கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 860 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் புண்ணைக் கீறிப் பிளந்து புதுமையாகப் படைத்துக் காட்டும் புரட்சிக் காவியம்! சாணத் தவறாதீர்!” என்னும் முழக்க வரிகள் கொண்ட விளம்பரங்கள், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் அலறித் தொங்கிக் கொண்டிருந்ததுடன், அவை என் மண்டைக்குள்ளும் புகுந்து பெருமூளையைக் கனக்க வைத்துக்கொண்டிருந்தன.

“புண்ணை அப்படியே பிளந்து காட்டினாலும் சரி, புனுகு தடவிக் காட்டினாலும் சரி; அந்த அறுவை சிகிச் சையை ஒரு நோட்டமிட்டுவிட்டுத்தான் வருவோமே’ என்னும் எண்ணத்தில் விக்டோரியா அரங்கை நோக்கி நடை போட்டேன்.

அரங்கின்வெளியில் கூட்டம் அதிகம் இல்லை. நாடகம் ‘ஒரு மாதிரியாக’ இருந்தால் நழுவிச் செல்வதற்கு வசதி யாக ‘எஸ்’ வரிசையில் ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தேன். நாடகம் தொடங்குவதற்கு முக்கால் மணிநேரம் இருந்தது. அதை எப்படிக் கொல்வது?

அரங்க வாயிலைவிட்டு வெளியே வந்தபோது, ராஃபிள்ஸ் சிலை எதிரே நின்றது. கைகளைக் கட்டிக் கொண்டு கம்பீரமாக நின்ற ராஃபிள்ஸ், “என் சாதனையைப்போல் நீ ஏதாவது செய்திருக்கிறாயா?” என்று என்னை நோக்கிக் கேட்பது போலிருந்தது.

எனக்குப் பத்து வயது இருக்கும்போது என் கோலிக் குண்டை எடுத்துக்கொண்டு கொடுக்கமறுத்த ஆறுவயதுச் சிறுவன் ஒருவனை விரட்டுவிரட்டென்று விரட்டியது தான் நான் செய்த ஒரே சாதனை. ஆனால் இதை எப்படி ராஃபிள்ஸிடம் சொல்லிக் கொண்டிருப்பது?

‘முக்கால் மணி நேரத்தை எப்படியாவது கொன்றே ‘தீர்க்கவேண்டும்’ என்னும் முடிவை மனத்தினுள்ளே முடிந்து போட்டுவிட்டு, ‘எலிஸபெத் வாக்’கில் ‘காற்று வாங்க’ வந்திருந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக ஆண்டர்ஸன் பாலச் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து மறுமுனையில் தலை நீட்டியபோதுதான் அவரைப் பார்க்க நேர்ந்தது.

ஏதேதோ காரணங்களுக்காக ‘எலிஸபெத் வாக்’குக்கு வருவோருக்கு வசதியாகப் போடப்பட்டிருந்த ஒரு கல் இருக்கையில் உட்கார்ந்திருந்த அவரை முன்பு எங்கேயோ பார்த்தது போலிருந்தது. பத்துப் பதினைந்து ஆண்டு களாவது ஆகியிருக்க வேண்டும். ஐம்பதுகளுக்குள் இருக்க வேண்டிய வயது அறுபதுகளின் பிற்பகுதியைத் தொட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது சூம்பிப்போன அவர் உடல் தோற்றம். ‘அவர் தானா?… அவருக்கு ஒரு கால் இல்லையே…’

அவர் முழுக்கால்சட்டை அணிந்திருந்ததால் தொலை விலிருந்து பார்த்தபோது கால்களைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. கல் இருக்கையின் விளிம்பில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஊன்றுகோல்கள், அவர் தான் என்பதை உறுதிப்படுத்தின.

‘அப்படியென்றால் அவர் இந்த இடத்திற்குத் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறாரா? இந்தப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறிப்போய் விட்டார்?’ என்று அவர் நிலைக்காக இரங்கினேன்.

நைந்து வறண்டுபோன கடல்பாசியைப் போன்ற அவரது பரட்டைத் தலை முடி, அசுர வேகத்தில் வீசிய ஊதல் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. கசங்கிக் காவியேறிய சட்டைக்குள் அடைக்கலம் கொண்டிருந்த உடல், வெறும் எலும்புக்கூடு தான் என்பதை என்னால் உணர முடிந்தது.

“என்னை நினைவிருக்கா?…” என்று நான் கேட்டதும், எவ்வித உணர்வுமின்றி மிகவும் சாவதானமாக என்னை ஏறிட்டு நோக்கிய அவர் முகம் பின்னர் கடலையே வெறித்துப் பார்க்கத் தொடங்கிற்று.

“நான் தான்…கோபால்…உங்க வீட்டுக்குப் பக்கத்துலே குடியிருந்தவன்…” என்று கூறிவிட்டு, ‘ஏதாவது பதில் வருமா’ என்று அவர் முகத்தை உற்றுநோக்கினேன்.

கல் இருக்கையின் விளிம்பில் சாய்த்துவைக்கப்பட் டிருந்த ஊன்றுகோல்கள் கீழே விழுந்துவிடக்கூடாது என்னும் அக்கறையில் மிகவும் கவனமாக அவற்றைத் தம் சக்தியற்ற கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு மறுபடியும் என்னை நோக்கினார். குழி விழுந்த அந்தக் கண்கள், ‘எட்கார் ஆலன் போ’ வின் ‘தி டெல்டேல் ஹார்ட்’ என்னும் கதையில் வருபவனின் அந்த ஒரு கண்ணையே நினைவூட்டின.

“உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…எனக்கு இப்ப இந்தக் கண்பார்வை அவ்வளவு சரியாத் தெரியிறதில்லே…எல்லாமே மங்கி வர்றமாதிரி இருக்கு…” என்று அவர் கூறியபோது, என் உள்ளம் நைந்தது.

“நீங்க இங்கே இன்னம் தொடர்ந்து வர்றீங்கபோலிருக்கு…”

“ஆமா!… என்ன செய்யிறது.. எத்தனை வருஷம் ஆனா என்ன?..அதை எப்படி என்னாலே மறக்க முடியும்? இந்த ஒரு காலோட இந்தக் கட்டைகளை ஊணிக்கிட்டு இங்கே வந்துக்கிட்டுத்தான் இருக்கேன். என் இன்னொரு

“கால் போயிட்டாலும், இந்தக் கைகளை ஊணிக்கிட்டு நகர்ந்து நகர்ந்து வருவேன். அடங்கி வர்ற இந்த இதயத் துடிப்பு நிற்கிறவரைக்கும் நான் இங்கே வந்துக்கிட்டுத் தான் இருப்பேன் … இந்த எடத்துலே அவுங்களைக் கடைசியா உயிரோட பார்த்து மகிழ்ந்ததை நான் எப்படி மறப்பேன்?…”

உள்ளம் நைந்துபோய் வேதனை தோய்ந்த குரலில் அவர் பேசினார். ‘நடந்து முடிந்துவிட்ட அந்தச் சம்ப வத்தை மீண்டும் நினைவுப்படுத்தி ஏன் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினோம்’ என்று என் மனம் குறு குறுத்தது.

சந்தானமும் மரகதமும் திருமணம் செய்துகொண்டு எங்கள் வீட்டுப் பக்கம் குடி வந்தபோது, “என்ன ரெண்டு பேருக்குமே வயசு கொஞ்சம்கூட இருக்கும்போலி ருக்கே!…” என்னும் கிசுகிசுப்புப் பேச்சு அடிபடத் தொடங்கிற்று. மரகதம் முப்பதைத்தாண்டியிருக்க வேண் டும். சந்தானம் அதற்குமேல் ஓர் ஐந்தையாவது தாண்டியிருப்பார்.

“எல்லாம் எப்பப்ப நடக்கணுமுன்னு இருக்குதோ, அப்பப்பத்தான் நடக்கும்” என்று ஓர் அனுபவவாதி, ஊழின் வலியை வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் ஐந்தாண்டுகளாக அவர்களுக்குக் குழந்தை இல்லாமல் போகவே, அதே அனுபவவாதி “எல்லாம் நடக்கவேண்டிய வயசுலே நடக்கணும்’பா” என்று ஏட்டைத் திருப்பினார்.

ஒருநாள் சந்தானம் தொட்டில் வாங்கிக்கொண்டு வந்ததைப் பார்த்தபோது, அந்த அனுபவவாதி உட்பட பலர் தலைகளுக்கு மேலே ஆச்சரியக்குறிகள் குத்திட்டு நின்றன. அவர் தந்தையாகப் போவதை நிரூபித்துக் காட்டுவதற்கு அவர் வேறு என்ன சான்று கொடுக்க வேண்டும்? குழந்தை பிறந்ததுமே, அவர் ஐந்து வயது குழந்தைக்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாக வாங்கிவந்து குவித்துக்கொண்டிருந்தார். சிலருக்கு அதைப்பற்றியும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் போலிருந்தது:

“குழந்தை பிறக்கவும் ஐந்தாண்டுத் திட்டம்; குழந்தை வளர்றதுக்கும் ஐந்தாண்டுத் திட்டமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே… இந்த மாதிரி விளை யாட்டுச் சாமானெல்லாம் அப்புறம் கெடைக்குமோ கெடைக்காதோங்கிறதுக்காகத்தான் வாங்கினேன்” என்று அவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டாலும், ”வயசா கிக் குழந்தை பிறந்ததை மனசுலே வச்சிக்கிட்டுச் சொல் றாங்களோ” என்னும் குறையுணர்ச்சி தோன்றாமலும் இல்லை. அப்போதெல்லாம் “நாம நினைக்கிறபடியா எல்லாம் நடக்குது? விதியோட கை நீண்டதில்லையா? அது எழுதுறபடிதானே நடக்கும்” என்று குறையுணர்ச்சி மேலோங்காமல் அவர் தம்மைத்தாமே நிறைவு செய்து கொள்வதும் உண்டு

நினைவோட்டத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த் தேன். அவர் உதடுகள் இலேசாக முணுமுணுத்துக்கொண்டிருந்தன. பூவா மரம் என்று கருதப் பெற்ற மரம், பூவும் பிஞ்சுமாய்த் தழைத்துக் கனி கொடுக்கத் தொடங்கிய வேளையில், பெருவெள்ளம் அதன் ஆணி வேரையே பெயர்த்தெறிந்தது போல் செய்து விட்ட அயன் கணக்கை எண்ணி, அந்த இதயத்திற்குள் எத்தகைய உணர்ச்சியலைகள் மோதிக்கொண்டிருந்தன என்பதை என்னால் உணர முடியவில்லை. அந்தச் சம்பவம் ஏன் நடக்கவேண்டும்? அது நடக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

மகனுடைய முதலாவது பிறந்தநாளைப் பிறர் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்குக் கொண்டாட என் னென்னவோ ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண் டிருந்தார் சந்தானம்.

“பிறந்த நாளுக்கு எதுக்கு இவ்வளவு செலவு செய்யணும்?” என்று மரகதம் கேட்டபோது, அவளுக்கு எப்படி விளக்குவது என்பது அவருக்குச் சுலபமாகத் தோன்றவில்லை.

‘நான் ஆடம்பரத்துக்காக இதைச்செய்யலே. நமக்குக் கல்யாணம் நடந்ததே பெரிய விஷயம். அதுக்குப் பிறகு அஞ்சி வருஷம் கழிச்சி நம்ம பையன் பிறந்தது தெய்வச் செயல். இதெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்குமுன்னு நான் எதிர்பார்க்கலே இப்படிச் செய்யணுமுன்னு என் மனசு சொல்லுது அதனாலேதான் செய்யிறேன். அதோட இது முதல் பிறந்த நாள் இல்லையா?’ என்று அவர் கூறியபோது, மரகதத்தால் மறுத்துப் பேச முடியவில்லை .

“பிறந்த நாள் விழாவின் உச்சக் கட்டத்தைக் கடற் கரையில் தான் கழிக்க வேண்டும்” என்று எண்ணிய சந்தானம், தம் மனைவியையும் மகனையும் அன்று மாலை எலிசபெத் வாக் பக்கம் அழைத்துச் சென்றார்.

“அதோ பாரு கடல்…. அங்கே பாரு கப்பல்… அங்கே பார்த்தியா, அதுதான் அலை”என்று அவர் அந்தச் சிறுவனுக்குப் புரியாத பெரிய பெரிய விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு, ‘எது கடல், எது கப்பல், எது அலை’ என்று எப்படிப் புரியும்? பற்றற்ற துறவிபோல அவன் எல்லாவற்றையும் ஒரேவிதமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவையெல்லாம் அவனுக்குப் புரியாது என்பது அவருக்கும் தெரியும். இருந் தாலும் அவற்றையெல்லாம் அவனுக்குத் தம்மால் காட்ட முடிகிறது என்னும் மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது. அடியெடுத்து வைக்கக்கூட முடியாத அவன் கைகளைப் பிடித்து நடக்க வைத்தபோது, “இன்னைக்கே இவனுக்கு அஞ்சு வயசு ஆயிடக் கூடாதா?” என்று ஏங்கியது அவர் மனம், தம் மகனுடன் கடற்கரையில் நெடுநேரம் தங்கியிருக்க வேண்டும் என்னும் எண்ணமே அவரிடம் மேலோங்கியிருந்ததால், அவருக்கு வீடு திரும்பும் நினைவே இல்லாமல் போய்விட்டது.

“பையன் களைச்சிப் போயிட்டான். வீட்டுக்குப் போகலாமே…” என்று அவர் மனைவி கூறியதும் தான் அவருக்கு வீட்டு நினைவே வந்தது.

லிம் போ செங் நினைவுச் சின்னத்தைக் கடந்து கானட் டிரைவ் சாலையில் வந்து நின்று டேக்சிக்காகக் காத்து நின்றனர். ஓரிரு டேக்சிகள் காலியாகச் சென்று கொண்டிருந்த போதும், அவை அவருக்குப் ‘பழசு’ எனத் தோன்றியதால், ‘புதுசா’ வரட்டும் என்னும் எண்ணத் தில், எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். தம் மகனைப் புது டேக்சியில் வைத்து அழைத்துப்போக வேண்டும் என்பது அவர் எண்ணம்.

தொலைவில், அவருக்குப் பிடித்த ஒரு டேக்சி காலி யாக வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி ஏறிக்கொண்டதும், “புக்கிட் தீமா பத்து செம்பிலான்” என்றார். மரகதம், மகனை வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

டேக்சி, கானட் டிரைவிலிருந்து செயின்ட் ஆன்ட்ரூஸ் சாலையில் திரும்பி நகர மண்டபத்தின் வழியாக கோல்மன் ஸ்தீரிட்டுக்குள் வளைந்து வந்து கொண்டிருந்தபோது தான் அந்தக் குரூரத்தனமான சம்பவம் நடந்து விட்டது.

முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென்று நிற்கவே, வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு லாரி அந்த டேக்சியை இடித்து அதை உருத்தெரியாமல் நசுக்கி விட்டது. அந்த விபத்து சந்தானத்தின் மனைவியையும் அவர் மகனையும் பலி வாங்கிவிட்டது. அந்த டேக்சி ஓட்டியின் உயிரும் அங்கேயே போய்விட்டது. ஆனால் எவரும் நம்ப முடியாத வகையில் சந்தானம் உயிர் தப்பிவிட்டார். அவர் பெற்ற உயிருக்கு அவர் கொடுத்த விலை அவரது வலக்கால்.

மருத்துவமனையில் அவருக்கு நினைவு திரும்பிய போது, அவர் நடந்தவற்றையெல்லாம் நினைவுகூற முயன்றார். சில மணி நேரத்திற்குமுன் தம் இதயத் துடிப் பாக விளங்கிய தம் மனைவியும் மகனும் தம்மை விட்டுப் போய்விட்டனர் என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தம்மைச் சுற்றிலும் வெறுமை படர்ந்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது அவருக்கு.

‘அட தெய்வமே!…என்ன மாதிரி செய்திட்டே? என் ஒரு காலை எடுத்ததோட விட்டிருக்கக் கூடாதா? அந்தத் தாயையும் உலகமறியாப் பாலகனையும் கொன்று தான் திருப்தி அடையணுமா? அவனுக்கு இன்னைக்குப் பிறந்த நாளாச்சே…’பிறந்த நாள்’லே பொறுக்க முடியாத துன்பத் தைத் தந்துட்டியே… இன்பத்தைக் கொடுக்கிறது. போலக் கொடுத்து, வேரோட அறுத்துட்டியே.. கொஞ்சக் காலத் துக்காவது மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடாதா? அவுங்க ரெண்டு பேரோட ஏன் என் உயிரையும் எடுக் காது விட்டே? ரெண்டு பேரு சாவை நினைச்சி மூணாவது ஆளு துடிச்சிக்கிட்டு இருக்கணுமுன்னு இதைச் செய்தியா?” என்று அரற்றிக் கொண்டிருந்தார்.

ஊன்றுகோல் கட்டைகளின் துணையுடன் ஒரு காலோடு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த அவருக்கு உலகமே வெறுமையாகத் தோன்றியது. ஆனால் தம் மனைவியும் மகனும் தம்முடன் மகிழ்ச்சியாக இருந்த அந்தக் கடற்கரை மட்டும், அவர் நினைவை விட்டு அகல வில்லை. அன்றிலிருந்து அந்த இடத்திற்குச் செல்வதையும் அவர் விடவில்லை.

அவர் தம் ஊன்றுகோல்களை மெதுவாக எடுத்து இரண்டு கக்கங்களுக்கிடையிலும் வைத்து அந்தக் கல் இருக்கையைவிட்டு எழுந்தார்.

“நான்…வர்றேன்…”

அதற்கு மேல் அவர் எதுவும் பேசவில்லை . தலை குனிந்தவாறே அந்த ஊன்றுகோல்களைத் தரையில் அழுத்தமாக ஊன்றி ஊன்றி அவர் நடந்துகொண்டிருந்தார்.

அவர் சென்றதையே நான் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு என்னைச் சுற்றிலும் பார்த்தேன். எனக்கு அந்த இடமே வெறுமை சூழ்ந்து விட்டதைப் போன்றிருந்தது.

– சிங்கப்பூர் வானொலி, 1975, புதுமைதாசன் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்டு 1993, ஒக்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *