ஹிஸ்டரி வாத்தியார்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சுகுணராவ் எம். ஏ., எல். டி. சரித்திரம் கற்பிப்பதில் புலி’ என்று பெயர் பெற்றவர். அரை வருஷ சரித்திரப் பரீக்ஷை விடைத்தாள்களை அவர் மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் தங்கள் மார்க்குகளை அறிய மிக ஆவலுடையவர்களாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதற்குத் ‘தாய் தந்தையர் எப்படி. ஆவலுடன் இருப்பார்களோ, அப்படி இருந்தனர் – மாணவர்கள் யாவரும். ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கும் குழந்தையை எப்படி மாற்ற முடியாதோ, அதுபோலத்தான் சுகுணராவ் வழங்கும் மார்க்கும். அவர் மார்க் போட்டால் அது போட்டதுதான்! அதற்குமேல் அரைக்கால் மார்க், அதைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வளவு துல்லியமாக விடைகளை மதிப்பிட்டு மார்க் வழங்குவதாக அவர் அடிக்கடி கூறுவார். மார்க் விஷயத்தில் அத்தனை கண்டிப்பாக இருந்தார் அவர்.
ஒரு கேள்விக்காவது முழு மார்க்கும் அவர் கொடுப்ப தில்லை என்பது மாணவர்கள் அவர்மீது கூறும் குறை. ஆனால் அவர் மாணவர்கள் மீது சொல்லும் புகார் என்ன வென்றால், கேள்விகளுக்கு விடை எழுதும் சரியான முறையை மாணவர்களுக்குத் தாம் எத்தனை தடவை விளக்கிக் கூறியும், மாணவர்களில் ஒருவனாவது எந்தக் கேள்விக்கும் முழு மார்க் வாங்கமாட்டேன் என்கிறானே என்பதேயாகும். சரித்திரப் பரீக்ஷையில் விடைகளுக்கு முழு மார்க் வழங்குவது எந்த ஆசிரியருக்கும் வழக்க மில்லை என்றும், ஆனால் அவர் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், சரியான விடைகளுக்கு முழு மார்க் கொடுப்பதற்கு அவர் எப்பொழுதும் தயங்கினதில்லை என்றும் அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு காலத்தில் இறந்து, அவருடைய ஞாபகார்த்தமாக ஒரு சமாதி எழுப்பப்பட்டால், அதில் அவருடைய குணாம்சங்களில் எல்லாம் மிகச் சிறந்ததாக மார்க் விஷயத்தில் அவர் கொண்ட தாராள மனப்பான்மையையே குறிப்பிட வேண்டுமென்று கூறுவதுண்டு. சுகுணராவ் எம்.ஏ., எல்.டி. பிறப்பு………மரணம் …………சரித்திரப் பரீக்ஷையில் சரியான விடைகளுக்கு முழு மார்க் கொடுத்தார்” என்று எழுதினால், அதையே அவர் மிகவும் பெருமையாகக் கொள்வதாகக் கூறுவார்!
இங்ஙனம் சொல்லி மாணவர்கள் எழுதிய விடைகளில் என்ன என்ன தவறுகள் செய்திருந்தார்கள், விடைகள் எப்படி எழுதவேண்டுமென அவர் விரிவாக எடுத்துச் சொன்னபோது. அவர் சொல்லியது சரி என்றே மாணவர்களுக்குத் தோன்றியது. வேறு எந்த உபாத்தி யாயராவது அவர்களுக்கு அவ்வளவு மார்க்குகள் கொடுத்திருப்பாரா என்றுகூட நினைத்தார்கள்.
அச்சமயம் திடீரென்று ஒரு மாணவன் எழுந்திருந்து, தனக்கு ஒரு கேள்விக்கு உரிய மார்க்கு கொடுக்கப் படவில்லை என்பதாக முறையிட்டான். சமய சந்தர்ப்பத்தைச் சற்றேனும் கவனியாது,அப்பொழுது எழுந்திருந்து அவ்விதம் குறை கூறிய மடையன் யார் என்று மாணவர்கள் அனைவரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள்.
“உனக்குப் போட்டிருக்கும் மார்க்குக்கு மேல் அரைக்கால் மார்க்கேனும் அதிகமாய்ப் போட முடியா தென்று என்னால் ரூபிக்க முடியும்” என்றார் சுகுணராவ். ஆசிரியர் அவ்விதம் சொன்ன பின்பும் அவன் உட்காராமலிருந்ததைக் கண்டு மாணவர்கள் எல்லோரும் ஆச்சரியமுற்றனர்.
“அது எந்தக் கேள்வி?” என்று ஆசிரியர் மிகவும் அமைதியுடன் கேட்டார்.
“குப்தர்களுடைய காலம் இந்துதேச சரித்திரத்தில் ஏன் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?” என்று மாணவன் பதிலளித்தான்.
“நீ எழுதியிருக்கும் விடை என்ன?”
மாணவன் தன்னுடைய விடையை வாசித்தான்.
ஒரு கேலிப் புன்னகை சுகுணராவ் முகத்தில் தாண்டவமாடியது.
“ஆஹா! என்ன அழகான பதில்! இதை ஒரு மாதிரி விடையாகக் கொள்ளலாம். அதை இன்னொரு முறை வாசி. எல்லோரும் கவனிக்கட்டும்” என்றார்.
மாணவன் மறுமுறையும் விடையை வாசித்தான்.
”உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மார்க் என்ன?”
“மொத்தத்தில் பாதி.
“இந்த விடைக்கு நீ இதற்குமேல் மார்க் எதிர் பார்க்கிறாயா?”
“ஆம்.”
சுகுணராவிடம் இப்படிப் பேசுவதற்குச் சாதாரணமாக ஒருவருக்கும் தைரியம் வராது. ஆகையினால் அம் மாணவனுடைய நடத்தை விநோதமாக இருந்தது.
“எவ்வளவு மார்க் போட்டிருக்க வேண்டும்?”
“முழு மார்க்கும்.”
“ஏன்?”
“சரியான விடைக்கு முழு மார்க்கும் கொடுப்பது தங்கள் வழக்கமென்று நீங்கள் அடிக்கடி சொல்லி யிருக்கிறீர்கள்.”
“ஆனால் நீ எழுதியிருப்பது சரியான விடை என்று உனக்கு யார் சொன்னது?” என்று அவ்விடையிலுள்ள குறைகளை எல்லாம் கடல்மடை திறந்த வெள்ளம் போல ஒவ்வொன்றாய் எடுத்துக் கூற ஆரம்பித்தார் ஆசிரியர்.
அவர் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி முடித்த போது, அம் மாணவனுக்குப் போட்டிருந்த மார்க்கில் பாதிக்குக்கூட அவன் லாயக்கில்லை என்பது மாணவர்கள் அனைவருக்கும் தெளிவாய் விளங்கியது. அத்தகைய விடையை எழுதிக்கொண்டு, அதற்கு முழு மார்க் போடவில்லை என்று ஆசிரியரை அநியாயமாகக் குறை கூறினானே என்று சிலர் அவனை முறைத்துப் பார்த்தார்கள்.
“உனக்குப் போட்டிருக்கும் மார்க் சரிதான் என்று இப்பொழுதாவது விளங்குகிறதா?” என்று ஆசிரியர் கேட்டார்.
“பூர்ணமாய் விளங்குகிறது.”
“திருப்திதானே?” என்று கேட்டபோது ஆசிரியர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.
“பூர்ண திருப்திதான். ஆனால்…”
இதற்குமேல் யாருக்குத்தான் கோபம் வராது?
“இன்னும் என்ன ஆனால்?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டார் சுகுணராவ்.
“நான் எழுதியிருப்பது தாங்கள் முன்னம் கொடுத்த மாதிரி விடை, ஸார்” என்று சொல்லிச் சரித்திர நோட்டை எடுத்து, அவர் கொடுத்திருந்த மாதிரி விடையை வாசிக்க ஆரம்பித்தான் மாணவன்!
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 67
