விடிந்த பொழுதுக்குள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 82 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாடசாலையை விட்டு ‘விர்’ரென்று புறப்பட்ட நிலாந்தியும்; அவள் நண்பி சுமதியும் ஓட்டமும் நடையு மாக ‘பஸ்’ ஸ்டாப் வந்தடைந்தார்கள். மனசில் சொல்ல வொண்ணாத திகில்; பல ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய மத்துகம வீதியை இன்று நிமிர்ந்து பார்க்கவே அவர்களுக்கு அச்சமாக இருந்தது. 

எங்கும் புகை மண்டலம்… வீதியிலிருந்த தமிழர் களின் கடைகள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டிருந்தன. 

அன்றைக்கென காற்று வேறு கடுமையாக வீசியது. தீக் கொழுந்துகள் ‘பக் பக்’கென ஜ்வாலை விட்டெரிந்தன. 

“தமிழயோ மராண்ட” என வீதியெங்கும் காட்டுக் கூச்சலுடன், கைகளில் மீன் வெட்டும் கத்தியும், இரும் புக் கழிகளும் கோடரிகளுமாய் சிங்களவர்கள் ஓடுவது நிலாந்தியின் கண்ணில் பட்டது. கன்னங்கரேலென்ற மேனியுடன், கைலிகளைத் தூக்கிப் பக்கவாட்டாக இடுப் பில் செருகியபடி இங்குமங்குமாக அவர்கள் ஓடுவது காட்டிலே கொலைவெறியுடன் மிருகங்களைத் தேடித் திரியும் வேட்டுவக் கூட்டம் போல் தென்பட்டது. நிலாந்தி பயத்துடன் சுமதியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். 

“சுமி, எந்த பஸ் வந்தாலும் ஏறிவிடலாமடி… வீட் டுக்குப் பக்கமாகப் போய் விட்டால் ஒரு மைலோ இரண்டு மைலோ ஓடிப்போய்விடலாம்.” 

“ம்… ம்… முதலில் உன் நெற்றியிலிருக்கும் பொட்டை அழித்துவிடு. எனக்கென்னவோ எங்களைப் பார்த்து விட்டால் பஸ்சை நிறுத்துவானோ எனப் பயமாயிருக்கு. அவங்களும் சிங்களவர்தானே!” சுமதி நடுங்கியபடிக் கூறினாள். 

“அவங்களுக்கெப்படியடி தெரியும் நாங்கள் தமிழர்களென்று?” 

“அவர்களுக்கா தெரியாது. நாம் தினந்தோறும் ‘கெத்தக்கடுவை’யிலிருந்து பஸ் ஏறுவதையும்… சிங்களப் பையனகள் பஸ்சுக்குள் நம்மேல் மைகளைக் கொட்டி, அடித்துமிரட்டிக் கலாட்டா செய்வதையும் பார்த்து ரசித்துச் சிரிப்பவர்களாச்சே!” என வெளியே கேட்காத வண்ணம் அடிக்குரலில் கடு கடுப்புடன் கூறினாள் சுமதி. 

“தமிழயோ மராண்ட கால எலவாண்ட மே அபே ரட்ட” தமிழர்களை அடித்து விரட்டுங்கள். இது எங்கள் நாடு என சிங்களத்தில் கூச்சல் போட்டபடி வெகுதூரத் தில் ஒரு கும்பல் வருவதைக் கவனித்த சுமதி- 

“நிலா, ஓடிவிடலாமடி” எனக் கூறியபடி, தன் நண்பியையும் மறந்து ஓட ஆரம்பித்தாள். அதற்குள் ளாக சிவப்பு நிற ‘பஸ்’சொன்று ‘சர்’ரென அவ்விடத் தில் வந்து நின்றது. 

பஸ் நின்றதோ இல்லையோ இருவரும் பாய்ந்து ஏறினார்கள். உள்ளே அதிகக் கூட்டமில்லை, பின்பக்கமாக சில ‘சீட்’டுக்கள் காலியாக இருக்கவே அதில்போய் உட்கார்ந்து கொண்டதும்தான் இவர்களுக்கு மூச்சே வந்தது. இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து தைரியப் படுத்திக் கொண்டார்கள். 

இவர்கள் ஏறியதும்; பஸ் பத்தடி கூட நகர்ந்திருக்காது. மறுபடியும் நிறுத்தப்பட்டது. 

நிலாந்தி அச்சத்துடன் வெளியே பார்த்தாள். 

எதிரே சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் பலர் கும்பலாக நிற்பது தெரிந்தது. 

‘ஹே’வென்ற பேரிரைச்சலுடன் அவர்கள் பஸ்சுக்குள் ஏறியதும் ‘யாருங் தமிழ்நாய்கள் இதுக்க இருக்காங்?” என்று தங்களுக்குத் தெரிந்த தமிழில் கேட்டார்கள். 

“ம்ஸும்” 

எங்கிருந்தும் ஒரு சத்தமும் கிளம்பவில்லை. பஸ்சுக்குள் நிலாந்தியையும், சுமதியையும் தவிர வேறு தமிழர்கள் எவரும் இருக்கவில்லை. 

பயத்தில் நடு நடுங்கிய நிலாந்தி, ரகசியமாய்ச் சுமதியின் தோளைத் தொட்டாள் தோளில் விழுந்த நிலாந்தியின் கையை அழுத்திப் பிடித்த சுமதியின் கரங்களும் அச்சத்தில் வியர்த்திருப்பது தெரிந்தது. நிமிடங்கள் மணிக்கணக்காக ஊர்ந்தன. 

திடீரென்று முன்பக்கத்துப் படிக்கட்டில் தொங்கிய ஒரு மாணவனின் பார்வை இவர்கள் பக்கம் யதேச்சையாய் பட்டது. 

“…அடோ… அறங்… கெந்தக்கடுவ தமிழயோ…” என சுட்டிக் காட்டினான். 

அடுத்த கணமே ‘பஸ்’சின் ஒரு மூலையிலிருந்து டிபன் பாக்ஸ் ஒன்று நிலாந்தியின் நெற்றிப் பொட்டில் ‘ணங்’ கென்று வந்து தாக்கியது. “… ஐயோ… அம்மா…” எனக் கதறினாள் நிலாந்தி. கடுமையான வலி; பஸ்சுக்குள் கலாட்டா உருவாகவும் டிரைவர் பஸ்சை நிறுத்தினான். 

அதுதான் சமயமென பஸ்சை விட்டுக் குதித்த நிலாந்தி தன் புத்தகங்களையும் வீசியெறிந்து விட்டு அசுர வேகத்தில் ஓடினாள். 

சுமதி தன்னுடன் வருகிறாளா என்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. 

அவர்களைத் தொடர்ந்து பின்னால் குதித்த இளைஞர்கள் தெருநாய்களை விரட்டுவது போல், தங்கள் கைகளுக்குக் கிடைத்த கற்களையும், கழிகளையும் எடுத்துக் கொண்டு அவர்களைத் துரத்தினார்கள். 

தெருநாய்கள் கூடச் சில சமயம் விரட்டுபவனைத் திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டுத் தான் ஓடும். ஆனால் நிலாந்தியோ… சுமதியோ… இருவருமே தங்கள் முதுகின்மேல் வேகமாய் வந்து தாக்கிய கற்களின் வலியையும் பொறுத்துக்கொண்டு உயிருக்கு அஞ்சி ஓடினார்கள். அவர்கள் கைகளில் அகப்பட்டு விட்டால் அடுத்த நிமிடம் தங்களதுமேலான மானம் போய் விடுமே என்கின்ற அச்சம் அவர்களை ஓட வைத்தது. 

கரடுமுரடான ஒற்றையடிப் பாதையைத் தாண்டியதும் பின்னால் திரும்பிப் பார்த்தாள் நிலாந்தி. 
சுமதியைக் காணமுடியவில்லை. 

“சும…தி” 

“டப் டப் டடப்…” 

யாரோ ஓடிவருவதுபோல் ஒரு பிரமை. மீண்டும் ஒற்றையடிப் பாதையை அடுத்த வாழைத் தோப்புக்குள் ஓடினாள். 

வாழைத் தோப்பைத் தாண்டிவிட்டால் அவள் வீடு சமீபித்துவிடும். 

வாழைத்தோப்பின் முகப்புக்கு வரும்பொழுதே எதிரே அவள் வீடு குபு… குபு… வென எரிவதும்; அதனைச் சுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் தெரிந்தது. 

“அம்மா…”வென அலறப் போனவள்; ஒரு கணத்துக்குள் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, தோப்புக்கு இடது புறமிருந்த ரப்பர் காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள். 

நிலாந்தி ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் கதிர்வேலின் ஒரே மகள். அவளுக்குப் பின்னால் பிறந்த இரு வரும் ஆண்கள். மலைநாட்டில் தேயிலைத் தோட்டங் களில் வேலையிழந்த தமிழ்க் குடும்பங்களில் கதிர்வேலின் குடும்பமும் ஒன்று. 

அதனால்தான் இலங்கையின் கரையோரப் பகுதியான களுத்துறைக்கு வந்து ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. 

“நாங்கள் தான் இப்படித் தொழிற்சாலைக் கூலிகளாக இருந்து அரை வயிறும்… கால் வயிறுமாக வாழ்கிறோம், எங்கள் குழந்தைகளாவது படித்து அரசாங்க உத்தி யோகம் பார்க்க வேண்டும்” என்கின்ற ஆசையை குழந்தைகள் பிறந்ததிலிருந்தே கதிர்வேலின் மனைவி அவனுக்கு நெட்டுருப் போட்டு வந்தாள். நாளடைவில் அவனுக்கும் அந்த ஆசை ஏற்பட்டுவிட்டது. 

அதனால்தான் மூத்தவள் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது படிப்பிக்க வேண்டுமென்ற ஆவலில் வீட்டிலிருந்து ஏழெட்டு மைல்கள் தொலைவிலுள்ள “மத்துகம”யில் இருக்கும் பாடசாலையொன்றில் அவளைச் சேர்த்திருந்தார். 

வெளியே கும்மிருட்டு பரவியது. காட்டு மரங்களில் உறங்குவதற்கென வந்த பறவைகள் சிறிது நேரம் காச் மூச்சென்று கத்திவிட்டு உறங்கத் தொடங்கின. அங் கொன்றும் இங்கொன்றுமாக சில இரவு நேரப் பூச்சிகள் மட்டும் கீச் கீச்சென ஒலியெழுப்பிய வண்ணமிருந்தன. 

பெற்றோர்களையும், சுமதியையும் நினைத்து அழுதழுது ஓய்ந்து போன நிலாந்திக்கு பேலும் அங்கிருச்சப் பயமாக இருந்தது. 

எப்பொழுதோ ஒருசமயம் இந்த ரப்பர் தோட்டத் துக்குள் நிறையப் பாம்புப் பொந்துகள் உண்டு என அவள் தம்பி கூறியதும் இந்த நேரத்தில் ஞாபகத்தில் வந்து அவளை உறுத்தியது. கூடவே அவள் கால்களின் கீழ் அகப்பட்டுக் கொண்ட காய்ந்த சருகுகளின் சரக்கும் ஒலி மேலும் மேலும் அச்சத்தையூட்டவே பட படக்கும் நெஞ்சுடன் நான்கைந்து ரப்பர் மரங்களைத் தாண்டினாள். 

எங்கோ சில குரல்கள். 

தமிழா? சிங்களமா? புரியவில்லை. ரப்பர் மரமொன்றை இறுகக்கட்டியபடி மீண்டும் உற்றுக் கேட்டாள். சந்தேகமேயில்லை. தமிழ்தான். 

மனதில் ஏதோ இனம் புரியாத தென்பு. நான்கெட்டில் அவ்விடத்திற்கு ஓடிச் சென்றவள்-அங்கே தன் பெற்றோர்கள் உட்பட பலர் பதுங்கியிருப்பதைக் கண்டு கொண்டாள். 

“அம்மா”வென ஆவலுடன் ஓடிச் சென்று தன் தாயைக்கட்டிப் பிடித்துக்கொண்டாள். 

”என்னுடன் வந்த சுமதி…”யென ஆரம்பித்து நடந்தவற்றைத் தாயிடம் கூறினாள். 

“நீ பயப்படாதே நிலா. அவளும் எப்படியாவது உன்னைப் போல் தப்பித்து விடுவாள்” எனத் தாயார் ஆறுதல் கூறவும் அவள் மனதிலிருந்த பயமும், பதற்றமும் சற்றுத் தணிந்தன. 

“அகதிகளை ஏற்றிச் செல்ல இந்தியாவிலிருந்து கப்பல் வந்திருக்கிறதாம்…” 

நான்கைந்து நாட்கள் பசியும், பட்டினியுமாகக்.. காட்டுக்குள் பதுங்கியிருந்து விட்டு, அப்பொழுதுதான் களுத்துறை அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்த நிலாந்திக்கு இந்தச்செய்தி தேனாக இனித்தது. 

உடமைகளை இழந்த மனத்துயர் ஒரு பக்கம் – பல நாட்களாக சில ரொட்டித் துண்டுகளையும்… வெறும் தண்ணீரையும் குடித்தே உயிரைப் பிடித்து வைத்திருக்கும் வேதனை ஒரு பக்கமுமாகத் தவித்தவர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியை ஊட்டியது. 

அந்தக் கப்பலிலேயே இடம் பிடித்துவிட வேண்டு மென அனைவரும் துடித்தனர். 

நான்கைந்து நாட்கள் காட்டுக்குள் பதுங்கியிருந் தது… பசி தாங்காமல் தன் தம்பி சுருண்டு விழுந்தது….. 

தலையில் முக்காடிட்ட வண்ணம் எரிந்து சாம்பலாகிப் போன தங்கள் வீட்டில் எதுவும் மீதியிருக்கின்றதா வெனத் தடவிப் பார்த்தது… எல்லாமே நிழற் படம் போல் அவள் மனதில் ஓடிமறைந்தது. 

“என்னங்க, மீண்டும் இங்கே இருக்க முடியாதுங்களா? இந்த ரப்பர் தோட்டத்தையும் தேயிலைச் செடி களையும் தவிர…நமக்கு வேறென்ன பிழைப்பு தெரியப் போகுது…?” 

“ஸ்…அம்மா…ம்மா…” தாயாரின் புலம்பலை வேகமாகக் கண்டித்த நிலாந்தி, 

“அன்று மட்டும் அவர்கள் கையில் நான் சிக்கியிருந்தால் என்னை நார் நாராய்க் கிழித்துப் போட்டிருப்பார்கள்… ச்சீ… இந்த மிருகங்களிடம் மானத்துக்குப் போராடி வயிற்றைக் கழுவுறதைவிட இந்தியாவுக்கே நாம் போயிடலாம்!” 

“சரி, கெளம்புங்க! இந்தியாவுக்குப் புறப்படுகிற முதல் கப்பலிலேயே நமக்கு இடம்பிடியுங்க. குழந்தைங்களெல்லாம் பசியால் துடிக்குதுங்க.” 

தாய்நாட்டில் தங்களுக்காகப் பெரிய விருந்தே காத்திருப்பது போல் அவசரப்படும் தன் மனைவியின் அறியாமையை எண்ணி விரக்தியாகச் சிரித்தபடி எழுந்து சென்றார், கதிர்வேல். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *