கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 37 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆக்கியோன் வாய்மொழி

என் கல்லூரிக் காலங்களில் பல கல்லூரி இளைஞர்களைப் போலவே நானும் பிரஞ்சுப் புரட்சி வரலாற்றிலும் அதை ஒட்டி யெழுந்த ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கவிதைகளிலும் என் உள்ளம் பறிகொடுத்தேன். பிரஞ்சு மொழியின் அழகு நலம், அதன் இலக்கியத்தின் ஒப்புயர்வற்ற கலைமை அமைதி – பிரஞ்சுநாவல்களின், சிறு கதைகளின் துணிகரக் கற்பனைக் காட்சிகள் ஆகிய இவற்றுடன் போட்டியிடும் பிரஞ்சு மக்கள் சமுதாய வாழ்வுச் சிக்கல்கள் பற்றிய தனிமனித வரலாற்றுச் செய்திகள், வாழ்க்கை வரலாற்றுக்காப்பியங்கள், நாடகங்கள் இவையாவும் அந்த இளமைக் காதலை வளர்த்து வந்தன.

வாடாமல்லி என்ற இந்தநாவல் இந்தச் சூழலில் உருவான ஓர் அகலக்கதை ஓவியம். பல பிரஞ்சு வரலாற்று நிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், பல நாவல்களின் கூறுகள் இதில் இழைந் திருக்கக் கூடும், இழைந்திருக்கின்றன. ஆனால் இது ஒரு நாவல் தானா, அன்றா என்பதை நான் இன்னும் முடிவுபடுத்த வில்லை. இது ஓர் இலக்கியப் படைப்பு, கலைப்படைப்பு, கதை வடிவில் திகழ்வது என்று மட்டுமே கூறமுடியும்.

உண்மைக் காதலுக்கு இலக்கணம் கூறப்புகுந்து, அதனை ஒரு சாத்திரமாக, தத்துவ விளக்கமாக ஆக்கினர், தொல்காப் பியரும் தமிழிலக்கண உரையாசிரியர்களும். அதை ஓர் அழகு நாடகக் காப்பியமாக்கியுள்ளார் திருவள்ளுவர், தம் காமத் துப்பாலில். ஆம். வடிவும் முறையும் புதிதாயினும், நாவல் உருவில் இதைத்தான் தற்காலத் தமிழர் முன் வைக்க விழை கிறது, பிரஞ்சுப் பண்பாட்டின் போர்வை போர்த்த வாடா மல்லி என்னும் இந்த அகலக்கதை!

– கா.அப்பாத்துரை, அன்னை நிலையம், சென்னை-18, 24-07-1965.

ஏடு 1 – புதுமலர்

இதழ் 1-3 | இதழ் 4-6

இதழ் 1 – தாயுள்ளம்

1749 மார்ச் மாதம் இளவேனிற்காலத்தின் மாலை இளந்தென்றல் மாரிக்காலக் குளிருடன் கலந்து அறைக் குள்ளும் வந்து சுழன்றடித்துக்கொண்டிருந்தது. மாது ஜீன் பெரோன் தன் இரண்டாவது பெண் மகவு லாரைனைப் பெற்றெடுத்த பின் சோர்ந்து கிடந்தாள். அரையுணர்வுடன் தனியே கிடந்த அம்மாது அடிக்கடி நோவு பொறுக்காமல் புரண்டு துடித்துக்கொண்டிருந்தாள்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் அவ ளுடைய முதல் பெண்மகவு பிறந்தது. அதுவும் ஓர் அழகு மணியாய்த்தான் இருந்தது. அதன் பெயர் லீமா. ஆனால், அதன் நினைவே தாயின் நெஞ்சைப் பிளக்கத் தக்கதாயிருந்தது. ஏனெனில், அது மூளை வளர்ச்சி தடைப்பட்டு அறிவு மந்தமுடைய பிள்ளையாயிருந்தது. இப்போது இவ்விரண்டாவது குழந்தையோ முதலதை விட எத்தனையோ மடங்கு அழகுடையதாய்த்தான் திகழ்ந்தது. அதன் உடல் மாவால் பிசைந்து குழைத்து அமைத்து, வெளியே தந்தத் தகடு போர்த்து, அதன் மீது பொன் முலாம் பூசியதுபோலப் பொலிந்தது. அதன் கண்கள் வானின் நீல நிறத்தையும் கடலின் நீலத்தையும் தோற்கடிப்பவையா யிருந்தன. தாயின் கவலை கலந்த அன்பு அந் நீல நிற விழிகளைக் கூர்ந்து நோக்கி, அதில் முந்திய குழந்தையின் அறிவு மந்தந் தான் உள்ளே நின்று ஏய்க்கிறதா, அல்லது அறிவொளி யின் ஊற்றுப் படர்கிறதா என்று பார்த்து முடியுமுன், பணிப்பெண்டிர் வந்து குழந்தையை எடுத்து அதற்காக அமர்த்தப்பெற்ற பாலூட்டும் செவிலியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

தனிமை, தன்னந்தனிமை ! பெற்ற குழந்தையின் துணைகூட இல்லாமல் தாய் தனியே கிடந்தாள். வெளி யறையிலிருந்தபடியே அவள் கணவன் சார்லஸ் பெரோன், “என்ன! இதுவும் பெண் தானா? சீச்சீ, என்ன வாழ்வு இது ?” என்று கூறிவிட்டு அவள் செவிகளில்கூடப் படும்படியாகக் கால்தூசியைத் தட்டித் துடைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டதை அவள் மறந்துவிடவில்லை. குழந்தையைப் பார்க்க, தாயின் நிலைபற்றிக் கேட்டறியக்கூட அவன் உட்புறம் எட்டிப்பார்க்கவில்லை. அந்தோ! என்ன அன்பற்ற வாழ்வு! என்ன துணையற்ற நிலை!

“என் தனிமை கொடிது. என் குழந்தையை இன்னும் இங்கே சிறிது நேரம் இருக்கவிட்டிருக்கக் கூடாதா? அதைப் பார்க்கக்கூட என்னால் எழுந்து அமர முடியாதுதான். அதன் உடல் என்மீது படுவதை யாவது எண்ணி ஆறுதல் பெற்றிருப்பேன். என் கணவர் அதனைப் பார்த்து ஏதாவது பேசியிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். யாருக்கும் என்னைப்பற்றிக் கவலை கிடையாது. என் கணவனுக்குக் கொ…….!” அவள் உள்ளம் இத்தகைய ஏக்கங்களிடையே உள்ளூர உடைவுற்றது.

வெளியே புயலும் காற்றும் வீசியடித்தது. வேனிற் காலத்தின் வரவு கண்டு அஞ்சியோடும் பனிப்புயலின் கடைசி மூச்சு மடக்குக் கதவுகளையும் பலகணிகளையும் ஆங்காரத்துடன் தடதடவென்று தட்டித் தகர்த்துக் கொண்டு சுழன்றடித்தது. இயற்கையின் இவ்வரவம் தவிர எங்கும் எவ்வகை ஓசையும் இல்லை.

மஞ்சத்தின் மெத்தைகளும் திண்டுகளும் வில்வெட்டுப் பட்டினால் தைத்தவை; அன்னத்தின் மெல்லிய தூவிகளும் இலவம் பஞ்சும் அவற்றினுள் மெல்ல அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உறைகளின்மீது அழகிய பூவேலை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மேற்கட்டிகள் வானின் நீல நிறத்துடன் போட்டியிட் டன. திரைகளோ செங்கழுநீர் மலரின் வண்ணமா யிருந்தன. மஞ்சத்தின் கால்களும் தூண்களும் வெண் பித்தளைகளா லமைந்து, வெள்ளி பொன் இழைப்பு வேலைகளுடன் தகதகவென்று மின்னின. தலைப்பின் அருகிலும் நான்கு மூலைகளிலும் அரேபியாப் பாலைவனத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற தீப்பறவைகளின் நீண்ட இறகுகள் செப்பமுறச் சூட்டப்பட்டிருந்தன. காற்றில் அவை யாவும் அசைந்து மாது ழீனின் துயருக் காகப் படபடப்பவைபோல் துடிதுடித்தன.

ஆம்! மாது பெரோன் செல்வ உயர்குடியிற் பிறந்து, உயர்குடியில் வாழ்க்கை புகுந்த நங்கைதான். அவள் ஆடை யணிமணிகளும் அகற்கேற்ற பொற்பும் பொலிவும் உடையவையாகவே இருந்தன. ஆனால், புறத்தே உள்ள இந்தப் பொற்பையும் பொலிவையும் அப் பேதை அனுபவித்தறிந்ததே கிடையாது. அவள் வாழ்க்கை அவ்வளவு துன்ப மயமாய் இருந்தது. ஃபிரான்சு நாட்டின் முதல்தரச் செல்வக்குடியில்கூட, மாமியார் நாத்தனார் கொடுமைகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எந்த அளவுக்கு நரகமாக்க முடியும் என்பதை மாது ழீன் பெரோனின் வாழ்க்கை எடுத்துக் காட்டிற்று.

தன் தாய், தங்கை, தமக்கையருக்காகவே அவளை மணந்துகொண்டவன்போல அவள் கணவன் அவளிடம் நடந்துகொண்டான். அவன் மற்றவர்களுடன் வாய் விட்டுப் பேசுவதையும், உளம்விட்டுச் சிரிப்பதையும் தான் அவள் செவியாரக் கேட்டிருந்தாள்.னா அவளிடம் அவன் சீற்றமும் எரிச்சலும் கடுகடுப்பான முகமும் தான் எப்போதும் காட்சியளித்திருந்தன. அவளுக்கு இருட்டில் மட்டும்தான் அவன் கணவனாயிருந்தான். பகலொளியிலெல்லாம் மாமியார், நாத்தனார் கொடுமையே அவள் வாழ்வின் கணவனாய் நின்று கூத்தாடியது. அவள் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தது ஒன்றுதான் குடும்ப வாழ்வில் அவள் ஈடுபட்டவள் என்பதற்குரிய சின்னமாயிருந்தது.

மனைவியின் உரிமைதான் அவளுக்கு இல்லை என்றால் தாயின் உரிமையாவது உண்டா? அதுவும் அவளுக்கு மறுக்கப்பட்டது. முதற் குழந்தை லீமா வின் பிள்ளைப் பேற்றில் நோவுக்கிடையில் அவள் அயர்ந்து கண்மூடிக் கிடந்தாள். பிள்ளை பிறந்ததும் அவளுக்குத் தெரியாது. அதன் அழுகையையும் அவள் கேட்கவில்லை. கண்விழித்துப் பார்த்தபோது வயிற்றில் பாரம் குறைந்திருந்தது. ஆனால், பிள்ளையைத் தேடிய தாயின்

கண்களில் ஏமாற்றமே காணப்பட்டது. செவிலியர் அதனை அப்புறப்படுத்தியிருத்தனர்.பிள்ளை பிறந்து உயிருடனிருக்கிறது என்பதையும், அது பெண் என்பதையும்; அது அழகுடையது என்பதையும் யார் யாரோ, யார் யாரிடமோ பேசிக்கொண்டிருந்ததை உற்றுக் கேட்டுத்தான் அவள் ஊகித்துணர வேண்டி யிருந்தது.

உள்ளத்தோடு உள்ளங் தடவி மகிழ, உரையாட, அக்குடும்பத்தில் அவளுக்கு யாருமில்லை. அத்துடன் தாயன்பு படாத காரணத்தினாலோ, தாயின் துன்பம் கருவிலேயே பிள்ளையின் மூளைமீது சென்று அழுத்திய தனாலோ, அதன் மூளை வளர்ச்சி தடைப்பட்டுப் போயிற்று. உடல் வனப்பு வளர்ந்தது; ஆனால், அறிவின் செவ்வொளி படராமல், அது நிறம் விளறி வாடி வதங்கிய மென்மலர் போன்றிருந்தது. பகலொளி யிற்பட்டு மங்கிய வெண்மதிபோல் அதன் அழகு தேய்வுற்றது. அறிவு மந்தமுற்றுத் தெம்மாடிக் குழந்தையென அது தூற்றப்பட்டது. தாயுள்ளம் இதனைக் கண்டும் கேட்டும் உள்ளூரத் துடியாய்த்துடித் தது. ஆனால், அவள் பிள்ளை அந்நிலையிலும் அவள் அரவணைப்பின்றி, அவள் ஆறுதலின்றி, அயலாரின் புறக்கணிப்புக்களிடையிலும், இடிப்புரைகளிடை யிலும் கேலி நகையாடல்களினிடையிலும் தரங்கெட்டு, உரங்கெட்டு, அருமையற்று வளர்ந்தது.

இப்போது இரண்டாவது பிள்ளைப்பேற்றின் துன்பம் அவள் அரை யுயிரையும் குறையுயிராக்கி விட்டது. இனி, அவள் வாழ்வு நாட்கணக்கிலிராது; மணிக்கணக்கிலேயே இருக்க முடியும் என்பதை அவள் அறிந்தாள். இந்த நிலையிலும் அவளுக்கு யாரும் துணையில்லை. தன் குழந்தையைக்கூட இறுதியாக அவள் பார்க்க முடியவில்லை. “இந்தத் தடவை குழந்தை எப்படி யிருக்குமோ-இதுவும் அறிவு மந்தமுடைய தாய் அமையுமோ, என்னவோ” என்ற நினைவு தாயின் அரையுணர்வு நிலையிலும் அவள் உள்ளத்தை அரித்தது.

வாழ்வு அவளுக்கு வேம்பாய்க் கசந்துவிட்டது. சாவை அவள் மனமார வரவேற்க என்றைக்கும் தயங்கியதில்லை. ஆனால், இப்போது அவள் இறக்க விரும்ப வில்லை; இறந்துவிடுவோமோ என்று கலங்கினாள். ஏன் இந்த மாறுதல்? “ஆ,கடவுளே! நான் இறக்க விரும்பியவள்தான். ஆனால், இப்போது நான் இறக்கக் கூடாது. நான் இறந்தால், என் குழந்தையை-என் குழந்தைகளை-யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்? யார் எண்ணி எண்ணி ஏங்கவாவது செய்வார்கள்?” என்று அவள் விம்மி வெதும்பினாள். புயலின் தொலை யாரவாரமும் அவள் உள்ளக் குமுறலின் எதிரொலிகள் போலவே “யார் பார்ப்பார்கள், யார் நேசிப்பார்கள்?” “யார் நேசிப்பார்கள், யார் பார்ப்பார்கள் ?” என்று கூடக்கூட ஆர்ப்பரித்தது.

அவள் வாழ்க்கையிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் இல்லை. அவள் சாவிலும் அவளுக்கு எவ்வகை ஆறுதலும் கிட்டவில்லை. அவள் இறுதி வேண்டுதலைப் புயலும் காற்றும் கேளாததுபோலவே இறைவனும் கேட்கவில்லை. ஏங்கிய தாயுள்ளம் இயற்கை யன்னையுடன் ஒன்றுபட்டுவிட்டது.

இதழ் 2 – துன்பத் தொட்டில்

பாரிஸ் நகரின் அகன்ற தெருக்களுள் ஒன்றில் காலைக்கதிரவனின் இளங்கதிர்கள் பனிக் காலத்தின் சுவடுகளை நீக்கிக் கொண்டிருந்தன. தெருவின் நடுப் பகுதி வண்டிகளின் போக்கு வரவால் சேறடைந்து கிடந்தது. அதிலிருந்து சற்று ஒதுங்கி அங்குமிங்கு மாக இருபுறத்திலும் ஆட்கள் செல்லத் தொடங்கி யிருந்தனர். சற்று மேடான உலர்ந்த இடத்தில் வாதுமைக் கொட்டைகளை வறுத்துச்சுடச்சுட விற்கும் நன்மாது ஒருத்தி தன் இழுப்பு வண்டி யுடனும் சூட்டடுப்புடனும் நின்றிருந்தாள். அவள் கனிந்த உள்ள முடையவள். ஏழைப் பிள்ளைகளுக்கு அவள் அவ்வப் போது காசில்லாமல் ஒன்றிரண்டு கொட்டைகள் எடுத்துக் கொடுப்பாள். ஆனால் காசு கொடுத்து வாங்குபவர் வாங்கும் போதுதானே இந்தக் கருணைப் பணி நடத்த முடியும்? வெறுங்கையுடன் ஏங்கி நின்ற ஏழைப்பிள்ளைகளைத் தாண்டிக் காசு வைத்திருந்த உயர் வகுப்புப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தனர்.

தெருவின் மற்றொரு பகுதியில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை வைத்துக்கொண்டு அதைக்காட்டித் தக்க பாட்டுக்களைப் பாடிப் பிழைக் கும் தெருப்பாடகன் ஒருவன் சென்று கொண்டிருந் தான். குழந்தை ஏசுவின் படத்தையும் அதன் பின்னால் அன்னை மேரி படத்தையும் வைத்துக் கொண்டு அவன்,

அன்னையிவள் பாரீர்!
அனைத்துலகுக்கும்,
அன்னையிவள் பாரீர்!
தன்னருங் குழந்தைகளைத்
தாய் மறப்பாளோ?

என்று பாடிக்கொண்டு சென்றான். அப்பாட்டை ஏழைப் பிள்ளைகள்கூட அவ்வளவு ஆர்வமாய்க் கவனிக்க வில்லை; ஒரு பெரிய மாடி வீட்டின் மேல்தளப் பலகணி திறந்து அதில் முடங்கி யிருந்த இருசின்னஞ்சிறு குழந்தைகள் அப்படங்களைக் கூர்ந்து கவனித்து அப் பாட்டை ஆர்வத்துடன் கேட்டன. குழந்தை ஏசுவின் படத்திலிருந்து அக்குழந்தைகளின் கண்கள் வாது மைக் கொட்டைகளை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின. அவர்களுக்கு ஒரு தாய் இருந்தால் இத்தின்பண்டங் களை அவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கண்டு ஏங்க வேண்டியிராது. மாடி வீட்டிலிருந்தாலும் அவர்கள் துணையற்ற மதலைகளாகவே இருந்தனர்! வாதுமைக் கொட்டை விற்பவள் அப்பக்கம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு இரங்கிச் சில கொட்டைகளை எடுத்துக் கொடுப்பாள். பிள்ளைகள் இந்த ‘அன்னைப்பாசத்தை’ எண்ணியே நாள்தோறும் அவளை எதிர்பார்த்துப் பல கணியில் வந்து காத்திருந்தன.

அவ்விரு குழந்தைகளும்தான் மாது ழீன்பெரோன் பெற்று விட்டுப் போன அருஞ் செல்வங்கள். மூத்தவள் லீமாவுக்கு இப்போது ஏழாண்டுகளும் இளையவள் லாரைனுக்கு ஐந்தாண்டுகளும் ஆயின. இரு குழந்தை களும் பொற்பதுமைகள் போன்றிருந்தன. பொன்னிறத் தலைமுடிகள் காற்றில் அலைந்தாடி அவர்கள் முகத்தை மறைத்தன. மூத்த பெண் முகம் வெளுத்து அவள் மேனியும் சிறிது விளறிய தோற்றம் உடையதா யிருந்தது. அவள் மிகமிக மெலிவுற்றுக் காண்பவர்க்கு இரக்கம் உண்டு பண்ணும் தோற்றம் உடையவளா யிருந்தாள். இளைய பெண் லாரைன் அழகு இன்னும் பொலிவுடைய தாயிருந்தது. அவள் நீலநிறக் கண் களில் குழந்தைகளின் மருண்ட பார்வை மட்டுமன்றி, தாயன்பின் கனிவும் நிறைந்திருந்தது. வயதில் இளைய வளானாலும் அறிவில் முதிர்ந்த அவள் துணையற்றுத் தவித்த தன் தமக்கையைக் கைகளால் அணைத்துக் கொண்டு, வாதுமை விற்ற மாதை நோக்கி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள்.

மாது ழீன்பெரோன் இறந்தபின் அவள் கணவன் சார்லஸ் பெரோன் மீண்டும் மணம் செய்து கொண் டான். புதிய மாது சூசேனி ழீனைப் போல எவருக்கும் பணிந்து கொடுக்கும் குணமுடையவளா யில்லை. அவள் பேரவாவுடையவள். பெரோன் குடியில் கால் வைத்த நாள் முதல் அவள் அதன் அரசியாய் விட்டாள். மாமி யாரையும் நாத்தனாரையும் அவள் விருந்தினர் போல நடத்தினாள். ஆனால் பணியாட்களைத் தானே ஏவி அடக்குமுறை செய்தாள். அவளை மற்றவர்களும் கண்டு அஞ்சத்தொடங்கினர். கணவனும் அவளுடன் மல்லாடு வதை நிறுத்திப் படிப்படியாக அவள் கையிலேயே குடும்ப ஆட்சியை ஓப்படைத்து விட்டான்.

பெரோன் குழந்தைகளிடம் மிகுதி பாசமுடையவனா யில்லை. ஆயினும் அவன் தாயற்ற தன் குழந்தை களிடம் அவ்வப்போது இரக்கங் காட்டுவது உண்டு.. சிறப்பாக இளைய குழந்தையின் நீலவிழிகளும் அதன் சொல்திறமும் அமைந்த நடையும் அவனைக் கவர்ந் திருந்தன. ஆனால் அவன் குழந்தைகளிடம் அவனை மாது சூசேன் பெரோன் மிகுதியாக விட்டு வைக்க விரும்பவில்லை. கணவனை அவள் எதுவும் சொல்வ தில்லையாயினும் பணியாட்களிடம் சீறி விழுந்து “பிள்ளைகளை ஏன் கவனிக்கவில்லை? தந்தை செல்லங் கொடுத்தால் அவர்கள் கெட்டுவிடுவார்கள். அவர்கள் அறைக்கே தூக்கிக்கொண்டு போங்கள்” என்பாள். நாளடைவில் பிள்ளைகள் கீழே கொண்டு வரப்படுவதே யில்லை. மாடியிலிருந்த தம் அறையிலேயே விடப் பட்டன. செவிலி அவர்களைக் கீழே வரப்படா தென்று கண்டிப்புச் செய்து விட்டாள்.

பிள்ளைகளுக்கு உணவு அவர்கள் அறைக்கே அனுப்பப்படும். உடைகளுக்கான செலவுப் பணமும் செவிலியரிடமே ஒப்படைக்கப்படும். ஆனால் பணம் மிகுதி கொடுக்காமல் மாது சூசேன் பெரோன் பார்த்துக் கொண்டாள். கொடுத்தபணம் உடைகளில் செலவழியா மலும், உடைகளும் பெரும்பாலும் தன்வீட்டுக்கே செல்லும்படியும் செவிலி அகதா பார்த்துக் கொண் டாள். உணவுகூடக் குழந்தைகளுக்கு ஒழுங்காய்த் தரப்படுவதில்லை.

பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருள் எதுவுமே கிடையாது. மூத்தவள் லீமா பசி தாங்காமல் அழுவாள். லாரைன் தன் பசியடக்கி, அவளுக்கு ஆறுதல் கூறி அழுகை அமர்த்தவும், அவ்வப்போது பிறருக்குத் தெரியாமல் உணவு தேடி ஒளித்து வைத்திருந்து கொடுக்கவும் பழகி விட்டாள். லீமா கீழே ஓட நினைத்த போதெல்லாம், தங்கை அவளைத் தடுத்து நிறுத்தி அணைத்து, அவள் மனத்தை வேறு திசையில் திருப்பு வாள். அறிவு நிரம்பாத அந்த ஏழைச் சிறுமியை யாரா வது கீழே கண்டால் கண்டபடி அடித்து வதைப்பார் கள் என்பது அறிவு மிக்க லாரைனுக்கு நன்றாகத் தெரியும்.

“வேண்டாம் லீமா. சமயம் பார்த்து நான் அவ்வப் போது போய் எடுத்துத்தரவில்லையா? நீ போனால் அவர் கள் யாரிடமாவது அகப்பட்டுக் கொள்வாய். அவர்கள் இரக்கமில்லாதவர்கள். உன்னை அடித்து நொறுக்கி விடுவார்கள். அப்போது நான் என்ன செய்வேன்! வேண்டாம் லீமா; இதோ தெருவில் கூட்டம் பெருகி விட்டது. வாதுமைக்காரி வரும் நேரமாயிற்று” என்று லாரைன் தமக்கையை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள்.

வாதுமைக் காரியைக் கண்டதும் லீமா “அதோ, வாதுமைக் கொட்டைகள் பார். நேற்று நமக்கு இரண்டு கொட்டைகள் எடுத்தெறிந்தாளே, அதே மாது தான். இப்போதும் நீ போய் ஏதாவது வாங்கிவா” என்றாள்.

லாரைன்: “இறங்கிப் போகப்படாது. இப்போது அகதா வரும் நேரம். அவள் கண்டு விட்டால் உள்ளதும் கெட்டுப் போகும். நான் இங்கிருந்தே வாங்குகிறேன், பார்.”

கந்தல்களைக் கயிறாகக் கட்டி அதில் ஓர் அழுக்குக் கூடையை இணைத் துத்தெருவில் இறக்கினாள் லாரைன் வாதுமைக்காரி புன் முறுவலுடன் குழந்தையின் அறிவைக் கண்டு வியந்தாள். கூடையினுள் லாரைன் தன் கைக்குட்டைகளில் ஒன்றைப் போட்டிருந்தாள். வாதுமைகள் வாங்கக் காசில்லாததால், காசுக்குப் பகரம் அதனை அவள் போட்டுவைத்திருந்தாள். அதைப் பார்க்க, வாதுமை விற்பவளுக்குக்கூடக் கண்களில் நீர் ததும்பிற்று. அவள் அக் கைக்குட்டையை எடுத்து முத்தமிட்டு, இரண்டு மூன்று கொட்டைகளைக் கூடையி லிட்டாள். பின் அவள் கைக்குட்டையையும் கூடையி லேயே போட்டு, அதை மேலே அனுப்பினாள். இது கண்ட லாரைன் அவளைக் கனிவுடன் பார்த்து, தன் கனிந்த நோக்கினால் நன்றி தெரிவித்தாள்.

மாடியில் தனியே யிருந்து துணையற்றுத் தவித்த அக்குழந்தைகளைப் பற்றிய பேச்சே அந்நகரெங்கும் ஏழை மக்கள் குடிகளில் கதையாயிருந்தது. போவார் வருவார் எவரும் இரக்கத்துடன் பலகணிகளில் எட்டிப் பார்க்காமல் செல்வதில்லை. ஆனால் ஏழைகள் இரங்கி என்னபயன்? ஏழைகளும் இறைவனும் இவ்வுலகில் என்ன செய்ய முடியும்?

இதழ் 3 – மனைமாற்றம்

ஒரு நாள் பிள்ளைகள் வழக்கம்போலப் பல கணியில் இருந்துகொண்டு தெருவில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் ஒரு புறமிருந்து ஆரஞ்சுப் பழங்கள் விற்பவன் வந்து கொண்டிருந் தான். குழந்தைகள் அவனையே நோக்கிக் கொண் டிருந்தார்கள். அச்சமயம் எதிர்ப் புறத்திலிருந்து இரு குதிரைகள் பூட்டிய பெரிய வண்டியொன்று ஒய்யார மாக வந்தது. அது மாடியருகில் நின்றுவிடவே, லாரைன் பழக்காரனைக்கூட மறந்து அதில் கவனம் செலுத்தினாள். அதிலிருந்து பகட்டான ஆடையணி மணி உடுத்திய ஒரு வயது சென்ற மாது இறங்கினாள். அவளைப் பார்த்ததே லாரைனின் உயிர் குற்றுயிரா யிற்று. அவள் லீமாவைப் பிடித்த கைப்பிடியை இறுக்கிக்கொண்டு, “ஐயோ, லீமா அதோ பாட்டி வந்திருக்கிறாள். உள்ளே வா. அறை எப்படியோ கிடக் கிறதே!” என்றாள்.

பிள்ளைகள் விரைவாக உள்ளே போக முயன்றனர். ஆனால், லீமாவின் கண்கள் பழக்காரனையே உறுத்துப்
பார்த்தன. பழக்காரன் இதற்குள் மிக நெருங்கி வந்து விட்டான். அவனும் லீமாவையே பார்த்துக்கொண்டு வந்ததால், வண்டியையும் அதிலுள்ள பெருமாட்டி யையும் அவன் கவனிக்கவில்லை. லீமாவை லாரைன் உள்ளே இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவன் ஒரு பழத்தை எடுத்துப் பலகணி வழியாக உள்ளே எறிந்தான். ஆனால், அந்தோ, அது குறி தவறிச் சுவரில் மோதி, வண்டியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பெருமாட்டியின் தலையணியின் மேலே ‘தொப்’பென்று வந்து விழுந்தது.

பெருமாட்டி பாம்புபோல் சீறியெழுந்தாள். செல்வர் சீற்றத்தின் விலையறிந்த பழக்காரன் பழத்தை எடுக்கக் கூட முயலாமல், கூடையுடன் விரைந்தோடி விட்டான். அச்சமயம் அப்பக்கம் வந்த அகதாகூடப் பெருமாட் டியை அங்கே கண்டு மலைப்படைந்து நின்றாள்.

இப்பெருமாட்டியே இறந்துபோன ழீனின் தாயா கிய மாது பிளான்ஸி. தன் வழியிலும் பெரோன் வழியிலும் ழீன் பெருஞ்செல்வ உரிமையைக் குழந்தை களுக்கு விட்டுச் சென்றிருந்தாள். குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு அச் செல்வத்தின் வருவாய் உரியது. ஆகவே பெருமாட்டி குழந்தைகளைத் தானே கொண்டு சென்று வளர்க்க விரும்பினாள். ஆனால் புதிய மாது சூசேன்பெரோன் அவர்களைத் தன் கைப் பிடியிலிருந்து அனுப்ப விரும்பவில்லை. “உன் பேர்த்திகளை வேண்டுமானால் வந்து பார்த்துப் போக லாம். அவர்களை அனுப்ப முடியாது” என்று அவள் கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

பெருமாட்டி மாது பிளான்ஸி பிள்ளை, வளர்ப்புப் பற்றி மிகக் கண்டிப்பான கருத்துடையவள். அக் கண்டிப்பின் பயனாகவே ழீன் வாழ்விழந்து போனாள் என்பதுகூட அவள் முதுமை அனுபவத்திற்கு எட்ட வில்லை. மாற்றாந்தாய் வீட்டில் போதிய கண்டிப்பு இராது என்பதுதான் அவள் ஓயாத குற்றச்சாட்டு. இன்று அதற்குச் சரியான தெளிவு கிடைத்துவிட்டது. தன் குடி மதிப்பெங்கே, தெருவிலுள்ள பழ விற்பனை யாளன் பழம் எறியும் நிலை எங்கே ? அவன் பழங் களைப் பிச்சைக்காரப் பிள்ளைகளிடம் எறிவதுபோல் எறியத் துணிந்துவிட்டானே! அவ்வளவுக்குச் சென்று விட்டது பிள்ளைகளை நடத்திய முறை!” என்று அவள் ஆரவாரம் செய்துகொண்டு தடதடவென்று வீட்டினுள் நுழைந்தாள். அகதா எவ்வளவோ முயன்று அவளுக்கு முன் வந்து குழந்தைகள் அறையை ஒழுங்குபடுத்த விரைந்தோடினாள். ஆனால் இது ஒன்றும் பயனில்லாது போயிற்று. அவள் கண்முன் எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன. அவள் கூரிய கழுகுக் கண்கள் அங்குள்ள கந்தல் கூளங்கள் ஒவ்வொன்றையும் தும்பு தூசுகளை யும் தனித்தனியே கவனித்துக்கொண்டன. ஒவ்வொரு செய்தியையும் கவனித்து அவள் பாரிய தலையணி ஒரு தடவை ஆடிற்று.

அகதா நடுக்கத்துடன், ஆனால் வலிந்து ஒரு புன் முறுவலை வருவித்துக்கொண்டு, “பெருமாட்டி, நான் சிறிது வெளியே போயிருந்தேன். அதற்குள்……”

பெருமாட்டி: உன்னை ஒன்றும் கேட்கவில்லை. நீ வாயை மூடிக்கொண்டிருக்கலாம். அகதா உடனே பின்வாங்கி அடங்கி ஒடுங்கி நின்றாள். “குழந்தைகளே! நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்” லீமா உறுத்து விழித்துத் தலையணியைக் கவனித்தாள்; லாரைன் பாட்டி என்ன கேட்பாளோ என்று அஞ்சினாள். உங்களுக்கு இப்படியே ஒவ்வொரு நாளும் பழம், அப்பம் கிடைக்கிறதல்லவா?

லாரைன் உடனே விடை தரவில்லை; அவள் தயங் கினாள். ஆனால் அஞ்சுதலறியாத லீமா, “ஆம். பலகணி வழியாக வகை வகையாக நல்ல மனிதர்கள் எனக்கு உணவு தருகிறார்கள். வெளியே எல்லாருக்கும் எங்கள் மீது அன்பு உண்டு” என்றாள்.

பெருமாட்டி: (அகதாவை நோக்கி) அம்மணி, நிலைமையைப் பார்க்க இங்கே பிள்ளைகள் பட்டினி யாகத்தான் இருக்கிறது போலத் தோற்றுகிறது.

இப்போது லாரைன் துணிந்து “ஆம், பாட்டி. இரண்டு நாளாய் வெளியே இருந்து கிடைத்த இரண்டு வாதுமைக் கொட்டையையும் ஓர் அப்பத் துண்டையும் தவிர நாங்கள் எதுவும் உட்கொண்டதிலலை” என்றாள்.

லீமா சிறுபிள்ளைத்தனமாக “அவற்றைக் கூட நான்தான் பெரும்பாலும் தின்று தீர்த்துவிட்டேன். பாவம். லாரைனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. லாரைன் பாவம், பாவம்” என்று கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள்.

மாது பிளான்ஸியின் பழிவாங்கும் எண்ணத்துக்கு இவ்வளவு போ தாதா? அவள் அகதா பக்கம் திரும்பி அவள் கன்னத்தில் இரண்டடி பளீர், பளீர் என்று அடித்தாள். மரத்துப் போயிருந்த அவள் கைகளின் தடங்கள் அங்கே பதிந்தன. “உன்னைக் காவலரிடம் ஒப்புவித்துப் பாடம் படிப்பிக்கிறேனா இல்லையா பார். பிள்ளைகள் சிறு அணிமணிகளைக் கொண்டு நீ விற்ப தாகக்கூடக் கேள்விப்பட்டேன். இனி என் கையில் அகப்பட்டாயா, உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று அவள் மீண்டும் கறுவினாள். அகதா பிளான்ஸி யின் வீட்டு வேலைக்காரனுடன் நட்பாயிருந்தவள். ஆனால் அவள் சிலகாலம் அவனை விட்டு வேறு வழியில் திரும்பியிருந்தாள். வேலைக்காரன் அவள் மீதுள்ள பொறாமையால் தன் வீட்டுத் தலைவியிடம் அவள் செய்த காரியங்களை வெளியிட்டுச் சினமூட்டி யிருந்தான். பெருமாட்டி தன்னைக் கையும் மெய்யுமாகப் பிடித்து விட்டதுடன், கூடுதல் துப்புக்களும் வைத்திருக்கிறாள் என்று தெரிந்த அகதா எண்சாணும் ஒருசாணாகக் குன்றினாள்.

பெருமாட்டி இக்குழப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டாள். அவள் வேலைக்காரருக்கான மணியைத் தடதடவென அடித்தாள். வேலையாட்கள் எல்லாரும் வந்தனர். வீட்டுக்காரர் எங்கே என்று அவள் சீற்றத் துடன் கேட்டாள்.

இச்சமயம் திரு. சார்லஸ் பெரோன், மாது பெரோன் ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்தனர். இதுதான் சமயம் என்று மாது பிளான்ஸி பிள்ளைகளை அகதாவின் ஆட்சியிலிருந்து மீட்டுத் தன் வண்டியில் வைத்துக்கொணடு தன் வீடு சென்றாள். பணியாட்கள் தங்கள் பொறுப்பைக் குறைப்பதற்காகத் தலைவர் தலைவியிடம் பிளான்ஸி கண்ட காட்சிகளையும், அவள் சீற்றத்தையும் பெருக்கிக் கூறினர். அவர்களுக்கும் பிளான்ஸியின் கடுநாக்கின் முன் நடுக்கமே. ஆகவே, அவர்கள் பேசாமல் அவளிடமே பிள்ளைகளின் பொறுப்பை விட்டுவிட்டார்கள். குழந்தைகள் சார்பில் அனுப்ப வேண்டிய பணத்தையும் சூசேன் அவளுக்கே அனுப்ப ஒப்புக்கொண்டாள்.

ழீன் வயிற்றில் பிறந்த ஒரு குற்றத்திற்காகக் குழந்தைப் பருவத்திலேயே தண்டிக்கப்பட்டுப் பல அல்லல்களுக்காளான குழந்தைகள் இக்கொடுஞ் சிறை யிலிருந்தும், மாது பெரோனின் வஞ்சனை அகதாவின் கொடுமை ஆகியவற்றிலிருந்தும் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் உதவியால் விடுதலை யடைந்தனர். அவர்கள் வாழ்வின் முதல் கொடும்பகுதி-துன்பத் தொட்டில்- முடிவுற்றது.

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *