வறுமையில் பூத்த மலர்
கதையாசிரியர்: பிரியதர்ஷினி மாதவன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 99

நெற்களஞ்சிய மண் மணக்கும் ஒரு சிறிய கிராமத்தில், பலராமனும் குருவும் ஒன்றாகப் பள்ளியில் படித்து வந்தனர். ஆனால், இருவரின் குடும்பச் சூழல் மட்டும் வெவ்வேறாக இருந்தது. பலராமனுடைய அப்பா விவசாயம் செய்து, அதில் வரும் காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்கும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், குரு அப்படி இல்லை; அவனுடைய அப்பா பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்து, வெளி மாநிலங்களுடன் வர்த்தகம் செய்பவர். முன்னோர்களின் காலத்திலிருந்தே அவர்கள் ஒரு பெரிய செல்வந்த குடும்பம்.
ஒரு நாள், பலராமன் பள்ளிக்குள் நுழையும் போது, தன்னுடைய புத்தகப் பையை எடுத்து வருமாறு குரு அவனிடம் சொன்னான். ஏனென்றால், குருவிற்குப் பலராமனைப் பிடிக்காது; அவனுடைய தகுதி தன்னை விடக் குறைந்தது என்று குரு எண்ணினான்.
ஒரு நாள் பலத்த மழை பெய்த போது, பலராமன் குடையோ செருப்போ இல்லாமல் நனைந்தபடியே பள்ளிக்கு வந்தான். ஆனால், குரு அவனுடைய அப்பாவின் பெரிய காரில் வந்து இறங்கினான். பள்ளி வாசலில் நின்ற குரு, நடுங்கிக்கொண்டு இருந்த பலராமனைப் பார்த்து ஒரு சிறு உதவி செய்யாமல், தன் ஆடம்பரப் பையைத் தூக்கச் சொல்லிவிட்டுக் கம்பீரத்தோடு நடந்து சென்றான். குருவின் இந்த ஏளனப் பேச்சு பலராமனின் மனதைக் காயப்படுத்தினாலும், அவன் அமைதியாகப் பையை எடுத்து வந்தான்.
இதற்கிடையில், பலராமனின் அப்பா விபத்தில் கால்களை இழந்ததால், அவனால் தன்னுடைய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. ஆனால், குரு தன்னுடைய பள்ளிப் படிப்பை நல்லபடியாக நிறைவு செய்தான்.
சில வருடங்கள் கழிந்தன. காலம் இருவரின் வாழ்க்கைப் பாதையை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றது. பலராமன் தன்னுடைய சொந்த ஊரில், சொந்தமாக ஒரு காய்கறிக்கடை வைத்துத் தன் குடும்பத்தை நடத்தி வருகிறான். குரு, தன்னுடைய அப்பாவின் நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருக்கிறான்.
அந்தி இருள் நேரத்தில், பலராமன் தன்னுடைய கல்லாவில் உள்ள கொஞ்சக் காசுகளை எண்ணிப் பார்க்காமல், தோளில் உள்ள மஞ்சப்பையில் போட்டுக்கொண்டான். அந்த அமைதியான அங்காடித் தெருவில், உலகத்தில் உள்ள அனைத்து வைரங்களும் தன் பையில் ஜொலித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவோடு அவன் நடந்து கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு வளையல் கடையைப் பார்த்தான்; தன் மனைவிக்காகச் சிவப்பு நிற வளையல்களை வாங்கிக் கொண்டான். அருகில், அப்பாவிற்குத் தலைவலித் தைலமும், அம்மாவிற்கு வெற்றிலையும் வாங்கிவிட்டு வீடு திரும்பினான்.
வாசலில் நாய் குரைக்க, மனைவி அல்லி கதவைத் திறந்தாள். பூத்த மலர் போல அவள் அந்த வளையல்களை அணிந்து மகிழ்ந்தாள். பலராமன் அப்பாவின் கால்களுக்குத் தைலம் தடவிவிட்டு, வளர்ப்பு நாய்க்கு ஒரு துண்டு ரொட்டி போட்டான். அவரவர் முகத்தில் தெரிந்த அந்தப் புன்னகைகள் அவனின் அன்றைய நாளின் சோர்வைப் போக்கின. அவன் நிம்மதியாக உறங்கினான்.
இரண்டு தெருக்கள் தாண்டி, பெருத்த சத்தத்துடன் குருவின் மகிழுந்து (Car) வேகமாக வந்து வீட்டின் முன்பு நின்றது. அவனுடைய நிறுவனத்தில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக, அவன் முகம் மிகவும் கோபமும் சோர்வும் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் வாசலில் சில நொடிகள் நின்றான் குரு. மனைவி கீதா மெதுவாக வந்து கதவைத் திறந்தாள். அதற்குள் பொறுமை இழந்த குரு, “கதவைத் திறக்க இவ்வளவு நேரமா?” என்று தன் ஆசை மனைவியைச் சாடினான். அவனுடைய வார்த்தைகளால், அத்தனை மின்விளக்குகள் எரிந்த அந்த வீட்டின் முகத்தில் வெளிச்சம் இல்லாமல் போனது. தொழிலைத் தன்னிடம் ஒப்படைத்த பெற்றோரிடமும் அவன் தன் வெறுப்பைக் காட்டினான். குருவின் வீட்டில் மட்டும் அன்று இரவு கண்கள் உறங்காமல் தவித்தன.
ஒரே ஊர், ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே வாழ்க்கைத் தொடக்கம்… ஆனால், வேறு வேறு குணங்கள் மற்றும் வாழ்க்கை அணுகுமுறைகள். இங்கு இருள் சூழ்ந்த (ஏழை) வீட்டில் பூ பூத்தது; செல்வமிக்க வீட்டில் உள்ள மலர் வாடியது.
“வறுமை கைகளில் இருந்தது, மனதில் இல்லை” என்பதை இச்சம்பவம் உணர்த்தியது. இருப்பதை எண்ணி ஏங்குவதை விட, கிடைத்ததை எண்ணி மகிழ்வதே வாழ்க்கையின் அழகு. வாழ்வோம் பூத்த மலராக!
தொடர்புள்ள சிறுகதைகள்
அதுக்கப்புறம்
சு.அப்துல் கரீம்
July 11, 2026
அம்மான்
எஸ்.மதுரகவி
July 11, 2026