வளையாத மரங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 161 
 
 

நாம் எதைப்பெற வேண்டும் என நினைத்தோமோ அதையும், அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தவறாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட வேண்டும் என நினைக்கும் மன நிலை கொண்ட பெற்றோர்களில் ஒருவர் தான் நாராயணன்.

ஓடைக்கற்களில் கட்டப்பட்டு சுண்ணாம்புக்காரையில் பூசப்பட்ட சுவரும், அதன் மீது பனை மரச்சட்டங்களையும், பாக்கு தப்பைகளையும் வைத்து சீமையோடு வேய்ந்த பாட்டன் கட்டிய இரண்டு அறைகளும், அதற்கு முன் திண்ணையும் உள்ள வீட்டிலேயே பாட்டனும், தாத்தாவும், தந்தையும், பின் தானும் வாழ்ந்து விட்ட நிலையில் தம் குழந்தைகளுக்கு தற்காலத்துக்கேற்ப புதிதாக மனைகளை பிரித்து விற்கும் இடத்தில் மனையிடம் வாங்கி நான்கு படுக்கையறைகள், சமையலறை என நகர வாழ்க்கையின் ஆடம்பரத்தை வெளிப்படுத்துவது போல் தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப்பெட்டி, கட்டில்கள், மெத்தைகள், பைக், கார் என தேவைகளைப்பெற சிக்கனமாக செலவு செய்து மிச்சம் சேர்த்து வைத்திருந்த சேமிப்பில் இவையனைத்தையும் செய்திருந்தார்.

தான் அரசு பள்ளியில் படித்திருந்தாலும் நகரிலேயே அதிக கட்டணம் கட்டும் பள்ளியிலும், கல்லூரியிலும் மகன்களை இரண்டு பேரையும் படிக்கவும் வைத்திருந்தார். கடன் வைத்திருக்கவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு முன் வெறும் ஆயிரம் ரூபாய் கடனை உள்ளூரில்‌ கந்து வட்டிக்காரரிடம் வாங்கி வருடத்திற்கொருமுறை தோட்டத்து விவசாயத்திலிருந்து கிடைக்கும் தானியத்தை வட்டிக்கே கொடுக்கும் நிலையில் பல வருடம் கடனே அடையாமல் தான் வேலைக்கு சென்ற பின் கடன் அடைத்ததை நினைத்து வருமானம் வந்த பின்பே தேவைக்கான பொருளை வாங்கிப்பழகியிருந்தார் நாராயணன்.

மனைவி மாலதியும் அவரது நினைப்பிற்கேற்ப சிக்கனமாக இருந்து குடும்பம் நடத்தியதில் தங்களுக்கான வீடு போக நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் வரும் அளவிற்கு முன்னேறியிருந்தார்.

“எனக்கு ஏதாச்சும் ஆயிருச்சுன்னா நீ என்ன பண்ணுவே? உனக்கு சமைக்கிறத தாண்டி ஒன்னுந்தெரியாது. பசங்க சம்பாதிச்சு கொடுப்பாங்கங்கிறதுல கேரண்டி இல்லை…. அதனால தான் வாடகை வருமானம் வேணும்கிறது” என மனைவியிடம் கூறுவார்.

“கம்முனு இருக்க மாட்டீங்களா? எப்பப்பாரு போயிட்டா என்ன பண்ணறது? போயிட்டா என்ன பண்ணறது? ன்னு புலம்பற வேலையா போச்சு. வாழற போது சாகறதப்பத்தியா நெனைப்பாங்க? வாடகைக்கு வீடு கட்டி விடறது எனக்காக மட்டுமில்லை, உங்களுக்கும் வயசான காலத்துல உபயோகமாகத்தான். அப்படி பேசாம, ஒன்னிமேலாச்சும் இப்படிப்பேசுங்க” எனக்கூறும்போது மனைவி மீது அன்பு மேலோங்க மறுபடியும் கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என நினைப்பார்.

வாரிசுகளுக்கு படித்து முடித்து வேலை கிடைக்காத போதும், தான் சிக்கனமாக இருந்து கொண்டு அவர்களது ஆடம்பர செலவுகளுக்கு, வெளிநாடு சுற்றுலா சென்று வருவதற்கு யோசிக்காமல் தனது வங்கிக்கணக்கிலிருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றி விடுவார்.

உறவுகளுடைய விசேச நிகழ்வுகளுக்கு செய்ய வேண்டிய முறைகளை யோசிக்காமல் செய்து விடுவார்.

“நாராயணன் கிட்ட லட்சுமி வாசம் செய்யறதுனால தாராளம் காட்டுறான்” என நட்பு, உறவுகள் பேசிக்கொள்ளும் போது புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துவார்.

ஆரம்பத்தில் ஒரு வியாபார நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவர், வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்ட பின்பு தனியாக வியாபாரம் செய்ததில் வருமானம் கூடியது. திருப்தியாக வருமானம் வந்தாலும், ‘வராமல் போனால் என்ன செய்வது?’ என்பார்.

‘நீங்க வரலேன்னா என்ன பண்ணறது? வரலேன்னா என்ன பண்ணறது? ன்னு கல்யாணமான காலத்துல இருந்து பயத்தோட பேசிட்டே தான் இருக்கறீங்க. உங்களுக்கு மன பயத்த விட, பண பயம் ரொம்ப ஜாஸ்தி’ எனும் மனைவியைப் பார்த்து ‘உலகம் புரியாமையே காலத்தை நீ ஓட்டிட்டே’ என்பார்.

“அந்தக்காலத்துல எழுதின சொத்து பத்திரத்தப்படிச்சீங்கன்னா பெண்கள் பெயரோட ‘சுக ஜீவனம்’ னு எழுதியிருப்பாங்க. கல்யாணமாயி முப்பது வருசத்துல நானும் சுக ஜீவனமாவே இருந்துட்டேன். நீங்க தான் ஒரு நாளக்கூட வேஸ்ட் பண்ணாம சம்பாதனை, சம்பாதனைன்னு ஓடிட்டே இருந்தீங்க. நானும் ஓடியிருந்தா குழந்தைகளை யாரு வளர்த்துவா? சில சமயம் இந்த மாதிரி மனுசன் கிடைச்சது புண்ணியம்னு தோணும். சில சமயம் சொத்து பத்து இருக்கிற மாப்பிள்ளையக்கட்டியிருந்தா பணம், பணம்னு அதுக்கூடவே வாழாம நம்ம கூடவும் வாழ்ந்திருப்பாருன்னு தோணும்” என மனைவி பேசியதை உன்னிப்பாக கவனித்த நாராயணன் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.

‘ஒன்னை இழந்தாத்தான் இன்னொன்னை பெற முடிகிறது. பரம்பறை சொத்து உள்ளவர்கள் சுக போகியாக மனைவியோடு கைகோர்த்துக்கொண்டு சுற்றினாலும் சொத்திலிருந்து வரும் வருமானம் காப்பாற்றி விடுகிறது. அந்த சொத்துக்களையும் அவர்களது முன்னோர்களில் ஒருவர் நம்மைப்போல் செலவிலும், சுகத்திலும், உண்பதிலும், உறங்குவதிலும் சிக்கனமாக இருந்து சேர்த்து வைத்து போயிருப்பார். அந்த முன்னோர்களில் ஒருவராக தற்போது நாமும் நம் வாழ்வு காலத்தை தியாகம் செய்தால் தான் அடுத்து வரும் தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்’ என நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்வார்.

“என்னப்பா நாராயணா பசங்க உனக்கு மேல வளர்ந்துட்ட பின்னாலயும் நீயே எல்லா வேலையும் இழுத்துப்போட்டுட்டு செய்யறே….? மளிகைல இருந்து, குடிக்கிற தண்ணி வரைக்கும், காலை பால் பூத்ல வரிசைல நிக்கிறதுல இருந்து நீயே பண்ணினா உன்னோட பசங்களுக்கு என்ன தெரியப்போகுது? நானெல்லாம் சின்ன வயசுலயே வாரிசுகளை வேலை செய்ய வெச்சு பழக்கிட்டேன். வளர்ந்த மரங்கள் வளையாதுங்கிறத நீ இப்பதான் புரிஞ்சிருப்பே. இப்ப போய் சொல்லிப்பாரு குமிஞ்சு குப்பைய எடுத்து போட மாட்டானுக” சக நண்பன் நஞ்சன் சொன்னதைக்கேட்டபோது கண்களில் கண்ணீர் துளி வெளிப்பட்டது.

“சாமி….ராஜா…. மளிகைக்கடைல போயி….”

தாய் மாலதி சொல்லி முடிப்பதற்குள் “நிறுத்து… யாரு கிட்ட போய் என்ன வேலை சொல்லறே….? அதெல்லாம் உன்ற புருசங்குட்ட வெச்சுக்கோ… ரெண்டு டிகிரி நாம்படிச்சது மளிகை சாமான் வாங்கப்போகவா …?” மகன் ரஞ்சன் பேசியதை வெளியிலிருந்து கேட்ட போது மனம் வெதும்பியபடி எதுவும் பேசாமல் மனைவியிடம் சென்று மளிகை லிஸ்டை தானே வாங்கிப்போய் சாமான்களை வாங்கி வந்தார் நாராயணன்.

“அப்பா… நான் கூப்பிடறது காதுல கேக்கலையா? நீயென்ன செவிடா?” கத்தினான் முதல் மகன் ரஞ்சன்.

“சொல்லு தங்கம்…” சாந்தமாக கேட்டார் நாராயணன்.

“எனக்கு வேலையே கெடைக்க மாட்டேங்குது. என்ற ஃபிரண்ட்ஸ்ல ஒருத்தன் முகுந்தன் ஆஸ்திரேலியாவுல மேல படிக்கப்போறான். நானும் போகலான்னு முடிவு பண்ணிட்டேன்”

“நீயே முடிவு பண்ணிட்டியா…?”

“அப்புறமென்ன…. முடிவு பண்ண ஊருக்குள்ளிருந்து பத்துப்பேரை கூப்பிட்டுக்கச்சொல்லறியா? இன்னும் பட்டிக்காடாவே இருக்கறே….? எப்படியோ இருந்துட்டு போ. எனக்கு ஐம்பது லட்சம் பணம் ஒரு மாசத்துல வேணும்”

“படிக்க லோன் கெடைக்கும்னு சொன்னாங்களே….”

“லோன் போட்டுட்டு அப்புறம் லோ, லோன்னு அலைஞ்சு பத்து வருசத்துக்கு நானே லோன் கட்டி சாகனமா?”

“என்னத்துக்கு அபசகுனமா பேசறே…?”

“பின்னே என்ன…? வீட்ட அடமானம் வெச்சு வாங்கிடு. வியாபாரத்துல நீ சம்பாதிக்கிற வருமானத்த, வீட்டு வாடகைய வெச்சு, கடனை அடைச்சிடு” மகனின் பேச்சைக்கேட்டு அதிர்ந்து போனார் நாராயணன்.

‘இளைய மகன் நிகிலனும் வேலைக்கு செல்ல பிடிக்காமல் சொந்தத்தொழில் நண்பர்களுடன் கூட்டாக செய்ய வேண்டும் எனக்கூறியதால் தனது சேமிப்பையும், மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் கொடுத்து ஆறு மாதங்களில் மொத்தமாக நஷ்டம் எனக்கூறி தற்போது குறைந்த சம்பளத்தில் வேலைக்குச்செல்லும் நிலையில் மூத்த மகனும் இப்படி மனம் போன போக்கில் தன்னை மதிக்காமல் நடந்து கொள்கிறானே….’ என மன வேதனையடைந்தார். 

வேதனையை முகத்தில் மறைத்தவாறு மகனிடம்’சரி’ என்றவர், படுக்கைக்கு மனதில் வேதனை மேலோங்க உறங்கச்சென்றார். மகனும் தந்தை சம்மதித்து விட்டார் எனப்புரிந்தவாறு மகிழ்ச்சியை முகத்தில் வெளிக்காட்டாமல் மனதில் மகிழ்ந்தபடி தனது அறைக்குச்சென்றான்.

நாராயணன் கண்களில் கண்ணீர் கசிந்தது. சிறு வயதிலிருந்து தன் தந்தையின் சொல் மீறி நடக்காத தனது நிலையுடன், தன் சொல்லைக்கேட்காத தனது தனயனின் நிலையை ஒப்பிடவே முடியாமல் தவித்தார்.

காலையில் தந்தை படுத்திருந்த அறையை வந்து பார்த்த நாராயணன் மகன் ரஞ்சன் தந்தையைக்காணாமல் அதிர்ச்சியடைந்தான். போன் சுவிட்ச் ஆப் என வந்தது. உறவுகளிடம் போனில் விசாரித்தான். யாரும் வரவில்லை எனக்கூறியதால் ஏதும் புரியாமல் காவல்துறையில் புகார் செய்தான். அவரது அலைபேசி எண்களை ஆராய்ந்த போது போன் அருகிலுள்ள கிணற்றில் கிடப்பதாகக்காட்ட, கிணற்று நீரை முற்றிலும் தீயணைப்பு துறையினர் வந்து இறைக்க போன் கிடைத்தது. தேடினார்கள் , தேடினார்கள், பல ஊர்களிலும் தேடிக்கொண்டே இருந்தார்கள். எங்கு தேடியும் நாராயணனை கண்டு பிடிக்க முடியவில்லை.

கணவனைக்காணாததால் கண்ணீர் வடித்துக்கொண்டு மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தாய் மாலதியை பக்கத்தில் இருந்து கவனித்தான். தந்தை செய்த அனைத்து வேலைகளையும் குடும்பத்துக்காக தானே செய்தான். தந்தையின் பங்கை தன்னால் சரி செய்யவே முடியாது என உணர்ந்தான். தந்தை இறந்து போயிருக்க மாட்டார். திரும்பி வருவார் என நம்பினான். இது நாள் வரை ‘சாமியே இல்லை’ என்றவன் கோவில், கோவிலாக ஓடினான்.

“எல்லாத்துக்கும் நீதான் காரணம். ஒரு வேலைக்காரரைப்போல, ராத்திரி பகல் பார்க்காம பாடுபட்டவரை இப்படி மனச நோகடிச்சு காணாமப்போக வெச்சிட்டியே..‌..’ என கோபமாகக்கூறியபடி தன் தலை மீது பாறாங்கல்லைத்தூக்கி யாரோ போடுவது போல் இருந்ததும் படுக்கையிலிருந்து பதறியபடி எழுந்தான்.

முதலில் ஓடிச்சென்று தந்தையின் அறையைத்திறந்து பார்த்தபோது மன உளைச்சல் தந்த அசதியில் வெகுளியாக, போர்வை கூட போர்த்திக்கொள்ளாமல் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தவரின் காலடியில் அமர்ந்த ரஞ்சன், தந்தையைப்போலவே கடன் வாங்காமல் படித்த படிப்பிற்கு கிடைக்கும் வேலைக்கு போக முடிவெடுத்தவன் வாழ்வில் முதலாவதாக தந்தையின் கால்களை பிடித்து விட்டான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *