வாடாமல்லி
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 160
(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இதழ் 16-18 | இதழ் 19-21 | இதழ் 22-24
இதழ் 19 – பாதையில் கண்ட காதற் கனிவு

பாதையிற் பிறந்த பாலகன் கதை மாளிகையிற் பிறந்த மாதுக்குக் களிப்பூட்டிற்றேயன்றி, மாளிகை யிற் பிறந்தோர்க்கு வழக்கமான அருவருப்பூட்ட வில்லை. மூரட்டினுடைய காதல் தத்துவத்தை அறிந்தும் அவள் அவனையோ, கட்டற்ற காதல் வாழ்வு வாழ்ந்த அவள் தாயையோ பழிக்கவில்லை. அவள் உள்ளம் மலையின் சாரலில் மெல்லச் சரியும் பனிப் பாறைபோல், அவனை நோக்கிச் சரிந்துகொண்டுதா னிருந்தது. ஆனால் அச்சரிவின் வேகத்தை நெடுநாள் தடுத்து நிறுத்திய குத்துப் பாறாங்கல் ஒன்று இருந் தது. அதுவே காதல்பற்றிய அவள் உயர் கருத்து.
உலகில் பலருக்கு-சிறப்பாக அந்நூற்றாண்டின் மேலை ஐரோப்பாவுக்கு-காதல் ஓர்உடல்சார்ந்த இன்பம். .அது ஆணுக்கு இன்ப வேட்டை; பெண்ணுக்கு இன்பத் தூண்டில். வேடனது வேட்டை வெற்றியில் முடியும். அதற்கிரையான பெண்ணின் இன்பம் தூண்டிலிரையை நாடிய மீனின் இன்பம் போலச் சிற்றின்பமாய், பின் துன்பத்தையும் மீளா உளத் துயரத்தையும் இடிவை. யும் நல்கும். ஆணின் வெற்றி மேலும் பல வெற்றி களுக்கு முதற்படியாய் அமையும். அவன் காதல் துறையில் எத்தகைய மாபழிகளைச் செய்தாலும் அவ னுக்கு இயற்கை தண்டனை தருவதில்லை. அவன் மனச் சான்றும் மக்கள் மனச்சான்றும் அவனைக் குறை கூறுவதில்லை. பெண்ணின் தோல்வியோ மேலும் தோல்விகளுக்கு வழி காட்டுமேயன்றி மீட்புக்கு வழி காட்டாது. இயற்கையும் இரக்கமின்றி அவளைத் தண்டிக்கும். இயற்கை தன் தண்டனைகளைச் சிறிது தளர்த்தினால், மக்கள் கண்டிப்பர். மக்கள் சிறிது கனிவு காட்டினால், அவள் மனச்சான்றே அவளைத் தயங்காது உள்ளிருந்து ஓயாது உறுத்தும்.
இவற்றையறிந்த லாரைன் இத்தகு காதலைவிட நட்பை உயர்வாக எண்ணினாள். காதல் நட்பினும் உயர்வுடையது என்பது அவளுக்கு இதுவரை தெரி யாது. கணவன் காதல் அவளுக்கு நட்பாக மட்டுமே இருந்தது. ஆயினும் அவள் அந்நட்பையே காதல் எனக் கொண்டிருந்தாள். இப்போதோ அவள் உள்ளம் இதனைக் கடந்து காதலை நாடி வந்தது. ஆனால் மூரட் டின் நாடோடிக் காதலையறிந்து அவன் காதல் தத்து வத்தை அவன் பாடல்களால் உணர்ந்த அவள் அத்தகைய காதலில் சறுக்கி விழக்கூடாதெனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அதே. சமயம் மற்றப் பெண்களைப் போல அவள் தன் மன வுறுதியில் ஐயங்கொள்ளவில்லை. எனவேதான் காதலுக் கஞ்சி நட்பை உதறித்தள்ளாது, நட்பளவில் நின்று அதனை நுகர்ந்தாள்.
லாரைன் தன் ஓவியத்தைச் சாக்கிட்டு நாள் தோறும் மூரட்டைத் தன் மாளிகையில் சந்தித்தாள். ஆனால் உண்மையில் அரை மணி நேரம்கூட அவள் தொடுத்துத் தூரிகையில் வேலை செய்வதில்லை. அந்த அரைமணி நேரமும் காலை மாலை என்ற தட்டுப்பாடற்ற தாய் விட்டதனால், அவன் பெரும்பொழுதையும் அவள் மாளிகையிலேயே கழித்தான். இரண்டு உள்ளங்கள் ஒன்றன் கவர்ச்சியில் ஒன்று ஈடுபட்டிருக்கும்போது, பிரிவுக்குத்தான் தூண்டுதல் வேண்டுமேயன்றிக் கூடு வதற்குத் தூண்டுதல் தேவையில்லையன்றோ? நாளடை வில் மூரட் பெயரளவில் விருந்தாளியா யிருந்தானே யன்றி, உண்மையில் லாரைன் குடும்பத்தில் ஒரு குடும்ப உறுப்பினன் போலாய்விட்டான்!
அவன் வரவைப் பணியாட்கள் முதல் நாள்முறை நிகழ்ச்சிகளில் ஒன்றாக எதிர்பார்க்கலானார்கள். குழந் தைகள் அவனைச் சிறிது நேரம் காணாவிட்டால், தாயைக் காணாத சேய்கள்போல் மயங்கினர். லாரைன் அவன் வரவிலேயே எப்போதும் கருத்துச் செலுத்தியிருந்த தனால், அவன் வாயிலில் நுழைவது முதல் தன் அறை வருமளவும் அவன் செயல்முறைகள் எல்லாவற்றையும் அவற்றவற்றுக்குரிய தனி ஓசைகளாலேயே அறியத் தொடங்கினாள். அத்துடன் முன் அனுபவங்கள் இரு வருக்கும் வேறு வேறாயிருந்தாலும், அடிப்படையில் இருவர் கருத்துக்களும் போக்குகளும் பெரிதும் ஒத்தி ருந்தன. ஆகவே புறநிகழ்ச்சிகளில்கூட அவர்களுக்கு எத்தகைய சிறு கருத்து வேறுபாடுகளும் இல்லாதிருந் தது. பணியாட்கள், பிள்ளைகள், அயலார்க்கு இருவரில் ஒருவர் கருத்தே அடுத்தவர் கருத்தாக அமைந்தது.
ஓவிய அறையில் அவள் அவன்முன்னே இருக்கும் போதெல்லாம், அவளையறியாமல் அவள் உள்ளம் அவனைப் படம் பிடித்துக்கொண்டது. அவள் கூர் விழிகள் அவன் அங்க அமைப்பின் ஒவ்வொரு கூறினை யும் வாங்கி உள்ளத்துக்கு அனுப்பிவைத்து, என்று மழியா வகையில் பொறிப்பித்தன.
ஜூலை மாதத்தில் ஒரு நாளிரவு பெரும் பகுதியும் அவர்களிருவரும் அயலகத்திலுள்ள ஒரு விருந்தில் கழித்தனர். இத்தகைய தறுவாய்களில் லாரைன் தன் ஊர்தியில் தன் மாளிகைக்குத் திரும்புவது வழக்கம். மூரட்டும் தனியே குதிரையேறி மீளவிரும்புவதாகக் கூறிக்கொண்டு தன் அத்தை வீடு செல்வான். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக அவள் அவனைத் தன் னுடன் ஊர்தியில் வரும்படி கூறினாள். அவன் எப் போதும் போலச் சாக்குப்போக்குச் சொல்லவாயெடுத்த போது அவள் அவனைக் குறும்பு நகையுடன் நோக்கி ‘இன்று சாக்குப்போக்குக்கு வழியில்லை. வண்டி யோட்ட வேறு ஆளில்லை. உங்கள் நட்பை இன்று செயலில் காட்டவேண்டும்” என்றாள்.
தன் தாய் போலந்து நாட்டு நடுவரை அழைத்த அழைப்புப்பற்றிய கேள்வி நினைவு அவன் உள்ளங் கடந்து விரைந்து பாய்ந்தது. அன்றைய அனுபவம் முழுவதும் அதே நாள் கதையை அவனுக்கு நினை வூட்டுவனவாயிருந்தன.
வழியில் அவன் தன் சந்திப்புக்குரிய வேறு ஒன்றை எடுத்துரைத்தாள். தன் புதுக் குதிரையை இன்று வண்டியில் பூட்டியிருப்பதாகவும் அதற்குரிய விலை கொடுப்பதற்குள், அதற்குரிய மதிப்பை உள்ள வாறறிந்து கூறவே அவனை அழைத்திருப்பதாகவும் .அவள் கூறினாள். ஆனால் குதிரையின் இயல்புபற்றி அவள் மீண்டும் பேச்செடுத்ததாக அவனுக்கு நினைவு எதுவும் இல்லை. அவனும் அக் குதிரையின் இயல்பு பற்றி பிற்காலத்தில் ஒரே ஒரு குறைதான் கூறினான். அவ்வமுத வேளையின் அருமை அறியாமல் அது விரைந்து நடந்ததே அதன் ஒரு குறையாக அவன் கருதினான்.
அன்று மூரட் பழங்கால மன்னவ வீரர்போல எடுப் பான உடையணிந்திருந்தான். அதன் நீலநிறம் லாரைனின் நீலவிழிகளில் நிழலாடியது. அவளோ வானவில்லின் பன்னிறங்களையும் ஒளிக் கதிர்களின் முன் பகட்டும் சூரியபட அங்கியணிந்து வில்வெட்டுப் பட்டினாலமைந்த காலணிகளும் அணிந்திருந்தாள். அவள் வழக்கமாக அணிந்த கறுப்பு நிறத்தை ஆடை யருகுகளின் நிறம் மட்டுமே நினைவூட்டியது. ஆனால் இக் கறுப்பும் அவள் மெல்லிய உள்ளாடை கடந்து மின்னிய மேனியின் தூய வெண்மையை எடுத்துக் காட்டவே உதவிற்று. அவள் அன்று பகைவனை எதிர் கொள்ளப் புறப்பட்ட இராநங்கையென மூரட்டுக்குக் காட்சியளித்தாள்.
“குதிரையைச் சற்று மெல்லவே தட்டிவிடுங்கள். என் தலை சுற்றுகிறது. என் உடலெல்லாம் ஒரே தளர்ச்சியாயிருக்கிறது” என்றாள் அவள். ஆடல் பாடல்களில் கலந்து அவள் மேனி உண்மையிலேயே துவண்டிருந்தது. ஆடையணி மணிகளின் எடை வேறு அதனை அழுத்தியது.
“தங்கள் இறக்கைகளைக் கழற்றி வையுங்களேன்” என்றான் அவன். அவள் அதற்குக்கூட வலுவற்றவள் போல ஏங்கிப் பெருமூச்சு விட்டாள். அவன் அவள் தலையைத் தாங்கி அவள் அணிமணிகளையும் திண்ணிய மேலங்கியையும் ஒவ்வொன்றாகப் பூட்டவிழ்த்து வண்டி யில் களைந்தெறிந்தான். அது சிறுகச் சிறுக வளரும் மலைபோல அவள் முன்னிலையில் எழுந்து வளர்ந்தது. அவள் அதனை உணராதவள்போல அரைக்கண் துயில் கொண்டாள்.
அவன் தலை அவள் தோள்மீது படிந்தது. அவள் உடல் தலையறுந்த கொடிபோல அவன்மீது துவண்டு படிப்படியாகச் சரிந்து அவன்மீது கிடந்தது. காலை வேளையின் குளிர்ந்த நல்வாடைக் காற்று அவள் பொன்னிளங் கூந்தலையும் மெல்லிய உள்ளாடைகளை யும் நீவித் திரைத்து விளையாடிற்று.
சிறிது நேரம் அவள் தளர்ச்சியுற்று அரைத் துயி லில் ஆழ்ந்து கிடந்தாள். பின் அவள் கண்கள் சிறிது சிறிதாகத் திறந்தன. ஆனால் அவள் அவன் மடியி லிருந்து எழவோ, தன் நிலையை மாற்றிக்கொள்ளவோ விழையவில்லை. அவனை நோக்கிக் கனிந்த உள்ளத் துடன் “தாங்கள் உண்மையான நண்பர்” என்றாள்.
போலந்து நடுவரிடம் அன்னை கூறிய சொற்கள் அவன் நினைவுக்கு வந்தன. அவன் நினைவை அவளும் -அறிந்துகொண்டாள் என்னலாம். ஏனெனில் அவள் அடுத்த சொற்கள் அந்நிகழ்ச்சியை மீட்டும் நினைவு படுத்தின.
“தாங்கள் பாதையில் பிறந்ததாகச் சொன் னீர்கள். தங்கள் பிறப்பு வரலாறு என் உள்ளத்தைத் தொளைத்தது. ஏனெனில் நான் மாளிகையிலேயே பிறந்தாலும், வாழ்க்கையில் பாதையிலேயே விடப்பட் டேன். கூடத் துணை வந்த தமக்கை பாதையிலேயே என்னை விட்டுப் பிரிந்துபோய் விட்டாள். எனக்குத் துணையாயிருந்த என் கணவர் நடுவழியில் கண்டு நடு வழியிலேயே விட்டுவிட்டார். என் துயர்களுக்குப் பேராறுதல் தந்த சிறு நாய்ச் செல்வன் ரோஸிகூட எனக்கு நிலைக்கவில்லை. தங்கள் வாழ்க்கை வரலாறு அந்த ரோஸியையும் எனக்கு நினைவூட்டுகிறது. தங்க ளுக்கும் ஒரு நாய் உற்றதுணையாய் உதவியுள்ளது. நம் இருவரும் இரு வேறு வாழ்க்கையில் ஒருநிலைப்பட்டுள் ளோம். ஓரளவு என் வாழ்க்கையில் நட்பின் நிறைவைத் தங்களிடமே பெற்றேன். இது என்றும் குறைவுபடக் கூடாது; மாறவும் கூடாது என்பதே என் விருப்பம்” என்றாள் அவள்.
அவள் மீண்டும் கண்மூடினாள். காதலமுதம் அவன் முன் கட்டவிழ்ந்து கிடந்தது. அயலானுடன் இருக்கும் நங்கைபோல அவள் நடந்துகொள்ளவில்லை. அது அவ னுக்கு மகிழ்ச்சி யூட்டிற்று. ஆனால் காதலி போலவும் அவள் ஆர்வத்துடன் அவனை ஏற்கவில்லை. அவன் காதல் கோயிலினுள் அவனை வரவேற்றாள். ஆனால் நட்புத் திரை அவள் காதலுக்குக் கைவிலங்கிட்டு நிறுத் திற்று. “இது என்றும் குறைபடக் கூடாது; மாறவும் கூடாது என்பதே என் விருப்பம்.” அவள் விருப்பம் அவனுக்கு ஆணையாகவே அமையும் என்பதை அவள் எப்படியோ அறிந்து, அச்சமின்றி அவன் வசம் உடலை நம்பி ஒப்படைத்தாள். உள்ளம் அவனுடையது என் பதை அவள் அறிவாள். உடல் அவன் அடைக்கலமா யிற்று. ஆனால் காதல் எடுக்கக்கூடிய பொருளன்று; கொடுக்கத்தக்க பொருள். அமுதம் கைக்கொண்டு உண்ணமாட்டாத வயிற்றுவலிக்காரன்போல் அவன் கட்டுண்டிருந்தான்.
மாளிகை யணுகும்வரை அவள் அசைவற்று, அமைதியுடன், கவலையோ நாணமோ எதுவும் இல்லாமல், கிடந்தாள். அவனும் அகப்புயல்களினால் நாலாபுற மும் மேல்கீழும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டும் புறத்தே அசைவற்று அமைதியுற்று அமர்ந்திருந்தான். தேன் குடத்தில் வீழ்ந்து தத்தளிக்கும் தேனீப்போல அவன் தத்தளித்தான்.
அவனைப் பார்த்துப் படம் வரையும்போது புறத்தே தோன்றிய அவன் அக அழகைச் சிறுகச் சிறுக அவள் பருகியிருந்தாள். ஆனால் இது அவனுக் குத் தெரியாது. சிறுகச் சிறுக அளவறிந்து பருகிய தனால் அது அவளுக்குத் தெவிட்டா அமுதமாயிருந் தது. அத்துடன் அமுதம் அவள் அவா ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. வேண்டும்போது அவள் அதனை நுகரலாம். வேண்டிய அளவில் நுகரலாம். வேண்டாத போது அதனை ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால் மூரட்டின் காதல் வாழ்வு காதலடிமை வாழ்வாகவே இருந்தது. அவன் அவா ஆட்சியுள் அது அடங்க வில்லை. அமுதத்தை அவன் நுகர முடிவது அவன் விருப்பப்படியோ அவன் விரும்பிய அளவிலோ அல்ல. நுகரும்போது அவன் சிறுகச் சிறுகப் பருகவோ, அளவறிந்து பருகவோ எண்ணியதில்லை-அவள் அழகை அவன் கண் கொண்ட மட்டும் பருகினான். அது உளங்கொள்ளாது தெவிட்டிற்று. அவன்மீது இடப் பட்ட நட்புத்தளை அவன் உள்ளத்தின் பாய்ச்சலைத் தடுத்திழுத்தது. தளை அவனுள்ளத்தை ஈர்த்த இட மெல்லாம் கன்னிப் புண்பட்டது.
காதலாட்சி அவள் கையிலிருந்தது. அவன் அதில் மலர்போல் கசக்கப்பட்டான். மெல்லியல் மாதர்களையே கவிஞர் மலரென்று வருணிப்பார்கள். இங்கே அவன் மலரானான். அவள் அதனைக் கசக்கி நுகரும் காரிகை யானாள். இந்நிலை கண்டு அவள் புழுங்கினாள்.
மாளிகை வட்டாரம் அணுகியதும் அவன் மெல்ல எழுந்தான். அவன்மீது சாய்ந்திருப்பதில் அப்போதும் அவள் நாணம் காட்டவில்லை. தன் ஆடைகளைப் பூட்டிவிடும்படி அவள் அவனுக்கு நட்பாணையிட்டாள். உணர்ச்சி எதுவுமின்றி இயந்திரம்போல அவன் செய லாற்றினான். மாளிகை வந்ததும் அவள் தானும் கீழே இறங்கிப் பல்வகை எண்ண அலைகளில் மூழ்கியிருந்த அவனையும் கீழே இறக்கினாள். தன் பணியாட்களை விளித்துக் குதிரை பூட்டவிழ்க்கும்படி கூறிவிட்டு அவள் அவனிடம் இரக்கமின்றி விடைபெறலானாள். “தாங்கள் செய்த உதவிக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டவள். தங்கள் படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்றுடன் அது முற்றுப்பெற்றுவிடும். , ஆகவே இன்று வரத் தவறாதீர்கள். நான் தங்களுக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.
காதல் என்னும் வெந்நீரில் அவளை அவள் காதல் தெய்வம் அன்று குளிப்பாட்டிற்று. ஆனால் குளித்து முடியுமுன் அவளை நட்பென்னும் குளிர் நீர்த் தடத்தில் தள்ளிவிட்டுச் சென்றது!
அவளை அவன் வெறுக்கவும் முடியவில்லை; விரும்பிவிடவும் முடியவில்லை. அவளை விட்டகல அவனால் முடியவில்லை; ஆனால் விட்டகல அவன் தன் முனைப்பு அவனைத் தட்டி ஊக்கிற்று. இரு குதிரை களால் இரு திசை கட்டியிழுக்கப்படுபவன்போல அவன் உளைவுற்றான்.
எண்ணெய்ப் பசையறியாத அவன் தலைமுடியில் அன்று பூசப்பட்டிருந்த எண்ணெய்ப் பசையைப் போக்கிக் காலை வெளியின் வாடைக் காற்று அவனை எள்ளி நகையாடிற்று. அவன் தேர்ந்தெடுத்து, விருந் தகத்துக்கென அணிந்த ஆடை நெகிழ்ந்து பழைய அலங்கோல ஆடையை நினைவூட்டும் முறையில் ஊச லாடிற்று. காதலில் கசப்பு-நட்பில் வெறுப்பு-வாழ்க் கையில் உவர்ப்பு ஆகிய மூன்று உணர்ச்சிகளாலும் உந்தப் பெற்று அவன் தன்னறை சென்று படுக்கை யிற் புரண்டு சோர்வுற்றான்.
தன்னை அலைக்கழிக்கும் அக்காதல் தெய்வத்தின் மீது அவன் உள்ளூரச் சீற்றம் கொண்டான். தான்படும் பாட்டை அவள் படச் செய்யவேண்டும்-அவள் வாழ்க் கையில் பலவகையில் மொத்துண்டவள்தான்; ஆயினும் தன்னருமையை முற்றிலும் அவள் அறியச் செய்ய அவள் இன்னும் சிறிது படவேண்டியதுதான் என்று அவன் எண்ணிக்கொண்டான்.
எண்ணம் ஆவியுருவில் விரிந்தகன்று முகில் கோட்டையாக உருவெடுத்தது. தன் நிலை, தன் கடன் கள், மணம் செய்ய முடியாது தடங்கல் செய்யும் தன் சமயப் பயிற்சி ஆகியவை எல்லாம் அவ்வுருவுக்குத் திட்ப வடிவம் தந்தன. ஆம், மணமில்லா உறவிலேயே அவளைப் பிணைத்தல் வேண்டும். பிறர் காதல் புள்ளி மான்களை வதைத்து அழிவு செய்கின்றனர். நானும் என் புள்ளிமானை வாட்டி வதைப்பேன். ஆனால் இறுதி யில் அதனை நான் புறக்கணிக்கப் போவதில்லை. அதனை மடக்கி எனதாக்கி ஆட்கொள்வேன் என்று அவன் உறுதி பூண்டான்.
இதழ் 20 – போராட்டம்
மூரட்டின் சீற்றத்திடையே அவனுக்கு முன்பு தோன்றாத பல சிறு நிகழ்ச்சிகள் விளங்கத் தோன்றின. ஆடவர் பெண்டிருடன் காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டே அதில் சரிசமப் பொறுப்புக் கொள்ளாது விலகியிருப்பது ஆண்மரபு! இன்று அவ் வாண் மரபையே அவள் பின்பற்றி வருகிறாள் என்று அவன் கண்டான்.
முன்பு ஒரு நாள் அவன் பொழுது போக் காக அவள்மீது ஒரு பாட்டுக் கட்டி அவளை யாழ் வாசிக்கும்படி தூண்டி அதன் பண்ணில் அவளை ஈடு படுத்தியிருந்தான். அதைத் தன் காதலுக்கு ஒரு வெற்றியாக்கவே அவன் நினைத்தான். அவளும் அதனைக் கூசாது பாடினாள். ஆனால் அவன் எதிர் பார்த்த செயல் வெற்றிதான் கிடைத்தது; அது உணர்ச்சி வெற்றியா யமையவில்லை என்பதை அவன் இப்போது உணர்ந்தான்.
மென்மை, வனப்பு
மேதினி எங்குமே
மேவினும் என்ன பயன்?
மெல்லியலாள் இவள்
மேனி வனப்பதில்
மேவி மிளிராமே!
மேனி வனப்பது
மேவி மிளிராமே!!
வெள்ளாம்பல், சேதாம்பல்
விரிதரு மலர்களெல்லாம்
விரிந்தலர்ந் தென்னபயன்?
விரிதரு பொன்னவிர்
மேனியாள் மென்சாயல்
மேவி மிளிராமே !
மேனியாள் மென்சாயல்
மேவி மிளிராமே!
நீடிய புகழ் ஒளி
நிகரறு பெருந்திரு
நேரினும் என்ன பயன்?
நிறைவினுக் குயிர்தரும்
நீள்திரு நங்கைதன்
நினைவதிற் சாராமே!
நீள்திரு நங்கைதன்
நினைவதிற் சாராமே!!
ஆண்மையும் வீரமும்
ஆள்வுறு சூழ்ச்சியும்
ஆளினும் என்ன பயன்?
ஆரணங்கோர் ஆண்மை
அவாவுறும் ஆரணங்கு
ஆட்கொண் டருளாமே!!
அவன் பாடினான். அவள் யாழ் நரம்புகள் பாடின. அவள் உடலின் நரம்புகளும் உடன்பாடின. ஆனால் அப்பாட்டில் அவனைப் பற்றிய உணர்ச்சிகள் எதுவும் அவனுக்குக் காணப்படவில்லை. பாடலில் அவன் எழுப்பிய வினாக்களுக்கு அவள் தந்த விடை அவ்வினாக் களின் எதிரொலிகளே என அவனுக்குத் தோற்றிற்று.
அந்நிகழ்ச்சியின் பொருள் இன்று அவனுக்கு விளங்கிற்று. அவன் இதை நினைந்து இன்றும் ஒரு பாடல் எழுதினான். இது காதல் பற்றிய பாடலே. ஆனால் இன்றைய காதல் துறை வேறு. அது காதல், ஊடல் எல்லை கடந்து அவன் உள்ளக் குமுறலைச் சித்திரித்தது. அது அவள்மீது குற்றச்சாட்டுத் தெரிவித்தது.
பாவியல் காதலி
ஓவியந் தீட்ட
உவந்து முனைந்தனளே!
ஓவிய மாதிரி
உயிர்கொண் டியங்கிற்று!
ஆனால்,
ஓவியக் காதலில்
உயிரது தானில்லை!
பாவியல் காதலி
பல்வண்ணந் தீட்டிப்
பலபட மயங்கினளே!
ஆவியின் மெய்வண்ணம்
எவ்வண்ணம் அறிகிலாள்!
ஆனால்,
பல்வண்ணத்தே அங்கே
மெய்வண்ணம் தானில்லை !
பாவியல் காதலி
காதல் வரைந்தனள்
நட்பெனும் சட்டத்திலே!
நட்பு நகைத்தது
காதல் பதைத்தது
ஆனால்,
நல்ல அச்சட்டத்தில்
நற்படம் தானில்லை!
பாட்டு அவனுக்குக் களிப்பூட்டியது. குற்றச் சாட்டு அவனுக்கு ஆறுதலளித்தது. அதைக் கண்டு அவள் அடையும் உளப்பாடு மெய்ப்பாடுகளை எண்ணிப் பார்க்க அவனுக்குச் சிறிது ஊக்கம் பிறந்தது. பாட்டைத் திருத்தமாக ஒரு தாள் நறுக்கில் எழுதிச் சட்டைப் பையினுள் வைத்துக்கொண்டான்.
கடைசி இருப்பு மிக எளிதில் முடிவுற்றது. அன்று மூரட் எதுவும் வாயாடவில்லை. அவளும் முழுதும் படத் திலேயே கருத்துச் செலுத்தினாள். ஒருமுகப்பட்டு நெடு நேரம் உழைத்ததனால் அவள் சோர்வுற்றிருந்தாள். ஆகவே தோட்டத்தில் சென்று சிறிது உலவி வருகிறேன் என்று வெளியே சென்றாள்.
சிறிது நேரம் கழித்து அவள் மீண்டு வந்தபோது மூரட் அங்கே இல்லை. தன்னிடம் கூறாமல் அவன் என்றும் வீட்டை விட்டுப் போனதில்லை. ஆகவே மாளிகையில் எங்காவது இருப்பான் என்று நினைத்து ஆள்விட்டு அழைத்தாள். அவனை எங்கும் காணவில்லை என்று பணியாட்கள் கூறவே வியப்பு அடைந்தாள். அச்சமயம் தன் ஓவியச் சட்டத்தில் சொருகியிருந்த தாள் நறுக்கு அவள் கண்ணில் பட்டது. அதை எடுத்து அப்பாடலை வாசித்தாள்;
அவள் உள்ளத்தை அப்பாடல் ஒருபுறம் உருக் கிற்று. மறுபுறம் அது அவள் தற்பெருமையை முற்றி லும் குத்திக் காட்டிற்று. அவன் உள்ளூரப் படும் பாட்டை அவள் அறியாமலில்லை. அது அவள் தற்பெரு மைக்கு ஊக்கமே அளித்தது. ஆனால் அவன் குற்றச் சாட்டை அவள் ஏற்கமுடியவில்லை. அவன் விளை யாட்டுக் காதல் விளையாடுபவர்களுக்கே ஏற்றது. அதனைத்தான் குறை கூறவில்லை. அதனை ஒரு விளை யாட்டுக்காக மட்டுமே தானும் கொள்ளமுடியும். காதல் வேடனாகிய அவனுக்கு அவ்வேட்டைக்குப் பலியாகக் கூட மடநங்கையர் எத்தனையோ பேர் மாநிலத்தில் ‘கிடைக்கக்கூடும். தன்னை அதில் சிக்க வைக்க அவனுக்கு என்ன உரிமை? தான் அதில் சிக்காதது கண்டு கோபங் கொள்வது, குற்றச்சாட்டு விடுப்பது எத்தனை திமிர்கொண்ட செய்கை? இதற்கு அவனுக்குச் சரியான இடிப்புரை நல்க வேண்டும் என்று அவள் தனக்குள் உறுதிசெய்து கொண்டாள்.
உறுதி அவளுக்கு ஊக்கம் தந்தது. அதை மீட்டும் மீட்டும் வலியுறுத்தி அதன் வெற்றியில் ஊடாடுவது இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் அந்தோ! அவள் அறியாத மாறுதல் அவளிடம் உள்ளூர ஏற்பட்டு வந்தது. அவ்வுறுதி நிறைவேற்றிவிடும் ஆர்வத்தில் அவள் தனக்கு வழக்கமான அமைதியை இழந்தாள். மூரட் எப்போது வருவான், அவன் காதலை நையாண்டி செய்து கடிந்து அவனைப் பணிய வைப்பது எப்போது என்று அவள் படபடக்கலானாள். வேறு எதிலும் அவளால் சிறிதும் கருத்துச் செலுத்த முடியாது போயிற்று. குழந்தைகளிடம்கூட அவளால் அன்று அமைதியுடன் நேரம் போக்க முடியவில்லை. ஒரு பக்கம் அவனைக் காணவேண்டும் என்ற படபடப்பு, மற்றொரு புறம் அவனை வன்மையாகக் கண்டித்துப் பணிய வைப் பதற்கான திட்டம்; இவ்விரண்டிற்குமிடையே அவள் ஒவ்வொரு நொடியும் கழிந்தது.
அவள் மீண்டும் மீண்டும் அப்பாடலை வாசித்தாள். பாடலின் செறிவும் செப்பமும் அவள் உள்ளத்தைக் ‘கொள்ளை கொண்டன. ஆனால் அதன் கருத்து அவளைத் துளைத்தரித்தது. அவன் காதல் கவிதைக்கு உகந்ததாயிருக்கலாம். கவிதை, கலை என்ற முறை யில் எல்லாரையும்போலத் தானும் அதில் ஈடுபடமுடியும். ஆனால் அவன் காதலுடன் என் பெயரை அவன் ஏன் சேர்த்திணைக்க வேண்டும். நான் அத்தகைய காதலுக்கு இரையாக்கப்படக்கூடியவள் என்று நினைக்கிறானா? எவ்வளவு திண்ணக்கம் இருக்கவேண்டும் அவனுக்கு? ‘மீட்டும் அச்சொல்லை என் வகையில் பயன்படுத்தா திருந்தால் மட்டுமே என் நட்பு உனக்கு உரியதாகும். அன்றேல் என் நட்புக்கும் நீ அப்பால் சென்றுவிடுவாய்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுகிறேன் என்று அவள் தனக்குள் உறுதி வகுத்தாள்.
மறுநாள் மாலை பெட்டி வண்டியில் ஒரு நாடகக் காட்சிக்குச் செல்ல அவள் எண்ணி யிருந்தாள். அதன் முடிவில் மூரட்டிடம் பேசவேண்டும் என்றும், அவன் பாடலை வினயமாக எடுத்துக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல், மேளாப்பாகவும் நையாண்டியாகவும் பேசி அவன் காதல் பசப்பில் அவனே வெட்கமுறும்படி செய்யவேண்டுமென்றும் அவள் இப்போது மனக்கோட்டை கட்டினாள்.
ஆனால் அவள் மனக் கோட்டைகள் முற்றுப்பெற வில்லை. அவள் சற்றும் எதிர்பார்ப்பதற்கு முன்பே அவன் அக்கோட்டைகளைக் கிழித்துக் கொண்டு வந்து விட்டான். தன் திட்டங்கள் குலைந்துவிடும் என்பதை அவன் முகத்தைக் கண்டதுமே அவள் உணர்ந்து கொண்டாள். அவன் முகம் கன்னி வீங்கிப் போயிருக் தது. அவனுக்கு அது குறும்பாகவோ, விளையாட் டாகவோ இருந்ததெனக் கூற முடியவில்லை. இத்தனை யும் அவன் நடிப்பு என்றால், அவன் நடிகர் எவரையும் விட நடிப்புத் திறமிக்கவன் என்றே கூறவேண்டி யிருக்கும்.
நாடகத்திற்கு முந்தியோ நாடகக் கொட்டகை யிலோ அவனிடம் பேச அவள் விரும்பவில்லை. நட்புக் கும் பெருந்தன்மையான விட்டுக்கொடுப்புக்கும் மேற் பட, அவனுடன் அவள் சரி சமமாகவோ, நெருங்கிய பழக்கமுடையவளாகவோ காட்டிக்கொள்ள விரும்ப வில்லை.
நாடகத்துக்குப் போகும் வழியில் மூரட் பேச்சு எதையும் தொடங்கவில்லை. அவன் சீற்றம் நட்பு முறை யில் பொதுப் பேச்சு பேச இடந்தரவில்லை. நாடக மேடையில் அவர்கள் இருக்கைகள் குடும்ப இருக்கைக ளாகவே அமைந்தன. வெளியார் எவரும் தெளிவாகக் காணமுடியாதபடி அவை திரையிடப்பட்டிருந்தன. இருவர் இருப்பது தெரியுமேயன்றி அவர்கள் தோற் றமோ பேச்சோ வெளியாருக்குத் தெரியவராது. எனவே அவ்விடம் தனிப்படப் பேசுவதற்கேற்ற வாய்ப் புடையதாயிருந்தது. லாரைன் இதை அறிந்து தானாக எதுவும் பேச இடம் கொடாமல் வாளா இருந்தாள்.
மூரட் தானாகவே பேச்சைத் தொடங்கினான். “”ஓவியம் முன்மாதிரியாக இனி தாங்கள் என்னை அழைக்கப் போவதில்லை என்று எண்ணுகிறேன்” என்றான் அவன்.
லாரைன்: தற்காலிகமாகவன்றி நிலையாகவே நான் அழைக்காமலிருக்க நேரிடும்; என் ஓவியச் சட் டங்கள்மீது அன்று எழுதிவைத்தது போன்ற போலிக் காதற் பாக்களை ஒட்டி வைப்பதாயிருந்தால்!
மூரட்: போலிப் பசப்பு. எது போலி, எது பசப்பு! அதில் எழுதியிருந்த ஒவ்வொரு சொல்லும் என் வாழ் வையும் உயிரையும் பிழிந்தெடுத்த துளிகள்!
லாரை: உங்கள் வாழ்க்கையே இத்தகைய கவிதை. களால் ஆனவை. வேறு வாழ்வை நீங்கள் அறியமாட் டீர்கள். எனக்கு அத்தகைய வாழ்க்கைச் செய்திகள் பழக்கப்படவில்லை. என் நட்பு உங்களுக்கு வேண்டு மானால், நீங்கள் என்முன் காதல் என்ற சொல்லையே வழங்கப்படாது. அச் சொல்லுக்கு நீங்கள் கொள்ளும் பொருள் வேறு; நான் கொள்ளும் பொருள் வேறு.
மூரட்: நீங்கள் கொள்ளும் கருத்தென்ன?
அவள் திடுக்கிட்டாள். பேச்சின் போக்குத் தனக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்பதையும், தன் சொல் லாலேயே தான் அதற்கு இடங்கொடுத்து விட்டதை யும் அவள் கண்டுகொண்டாள். சிறிது தயங்கி நின்று, பின் “உங்களுக்குக் காதல் வாழ்க்கை நிகழ்ச்சிக ளாகிய சங்கிலித் தொடரில் ஒரு கண்ணி; வாழ்க்கைப் புகழாரத்தில் ஒரு புகழ் மலர்; ஒரு தற்காலிகச் செய்தி. எனக்கு அது ஒரு மனிதர் வாழ்வில் ஒரே தடவை நிகழக்கூடிய புயல்.
மூரட்: ஆம், அதை நான் இப்போதுதான் உணர்கிறேன்.
மூரட்டின் குரல் அவன் உள்ளார்ந்த போராட்டத் தின் விளைவால் தழுதழுத்து விம்மிற்று. அவளுடைய உள அமைதி கலைவுற்றது. ஆயினும் அவள் வெளிக்கு அதைக் காட்டிக்கொள்ளாமல், “தங்கள் சொற்களில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றாள்.
மூரட்: எதனால்?
லாரை: காதலைப்பற்றிய தங்கள் எண்ணத்தை எல்லாரும் அறிவார்கள். உங்கள் காதற் பாடல்களில் பலவற்றை நானும் அறிவேன், எடுத்துக்காட்டாக,
துடியிடை சூழ்கரம் அணைக்கவே,
வெடிபட வெம்மொழி தடுக்கவே,
வெடுக்கென எடாக்கனி எடுத்தல்போல்
இனிப்பதிவ் வுலகினில் யாதரோ?
இப்பாட்டு உங்கள் உள்ளத்திலிருந்து எழுந்ததுதானே! நீங்கள் இப்போது கூறியது ஓருணர்ச்சியில், ஒரு நேரத்தில். அது வேறோர் வேறொரு உணர்ச்சியில் வேறோர் நேரத்தில். அவ்வளவுதானே!
மூரட்டின் முகம் சுண்டிற்று. அவன் சிறிது நேரம் பேசமுடியாது கல்லாய்ச் சமைந்தான். ஆனால் அவன் கடுந்துயரை அந்த மௌனம் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. எங்கே அவன் பேச்சு மட்டுமன்றி மூச்சும் அற்றுவிட்டதோ என அவள் அஞ்சினாள்.
அவள் உறுதி கலையவில்லை. ஆனால் உள்ளங்’ கனிவுற்றது. அவனுக்கு இச்சமயம் விட்டுக்கொடுத் தாகவேண்டும் என்று அவள் துணிந்தாள். அவள் குரலில் முன்னைப் பாசத்தில் பாதி இடம்பெற்றது.- என்றுமில்லாத புதிய கனிவும் அதில் தோய்வுற் றிருந்தது.
“இதோ பார், ஸ்டானீ! எனக்கு உன்னிடம் எத் தகைய சீற்றமும் கிடையாது. நீ என்றுமே என் நண் பர்களுள் ஒருவனாக இடம் பெற்றுவிட்டாய். மற்ற எந்த நண்பரும் உன்னளவு என் உள்ளத்தின் ஆழ் தடத்தை எட்டியதில்லை. நீ ஏன் பொறாமைப்பட வேண்டும்.”
“எனக்கு யார்மீதும் பொறாமை ஏற்பட்டதில்லை. என் உணர்ச்சிக்கு நட்புப் போதாது.”
“அப்படியா? மிக நன்று. நாம் உடன்பிறப்புரிமை உடையவர்கள். நீயும் நானும் அண்ணன் தங்கை யாகவே நேசித்து வாழ்வோம். நட்பைவிட இது உங்கள் உணர்ச்சிக்கு மிகவும் ஆறுதல் தருமல்லவா?
“நான் வேண்டுவது நேசமுமல்ல; உணர்ச்சியுமல்ல. இவற்றைக் கடந்து செல்ல விரும்புகிறேன்.”
அவள் தொனி மீண்டும் சற்றுக் கடுமையாயிற்று.
“மன்னிக்கவேண்டும். தங்கள் உணர்ச்சிக்கேற்ற இடம் தாங்கள் வேறு பார்க்கவேண்டியதுதான். என் ஆற்றலுக்குட்பட்ட எல்லாம் தங்களுக்குத் தந்தேன். நம்பிக்கை, பற்றுறுதி, கள்ளமற்ற, உள்ளந்திறந்த வாய்மை, என் மாளிகை, என் கூட்டுறவு, என் குழந் தைகள் தோழமை, இவை யாவும் உங்களுக்குரிய வையாயுள்ளன. இன்னும் என்ன வேண்டும்?”
அவள் மனநிலையை அவன் ஓரளவு உய்த்தறிந் தான். இப்போது முறித்துக் கொண்டுவிடுவதால் எப் பயனுமிராதென அவன் எண்ணினான். அவனிட்ட திட்டம் நிறைவேற வேண்டுமே. ஆகவே அவன், ‘“நான் உங்களை எப்போதுமே தனியாகக் காணமுடிவதில்லை. நட்புக் கடந்த பிறப்புரிமை இதுவா?” என்றான்.
அவள் உள்ளத்தின் மீது உள்ளூர அழுத்தி வந்த ஒரு பளு நீங்கிற்று. “இது ஓர் அகற்றமுடியாத குறை யன்று. எனக்கும் அடிக்கடி தங்களுடன் தனியே யிருந்து உரையாடவேண்டும் என்ற அவா உண்டு. அத்தகைய தறுவாய்களை இனி நானே உண்டுபண்ணிக் கொள்கிறேன். இனி என்றும்போல் என் உடன்பிறப் பாளனாக என்னுடன் வந்து கலந்து கொள்ளலா மல்லவா?”
அவள் கேள்வி அவள் உள்ளார்ந்த கவலையையும் ஆர்வத்தையும் காட்டிற்று. அவன் தனக்குள் புன்முறு வல் செய்துகொண்டான். ‘பெண்கள் இயல்பு மிகப் புதுமை வாய்ந்தது. அது எள்ளுக் கொடி தரமாட்- டேன்; கொள்ளுக்கொடி தருவேன் என்னும்’ என்று அவன் உள்ளம் கூறிற்று.
நாடகத்தின் ஒரு பாதி இதற்குள் கழிந்துவிட்டது. ஆனால் முன்கதைத் தொடர்பின் கவலையின்றி, என்றும் போல அவர்கள் நாடகத்தை ஒருங்கு கூடியிருந்து கண்டு மகிழ்ந்தனர்.
ஆனால் நாடகம் முடிவதற்குக் காத்திராமல், ஒன் பது மணிக்கே வெளிவந்து ஒரு விருந்து மாளிகைக்குச் செல்லவேண்டும் என்று லாரைன் திட்டமிட்டிருந்தாள். மூரட்டுடன் கடுமையாகப் பேசவும், தன் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துக்களை ஒளித்து விளையாட்டுப் போக் கில் பேசவும் நினைத்த அவள், முதலில் அவனுடன் ஊடலில் ஆழ்ந்தும் பின் கூடலில் மகிழ்ந்தும் நேரம், சூழ்நிலை யாவற்றையும் மறந்தாள். நாடகத்தின் காட்சிகளிடையே தற்செயலாகக் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி 9-20 ஆய்விட்டது.
அவள் உடனே அங்கிருந்த ஏவலர் மணிப் பொறியை இயக்கினாள். ஏவலன் வந்ததும் உடனே வண்டி கொணரும்படி ஆணையிட்டாள். மற்றோராளை அனுப்பித் தான் சிறிது தாமதித்தாலும், வருவது உறுதி என்று விருந்தினருக்கு அறிவிக்கச் செய்தாள்.
அருகிலிருந்த ஓய்வறைக்குச் சென்று அவள் விரைந்து விரைந்து தன் கலைந்த முடியைத் திருத்திக் கொண்டாள். மூரட்டும் விரைவு காட்டி அவள் மேலா டையை எடுத்து அவள் மீதிட்டு அதன் பூட்டுக்களை அவன் மாட்டினான். தானே அவளைக் கைகொண்டு தாங்கி, விரைந்து வண்டியிலேற்றிப் பின் தானும் ஏறி உட்கார்ந்தான்.
அவள் இப்போது காதல் விளையாட்டில் ஈடுபட வில்லை. ஆனால் அவள் உள்ளம் அவளையும் மீறி முன்னால் வண்டிப் பயணத்தைச் சுற்றிச் சுற்றி வட்ட மிட்டது. அவனுடைய வாதங்களைவிடத் தன் உள்ளுணர்ச்சியின் அவாக்களே அவன் காதலுக்குத் தூண்டிலிட்டு வந்தன என்பதை அவள் உணர்ந்தாள்.
“முன் நட்பாட்சி என்னிடம் இருந்தது. காதலாட்சியும் என்வசமிருந்தது. இப்போது நட்பாட்சியை அவனிடம் உரிமையாகக் கொடுத்துவிட்டேன். காத லாட்சியிலோ என் உறுதி என்னைக் கட்டுப்படுத்து கிறது. அவனை எதுவும் கட்டுப்படுத்தவில்லை” என்று முணுமுணுத்தது அவளுள்ளத்தினுள் ஒரு குரல்.
இதழ் 21 – ஊடலும் கூடலும்
காதலர் இப்போது காதலராக நடிக்கவில்லை. அவர்கள் ஒப்பந்தப்படி அவர்கள் உள்ள உணர்ச்சிக்கு இப்போது “உடன்பிறப்பின் உரிமை நேசம்” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. இப்போர்வையினுள் ளிருந்துகொண்டே காதலின் உணர்ச்சி அவர்களை இயக்கிற்று. லாரைன், உண்மையிலேயே காதலின் தன்மையை அறியாதவள். தன் உள்ளத்தை உள்ளி ருந்து இயக்கும் உணர்ச்சி காதலாகவே இருக்கவேண் டும் என்று அவள் ஓரளவு உணர்ந்துகொண்டிருந்தா ளாயினும், அதனை வேறு எவரும் அறியாதபடி மறைத்து, நட்பின் திரையில் அதனை வரிந்துகட்டி அவ்வெல்லையினுள் அதனை அமிழ்த்திவைக்க எண்ணி னாள். ஆனால் உண்மையில் இவ்வெண்ணம்கூடக் காத லின் ஆற்றலுக்கு ஒரு சான்று என்பதை அவள் உணர வில்லை. காதலில்லாவிட்டால் நட்பின் திரையை அவள் நாடியிருக்கவேண்டியதில்லை. அதன் மறைவில் தன் உணர்ச்சிக்குரியவனைக் கட்டுப்படுத்தி அவனைக் காணும் வாய்ப்பை உண்டுபண்ணிக்கொள்ள இத்தனை தற்புரளிகளை வகுக்கவும் வேண்டியதில்லை. மூரட்டைப் பற்றியமட்டில், ‘நட்புத் திரை’ உண்மையில் ஒரு திரையாகக் காணப்படவில்லை. அது அவளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடிப்பே அதன் மறைவிலிருந்து காதல் பொறியைத் தான் தன் மனம்போல முன்னிலும் திறம்பட இயக்க முடியும் என்பதனையும், நேரிடையான காதலால் சாதித்துக்கொள்ள முடியாத காரியங்களைக் கூட இத்திரையால் சாதித்துக்கொள்ளலாம் என்றும் அவன் கண்டான்.
அவள் உள்ளார்ந்த இரண்டகமும் தன் வஞ்சனை யும் அவன் நேரிய ஒருமுகப்பட்ட முயற்சிக்கு உதவின.
அவர்கள் சென்றிருந்த விருந்துக் கூடத்தில் லாரைனும் மூரட்டும் பல நண்பர்களிடையே நண்பர் களாக அமர்ந்தனர். ஆனால், அவன் லாரைனுக்கு நேரெதிராக, ஆனால் சற்றுச் சாய்முகமான இடத்தில் சென்றமர்ந்து கொண்டான். இதனால் மற்ற எவரும் கவனியாதபடியே அவன் அவளைக் காணவும் அவள் அழகைக் கண்டு பருகவும் முடிந்தது. லாரைன் அவன் சூழ்ச்சித் திறம் கண்டு பொருமினாள். ஆனால் அவளால் நேரிடையாக அவனைக் கண்டிக்க முடியவில்லை. அவ னைக் காதலனாகத் தான் நடத்த முடியாதாதலால், அவன்மீது கோபப்படவும் வழியில்லை. தன் நட்புறுதி. அவனுக்குப் போதிய கட்டுப்பாடு தராமல், தன்னையே கட்டுப்படுத்துகிறது என்பதை உணர்ந்த அவள் உள்ளூரத் தன்னையே கடிந்துகொண்டாள். அதே. சமயம் அவன் பார்வையில் தன் உள்ளம் உண்மையில் ஈடுபட்டு மகிழ்வதை அவன் முகத்தின் நிறமாறுதல் எடுத்துக்காட்டுவதையும் அவள் உணர்ந்தாள். அவி னுக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் இதனால் தன் உள்ளுணர்ச்சி துலங்கிவிடப்படாதே என்று அவள் அஞ்சி அஞ்சி நடுங்கினாள்,
உயர்குடியினர் விருந்துக் கூடங்களில் பேச்சுக் களில் பெரும் பகுதி காதல் பற்றியதா யிருப்பது இயல்பு. இதுவும் லாரைனுக்கு இப்போது தலையிடியா யிருந்தது. அவள் உள்ளம் அதில் ஈடுபடாமலிருக்க முடியவில்லை-அவள் காதலின் மறைப்பும் புதுமையும் இம்மறை தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை.
அவள் கணவரின் நண்பருள் ஒருவரும் அவளால் உயர்வாக மதிக்கப்பட்டவரும் ஆன கோமான் தேசேகரே இத்தடவை அப்பேச்செடுக்கக் காரணமா யிருந்தார். அவர் வந்ததும் அவளுக்கு வழக்கமான முறையில் முகமன் கூறாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். மற்ற நண்பர்களிடம்கூட அவர் நேராகப் பேசவில்லை. லாரைன் சென்று அவரிடம் “உடம்புக்கென்ன? ஏன் பேசாதிருக்கிறீர்கள்?” என்றாள்.
அவர் அவள் முகத்துக்கெதிரே ஒரு தாள் நறுக்கை எறிந்து, “இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் புதிய கவிதை நண்பர் மூரட்டுடன் சேர்ந்துகொண்டு எனக்குத் தந்துள்ள கூட்டுப் பரிசை!” என்றார்.
லாரைன், அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். ஆம். மூரட்டின் கவிதைக் குறும்பில் அவளும் ஈடு பட்டு, தேசேகருக்கு மிகப் பொருத்தமான ஓர் இலத் தீன் கவிதையை அவள் தன் இனிய ஃபிரஞ்சு நடையில் மொழிபெயர்த்திருந்தாள். மூரட் அதில் தான் ஓர் அடியைச் சேர்த்து, தன் பெயரையும் லாரைன் பெய ரையும் அவ்வடியிற் பொறித்துத் ‘திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தான். தேசேகர் இதனால் அடைந்த மனத்தாங்கலை மாற்ற அவள் அரும்பாடு படவேண் டியதாயிற்று. இறுதியில் ஒருவாறு அமைந்த பின் தான் இவ்வளவு எளிதாக அதில் மனத்தாங்கல் அடைப ரல்லரென்றும், இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளும் தம் மனத்திற்குத் தொல்லை தந்திருந்தன வென்றும் கூறினார். எல்லாரும் அந்நிகழ்ச்சிகள் யாவை என்ற னர். அவர் மற்றொரு அனுபவத்தை விரித்துரைத்தார்.
தேசேகர் படைத்துறையில் அலுவல் பார்த்தவர். அவர் மேலாளாக சாட்டர்ன் பணியாற்றினார். தேசேக ரின் கீழ்ப் பணியாற்றிய ஒருவன் அடிக்கடி பணியி லிருந்து ஓய்வு கோரிவந்தான். அவர் ஒரு தடவை விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவன் நேரடியாக சாட்டர்னுக்கே மனுவிட்டு ஓய்வு கோரத் துணிந்தான். அவனுக்கு ஓய்வும் கிடைத்துவிட்டது. தேசேகர் தன்கீழ்ப் பணியாற்றிய ஒருவனுக்குத் தன்னைப் பொருட்படுத்தாமல் ஓய்வு கொடுத்ததுபற்றி சாட்டர் னிடம் குறைபட்டார். சாட்டர்ன் சிரித்துக்கொண்டே அவரிடம் விளக்கம் கூறினார். “நான் உங்களை அவ மதிப்பதற்காக அப்படிச் செய்யவில்லை. அவன் எதற் காகக் கேட்டான் என்ற மறை செய்தியை நான் அறி வேன். இத்தகைய மனிதக் குறைபாடுகளை நீங்கள் அறிவதுமில்லை, மதிப்பதுமில்லை. அத்துடன் இந் நிகழ்ச்சியில் தனிப்பட்ட சுவை வேறு உண்டு. அவன் எனக்குக் கடிதம் எழுதி ஓய்வு பெற்றது தன் காதற் கிழத்தியைச் சென்று காண்பதற்காகவே. எனக்குக் கடிதம் எழுதிய அதே நாளில் அவளுக்கும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால் மறதியாக அவன் இரண்டு கடிதங்களையும் தலைமாறி உறைகளில் போட்டு அனுப்பி விட்டான். என் கடிதம் காதலிக்குச் சென்றிருக்க வேண்டும். காதலிக்கு எழுதிய கடிதமே எனக்கு வந் தது. அதைப் பார்த்ததும் மறு பேச்சின்றி ஓய்வு கொடுத்துவிட்டேன். நீங்களும் அதை வாசித்துப் பார்க்கலாம்–மனிதர் குறைபாடுகளை அறிந்து, அதனால் நீங்கள் கோபங்கொள்ளாமல் மட்டும் இருக்கவேண்டும் என்று கோருகிறேன். ஏனென்றால் அதில் உம்மைப் பற்றிய அவன் உள்ளார்ந்த கருத்தைத் தன் காதலிக் குத் தெரிவித்திருக்கிறான்” என்று கூறி சாட்டர்ன் அக்கடிதத்தை தேசேகரிடம் காட்டினார்.
அக்கடிதம் வருமாறு: “என் உயிர்க் காதலியே, உன் இனிய தோள்களை நான் வந்து அணையவிடாமல், அந்தக் கொடியோன் தேசேகர் பிடிவாதமாக எனக்கு ஓய்வு மறுத்து வருகிறான். ஆனால் என் உயிர்த் தோழியை நான் வந்து காண்பது அவரால் தடைபடா மல் இருக்க நான் கடவுள் வரைக்கும் சென்று முறை யிடத் தவறமாட்டேன். சாட்டர்ன் வேறு எது அறிந் தாலும் அறியாவிட்டாலும் காதலுள்ளங்களை அறிந்த வர். அவர் கட்டாயம் எனக்கு ஓய்வளிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். நான் படைத்துறையில் சென்றி ருப்பதே உனக்காகத்தான் என்பதை தேசேகர் போன்ற அறிவிலிகள் எப்படி அறிவார்கள்? போர் எதிரிகளுடன் தான் போராடவேண்டும். இங்கேயோ கேடுகெட்ட அமைதிகாலப் போராட்டமே நடைபெற வேண்டியிருக்கிறது. அமைதி காலப் போர் என்பது கேட்டு நீ மயங்கலாம். ஆம்; எனக்காக இடாத போரெல்லாம் எனக்கு அமைதிகாலப் போர். எனக்காகப் போரிடுவதென்றால் அது உனக்காகப் போரிடு வதுதான். இங்குள்ள மூடர்கள் உனக்காகவோ தங்கள் காதலியர்களுக்காகவோ போரிடுகிறார்கள்;
எப்படியும் எதிர்பார்க்குமுன் வந்துவிடுவேன் அதற்கு அச்சாரமாக இதோ..
இக் கடிதத்தைக் கேட்டு தேசேகர் எதிர்பார்த்த படி யாரும் சினம் கொள்ளவில்லை. சாட்டர்னைப் போலவே எல்லாரும் காதலனிடம் அனுதாபம் காட்டி னர். தேசேகர் மனித வாழ்க்கையை உணராத மந்த மதியினரே என எல்லாரும் ஒரே மனதாக முடிவு செய் தனர். அவர் இது கேட்டு மீண்டும் முகஞ் சுளித்தார். அப்போது மூரட் “கதைச் சுவைக்காகத்தான் எல்லா ரும் இங்கே வீரன் காதலில் ஈடுபாடு காட்டுகின்றனர். உண்மையில் வீரன் செய்ததும் தவறு. சாட்டர்ன் செய்ததும் தவறு. நீங்கள் யாவரும் பொறுப்பில்லாமல் கதை கேட்பதும் தவறு. நான் கூறுவதே சரி என்பதில் உங்களுக்கு ஐயமிருந்தால், காதல், கலை ஆகியவற் றின் மேம்பாடறிந்த லாரைனைக் கேளுங்கள்” என்றான்.
தன் பெயரை இதில் இழுத்தது லாரைனுக்குப் பிடித்தமில்லை. ஆனால் தேசேகர் ஆவலுடன் அவளை எதிர்நோக்கி அவள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த் தனால், அவளுக்குத் தலையிடாமல் வேறு வழியில்லை. அவளும் தேசேகர் விரும்பியபடி, மூரட்டின் குறும் புள்ளம் திட்டமிட்டபடியே, தேசேகர் பக்கமாகத் தீர்ப் பளிக்கவேண்டி வந்தது. அனைவரும் அதை வேண்டா வெறுப்பாக ஏற்றமைந்தனர்.
அன்றைய பேச்சில் அரசியைப் பற்றிய இரு வேறு கருத்துக்கள் கட்சியார்வத்துடன் பரிமாறப்பட்டன. லாரைனுக்கு அரசியிடம் அளவற்ற பற்றும் நேச மும் இருந்தது. அத்துடன் பேச்சார்வம் ஆர்வ எல்லை கடந்து ஆரவார எல்லையையும் பூசல் எல்லையையும் அணுகி வந்தது. அவள் பேச்சை மாற்றி அரசியால் புதிதாகப் புனைந்தியற்றப்படும் கறிவகைகளில் பிறர் கருத்தைத் தாண்டி அதனையடுத்து அவற்றுள் ஒன்றை அவர்களிடையே தருவித்தாள். விருந்தின் உணவுத் திட்டத்தை அவளே வகுத்திருந்ததால், அவள் அக் கறி வகைகளைத் தன் கை வகுப்பாகவே ஏற்பாடு செய் திருந்தாள். அதன் சுவையில் அனைவரும் ஈடுபட்டுப் புகழ்ந்தனர். அத்துடன் இன்தேறல் அவர்கள் நாவின் பூட்டவிழ்த்து விட்டிருந்தது. அவர்களில் பலர் மூரட்டை நோக்கி “இன்று லாரைன் நமக்குச் செவிக்கு இனிய உணவு தந்து நாவுக்கும் இனிய சுவை தந்துள்ளாள். அவளுக்கு நாம் செய்யும் கைம்மாறு வேறு எதுவுமில்லை. எங்கள் விருந்துக் கவிஞனாகிய நீங்கள் அவள்மீது ஒரு பாட்டுப் பாடுக” என்றனர்.
தான் மூரட்டின் பாட்டைக் கேட்க வேண்டிவரும் என்று லாரைன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு அத் தகைய வாய்ப்பைக் கொடுக்கவும் அவள் விரும்ப வில்லை. ஆகவே அவள் ‘மூரட் பாடும் பாட்டு எனக்குப் பிடிக்காது. அவர் கடவுளைப் பழித்துப் பாடுபவர். அத்துடன் பெண்களைப்பற்றிக் கீழ்த்தரமான முறை யில் பழிக்காமல் அவர் பாடவே முடியாது” என்றாள்.
“மூரட்! இது உனக்கு ஓர் அறைகூவல்! உனக்கு ஓர் அறைகூவல்! எங்கே லாரைன் கருத்தை முறி யடித்து ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம்! கடவுளைப் பழிக்கப்படாது!” என்று பலரும் ஆரவாரித்தனர்.
மூரட் சிறிது நேரம் வாயடைத்திருந்தான். அனை வரும் அவன் கவிதையை எதிர்நோக்கிச் சந்தடியற்ற மைந்திருந்தனர். லாரைன் சிடுசிடுத்துக்கொண்டாள். அவள் முடியின் கீற்றொன்று அவள் முகத்தில் விழுந்தது. அதை அவள் எடுத்துக் கோதிவிட்டாள். அச் சமயம் மூரட் அவளை நோக்கி ஒரு குறும்புநகை நகைத்தான். ஒரு கணப்போதில் அவன் பாட்டு எல் லார் செவிகளிலும் மணிபோல் ஒலித்தது.
கோதிநீவிய கோதையர் கோதிலாப்
போதுலாவு முகிற்குழல் போதிலேன்
மாதர் நீலவிழியுடன் வாதிடும்
ஓதி நீல ஒளிநகை போதுவேன்.
நிலை யுலாவிய நீள்சுருள் முடி
உலைவ தன்றிவே றுலைவிலாதவள்
குலைவிலா நிறை கோதைய ரின்றெனும்
கலைஞருங் குறை காணகி லாதவள்.
வாட்ட நீங்கிய வாளொளிப் பாளத்தே
கோட்டம் கண்டிடும் கோவிளங் காமவேள்
நாட்டு கோட்டம் வேறெங்கும் காணாமையால்
கோட்ட மார்முடி கோடுறச் சாடினான்.
“நன்று, நன்று; கவிஞர் மூரட்! இன்று உம் கவிதை உம்மையும் கடந்துவிட்டது!” என்று யாவரும் போற்றினர்.
லாரைனின் சிடுசிடுப்பகன்றது. அவள் உள்ளத் தின் ஆழ்தடத்திலிருந்து தோன்றிய ஒரு புன்னகை அவள் முகத்தில் உலாவிக் கண்களில் ஒளி வீசி இதழில் பூத்தது. அறிவுப் போட்டியில் இவ்வாடவனை வெல்ல பெண்டிருலகில்கூட எவராலும் முடியாது என்று, அவள் எண்ணிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் விருந்தினர் மீண்டும் தம் நல் லின்ப அமைதியிலிருந்து வழுவிப் பழமைப் புதுமைப் போராட்டத்தில் இறங்கலாயினர். செந்நெறியமைதி நாடிய சேயிழையாளான லாரைன், உடனே தன் உரையாடற் கலைத்திறத்தைப் பயன்படுத்தி அவர்க ளிடையே அமைதி பிறப்பிக்க முயன்றாள். ஆனால் இப் போது தேறலஞ் செல்வன் அவர்கள் நாக்கைத் தீட்டிக் கொண்டருந்ததனால், அவள் முயற்சிகள் பலிக்கவில்லை. ஆகவே அவள் சீட்டாட்டத்தில் அவர்கள் சிந்தையைச் செலுத்த எண்ணி அண்டையிலிருந்த பச்சைப் பளிங் கறையில் சீட்டுக் கட்டெடுத்திட்டு அவர்களை அங்கே வரவழைத்தாள். அனைவரும் ஆட அமர்ந்தனர். இதே சமயம் அங்கே பாரியதோர் கிளிக்கூண்டில் உலவிக் கொண்டிருந்த கிளியருகில் உட்கார்ந்துகொண்டு, மூரட் அதற்குத் தன் கருத்துக்களை வெளியிட்டுக் கூறப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான். அவனை அவ்வீடுபாட்டிலிருந்து மாற்ற எண்ணிச் சீட்டாடுபவரைச் சென்று கவனித்துக்கொண்டிருங்கள் என்று பணித்தாள். அவனும் இணங்கினான்.
மூரட்டின் பல குறைபாடுகளில் அடங்காத சூதாட்ட ஆர்வமும் ஒன்று. சீட்டாட்டத்தை அவன் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் கண்களில் சூதாட்ட வெறி நின்று கூத்தாடிற்று. இயல்பிலேயே கனிந்த உள்ளமும் நற்சிந்தைகளும் உடைய லாரைன் தான் செய்த செயலின் கோளாறு கண்டு மீண்டும் மனங்கலங்கினாள். அவனை அணுகி அவன் தோளை அணைத்துக்கொண்டே “மூரட்! இது என்ன மன நிலை? இதிலிருந்து அகலமாட்டாயா?” என்று குறையிரந்தாள்.
அவள் தொனி அவன் வெறி மயக்கத்தை ஒரு நொடியில் நீக்கிற்று. அவன் அவளை மட்டுப்பாவி னுக்கு இட்டுச் சென்று அவளிடம் “இனிச் சீட்டையே தொடமாட்டேன் என்று தங்களுக்கு வேண்டுமானால் நான் உறுதி தரமுடியும்” என்றான்.
அவள் காதல் மறுப்பு வீரம் தள்ளாடிற்று. “இவ் வுறுதி பெறுவதன்மூலம் அவன் உள்ளத்தில் தன் ஆற்றல் பெருகும்-இருவர் உணர்ச்சியிணைப்பும் வலி யுறும். ஆனால் ஒரு நல்ல செயலை-ஓர் ஆணுயிர் காக்க இருக்கும் நல்வாய்ப்பைத் தான் அது செய்யா விட்டால் வாளா இருக்கவேண்டிவரும். எவ்வளவு தன் நா மறுத்தாலும், அவன் தன் காதலைப் பெற்றவன் என்பதை உள்ளம் அறியும். அவன் கெடவிடுவதா? ஒருபோதுமில்லை! என்ன வரினும் வருக. அவ்வுறுதி பெற்றே தீருவேன்” என்று துணிந்தாள்.
“சரி. நீங்கள் உறுதி தந்தால் பின் என்றும் மாற மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். என்னிடம் வீணில் உறுதி கொடுத்து விட்டதாகவும் நீங்கள் என் றும் எண்ண வேண்டி வராது. இப்போது இருவருமே விருந்தினரைச் சென்று வெளியிலிருந்து கவனிப் போம்” என்றாள்.
உள்ளே பகலொளி போல் வெளிச்சம். அதில் விருந்தினர் குடித்தும் சிற்றுண்டியார்ந்தும் சீட்டாடி யும் ஆடுவோரைச் சூழ்ந்துதவியும் இருந்தனர். வெளியே பச்சைத் திரையிட்ட பலகணிகளுக்கிப்பால், பச்சை அரையிருளில் லாரைனும் மூரட்டும் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது நீலக் கூந்தற் பின்னல்கள் அவன் தோள்களில் வந்து புரண்டன. ஒருவர் மூச்சு வெப்பம் மற்றவர் கன்னத்தை வெது வெதுப்பாக்கின. பின்புறத்திலுள்ள தோட்டத்திலி ருந்து வேனிற் பருவ விடியற்கால நேரத்தின் நறு மணம் மூக்குகளைத் துளைத்தன. லாரைனின் உடலும் உள்ளமும் களைப்புற்றும் முழு அமைதியுடன் விளங் கிற்று. எங்கும் செறிந்த இன்ப அமைதி அவள் உள் தசையைச் சென்று அவளை க் குழைவுறுத்திற்று. அவள் இன்பச் சோர்வினால் மூரட்டின் தோள்களைத் தன் கைகளால் பிணைத்து நின்று இப்போது உள்ளே நுழைந்து ஆடவருடன் ஊடாடிய நங்கையரைக் கண்டு களித்தாள். அவரவர் சின்னஞ்சிறு கைத் திறங்கள், சிறு குறும்பு நகைகள், குறுகுறுத்த பார்வைகள், காதற் போராட்டங்கள், ஊடல்கள் யாவும் அவர்கள் ஒன்றிய காட்சித் திரையில் நாடகங்கள் போல மிளிர்ந்தன.
– தொடரும்…
– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.