உன்மத்தராயிருந்தோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 21,906 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கச்சி ஏகம்பனே”

முறையிட்டுக் கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.

ஏகம்பனாம், ஏகம்பன்!

பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய , மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு ‘கச்சி ஏகம்பனே’ என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?

சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை.

பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்!

கள்ளிப் புதரும், கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஓரிடமும் இல்லையா? இருந்தால் அதற்கு முறையிடும்! உம்முடைய கண்ணீரை அதற்குச் சொரியும்!

விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது – எல்லா ஆண்களையும் போல; ஆனால், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் – அவள் தான் சரசா – அவளுடைய மனசை ஒரு கண மாவது அறிய, அறிய முற்பட , முயன்றிருக்கிறீரா?

கை கூசாமல் பேனாவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனால், இதை அவள் – அந்தப் பட்டுப் போன்ற உடலைப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் – பார்க்க நேரிட்டால்..!

நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?

2

சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்த போது, நான் திடுக்கிட்டு விட்டேன்.

இப்படியும் ஒரு அழகா? சாதாரண புடவைதான் உடுத்திருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை , முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அந்தச் சாதாரண சேலை.

அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.

அந்தக் கண்கள் – அந்த நீல விழிகள் – அதன் விலையை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. நிலமகள் ஒருத்தி தான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.

பாவம், அவளுக்கு எப்போதுமே சேலை உடுத்தத் தெரியாது. சிறு பெண் தானே!

‘சடக், சடக்’ என்று சேலை சத்தம் போட வெகு சிரமத்துடன் அவள் நடப்பாள்.

சிறு குழந்தைகள் ‘குறு குறு’ வென நடை பழகும் போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினால் அள்ளி அணைத்துக் கொள்வோமே, அத்தகைய வேட்கைதான் அவள் நடையைக் காணும் போதெல்லாம் தோன்றும்.

அந்த சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங் கள் அந்தப் பாதங்களின் கீழ் துடித்த வண்ணம் நசிகின்றனவோ என்று நான் வியப்பதுண்டு.

பொறாமை யாரைத்தான் விட்டது!

“சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறாள் போல் இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறையிட்டபோது நான் திகைத்து விட்டேன்.

சரசாவா? என்னால் நம்பவே முடியவில்லை.

ஆனால், அன்றிரவு, அந்தப் பாவக் காரியத்தை நான் செய்ய வேண்டியதாகி விட்டது.

3

மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே அவள் வந்தாள். அவள் கையிலே கனத்த சூட்கேஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.

“மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?”

“சரசா…விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. ‘பிரின்சிப்பல் கூட ‘டிஸ்மிஸ்’ பண்ணும்படி உத்தரவு கொடுத்துவிட்டார். எனக்கும் தான் பரிதாபமாக இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்!”

“மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?”

“என்னை விரும்பினார் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. ‘குற்றம்’ என்று உணர்ந்த பின்பு கூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப் போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் நடந்து கொண்டோம்.

“மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என்னைப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள்…”

“ஆனால்…யோசித்து பாருங்கள் மிஸ்…நாளைக்கு சமுதாயத்தில் என்னை, காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக நடத்தப் போகிறார்களே, அது பரவாயில்லையா?”

“நீங்களும் ஒரு பெண் தான். உங்களை விட யார் என் குறையை நன்றாக உணர முடியும்?”

அவள் கடைசியாக கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது!

“குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட்டதுதானா பள்ளிக்கூடம்? அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவல்லவா?”

நான் என்ன பதில் கூற முடியும்?

“சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி நடந்தது?”

வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினாள் அவள்.

நான் தான் திணறிப் போனேன்.

“மிஸ், நான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை….ஆனால், இன்னும் மூன்று நாட்கள்…மூன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக் கூடாதா?”

அவள் விம்மி விம்மி அழுதாள்.

“இதோ…இந்த ‘ஸ்வெட்டர்’ இதை எதற்காகப் பின்னுகிறாய்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பல முறை கேட்டிருக்கிறீர்கள்; நான் மறைத்துவிட்டேன். அவருடைய பிறந்த தினம். அது இன்னும் மூன்றே நாளில் வருகிறது. ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைத்த இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?”

“இனிமேல் நான் அவரை எப்படிக் காண்பேனோ?” என்று அவள் விம்மிய போது என்னால் அவளைத் தேற்றக்கூட முடியவில்லை.

4

நர்ஸ் படிப்புக்குப் போனாலும் அவள் என்னை மறந்துவிடவில்லை. அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம்…

“எதிர்காலம் இருள்; மனத்திலே இருள்; வழியிலே இருள்; என் தந்தை முகத்தில் எப்படி விழிப்பது!

“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவது போன்று படலைக் காலைத் தள்ளினேன்.

“வாசல் திண்ணையிலே என் தந்தை – அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர் – சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரண்டு வயதே ஆன என் அருமைத் தங்கை. அக்கா படிக்க வேண்டு மென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி – அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?” என்று குரல் தழதழக்கக் கேட்டபடி கைகளை என் பக்கம் நீட்டித் தடவினார்.

“ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே, நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய நெஞ்சம் சுக்கு நூறாகிச் சிதறி நான் மாண்டு போக வில்லை ?

“முன்று மாதத்தில் சரசாவும் ஒரு நெசவு ஆசிரியை ஆகிவிடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்’ என்று இரவும் பகலும் கனவுகண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் – வெட்கமில்லாமல் – என் குற்ற மெல்லா வற்றையும்.

“அடித்து உதைத்திருந்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்.

“கையிலே பிசைந்து வைத்த அந்தப் பழைய சோற்றிலே கண்ணீர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி – அதையும் சகித்தேன்.

“என் தங்கை – அந்தச் சிறுமி – காரணம் விளங்காமலே என் கால்களைக் கட்டி அழுதபோது – அதையும் அந்தச் சிறுமியின் விலையில்லாத கண்ணீரையும் சகித்தேன்!

“உயிரைப் போக்கிக் கொள்ள எனக்குத் தெரியாம லில்லை . ஆனால்… ஆனால்….

“கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயுகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களை நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

“ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திரனை எட்டிப் பார்ப்போம்.

“கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகல வென்று காரணமின்றிச் சிரிப்போம்.

“திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக் கொள்வார். வானத்து நட்சத்திரங்களை யெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார்.

“அந்த வானத்து மீன் மேலும், பூரணச்சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.

“உறுதிகள் கோடி செய்தோம். உன்மத்தராயிருந்தோம்.

“ஆமாம் – உன்மத்தர்தாம்.

“இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் நட்சத்திர கூட்டங்களும் இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக்கொண்டுகிடக்கின்றன?

“ஓ நட்சத்திரமே நீ அவருடைய உறுதி மொழியை இன்னமும் நம்புகிறாயா?

“ஏ, பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட?

“அந்த இராஜு – இந்தப் பேதையை மறந்துவிட்டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனோ , உலகத்து அவதூறுகளையெல்லாம் எவருக்காக ஏற்றுக்கொண்டேனோ, அவருக்குச் சரசா என்பவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?

“கண்ணீரால் நான் வரைந்த அத்தனை கடிதங்களுக்கும் அவர் பதிலே எழுதவில்லை.

“காரணம் என்ன தெரியுமா?

“மிஸ். எழுதவே கை கூசுகிறது.

“எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப்படுகிறாராம். ஊரிலே என் பெயர் கெட்டுப் போய்விட்டதாம்.

“ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடக்கூடியதா?”

5

பயிற்சி முடிந்ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ் பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனி மேலாவது அவள் அவனை மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மை யிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும்கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். அவள் சொன்ன செய்தி…

“நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில்…இத்தனை நாளில், என்னை ஒரு முறை கூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை. நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். நான் வேறு என்ன செய்ய முடியும்?

“அவர் ஆண்! நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப் பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா? சொல்லுங்கள் மிஸ்!

அவள் விசித்து விசித்து அழுதாள்.

என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினாள்.

“என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக் கொண்டு “இந்த விரல்களின் ஸ்பரி சத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா’ என்று கூறியவர் கேவலம் இரண்டரை வரு டத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?”

இன்னொரு நாள் வியர்க்க , வியர்க்க அவள் வந் திருந்தாள். ‘ஏது இந்த நேரம்?’ என்றேன்.

“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று மாற்றலாகிப் போகிறார்; அவருக்குப் பிரியா விடை நடந்தது; இடையிலே வர முடிய வில்லை” என்று கூறிவிட்டு, அவள் பெரியதொரு பெரு மூச்சு விட்டாள்.

தேர்தல் சமயம் அது; ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்பது பத்து ஆப்பரேஷன் கேஸ்களாவது வந்த வண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஓய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர்கூட லீவு போட்டு விட்டார்.

இரவு ஒரு மணி இருக்கும். பதினொராவது ஆப்ப ரேஷன் நடந்துகொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ் வொன்றாக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த் திருந்தது. கடமையைச் செய்ய வேண்டு மென்று “லின்ட்” துணியினால் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.

ஏனோ விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டு கூர்மையான பார்வை ஒன்றை வீசினார் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒரு கணந்தான்! ஒருவருமே பார்க்கவில்லை.

சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்று தான் அந்த ‘டோம்’ விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனை கூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம் கூடத் தயங்க வில்லை. தான் இன்னொருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை. அவள் நினைத்திருந்தால் ……… ஒரு உதட்டின் அசைவிலே…ஆனால் அவள் அதை விரும்பவில்லை.

இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?

ஆனால் அவளுக்கு அதை விளம்பரம் செய்யத் தெரியவில்லை. பெண் பேதையென்பதற்கிணங்க, நம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

6

வழக்கம்போலப் பருத்தித் துறை பஸ் அவளைக் கல்வியங்காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து அவள் வீடு வெகு சமீபத் தில் தான் இருந்தது. செங்குந்தான் பாடசாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப் போனால் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனால், அந்தப் பூனைக்கண் இரட்டையர்களின் கடை வாயில் – அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.

அதை அவள் கடக்கும் போதெல்லாம் ‘விசில்’ சப்தமும், விரசமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த ஒரு கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பி விடும் சரசாவுக்கு.

இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கி லியன் தோப்பு தென் கோடிப் பக்கமாகப் போவாள்.

அன்றும் அப்படித்தான்.

பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிரா கச் சைக்கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒரு கணம் ‘திக்’ என்றது.

அவன் தான். இராஜுதான்.

சந்தி கழித்து அவன் சமீபமாக வரும் வரைக்கும் படக் படக்கென்று இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ணக் குமுறல்கள். “எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப் பார் , யாராவது பார்த்து விட்டால்” என்ன எண்ணங் கள் அவளை நிறைத்தன. நடையைத் தளர்த்திக் கொண்டு ஆசையோடு நின்றாள்.

“இதோ இராஜு வந்து விட்டான். உற்றுப் பார்க்கிறான்” என்று அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.

ஆனால் அவன் நிற்கவில்லை. போயே போய் விட்டான்!

அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாகவல்ல; பின் சீட்டில், பீடி குடிக்கும் ஒரு அருமையான நண்பனை ஏற்றிக் கொண்டு.

“உன்னை நான் அடையாளம் கண்டுவிட்டேன்! இருந்தும் என் மன உறுதியைத் தளரவிடவில்லை, பார்த்தாயா? என்று பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரை குறைச் சிரிப்பில் இவ்வளவு வஞ்சனை எப்படி ஒட்டிக் கொண்டது?

சைக்கிள் மின் வேகத்தில் அவளைக் கடந்தபோது “நேர்ஸ் உடுப்பிலை சோக்காயிருக்கடா!” என்று அந்த ‘அழகான’ நண்பன் சொல்லியது நாராசமாய்க் காதில் விழுந்தது. ‘கொல்’ என்ற சிரிப்பு அதற்கு சுருதி கூட்டியது.

“அருமை இராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத்திற்குப் பலியானாய்?”

“மிஸ், என்னுடைய இராஜு, அந்த அருமை இராஜு, அவர் எப்போதோ இறந்து விட்டார்…” என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல் இருக்க முடியும்?

7

பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ் பத்திரிக்குப் போயிருந்தேன். நர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த் தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைந் திருந்தன. ‘கடமை, கடமை’ என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.

“மிஸ்! இராஜு வந்திருந்தார். சாதாரண காய்ச்சல் தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனால்…ஆனால்…நிரம்பவும் மாறிவிட்டார்.

“நர்ஸ்” என்றால் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றொரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றி விட்டது.

‘நர்ஸ்’ என்றால் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;

“அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வையிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே – இன்று வெறி – ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி நின்றது.

“உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினார். மற்ற நோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.

“நர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானால் ஒரு சொல், ஒரே யொரு சொல் அப்போது கூறியிருக்கலாமே. உடனே நின்றிருப்பேன். இன்று, நோயாளிகள் எல்லாரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.

“நான் அவர் சொல்லியபடி எப்படி நடக்க முடியும்?”

“சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னைவிட வேறு யார் நன்றாக அறிய முடியும்? அவள் என்ன சொன்னாள்? அது எனக்குத் தான் தெரியும். ‘மிஸ்’ நான் இப்படித்தான் இருப்பேன். என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித்தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் நான் கற்பனை செய்ய முடியும். ஆனால்…ஆனால்…என் பழைய ராஜு எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”

அதற்குப் பிறகு கண்ணீர்தான் அவள் உள்ளக் கிடக்கையை எனக்குக் கூறியது.

அவள் இனிமேல் மணமே செய்து கொள்ள மாட்டாள். அது எனக்குத் தெரியும்.

மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?.

கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக் கொள்ள மட்டும் தெரிகிறது.

ஏகம்பனாம்! ஏகம்பன்.

விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற்புதமாக வருகிறது.

சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய, அறிய முற்பட முயன்றீரா?.

இப்பொழுது கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?.

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *