கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 1,380 
 
 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வினாவைப் பொறுத்து மட்டுமே விடை அமைவதில்லை. வினா கேட்கப்படும் பாவத்தைப் பொறுத்தும் விடை அமையும்….’ 

அறநெறி போதகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

‘பயனைத் துறப்பவன் தன் கருமத்தில் ஆழ்ந்து ஒன்றி விடுகிறான். அவன் நோக்கும் போக்கும் பரந்ததாகவும், சமமானதாகவும் அமையும். இதனால், அவன் பல்வேறு தத்துவஞானங்களின் வலையில் சிக்குப்படுவதில்லை. அதே சமயம் தன் தத்துவத்தைவிடுவதுமில்லை

துறவியின் போதனையைப் பக்திப் பரவசத்துடன் இஷ்ட மாணாக்கன் கேட்டுக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அவ்விடம் கிருகஸ்தன் ஒருவன் வந்தான். 

‘சுவாமி! மோட்சம் அடைவதற்கு வீடு வாயிலைத் துறத்தல் அவசியமா!’ எனக் கேட்டான். 

‘அவற்றைத் துறக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஜனகருக்கு மோட்ச கதி கிட்ட வில்லையா? அவர் அரண்மனையிற்றானே வாழ்ந்தார்? அவருக்கு மோட்ச கதி சித்திக்குமானால், நீ ஏன் வீடுவாசலைத் துறத்தல் வேண்டும்?’ என்று விளக்கி, அவனை அனுப்பி வைத்தார் துறவி. 

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், வேறொரு கிருகஸ்தன் துறவியிடம் வந்தான். 

‘சுவாமி! வீடு வாயிலைத் துறக்காமலேயே மோட்சம் கிடைக்குமா?’ என அவன் கேட்டான். 

‘யார் அப்படிச் சொன்னது? வீட்டிலிருந்தபடியே மோட்சம் சித்திக்குமானால், ஏன் சுகர் முதலியவர்கள் வீடு வாயில்களைத் துறந்தார்கள்? அவர்கள் மூடர்களா?’ 

துறவி இருவருக்கும் கூறிய விடைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மாணாக்கனுக்கு இயல்பாகவே ஓர் ஐயம் ஏற்பட்டது. 

‘சுவாமி! இருவரும் ஒரே கேள்வியைக் கேட்டார்கள். இருவருக்கும் நீங்கள் இரண்டு எதிர் துருவமான பதிலை அளித்தீர்கள். ஒருவினாவிற்கு ஒரு குறிப்பிட்ட விடைதானே பொருந்துவதாக அமையும்?’ 

‘அப்படியல்ல. இருவிடைகளும் சரியானவையே! வினாவைப் பொறுத்துமட்டும் விடை அமைவதில்லை. வினா கேட்கப்படும் பாவத்தைப் பொறுத்தும் விடை அமையும். முதலில் வந்தவன், ‘வீடு வாயிலைத் துறத்தல் அவசியமா? எனக் கேட்டான். தேவையானால் வீடுவாயிலைத் துறக்கும் பக்குவ நிலை அவனிடமிருக்கிறது. அப்பக்குவநிலை அடைந்தவன் ஏன் வீடு வாயிலைக் துறக்க வேண்டும்? எனவே, அவன் அவற்றைத் துறக்க வேண்டியதில்லை என்பதும் உண்மையாக அமைந்தது. இரண்டாமவன், ‘வீடு வாயிலைத் துறக்காமலே மோட்சம் கிட்டுமா?’ எனக் கேட்டான். அந்தக் கேள்வியிலேயே அவன் அவற்றில் வைத்திருக்கும் பந்தம் நன்றாகத் தெரிகிறது, அத்தகைய அபக்குவன் ஒருவன் வீடு வாயிலைத் துறத்தல் வேண்டும் என்பதும் உண்மை’ எனத் துறவி விளக்கினார்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *