வேலிச்செகை!




விவசாயி கருப்பண கவுண்டருக்கு மனக்கவலை அதிகரித்தது. பூர்வீக சொத்து பங்கு பிரிக்கும் போதாவது தடத்தோரம் உள்ள சொத்தை மாற்றி, பங்காளிகளிடம் பேசி உள்ளே வேலிச்செகை படாமல் நன்றாக விளையும் சொத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென உறக்கம் தொலைத்து யோசித்துக்கொண்டிருந்தார்.
விடிந்ததும் வேப்பங்குச்சி முறித்து பல் விளக்கியவர், இருந்த பழைய சோற்றை மோர் ஊற்றி கரைத்துக்குடித்து விட்டு இன்று சொத்து பிரிக்க நியாயம் பேச வரவிருக்கும் ஊர் கவுண்டரான உறவினர் வேலப்ப கவுண்டரை அவரது தோட்டத்து வீட்டில் சந்தித்து தமது எண்ணத்தைச்சொல்லி வர துருப்பேறிய பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

“வாடா மாப்ளே கருப்பணா…. நானே வாரதா நம்ம பண்ணையத்தாள் ராமப்பயங்குட்ட சொல்லியுட்டிருந்தனே… அவமந்து உம்படகுட்ட சொல்லுலியாக்கு….?” தனது சவாரி வண்டி மாட்டிற்கு தீவனம் எடுத்துப்போட்டுக்கொண்டே கேட்டார்.
“வந்து சொல்லிப்போட்டுத்தாம் போனானுங்க மாமா. நீங்க அங்க நாயம் பேச வந்த பின்னாடி எம்பட ரோசனைய சொல்லறதுக்கு என்ற மவன் ராசு உட மாட்டானுங்க. காலங்காலமா என்ற பங்காளிக எனக்கு தடத்தோரமிருக்கற ரெண்டனப்பையும் ஒதுக்கி வேலிச்செகைனால வெள்ளாம வெளையாம நட்டப்பட்டுப்போயிட்டேன். அவுங்களுக்கு பத்து மூட்டை வெளைஞ்சா எனக்கு வேலிச்செகைனால அஞ்சு மூட்டைதான் வெளையுது. இப்பவாச்சும் பங்கு பங்கும்போது உள்ளார பக்கமா நடுவுல இருக்கற நல்லா வெளையற சொத்து ரெண்டனப்ப எடுத்துப்போடலாம்னா பங்காளிப்பசங்களும் முடியாது, இது வெரைக்கும் எப்படியோ அதப்படியே கலாரு பண்ணிப்போடோனும்ங்கறானுக. எம்பட மவனும் அவங்களப்பகைச்சுப்போட்டா நாளைக்கு நல்லது கெட்டதுக்கு பங்காளிக இல்லாமப்போயிரும்னு அப்படியே பண்ணிக்கலாம்னு சொல்லிப்போட்டு வந்துட்டான்னா பாருங்களே…. அதனால எனக்கு ராவு தூக்கமே போச்சு. உங்க கிட்ட சொன்னாலாச்சு என்ற மனசப்புரிஞ்சு நாயம் பேசுவீங்கன்னு சொல்லிப்போட்டு போகத்தா வந்தம் பாருங்க” சொன்னவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
“முதல்ல காப்பித்தண்ணிய எடுத்துக்குடி. நாம் போயி ஒரு சொப்பு தண்ணி வாத்துப்போட்டு வந்து பேசறேன்” என கூறிவிட்டு குளியலறையை நோக்கி சென்றார் வேலப்ப கவுண்டர்.
குளித்து விட்டு வெள்ளையும் சொல்லையுமாக வந்து பிரம்பு சேரில் அமர்ந்தவர் காத்திருந்த வேலையாட்களை அழைத்து அன்று தோட்டத்தில் நடக்க வேண்டிய வேலைகளைச்சொல்லி அனுப்பி விட்டு தன் முன் அமர்ந்திருந்த கருப்ப கவுண்டரை ஏறிட்டார்.
“மம்முட்டி எடுத்து காட்ட வெட்டி பாடு பட்டா மட்லும் போதாது கருப்பணா…. கொஞ்சமாச்சும் மூளைக்கு வேல கொடுக்கோணும். ஒன்னம்மே ஹைதர்அலி காலத்திலியே இருக்கறீங்க. தடத்தோரம் இருக்கற சொத்து வேலிச்செகை அடிச்சா நாலு மூட்ட கம்பு கமியா வெளையும். ஆனா வருங்காலத்துல பட்டணத்துல இருக்கற மாதர நம்ம பட்டிக்காட்லயும் தடத்தோரத்துக்கு மதிப்பு வந்து போடும். அந்தக்காலத்துல தடத்தோரம் வேலிச்செகையடிச்சா வெளையாதுன்னு வேலியோரம் எடுக்கறவங்களுக்கு ஓரணப்பு சொத்து சேத்தி உட்டாங்க. இப்ப அப்படியில்ல. நடுவுல எடுக்கறவங்களுக்குத்தா கொஞ்சமாச்சும் அங்கெல்லாஞ்சேத்தி உடறாங்க. உனக்கு பங்காளிகளே நடுவுல இருக்கற சொத்த எடுத்துக்கறதுக்கு கூட கேக்காம ஒத்துக்கறாங்கன்னா நீ சந்தோசப்பட்டுக்கோ. நீ கும்பிடற கருப்பராயன் உனக்கு நல்லது பண்ணறாரு. நீ போயி எப்பும் போல வேலையப்பாரு. உன்ற பங்காளிக சொல்லற படியே இருக்கற மாதிரியே கலாரு பண்ணிப்போடு. ஊர்ல கோமாளின்னு உன்னப் பத்துப்பேரு இப்ப பேசுவாங்க. பேசறவங்க வருங்காலத்துல அறிவாளீன்னு பேசப்போறாங்க பாரு. பேசறவங்க எதைய வேணாலும் பேசீட்டு போறாங்க. ஏமாத்துக்காரன்னு தாம் பேசப்படாது” என கூறிய வேலப்ப கவுண்டரின் பேச்சில் தமது வாரிசுகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதைப்புரிந்து கொண்டு கையெடுத்து கும்பிட்டு விட்டுக்கிளம்பினார் கருப்ப கவுண்டர்.
“பங்காளி கருப்பண வேலியோரம் இருக்கற சொத்தையே எடுத்துக்கறேன்னு சொல்லீட்டாராமா…. நம்முளுக்கு எப்பும் போல நடுவுல வேலிச்செகை இல்லாம நல்லா வெளையற சொத்தே கெடைக்கப்போகுது” என மகிழ்ச்சி பொங்க தனது அண்ணன் ராமசாமியிடம் குப்புசாமி சொல்லிச்சிரித்தார்.
ஊரிலுள்ளவர்களும், உறவினர்களும் கருப்பண கவுண்டரை ‘வெகுளி, வெள்ளச்சோளம், ஏமாளி, இளிச்சவாயன்’ என தடத்தின் வேலியோரம் உள்ள சொத்தை மட்டுமே பங்கெடுத்ததற்கு பேசிக்கொண்டனர். தற்காலத்தை விட எதிர்காலத்தைப்பற்றிக்கணக்குப்போடும் வேலப்பகவுண்டரின் பேச்சை மட்டும் நம்பினார் கருப்பண கவுண்டர்.
சில வருடங்களுக்குப்பின் வியாபார நிறுவனங்கள் ஊரில் பெருக ஆரம்பித்தன. ரோட்டோரம் உள்ள சொத்துக்களின் விலை மதிப்பு உள்ளிருக்கும் நன்றாக விளையும் சொத்துக்களைவிட பத்து மடங்கு கூடியிருந்தது.
கருப்பண கவுண்டர் இருந்த போது ஏமாளியென பேசியவர்கள் இறந்த பிறகு அறிவாளியென பேச ஆரம்பித்து விட்டனர். நடுவிலுள்ள நன்றாக விளையும், வேலிச்செகை இல்லாத சொத்தை பங்கெடுத்தவரின் பேரனுக்கு கிடைத்த பெண் சம்மந்தத்தை விட, ரோட்டோரம் சொத்து வைத்திருக்கும் கருப்பண கவுண்டர் பேரனுக்கு பெரிய இடத்திலிருந்து பெண் சம்மந்தம் அமைந்தது. வேலிச்செகையென அன்று மதிப்பில்லாமலிருந்த ரோட்டோரம் உள்ள சொத்து இன்று நல்ல வேல்யூவான சொத்தாக மாறியிருந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |