வாழ்க்கைச்சுமை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 4,898 
 
 

‘தினமும் மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரங்களைக்கழுவி அடுக்குவது, வீட்டின் குப்பை பெறுக்குவது, துவைப்பது, துணிகளை அயன் பண்ணி வைப்பது, உறவுகள் வீடுகளுக்கு நல்லது, கெட்டதுக்கு போய் வருவது, குழந்தைகளைப்பெற்று வளர்ப்பது, வசவுகளை கேட்டும் எதிர்த்துப்பேசாமல் தாங்கிக்கொள்வது, தன் செலவுக்கு, தன் விருப்பச்செயலுக்கு கெஞ்சிக்கேட்டு பணமும், அனுமதியும் பெறுவது என பெண் என்பவளுக்கு வாழ்க்கை அமைப்பு முறை கொடுத்திருக்கும் வலி தரும் சுமை மிகவும் அதிகம்’ என நினைத்ததில் உறக்கமின்றி வருந்தினாள் விமலா.

“நீ என்னடி சொல்லறே….? உலகமே வாழற முறைதானே இது….? நீ மட்டும் எப்படி மாற்றமான வாழ்க்கைய வாழ முடியும்….? உன்னோட மாறான யோசனைய யாரும் ஏத்துக்க மாட்டாங்க. சின்ன இடைவெளி கிடைக்கிற போது டி.வி பார்க்கிறது, பிரண்ட்ஸ் கிட்ட போன்ல பேசறது, அம்மா வீட்டுக்கு போய் ஓய்வெடுக்கிறதுன்னு நமக்குப்பிடிச்சதை பண்ண முடியுமே தவுத்து, நீ சொல்லற மாதிரி மொத்தமா வெளில வர முடியாது விமலா” சொன்ன கல்லூரித்தோழி கனகாவின் பேச்சில் உண்மை இருந்தாலும் சுதந்திர தாகத்தை அதிகம் விரும்பும் தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்.

“நமக்குன்னு நினைவு வந்து விளையாடற பருவத்துல ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு ஒரே இடத்துல கட்டிப்போட்ட மாதர காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் பசிய, இயற்கை உபாதைகளை அடக்கி உட்கார வெச்சிடறாங்க. வீட்டுக்கு வந்ததும் டியூசன், மியூசிக், டான்ஸ்னு கூட்டிட்டு போறாங்க. நைட் தூங்கிடறோம். காலேஜ் வரைக்கும் இப்படியே சொந்த, பந்தங்கள் வீட்டுக்கு கூட போகாம படிப்புக்காகவே வாழ்க்கை போயிடுது. அதுலயும் ஹாஸ்டல் கொடுமை” சொன்னவள் கண்களில் கண்ணீர் துளி தெறித்து விழுந்தது.

“காலேஜ் முடிச்ச உடனே வேலை, கல்யாணம். அடுத்த மாசமே குழந்தை உருவானதும் ஹாஸ்பிடல், மாத்திரை மருந்து, ஓய்வு, வாந்தி, மயக்கம்னு வாழ்க்கை ஓடுது. குழந்தை பிறக்கும் போது உயிர் பயம், மரண அவஸ்தை, இல்லேன்னா வயித்த அறுத்து தெச்சு…. எல்லாம் முடிஞ்சு குழந்தைக்கு ஒரு வருசம் ஆகிற வரைக்கும் சரியான தூக்கமில்லாம ஒடம்பு வெயிட் போட்டு, அத விரதமிருந்து சரி பண்ணினா ஆண் வாரிசு வேணும்னு மாமியாரோட அடத்தால மறுபடியும் குழந்தை…. மறுபடியும் அதே சிரமம்” மூச்சு விடாமல் மனதில் உள்ளதைக்கொட்டினாள்‌ விமலா.

கனகாவால் தோழியின் பேச்சிற்கு மறு பேச்சுப்பேச இயலவில்லை. ஏனென்றால் அவளும் இந்த நிலையைக்கடந்திருப்பவள், கடந்து கொண்டிருப்பவள், கடக்கப்போகிறவள். விதி என நினைத்து விட்டதால் மனதை அடக்கிக்கொள்ளப்பழகியிருந்தாள்.

“அந்தக்காலத்துல நம்ம முன்னோர்கள் வாழ்ந்த முறையே நல்ல முறைன்னு எனக்கு படுது. அவங்க படிக்காம பதினஞ்சு வயசுலையே கல்யாணம் பண்ணிகிட்டாங்க. குழந்தைல இருந்து பசிச்சதும் சாப்பிட்டு, உபாதைகளை உடனே கழிச்சு, தூக்கம் வரும் போது தூங்கி, கவலையில்லாம விளையாடி உடல்நிலைய ஆரோக்யமா வெச்சிருந்தாங்க. உடல் பசிக்கு மட்டுமில்லாம, உணர்வு பசிக்கும் உடனே தீனி கொடுத்தாங்க. ஆனா நாம படிப்பு, படிப்புன்னு பருவ வயசையே பாழாக்கிட்டோம். உடல் பசியோட, உணர்வு பசியையும் அடக்கியடக்கி பணம் சம்பாதிக்க, வேலைக்கு போக வேண்டி படிச்சதால படிப்ப முடிச்சதும் அதத்தேடி ஓடி, வேலை பார்த்து சோர்ந்து உணர்வுகளை அடக்கினதால உணர்வே ஒடம்புல இப்ப செத்துப்போச்சு. படுக்கைல படுத்தாலே ஒடம்பு சுகம் கேட்கல. தூக்கம் தான் கேட்குது. உழைக்கவும், தூங்கவுமா பிறப்பெடுத்தோம்? அப்புறம் வேலைக்கு போயி சம்பாதிச்சாலும் வீட்டுக்கடன், கார் கடன், குழந்தைகளோட கல்விக்கடன், மருத்துவச்செலவுன்னு போயிடறதால வாழ்க்கையே நமக்குன்னு எதுவுமில்லாம மொத்தமா வீணாயிடுது. நம்ம பாட்டி தாத்தா நாலு தலைமுறை வாழ்ந்த வீட்லயே நூறு வயசு சுகமா வாழ்ந்தாங்க. நாம வாங்கின பங்களா வீட்ல ஐம்பது வருசங்கூட சந்தோசமா வாழ முடியல” சொன்னவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.

“வாழ்க்கை அமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும்” எனும் குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்த போது இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. விமலாவின் கணவன் ரமணன் அலுவலகத்திலிருந்து வந்தவர் பேசினார்.

“பரவாயில்லையே பெண்களுக்கு ஆதரவா முதலா ஒரு குரல் ஒலிச்சிருக்கு….” கனகா சிலேடையாக பேசினாள்.

“நான் சொன்னது வாழ்க்கை முறைன்னு தான் சொன்னேன். பெண்களின் வாழ்க்கை முறைன்னு சொல்லலியே….” கலாய்த்தபடி பேசினார்.

“அப்ப உங்களுக்கும்…. அதாவது ஆண் வர்க்கத்துக்கும் இப்ப வாழற வாழ்க்கை முறைல சந்தோசம் பிடிபடலையோ….?

“பெண்கள் நீங்க மகிழ்ச்சியா இல்லாதப்ப எங்களுக்கு எப்படி சந்தோசம் கிடைக்கும்?அதோட படிப்பு காலம் உங்களுக்கும் எங்களுக்கும் வேறில்லை. குழந்தைப்பேறு உங்களுக்கு கூடுதல் சுமை. ஆனா ஒரு வகைல அது சுகமான சுமை. அது இல்லேன்னா மனித குலமே அழிஞ்சிடுமே….? அத அழியாம காக்கிற பெண்களுக்கு முக்யத்துவம் கொடுக்கனம். முக்கியமா ஆண்கள் பெண்களிடத்துல வரதட்சணையே கேட்கக்கூடாது”

இந்த வார்த்தையைக்கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினாள் கனகா.

“சூப்பர். ரொம்ப நல்லவரா இருக்கீங்களே….? அப்புறம் எதுக்கு விமலா இப்படிப்புலம்பிகிட்டிருக்கறா..‌? ஒரு வேளை பேச்சில மட்டும் நல்லவரோ….?”

“நீங்களே கேளுங்களே….? கல்யாணமாகி இருபது வருசத்துல வெறும் பத்து ரூபா கூட என்னோட மனைவி வீட்ல இருந்து நான் கை நீட்டி வாங்கலே… ஆபீஸ்ல எனக்கும் வேலைப்பழு அதிகமா இருக்கறதால வீட்டு வேலைல மட்டும் உதவ நேரமில்ல. அது தான் விமலாவுக்கு கடுப்பு, வருத்தம், எல்லாமே….” சொன்னவர் மனைவி விமலாவைப்பார்க்க, விமலாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை சிறிதாக வெளிப்பட்டது.

“உலகத்தையே நம்மால மாத்தி விட முடியாது. நாம வேணும்னா நம்ம வாழ்க்கை முறையை மாத்திக்கலாம். விமலாவுக்கு வீட்டு வேலைகள்ல என்ன சிரமம் இருக்கோ அது எனக்கும் இருக்கு. அதை விட சில விசயத்துல அதிகமாகவே இருக்கு. அதையெல்லாம் சகிச்சிட்டு நான் சந்தோசமா இருக்க முயற்ச்சி பண்ணறேன். உனக்கு ஹஸ்பெண்ட் வீட்டு வேலைக்கு உதவாட்டியும் வேலைக்கு ஒழுங்கா போறார். மாசமானா வீட்டுச்செலவுக்கு பணம் வருது. ஆனா என்னோட ஹஸ்பெண்ட் வேலைக்கும் போகாம, டெய்லியும் பிரண்ஸோட சேர்ந்துட்டு குடிச்சிட்டு வந்து வீட்ல சண்டை போடறார், சந்தேகப்படறார். இதையெல்லாம் சகிச்சிட்டு நானும் வேலைக்கும் போயிட்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துட்டு வாழறேன்” சொன்ன கனகாவின் கண்களில் முதலாவதாக கண்ணீர் வெளிப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள் நிர்மலா.

“அடி பாதகி… இதெல்லாம் சொல்லாமலேயே இருந்திருக்கே…?”

“உன் கிட்ட சொல்லி புலம்பறதால என்னோட வாழ்க்கை மாறப்போறதில்லை. மாத்திக்கவும் முடியாது. ஒரு வழில போக ஆரம்பிச்சுட்டா வழி சரியில்லேன்னாலும் போகப்பழகிக்கனமே தவிர திருப்பிப்போய் வேற வழி தேடறதுக்குள்ள வயசு முடிஞ்சு போகும். அப்புறம் தோணும் இதுக்கு முன்னதே பரவாயில்லைன்னு. எனக்கும் ஆரம்பத்துல எங்க வீட்ல அம்மா படற சிரமங்களைப்பார்த்துட்டு கல்யாணமே பண்ணாம வாழ்ந்திடோணும்னு தோணுச்சு. ஒரு விசேசத்துல அவரைப்பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கனம்னு தோணிச்சு. பண்ணிகிட்டேன். அவ்வளவுதான். ஒரு நொடில எல்லாமே மாறிடிச்சு. ஒரு முடிவு எடுக்க வரைக்கும் யோசிக்கனம். அப்புறம் யோசிச்சம்னா நிம்மதி போயிடும். நம்ம பெண்கள் இப்படி வாழப்பழகினதுனால தான் மனித குலமே இருக்கு….” கனகாவின் பேச்சால் பிறரை விட நமது நிலை நமக்கு சாதகமாகத்தான் உள்ளது. நாம் தான் இல்லாததைத்தேடி இருப்பதை வெறுக்கிறோம் என்பதைப்புரிந்து கொண்ட போது விமலாவின் மனதில் கணவன் மீது இருந்த வெறுப்பு விலகி விருப்பு வளரத்தொடங்கியது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *