வேடங்கள் பலவிதம்!






நரி சிங்கத்தின் வேடத்தைப்போடலாம். மற்ற மிருகங்கள் அதைப்பார்த்தவுடன் பயமும் கொள்ளலாம். ஆனால் தன்னைப்பார்க்கப்பார்க்க அவற்றிற்கு உண்மை தெரிந்து தன் மீதுள்ள பயம் போகக்கூடும் என்பது வேடமிட்ட நரிக்கும் தெரிந்திருக்கும்.
அதிக கடன் வாங்கி ஆடம்பரமாக எதையும் செய்யும் தன்னை ஆரம்பத்தில் பலர் வியந்து பார்த்து மதிப்பளித்து நடக்கக்கூடும். நாளடைவில் உண்மையைப்புரிந்து ஒதுங்கிச்சென்று விடுவர் என்பது புரிந்தும் அதையே செய்யத்தூண்டியது செங்கனின் மனம்.
செங்கனுக்கு சிறுவயதிலிருந்தே விபரீத ஆசை என்பதை விட அதீத ஆசை. யாரையும் விட உயர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது.
பள்ளிப்பருவத்தில் கூட தன்னால் நன்றாக மற்றவர்களைப்போல படிக்க முடியாவிட்டாலும், படிக்க முடியாததை மறைக்க, தன்னை யாரும் பலவீனமாக நினைப்பதைத்தடுக்க வாரம் முழுவதும் தனது தாய் தனக்கு மிட்டாய் வாங்க கொடுக்கும் காசை சேமித்து வைத்து, வார கடைசி நாளில் அக்காசில் மிட்டாய் வாங்கி தான் சாப்பிடாமல் அனைவருக்கும் கொடுத்து நல்ல பேர் எடுக்கப்பார்ப்பான்.
வெள்ளிக்கிழமை மிட்டாய் கிடைக்கும் என்பதால் உடன் படிப்பவர்கள் செங்கனுடன் நன்றாகவே மற்ற நாட்களிலும் பழகுவர். அவனை பலவீனமாகப்பேசமாட்டார்கள்.
பள்ளி மேற்படிப்பிலும் தேர்ச்சியில் கடைசி மாணவனாக வந்தாலும் ஆடம்பரத்தில் முதலாவதாக இருந்தான். இந்த நிலையில் தந்தை இதய நோயால் மாரடைப்பில் காலமாக நேர தாய் ‘படிக்கப்போக வேண்டாம், தொழிலைக்கற்று நிறுவனத்தை நடத்து’ என கூற, மிகுந்த குழப்பமடைந்தான்.
கல்லூரி வரை படிக்கச்சென்றவன் பேருக்கு படித்தானே தவிர, ஆடம்பரமாக ஆடைகளையணிந்து பெரிய செல்வந்தனாக தன்னைக்காட்டிக்கொண்டான்.
விலையுயர்ந்த பழைய காரை வாங்கி புதிய காரைப்போல மாற்றி வலம் வருவதில் கில்லாடியாக இருந்தான். படிப்பில் பல அரியர்ஸ் வைத்தவன் கல்லூரி காலம் முடிந்ததும் குடும்ப மில் தொழிலை விரிவாக்கம் செய்யும் பொருட்டு கடனின் நவீன இயந்திரங்களை வாங்கி இயக்கி மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் எனக்காட்டி உறவுகளை வியக்க வைத்தான். சொத்து மதிப்பில் தொன்னூறு சதவீதம் கடன் வாங்கினான்.
இவனது செயலைக்கண்டு ஊரின் பெரிய செல்வந்தர் தனது ஒரே பெண்ணை மணமுடித்துக்கொடுக்க, தான் எதிர்பார்த்தது நிறைவேறிய நிலையில் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினான்.
தனது வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அதில் சென்று இறங்கினான். அதை தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒளிபரப்பச்செய்து தன்னை அறியாதவர்களையும் வியக்க வைத்தான்.
மருமகனை நம்பி மாமனார் பரமசிவம் தனது தொழிலை முழுமையாக ஒப்படைக்க, செங்கனின் ஆட்டம் மிகவும் அதிகமானது. அந்த நிறுவனத்தின் மீதும் கடன் வாங்கி தனது பெயரில் தொழில் அமைத்துக்கொண்டு மாமனார் நிறுவனத்தை கடன் தவணைகளை முறையாகக்கட்டாமல் கடனில் மூழ்கடித்து ஜப்தி நிலைக்கு கொண்டு வந்து நிறுவனத்தை விற்று கடன் கட்ட வைத்த போது தான் இவன் தொழில் திறமையற்றவன். போலித்தனமானவன் என்பதை மனைவி ரம்யாவும் அவளது குடும்பத்தினரும் புரிந்ததால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு தனது தந்தை சொத்துக்களை கடனில் மூழ்கடித்து விரையம் செய்ய வைத்ததற்கு பதிலாக பாக்கி இருக்கும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என கேட்டிருந்தாள். வீண் வேசத்தால் வாழ்வே வீண் போனது என நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.
தாய் வசந்தி தனது எதிர்காலம் பற்றி டைம் டிராவல் போல் கற்பனையாக ‘இப்படி நீ போனால் எப்படி இருக்கும்? தற்கொலைல தான் முடியும்’ என்பதை ஒரு கதையைப்போல் சொல்லி முடித்த போது, தனது வாழ்க்கையே ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது செங்கனுக்கு.
“இப்படியெல்லாம் நடக்கும்கிறே….?” என சந்தேகத்துடன் தாயைப்பார்த்துக்கேட்டான்.
“நூத்துக்கு நூறு நடக்கும். உன்ன மாதிரி பேராசை பேய் புடிச்ச பசங்க எத்தனை பேர நானும் பார்த்திருக்கறேன். பேராசை எப்பவுமே பெரும் நஷ்டத்துல தான் முடியும். காலேஜ்ல போயி நாலு வருசத்த வீணடிக்காம இருக்கற மில்லுல நீயும் ஆளுங்களோட ஆளா வேலை செஞ்சிட்டு, வசதி இல்லீன்னாலும் வசியமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணீட்டு வாழப்பாரு. ஆடம்பரம் எப்பவுமே ஆபத்து தான். புடிக்காத படிப்பு பின்னால ஓடறத விட புடிச்ச தொழிலைப்புடி. எது நமக்கு வருமோ அதச்செஞ்சாத்தான் வாழ்க்கை வண்டி ஓடும். முப்பது வரைக்கும் படிச்சுட்டு முழுசாக்கெட்டவனையும் பார்த்திருக்கறேன். அளவா படிச்சுட்டு அமோகமா வாழறவனையும் பார்த்திருக்கறேன். அதுக்காக படிக்கிறது தப்புன்னு நாஞ்சொல்ல வரலே. உனக்கு படிப்பு வரலே. புடிக்காமப்படிக்காதேன்னு சொன்னேன்…” என்றாள்.
‘இப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் எப்படி நடக்கும்?’ என்பதை கண் முன்னால் நடப்பது போலவே கல்யாணம் முதல் விவாகரத்து வரை கற்பனையோடு கூறிய அறிவுரையை ஏற்று குழப்பம் நீங்கியவனாய் பேராசையை மனதிலிருந்து தூக்கிப்போட்டு விட்டு தனது தொழிற்ச்சாலைக்குள்ளேயே முதலாளியாக இல்லாமல் ஒரு தொழிலாளியாக நுழைந்தான் செங்கன்!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |