ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 10, 2026
பார்வையிட்டோர்: 34 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் -2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

இராவணன் ஒரு முறை வேதவதி என்ற பெண் மணியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றான். அதனைக் கண்ட அவள் கோபம் கொண்டு, “உன் குலத்தை வேருடன் அழித்து விடுகிறேன் ” பகவானை என்று வஞ்சினம் கூறிவிட்டு அக்கினி அடைக்கலமாக அடைந்தாள். 

அக்கினி பகவான் அவளுக்கு ஆறுதல் கூறிக் காப்பாற்றி வந்தார். 

இராமபிரான் தன் தம்பி இலக்குவனோடும் துணைவி சீதா பிராட்டியாருடனும் தண்டகாரண்யத்தில் இருந்த போது, இராவணன் மாயத்துறவி வேடங் கொண்டு சீதையை அபகரித்துச் செல்லக் கருதினான். இதற்காக மாரீசனை அனுப்பி இராமபிரானையும் இலக்குவனையும் சீதையைத் தனியே விட்டுப் பிரியுமாறு செய்தான். அச்சமயத்தில் அக்கினிதேவன் தன்னிடமிருந்த வேதவதியைச் சீதாபிராட்டியாக்கி அவளைத் தண்ட
கராண்யத்தில் விட்டுவிட்டு, உண்மைச் சீதையைத் தான் கொண்டு சென்றுவிட்டான். 

இராவணன் மாண்ட பிறகு சீதையை மீட்டு வந்த இராமபிரான் உலகோர் கூறிய அபவாதத்தைத் தாங்க மாட்டாமல் வேதவதியாகிய சீதையை அக்கினிப் பிரவேசம் செய்து வருமாறு கூறினார். 

வேதவதியாகிய சீதையும் இராமபிரான் சொற்படி அக்கினிப் பிரவேசம் செய்தாள். அடுத்த கணம் அக்கினிபகவான் தம்மிடம் இத்தனை காலமும் காப்பாற்றி வைத்திருந்த உண்மைச் சீதையையும் வேதவதியையும் வெளியே கொண்டு வந்து சேர்ப்பித்தார். 

ஒரே சாயலில் உள்ள இரண்டு சீதைகளைக் கண்டதும் இராமபிரான் திகைத்துவிட்டார். 

“நாதா, இவள் வேதவதி என்பவள். இராவணன் ஒரு தடவை இவளை அவமானப்படுத்த நினைத்ததால் இவள் அவன் குலத்தை வேரோடு அழித்துவிடுவதாகச் சபதம் கூறினாள். அதன்படியே இராவணன் என்னை எடுத்துச் செல்ல முயன்றபோது இவள் எனக்குப் பதில் இராவணனோடு சென்று இலங்கையில் படாத பாடு பட்டாள். இவ்வாறு நமக்காக அசோகவனத்தில் பெரிதும் துன்பப்பட்ட இவளையும் நீங்கள் பத்தினியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றாள் உண்மைச் சீதை. 

“தேவி, இந்த இராமாவதாரத்தில் நான் ஏக பத்தினி விரதன் என்கிற செய்தி உனக்குத் தெரியாத தன்று. கலியுகத்தில் நாம் வேங்கடேசனாக அவதரிப்போம். அப்போது இந்த வேதவதி ஆகாச ராஜனின் மகளாக – பத்மாவதியாகப் பிறப்பாள். அப்போது இவளைத் திருமணம் செய்து கொள்வோம்” என்றார். 

இவ்வாறு இறைவனின் திருவருட்படி வேதவதி கலியுகத்தில் பத்மாவதியாக அவதரித்தாள். 

ஆகாசராஜனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. தன்னுடைய குலகுருவாகிய பிரகஸ்பதியாரிடம் தன் குறையைக் கூறி வருந்தினான். 

“அரசே கவலையை ஒழி. தசரதனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்து பிள்ளைப் பேறு பெற்றான். நீயும் அவ்விதமாகவே யாகம் செய்து சந்தான பாக்கியத்தைப் பெறலாம்” என்றார் பிரகஸ்பதி. 

ஆகாச ராஜனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்வதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, நல்ல நாளில் முனிவர்கள், மந்திரிகள் புடைசூழ அந்த இடத்தைத் தங்கக் கலப்பையால் உழுதான். 

தங்கக் கலப்பையால் உழும்போது ஓர் இடத்தில் ஏர் முனை மேலே செல்லமாட்டாமல் அப்படியே நின்று விட்டது. ஆகாசராஜன் உழுவதை விட்டுவிட்டுப் பூமியில் பார்க்க, அவ்விடத்தில் ஆயிரம் இதழ்களை உடைய ஒரு தாமரைப் பூவில் இலட்சுமிதேவியைப் போன்ற ஒரு குழந்தை கோடி சூரியப் பிரகாச ஒளியுடன் இருந்தது. 

அக் குழந்தையைக் கண்ட மன்னன் ஆனந்தம் அடைந்தான். குழந்தையை வாரியணைத்துக் கொண்டான். மகிழ்ச்சிக் கூத்தாடினான். 

இறைவனே தன் குறை தீர்க்க இக் குழந்தையைத் தனக்கு அளித்ததாக மகிழந்தான். வீட்டுக்கு எடுத்துச் சென்று மனைவி தரணி தேவியிடம் அக் குழந்தையைக் கொடுத்தான். அவளும் அக மகிழ்ந்து அக்குழந்தையை வளர்த்து வரலானாள். 

தாமரை மலரில் கிடைத்த குழந்தையாகையால் அக்குழந்தைக்குப் பத்மாவதி என்ற திருப் பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தனர், ஆகாச ராஜனும் அவன் மனைவியும். 

பத்மாவதி வந்த வேளை ஆகாசராஜனுக்கு மற்று மோர் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது. இத்தனை நாட்களாக மகப்பேறு இல்லாமல் வருந்திய தரணி தேவி கருத்தரித்தாள். பத்தாவது மாதம் ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அக் குழந்தைக்கு வசுதானன் என்ற பெயர் சூட்டி ஆகாசராஜனும் தரணி தேவியும் வளர்த்து வந்தனர். 

பத்மாவதி தேவி வந்ததால்தான் நமக்கு மகன் பிறந்தான் என்ற நம்பிக்கையுடன் அரசனும் அரசியும் பத்மாவதியின் பேரில் உயிரையே வைத்து வளர்த்து வந்தனர். 

– தொடரும்…

– ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம், முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பைலட் பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *