ஆமியுடன் ஒரு அற்புத இரவுப் பொழுது…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 45,122 
 

ஆமி ஒரு குட்டி வனதேவதை…

அவளுடன் சிறிது நேரம் செலவிட்டால் போதும்…

உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்..

அவளுக்கு நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லை..

இன்று மட்டும்தான்…

எப்போதும் பச்சரிசி பல் தெரிய சிரிக்கும் இளவரசி..!!

கேரளாவில் மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரிலுள்ள மலைநாயக்கன் என்று அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஓரியின் செல்லமகள்..!

சிறு வயதிலேயே தாயை இழந்தவள்.ஓரி வேறு துணை வேண்டுமென்று நினைக்கவே யில்லை.. !

அவனுக்கு தேன் எடுக்கவும் மெழுகு தயாரிக்கவுமே நேரம் சரியாய் இருந்தது..

ஆமி தேனீயைப் போல் சுருசுருப்பு..!

அவள் வீடு காட்டுக்குள் இருந்தது..

பயம் என்பது என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டாள்..

பாம்பைக் கூட கையால் தைரியமாய்ப் பிடிக்கும் எட்டு வயது ஏஞ்சல்…!

சுள்ளி பொறுக்குவாள்…விறகு வெட்டுவாள்…சிக்கிமுக்கி கற்களை வைத்து தீமூட்டி உலை வைத்து கம்பஞ்சோறு சமைப்பாள்..

தேனும் தினை மாவும் கலந்து வைத்து தகப்பனுக்கு காத்திருப்பாள்…

ஓரியும் தான் பிடித்த மான் அல்லது முயலை வீட்டுக்கு வெளியே கம்பில் தொங்கவிட்டு கீழே தீ மூட்டி நன்றாக சுட்டு வைப்பான்..

ஆமி தோண்டி எடுத்துவரும் கிழங்குகளை வேகவைத்து கூழாக்கி இறைச்சியுடன் சேர்த்து உண்பார்கள்…

இந்த இன்டர்நெட் யுகத்திலும் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல், அதற்கு அவசியமும் ஆர்வமும் இல்லாமல் தனக்கென்ற சொர்க்கத்தில் தானே முடிசூடா இராணியாகத் திகழுபவள்..

ஆமிக்கு வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டு குளிப்பதெல்லாம் பிடிக்காது..

சுனை, அருவி, ஓடும் ஆற்றுவெள்ளம்.. இதில் முங்கி, நனைந்து, நீந்திக் குளிப்பது தான் சுகமாக இருந்தது….

ஒருநாள்…!

அருவியில் குளித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் ஆமி.

கருஞ்சிட்டு, வாலாட்டிக்குருவி, காட்டு கீச்சான், தோல் கவுதாரி, தேன் பருந்து,நீலக்குயில் என்று பறவைகள் ஒன்று மாற்றி ஒன்று கூவின வண்ணம் இருந்தன.

ஆமி ஒலியை வைத்து பார்க்காமலேயே எந்தக் குருவி என்று கண்டுபிடித்து விடுவாள்..

சிலவேளைகளில் திரும்ப அவள் குரல் குடுக்க அவை மறுபடியும் கூவ ஒரு இசைக் கச்சேரியே நடைபெறும்..

வழியெங்கும் தேக்கு மரங்கள்.. உலகின் முதல் தேக்கு மரம் பயிரிடப்பட்டதே நீலாம்பூரில்தான்.

மலைநாயக்கர்கள் மரத்தோடு பேசும் வித்தை அறிந்தவர்கள்..

மரத்தோடு காதை ஒட்டி வைத்துக்கொண்டு முணுமுணுப்பாள் ஆமி..அதை கட்டி முத்தமிடுவாள்..

அன்றைக்கும் அப்படித்தான்..

அவளுக்கும் பிடித்த மரம்.. அவள் அதற்கு ‘ நீலி ‘ என்று பெயர் வைத்திருந்தாள்.

அதனுடன் வழக்கத்தைவிட அதிகமாகவே பேசிக் கொண்டிருந்து விட்டாள்…

இருட்டிவிட்டிருந்தது..

ஆமிக்கு இருட்டு ஒரு போதும் பயத்தைத் தந்ததில்லை..

வரும் வழியில் பளீரென்று ஏதோ மின்னி மறைவதுபோல்…

மின்மினிப் பூச்சிகள் அவளுக்குப் பழக்கமானவை.. மின்னலும் தான்…

ஆனால் இது வேறு…. இதுவரை பார்த்திராத ஒளி..நீண்ட குழல் வடிவில்.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. தோன்றுவதும்..மறைவதுமாய்..

அது என்னவென்று தெரியாமல் வீட்டிற்கு போகமாட்டாள் ஆமி..

அவளுக்கு அதீத மோப்ப சக்தியும் இருந்ததால் காட்டில் புதிதாக முளைக்கும் ஒரு சிறிய செடியைக்கூட அதன் மணத்தை நுகர்ந்து பார்த்து அவளால் அடையாளம் காட்ட முடியும்..

இது நிச்சயம் இந்த காட்டைச் சேர்ந்ததாய் இருக்க முடியாது..
ஆனால் அவள் பார்வை பட்டால் மறைவதும் திரும்பியவுடன் ஒளிர்வதுமாய் இருந்தது..

இரண்டு மூன்று உருவங்கள்..நீண்டு வாழைத்தண்டு போல மஞ்சள் நிறத்தில்..

உச்சியில் உருண்டையாக.. அவற்றின் மேல் நான்கைந்து சிறிய குச்சிகள்.. நுனியில் பச்சையாக மின்னி மின்னி மறையும் ஒளி வட்டங்கள்…

தீக்குச்சியின் தலை போல்..

கைகள் போன்று இரண்டு பக்கமும் நீள நீளமாய்…அதே பச்சைப் புள்ளிகளுடன்..

இதுபோன்ற பறவையோ, விலங்கோ நிச்சயமாக இந்தக் காட்டில் வசிக்கவில்லை என்று ஆமியால் அடித்துக் கூற முடியும்…

மெள்ள மெள்ள ஒரு உருவத்தின் அருகில் வந்துவிட்டாள்..

பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டாள்..

மூன்று உருவங்கள்…எல்லாமே அச்சடித்தது போல ஒரே மாதிரியாய்…

கால்கள் இல்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டு.!

அவளுக்கு அவற்றை மிகவும் பிடித்துப் போனது..

அருகில் போய் தொட்டுப்பார்க்க ஆசை..

அவள் பக்கத்தில் போகப்போக அவை காற்றில் மிதக்கும் தாத்தா பூ போல தள்ளித் தள்ளி போனது அவளுக்கு ஒரு சவாலாக இருந்தது..

அப்போதுதான் அவள் எதிர்பாராத ஒன்று நடந்தது…!

அவற்றில் ஒரு உருவத்தின் குச்சி போன்று நீட்டிக்கொண்டிருந்த உறுப்பு மெல்ல மெல்ல நீண்ண்ண்ண்டு அவளது கன்னத்தை தொட்டது..

ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் அவளுக்குள் பாய்ந்தது போன்ற சிலிர்ப்பு உடல் முழுதும்..

சட்டென்று அது மீண்டும் சுருங்கி பழையபடி ஆனது..

ஆமிக்கு இது ஒரு ஆச்சரியமான அனுபவமாயிருந்ததே தவிர பயம் கிஞ்சித்தும் இல்லை…

இப்போது மற்ற இரண்டு உருவங்களும் சேர்ந்து கொண்டன..

ஏதோ மணியடிப்பதுபோன்ற கிணிகிணியென்ற சத்தத்துடன் அவை பேசிக்கொண்டன…

ஆமிக்கு கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது..இவை பூமியைச் சேர்ந்த மனிதனோ, விலங்கோ, பறவையோ இல்லை..

ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்த அதிசய பிறவிகள்…வேற்று கிரக வாசிகள்….

ஆமிக்கு அவர்களுடன் பேச வேண்டும் போல அடக்க முடியாத ஆசை…

ஒரு உருவம் அவளருகில் வந்து தகடு போன்ற ஒன்றை எடுத்து அவள் வாயருகே வைத்தது..

ஆமி ஏதேதோ கேட்க ஆரம்பித்தாள்..!?

இரண்டு மூன்று வினாடியில் அந்த மூன்று உருவங்களும் மெல்ல மெல்ல எழும்பி ஆகாயத்தில் மிதந்து, நொடியில் நீல நிற ஒளியை உமிழ்ந்தபடி ராக்கெட்டைப்போல மேலேஏஏஏஏஏஏ….மேலேஏஏஏஏஏ பறந்து மறைந்து விட்டது..

ஆமிக்கு அழுகையாக வந்தது.. கையில் கிடைத்த விளையாட்டு பொம்மையை யாரோ பிடுங்கிக் கொண்டதுபோல..!

மானைவிட வேகமாக ஓடி வீட்டை அடைந்தாள்…

ஆரி அன்றைய சமையலை முடித்து மகளுக்காகக் காத்திருந்தான்..

மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் ஆமி..

ஆரி அவளுக்கு பேய் பிடித்து விட்டதாய் நம்பினான்…

மந்திரவாதியை அழைத்து பேயை விரட்ட எல்லா ஏற்பாடும் செய்து விட்டான்…

ஆனால் மந்திரவாதி இது பேயின் வேலையில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான்…

ஆமி இப்போதெல்லாம் காட்டுக்குள் நுழைந்தாலே அந்த அதிசய உருவங்களைத் தேட ஆரம்பித்தாள்.

ஒரு மாதம் ஓடிப் போனது…

ஆமியிடம் பழைய குதூகலம் கொஞ்சம் குறைந்து போயிருந்தது..

பொதுவாகவே எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படாமல் ஒரு குயிலைப் போல பாடித்திரிந்த பெண்ணின் முகவாட்டம் ஓரிக்கு வேதனையைத் தந்தது…

அடிக்கடி ஆமி காட்டுக்குள் போக ஆரம்பித்தாள்.

“ஏ !! வாலாட்டி குருவியே…நீ பாத்தியா…???”

“நீலச் சிறகியே…நீ பார்த்தால் என்னைக் கூப்பிட்டு சொல்லுவியா..???”

போகும் வழியில் பார்க்கும் பறவைகளையேல்லாம் கூப்பிட்டுக் கேட்டாள்…

நீலியைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்…

“நீலி…நீயும் தானே பாத்த… யார் அந்த அதிசய பிறவிகள்..??? திரும்ப வரவே மாட்டாங்களா…?? உங்கிட்ட ஏதாவது பேசினாங்களா.??? சொல்ல மாட்டியா….???”

அவளுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி…அவளது கனவு பலித்துவிட்டது..!

ஒருநாள்…!

காட்டுக்குள் சுள்ளி பொறுக்கப்போனவள் திகைத்துப்போய் நின்றுவிட்டாள்..

கண்ணைக் கூசும் வெளிச்சம்.

கிணிகிணியென்ற சத்தத்துடன் சுமார் பத்து உருவங்கள்… மஞ்சள் குழல் வடிவில் …!!

இப்போது அவை ஓடி ஒளியவில்லை…மின்னி மின்னி மறையவில்லை..

ஒரு உருவம் ஆமியின் அருகில் வந்து அவள் கையை தனது நீண்ண்ண்ட கையால் பிடித்துக் கொண்டு..

“உன் பெயர் என்ன…??” என்று கேட்டது…

ஆமிக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது..

“ஆமி….ஆமி….!!” என்றாள்..

“ஆமி..ஆமி…!” என்று ஒரே குரலில் அந்த உருவங்கள் கூறியது அந்த காடு முழுவதும் எதிரொலித்தது…

எல்லா உருவங்களும் ஆமியைச் சுற்றி நின்று கொண்டு அவளைத் தொட்டுத் தொட்டு பார்த்தன…

“என் பெயர் உனக்கு எப்படி தெரிந்தது?? நான் பேசுவதையும் புரிந்து கொள்கிறீர்களே…! இது எப்படி சாத்தியம்….??”

“ஆமி ! நாங்கள் ‘ஜூனோ’ கிரகத்திலிருந்து வருகிறோம்..எங்களை ‘ஜீனன்’ என்று அழைத்துக் கொள்ளுவோம்…உங்களைப் போல தனித்தனியாக பெயர்கள் இல்லை..எங்கள் முதுகில் நாங்கள் தோன்றியதுமே எங்களுக்குள்ள குறியீட்டை முத்திரை குத்திவிடுவார்கள்…”

“அது சரி.. எங்கள் மொழி…???”

“அதுவா.. நான் போனமுறை வந்தபோது ஒரு மின்தகட்டை உங்கள் வாயருகே வைத்தேன் இல்லையா…?? அது பதிவு செய்த தகவல்களை வைத்து உங்கள் மொழியை உடனே கற்றுக் கொண்டு விட்டோம்..இதுபோல் நாங்கள் நான்கு வேற்று கிரகங்களுக்கு போயிருக்கிறோம்..! அவர்கள் மொழியையும் கற்றுக்கொண்டு விட்டோம்….”

“ஜீனன்..என்னை உங்கள் ‘ஜூனோ’ கிரகத்துக்கு கூட்டிக் கொண்டு போவீர்களா…?”

“ஆமி.. உண்மையாகத்தான் சொல்கிறாயா…??? “

“ஆம்..உண்மையிலேயே நான் உங்களுடன் வர விரும்புகிறேன்…”

“ஆமி உன் அப்பா…??”

“அவருக்குத் தெரியாமல்தான்…!! ஒரே ஒரு நாள்…”

“ஆமி.. இதுவரை நாங்கள் வேற்று கிரகத்தில் இருந்து எவரையும் கூட்டிக் கொண்டு போனதில்லை..முதலில் அதற்கு அனுமதி பெற வேண்டும்…!! அப்புறம்….நீ இப்படியே வர முடியாது..எங்களைப் போல மாற வேண்டும்… ! இரண்டு நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்..முக்கியமாக…இது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும்…உன் அப்பாவுக்குக் கூடத் தெரியக் கூடாது…”

ஆமி பலமாக தலையை ஆட்டினாள்..

அவளுக்கு எப்படியும் ஜூனோ கிரகத்தை பார்த்தே ஆகவேண்டும்..

“சரியாக அடுத்த வாரம்..இதே நாளில்..இதே நேரத்தில் மறுபடியும் பார்க்கலாம்…”

அவளது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஜீனன் கூட்டம் மேலே மேலே மிதந்து பறந்து, மறைந்து விட்டன…

ஆமி வெகு நேரம் அவை பறந்து போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

அடுத்த வாரத்துக்காக காத்திருந்தாள்….

சொன்னபடியே சொன்ன நேரத்துக்கு வந்துவிட்டது ‘ ஜீனன் குடும்பம்…….!!

“ஆமி….தயாரா…??”

“ஆம்…இப்போதே..இந்த வினாடியே…!”

ஆமியிடம் நிறையவே பேசினார்கள்…. அங்கு போனதும் அனுசரிக்க வேண்டிய விதிமுறைகள் அத்தனையும் ஐந்தே நிமிடத்தில் கற்றுக் கொண்டு விட்டாள் ஆமி…

“ஆமி…. இப்போது உன்னை எங்களைப் போல மாற்றப் போகிறோம்..பயப்படாதே..முதலில் நீ உன்னுடைய உடலில் சில அதிர்வுகளை உணர்வாய்.. விரைவில் பழகிவிடும்..! நீ எங்களைப் போல தனியாகத்தான் மேலே பறக்க வேண்டும்… திசைமாறி போய்விடுவோமோ என்ற அச்சம் வேண்டாம்…! நாம் எல்லோருமே மின்காந்த ஈர்ப்பு சக்தியால் ஒருவரோடொருவர் பிணைந்தே இருப்போம்…எந்த நெருக்கடி நிலையையும் சமாளிக்க இந்த சிவப்பு பொத்தானை அமுக்கினால் உனக்கு வேண்டிய எல்லா உதவியும் கிடைக்கும்…”

“இங்கிருந்து எவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டும்…??”

“ஆமி.. அதைப் பற்றிதான் இப்போது கூறப் போகிறேன். நாம் உயர போகப் போக உயிரியல் கடிகாரம் மாறிக் கொண்டே வரும்..ஒரு மணி நேரத்துக்குள் ஜூனோவை அடைந்து விடுவோம்…ஆனால் உங்கள் கிரகப்படி ஒரு நாள்..!”

“என்ன….?”

“ஆம்…!!”

“நான் எத்தனை நாள் அங்கு தங்கலாம்…??”

“நாளா…?? ஒரு மணி நேரத்துக்கு மேல் வேற்று கிரகவாசிகளுக்குத் தங்க அனுமதி இல்லை..! பார்க்கப்போனால் நீதான் எங்கள் முதல் விருந்தாளி..உனக்கு அரச மரியாதை கிடைக்கப் போகிறது….!! திரும்பி பூமிக்கு வரும்போது ஒருவாரம் ஆகிவிடுமே… உன் தந்தை தேட மாட்டாரா……???”

“நிச்சயமாக தேடுவார்.. ஆனால் பயப்பட மாட்டார்…இந்த காட்டிலுள்ள மிருகங்களால் எனக்கு ஒரு ஆபத்தும் வராது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்..காட்டுக்குள் தொலைந்து போகமாட்டேனென்றும் அவருக்குத் தெரியும்…அதனால் கவலையோடு, ஆனால் பொறுமையோடு காத்திருப்பார்…!”

“ஆமி… எல்லாம் தயார் நிலையில் உள்ளது.. எங்களிடமிருந்து சமிக்ஞை வந்ததும் நாம் புறப்பட தயாராக வேண்டும்..!”

அடுத்த ஐந்து நிமிடத்தில் வாண வேடிக்கை போல மஞ்சள் ஒளியுடன் ஆகாயத்தை நோக்கி புறப்பட்டனர் ஜீனன் குடும்பத்தார்… ஆமியும்தான்…

மேலே…மேலே…உயர் உயர பறந்தாள்…!

***

ஆமிக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று எதோ ஒரு உணர்ச்சி…. தான் ஒரு பறவை போல மிகவும் இலகுவாக பறப்பது அவளுக்கு மிகவும் பரவசமாக இருந்தது..

“ஏ தேன் சிட்டே..! ஊர்க் குருவியே!! மலைச்சிட்டானே..!! நானும் பறக்கிறேன் பாருங்க..!!”

மற்ற ஜீனன் கூட்டத்தினர் ஒருவரும் கண்ணில் தென்படவில்லை…

சிவப்பு பொத்தானை அமுக்கினாள்..

வினாடி நேரத்தில் பக்கத்தில் ஒரு மஞ்சள் குழல் மிதந்து வந்தது..!

“ஆமி.. என்ன ஏதேனும் ஆபத்தா..???”

ஆமி கலகலவென்று சிரித்தாள்..

“இல்லையில்லை.. நீங்கள் வருவீர்களா என பரிசோதித்து பார்த்தேன்…”

சரியாக ஒரு மணிநேரத்தில் ஜுனோவை அடைந்து விட்டார்கள்…

தகதகவென தங்கம் போல ஜொலித்துக் கொண்டிருந்தது ஜுனோ கிரகம்..

மேலிருந்து பார்க்கும்போது பூமி போல உருண்டையாக இல்லாமல் கோள வடிவில் இருந்ததால் ஒரு தங்க முட்டை போல் ஒளி வீசியது…

ஒரு பெரிய ஓடுபாதை போல தோன்றிய பரப்பில் ஒவ்வோருவருடைய எண்ணும் வானில் நீல நிற ஒளியுடன் தோன்ற ஒவ்வொரு உருவமாக இறங்கியது…

ஒரு அடி மேலே பறந்த நிலையில்தான் அவை நின்றன.

எங்கு பார்த்தாலும் நீலமும் பச்சையும் கலந்த மெல்லிய புகை மண்டலம்…

ஒவ்வொரு ஜீனனும் குச்சி போன்ற கைகளை நீட்டி மற்ற ஜீனனின் கைகளைப் பிடித்து கிணிகணியென்ற சத்தத்துடன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்…

ஆமியின் முதுகிலும் ஒரு எண் குத்தப்பட்டிருந்தது… ஆனால் அது தற்காலிக எண்…

அவளது எண் அறிவிக்கப்பட்டதும் அவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்…!!

சிலர் நீண்ட கைகொண்டு தொட்டும் தடவியும் அன்பை பரிமாறிக் கொண்டனர்…

அவளை ஒரு வண்ணமயமான நட்சத்திரங்கள் போல் மின்னும் அறைக்குள் அழைத்துச் போனார்கள்…

அங்கு வரிசையாய் மாட்டியிருந்த குழாய்களில் வண்ண திரவங்கள் நிரப்பப்பட்டிருந்தது..

“ஆமி ! இதுதான் நாங்கள் சாப்பிடும் உணவு…உனக்குப் பிடித்ததை உன் உடலில் இடது பக்கம் இருக்கும் துவாரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்..எப்போது வேண்டுமானாலும் இந்த அறைக்குள் நுழைந்து உன் எண்ணை பதிவு செய்து உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்..இங்கு எல்லா வசதிகளும் இலவசம்… ”

எல்லோரும் மிகவும் சுறுசுறுப்பாக காணப் பட்டனர்..

“ஆமாம்… உங்களுக்கு குடும்பம், குழந்தை,வீடு…???”

“எங்களுக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்து ஒரே குழுவாக செயல்படலாம்…ஐந்து ஜீனன்கள் வரை ஒரு குழுவில் இடம்பெறலாம்.”

“உங்களுக்கு கேளிக்கை நிகழ்ச்சிகள்…???”

“வேண்டிய இசையைத் தேர்ந்தெடுத்து நடனம் ஆடுவோம்.. எந்த பறவையும், மிருகமும் நினைத்தமாத்திரத்தில் எங்கள் கண்முன் தோன்றும்..!”

“நீங்கள் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பீர்கள்…??”

“எங்களுக்கு உயிர் என்பது கிடையாது.. எங்களுடைய மின்சக்தி குறிப்பிட்ட காலம் முடிந்ததும் செயலிழந்து விடும்..

ஆமி..! இங்கே பார்….!”

ஒரு பெரிய மைதானத்தில் நிறைய ஜீனன்கள் ஒளியிழந்து தரையில் படுத்துக் கொண்டிருந்தனர்..

“ஆமி…!! இவை இறந்ததற்கு சமம்.. எங்கள் தலைவர் புதிய மின்னணு செயலியைப் பொருத்தியதும் மீண்டும் புதிய ஜீனனாக உருமாற்றம் அடைவார்கள்..

அவர்களுக்கு புதிய முத்திரை குத்தப்படும்…”

ஆமிக்கு அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் வந்தது….

“ஆமி.. உன்னுடைய நேரம் முடிந்தது விட்டது..புறப்பட தயாரா.???”

ஆமிக்கு அங்கேயே இருந்துவிட ஆசையாயிருந்தது… ஆனால் அப்பா தேடுவாரே….!!

எல்லா ஜீனன்களும் கூட்டமாய் வந்து அவளைக் கட்டிப் பிடித்தன..

“ஆமி.. எங்கள் நினைவுப் பரிசாக இதை எடுத்துச் செல்….”

பளபளவென்று மின்னியது ஒரு கல்…!!

“உனக்கு எங்கள் நினைவு வரும்போதெல்லாம் இந்த குறியீட்டை மனதில் நினைத்துக் கொண்டு இதைப் பார்த்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.. எங்கள் உருவமும் இதில் தெரியும்…!! ஆனால் மாதம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்..உனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்…”

ஆமி பிரியாவிடை பெற்று பிரிந்தாள்….

“நீ தனியாகத்தான் செல்ல வேண்டும்.. உன்னுடைய கிரகத்தில் இறங்கியதுமே பழைய உருவம் வந்துவிடும்..பயமாக இருக்கிறதா…???”

“பயமா…???? எனக்கா….?????? இல்லவேயில்லை …!! மிகவும் உற்சாகமாக இருக்கிறது…”

“ஒன்றை நினைவில் வைத்திரு..நீ திரும்பிச் செல்லும்போது ஒரு வாரம் முடிந்திருக்கும்…உன்னுடைய வருகை எங்களை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது…”

***

ஒரு மணிநேரத்தில் எந்தவித இடையூறுமின்றி பத்திரமாய் பூமிக்கு திரும்பினாள் ஆமி..

அவள் அடுத்த வினாடியே பழைய ஆமியாக மாறிவிட்டாள்..

தன்னைக் கிள்ளி பார்த்துக் கொண்டாள்….

“உய்ய்ய் ..! என்று கத்திகொண்டே வீட்டுக்கு ஓடினாள்..

ஓரி தீயை மூட்டி ஏதோ வேகவைத்துக் கொண்டிருந்தான்..

ஆமியை ஓடி வந்து கட்டிக் கொண்டான்..

ஆமி நடந்ததையெல்லாம் மூச்சு விடாமல் கூறி முடித்தாள்..

“ஆமி..இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்…ஒருவாரமாக உன்னைக் காணவில்லை என்றதுமே நான் புரிந்து கொண்டேன்…மந்திரவாதியும் உனக்கு ஒரு ஆபத்துமில்லையென்று கூறிவிட்டான்..

“சோமபானம் கலந்து தயாராக வைத்திருக்கிறேன்..மான் இறைச்சியும் காடையும் வறுத்து வைத்திருக்கிறேன்…வா…. நாம் இன்றைய நாள் நமக்கு ஒரு மறக்க முடியாத நாளாயிருக்க வேண்டும்….”

ஆமி ஜுனோ கிரகத்திற்கு போய் வந்த கதையைக் கேட்க ஆவலாயிருக்கிறதா..??

அவள் மட்டும் நம்மிடையே இருந்திருந்தால் அவள் பதிவேற்றும் வீடியோ ஒரு நொடியில் வைரலாகி விடுமே….!

ஆனால் அவள்தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாளே….!

ஆனால் அவள் ஜீனன்களுடன் தொடர்பில்தான் இருக்கிறாள்..

மாதம் ஒருமுறை தவறாமல் யாரும் பார்க்காத பொழுது…

வேண்டாம்…அது இரகசியமாகவே இருந்துவிட்டு போகட்டுமே….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *