வித்துக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 1,155 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“போஸ்ட்!'” 

அம்புஜம் எழுந்து மேலாக்கை அள்ளிப் போட்டுக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். 

கொழுகொழுவென்று பசுப்போல் உடம்பு, வயிறு எல்லாம் லொங்கு லொங்கு’ என்று ஆடின. 

தாளைத் தள்ளி கதவைத் திறப்பதற்குள் தபால்காரன் மூன்றாம் முறையும் கூவிவிட்டான். அவள் கையில் ஒரு கவரைத் திணித்துவிட்டுச் சென்றான். அவனுக்குச் சற்றுச் சிடுசிடுப்புத்தான். 

கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு பளாங்கு – தபால் முத்திரையைக் கணிக்க முயன்று தோற்றுப் போய், திறந்து பிரித்தாள். 

Dear Parent, 

இந்தக் கடிதம் கண்ட சுருக்கில் பள்ளிக்குத் தயவு செய்து வரவும். உங்கள் பையன் ஸ்ரீதரைப் பற்றிப் பேச வேண்டும். 

கிறுக்கல்- 
தலைமை உபாத்யாயினி. 

இது இரண்டாவது முறை. 

இதற்கு முன், பக்கத்து ஸீட் பெண்ணின் பின்னலை அவளுடைய கத்திரிக்கோலைக் கொண்டே கத்தரித்துவிட் டான். அம்புஜத்துக்குத் திகிலெடுத்தது. இந்த சமயம் என்னவோ? 

வாசலிலிருந்தே கண்ணோட்டத்தில் கூடத்தில் சுவர்க் கடியாரம் மணி இரண்டு காட்டிற்று. 

உள்ளே வந்தாள். நரேஷ், கைகால்களை விரித்தபடி வாய் மொக்கு லேசாய்த் திறக்க, அரைக் கண்ணில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவளுக்குப் புன்னகை அரும்பிற்று. குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நரேஷ் தூங்கும் நேரம், மாருதியும் ஸ்ரீதரும் பள்ளிக்குப் போயி ருக்கும் நேரம்தான் அவளுக்கு ஓய்வு நேரம். நாள் பூரா உழைத்துவிட்டுப் பகலில் தூக்கத்தைத் திருடும் நேரம் ஆனால் இன்று இனிமேல் வழியில்லை. பாதியில் கலைந்த தால் உடம்பு முறித்துப் போட்டாற்போல் வலித்தது. 

இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி, பள்ளிக்கூடத் துக்குப் போய், திரும்பியும் ஆகணும், டிபன் பண்ண வெங்கட்’கு இது போன்ற கம்பன்ஸுக்கெல்லாம் நேரம்.. கிடையாது தினமே வீடு திரும்ப இரவு எட்டு. அப்புறம், டிபன். அப்புறம் 9-30, பத்துமணிக்குச் சாப்பாடு. அப்புறம் பற்றை ஒழித்துப் போட்டுவிட்டு, படுக்கையில் அவள் விழுகையில் ஸ் – பதினொண்ணு! 

“பால்!” 

அட, விடிஞ்சே போச்சே! இப்போத்தான் கண் மூடி னாற்போல் இருந்தது. 

இந்த நியதி இப்படியே படிஞ்சு போச்சு,இது மாறினால் கூட சரிப்படாது எனுமளவுக்கு. 

அம்புஜம் உட்கார்ந்து தலைவாரிக்கொள்ள ஆரம்பித் தாள். கூந்தல் நீர்வீழ்ச்சி போல் முதுகில் இறங்கி, தரையில் புரண்டது. அவள் பாராட்டாத பலங்களில் அவள் கூந்தல் ஒன்று அவள் எவ்வளவோ விஷயங்கள் பாராட்டுவ தில்லை. தனக்கு ஒரு பெரும் அழகு உண்டு என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அதைப் பேணுவ தில்லை. அவள் பி.ஏ.லிட்… ஃபஸ்ட் க்ளாஸ். ஆனால்பிடிவாதமாகத் தமிழிலேயேதான் பேசுவாள். கலியாணத் துக்கு முன் ஏ.ஜி. ஆபீஸில் உத்யோகம் பார்த்துக்கொண் டிருந்தாள். இந்தக் காலத்தில் பெண் பார்க்கும் உத்யோ கமும் அவள் கலியாணச் சீரில் ஒன்றாச்சே! 

ஆனால், திருமணம் ஆனதும், வெங்கட் அவள் வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டான். 

“புருஷன் கொண்டு வந்து போடுவதில் குடித்தனம் பண்ணி, வீட்டை ஒழுங்காக வைத்துக்கொண்டால் போதும்.” 

“நீங்கள் ஆபீஸர் ஆனாலும், நான் மாஸம் ரூ.600 வீட்டுக்குக் கொண்டு வந்தால், இந்த விலைவாசி நாளில் கசக்குமா? எனக்கு ஒரு பெளடர், ஸ்னோ, விகோ- டர்மரிக்குக்கு உங்களிடம் கை நீட்டிக்கொண்டு நிற்கணுமா?” என்றெல்லாம் அம்புஜம் வாதாடவில்லை. 

“நீங்கள் சொல்றபடியே.” 

அதிலெல்லாம் அவளுக்கு ஆசையில்லை. அவள் முகத்தில் ஒரு மாசு மறு கிடையாது. கில்ட் அணியமாட் டாள். இருந்தால் அசல்,அயன். கிடைக்காவிட்டால் போலி வேண்டாம். மொழு மொழுவென்று வெறுங்கைகளே அவளுக்கு அழகாயிருக்கும். 

வெங்கட் லக்கி ஃபெலோ. 

குழந்தைகள் சுருக்கவே வந்துவிட்டன 

மாருதி. (அவன் பெயர் அல்ல.) 

ஸிஸரீயன் கேஸ். 

குறை ப்ரசவம். 

இன்கயூபேட்டர் பேபி. இங்க் ஃபில்லர் மூலம் உணவு ஏகப்பட்ட மாத்திரைகள், சத்துக்கள் தாய் செத்துப் பிழைத்தாள். 

அப்புறம் இரண்டு அபார்ஷன்கள். 

பிறகு ஸ்ரீதர். 

இன்க்யூபேட்டர் இங்க் ஃபில்லர் ஃபீடிங் மாத்திரை. ஊசி, இத்யாதி. 

பெரிய உசிர் ஊசலாடுகையில் சின்னதை என்ன கவனிக்க முடியும்? 

டாக்டர், வெங்கிட்டுவை எச்சரித்துவிட்டார்: “மிஸ்டர் உங்கள் மனைவி இனிக் கருத்தரிக்க லாயக்கில்லை. அப்படி நேர்ந்தால், அவள் உயிருக்கே ஆபத்து. அப்புறம் நாங்கள் பொறுப்பு இல்லை.’ 

நாலு வருடங்களுக்குப்பின் அப்படித்தான் நேர்ந்தது. ‘பெண்ணுக்கு ஆசைப்பட்டேன். பிள்ளையா? சரி, பெரு மாள் சித்தம் அப்படியானால் நாம் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒண்ணும் செய்யவேண்டாம். கட்டாயமாகக் கருத் தடை ஆபரேஷன் செய்துகொண்டே ஆகவேண்டும். உங்களுடைய பரீக்ஷைகள் இத்தோடு போதும்.) 

நரேஷ், முழு மாதம் முறையாகத் தாங்கி நார்மல் பிரசவம் கடைசியில் ஆயுதப்ரயோகம், அவ்வளவுதான். 

பிரஹஸ்பதிகள் (அல்லது தன்வந்தரிகளா?) பொய்த்துப் போனார்கள். குழந்தைகள், தெய்வம் தந்த வரங்கள். பெற்றோர்களின் நல்லம்சங்கள். ஒவ்வொருத்தனிடமும் விதம் விதமாகக்கூடி, மூன்றுபேரும் மூன்று சிவகுமாரர்கள். 

பாட்டியிருந்தால், வியாழனுக்கு வியாழன் மாலை மூவரையும் உட்கார்த்தி வைத்து ‘நாட்டுப்பொண்ணா நீயும் உட்கார்’ கொட்டாங்கச்சியை மூணு தரம் சுத்தி குடு குடுவென்று ஓடி மிளகாயை அடுப்பில் கொட்டுவாள். ஆனால் இங்கே காஸ் அடுப்பு. பாட்டியும் இல்லை. அம்புஜத் தால் முடிந்தது, மாலை விளக்கையேற்றினதும், உதிரி விபூதியை மூவருக்கும் இடுவாள். 

ஆனால் அவளுக்குத்தான் இந்த வயதிலேயே உடம்பு ஏகமாய்த் தடித்துவிட்டது. இரண்டு ஸிஸரீயன். கருத் தடைக்குப் பின் வேறு எப்படியிருக்கும்? முன், பின் எல்லாம் எக்கண்டமாய்… தளர்ந்து சரிந்துவிட்டது. 

அப்புறம் இந்தக் குழந்தைகள் – ஓ மை காட்! 

மாருதி – எதிர்வீட்டு ராயர் மாமா வெச்ச பேர் அப் படியே தொற்றிக்கொண்டுவிட்டது. சஞ்சீவி மலையைத் தாங்கிக்கொண்டு கனத்தில் பறந்து வரும் ஆஞ்சநேயர் போல் அவனிடம் எப்பவும் ஒரு ஆக்ரோஷம் இருந்தது. நடையே கிடையாது, பாய்ச்சல்தான். காலடியில் எது பட்டாலும் நரேஷ் உள்பட, உதைத்துத் தள்ள வேண்டியது பள்ளிக்கூடத்திலிருந்து உள்ளே நுழைந்ததும், தொட்டி முற்றத்தைப் பார்த்து வீசும் டிபன் டப்பா அங்கே விழுந்தால் போச்சு. எப்படியேனும் குறி பிசகி, பாதி அந்த ரத்தில்… மூடி திறந்துவிட்டால் உள்ளேயிருக்கும் மிச்சம் மீதாரி (கண்டிப்பாய் இருக்கும்) சமயலறை பூரா சிதறி ஒரே அலமாரிதான். வேலைக்காரி, வண்ணாத்தி, ரிக்ஷாக் காரன், அவன் நிலைத்து நாலு மாதம் நிற்பதில்லை. அவங்க வீட்டிலே உடை மாத்தர மாதிரின்னா, ஆள் மாத்தறாங்க!” அதுவே ஒரு ஜோக்’ எல்லோரோடேயும் குஸ்தி. அண்டை வீட்டுப் பையன்களை வலுச்சண்டை சண்டையில்லாமல் இருந்தாலே அவனுக்குச் சண்டைக்கு ஒரு காரணமாய் அமையும். (மரியாதையா என்னோ விளையாட வரையா இல்லே? அவ்வளவுதான், சண்டை) வெங்கட் ஸ்கூட்டரில் ஆபிசுக்குக் கிளம்பும் சமயத்தில் திடீ ரென்று காற்று இறங்கியிருக்கும், அல்லது ஏதேனும் ஒரு முக்யமான பாகத்தைப் பிடுங்கிவிட்டிருக்கும். அடி, உதை- சிணுங்கினால்தானே! 

கொடுப்பதுபோலவே, வெளியிலிருந்து வாங்கிக்  கொண்டும் வருவான். நெற்றிப் பொட்டில் ரத்தம் ஒழுகும். அதையே அவன் உணர்ந்தானோ இல்லையோ? 

அப்புறம் அந்த உடம்பில் அசாத்திய பலம். மிருக பலம். ஆசையோடு ஓடிவந்து கட்டிக்கொண்டாலும் சரி. ஆத்திரத்தில் தலையால் வயிற்றில் முட்டினாலும் சரி. அம்புஜத்துக்குக் குலை நடுங்கும். காரே ரயிலோ மோதி னால் இப்படித்தானோ? 

மூத்தது பற்றி இவ்வளவு சொன்னபின் ஸ்ரீதரைப் பற்றித் தனி ஆவர்த்தனம் தேவையில்லை. அத்தனையும் தவிர, ஒன்றிரண்டு, அம்சங்கள் கூடயிருக்குமே தவிர குறையாது. 

இவர்களின் பயங்கர சுறுசுறுப்பு தாங்க முடியாமல் டாக்டரிடம் யோசனை கேட்கும் அளவுக்குக் கொண்டு போய்விட்டது. ‘வெங்கட்’கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. 

டாக்டர் புன்னகை புரிந்தவர், மாதத்துக்கு முன்னா லேயே பிறந்துவிட்ட கேஸ்களிலேயே இது ஒரு பிராப்ளம். ஹைபர் சென்சிடிவிடி. டோன்ட் ஒர்ரி. நாளாவட்டத்தில் சரியாய்ப் போய்விடும். 

“நாளாவட்டத்தில் என்றால் எப்போ டாக்டர்?” அம்புஜத்துக்குக் கண் துளும்பிற்று. தொட்டதற்கெல் லாம் கண்ணீர் உகுக்கும் ஆசாமி அல்லள் அவள். 

டாக்டர் கையை விரித்தார். “என்னைக் கேட்டால்? நாளாவட்டத்தில் என்றால் நாளாவட்டத்தில்தான் – வேணுமானால் ‘ட்ராங்குலைசர் ஷாட் ஒண்ணு கொடுக்கலாம்.” 

“கொடுங்களேன் டாக்டர்!” 

“நோ. ஏன் கொடுக்கணும்? பையன்களிடம் பொறுமை யாயிருங்கள். பிரியமாயிருங்கள். பெற்றவர்களுக்கு அதை விட என்ன வேலை!” 

நரேஷ் குறைப் பிரசவத்தில் பிறக்காவிட்டாலும் முன்னதுகளின் சகவாசம், அவனும் ஹைப்பர். 

இந்த மூவரிடையிலேயே வீடு நித்ய யுத்தகளமாகி விட்டது. 

“டேய், இன்னிக்கு நீ கொலைதான்.” 

“தொட்டுப் பாரேன், உன்னை ஒழிச்சுக் கட்டிடுவேன்.” 

ஒருத்தன் கையில் கிரிக்கட் மட்டை. மற்றவன் கையில் சாக்கடை குத்தும் இரும்புக் கழி. 

இவர்கள் ஆடும் சிலம்பத்தில், நடுவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நரேஷ் மண்டையில் பட்டு, முளைத்து விடும். வீல் – 

அம்புஜம் அமைதியாகப் படித்துக்கொண்டிருப்பாள். 

“அத்திம்பேரே இதுவரை குறைஞ்சது இருபது தடவை படித்திருப்பேன். இந்த விஹார் ஆஃப் வேஃப்பீல்ட், அப்புறம் டேல் ஆஃப் டு சிடிஸ்- இது ரெண்டும் அலுக்கவே மாட்டேன்கிறதே! ஏன் அப்படி? 

“அதைவிட ஆச்சரியம். இந்தப் பூகம்பத்தில் நீ எப்படிப் படிக்கிறாய்?” 

புன்னகை புரிந்தாள். “நீங்களே தான் பார்த்துண் டிருக்கேளே! நான் என்ன பண்ண முடியறது? இவர் களாலேயே, ஒரு சினிமா, டிராமா,பொழுதுபோக்கு, சுச்சேரி – சங்கீதம் என்றால் எனக்கு உயிர்- எல்லாத்தையும் மறந்தாச்சு. முகமாற்றமாய் பக்கத்து வீட்டுக்குப் போய் ரெண்டு நிமிஷம் பேசலாமா என்கிற ஆசையோடு சரி. அதற்குள் வீடு என்ன ஆகிறதோ என்று அடிவயிற்றில் நெருப்பு.காஸைப் பிடுங்கிவிட்டார்களோ? எந்த பிளக்கில் கை வைக்கிறான்களோ? அண்டை வீட்டுக்காரர்கள் இங்கே வரமாட்டேன்கிறார்கள். என் பிறந்த வீட்டார் அஞ்சு கிறார்கள். அம்மாவுக்கு ஹை பிளட்பிரஷர் – தெருவிலேயே இவர்களைக் கண்டால் ஒரு அச்சம். ‘பாவம் அப்புஜ மாமி அவ்வளவு நல்லவள்!”” என்று அவர்கள் அங்கலாய்க்கை யிலேயே எனக்கு எரிச்சல் வரது.” 

ஆழ்ந்த யோசனையுடன் தனக்கே “பையன்கள் துஷ் டைகள் என்பதால் நம் கசப்பை அவர்களிடம் காட்டலாமா? எல்லாரும் கரித்தும் பெத்தவாளும் கரித்தால் அதுகள் என்னத்துக்குத்தான் ஆறது? அதுகளுக்கும் நாம் நல்ல ஸ்டார்ட் கொடுக்கணும்.” 

மாருதியையும் ஸ்ரீதரையும் சேர்த்த பள்ளிக்கூடம் வட்டாரத்திலேயே, ஏன் பட்டினத்திலேயே பேர் போனது. இடம் கிடைத்ததே பெரிசு. சம்பளம் ரிக்ஷா, அவ்வப்போது அங்கே எக்ஸ்கர்ஷன், இங்கே கேம்ப், இந்த சேரிட்டி அந்த டொனேஷன் என்று சராசரி இருவருக்கும் சேர்த்து மாதம் ஒரு பச்சை நோட்டு எகிறிற்று. இதனாலேயே சொல் இடி வேறு: “அவளுக்கென்னடி…” 

பஸ்ஸை விட்டு இறங்கினதும் பையனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்தாள். பையனுக்கு இவ்வளவு எலும்புக்கனமா? அவனை அதிகமாகத் தூக்கின தில்லை. பள்ளியை அடைந்து மாடியேறி எச்.எம் அறை யைச் சேர்வதற்குள் மூச்சு சிலிர்த்து மூச்சு சிலிர்த்து முகம் முத்திட்டு, நெற்றியில் ரண்டு பிரிகலைந்து அலைய ஆரம்பித்து விட்டன. 

“ஆ! தட்பாய்-கம் இன்- இல்லை. என்னோடு வாங்க-ஐ வில் ஷோ யு ஃபர்ஸ்ட் எச்.எம். வாட்டசாட்டம். நடையும் ராணுவ ஆணவ நடை. நரேஷைத் தூக்கிக்கொண்டு பாதி ஓட்டம். பாதி நடையாகப் பின்தொடர்வதே பெரும் பாடாயிருந்தது. 

நேரே எச்.எம்.குழந்தைகளின் பாத்ரூமுக்குச் சென்று வாஷ்பேஸினைக் காட்டினார்: மின்னல்போல் ஒரு விரிசல் ஓடிற்று. 

“உங்கள் பையன் கல் எங்கிருந்து எடுத்து வந்தான்? எப்படி உடைக்க முடிஞ்சது? இன்னும் திகைப்பாயிருக்கு. அவன்தான்; சந்தேகமே வேணாம். கையும் பிடியுமா அகப் பட்டுக்கிட்டான். நேற்று நடந்தது. உங்களிடம் ஏதேனும் சொன்னானா? 

அம்புஜம் இல்லையென்று தலையை ஆட்டினாள். 

“அவன் எங்கே சொல்லப் போறான்? அவனுக்கு முக்ய மாக்கூடப் பட்டிருக்காது. துளிக்கூட பயமே கிடையாது. 

எச்.எம்.ஏதோ சொல்லிக்கொண்டே முன் நடக்க அம்புஜம் இடுப்பில் நரேஷுடன் பின்தொடர்ந்தாள். அவள் மனம் தீவிரமாக ஒரு மனக்கணக்கை முடைந்து கொண்டிருந்தது. 

குறைஞ்சது 350 இருக்கும். அவரைச் செக் வெட்டச் சொன்னால், கணக்கில் இடங்கொடுக்கிறதோ இல்லையோ? முதலில் சொல்லியாகணும். இன்னிக்குக் குழந்தை பலி  தான். பயம்மாயிருக்கு.ஒரு வளையலை வெச்சால் ஒரு போதுமா? மோதிரமும் வெக்கணுமா? அதுக்கும் எனக்குப் பழக்கமில்லையே! அவர்தானே செய்யணும்! அவரிடம் எதையும் சொல்லாமல் இதுவரை இருந்ததில்லை. சொல் லாமல் இருக்கமாட்டேன். ஆனால் எப்படி? 

எச்.எம். தன் அறையை அடைந்ததும் ஸ்ரீதரை அழைத்து வர ப்யூனை அனுப்பினாள். 

“பாய்ஸ் வில் பி பாய்ஸ். வி. நோ. அவங்களுக்கே ஒரு நாசபுத்தி உண்டு. அதுவும் தெரியும். முக்கால்வாசி பெற் றோர்கள் வீட்டில் தொந்தரவு பொறுக்காமல் எங்கேச் சானும் அடைச்சு வெக்கத்தான் பையன்களைப் பள்ளிக்கு அனுப்புறாங்க. இதுக்காகவே நாங்கள் எங்கள் ரேட், டிஸிப்ளின் நிபந்தனைகள் எல்லாம் ஸ்டிரிக்டா வெச்சிருக் கோம். பசங்களின் சேட்டைக்கும் நாங்கள் ஒரு மார்ஜின் தர்ரோம். ஆனால் அப்படியும் அதையும் மீறி – ஆ! பையன் இதோ வந்திருக்கான்!” 

எதிர்பாராமல் அம்மாவைப் பார்த்ததும் ஸ்ரீதர் முகத்தில் ஆச்சரியம், சந்தோஷம், அப்புறம் ஒரு பயம்- இந்தக் கலவையில் உருவாய ஒரு ப்ரக்ஞை எல்லாம் சேர்ந்து முகம் தனி அழகிட்டது. அம்புஜத்துக்கு அவனை அப்படியே அணைத்துக்கொள்ள மனம் தவித்தது. துஷ்டை துஷ்டை யென்று கரிக்கிறோமே. குழந்தைகள் எவ்வளவு நிஷ்களங்க மானவர்கள்! பெற்றோர்கள் நாம் நம் சுயநலத்தில் திடீ ரென்று அவர்களைப் பிறவியில் தூக்கியெறிந்துவிட்டு, அதுகள் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் மேலே கல்லை விட்டும் எறிகிறோம். கொடுமை நாமா? அவர்களா? 

எச்.எம். என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்? 

“எங்களுடைய சட்ட விதிப்படி, இந்த சொத்தழிப் புக்கும் உங்கள் பையனை வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம் -” 

அம்புஜத்துக்கு வயிற்றைக் கலக்கிற்று. பிள்ளையாரே? உண்டியிலே கால்ரூபா போடறேன் – 

“ஆனால் அதில் ஒரு சிக்கல்-” 

பிள்ளையார் சக்தி வாய்ந்தவர்தான். 

“மூணாவது வகுப்புலே ஒரு பையன் இருக்கான். உங்கள் பையனை இப்பிடியே விட்டுவெச்சா, இவனுடைய விசுவரூபம் எப்படியிருக்கும் அதுதான் அவன். அவனை கண்டால் க்ளாஸே நடுங்குது. ஸ்டூடண்ட்ஸ், டீச்சர் எல்லா ரையும் ஒரு டென்ஷன்லேயே வெச்சு அந்த டென்ஷன் நடு வுலேதான் இருக்கறதுதான் அவனுக்குச் சரியாயிருக்கு. வேறு மாதிரியாவே அவனால் இருக்க முடியல்லே. அவனை என்ன செய்யறதுன்னு தெரியாமலே முழிச்சுக்கிட்டுருக்கோம். முதல்லே அவன் மேலே ஒழுங்குமுறையா ஆக்ஷன் எடுத் துட்டுன்னா உங்கள் பையன்மேல் நடவடிக்கை டிசைட் பண்ண முடியும்? ஆமாம் இந்தப் பெற்றோர்கள் எல்லாம் என்ன செய்யறாங்க? பெத்துட்டு, பட்சி மாதிரி பறக்க விட்டுடறாங்களா?” 

அம்புஜம் ஆச்சர்யமுற்றாள். 

“அப்படி என் பையனையும்விட ஒரு வால் இருக்கானா என்ன?” 

எச். எம். எழுந்தாள். ”கம் வித்மி!” 

ஸ்ரீதரும் தொடர்ந்தான். 

வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தது. அவர்களைக் கண்டதும் ஓசை சட்டென அடங்கிற்று. 

எச்எம்.கணீரென்று: 

“கார்த்திகேயன்! ஸ்டாண்ட் அப்!” 

மாருதி ஒரு தினுசாய்,மனமில்லாமல் அலட்சியமாய், கம்பீரமாய், மெதுவாக எழுந்து நின்றான். கூட்டிலடைத்த விலங்குபோல் குமுறும் சீற்றம் அவன் கண்களில் சிந்திற்று. 

அவனைக் கண்டதும் தாயின் கண்கள் கனிந்தன. 

“இவன் என் பையன்தான் -” 

”வாட்?” எச்.எம்.கைமறதியாக எடுத்து வந்துவிட்ட பேப்பர் வெய்ட் விழுந்து தரையில் உருண்டது. 

“எஸ் லுக்” – அம்புஜம் நரேஷை இடுப்பிலிருந்து இறக்கி “ணக் கென்று கீழே நிறுத்தினாள். நரேஷ் வாயில் விரலைச் சப்பிக்கொண்டு நின்றான். 

“அதோ அவன்-” மாருதியைக் காட்டி, “இதோ இவன்.. ஸ்ரீதரைக் காட்டி “இவங்க இங்கேதான் முழுக்க படிச்சி முடிக்கப் போறான்கள். அடுத்த வருஷம் அதோ இவனையும் -நரேஷை முதுகில் தட்டி…. இங்கேதான் சேர்க்கப் போறேன்.” 

எச்.எம். முகத்தை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டாள். அவளுக்குக் கன்னங்கள் கதுப்பாயின. அவளுடைய பி.எ., பி.டி., எம்.பில்., இதுவரை தோரணை, பேச்சில் த்வனித்த ஆணவம் எல்லாம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போயின. 

“ஏன் மாமி, நீங்கள் பிள்ளையாண்டிருக்கேளா?”

– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *