவோ St John’s கல்லூரி மாணவர்களுக்கு பெண்களை பார்த்தவுடன் ஆங்கிலம் தன்னாலே வரும் என்று ஏனைய கல்லூரி மாணவர்கள் நகைப்பது உண்மை தான்.

“அது சரி நீங்க எல்லாம் எங்க எங்கள கவனிக்க போறீங்க”

“கவனிக்காமலா இவ்வளவு நேரம் சைக்கிள் சரிஞ்சது கூட தெரியாம உங்களோட கதைச்சுகொண்டு இருக்கிறன்?”

——————————————————

“ஏய் quick ஆ கதய முடிச்சிட்டு ரெடி ஆகு. இண்டைக்கு weather கொஞ்சம் upset. Gotta leave soon, hurry up dear..”

கண்ணம்மா அருகில் இல்லாத சமயம் எங்கள் சம்பாஷனையே வேறு ரகமாக இருக்கும். நாங்கள் London வந்து ஆறு வருடங்கள் ஆகிறது என்று நினைக்கிறேன். நான் தான் முதலில் வந்தது. அம்மாவின் தாலிக்கொடி, தங்கையின் நகை எல்லாம் விற்று ஒரு ஏஜென்ட் ஊடாக container க்குள் எல்லாம் பயணித்து இறுதியாக London வந்து சேர்ந்தேன். வந்த பிற்பாடு அவளை sponsor செய்வது அத்தனை கடினமாக இருக்கவில்லை. நான் வர்த்தக பிரிவில் கோட்டை விட்டாலும் அவள் படிப்பில் கெட்டி. அத்தனை போர் நெருக்கடிக்குள்ளும் சாதாரண தரத்தில் ஏழு பாடங்களுக்கு அதி விசேட சித்தி பெற்றவள். இன்றைக்கு இங்கே London இல் ஒரு புகழ்பெற்ற gynecologist ஆக இருக்கிறாள். சற்று கர்வமும் பிடிவாதமும் இருந்தாலும் அதி புத்திசாலி. காலத்தை வென்று சிந்திப்பவள். ஒரு தற்காலிக உணவு விடுதி வேலையை நான் பார்த்துகொண்டு இருந்த சமயம், என்னை வழிநடத்தி கணக்கியல் பட்டம் படிக்க வைத்து ஒரு நிலையான வேலைக்கு வழிகோலியவள். எதையுமே சிந்தித்தும், radical ஆகவும் செய்வதால் பலருக்கு இவளைப் பிடிக்காது. கடவுள் கும்பிட மாட்டாள். கடவுள் இருந்தாலும் அவரால் பிரபஞ்சத்தின் இருப்பையும் அமைப்பையும் கட்டுபடுத்த முடியாது என்பாள். கடவுள் சுயம் என்றால் பிரபஞ்சமும் சுயம் என்பாள். இதற்கு மேலும் சொல்வாள். எனக்கு ஒன்றுமே புரியாது. புரியாத கடவுளை அநாதியாக்கி அவனிடம் எம்மை அர்ப்பணிப்பதில்லையா? அதுபோல தான் அவள் எனக்கு. ஆனால் அவளுக்கும் அந்த உணர்வு இருக்கிறது. ஈகோ தான், காட்டிகொள்ள மாட்டாள். காட்டிகொள்ள இது என்ன கண்காட்சியா என்ன?

“பொறுடி, எங்கள பற்றி எழுதேக்க, மற்றவனுக்கு ஒரு inspiration ஆக இருக்க வேண்டாம்? யோசிச்சு தானே எழுதோணும்”

“Inspiration? .. What the .. ஒரு பெட்டைக்கு பின்னால திரிஞ்சு படிப்ப கோட்டவிட்டு container ல களவாய் London வந்தத எழுது, நல்ல inspiration ஆ இருக்கும்”

“ஏன், ஐந்து வருஷமா உனக்காக வெயிட் பண்ணி கடைசில ஓகே சொல்ல வச்சது … Its an achievement madam..”

“Achievement?, ஐயோ வெளில சொல்லிடாதீங்க , Oh Please..!”

——————————————————

பரீட்சை இப்போது முடிந்திருக்க வேண்டும், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கல்லூரியை விட்டு வெளியே வருவாள். என்னை கண்டால் இப்போதெல்லாம் ஏதோ கரடியை பார்ப்பது போல ஒரு reaction கொடுக்கிறாள். பரீட்சை நேரம் வேறு பின் தொடர்கிறேன். அறவே பிடிக்காது. என்ன செய்வது. அவளுக்கு பிடிப்பதை கலியாணத்தின் பின் செய்து கொள்ளலாம்.

“எங்களுக்கு சாவகச்சேரில யாரையும் தெரியாது. இங்கால ஒரு வீடு ஏதும் எடுக்கலாமே”

சடுதியாக கேட்டபோது அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“நீங்க எத்தனை பேரு?”

“நானும், அம்மாவும், ஒரு தங்கச்சியும்”

“ம்ம்ம், இந்த நேரம் தெரிஞ்சவயள் கூட வீடு எடுக்க கஷ்டபடுகினம். நீங்க என்ன செய்ய போறீங்க? பொறுங்க அம்மாட்ட கேட்டிட்டு சொல்லுறன்”

அவள் போன வேகத்தை பார்த்தால் எப்படியும் தாயை சம்மதிக்க வைத்து விடுவாள் போல தான் தெரிந்தது. எந்த பெண்ணும் என் மீது இத்தனை கரிசனை காட்டியது இல்லை. அவ்வளவு வேண்டாம், கண்டால் கூட சிரிக்க மாட்டார்கள். அது தான் யாழ்பாணத்து கலாச்சாரம். அவர்களை சொல்லி குற்றமில்லை. சிரித்தால் குற்றம் என்று சொல்லி வளர்த்த சமூகத்தை சொல்ல வேண்டும். ஆணாதிக்கத்தை புத்திசாலித்தனமாக கடைபிடிக்கும் ஒரு சமூகம் யாழ்ப்பாண சமூகம். கருணாநிதியின் விஞ்ஞானரீதியான ஊழல் போல!

“அம்மா நெருப்பு எடுக்கிறா, நான் ஏற்கனவே ஐந்து குடும்பங்கள வீட்டில் சேர்த்துட்டன். இப்ப நீங்களும்….. Toilet எல்லாம் நிறஞ்சிடும் எண்டு சொல்லுறா. நல்ல தண்ணியும் பிரச்சினை”

“நாங்க ஓரமா manage பண்ணுவம். எல்லாருக்கும் உதவி செய்றீங்க, partner school ஆக்களுக்கு உதவ மாட்டீங்களா?”

“பொறுங்க அம்மாட்ட திருப்பி கேட்டு பாக்கிறன்”

என்றாள் அவசரமாக திரும்பிக்கொண்டே, சிரித்தாளா என்ன?

——————————————————

“என்ன அப்பா, இன்னும் writing? .. Tell me the story .. tell me .please. tell me .. “

“You won’t understand கண்ணா, இது பெரிய ஆக்களுக்கு .. அம்மா .. அப்பா மாதிரி”

“எனக்கு எள்ளுத மாட்டியா”

“எழுதுறன், அடுத்த கதை உனக்கு தான், சரியா”

“Lion வருமா?”

“வரும், elephant உம் வரும்”

“அப்ப Dora?”

“சேர்த்துட்டா போச்சு”

“Sad ஆ story வேண்டாம் அப்பா, போன story ஜக்கி, அந்த சிஸ்டர் die பண்ணீட்டு”

“யாரு சொன்னது?”

“அம்மா சொன்னவா”

“சொல்லீட்டாளா? கிராதகி, வாசிக்கவில்லை என்றாளே. வாசித்து விட்டு குழந்தைக்கு வேறு கதை சொல்லி இருக்கிறாள் ..இவளை எப்போது புரிந்து கொள்ளபோகிறேன்? . ….. சரியாக வேறு முடிவை interpret பண்ணி இருக்கிறாள், An Intelligent Egoistic Idiot !”

——————————————————

கண்டுவிட்டாள். கண நேரம் தான். முகத்தை அந்த பக்கம் திருப்பிகொண்டாள். நண்பிகள் வந்ததால் இருக்கும். அவள் பார்த்ததே போதும். அவர்கள் புறப்பட மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தேன். ஒரு நூறு அடி இடைவெளி இருக்கும். அவள் அருகில் போவது இல்லை. தெரிந்தவர்கள் யாரும் கண்டால் அம்மாவிடம் போட்டுக்கொடுத்து விடுவார்கள். வெளியே சொன்னால் வெட்கம். அம்மா இந்த வயதிலும் கிளுவை மர கிழியால் விளாசித்தள்ளும். கத்தினாலும் அவமானம். நினைத்தாலே பகீர் என்றது. நண்பிகள் அனைவரும் ஒன்றாக வழமைக்கு மாறான பாதையில் சென்று கொண்டிருந்தனர். முந்தயதினம் சக மாணவி ஒருவர் இராணுவ வாகனம் மோதி இறந்துவிட்டார். அவரின் செத்தவீடு இன்று. அதற்கு தான் செல்கிறார்கள். நான் உள்ளே செல்லவில்லை. செத்த வீட்டுக்கு perfume அடித்து கொண்டு சென்றால் ஒரு விதமாக பார்ப்பார்கள். வெளியே காத்திருப்போம்.

ரொம்ப நேரம் ஆகவில்லை. அவள் திரும்பி வந்து சொன்னாள்.

“அம்மா ஓம் எண்டுட்டா, நீங்க வேற St John’s, அப்புறமா நாளைக்கு school function ல நக்கல் அடிச்சாலும் அடிப்பீங்க”

அவளிடம் இப்போது ஒரு சின்ன புன்முறுவல், யார் சொன்னது இடப்பெயர்வு என்றாலே ரணம் தான் என்று. சந்தோசம் தாங்கவில்லை எனக்கு. இடம்பெயர சொன்ன புலிகளுக்கு மனதார நன்றி சொன்னேன். அம்மாவும் தங்கச்சியும் ஒரு சந்தேகமாகவே என்னுடன் உள்ளே வந்தார்கள். உள்ளே இருக்க இடம் இல்லை. ஒரே வீட்டில் இருபது பேர்களுக்கு மேல் இருப்பார்கள். அவள் எம்மை சேர்த்தது எனக்காக இல்லை என்று அப்போது தான் புரிந்தது. ஒரு நாய் தாகத்தால் வந்து குரைத்திருந்தாலும் அவள் அதை உள்ளே அழைத்து விருந்தளித்திருப்பாள். அது அவளின் பண்பு என்று புரிந்தது. சாவகச்சேரி மண்ணின் பண்பும் கூட. இதே சூழ்நிலை சாவகச்சேரிக்கு வந்து அவர்கள் யாழ்ப்பாணம் இடம்பெயரும் நிலை வந்திருந்தால், பல யாழ் நகர வீடுகளின் படலைகளில் இந்நேரம் இரண்டு பூட்டுக்கள் தொங்கி இருக்கும்.

——————————————————

“ஏய் writer, என்ன தான் அப்பிடி எழுதுறாய் இண்டைக்கு? … டைம் ஆச்சுடா … wrap it up, gotta go …”

“பொறுங்க டொக்டர், நம்ம கதை இல்லையா .. கத்தி மேல நடக்கிறது போல இருக்கு”

“ஏன் சாரே”

“எங்களுக்கு தெரிஞ்சவையும் வாசிக்க போறினம், இப்பிடித்தான் நடந்தது எண்டு தெரிஞ்சா face பண்ணும் போது ஒரு மாதிரி இருக்கும் இல்லையா?”

“கொய்யால, அப்பிடி என்ன தான் எழுதுற? Dare your ever abuse my name … பெயர போட்டா எழுதுறாய்?”

“இல்ல .. அப்பிடி எல்லாம் பெயர் போட இல்ல, போடுற மாதிரி பெயரும் இல்ல!”

“அப்பா, அம்மா, silent please, நானும் story ஒண்டு எளுதுறன்”

“நீங்க வேறயா? அப்பிடி என்ன எழுதுறீங்க மேடம்”

“Suspense” — என்றாள் கண்ணம்மா மெதுவாக விரலால் வாயை மூடிக்கொண்டே.

——————————————————

மதியம் ஒரு மணியாகி விட்டது. காலை அம்மா தந்த பிளேன்டீ தான் இன்னமும் வயிற்றுக்குள். யார் சொன்னார்கள் காதலித்தால் பசியிருக்காது என்று? கண்ணதாசனை யாழ்ப்பாண உச்சி வெயிலில் நிறுத்தி காதலிக்கு காத்திருக்க வைத்திருக்க வேண்டும். இப்போது ஒருவாறாக அவளும் நண்பிகளும் வீட்டிற்கு வெளியால் வந்துகொண்டிருந்தது தெரிந்தது. பாடசாலை மாணவர்கள் அதிகம் வந்து இருந்தனர். அவள் என்னை மீண்டும் கவனித்து விட்டாள். பேசுவோமா? வேண்டாம். சென்ற வாரம் “மறந்திட்டியா” என்று கேட்டதற்கு செருப்பை தூக்கி காட்டியிருந்தாள். அவளுக்கு எனது எண்ணம் தெரிந்த சமயம் தொட்டு என்னை விட்டு விலகியே போய்க்கொண்டு இருந்தாள். நான் விடவில்லை. எனக்கு ஒரு நம்பிக்கை. முயற்சி செய்து தான் பார்ப்போமே. அவளை இப்போது விட்டால் பின்னால் காலம் முழுதும் வருந்த வேண்டிவரும். அவள் செல்லும் வழியே என் வழி. எப்போதாவது அது அவளுக்கு புரியும்.

“இங்க… எண்ட வழில நீ இனி வரவேண்டாம். இது வேண்டாம். சொன்னா கேளு. எனக்கு ஒரு love உம் இல்ல. பண்ணவும் முடியாது. இது உனக்கு புரியாது ப்ளீஸ்…”

“இல்லை நான் வந்து உண்மையிலேயே …”

“என்ன உண்மையான லவ் எண்டு சொல்ல போறியா? ஏண்டா இப்பிடி இருக்கிறீங்க? Exam time ல இப்பிடி வந்து disturb பண்ணுற, நீ எல்லாம் எப்பிடி பொறுப்பா ஒரு குடும்பம் நடத்துவ?, இதெல்லாம் infatuation … கொஞ்ச நாள் தான் … போயிடும். போய் exam க்கு படி…”

என்று சொல்லிவிட்டு கட கடவென்று cycle இல் ஏறிச்சென்று விட்டாள். எனக்கு ஒரு கணம் புரியவில்லை. அவள் சென்று கொஞ்ச நேரத்தின் பின்னர் தான் பொறி தட்டியது. அப்படியென்றால் யோசித்து இருக்கிறாள். நான் எப்படி பொறுப்பாக குடும்பம் நடத்துவேன் என்று யோசித்து இருக்கிறாள். ச்சே மடையன் நான். இது புரியாமல் திரும்பி வந்து விட்டேன். இப்போது அரியாலை தாண்டியிருப்பாள். துரத்தி பிடிக்க முடியாது. பிடித்தாலும் வெளிக்காட்ட மாட்டாள். மீண்டும் கோபப்படுவாள். இது போதும். இனி போய்ப்படிக்கலாம். வாழ்க்கை தான் இனி. எப்படியும் UK போக வேண்டும். அவள் doctor ஆகட்டும். நான் எப்பிடியும் CIMA செய்துவிடுவேன். நல்ல வேலை, நல்ல குழந்தைகள் …அவளை போலவே ஒரு பெண் குழந்தை வேண்டும் .. என்ன பெயர் வைக்கலாம் .. stylish ஆ ஒரு பெயர் … வர்ஷா? … ஷா எழுத்து வந்தால் தான் கூப்பிடும்போது நன்றாக இருக்கும்!

——————————————————

“கண்ணம்மா இன்னுமா story எழுதிக்கொண்டு இருக்கிறாய்? அப்பா finish பண்ண போறன்”

“Finished அப்பா, பாக்கப்போறியா, உன்ன மாதிரி big ஆ எழுதேல்ல”

என்றபடிய தான் கிறுக்கி கொண்டு இருந்த paper ஐ எடுத்து கொண்டு வந்தாள்.

“அச்சச்சோ, பொறு கண்ணம்மா, அப்பா முடிச்சிட்டு வாறன்”

“Naughty அப்பா நீ!”

——————————————————

அவன் ஒரு மடையன். நான் போ என்றால் போய் விடுவதா என்ன? கைதடி மட்டும் பின் தொடர்ந்தால் என்னவாம்? Jaffna boys க்கு ஒரு love சரியா பண்ண தெரியுமா? கேட்டவுடனேயே ஓம் சொல்லி விடுவேனா? இவங்களை எல்லாம் கொஞ்சம் ஒட்டு ஓட்டினால் தான் பின்னாடி அடங்கி கிடப்பாங்க. ஆனாலும் அவன் cute தான். நல்லவன், கொஞ்சம் அப்பாவி. படிப்பு தான் மட்டம். எப்பிடியும் CIMA செய்ய சொல்லி UK அனுப்பிடோணும். அப்புறம் நானும் போய் FRCS ஏதும் செய்யலாம். தம்பியும் UK வரலாம். அம்மாவை குழந்தை பிறக்கும் போது sponsor பண்ணலாம். குழந்தை .. ஆ என்ன குழந்தை? பொண்ணு தான். என்ன மாதிரியே intelligent ஆ stylish ஆ.. அவன மாதிரி innocent ஆ … ஒரு தமிழ் பெயர் .. .. கண்ணம்மா பெயர் நல்லா இருக்குமா? பாரதியின் செல்லம். காலத்தை வென்றவன் அவன். மற்றவர்கள் அந்த பெயர் வைக்க முதல் நாம் வைக்க வேண்டும். பாரதி கனவு போலவே பெண்ணை open ஆக வளர்க்க வேண்டும். ச்சே, அவனை அப்படி பேசி இருக்க கூடாது. சிலவேளை பின்னால் வந்தாலும் வருவான். வேலை இல்லாதவன்… என்று நினைத்த படியே அவள் புன்முறுவலுடன் சைக்கிளிலில் தயங்கியபடி திரும்பி திரும்பி பார்த்து கொண்டு சென்றதை, கண்ட கைதடி காவலரணில் இருந்த ஆர்மிக்காரன் அவளை சட்டென மறித்தான். திடுக்கிட்டு நின்றாள்.

“கொஹேட யன்ன கேல்லோ” (எங்கே போகிறாய் பெண்ணே?)

“வீட்ட போறன்”

“சிங்கள தன்னத்த?” (சிங்களம் தெரியாதா?)

“தெரியும் ஆன உன்னோட கதைக்க மாட்டேன்”

“மொன, மொகட கதாகறன்ன?, மோனவத் தேரன்னா லச்சனே கேல்லோ” (என்ன?, என்ன சொல்கிறாய்?, ஒன்றும் புரியவில்லை, நீ அழகாய் இருக்கின்றாய்)

அவளுக்கு புரிந்து விட்டது. இந்த நேரம் பார்த்து வேறு எவரையும் காண வில்லை. எப்படியாவது இன்று இவனை சமாளிக்க வேண்டும். அல்லது வேறு ஆர்மியிடம் முறையிட வேண்டும்.

“Behave yourself, What do you want?”

“IC பென்னேண்ட” (அடையாள அட்டையை காட்டு)”

ஆங்கிலத்தில் முறைப்பாக பேசியது அவனுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும். அடையாள அட்டையை எடுத்து கொடுத்தாள். இனி விளக்கம் கேட்பான். இவனின் வயதையும் தோற்றத்தையும் பார்த்தால் எழுத படிக்க தெரியுமோ தெரியாது.

“நம மோகட” (பெயர் என்ன?)

“What?”

“நம? .. டன்னத்த? ஓயாகே IC நேட? நம கியன்ன” (பெயர்? … தெரியாதா? உன்னுடைய அடையாள அட்டை தானே? பெயரை சொல்லு)

என்றான் ஓரக்கண்ணால் சிரித்தபடி அந்த ஆர்மிக்காரன். அவளுக்கு மெதுவாக பயம் தொற்றிக்கொண்டது.

——————————————————

கதை முடிந்தது விட்டது. கண்ணம்மா தன்னுடைய பேப்பரை கொண்டு வந்து நீட்டினாள்

“அப்பா இந்தா எண்ட Story”

வாங்கி வாசித்துப்பார்த்தேன். குண்டு குண்டை ஒற்றை வரியில் கிறுக்கி இருந்தாள். கண்ணம்மா ஆங்கிலம் ஓரளவுக்கு எழுதுவாள். ஆனால் இது என்ன என்று எனக்கு புரிய வில்லை.

“என்னம்மா ஒண்டுமே விளங்கேல்ல”

“என்னப்பா நீங்க, இது தான் எனக்கு தெரிஞ்ச ஒரே ஸ்டோரி”

“ஒரு வரில அப்படி என்ன ஸ்டோரி சொல்லீட்டீங்க மேடம்”

“அம்மா தான்”

“ஆ?”

“அம்மாண்ட நேம் தான் அந்த ஸ்டோரி”

நான் ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். So Cute. புரிந்து சொல்கிறாளா? இல்லை சுட்டித்தனமா? குழந்தை விவரிக்கையில் கவிதை போல இருந்தது. கடவுளே என்ன மாதிரி குழந்தை இவள்? நல்லூர் முருகப்பெருமானே, உனக்கு ஒவ்வொரு வருசமும் பிடித்த விரதமும் பிரதிஷ்டையும் வீண் போக இல்லை.

“என்ன அப்பா, don’t get it? … இப்ப read பண்ணுறன் கேளுங்க”

“க் ….. ரு ……………ஷா ……………. ந் ……………….தி ”

என்று அவள் தன்னுடை பெயரை அந்த ஆர்மிகாரனுக்கு சொல்லிகொண்டிருந்த வேளை ஓரத்தில் நின்ற பாலை மரத்தில் இருந்த கழுகு பெருத்த சத்தம் எடுத்துகொண்டு மேலெழுந்தது.

முடிவுரை
1996 செப்டம்பர் 7ம் தேதி, chemistry பரீட்சை முடித்து, பின்னர் முந்தய தினம் இராணுவ வாகனத்தில் அடியுண்டு இறந்த நண்பியின் மரண வீட்டுக்கு கிருஷாந்தி சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீடு செல்லும் வழியில் கைதடி காவல் அரணில் வழி மறிக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லபடுகிறார். விபரம் அறிந்தவர்கள் வீட்டிலே சொல்லி, இவரை தேடி சென்ற தாயும், தம்பியும் பக்கத்துக்கு வீட்டுகாரரும்(இவருக்கு திருமணம் ஆகி ஆறே மாதங்கள் தான்) காணமல் போயினர்.

45 நாட்களின் பின்னர் செம்மணி புதைகுழியில் சந்தர்ப்பவசமாக இவர்களின் உடல்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின் போது கிருஷாந்தி பலரால் குழு பாலியல் பலாத்காரம் செய்யபட்டு பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது. இவரை தேடி போனவர்களுக்கும் இதே கதி தான். இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதவான் இளஞ்சேழியன் உத்தரவின் பேரில் அந்த இடத்தை தோண்டிய போது பாரிய மனித புதைகுழி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை சிறுகதையாக எழுதும்போது, படிப்பில் கெட்டியான கிருஷாந்தி எப்படியான ஒரு அழகிய வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிப்பார்த்தேன். வெறுமனே நடந்த சம்பவத்தை தொகுக்காமல், அன்றைய சம்பவம் நடந்து இருக்காவிட்டால் அவளும் பலரை போல ஒரு அழகிய வாழ்க்கை வாழ்ந்திருப்பாள் என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் அவளின் தம்பியாகவோ பக்கத்து வீட்டுகாரனாகவோ இருக்கவில்லை. நீங்கள் அந்த வழியாக செல்லவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். அப்படி இருந்திருந்தால் எப்படி என்ற சிந்தனையும், அவள் அன்று அந்த வழியே அந்த நேரம் செல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனையும் தான் இந்த சிறுகதை. இதுதான் ஈழத்தின் யதார்த்தம். அவளின் உணர்வுகளையும், உள்ளத்தையும் ஒரு வடிவமாக மாற்ற நான் தேர்ந்தெடுத்தது ஒரு புனைவான காதலை. அதன் மூலம் ஒரு ஏக்கம் மிகுந்த வலியை “What If” என்ற கற்பனை மூலம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். அது தவறான சித்திரிப்பு என்றால் மன்னிப்பு கோருகிறேன்.
நன்றி

மூலம் : http://en.wikipedia.org/wiki/Krishanti_Kumaraswamy

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *