கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 29, 2026
பார்வையிட்டோர்: 279 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

“ஐயா”

வெவ்வேறு வகுப்பு ஆசிரியர்கள் அனுப்பியிருந்த மாதாந்திர அறிக்கைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தலைமையாசிரியர் நிமிர்ந்தார்.

“மத்த ரெண்டு பசங்க வீட்டுக்கும் பேசிட்டேன். ஆத்விக் அம்மாகிட்டே மட்டும் பேச முடியலை. தொடர்புக்கு எல்லைக்கு அப்பால் இருப்பதா வருது.” ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் அசோகன் தயங்கியபடியே சொன்னார்.

“அவசரத் தொடர்புக்குன்னு மாற்று எண் கொடுத்துருப்பாங்க, அதுல கூப்பிடுங்க.”

இதைக் கூட நான் சொல்ல வேண்டுமா என்கிற தொனியில் தலைமையாசிரியர் உறும, அசோகன் தலையாட்டியபடியே ஓடினார்.


கார்த்திக் மணியைப் பார்த்தான். மதியம் ஒன்று. காலை முதல் மிகத் தொடர்ச்சியாக வேலைகள். மூச்சு விடக் கூட நேரம் இல்லை. இந்த மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி உயர்ந்த பின் பொறுப்புகளும் கூடிக் கொண்டேதான் போகின்றன. ஒவ்வொரு நாளும் காலை அலுவலகம் வந்தால் கிளம்ப கிட்டத்தட்ட ஏழு மணி ஆகி விடுகிறது. விலை நிர்ணயிப்பு தொடர்பான முக்கியமான இரண்டு முடிவுகள் எடுக்க அன்று இறுதி நாள் என்பது நினைவுக்கு வர, தன் உதவியாளர் வருணை அலுவலக அலைபேசியிலேயே அழைத்தான்.

“வருண், இரண்டு மணிக்கு பொருட்கள் கொள்முதல் துறை ஊழியர்களை ஆலோசனை அறைக்கு வரச் சொல்லிடுங்க. சில முக்கியமான விவரங்கள் தெளிவு படுத்த வேண்டியது இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் அவனது அலைபேசியில் பிரத்தியேக எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. உறவுகளும் நட்புகளும் மட்டுமே அழைக்கும் இந்த எண்ணில் பெயர் வராமல் அழைப்பு வரவும் ஒரு நிமிடம் யோசித்தான். ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்றுக் கொண்டான்.

“வணக்கம் சார். நான் வாணி வித்யா மந்திர் பள்ளியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் திரு.கார்த்திக்தானே, ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆத்விக்கின் தந்தை?”

“ஆமாம் சார். வணக்கம். என்ன விஷயம் சொல்லுங்கள்.”

“நீங்கள் உடனடியாக இங்கு வந்து பள்ளி தலைமையாசிரியரைச் சந்திக்க வேண்டும்.”

சட்டென புலன்கள் கூர்மையானதுடன் சற்று பதட்டமும் சேர்ந்து கொண்டது.

“ஆத்விக் நன்றாக இருக்கிறான்தானே?”

“உங்கள் மகனுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் இப்போது உடனடியாகப் பள்ளிக்கு வர வேண்டும்.”

நிம்மதிப் பெருமூச்சு எழ, “ஏதோ பிரச்சனை என்று புரிகிறது சார். என் அலுவலகத்திலிருந்து உங்கள் பள்ளிக்கு வரவே ஒரு மணி நேரம் ஆகும். இன்று சில மிக முக்கியமான அலுவல்கள் இருக்கின்றன. என் மனைவி ஊரிலில்லை. இருந்தால் நிச்சயம் உடனே வந்திருப்பார். நாளைக் காலை மிகச் சரியாக ஒன்பது மணிக்கு நான் வந்து அவர்களைச் சந்தித்து விடுகிறேன் “ என்று சற்று கெஞ்சும் குரலில் சொன்னான்.

ஓரிரு நிமிடங்கள் எதிர்முனை அமைதியாக இருந்தது.

“சார், உங்கள் மகன் பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டுமென்றால் இப்போது வந்து பாருங்கள். மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்வதாக முடிவு செய்தால் நாளைக் காலை நீங்கள் வரலாம்.”

கார்த்திக் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். இப்படி உடனடியாக வரச்சொல்லும் அளவிற்கு ஆத்விக் என்ன செய்திருப்பான்…இதுவரையிலும் அவனால் ஒரு பிரச்சினையும் வந்ததில்லை.

“சரி சார், நான் மூன்று மணிக்குள் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். வருணை அழைத்து சில மாற்று ஏற்பாடுகள் செய்ய விவரங்கள் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி காரில் விரைந்தான்.


போகும் வழி நெடுக மனம் ஆத்விக்கின் மீதும் அலுவலகப் பணிகள் மீதுமாக அலை பாய்ந்தது. ஆத்விக் நன்றாகப் படிக்கிற பையன். இதுவரை பள்ளியிலிருந்து ஒரு புகார் வந்ததில்லை, எதாவது பணம் கட்டச் சொல்லி நம்மிடம் சொல்ல மறந்து இருப்பானோ? இன்று மாலை நாலரை மணிக்கு ஐடிசி கிராண்ட் சோலாவில் அந்த ஐரோப்பிய வாடிக்கையாளருடன் பேசி விற்பனை ஒப்பந்தம் முடிவு செய்ய வேண்டும். மாலை ஆறரை மணிக்குள் ரயில்வே டெண்டருக்கான இறுதி விலையை முடிவு செய்து அனுப்ப வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வாங்குவது என்று எதோ சொன்னார்கள்…கடவுளே …என்ன செய்திருப்பான்? ரமாவிற்கு போன் செய்யலாமா… வேண்டாம், பாவம். அவள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் ஊருக்குப் போய் இருக்கிறாள். வீணே கவலைப்படுவாள். அப்போது அலைபேசி ஒலித்தது. ரமா.

“சொல்லு ரமா, அப்பா எப்படி இருக்கார்?”

“இன்னும் ஐசியுதான். இருபத்தி நாலு மணி நேரம் போகணும்னு சொல்றாங்க. ஆத்விக் பள்ளிக்கூடத்திலேருந்து அழைப்பு வந்துருக்கு. இங்கே உள்ளே சிக்னல் சரியா இல்லை. பேச முடியலை. மேத்ஸ் ஒலிம்பியாட் பணம் கட்ட இன்னிக்கு கடைசின்னு நினைக்கிறேன். என் அவசரத்துல மறந்துட்டேன். அதுக்குத்தான் பள்ளி அலுவலகத்தில் அனுமதி வாங்கி குழந்தை கூப்பிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். நீங்க பார்த்துக்க முடியுமா கார்த்திக்?”

“நான் கவனிச்சுக்கறேன்மா. கவலைப்படாதே.”

பேசிக்கொண்டே காரை நிறுத்தி விட்டு தலைமையாசிரியர் அறையை நெருங்கிய போது அறை வாசலில் ஆத்விக் முகத்தில் சலனமே இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

“என்ன ஆத்விக்?”

அவன் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

ஆத்விக் பதில் சொல்வதற்குள் உள்ளே அழைக்கப்பட, மகனுடன் தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தான்.

“வணக்கம் சார்.”

“வணக்கம், உட்காருங்கள். “

“என்ன ஆயிற்று? இவ்வளவு அவசரமாக வரச் சொன்னீர்களே? “

“இன்று மதிய உணவு இடைவேளையின் போது மூன்று பதினோராம் வகுப்பு மாணவர்களுடன் உங்கள் மகனும் சேர்ந்து ஓய்வறையில் ஒளிந்து இருந்து விட்டு வகுப்புகள் தொடங்கியவுடன் நால்வருமாக பின் பக்க வாசல் வழியே சினிமா போவதற்குக் கிளம்பி இருக்கிறார்கள். மற்ற இருவரிடம் புகை நாற்றம் வேறு. பள்ளிக் காவலர் பார்த்து விட்டார்.”

கார்த்திக்குக்கு கேட்பதை சிறிதும் நம்ப முடியவில்லை. ஆத்விக்கா?.. இம்மாதிரி விஷயங்கள் செய்வதாவது…ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உறுதியாக நம்பினான்.

“உண்மையா? என்னால் நம்ப முடியவில்லை.”

தலைமையாசிரியரின் குரலில் சூடு ஏறியது.

“உண்மையில்லாமலா உங்களை வரவழைத்து நம் இருவரின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறேன்? வகுப்பில் ஆசிரியர்களை கேலி செய்வது, அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வது என்று சமீப ஒரு மாதமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. நன்கு படிக்கிற பையன், இந்தப் பருவம் காரணமாக இப்படி இருக்கலாம் என்பதால் நாங்களே இரண்டு மூன்று முறை எச்சரித்து அறிவுரை சொன்னோம். ஆனால் இன்று நடந்திருப்பது ஒத்துக் கொள்ளவே முடியாது. படித்தால் மட்டும் போதாது. ஒழுக்கம் வேண்டும். பள்ளியில் நாங்கள் ஒழுக்கத்தைப் போதித்தாலும் பெற்றோருக்கும் பொறுப்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகனுக்கு புத்தி சொல்லி இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கூட்டிக் கொண்டு போங்கள். இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை” என்றார் கடுமையாக.

கார்த்திக்குக்கு அப்போதும் நம்ப முடியவில்லை. போன வாரம்தான் விரும்பிக் கேட்டான் என்று ஒரு திரைப்படத்துக்கு அழைத்துப் போயிருந்தான். ஆத்விக்கின் முகத்தைப் பார்த்தான். ஒரு துளி வருத்தமும் இல்லை. யாரோ இருவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், எனக்கு என்ன என்பது போன்ற முக பாவத்துடன் நின்று கொண்டிருந்தான். திடீரென அறிமுகமில்லாத ஒரு சிறுவன் நிற்பது போல கார்த்திக்குக்குத் தோன்றியது. ஒன்றும் புரியாதவனாக தலைமையாசிரியர் சொன்னது போல் எழுதிக் கொடுத்துவிட்டு அவனையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான். மணி மூன்றரை.

கார்த்திக்குக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. நடந்தது உண்மையா கனவா என்று புரியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது நேராக ஐடிசி போக வேண்டும். அந்த வாடிக்கையாளர் ஜெர்மனியிலிருந்து இதற்கென்றே பிரத்தியேகமாக வந்திருக்கிறார். இவன் செய்திருப்பது இன்னும் என்னால் முழுமையாக ஜீரணிக்க முடியவில்லை. எப்படி இப்படியான சேர்க்கை வந்தது? அவன் நண்பர்களைத் தெரியுமே. நல்ல பையன்கள்தானே. இது ஏதோ புதிதாகத் தோன்றுகிறது. நாங்கள் இருவருமே இவனுடன் நன்கு நேரம் செலவழிக்கிறோம், பேசுகிறோம், ஒரே மகன் என்றாலும் செல்லத்துடன், கண்டிப்பும் உண்டு. அதையும் தாண்டி ஏன் இப்படி, ரமாவும் இங்கு இல்லாத இந்த நேரத்தில் இவனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அவனையும் ஏறச் சொல்லி காரில் அமர்ந்தான். போத்தலில் இருந்து தண்ணீரைக் குடித்து கனன்று எழும்பிய கோபத்தைக் குறைத்துக் கொண்டான். காரைக் கிளப்பினான்.

“எங்கப்பா போறோம்? வீட்டுக்கா?” எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இயல்பாக ஆத்விக் கேட்டது உள்ளூர சற்றுத் திகைப்பூட்டியது.

“இல்லைடா. அப்பாவுக்கு முக்கியமான ஆபீஸ் வேலைகள் இருக்கு. என்கூட வா. முடிச்சுட்டு ஏழு மணி போல வீட்டுக்குப் போகலாம்.” அவனைத் தனியாக வீட்டுக்கு அனுப்ப மனதில்லை.

வேறு வழியில்லாமல் ஆத்விக் தலையை ஆட்டினான். அவன் மனதில் அப்பா தன்னிடம் கேட்கப் போகும் கேள்விகளும் அதற்கு தான் சொல்ல வேண்டிய பதில்களும் நண்பர்களோடு பேசி வைத்தது ஒத்திகை போன்று ஓடிக்கொண்டிருந்தது. நிச்சயம் அப்பா இப்படித்தான் கேட்பார்.

“என்ன ஆத்விக் ? என்ன கெட்டப்பழக்கம் இது ? எங்கேயிருந்து இதெல்லாம் கத்துக்கிட்ட?”

அவன் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.

“ஒரு நாள் போனா என்னப்பா? இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது செய்யாம வேற எப்ப செய்யறது?”

‘உன் குரல்ல பயமில்லாம கொஞ்சம் அலட்சியம் இருக்கணும். நீ அப்படிச் சொன்னவுடனே உங்க அப்பா முகத்தில் ஒரு அதிர்ச்சி வரும் பாருடா. அதைக் கவனி. உன் தனித்துவம் அங்கதான் தொடங்குது. அம்மா கேட்டா பதிலே சொல்லக்கூடாது.’

“செஞ்சது தப்பு. எதுத்தாடா பேசற?”

“ஏம்பா எல்லா பசங்களும் பண்றதுதானே, நீங்களும் பள்ளிக்கூடம் கட் அடிச்சுட்டு சுத்தி இருப்பீங்கதானே, என்னமோ நான் மட்டும் பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி எதுக்கு இப்ப கத்தறீங்க?”

‘நீ குரலை ஒசத்தி கத்தி சொல்லணும்டா ஆத்விக் . இந்த இடத்துல எல்லா அப்பாவுக்கும் கோவம் எகிறிடும். அநேகமா கைய ஓங்கிட்டு வருவாங்க. அப்ப நீ ரெடியா இருக்கணும். அவர் கிட்ட வந்து கையை ஓங்கும் போது உன் கைய தூக்கி அவர் கைய புடிச்சுரு. அப்ப உங்க அப்பா ஒரு நிமிஷம் உறைஞ்சு போய் நிப்பாரு பாரு, அந்த மூஞ்சிய உன்னால மறக்கவே முடியாது. அங்கதான் நம்ம ஸ்வாக் ஆரம்பிக்குது. அந்தப் படத்துல பார்த்தேயில்ல, ஹீரோ சுதீப் சாமிநாதன் அவங்கப்பாகிட்டே என்ன கெத்து காட்டுனான்! அப்படி இருக்கணும்.’

ஆத்விக் அப்பா ஆரம்பிக்க காத்திருந்தான். அம்மா ஊரில் இல்லாததும் நல்லதுதான். இருந்திருந்தால் அம்மா என்னடா தங்கம் என்று கேட்டுவிட்டால் அழுகை வந்தாலும் வந்துவிடும். அம்மாவை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேச முடியாது. என்ன இந்த அப்பா ஒன்றுமே கேட்கவில்லை என்று ஆத்விக்குக்கு சற்று எரிச்சலாக வந்தது.

காரை ஓட்டிக்கொண்டே ஒரு அலுவலக அழைப்பில் பேசிக் கொண்டு வந்த கார்த்திக் ஐடிசி கிராண்ட் சோலா என்கிற அந்த ஏழு நட்சத்திர விடுதிக்குள் நுழைந்து காரை நிறுத்திவிட்டு வரவேற்புப் பகுதிக்குச் சென்றான். அங்கு இருந்த ஒரு சோபாவில் மகனை உட்கார வைத்தான்.

“ஆத்விக், அரைமணி நேரம். அப்பா ஒருத்தரை வேலை விஷயமா சந்திக்கணும். ஏற்கெனவே முடிவான முக்கியமான சந்திப்பு . முடிச்சிட்டு வந்துடறேன். இங்கேயே இரு. ஏதாவது குடிக்கிறியா இல்ல சாப்பிடுறியா?”

“ஒண்ணும் வேணாம்பா. நான் இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க” என்றான் பெரிய மனுஷத் தோரணையுடன்.

வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவனைக் காண்பித்து எதோ சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான் கார்த்திக். ஆத்விக்குக்கு முதன்முறையாக பார்ப்பதால் அந்த இடத்தின் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் மிகவும் வியப்பாக இருந்தது. சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய இடத்திற்கெல்லாம் அப்பா வந்து வேலை செய்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தன்னை மறந்து வேடிக்கை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. தொலைவில் ஒரு

உயரமான மேற்கத்திய மனிதருடன் அப்பா வருவது தெரிந்தது. அவர்கள் இருவரும் அருகில் வரவும் ஆத்விக் எழுந்து நின்றான்.

“ஆத்விக், இவர் என் வாடிக்கையாளர் மற்றும் நண்பர் மிஸ்டர் ஜெர்ரி ஆடம்ஸ். மிஸ்டர் ஆடம்ஸ், என் மகன் ஆத்விக் ” என்று இருவரையும் கார்த்திக் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினான்.

ஆத்விக்குக்கு கூச்சமாகவும் அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. தன்னை அறியாமல் பள்ளிச் சீருடையில் இருந்த கழுத்துப் பட்டையைச் சரி செய்து கொண்டு ஜெர்ரி நீட்டிய கையைப் பிடித்து லேசாக குலுக்கினான்.

“ஹாய் சின்னப் பையா, மிகவும் வசீகரமாக இருக்கிறாய். உன் தந்தையைப் போல வருவதற்கு என் வாழ்த்துகள் .” ஜெர்ரி ஆங்கிலத்தில் சொல்ல, ஆத்விக் வெட்கத்துடன் தேங்க்யூ என்றான்.

அப்பாவை ஓரக்கண்ணால் பார்த்தான். இப்போது பெருமையாக நிற்கிற அப்பாவுக்கும் சற்று முன் பள்ளியில் ஆசிரியர் முன் உட்கார்ந்திருந்த அப்பாவுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி அலுவலகத்தை அடைந்தார்கள்.

“ஆத்விக், என் உதவியாளரிடம் உன்னை உணவு விடுதிகள் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றேன். என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிடு. அதுக்குப் பிறகு கீழே தரைத் தளத்துல ஒரு சின்ன உடற்பயிற்சிக்கூடம் இருக்கு. அங்க போய் கொஞ்ச நேரம் செலவு செய். அப்பாவுக்கு இரண்டு மீட்டிங் இருக்கு. முடிச்சுடுறேன். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகலாம்.”

ஆத்விக் தலையை ஆட்டினான். அப்பா பள்ளியில் நடந்ததைப் பற்றி எதுவுமே கேட்காமல் இருப்பதும், தான் யோசித்து வைத்திருந்த பதில்களை எல்லாம் சொல்ல முடியாமல் இருப்பதும் அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வேலை செய்து இருக்கிறேன், அதைப் பற்றிக் கேட்காமல், அதிர்ச்சி அடையாமல் சாப்பிடப் போ, உடற்பயிற்சி செய் என்று சொல்கிறார், பள்ளியிலேயே ஆரம்பிப்பார் என்று எண்ணியவனுக்கு அப்பாவுக்குத் தன் மேல் அக்கறையில்லையா, அவர் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறார் என்று கோபம் வந்தது. அவர் சீக்கிரம் கேட்க வேண்டும், தான் பதில் சொல்லி வெறுப்பேற்ற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான்.

“முருகன், இவன் என்னோட பையன். சாப்பிட கூட்டிட்டுப் போங்க” என்றபடி பர்ஸைத் திறந்து பணத்தை வெளியே எடுத்தான் கார்த்திக்.

“இருக்கட்டும் சார். நான் கூட்டிட்டுப் போறேன்”. முருகன் நகர முயல, “இல்லை, இருங்க” என்று சொல்லி பணத்தை ஆத்விக் கையில் கொடுத்தான்.

ஆத்விக்குக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று தான் செய்ததற்கு அப்பா அறை கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் பணத்தைத் தன் கையில் கொடுப்பார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த அப்பா வெளியிடம் என்பதால் பேசாமல் இருக்கிறாரா, புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டே முருகனோடு உணவு விடுதிகள் இருக்கும் தளத்திற்குச் சென்றான்.

ஆத்விக் எல்லா கடைகளையும் சுற்றிப் பார்த்தான். இறுதியில் ஒரு நெய் ரோஸ்ட் தோசை சாப்பிட முடிவு செய்தான். பக்கத்தில் முருகன் நிற்பதை உணர்ந்து “நீங்களும் சாப்பிடுறீங்களா அங்கிள்?” என்றான்.

முருகனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. “இல்லை தம்பி. மதியம் சாப்பிட்டாச்சு.”

“பரவாயில்லை. ஒரு காஃபியாவது குடிங்க” என்றபடி “ஒரு காஃபியும் கொடுத்துடுங்க” என்று கடைக்காரர் கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்தான்.

முருகன், “பார்க்க உங்க அப்பா மாதிரியே இருக்கீங்கன்னு நினைச்சேன் தம்பி. குணத்திலும் அவரைப் போலவே இருக்கீங்க. அவரும் தான் சாப்பிடும் போது யார் பக்கத்துல இருந்தாலும் நிச்சயம் அவங்களை சாப்பிட வச்சுடுவாரு ” என்றபடி காபியை வாங்கிக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கீழ்த் தளத்தில் இருந்த உடற்பயிற்சிக்கூடத்துக்கும் சென்று சற்று நேரம் சுற்றி விட்டு ஆத்விக் கார்த்திக்கின் அறைக்குத் திரும்பி வந்த போது அங்கு காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அவன் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

அப்பா எல்லோரிடமும் கேள்விகள் கேட்பதையும் அவர்கள் பதில் சொல்வதைப் புரிந்து கொண்டு, பொறுமையாக, அதே நேரம் கண்டிப்புடனும் சரியான பதிலைச் சொல்லி அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பதையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் என்னிடமும் அம்மாவிடமும் ஜோக் அடித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கும் அப்பாவா இது? அப்போதுதான் கவனித்தான். அனைவர் முன்பும் சிறிய தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளும் தேநீர்க்கோப்பையும் இருந்தன. எல்லோரும் அநேகமாக சாப்பிட்டு தேநீரையும் குடித்து முடித்திருந்தார்கள். அப்பாவின் முன்னால் இருந்தது மட்டும் தொடப்படாமலேயே இருந்தது. கார்த்திக் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். தேநீர் ஆறிக் கொண்டு இருந்தது. ஆத்விக்குக்கு அப்பா அதைக் குடித்துவிட்டுப் பேசினால் என்ன என்று இருந்தது. போய்ச் சொல்லலாமா என்று கூட நினைத்தான். ஆனாலும் பயமாக இருந்தது. தவிப்போடு உட்கார்ந்து கொண்டிருந்தான். எப்போது அப்பா பேசி முடிப்பார், தொண்டைக்குச் சற்று ஒய்வு கிடைக்கும் என்று கூடத் தோன்றியது. அப்பாவைத் தொடர்ந்து பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது.

இறுதியாக விவாதம் முடிந்து எல்லோரும் கிளம்பிச் செல்ல கார்த்திக்கும் தனது மடிக்கணினியை மூடி, பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினான். தேநீரும் பிஸ்கட்டும் தொடப்படாமலேயே இருந்தன .

“போலாமா ஆத்விக்? ரொம்ப நேரம் ஆயிடுச்சுல்ல, சாரிடா, உன் பையை எடுத்துக்கோ.”

ஆத்விக் தயக்கத்துடன் ” அப்பா, நீங்க டீ குடிக்கவே இல்லயே ” என்றான்.

“பரவாயில்லை, வீட்டுக்குத்தானே போறோம், பார்த்துக்கலாம் வா.”

ஆத்விக் பையை எடுத்து மாட்டிக்கொண்டு அப்பாவைப் பின் தொடர்ந்தான். காரில் அமர்ந்து கிளப்பினான் கார்த்திக். அலுவலகப் பிரச்சினைகள் எல்லாம் மிகச் சுலபமானவை போன்றும் இப்போது மகனிடம் பேசுவதுதான் சவால் போன்றும் உணர்ந்தான். மனதுக்குள் இவனிடம் எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டான். அவன் என்ன பதில் சொன்னாலும் பொறுமையாக இருக்க வேண்டும், இந்த வயதில் இவனை ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலத்தான் கையாள வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டான். பேசும் போது எவ்வளவு கோபம் வந்தாலும், அது அவனது செயல் மேலேதானே தவிர அவன் மீது அன்பாகத்தான் இருக்கிறேன் என்பதை மறந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். ரமா இருந்திருக்கலாம் என்று ஒரு புறம் தோன்றினாலும், அவள் இல்லாததும் நல்லது என்றும் தோன்றியது. வீட்டுக்குப் போகும் வரையிலும் பொறுக்க முடியாது போல இருந்தது.

“ஆத்விக் , என்ன ஆச்சு உனக்கு? ஏன் அப்படி செஞ்சே?”

மதியத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்வி எதிர்பாராத நொடியில் வந்தபோது சற்றுத் திடுக்கிட்டான் ஆத்விக். தொண்டை வறண்டது. காருக்குள் இருந்த இருள் அவனைச் சூழ்ந்து அமிழ்த்துவது போலிருந்தது. சில விநாடிகள்தான். புலன்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பின. உடலில் ஒரு பரபரப்பு விரவியது. கண்களை மூடிக் கொண்டான். நண்பர்களின் உபதேசம் காதுகளில் ஒலித்தது.

‘உங்கப்பா கண்களை நேரா பார்க்கணும்டா. குரலில் பயமில்லாமல் அலட்சியம் இருக்கணும். அவரோட அதிர்ச்சிதான் உன்னோட ஸ்வாக்.’

அப்பாவை நோக்கித் திரும்பினான். ஆத்விக் பார்ப்பதை உணர்ந்த கார்த்திக் சாலையிலிருந்து கண்களை மகனிடம் திருப்பினான்.

“என்னால் இன்னும் நம்பமுடியலைடா.”

ஆத்விக் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். நண்பர்கள் மனதில் நிழலாடினார்கள். லேசாக தொண்டையைக் கனைத்துக் கொண்டான். மூளைக்குள் கோர்த்து வைத்திருந்த வார்த்தைகள் தொண்டைக்கு இடம்பெயர்ந்து வாக்கியங்களாகையில் உருமாறின.

“ரொம்ப சாரிப்பா. என்னை மன்னிச்சுடுங்க. நான் செய்தது தப்புதான். இனிமேல் எப்பவும் இப்படி செய்ய மாட்டேன். இன்னிக்கு நடந்ததை மறந்துடுங்கப்பா . சத்தியமா இனி ஒழுங்கா இருப்பேன். அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்கப்பா .” தலையை உயர்த்தி இருந்தவனின் பார்வை தாழ்ந்தது. அப்பாவின் கையை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும் போலிருந்தது. அப்பா நன்றாகத் திட்டிவிட்டால் நல்லது என்று தோன்றியது.

கார்த்திக் பதில் சொல்லுமுன் ரமாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“அம்மாதான். எடு. ஸ்பீக்கர்ல போடு.”

“ஹலோ ரமா, நீ சொன்னது சரிதான். ஒலிம்பியாட் பணம் கட்டத்தான் பள்ளிக்கூடத்திலிருந்து போன் வந்தது. கட்டியாச்சு. “

“அப்படித்தான் இருக்கும் என்று தெரிஞ்சாலும் ஸ்கூல்லருந்து ஃபோன் வந்தவுடன் கொஞ்சம் பதட்டமாகிட்டது. நீங்க இருக்கீங்க என்கிற தைரியத்தில்தான் இருந்தேன். தாத்தாவைப் பார்க்க கிளம்பின அவசரத்தில் அம்மா மறந்துட்டதா அவன்கிட்டே சொல்லுங்க. குழந்தையை கவனிச்சுக்குங்க. நீங்களும் வேளைக்குச் சாப்பிடுங்க.”

“சரிம்மா. நாங்க ரெண்டு பேரும் ஞாயிறு காலை அங்கே வரோம். டிரைவிங்ல இருக்கேன். பிறகு பேசறேன்.”

“சரிங்க. சீக்கிரம் போங்க. ஆத்விக் தனியா இருப்பான்.”

கார்த்திக் லேசாகத் திரும்பிப் பார்த்தான். ஆத்விக் கார்க் கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்னங்கள் ஈரத்தில் பளபளத்தன. இடது கையை மகனின் தோளில் வைத்தான். அதற்காகவே காத்திருந்தவன் போல அப்பாவின் கையில் சாய்ந்து கொண்டான் ஆத்விக். சற்றுமுன் பெய்திருந்த மழையில் துடைத்து விட்டது போல இருந்த சாலையில் விளக்குகள் பிரகாசமாக மின்னின.

– அன்னை ஸ்வரணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2026 ல் முதல் பரிசு பெற்று அந்த சிறுகதைத் தொகுப்பில் வெளியாகி இருக்கிறது. 

1 thought on “விடலைச் செருக்கு”

  1. Excellent story by Anuradha Jaishankar. A psychological story with a smooth, thrilling finish. Best wishes to the writer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *